நூல் அறிமுகம் : விஜய் பிரசாத் (தமிழில்) பேரா.பொன்னுராஜின் ’வாஷிங்டன் தோட்டாக்கள்’ – இரா. சிந்தன்
நூல்: வாஷிங்டன் தோட்டாக்கள்
ஆசிரியர் : விஜய் பிரசாத் (தமிழில்) பேரா.பொன்னுராஜ்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : 185
தொடர்பு எண் ; 044 24332924
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும் : thamizhbooks.com
முக்கண்ட சமூக ஆய்வுக் கழகத்தின் செயல் இயக்குனரும்,லெஃப்ட்வேர்ட் பதிப்பகத்தின் ஆசிரியருமான விஜய் பிரசாத் எழுதிய ‘வாஷிங்டன் தோட்டாக்கள்’ என்ற புத்தகம், அமெரிக்கா எப்படி ‘ஏகாதிபத்தியமாக’ தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்பதை விளக்குகிறது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த புத்தகத்தை பேராசிரியர் பொன்ராஜ் தமிழில் கொடுத்துள்ளார்.
‘புரட்சியை கட்டமைக்கிற இடதுசாரிகளின் சொற்களை கொண்டதாகவும், அதனை அடக்குகிற அரசு ஆவணங்களை அடிப்படையாக கொண்டும்’ எழுதப்பட்டிருக்கும் இந்த நூல், விஜய் பிரசாத் அவர்களுடைய பல ஆண்டு பணிகளின் விளைவாகும். இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கும் பல சதி வேலைகள், அந்த வேலைகளை கருவியாக இருந்து முன்னெடுத்த ‘உளவாளிகளுடனான’ நேர்காணல்களில் இருந்தும் பெறப்பட்டுள்ளன. ஏராளமான அரசு ஆவணங்களில் இருந்து விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இருப்பினும், ரத்தினச் சுருக்கமாகவும், புரிந்துகொள்ள எளிதான மொழியிலும் எழுதியிருக்கிறார்.
இந்த புத்தகம் 3 பகுதிகளைக் கொண்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு முன் நிலவிய காலனி ஆதிக்க சூழலும், பிறகு அமெரிக்கா உலகின் முதன்மை சக்தியாக ஆனதுடன், அமெரிக்காவை மையமாக கொண்டு, பழைய ஏகாதிபத்திய நாடுகளை தனது ஆரமாக மாற்றிக் கொண்டது எப்படி?. அந்த ஆபத்தான சக்கரங்கள், உலகம் முழுவதும் பறந்து, மக்களின் இயல்பான விடுதலை வேட்கையினை சிதைக்கும் வழிமுறைகள் என்னென்ன?. சோவியத் ஒன்றியம் சிதைந்ததற்கு பிறகு இந்த உத்திகள் ‘கலப்பு யுத்தம்’ என்ற வடிவத்தை கூடுதலாக மேற்கொண்டது எப்படி? என்பதையும் இந்த நூல் விளக்குகிறது.
2021 ஆம் ஆண்டின் மத்தியில் பெண்டகன் வெளியிட்ட விபரங்களின்படி, உலகின் 80 நாடுகளில், 750 ராணுவத் தளங்களை அமெரிக்கா வைத்துள்ளது.ஆனால் உண்மையில் சிறிதும், பெரிதுமாக ராணுவம் நிலை கொண்டிருக்கும் நாடுகளின் எண்ணிக்கை 183 ஆகும். கண்களுக்கு முன் எந்த எதிரியும் தென்படாத நிலையில், உலகம் முழுவதும் அவர்கள் யாரை எதிர்த்து போர் செய்கிறார்கள்?
அமெரிக்காவின் ராணுவ தளங்களை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்று, ஜப்பான். ஜப்பான் நாட்டின் ஒக்கினாவா தீவில் அமையப்பெற்ற ராணுவ தளங்கள், பெண்கள் மீதான வன்முறையின் மையமாக இருக்கின்றன. அந்த தளங்களுக்கு எதிராக மக்களின் கோபம் குவிந்தது. இப்பிரச்சனை பேசிய ஹடோயாமா புகியோகத், 2009ஆம் ஆண்டு தேர்தலில் பெரும் வெற்றி பெற்றார். பிறகு அவர் அமெரிக்காவின் ராணுவ தளங்களுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்தார்.
அதன் பின்னர், ஒபாமாவின் நிர்வாகம் ஜப்பானிடம் மிகக் கடுமையாக நடந்துகொண்டது. சில ஆண்டுகளில் ஹடோயாமா புகியோகத் தனது கட்சியாலேயே தனிமைப்படுத்தப்பட்டார்.
