இசை வாழ்க்கை 82: எங்கிருந்தோ ஓர் இசை வந்தது – எஸ் வி வேணுகோபாலன்
புத்தாண்டு கடந்து பொங்கல் விழாவும் நிறைவு பெற்று நகர்ந்து கொண்டிருக்கின்றன நாட்கள். செல் விருந்தோம்பி வரு விருந்து பார்த்திருக்கக் கேட்டுக் கொண்ட வள்ளுவர் நாளும் வந்து போனது. இசையொன்றில் லயிக்கும் மனம், அதை வழியனுப்பி விட்டு அடுத்த இசைக்குக் காத்திருக்கிறது. இரவின் இசையில் நனைகிற உள்ளம், விடியலின் இசையில் விழித்துக் கொள்கிறது.
2017 இல் தமிழ் இந்துவில் வந்திருந்த கவிதையில் வெயில் பற்றிய குறிப்புகளில் இப்படி ஓரிடத்தில் வரும்:
வெயிலை இறக்கி வைத்து
மொண்டெடுத்துக் கொடுத்துவிட்டு
வெயிலைத் தலைக்கேற்றி
வெயில் கைப்பிடித்து நடக்கிறாள்
மோர் விற்பவள்
இதில் வெயிலுக்குப் பதிலாக இசை என்று எழுதி வாசித்தாலும் பொருத்தமாகவே தோன்றுகிறது. இசையின் கைப்பிடித்து நடப்பவர்களை அன்றாடம் பார்க்கிறோம். கடந்த மாத இறுதியில் சென்னையிலிருந்து ஏலகிரி மலை நோக்கிய கார் பயணத்தில், வாகன ஓட்டுநர் வாகான ஓட்டுநராக அமைந்ததை அண்மையில் எண்பதை நிறைவு செய்த என் மாமியார் கோமதி அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார். இசையின் கைப்பிடித்தே லோகநாதன் பயணத்தை வழி நடத்தினார். அவர் சுழலவிட்ட திரைப்பாடல்கள் வழி இசை ஒரு பக்கம் பரவிக்கொண்டிருக்க, அதைப் பற்றிப் படர்ந்த உரையாடலில் அவரோடு பகிர்ந்ததும் அவர் பகன்றதுமாக … ஆஹா… ..அதன் தாக்கமோ என்னவோ, மலையில் பின்னர் குழுமிய குடும்ப சங்கமத்தில் இசையாக எதிரொலித்தது!
குடை கொண்டு போகாத நம்பிக்கை நாளில் எதிர்பாராது பெய்கிற மழை சிலபோது நம் தோல்வியை ஒப்புக்கொண்டு ரசிக்கவும் வைத்துவிடும் அல்லவா…. அப்படியாக ஓர் உரை கேட்கச் சென்ற இடத்தில் இசை பொழியுமானால்…. இசையை அடுத்து இசையும் அதையடுத்து இசையும் பொழியுமானால்….
புரட்சியாளர்கள் உலக வாழ்க்கையை நுட்பமாக நேசிக்கத் தெரிந்தவர்கள், வெறுப்பவர்கள் அல்ல என்பதை அலெய்டா குவேரா மெய்ப்பித்தார் மீண்டும்!
கியூப புரட்சியாளர் எர்னஸ்டோ சே குவேராவுடைய செல்ல மகள் அண்மையில் இந்தியா வருகை தந்திருப்பதில், சென்னையில் ராஜா அண்ணாமலைமன்ற அரங்கில் ஜனவரி 18 மாலை அதிர அதிர அசர அசர அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட கொண்டாட்ட நிகழ்ச்சியில் இணையர் தோழர் ராஜியோடு பங்கேற்ற அனுபவம் பரவசமானது. ஏனெனில், தனது உரையின் நிறைவில் அபாரமாக ஒரு ஸ்பானிஷ் கீதத்தை இசைத்தார் அலெய்டா குவேரா. அன்றிரவு வீடு திரும்பியதும் இணையத்தில் தேடிப்போனால், உலக நாடுகள் பலவற்றில் எங்கே சென்றாலும் இசைப்பாடல் பாடாது நிறைவு செய்வதில்லை அவரது உரையை என்று கண்டறிய முடிந்தது.
