ஆப்கானிஸ்தான்: நேற்று – இன்று – நாளை | பேரா. விஜய் பிரசாத் | தமிழில்: வீ. பா. கணேசன்
(இந்திய சமூக விஞ்ஞான கழகம், சென்னை சார்பில் 24.09.2021 அன்று மாலை நடைபெற்ற இணையவழி கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கமான தமிழ் வடிவம்)
நண்பர்களே! தோழர்களே!
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் சில ஆண்டுகள் நான் வாழ்ந்தேன். கடைசியாக சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பயிலரங்கம் சம்பந்தமாக புகழ்பெற்ற பத்திரிக்கையாளரும் ஆய்வாளரும் ஆன பி. சாய்நாத் அவர்களோடு பங்கு பெற்றேன். அன்று மாலை நடைபெற்ற இந்திய சமூக விஞ்ஞான கழகத்தின் கூட்டம் ஒன்றிலும் பங்கு பெற்று பேசினோம். அந்த நிகழ்ச்சிகள் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருந்தது. இன்னும் சொல்லப் போனால் சாய்நாத் உடன் இருக்கும் ஒவ்வொரு கணமும் மதிப்புக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய ஒன்றுதான்.
நண்பர்களே,
பொதுவாக சர்வதேச அளவிலான பன்னாட்டுக் கூட்டமைப்புகள்தான் நாம் அனைவரும் அறிந்தவையாக இருந்து வருகின்றன. நேட்டோ, ஜி-7 போன்றவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால் சீனாவின் முன்முயற்சியில் 2001ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட SCO என்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பற்றி பலருக்கும் தெரிந்திருக்காது. இந்தியாவும் கூட அதில் அங்கம் வகிக்கிறது. இந்த அமைப்பு ஆசிய-ஐரோப்பிய நாடுகளின் அரசியல், பொருளாதார, பாதுகாப்பு விஷயங்களில் பரஸ்பர ஒத்துழைப்பை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டதாகும். உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் மக்களை உள்ளடக்கிய நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன. இந்தப் பகுதியில் உருவாகும் அச்சுறுத்தல்களை, சவால்களை எதிர்கொண்டு சமாளிப்பது, வர்த்தகம், கலாச்சாரம், மனித நேய உதவிகள் ஆகியவற்றுக்கான ஒத்துழைப்பை இந்த உறுப்பு நாடுகளிடையே வளர்ப்பதே இதன் நோக்கமாகும்.
அந்த வகையில் இன்று சிக்கலானதொரு நிலையை எதிர்கொண்டு வரும் ஆஃப்கானிஸ்தானின் எல்லைப்புற நாடுகளான தாஜிகிஸ்தான், கசாக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிறுவன நாடுகளாக இருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு இந்த அசாதாரணமான சூழலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை நிச்சயமாக மேற்கொள்ளும் என்பதில் ஐயமில்லை.
முதலில் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஆஃப்கானிஸ்தானில் இன்று தாலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர் என்பதை மட்டுமே வைத்துக் கொண்டு அந்த நாட்டை பயங்கரவாத கண்ணாடியின் மூலம் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அல்லது அதை ஒரு காட்டுமிராண்டிகள் நாடு எனப் பார்க்க வேண்டாம். அது மிக நீண்ட வரலாறும் சீர்திருத்த முயற்சிகளும் கொண்டநாடுதான்.
இப்போது ஆஃப்கானிஸ்தானின் வரலாற்றுக்குள் செல்வோம். மிகப் பழைய வரலாற்றுக்குள் நான் செல்லப் போவதில்லை. சுமார் ஒரு நூறாண்டு வரலாற்றை மட்டுமே நாம் பார்க்கப் போகிறோம். பிரிட்டிஷ் இந்தியாவின் வடமேற்கு எல்லைக்கு அப்பால், அன்றைய ருஷ்யப் பேரரசின் எல்லையை ஒட்டியிருந்த, ஆஃப்கானிஸ்தானை கைப்பற்ற பிரிட்டிஷ் பேரரசு 18ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் இருந்தே தொடர்ந்து முயற்சித்து வந்தது. 1820 முதல் 1919 வரையிலான நூறு ஆண்டுகளில் நடந்த மூன்று ஆங்கிலேய-ஆஃப்கானிய போர்களில் ஆங்கிலேயர்கள் தொடர்ந்து தோல்வியையே சந்தித்தனர். 1919ஆம் ஆண்டு அமீர் பதவிக்கு வந்த அமானுல்லா கான் (King Amanullah Khan) ஆப்கானிஸ்தான் ஆங்கிலேயர்களிடமிருந்து முழுமையாக விடுதலை பெற்ற நாடு என்று அறிவித்தார்.