கேள்விகளுக்கு அப்பாற்பட்ட இந்த அதிகாரம் எப்படி நிறுவப்பட்டது? எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது? உலக மக்களின் மிக இயல்பான, ஜனநாயக விருப்பங்களை அது எப்படி நசுக்கி அழிக்கிறது என்பதைத்தான் இந்த நூல் ஏராளமான உதாரணங்களின் வழியாக விளக்குகிறது.
அமெரிக்காவின் பிறப்பு
அமெரிக்கா எப்படி உருவாக்கப்பட்டது என்பதில் இருந்துதான் அதன் அதிகாரம் தொடங்குகிறது. 1776 ஆம் ஆண்டில் நடந்த அமெரிக்க புரட்சியை, விஜய் பிரசாத் விளக்குகிறார். “முதலில் அது ஒரு புரட்சியா” என கேள்வி எழுப்பும் அவர். “அதில் வர்க்கப் போராட்டம் எதுவும் இல்லை. புரட்சிகர நடவடிக்கை என்ற வரையறைக்கு உட்பட்ட தொழிலாளர் இயக்கம் எதுவும் மக்களிடமிருந்து எழவில்லை. அந்த போராட்டத்தில் பல்வேறு தரப்பட்ட மக்களின் சமூக ஒற்றுமை வெளிப்படவில்லை. மாறாக பூர்வ குடி மக்களை இனப்படுகொலை செய்யும் உணர்வு இருந்தது. அடிமையாக்கப்பட்ட ஆப்பிரிக்கர்களின் கலகம் பற்றிய பெரும் அச்சம் இருந்தது.”
ஆம்!. அமெரிக்கா பிறந்த போதே அது தனது காலனி ஆதிக்கத்தை உறுதி செய்துகொள்ளும் பூர்வகுடி மக்கள் மீதான தாக்குதலையும், அண்டை நாடுகளின் மீதான ஆக்கிரமிப்பையும் நடத்தி முடித்திருந்தது.இரண்டாம் உலகப்போர் நடந்து முடிந்த பின்னர், உலகின் யதார்த்தங்கள் மாறியிருந்தன. அதனை ஏற்க மறுத்த இங்கிலாந்தும் ஃபிரான்சும் தங்களுடைய பிரதான இடத்தை மீண்டும் அடைந்துவிட முடியும் என்று நம்பினார்கள்.
அல்ஜீரியா முதல் மலாயா வரை, வியட்நாம் முதல் கயானாவரை அவர்கள் காலனி ஆதிக்க போர்களை முன்னெடுத்தார்கள். ஆனால் அவை தேசிய எழுச்சிகளை எதிர்கொள்ள முடியாமல் பலவீனமடைந்தன. 1956 ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாய் மீதான தங்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்த, இஸ்ரேலின் உதவியோடு பல தந்திரங்களை முன்னெடுத்தார்கள், ஆனால் அவை தோல்வியில் முடிந்தன.
சோசலிச முகாமாக அமைந்த சோவியத் ஒன்றியமும் தனது தொழில் தளங்களை இழந்திருந்தது. அந்த நாட்டில் 52 ஆயிரம் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி நின்று போயிருந்தது. மூலதன பங்கு 30% வீழ்ச்சியை சந்தித்தது. 2 கோடியே 70 லட்சம் பேர்களை போர்க்களத்தில் அது இழந்திருந்தது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் இரண்டாம் உலகப்போரின் காரணமாக சோவியத் ஒன்றியத்தின் குடிமக்கள் தங்கள் 25 வருட வருமானத்தை, போரின் விலையாக கொடுத்திருந்தார்கள்.
அதே சமயத்தில், அமெரிக்கா மிகவும் குறைவான சேதங்களை மட்டுமே எதிர்கொண்டிருந்தது. 4 லட்சத்திற்கும் சற்று அதிகமானவர்களை போரில் இழந்திருந்தாலும், அதன் உற்பத்தி திறனும், பண்பாட்டு வளர்ச்சியும் தடைபடவில்லை. இவை அமெரிக்காவிற்கு சாதகமாக அமைந்தது. இப்படித்தான் உலகத்தின் மைய இடத்திற்கு அமெரிக்கா வந்து சேர்ந்தது.
அமெரிக்கா மையமாக இருக்கிறது. ஃபிரான்சும், இங்கிலாந்தும் இன்ன பிற நாடுகளும் ஆரங்களாக உள்ளன. 1946, 49 மற்றும் 1952 காலகட்டத்தில் ஜப்பானில் நடந்த தேர்தல்களில் அமெரிக்கா தலையிட்டது. லிபரல் கட்சிக்கும், ஜனநாயக கட்சிக்கும் இடையில் கூட்டணி உருவாக்க, அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகள் அரும்பாடுபட்டன. இதன் மூலம் சோசலிஸ்ட் கட்சி பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஜப்பான் அமெரிக்காவின் ஆரமாக ஆனது. இத்தாலியின் பிரதமர் அல்சைட் டி காஸ்பரி, பிரான்சு பிரதமர் பால் ராமடியர் ஆகிய இருவருடைய அரசிலும் கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து இடம்பெற்றால் அந்த நாடுகளுக்கு நிதி எதுவும் வழங்கப்படாது என்று அமெரிக்கா மிரட்டியது. 1963 முதல் 1972 வரை இதனை சாதித்திட பெரும்பணம் செலவிடப்பட்டது. பின் அந்த நாடுகளும் அமெரிக்காவிற்கு ஆரமாகின.
