மெகிராவின் கவிதைகள்

மெகிராவின் கவிதைகள்




மெகிரா கவிதைகள்
************************
ஏதோவொரு ஞாபகத்தில்
பறித்துவிட்டேன்
யார் யாருக்கோ
அத்தனைப் பூக்களையும்!

மாலையில்
என்ன சொல்லித்
தேற்றுவது
அந்த மஞ்சள்
வயிற்றுத் தேன்சிட்டை?…..

*****************************

வேலைத்தேடி
அலையும்
பட்டதாரியின்
செருப்பை,

வேலை
கிடைத்தவிட்ட
மகிழ்ச்சியில்
தைக்கிறார்

‘செருப்பு தைக்கும் தொழிலாளி’.

************************************

அம்மா
**********
கணினி முன்
அமர்ந்து பர்கரை
வாயினுள்
நுழைத்துத்
தொண்டையில்
சிக்கும் போது கூட

நீ லேசாகத்
தலையைத் தட்டி
தண்ணீர் தருவாய்
என்பது நினைவுக்கு
வரவில்லை.

‘பாஸ்’ ஐ பார்த்து
நின்றது விக்கல்.

********************************

தாசி
*******
நான்
இருட்டில்
பிணமாகக்
கிடந்தால்தான்
பகலில் அது
பணமாக
மாறும்.

*************†*******************

மாற்றுப் பாதை
*******************
என்
பாதத்தில் மிதிபட வேண்டுமென்று
நீயோ
வீதி அகலக்
கோலமிடுகிறாய்,

உன்
கோலம் மிதிபடுமென்று
நானோ
வேறு பாதையில்
நடக்கிறேன்.

***********************

மகளிர் தின வாழ்த்து
*************************
“ரெக்கார்டு நோட்டை எடுத்திட்டு க்ளாஸ் முடிஞ்சதும் ரூமுக்கு வா”, என்று சொன்ன ஆசிரியரை நம்பிப் போவாள்,

பின்னர்
“ஏய்! அந்தாளு மோசம்டி”
என்று சொல்வாள்.

நண்பனாய் வந்தவனை காதலனாய் வரவேற்று, கணவனாய் ஆராதித்து, தன்னையே ஒப்படைத்த பின்னர் காரணமில்லாமல் பிரிந்து சென்றவனின் சுவடோடு நிர்க்கதியாய் நிற்பாள்.

பேருந்தில் இரண்டு பேர் அமரும் இருக்கைகளில் ஒன்று மட்டும் காலியாக இருக்கும்போது,

“சும்மா அண்ணன் மாதிரி நினைச்சு உக்காந்துக்கோ”

என்று சொல்லும் ஆண்மகனை நம்பி இருக்கையில் அமர்ந்த பின்னர் அவன் அவளின் இடுப்பைத் தீண்டும்போது முறைத்துக் கொண்டு எழுந்து நின்றுகொள்வாள்.

“பொட்டச்சிக்கு எவ்ளோ… திமிரு பாத்தியா…” என்று பேசும் ஆண்களைக் கண்டும் காணாமால் அமைதியாய்ச் செல்வாள்.

அவளுக்குப் பெண்ணியம் தெரியாது,

‘பூலான் தேவி’ போல பொங்கி எழத் தெரியாது.

அவளுக்கு தெரிந்ததெல்லாம் ஆண்களை நம்பி நம்பி ஏமாந்து போவதும், நினைவுகளை நெஞ்சில் நிறுத்தி அழுவதுமே.

எனினும் அவள் பயணம் தொடரும்.
மகள், மருமகள், அண்ணி, அக்கா, தங்கை, அம்மா, மனைவி, பாட்டி, தோழி என்றே எங்கும் துவண்டுவிடாமல் அவளின் நீண்ட நெடிய பயணம் தொடரும்.

– மெகிரா