முதல் உலகப் போரின் விளைவாக நலிவுற்றிருந்த ஆங்கிலேயப் படைகளை நாட்டின் எல்லையிலிருந்தும் அவர் வெளியேற்றினார். இதையடுத்து ஆஃப்கானின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் ஒப்பந்தம் ஒன்று ராவல்பிண்டியில் 1919 ஆகஸ்ட் 8 அன்று கையெழுத்தானது. பிரிட்டிஷாருடன் இந்த அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பாகவே சோவியத் அரசுடன் நட்புறவு ஒப்பந்தத்தை அவர் ஏற்படுத்திக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நவம்பர் புரட்சிக்குப் பிறகு சோவியத் யூனியனை முதலில் அங்கீகரித்த நாடுகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் இருந்தது. இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு 1979 டிசம்பர் வரை தொடர்ந்தது.
அந்நாட்களில் முஸ்லீம் சமூகத்தை நவீனப்படுத்த முயற்சிகள் எடுத்து வந்த ஆட்டமான் பேரரசுடன் உறவு கொண்டிருந்த அமீர் அமானுல்லா அந்தப் பகுதியைச் சேர்ந்த சுரையா என்ற பெண்ணை மணந்து கொண்டார். சுரையா ஆஃப்கானில் பெண்களுக்கான பள்ளிகளை முதலில் தொடங்கினார். அமானுல்லாவின் இத்தகைய சமூக சீர்திருத்தங்களுக்கு எதிராகவே ஆஃப்கன் நாட்டு பெருநிலப் பிரபுக்களும் முல்லாக்களும் இருந்து வந்தனர். அமீருக்கு எதிரான இவர்களின் வகுப்புவாத வெறிக்கு பிரிட்டிஷ் இந்தியாவும் தூபம் போட்டு வந்தது.
உதாரணமாக, அமானுல்லாவும் சுரையாவும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்தபோது, சுரையா (Queen Suraya Tarzai) மற்ற வெளிநாட்டு ஆண்களுடன் சரிசமமாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதையெல்லாம் படமெடுத்து, ஆஃப்கன் வகுப்புவாதிகளிடையே பிரிட்டிஷ் உளவுத் துறை அந்தப் புகைப்படங்களை விநியோகித்து அமானுல்லாவிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தது.
ஆஃப்கானில் இருந்த பல்வேறு இனக்குழுக்களுடன் முரண்பட்டு இருந்தபோதிலும், பிரிட்டனின் பிடியிலிருந்து தப்பி இன்றுள்ள ஆஃப்கன் எல்லையை மீட்டெடுத்தது அமீர் அமானுல்லாதான். அவரது இனத்தைச் சேர்ந்த உறவினர்களே இந்த சீர்திருத்த முயற்சிகளுக்கு எதிராக இருந்தனர். கிராமப்புற பெரு நிலப் பிரபுக்கள், முல்லாக்கள், நகர்ப்புற பழமைவாதிகள் ஆகியோரின் எதிர்ப்பையும் அவர் எதிர்நோக்க வேண்டியிருந்தது. எனினும் மக்களிடையே அவரது சீர்திருத்த முயற்சிகளுக்கு பெருத்த ஆதரவு இருந்தது. அவர் பள்ளிகளை திறந்த உடனேயே மக்கள் ஆர்வத்தோடு அதில் தங்கள் குழந்தைகளை சேர்த்தனர்.