ஒரு மோசமான ‘சக்கர வியூகம்’ செயல்படுகிறது. அது ஏராளமான படுகொலைகளையும், அதிகாரப் பறிப்பையும் செய்துள்ளது, செய்து வருகிறது.
புதிய ஒழுங்கு
உலகப்போர் முடிந்த பின், 1944 ஆம் ஆண்டில் பிரெட்டன்வுட்ஸ் நகரில் அமெரிக்கா கூட்டிய மாநாடு, உலக அரங்கில் அதன் முதன்மை விருப்பத்தை பறைசாற்றியது. 1948 ஆம் ஆண்டில் ஐரோப்பிய பொருளாதார கூட்டுறவு அமைப்பு பிறந்தது. இதற்காக அமெரிக்கா 12 பில்லியன் டாலர்கள் கடனாக கொடுத்தது. 1949ஆம் ஆண்டில் நேட்டோ பிறப்பெடுத்தது. நேட்டோவில் அதன் உறுப்பினர்களுக்கு பங்கு எதுவும் கிடையாது. அமெரிக்காதான் அதன் விதிகளை முடிவு செய்தது.அமெரிக்க கண்ட நாடுகளின் அமைப்பு 1948ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு லத்தீன் அமெரிக்காவில், அமெரிக்காவின் செல்வாக்கை உறுதி செய்யும் விதமாக ஏற்படுத்தப்பட்டதாகும்.
இந்த அமைப்பின் முதல் கூட்டம் கொலம்பியாவில் நடைபெற்ற அதே சமயத்தில், கொலம்பியா நாட்டில் ஏழை மக்களின் விருப்பத்திற்குரிய தலைவராக இருந்த ஜார்ஜ் கெய்டான் சுட்டுக்கொல்லப்பட்டார். அதனை ஒட்டி எழுந்த மக்கள் எழுச்சி ‘கம்யூனிசமாக’ அடையாளப்படுத்தப்பட்டு, வன்முறையில் வீழ்த்தப்பட்டது. பொகாட்டாவில் நடந்த மாநாட்டின் முடிவில், கம்யூனிஸ்டுகளை ‘அழித்து ஒழிப்பது’ ஒரு சட்டமாகவே ஆக்கப்பட்டது.1954ஆம் ஆண்டில் இதே போல தெற்காசிய ஒப்பந்த அமைப்பு, மணிலா ஒப்பந்தம், 1955ஆம் ஆண்டில் மத்திய ஒப்பந்த அமைப்பு – பாக்தாத் ஒப்பந்தம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டன.
ஐரோப்பிய பகுதிகளில் நேட்டோ விரிவாக்கம் செய்யப்பட்டதன் மூலம் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மீது நிர்ப்பந்தம் செலுத்தப்பட்டது. லத்தீன் அமெரிக்காவில் நடந்த எழுச்சிகள் வீழ்த்தப்பட்டன. இவ்வாறு மாற்று அதிகாரத் தளங்கள் உருவாவதற்கான எந்த சிறு முயற்சியையும் தடுக்க அமெரிக்கா தொடர்ந்து முயன்றது.
ராணுவ கூட்டு பயிற்சிகள் என்ற பெயரால், வலுக்குறைந்த நாடுகளின் படைகள் அமெரிக்க கட்டமைப்பாக மாற்றப்பட்டன. மேலும் இந்த ராணுவங்கள், நவீன தளவாடங்களை வாங்கிச் சேர்க்கவும் வற்புறுத்தப்பட்டன. இப்போதுள்ள அமைப்பின் வலிமையைக் கொண்டு, உலகத்தின் எந்தவொரு பகுதியிலும் அமெரிக்க தாக்குதலை முன்னெடுப்பதற்கு ஒரு மணி நேர அவகாசமே தேவைப்படும்.
ஐ.நாவும், காலனிய நீக்கமும்
இரண்டாம் உலகப் போருக்கு பிறகான ஆண்டுகளில் உலகின் முதன்மையான முரண்பாடாக அமைந்தது வடக்கு – தெற்கு முரண்பாடே. அதாவது காலனி நாடுகளின் மீதான ஆதிக்கத்தை கைவிட மறுத்த ஏகாதிபத்தியத்தின் போர்களே அந்த காலகட்டத்தின் முதன்மையான முரண்பாடாக அமைந்தது என்கிறார் விஜய் பிரசாத்.