குறிப்பாக, நிகழ்வின் தொடக்கத்தில் உமையாள்புரம் சிவராமன் அவர்கள், இந்திய – கியூப நட்புறவு வலுக்க வேண்டும் என்று தொண்ணூறுகளில் தான் வாசித்தது போலவே இப்போதும் இசைப்பதாக மலர்ச்சியோடு தெரிவித்து வாசித்த மிருதங்க இசையைத் தனது கண்களால் பருகினார்
அலெய்டா குவேரா எனில், தொடர்ந்து மேடையை அதிர வைத்த பாப்பம்பாடி ஜமா குழுவினரின் பறை இசையைத் தமது உடல் அதிர்வுகள் மூலம் உள்வாங்கி நிரப்பிக் கொண்டார். அவர் ஒரு மருத்துவர், அதிலும் குழந்தைகள் நல மருத்துவர் எனும்போது அவரது இசை நாட்டம் இன்னும் ஈர்த்தது.
உயிர் காக்கும் மருந்துகளை கியூபாவிற்கு அமெரிக்க அரசு தனது நாட்டிலிருந்து மட்டுமல்ல, உலகளவிலும் யாரும் அனுப்ப விதிக்கும் தடைகளைக் குறிப்பிடும் அலெய்டா, தனது மருத்துவ மனையில் முக்கியமான மருந்து கிடைக்காததால் மரித்துப் போன குழந்தையின் துயர முடிவைப் பேசும்போது ஏற்படும் ஏகாதிபத்திய கசப்பும், எதிர்ப்பு உணர்வும் விவரிக்க முடியாதது. அவரது உணர்வுகளும், உரையும் மட்டுமல்ல, பாடலும் எழுச்சிகரமாகவே இருந்தது. மொழியைக் கடந்து சிலிர்க்க வைத்தது. இசை வாழ்க்கை புரட்சிக்காரர்களது அடையாளம்! எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது…..என்று வருணிக்கலாமா இதை!
கடந்த சில வாரங்களாகவே எங்கள் தெரு நண்பர் கிருஷ்ணன் நினைவுபடுத்தியதில் இருந்தே உள்ளே ஒலித்துக்கொண்டே இருக்கும் பாடல் இந்த நேரத்தில் ஏனோ இன்னும் உரத்துக் கேட்டுக் கொண்டிருக்கிறது உள்ளத்தில்.
அவன் தான் மனிதன் திரைப்படத்தின் பாடல்கள் எல்லாமே அம்சமாக இசை தொடுத்திருப்பார் மெல்லிசை மன்னர். பாடல்கள் எல்லாம் கண்ணதாசன்! ஒவ்வொன்றுக்கும் ஒரு சுவை உண்டென்றாலும், பாடியவரின் குரலுக்காகவும், அந்த இசையின் வசப்படுத்தும் தன்மைக்காகவும், பாடலின் நுட்பமான பதங்களுக்காகவும் உள்ளோடிக் கொண்டிருக்கும் இந்தப் பாடல் மீது ஆர்வம் கூடுதல்!
உள்ளபடியே, வாணி ஜெயராம் குரல் எங்கிருந்தோ தான் தமிழ்த் திரை இசைக்கு வந்தது! அந்தத் தேவதையின் குரலைத் தான் இந்தப் பாடல் இன்னும் விரும்பிக் கேட்க வைப்பது! எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது தொடக்கமுதல் நிறைவு பெறும்வரை அகலவிடாது நின்று கேட்க வைக்கிற இசையோடு கலந்து பொழிவது.