1919ஆம் ஆண்டிலிருந்தே ஆஃப்கானின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கான அவசியம் குறித்து அமீர் அமானுல்லாவிற்கு லெனின் தொடர்ந்து கடிதங்கள் எழுதி வந்தார். எனினும் நாட்டின் எல்லையை பாதுகாப்பது, இனக்குழு மோதல்களை அடக்குவது போன்ற முயற்சிகள் 1965வரை நீடித்தது. அந்த ஆண்டில் ஆஃப்கன் நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் அதற்கு முந்தைய ஆண்டுதான் தொடங்கப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற ஏழு பேரில் நான்கு பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது அமானுல்லாவின் சீர்திருத்த நடவடிக்கைகளின் தாக்கத்தின் விளைவே ஆகும்.
ஆஃப்கன் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தொடர்ந்து நிலவி வந்த குழுப்போக்குகள், திரிபுகள் ஆகியவற்றின் விளைவாக அதன் வளர்ச்சி குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கவில்லை. இருந்தபோதிலும் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களின் கட்டமைப்பு கிராமங்களில் மட்டுமின்றி, ராணுவத்திலும் பரவியிருந்தது. 1919இல் மேற்கொள்ளப்பட்ட நட்புறவு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து சோவியத் யூனியன் ஆஃப்கானிஸ்தானுக்கு அனைத்து வகையிலும் பொருளாதார, ராணுவ உதவிகளை, ராணுவ தளவாடங்களை அளித்து வந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருந்தது.
கம்யூனிஸ்ட் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கும் சென்று கல்வியறிவைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து அந்த நாட்டின் எல்லைப் பகுதிகளில் செயல்பட்டு வந்த முஜாஹிதீன்கள் இவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி வந்தனர். இவ்வாறு ஆயிரக் கணக்கான இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். முஜாஹீதீன்களைக் காரணம் காட்டி அன்றிருந்த பாகிஸ்தான் சர்வாதிகாரி ஜியாவுல் ஹக் ஆஃப்கனில் தலையிட்டார். எனினும் ஆஃப்கானிஸ்தானை அவரால் பணிய வைக்க முடியவில்லை.
1973ஆம் ஆண்டு மேற்காசிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை முன்னெடுக்கும் காலமாகவும் இருந்தது. ஜனநாயக, முற்போக்குக் கருத்துகள் ஆஃப்கனில் வளர்ந்துவந்த அதே நேரத்தில் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் உருவாகி அங்கு முஜிபுர் ரஹ்மான் ஒரு ஜனநாயகப் பாதையை உருவாக்கி வந்தார். வங்கதேசப் போருக்குப் பிறகு பாகிஸ்தானிலும் மீண்டும் ஜனநாயகம் தலையெடுத்து பூட்டோ ஆட்சிக்கு வந்தார். இந்தியாவில் இந்திரா காந்தியின் வங்கிகளின் தேசியமயமாக்கல், மன்னர் மானிய ஒழிப்பு போன்ற நடவடிக்கைகள் இப்பகுதியில் சோஷலிச கருத்துக்கள் வளர உதவின.