1945ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை உருவானது. உலகளாவிய சட்ட வரையறைகளுக்கும், காலனி நாடுகளின் யதார்த்த நிலைமைகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை தீர்ப்பதில் ஐ.நா செய்ய முடிந்தது என்ன?அது மேலை நாடுகள் மேற்கொள்ளும் வரன்முறையற்ற தலையீடுகளை சட்டப்பூர்வமாக்கியது. ஆம். சுதந்திர நாடுகளுக்குள் தலையீடு செய்யும் அதிகாரத்தை பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுப்பினர்களான ஐந்து நாடுகள் மட்டும் பெற்றார்கள்.
இந்த ஏற்பாட்டினை சோவியத் ஒன்றியம் எதிர்த்தது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களை புறக்கணிப்பு செய்தது. இந்த புறக்கணிப்பை பயன்படுத்திக் கொண்டு, வட கொரியாவை நிலைகுலையச் செய்திடும் தலையீடுகளை வேகப்படுத்த முயன்றன ஏகாதிபத்திய நாடுகள். அதன் பின் சோவியத் ஒன்றியம் தனது புறக்கணிப்பு முடிவுகளை மாற்றிக் கொண்டது. ஐ.நா பாதுகாப்புக்குழுவில் பயன்படுத்தப்பட்ட முதல் 56 தடுப்பு அதிகாரங்கள் (வீட்டோ பவர்) சோவியத் ஒன்றியத்தினால், தேச விடுதலை இயக்கங்களை பாதுகாக்கும் நோக்கில் செய்யப்பட்டன.
ஐ.நாவின் செயல்பாடுகள் முதல் பார்வையிலேயே பாரபட்சமாக தோன்றுகின்றன. அதற்கு முன் நிலவிய ஏற்பாடுகளின் தொடர்ச்சியாகவே இதுவும் அமைந்திருப்பதை இந்த புத்தகம் விளக்குகிறது.
சுக்கா மிளகா சுதந்திரம்?
1864 ஆம் ஆண்டில் ‘ஜெனீவா மாநாடு’ நடந்தபோது, காலனி ஆதிக்க போர்களை பற்றி எதுவும் பேசப்படவில்லை. இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் அந்த மண்ணின் பூர்வ குடிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூர வன்முறைகளைப் பற்றி எதுவுமே பேசப்படவில்லை.1943 ஆம் ஆண்டில் ரூஸ்வெல்ட் மிக வெளிப்படையாகவே பேசினார். “காலனி ஆதிக்க அமைப்பு என்பதன் பொருள் போர்” என்ற அவர், “இந்தியா, பர்மா, ஜாவா ஆகிய நாடுகளின் வளங்களைச் சுரண்டி, அந்த நாடுகளின் வளங்களை அங்கிருந்து அகற்ற வேண்டும்” என்பதை தெளிவுபடுத்தினார் அதே சமயத்தில் “கல்வி, தரமான வாழ்நிலை மற்றும் குறைந்தபட்ச உடல்நலம் ஆகிய அடிப்படை தேவைகளை அவர்களுக்கு ஒருபோதும் கொடுத்துவிடக் கூடாது” என்று வெளிப்படையாக முன்வைத்தார்.
ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்ட பின்னரும் இனப்படுகொலைகளுக்கு முடிவு ஏற்படவில்லை. 1952 முதல் 1960 வரை கென்யாவில் இனப்படுகொலைகளை முன்னெடுத்தது இங்கிலாந்து. ‘விடுதலை விருட்சத்திற்கு என் குருதி நீராகப் பாயட்டும்’ என்று முழங்கிவிட்டு மரணித்தார் கென்ய புரட்சியாளர் கிமாதி.
1945ஆம் ஆண்டில் இந்தோ சீனாவின் விடுதலையை ஹோசிமின் அறிவித்த உடனே அப்பகுதியை கைப்பற்ற பிரெஞ்சுப் படைகள் மீண்டும் வந்தன. காலனிய நீக்கத்திற்கான உலக மக்களின் விருப்பங்கள் ஏராளமான உயிர்த் தியாகங்களைக் கொண்டே சாதிக்கப்பட்டன.
காலனி நீக்கம் ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வுப்போக்கு என்பதை அமெரிக்கா புரிந்து கொண்டது.மேற்கு நாடுகளில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பயன் கொடுக்கும் முதலாளித்துவ சமூக அமைப்பினை பாதுகாத்து நீடிக்கச் செய்யும் பணியை அமெரிக்கா முன்னெடுக்கும் என்பதை அவர் பிரகடனம் செய்தார். இதனை அவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடே மேற்கொண்டார்கள்.