பாடல் ஒரு ஹம்மிங் ஒலியோடு தொடங்குகிறது….மெதுவாகப் பல்லவியின் முதல் வரியை தாள இசைக்கருவிகள் இன்றி இசைக்கிறார் வாணி ஜெயராம், ‘எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது… அது எந்தத் தேவதையின் குரலோ…’ என்று! உடனே, டிரம் செட் சேர்ந்து விடுகிறது, அந்த இடத்தில் வயலின்கள் காத்திருக்க, பல்லவியை மீண்டும் இசைக்கிறார்… பிறகு ‘எங்கள் தீபங்களில் ஒளி வந்தது… அது எந்தக் கைகள் தந்த ஒளியோ’ என்ற அடியின் அழுத்தமான உச்சரிப்பு சொற்களில் வெளிச்சம் மின்னவைக்கிறது!
அருவியின் பொழிவாக அந்தப் பல்லவி இருக்க, அதிலிருந்து பெருகியோடும் நதியாக சரணங்களை அமைத்திருப்பாரோ எம்எஸ்வி என்று தோன்றும். அதனால் தான், பாறையில் தெறிக்கும் நீரலைகளும், கரைகளில் துடிக்கும் சாரல்களுமாக சரணங்களின் பின்பாதி ஒலிக்கிறது.
‘தாழங் குடைகள் தழுவும் கொடிகள்’ என்ற முதல் சரணத்தின் வரி, மிக அரிதான திரைப்பாடல் வரி. அந்தத் தொடக்கத்தை மிக நளினமாக இசைத்திருப்பார் வாணி, அதன்பின், தாமரைப் பூக்களின் கூட்டம் என்ற வரியில் ஒரு சிலிர்ப்பு வைத்திருப்பார். ‘மாலை மணிகள் மந்திரக்கனிகள் மழலை என்றொரு தோட்டம்’ என்கிற இடத்தில் ஆற்றின் போக்கு சீரான தாளகதியில் இருக்கிறது. ‘மாளிகையில் ஒரு மதி வந்தது…அது எந்த வானத்து மதியோ’ என்கிற இடத்தில் பாறையில் தெறித்துப் பூத்துச் சிரித்துப் புரண்டு போகிறது ஆறு. ‘மாயமாக ஒரு ஒலி வந்தது அது எந்த ஆலயத்து மணியோ’ என்பதை அபார ஒத்திசைவில் தணித்து இறக்குகிறார் வாணி. அதிலும் அந்த மாய….மாக என்று சொல்லைப் பிரித்து ஒலிக்கும் இடத்தில் இசையின் சுவாரசியம் எங்கோ கொண்டு சேர்க்கிறது.
இந்த ஆற்றுப் பயணத்தில் தபேலாவின் தாளக்கட்டு என்னமாக லயித்துக் கேட்கவைக்கிறது. மறைந்த தபேலா கலைஞர் பிரசாத் அவர்களை நினைத்துக் கண்கள் பனிக்கின்றன.
இரண்டாம் சரணத்தில் இலக்கிய வாசனை இன்னும் மணக்கிறது. ‘கதிரொளி வீசும் கலசம் ஏந்தி கண்ணன் வருகின்ற கனவு’ என்பது மற்றுமோர் அரிய திரைப்பாடல் வரி. ‘கண்டனள் ஒருத்தி வந்தனன் கண்ணன்’ என்கிற இடத்தில் ஓர் இதமும், ‘கண்கள் தூங்காத இரவு’ என்பதில் ஒரு பதமுமாக, அதுவும் அந்தத் ‘தூங்கா…..த’ என்ற சொல்லில் உறக்கமற்ற காலத்தின் நீட்சியும் வாணி அருமையாகக் கொண்டு வந்திருப்பார். இரண்டாம் சரணத்தின் ஆகப் புகழ் பெற்ற வரிகள், ‘கங்கையிலே புதுப்புனல் வந்தது…அது எந்த மேகம் தந்த புனலோ’ என்பது. எதிர்ப்படும் நீர்த்தாவரங்களை எல்லாம் அரவணைத்துப் பொங்கிப் பெருகிப் போகும் காட்டாறு, ‘மங்கையிடம் ஒரு கனல் வந்தது..அது எந்த மன்னன் தந்த அனலோ’ என்று சுழன்று சுழன்று சுழித்துக் கொண்டு பல்லவியைப் போய் அடையும் இடம் அபாரம்.