இத்தகையதொரு சூழலில்தான் பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வந்த முஜாஹீதீன் குழுவின் தலைவர் 1973இல் அமெரிக்காவிற்குச் சென்று கட்டமைப்புகளை மேற்கொள்வதற்கான நிதியுதவிகளை பெற்று வந்தார். இன்றைய தாலிபான்களின் பாட்டன்களான முஜாஹீதீன்களுக்கு மதவெறி பிடித்த சவூதி அரேபியாவும் கணிசமான நிதியுதவிகளை அளித்து வந்தது. இவர்களின் தொடர்ச்சியான திடீர் தாக்குதல்களின் விளைவாக அப்போது ஆட்சி செய்து வந்த ஜாஹிர்ஷா அரசுக்கு பெரும் நெருக்கடி உருவானது. இத்தகைய நெருக்கடியான சூழலில் ஆஃப்கன் அரசில் பிரதமரைப் போன்ற அதிகாரமிக்க பதவியை நீண்ட நாட்களாக வகித்து வந்த மொஹமத் தாவூத் கான் நாட்டை வலுப்படுத்த வேண்டும் என்ற பெயரில் அமீர் ஜாஹிர்ஷாவை ஆட்சியில் இருந்து தூக்கியெறிந்தார். கம்யூனிஸ்டுகளின் மீது தாக்குதல் தொடுக்கத் தொடங்கியது. அதே நேரத்தில் ஈராக்கில் சதாம் உசேன் 1978இல் அங்கிருந்த கம்யூனிஸ்டுகளின் மீது தாக்குதல்களைத் தொடங்கினார். இந்நிலையில் 1979ஆம் ஆண்டில் முகாஜிதீன்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த காபூலில் இருந்த அமெரிக்க தூதர் படுகொலை செய்யப்பட்டார். கம்யூனிஸ்ட்டுகளின் கட்சியான ஆப்கனிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சியின் (Peoples Democratic Party of Afghanistan – PDPA) இரண்டு பிரிவுகளும் (Kalk – கல்க் – மக்கள் திரள், Parcham – paarssam – பதாகை) சேர்ந்து தாவூத்கானை எதிர்த்து ராணுவப் புரட்சியில் 1978 ஏப்ரலில் அவரைத் தோற்கடித்தனர். தராகி, அமீன், பாபராக் கார்மல் ஆகியோர் தலைவர்கள். தராகி அதிபரானார். ஒற்றுமை நீண்டநாள் நீடிக்கவில்லை. 1978 செப்டம்பரில் அமீன் அரண்மனைப் புரட்சியில் தராகியை பதவி நீக்கம் செய்தார். தராக்கி கொலையுண்டார். 1978 டிசம்பரில் பிடிபிஏ அரசு சோவியத் யூனியனோடு ராணுவ ஒப்பந்தம் செய்திருந்தது.
ஏற்கனவே இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி ஏகாதிபத்திய அடிவருடிகளின் வெறித்தாக்குதலால் சின்னாபின்னமாக்கப்பட்டு, பல லட்சக்கணக்கான கம்யூனிஸ்டுகள் அங்கு படுகொலை செய்யப்பட்ட துயரகரமான நிகழ்வின் பின்னணியில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தூண்டுதலுடன் உலகின் பல நாடுகளிலும் கம்யூனிஸ்டுகளின் மீதான கொலைவெறி தாக்குதல்கள் அப்போது அதிகரித்து வந்த நிலையில், தனது எல்லை நாடான ஆஃப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் இந்தப் படுகொலைகள் பின்னர் தங்களுக்கு அச்சுறுத்தலாக மாறக் கூடும் என்ற எண்ணத்துடன் சோவியத் யூனியன் 1979ஆம் ஆண்டு டிசம்பரில் ஆஃப்கானிஸ்தானுக்கு ராணுவத்தை அனுப்பியது. 1979 டிசம்பரில் அமீன் கொலையுண்டு பாபராக் கார்மல் ஆட்சிக்கு வந்தார். அவர் 1986 வரை பதவியில் இருந்தார்.
சோவியத் ஆதரவு பெற்ற நஜிபுல்லா (Afghanistan Last Communist President, Mohammed Najibullah) 1986 ஆம் ஆண்டு அதிபர் ஆனார். இவரது ஆட்சியில்தான் நிலச்சீர்திருத்தம், கல்வியறிவு, பெண்கள் கல்வி, நவீன தொழில்நுட்பங்கள், வேலைவாய்ப்பு, சமூக சமத்துவம் போன்றவை ஆஃப்கனில் பரவத் தொடங்கியது. எனினும் சோவியத் ஆதரவு பெற்ற ஆஃப்கனை நிலைகுலையச் செய்ய உள்நாட்டிலிருந்து பெரு நிலப்பிரபுக்கள், முல்லாக்கள் மட்டுமின்றி அண்டைநாடான பாகிஸ்தானும், அமெரிக்க ஏகாதிபத்தியமும், இதர மேற்கு நாடுகளும், சவூதி அரேபியா, ஈரான் போன்ற மத அடிப்படைவாத நாடுகளும் பிற்போக்குவாதிகளின் படையான முஜாஹிதீன்களின், அதன் படைப்பிரிவான தாலிபான்களின் பயங்கரவாதச் செயல்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தன.