“அமெரிக்கா மறைவாக, பின்னணியில் இயங்க வேண்டியது முக்கியம். அதே நேரத்தில் தேவைப்படும் இடங்களில் தளவாடங்களையும், ஆலோசனைகளையும், பயிற்சியையும் வழங்குவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். உள்ளூர் அரசில் தலையிடும் முயற்சிகள் மீது வெறுப்பு வராமல் தலையீடு செய்வதும், காலனி ஆதிக்கம் என்ற புகார்கள் தேவையின்றி எழாமல் பார்த்துக்கொள்வதும் அமெரிக்காவுக்கு முக்கியம்” என்று சி.ஐ.ஏ துணை இயக்குனர் பிஸ்ஸல் எழுதினார். அவர்கள் உருவாக்கிய உத்திகளில் ஒன்றுதான் ‘கலப்பு யுத்தம்’.
கலப்பு யுத்தங்கள்
சீரழிவு வேலைகள், பொருளாதாரத் தடைகள், திரிக்கப்பட்ட உண்மைகளைக் கொண்ட ஊடக பிரச்சாரம், பண்பாட்டுத் தலையீடுகள் ஆகியவை உள்ளடங்கியதே ‘கலப்பு யுத்தம்’ ஆகும். சமூக மற்றும் அரசியல் தளங்களில் செயல்படும் அரசுப் பணியாளர்களையும், அரசு சாரா பணியாளர்களையும் கொண்டு, மரபு வழிமுறைகளிலும், மரபு அல்லாத வழிகளிலும் இந்த போர் முன்னெடுக்கப்படுகிறது. கருத்தியல் மேலாதிக்கம் இந்த போரின் ஒரு பகுதியாக அமைகிறது.
அமெரிக்காவும், சுயநலம் மிக்க அதன் கூட்டாளிகளும் முதலில் ஒரு நாட்டின் மீது பொருளாதார தாக்குதலை முன்னெடுக்கிறார்கள். பிறகு அந்த நாட்டு மக்களிடையே கலகங்கள் தூண்டப்படுகின்றன. ஆட்சி மாற்றங்கள் இவ்வாறு திணிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு நாட்டிலும், பழைய மேட்டுக்குடிகளும், நிலம்படைத்த சுய நலமிகளும் அமெரிக்காவின் ஆரங்களை வலுப்படுத்த விரும்பினார்கள். சோசலிசமும், கம்யூனிசமும் தங்களை ஓரங்கட்டிவிடும் என்று அஞ்சி நடுங்கினார்கள். அவர்களுக்கு சி.ஐ.ஏ உதவி செய்கிறது. ஆலை முதலாளிகளும், மதகுருமார்களும் துணையாக நிற்கிறார்கள்.
இந்த கலப்பு யுத்தத்தில், வங்கிகளின் பங்கு மிக முக்கியமான ஒன்றாகும். ‘தற்காலத்தில்ஆட்சிக் கவிழ்ப்புகள் இராணுவ டாங்கிகளைக் கொண்டு ஏற்படுத்தப்படும் அவசியம் கிடையாது; பல சமயங்களில் அது வங்கிகளின் வழியாகவே நடக்கிறது’ என்று கிரேக்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்து கச்சிதமான எடுத்தாளப்பட்டுள்ளது.
காட் ஒப்பந்தம், உலக வர்த்தக அமைப்பு, சர்வதேச நாணய நிதியம் ஆகிய அமைப்புகளும் இந்த நோக்கத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அவை வெறுமனே வர்த்தக ஏற்பாடுகளாக இல்லை.
சில உதாரணங்களை பார்க்கலாம்!
பெரு என்ற நாட்டில் அலைன் கார்சியா என்ற சோசலிச தலைவர் இருந்தார். அவருக்கு மக்களிடையே செல்வாக்கு இருந்தது. அவர் நிகரகுவா, சோவியத் ஒன்றியம் மற்றும் கியூபாவிற்கு ஆதரவாக பேசிவந்தார். உடனே அந்த நாட்டின் மீது ஐ.எம்.எஃப் நடவடிக்கை ஏவியது. கடன் வாய்ப்புக்கள் அத்தனையும் அடைக்கப்பட்டன. இதனால் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் அந்த நாடு சிக்கியது. கார்சியாவின் அரசியல் செல்வாக்கு சரிந்தது. அவர் பதவியிலிருந்து விலக, ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் அதிகாரத்தை பிடித்தார்கள்.
அப்பர் வோல்ட்டா என்ற நாட்டின் தலைவராக தாமஸ் சங்கரா என்ற இளைஞர் பதவிக்கு வந்தார். தங்கள் நாட்டின் பெயரை ‘நேர்மையான மனிதர்களின் நாடு’ என்று (பர்கினோ பாசோ) மாற்றினார். அப்போது அந்த நாட்டின் மீது ஐ.எம்.எப் கடன் வலை மிக மோசமான நெருக்கடிகளை உருவாக்கியிருந்தது. இந்த கடன்களுக்கு எதிரான ஆப்ரிக்க நாடுகளின் ஒன்றுபட்ட அமைப்பை உருவாக்க முயன்றார். ஏகாதிபத்தியம் அவருக்கு எதிராக குண்டுகளை குறிபார்த்தது. சங்கரா கொல்லப்பட்டார்.
