புரட்சியின் மகளே வருக! – மு.இக்பால் அகமது

புரட்சியின் மகளே வருக! – மு.இக்பால் அகமது




அலெய்டா’, சே அழைக்கின்றான். ‘நாளை நான் என் பொலிவியா பயணத்தை தொடங்குகின்றேன். இந்த முறை என் பயணம் எத்தனை கடுமையாக இருக்கப்போகிறது என்பதை நீ உணர்வாய் என்று நம்புகிறேன். நாளை நான் புறப்படும் முன், நீயும் நானும் நம் குழந்தைகளுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நாம் அனைவரும் சேர்ந்து மதிய உணவு உண்போம். நான்தான் அவர்களின் தந்தை என்பது அவர்களுக்கு தெரியக்கூடாது. அவர்களால் என்னை அடையாளம் காண முடியாது. ஒரு அறுபது வயது உருகுவே நாட்டுக்காரன் போல நான் மாற்று வேடத்தில் இருப்பேன். நான் அப்பாவின் நண்பர் என்று நீ நம் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும். உன்னைத்தவிர வேறு யாருக்கும் நான் யார் என்பது தெரியக்கூடாது. நகரின் பூங்காவுக்கு குழந்தைகளுடன் வந்து விடு. மாலை வரை அவர்களுடன் இருக்க விரும்புகிறேன்.’

அலெய்டா காலையிலேயே குழந்தைகளுடன் பூங்காவுக்கு வந்து விடுகின்றாள். ஆனால் அதற்கு முன்பாகவே அந்த உருகுவே முதியவர் அவர்களுக்காக காத்திருக்கின்றார். ‘குழந்தைகள் இல்லையென்றால் நானும் உங்களுடனேயே இருந்திருப்பேன்’, சேயின் காதில் அலெய்டா ரகசியமாக சொல்கின்றாள். ‘கியூப புரட்சிகர போரில் ஈடுபட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த நாட்களில் நானும் தீவிரமாக பங்கெடுத்துக்கொண்ட நினைவுகள் மீள எழுகின்றன. அப்போது Escambray மலைகளில் நாம் முதல் முறையாக சந்தித்துக்கொண்டதை நினைவு கூர்கின்றேன்.’
‘அலெய்டா, நீயும் இப்போது என்னுடன் இருக்க வேண்டும் என்று விழைகின்றேன்’, சே ரகசியமாக காதில் சொல்கின்றான். ‘நான் உன்னுடன் இருப்பேன், உன் நிழலைப்போல”, அலெய்டாவின் குரலில் ஈரம் கசிகின்றது.
‘அலெய்டா, நம் பிள்ளைகள் ஓடி வருகின்றார்கள், என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்து வை’, சே சொல்கின்றான்.

‘இவர் யார் தெரியுமா? அப்பாவின் நண்பர், Ramon ராமோன் மாமா’
அப்பாவின் நண்பருடன் பிள்ளைகள் விளையாடத் தொடங்குகின்றார்கள். பூங்காவை சுற்றிலும் ஓடுகின்றார்கள். விளையாட்டின் இடையே ஏழு வயது Aleida கீழே விழுந்து விட தலையில் காயம் உண்டாகிறது. ராமோன் மாமா எத்தனை பதட்டம் அடைந்தார் என்பதை அப்போது ஒருவர் பார்த்திருக்க வேண்டும். அலெய்டாவை தன் மடியில் இருத்தி அவள் காயத்தை குணமாக்க முயற்சி செய்கின்றார். அதன் பின் அம்மாவிடம் சென்ற குழந்தை, ‘ அந்த மாமாவுக்கு என் மேல்தான் எத்தனை பிரியம் தெரியுமா? அப்பா மாதிரியே என் மேல் அன்பாக இருக்கின்றார்’. Camiloவும் அதையேதான் சொல்கின்றான். ‘நான் அவருடன் நெருக்கமாக இருந்தபோது அப்பாவின் வியர்வை வாசனையை அவர் மீது உணர்ந்தேன்’. என்ன மாதிரியான பையன் இவன்! எத்தனை வேகமாக இருக்கின்றான்! அவர்கள் பிரியும் நேரம் வந்தது, மூன்று வயது Celia அவர் கன்னத்தில் முத்தமிட்டபோது சேயின் கண்கள் குளமானதை ஒருவர் உணர்ந்திருக்க முடியும். குட்டிப்பையன் Ernesto ஒளிவீசும் தன் நட்சத்திரக்கண்களால் அப்பாவை உற்றுப்பார்க்கின்றான்.

குறிப்பு: Alieda March Torres சே குவேராவின் மனைவி. Aleida, Camilo, Celia, Ernesto நால்வரும் அவர்களின் குழந்தைகள்.
…. ….. ……………………………………………………………………….
Manhunt – Seashore saga of the Punnapra-Vayalar Uprising நூலுக்கான தனது அணிந்துரையில் M A பேபி, CPI(M), நூலில் இருந்து எடுத்துக்காட்டும் ஒரு பகுதி. தமிழில்: மு இக்பால் அகமது
நூலாசிரியர் K V மோகன்குமார் மலையாளத்தில் எழுதிய Ushnaraasi- Karappurathinte Ithihasam என்னும் நூலை Manjula Cherkil ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். திருவாங்கூர் சமஸ்தானத்தின் நிலப்பிரபுத்துவதுக்கு எதிராக புன்னப்புரா வயலார் மக்கள் நடத்திய பெருமைமிக்க போராட்டத்தின் கதை வடிவம் இந்த நாவல். ஆசிரியர் ஐ ஏ எஸ் அதிகாரி. அதே புன்னப்புரா வயலார் கிராமத்தில் பிறந்தவர். வெளியீடு Vitasta.
கொச்சியில் இருந்தபோது பலமுறை ஆலப்புழாவில் அந்த நினைவுச்சின்னத்தை மெய்சிலிர்க்க கடந்து சென்றிருக்கின்றேன்.
…. ….
புரட்சிக்காரன் என்ற அடையாளத்தை தவிர வேறெதையும் சுமக்காத சேயின் மகள் தன் அப்பாவை கடைசியாக பார்த்தபோது வயது நான்கு. கியூப வெளியெங்கும் மிதந்து அலையும் தந்தை சேயின் மூச்சுக்காற்றை சென்னைக்கு கொண்டுவந்துள்ள அலெய்டா! வருக அலெய்டா! வரவேற்கின்றேன்!

நன்றி: மு.இக்பால் அகமது அவர்களின் முகநூல் பதிவு.