போதைப்பொருளான அபினை பெருமளவில் பயிரிடும் பெருநிலப்பிரபுக்களின் பணமும், சோவியத் ஆதரவு பெற்ற ஆட்சிக்கு எதிராக இருந்தது. முகாஜிதீன்களின் படுகொலை வெறியாட்டம் எல்லைகளைத் தாண்டி தலைநகரான காபூலிலும் தொடர்ந்தன. இன்றைய தாலிபான்களின் பாட்டன்களான முஜாஹிதீன்களின் செல்வாக்கு அதிகரித்தது. 15 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்குப் பிறகு சோவியத் படைகள் 1988 ஆம் ஆண்டு தொடங்கி ஆஃப்கன் நாட்டிலிருந்து வெளியேறின. 1989 க்குப் பிறகு ஆப்கானியப் படைகள்தான் போரிட்டன. 1994இல் தாலிபான்கள் ஆஃப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்து ஜனநாயகத்திற்கு முடிவு கட்டினர். பெண்கள் மீண்டும் வீட்டிற்குள் அடைபட்டனர். நஜிபுல்லா ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட நிலச்சீர்திருத்தம், கல்வியறிவு பரவல், பெண்கள் முன்னேற்றம், ஜனநாயக உணர்வுகள் ஆகியவை முற்றிலுமாக தகர்க்கப்பட்டு, பெருநிலப்பிரபுக்களின், முல்லாக்களின் மத அடிப்படைவாத ஆட்சி நிலைபெற்றது. 1996இல் நஜிபுல்லா சிறைபிடிக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டு, அவரது உடல் பொதுவெளியில் தூக்கில் பல நாட்கள் தொங்கவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்த காலத்தில்தான் அல்கொய்தா, ஐஎஸ் ஐஎஸ் போன்ற மதத் தீவிரவாத குழுக்கள் தாலிபான் ஆட்சிப் பகுதிகளிலும் பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளிலும் வேர் விட்டு வளரத் தொடங்கின. இத்தகைய மத அடிப்படைவாதிகளின் வளர்ச்சிக்குப் பின்னால் அபின் வர்த்தகத்தில் கொழித்த பெருநிலப்பிரபுக்கள், முல்லாக்கள், சவூதி அரேபியாவின் மதவெறி அரசாட்சி, அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் ஆதரவு சக்திகளும் இருந்தன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் கொழுத்து வளர்ந்த அல்கொய்தா பின்னர் வளர்த்த கடா மார்பில் பாய்வதைப் போல் 2001 செப்டெம்பர் 11 அன்று அமெரிக்காவின் மீது நேரடியான தாக்குதல் தொடுத்தபோது, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று முரசறிவித்து அமெரிக்கா உலகமெங்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றிய பிரச்சாரத்தை முன்னெடுத்தது.