ஏழ்மைப்படுத்தப்பட்ட நாடான குவாதேமாலாவில், ஜனநாயக விருப்பங்களைக் கொண்ட, ஜாக்கப் அர்பென்ஸ் ஆட்சிக்கு வந்தார். அந்த நாட்டின் வளமான நிலங்கள் அமெரிக்காவின் யுனைடெட் ஃபுரூட்ஸ் என்ற நிறுவனத்தின் வசம் இருந்தன. அந்த நிலங்களில் ஒரு பகுதியை எடுத்து, மக்களுக்கு வழங்கும் உறுதியோடு அவர் இருந்தார். நிறுவனத்தின் வசம் இருந்த 2 லட்சம் ஏக்கர் நிலங்களை அவர் கையகப்படுத்தினார். உடனே அர்பென்ஸ் ஆட்சிக்கு எதிராக சி.ஐ.ஏ. களத்தில் குதித்தது.
1990, ஈராக் மீது ஐநா சபை விதித்த தடைகளினால் 5 லட்சத்து 67 ஆயிரம் குழந்தைகள் மரணமடைந்தார்கள். அணுகுண்டு வீச்சால் இறந்த குழந்தைகளை விடவும் அதிகமான எண்ணிக்கை இது. ஆனால் இந்த விலை அவசியமானது என்று அமெரிக்கா தயக்கமின்றி முன்வைத்தது.
உலகமயத்தை ஒழுங்காற்றும் விதிகள் அனைத்தையுமே அமெரிக்கா உருவாக்கியது, அமெரிக்க டாலர் அதன் மைய செலாவணியாக இருந்தது. அமெரிக்க மேலாதிக்கம் கொண்ட ‘சர்வதேச நாணய நிதியம்’ (ஐஎம்எஃப்) மற்றும் அமெரிக்க தரவரிசை முகமைகள் உலக நாடுகளின் பொருளாதார வலிமையை மதிப்பீடு செய்யும் நிறுவனங்களாக ஆகின. நாடுகளுக்கிடையில் பண வர்த்தகத்தை மேற்கொள்ளும் சேவை நிறுவனமான ‘ஸ்விஃப்ட்’ என்ற ஐரோப்பிய நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த அனைத்து ஏற்பாடுகளும், அமெரிக்காவின் விதிகளுக்கு இணங்காத நாடுகளின் மீது தாக்குதல் தொடுப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன.
அரசு சாரா அமைப்புகள்
சர்வதேச நாணய நிதியம் செய்கிற வற்புறுத்தல்களுக்கு கட்டுப்பட்டு பல நாடுகளும் தங்கள் மக்கள் நலத்திட்டங்களை சுருக்கிக் கொள்கிறார்கள். அப்போது உருவாகும் சூழலை பயன்படுத்தி என்.ஜி.ஓ (அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகள் தொடங்குகின்றன. இந்த அமைப்புகளும் ஏகாதிபத்திய திட்டத்தின் ஒரு பகுதியாக அமைகின்றன. அவர்கள் அரசுகளை சாராதவர்கள். ஆனால் தங்களுக்கு நிதி கொடுக்கும் ஏற்பாடுகளைச் சார்ந்தவர்கள். என்.ஜி.ஓ அமைப்புகளுக்கான நிதி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்தே வருகின்றன.
என்.ஜி.ஓ அமைப்புகளின் ஏகாதிபத்திய ஆதரவு செயல்பாடுகளின் உதாரணத்தை உணர்த்த, ஹெய்ட்டி என்ற நாட்டின் 200 ஆண்டுகால வரலாறு இந்த நூலில் சுருக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பொருளாதார தடைகள் ஏற்படுத்தும் கொடூரமான விளைவுகளையும், உயிர் காக்கும் சிகிச்சைகளைக் கூட பெற முடியாத ஆபத்தான நிலைமையையும் புரிந்துகொள்ள ஈரான் பற்றிய விவரிப்புகள் உதவுகின்றன.
பிரேசில் நாட்டில் ‘பசிஅழிப்புத்திட்டம்’ கொண்டுவந்த உலகப் புகழ்பெற்ற தலைவரான லூலாவிற்கு 86% மக்கள் ஆதரவு இருந்தது. ஆனால், அந்த நாட்டிலும் அமெரிக்க வல்லூறு நுழைந்தது. லூலாவிற்கு எதிராகஅந்த நாட்டின் ‘சட்டமே’ ஒரு கருவியாகப் பயன்படுத்தப் பட்டது.