பாறையில் தெறிக்கும்போதும், கரையில் சிரிக்கும்போதும் தபேலாவைப் பயன்படுத்திய மெல்லிசை மன்னர், பல்லவி அருவிக்கு டிரம் செட் பயன்படுத்திக் கொள்ளும் இந்தத் தாளக் கலவை வியக்கவைக்கும் மேதைமை. சரணங்கள் தொடங்குமுன்னான இடைவெளியில் புல்லாங்குழலும் தபேலாவும் பேசிக்கொள்ளும் உரையாடல் பாடலை இன்னும் நெருங்கி ரசிக்க வைக்கிறது. பூஞ்சோலையில் உலவும் உணர்வை ஏற்படுத்துகிறது.
இசை வாழ்க்கையில் எப்போதும் இன்பியல் மட்டுமல்ல துன்பியல் பாடல்களும் ஒலிக்கவே செய்கின்றன. அண்மையில் பெருந்துயரில் ஆழ வைத்தது நெருக்கமான ஒரு தோழரின் மறைவு. இசை கொண்டாடி அவர். ஆவேசமிக்க போராளியின் இசை வாழ்க்கை அது. இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ் மாநில பொதுச் செயலாளராகப் பரவலாக அறியப்பட்ட அ ரெங்கராஜன், மேடைகளில் அதிரவைக்கும் உணர்ச்சிகர உரைகள் நிகழ்த்தியவர். அவரது மென் பக்கங்களில் இசையும் இலக்கியமும் ஒலித்துக்கொண்டே இருந்தது.
இசை வாழ்க்கை கட்டுரை ஒன்றிற்கு அவரது பதில் இப்படியாக இருந்தது: “You are pushing me into astonishment almost daily, how my lovable Venu is able to pour his thoughts like a waterfalls. Apart from the flow, the extraordinary memory you possess makes me wonder again and again”. அருவி தான் பொழிகிறது அவரது சொல்லாடலில் கூட! மகள் நித்யா இசைக்கலைஞர் சத்யன் மகாலிங்கத்தை நேசிப்பது அறிந்ததும், சாதி மறுப்பு காதல் திருமணம் உறவினர்களையும் அரவணைத்து முன்னின்று நடத்திய அவர், சத்யனின் இசைப் பயணத்தில் மிகப்பெரிய உந்துசக்தியாக விளங்கியவர்.
உழைப்பாளி மக்களை நேசிக்கும் யாருக்கும் இசையோடான உறவு முக்கியமானதாகிறது. அவரது உரைகளில் பாடலின் வரிகள், கவிதை வரிகள் பளீர் என்று தெறிப்பதைக் கேட்டிருக்கிறோம். எம் பி சீனிவாசன் மாணவி இசை ஆசிரியை ராஜ ராஜேஸ்வரி அவர்கள் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்த ரெங்கராஜன், தனது காதல் இணையர் பரிமளாவுக்கு இசையார்வம் இருப்பதைத் தொடர்ந்து ஊக்குவித்து வந்தவர். வங்கி ஊழியர் கலைக்குழு (பீட்) சேர்ந்திசை பாடகர்கள் வரிசையில் இடம் பெற்றிருப்பவர் பரிமளா.
1997 அக்டோபர் 5 அன்று மகாகவி பாரதி இல்லத்தில் டி கே பட்டம்மாள், விடுதலைப் போராட்ட வீராங்கனை பாப்பா உமாநாத் ஆகியோர் முன்னிலையில் பீட் சேர்ந்திசைக் குழுவின் வசந்தவல்லி பயிற்சியில் 50 குழந்தைகள் பாரதியாகவே தோற்றமளித்து சேர்ந்திசை பொழிந்தது மறக்க முடியாத நிகழ்வு. மெய்சிலிர்க்க அமர்ந்து கேட்டிருந்தோரில் அவரும் ஒருவர். அந்த அரிய நிகழ்வை பீப்பிள்ஸ் டெமாக்ரசி வார இதழுக்காகக் கட்டுரையாக்கம் செய்து அவரிடம் தான் முதலில் காட்டினேன். பத்திரிகையில் வந்தபோது அத்தனை நெகிழ்ச்சியுற்றார் அவர்.