இந்தப் போரின் ஒரு பகுதியாக தனது ஆதரவு சக்திகளான பிரிட்டன், நேட்டோ நாடுகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி அமெரிக்கா 2001இல் தாலிபான்களை ஆஃப்கானில் இருந்து விரட்டியடித்து தங்களது ஆதரவு ஆட்சியை நிலைநிறுத்தியது மட்டுமின்றி ஈராக், ஆஃப்கான் மண்ணில் தனது வலுமிக்க படைகளை நிறுத்தி வைத்தது. கடந்த இருபது ஆண்டுகளில் ஆப்கன் மண்ணில் அமைதியை நிலைநிறுத்துவதற்காக 2.76 ட்ரில்லியன் டாலர்களை அது செலவழித்துள்ளதாகவும் கூறுகிறது. உண்மையில் இந்தப் பணம் அங்கு நிறுத்தப்பட்டிருந்த படைகளுக்கான, தனது ஆதரவாளர்களாக இருந்த ஆப்கன் வலதுசாரி அரசியல்வாதிகளுக்கும், தங்களது விசுவாசிகளுக்கும், ஏஜெண்டுகளுக்கும் செலவு செய்த பணம்தானே தவிர, ஆப்கன் நாட்டு மண்ணில் வளர்ச்சித் திட்டங்களை, மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை, தொழில்நுட்ப மேம்பாடுகளை செய்வதற்காகச் செலவழிக்கப்பட்ட பணம் அல்ல என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப் போனால் அமெரிக்கா படைகளை நிலைநிறுத்தியிருந்த தலைநகரான காபூலிலேயே பல இடங்களில் மின்சார வசதி இல்லை என்பதுதான் உண்மை. இதுதான் அமெரிக்கா அங்கு ஜனநாயகத்தை நிலைநிறுத்திய லட்சணம். அமெரிக்கப் படைகள் நிலைபெற்றிருந்த இந்த இருபதாண்டு காலத்திலும் கூட முல்லாக்கள், நிலப்பிரபுக்களின், போதைப் பொருள் கடத்தல்காரர்களின் ஆட்சிதான் நடைபெற்று வந்தது.
ஏற்கனவே ஈராக்கில் சர்வநாசங்களையும் செய்துவிட்டு அந்த மண்ணை நிர்மூலமாக்கிவிட்டு, பின்பு அங்கிருந்து மூக்குடைபட்டு வெளியேறியதைப் போலவே இப்போது தாலிபன்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஆஃப்கானில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது என்பதே உண்மை. பல லட்சக்கணக்கான ஆப்கன் மக்களை கொன்று குவித்த அமெரிக்கப் படை வீரர்களில் பலரும் ஆப்கானில் தாராளமாகக் கிடைக்கும் போதைப் பொருளான அபினுக்கு அடிமையானவர்களாக மாறிப் போனதும், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களாக மாறிப் போனதும் அனைவரும் அறிந்த உண்மையாகும். இத்தகையதொரு நிலையில் தப்பித்தால் போதும் என்று அமெரிக்காவும் அதன் நட்பு அமைப்புகளும் அங்கிருந்து வெளியேறியிருக்கின்றன.
இவ்வாறு அமெரிக்கா வெளிப்படையாக அவமானப்பட்ட போதிலும், அது தொடர்ந்து முன்னெடுத்து வரும் கம்யூனிஸ்டு எதிர்ப்பு, ஜனநாயக எதிர்ப்பு சக்திகளான தாலிபான்களின் கைகளில் ஆட்சியை ஒப்படைத்து விட்டுத்தான் அது வெளியேறி இருக்கிறது என்பதையும், கடந்த இருபது ஆண்டுகளாக அமெரிக்காவிற்கு சேவகம் புரிந்து வந்த மக்களைக் கூட காப்பாற்றாமல் அது வெளியேறியிருக்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்க உளவுத் துறையின் ஏவலாளியான பாகிஸ்தானிய ஐஎஸ்ஐயுடன் கலந்து ஆலோசித்த பின்பே தாலிபான்களின் அமைச்சரவையே உருவாகி இருக்கிறது என்பதையும் நாம் பார்க்கிறோம்.
இதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் வருங்காலம் எப்படியிருக்கக் கூடும் என்ற கேள்வி எழுகிறது. அதன் எல்லை நாடுகளான ரஷ்யா, சீனா ஆகியவை அங்கம் வகிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தாலிபான்களின் ஆட்சியை எவ்வாறு அணுகவிருக்கிறது என்பதைப் பொறுத்தே ஆப்கானிஸ்தானின் வருங்காலம் தீர்மானிக்கப்படக் கூடும். சீனாவின் வெளியுறவு அமைச்சர் தாலிபான் தலைவருடன் தோஹாவில் பேச்சுவார்த்தை நடத்திய செய்திகள் வெளிவந்துள்ளன. இந்தப் பின்னணியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நடவடிக்கைகளை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டியுள்ள தேவை ஏற்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை தந்தமைக்காக மீண்டும் ஒரு முறை இந்திய சமூக விஞ்ஞான கழகத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழில்: வீ. பா. கணேசன்