அதே சமயத்தில், இந்தக் கலப்பு யுத்தங்கள் மக்கள் சக்தியினால் முறியடிக்கப்பட்ட உதாரணங்களையும் பார்க்கிறோம். வெனிசுவேலா என்ற நாட்டில் மதுரோவின் அரசுக்கு எதிராக அமெரிக்க ஆதரவுடன் ஒரு முற்றுகை முன்னெடுக்கப்பட்டது. இந்த முற்றுகையை மக்கள் ஆதரவே முறியடித்தது.
பொலீவியா நாட்டில், ஈவோ மொரேல்ஸ் ஆய்மா ஆட்சிக்கு வந்தார். பொலிவிய குடியரசின் வரலாற்றில், உள்ளூர் இனக்குழுவைச் சேர்ந்த முதல் ஆட்சியாளர் ஈவோதான். அவருடைய இயக்கத்தின் பெயர் ‘சோசலிசத்திற்கானஇயக்கம்’. இயற்கை வளங்களை வரன்முறையற்று சுரண்டும் சக்திகளுக்கு எதிராக அவர் உறுதி காட்டினார். அவருடைய முன்னெடுப்புகள் மக்களிடையே ஆதரவினை விரிவாக்கின. அவருக்கு எதிரான சதிகள் மக்கள் சக்தியின் மூலம் முறியடிக்கப்பட்டன.
ஆதிக்கத்தின் செயல் திட்டம்
‘கிரெனெடா’ ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நாடு.அந்த நாட்டின் மக்கள் ‘புதியஅணிகலன்இயக்கத்தின்’ மூலமாக, தங்கள் நாட்டுக்கு ஏற்ற சோசலிச அமைப்பை உருவாக்க முயன்றது. 1983ஆம் ஆண்டில் அமெரிக்க படையெடுப்பினால் நசுக்கப்பட்டது.
இப்படி எந்தவொரு நாட்டிலும், உழைப்பாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் அதிகாரம் கிடைக்கும் சூழல் ஏற்படுமானால் ஏகாதிபத்தியம் அதற்கு எதிராக களத்தில் இறங்குகிறது. ஏகாதிபத்தியத்தின் ஆணைகளை மறுப்பதற்கு ஏதாவதொரு நாடு முயற்சி செய்யும் என்றால், அங்கே தலையீடுகள் செய்யப்படுகின்றன. தேர்தல்களில் தலையீடு அல்லது ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்படுகிறது.
அந்த நடைமுறைகளை விஜய் பிரசாத் விரிவாக விளக்கியுள்ளார். செயல் திட்டம் இதுதான்.
பொதுக் கருத்தை உருவாக்குதல் – உண்மைக்கு மாறான, அச்சமூட்டும் கதைகளை செய்திகளாக திரித்து பரப்புதல்.
ஆட்சிக் கவிழ்ப்பின் திறமை வாய்ந்த உளவாளியை களத்தில் இறக்குதல்.
கூலிப்படை, ராணுவத்தை தயார் செய்தல்
பொருளாதார வாய்ப்புகளை முடக்கி முற்றுகையிடுவது
பிற நாடுகளிடம் இருந்து துண்டித்தல்
பெருந்திரள் போராட்டங்களை ‘உருவாக்குதல்’
அமெரிக்காவின் பங்கை மறுத்தல் (அச்சத்தை பரவவிடல்)
மறக்கச் செய்தல்
முற்போக்கான குருமார்களை கொலை செய்தல்
பல நாடுகளிலும் பரிசோதிக்கப்பட்ட மேலே குறிப்பிட்ட வழிமுறைகளை படிக்கும்போது, இந்தியாவில் நடக்கும் பல்வேறு மாற்றங்களையும் கூட நம்மால் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. உண்மையில், பாசிச – நாஜி சக்திகளோடு கைகோர்ப்பதில் அமெரிக்காவிற்கு எந்த வெட்கமும் இருக்கவில்லை என்பதை இந்த புத்தகம் ஆதாரத்துடன் விளக்குகிறது.
மேலும், இஸ்லாமை மையப்படுத்தி, கம்யூனிச வெறுப்பினை கட்டமைப்பதற்காக ‘ஹாஜி யூசுப் சங்’முன்வைத்த திட்டம் இந்த நூலில் உள்ளது.
இஸ்லாமிய பண்பாட்டு சங்கம் ஒன்றை தொடங்கி, சீனா மற்றும் மத்திய கிழக்கு இஸ்லாமியத்தோடும், உலகம் முழுவதும் தொடர்புகளை அதிகமாக்க வேண்டும்.
அமெரிக்கர்களையும், இஸ்லாமியர்களையும் கம்யூனிசத்திற்கு எதிராக திரட்டும் விதமான பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும்.
அந்த அமைப்புகளுக்கு சீனா அல்லது பிற இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களே தலைவர்களாக இருக்க வேண்டும். அமெரிக்காவின் பின்புலம் மறைவாகவே இருக்க வேண்டும்.