மகாகவியின் கவிதை ஒன்று, கல்லூரி நாட்களில் மிகவும் ஈர்த்தது, கண்ணன் என் சேவகன். ‘கண்ணை இமை இரண்டும் காப்பது போல் என் குடும்பம் வண்ணமுறக் காக்கின்றான்…வாய் முணுத்தல் கண்டறியேன்’ என்பது அதன் மகத்தான வரிகளில் ஒன்று. பல்லாயிரக் கணக்கான ஊழியர்களது சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக 19 ஆண்டுகள் இயங்கிய அன்புத் தோழன் ரெங்கராஜன், ஒரு போதும் வாய் முணுமுணுத்தது கேட்டறியேன். ‘பெற்று வரும் நம்மையெல்லாம் பேசி முடியாது…. ‘ என்ற வரி சொல்வது போலவே, சமூக மாற்றத்திற்கான தாகத்தோடு அவர் ஆற்றி முடித்த பணிகள் பேசி முடியாது.
கண்ணனைப் பாட மகாகவி எழுதிய கவிதையை, திரைப்பாடலில் ரங்கனைப் பாடுவதாக அமைத்திருந்தார்கள். ‘நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்ப் பண்பிலே தெய்வமாய்…..என்று சீர்காழி கோவிந்தராஜன் அந்தப் பாடலின் வேகத்தைக் கூட்டி மேலே நிறுத்திச் சட்டென்று குரல் தாழ்த்தி, பார்வையிலே சேவகனாய்…..என்று விவரிக்கையில் பெருகும் கண்ணீர், செருக்கற்ற ஞானமும், தேர்ச்சி மிக்க வாசிப்பும், சளைக்காத உழைப்பும் மிக்கவராக இருந்தும், பார்வையிலே தோழனாய் மிளிர்ந்தவர் எனும்போதும் பெருகிக் கொண்டே இருக்கிறது.
அதுவும் சீர்காழி அவர்கள், ரங்கா என்று சொல்லி இருக்க மாட்டார், ரெங்கா ரெங்கா என்று தான் குரலெடுத்து முழக்கி முடித்திருப்பார்….. இந்த வரிகளை எழுதும் இந்த நொடியிலும், அந்த ரெங்கா எனும் சொல், ரெங்கராஜனின் நினைவில் கண்களில் நீர் முட்ட வைத்துக் கலங்க வைக்கிறது. எங்கிருந்தோ ராஜபாளையத்தில் இருந்து தான் வந்தவர் ரெங்கராஜன். நடுத்தர வர்க்கம் எனும் இடை சாதி தான் அவரும். ‘இங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம்’ என்று தான் அவருக்குப் புகழஞ்சலி செலுத்த வைக்கிறது இந்தப் பாடல்.
அலெய்டா குவேராவின் வருகை ஆனந்த இசைக் கண்ணீர். ரெங்கராஜன் மறைவு துயரத்தின் இசைக் கண்ணீர். புரட்சி என்பது அன்பின் தரிசனம் அன்றி வேறென்ன! எல்லோருக்குமான உலகத்தைத் தான் புரட்சிக்காரர்கள் சமைக்கத் துடிக்கின்றனர். பாகுபாடுகள் – வேறுபாடுகள் அற்ற அன்பின் பெருவாழ்க்கை தான் புரட்சியின் வேட்கை. அன்பின் குரலாக இசை இருக்கிறது. இசையின் பகிர்வில் அன்பு மிதக்கிறது.
(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]