கடைசி யுத்தம் கவிதை – மு. அழகர்சாமி
உனக்கும் எனக்குமான
பரிமாறுதலில்
மேலோங்கி நிற்பவை முத்தங்களே….
ஒவ்வொரு முறையும்
எடுத்துக் கொண்ட
முத்தங்களின் ஈரம்
உலர்வதற்குள்
அடுத்த முத்தத்திற்கு
அடித்தளமிடுவேன்….
பொய்க் கோபங்களோடு
நீ கொடுக்கும்
முத்தத்தால்
மொத்தமாய் நான்
கரைந்து போய் விடுவேன்….
அத்தி பூத்தாற்போல்
சந்திக்கும் நேரங்களிலும்
முத்தப் பரிமாறுதலில்
எப்போதும் நீயே
வெற்றி பெறுவாய்…
உன்னிடத்தில் நானும்
என்னிடத்தில் நீயும்
முத்தங்களை நித்தம் பெற
இல்லற வாழ்வில் இணைந்தோம்….
இப்போது முன்னைவிட
முத்தப் பரிமாற்றங்கள்
காமத்தையே மெருகூட்டின…
என் வயது குறைத்து
நோய் நீக்கும்
அருமருந்தாக
உன் முத்தங்கள்…
வாழ்க்கைச் சூழல்
பொருளாதார மாற்றம்
உனக்கும் எனக்குமான
பணிப் பொறுப்புகளால்
நம்
முத்தப் பரிமாற்றம்
சுருங்கிப் போனது…..
காலம் நம்மை
பேரப் பிள்ளைகளின்
உலகத்தில் தள்ளியதால்
முத்தப் பரிமாற்றத்தைத் துறந்து நோயில் வீழ்ந்தோம்….
வாழ்க்கையில் இறுதிப் போராட்ட நொடியில்
புதுச் சங்கில் பால் ஊற்றினால் உயிரடங்குமென
சுற்றம் பேசுகிறது…
எனக்கு மட்டுமே தெரியும்
உன் இதழ் தரும்
முத்தத்தால் என்
மொத்தமும் அடங்கும் என….
மு.அழகர்சாமி
கடமலைக்குண்டு
தேனி மாவட்டம்
9585676345