மைதிலி மொழி சிறார் மொழிபெயர்ப்புக் கதை: யானைப்பாகனும், நாய்களும் – தமிழில் ச. சுப்பாராவ்
பீஹாரின் கிராமங்களில் திருமணங்களின் போது யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றை மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தில் அழைத்து வருவது வழக்கம். பணக்காரர்கள் தமது செல்வச் செழிப்பைக் காட்டுவதற்காக மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தில் நிறைய யானைகளையும், குதிரைகளையும், ஒட்டகங்களையும் நன்கு அலங்கரித்து அழைத்து வருவார்கள். ஊர்வலத்தில் அவற்றிற்கு நடுவே செருக்குடன் கம்பீரமாக நடந்து வருவதில் அவர்களுக்குப் பெருமை.
இவையெல்லாம் உயர்ஜாதி நிலப்பிரபுக்கள் வீட்டுத் திருமணங்களின் ஆடம்பரங்கள். கீழ்ஜாதி ஏழைகள் வீட்டுக் கல்யாணங்களில் யானை, குதிரை, ஒட்டகம் எதுவும் இருக்காது. அவர்களால் அவற்றையெல்லாம் நினைத்தும் பார்க்க முடியாது. பணக்காரர்கள் வீட்டு கல்யாண ஊர்வலங்களை வேடிக்கை பார்ப்பதுடன் சரி.
இப்படித்தான் ஒருமுறை ஒரு பணக்காரர் தமது மகனின் கல்யாணத்திற்காக நிறைய யானைகள், ஒட்டகங்கள், குதிரைகளை வரவழைத்திருந்தார். அதில் ஒரு யானைக்கு மிகவும் பசித்ததால், அதன் பாகன் அதன் மேல் அமர்ந்து அதை பக்கத்தில் இருந்த தென்னந்தோப்பிற்கு அழைத்துச் சென்றான்.
அந்த தோப்பில் சேட்டைக்கார நாய்கள் நிறைய இருந்தன. அவை யார் வந்தாலும், பயங்கரமாகக் குலைக்கும். அதைப் பார்த்து குழந்தைகள் கைதட்டி சிரிப்பார்கள். யானை தோப்பிற்குள் நுழைந்து தென்னைமட்டைகளைத் தின்ன ஆரம்பித்ததும், இந்த சேட்டைக்கார நாய்கள், தம் வழக்கம் போலவே உரத்த குரலில் குரைக்க ஆரம்பித்தன. யானையைச் சுற்றிச் சுற்றி வந்து குரைத்தன. யானை மேல் இருந்த பாகன், நாய்கள் யானையைப் பார்த்து தானே குரைக்கின்றன – நம்மைப் பார்த்துக் குறைக்கவில்லையே என்று நாய்களை விரட்டாமல் ஜாலியாக யானை மீது உட்கார்ந்திருந்தான்.
யானையும் சிறிது நேரத்திற்கு இந்த நாய்களைக் கண்டுகொள்ளவில்லை. அது ஜாலியாக தென்னைமட்டைகளைத் தின்று கொண்டிருந்தது. நாய்கள் விடாமல் குரைக்கவும், அதற்கு கடுப்பாகிவிட்டது. சட்டென்று தன் தும்பிக்கையை நீட்டி ஒரு நாயின் வாலைப் பிடித்து அதை அப்படியே உயரத் தூக்கியது. நாய் அலற அலற, தும்பிக்கையை ஒரு சுழற்று சுழற்றி, நாயை வானத்தில் வீசி எறிந்தது.
வானத்தில் பறந்த நாய், தரையில் விழாமல், யானை மேல் உட்கார்ந்திருந்த பாகன் மேல் விழுந்தது. யானை தூக்கி வீசியதால் கடும் கோபத்தில் இருந்த நாய் ஆத்திரத்தில் பாகனை பல இடங்களிலும் கடித்துக் குதறிப் போட்டது. பாகன் அலறினான்.
அவனது அலறல் சத்தம் கேட்ட கிராமத்தினர் ஓடி வந்து, நாயை விரட்டி, அவனை வைத்தியரிடம் அழைத்துச் சென்றனர். அவனுக்கு நாய்க்கடி புண்கள் ஆற பல மாதங்கள் ஆனது.
குறிப்பு: மைதிலி என்பது பீஹார் பகுதியில் பேசப்படும் ஒரு மொழி. அந்த மொழியின் நாட்டுப்புறக் கதைகளின் ஒரு தொகுப்பு 70-80 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலத்தில் வந்துள்ளது. அதில் ஒரு கதையின் மொழிபெயர்ப்பு.