இதுதான் அவர் அனுப்பிய ஆவணத்தின் சாரமாக அமைந்த கருத்துக்கள்.
இந்த திட்டம் அரேபிய மன்னர்களாலும், சி.ஐ.ஏ.வினாலும் 1951ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முன்னெடுக்கப்பட்டதை புத்தகத்தின் மூலம் விரிவாக அறிந்துகொள்கிறோம்.
கியூபாவில் எழுந்த நம்பிக்கை
எத்தனை அதிகாரம் மிக்கதாக இருந்தாலும், மக்கள் சக்தியின் துணையைக் கொண்டு ஏகாதிபத்தியத்தை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கையை வழங்கும் ஊற்றாக இருப்பது கியூபாவே ஆகும். கியூப நாடு தனது நாட்டு மக்களின் விடுதலையை சாதித்ததுடன் போராட்டத்தை முடித்துக்கொள்ளவில்லை. எப்போதும் அது உலக மக்களுடன் தனது பிணைப்பை வலுப்படுத்திக் கொண்டுள்ளது.
1966 ஆம் ஆண்டில், தேச விடுதலை இயக்கங்களை, ஃபிடல் காஸ்ட்ரோ ஹவானாவிற்கு அழைத்தார். முக்கண்ட மாநாட்டில், “காலனி உலகெங்கிலும் புரட்சிகர விடுதலைப் போர்களுக்கான ஆதரவையும் ஒத்துழைப்பையும் இந்த அமைப்பு வழங்கிடும். விடுதலை இயக்கங்கள் எங்கே நடைபெற்றாலும் அவை அனைத்திற்கும் கியூப அரசும், மக்களும் தங்கள் சக்திக்கு உட்பட்டு பொருள் உதவியையும், அனைத்து உதவிகளையும் வழங்கிடும்’ என காஸ்ட்ரோ அறிவித்தார்.
இந்த மாநாட்டுக்கான அவசியம், அதற்கு முந்தைய ஆண்டுகளில் தொடங்கிய வன்முறை தாக்குதல்களில் இருந்து எழுந்தது.
1960 களிலும், 1970 களிலும் நடந்த விடுதலை போராட்டங்களுக்கு எதிராக கொடூர வன்முறையை ஏகாதிபத்தியம் முன்னெடுத்தது. மலாய அவசர நிலை (1948-1960), கென்ய அவசர நிலை (1952), அல்ஜீரியா மீது ஃபிரெஞ்சு போர் (1954-1962), வியட்நாம் மீதான ஃபிரெஞ்சு போர் (1946-1954), அமெரிக்கா – வியட்நாம் போர் (1954-1975), கியூபா மீதான அமெரிக்க படையெடுப்பு (1961), காங்கோவில் பேட்ரிஸ் லுமூம்பாவின் படுகொலை (1961), குவட்டமாலா மீது படையெடுப்பு (1954), டொமினியன் குடியரசு மீது அமெரிக்க படையெடுப்பு (1965), இந்தோனேசியாவில் கம்யூனிஸ்டுகள் மீதான இனப்படுகொலை (1965) என அடுத்தடுத்து முன்னெடுக்கப்பட்ட ஆதிக்க வன்முறைகளும், கொத்துக்கொத்தான மரணங்களுமே திரிகண்ட மாநாட்டில் கூடிய விடுதலைப் படைகளின் உத்திகளை வடிவமைத்தன. வன்முறை அவர்கள் மீது திணிக்கப்பட்டது.
1979 டிசம்பர் 31 ஆம் தேதி என்ற மலைமுகட்டின் மேல் நின்று அதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் உலகில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களை நமக்கு எடுத்துக் காட்டுகிறார் விஜய் பிரசாத். காலனி ஆதிக்கங்களில் இருந்து அங்கோபா, கேபோ வெர்டே, கினியா பிசாவ் மற்றும் மொசாம்பி ஆகிய நாடுகள் போர்த்துகீசியர்களுக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றன. ரொடீசியாவில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்தன. 1980ஆம் ஆண்டில் ஜிம்பாவே விடுதலை பெற்றது. வியட்நாம் போர் 1975ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. ஆனால் அந்த நாட்டின் நிலம் வேதியல் குண்டு வீச்சுகளினால் நச்சுத் தன்மை அடைந்திருந்தது. ஆப்கானிஸ்தான், நிகரகுவா மற்றும் கிரனடா ஆகிய மூன்று ஏழை நாடுகளில் புரட்சிகள் நடந்தன. ஆனால் அவை நிலைப்பெற்றிடும் முன்பாக முறியடிக்கப்பட்டன. வங்க தேசத்திலும், சாட், பாகிஸ்தான், ஈராக், தென் கொரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் ஆட்சிகள் கவிழ்க்கப்பட்டன. இந்த எல்லா இடங்களிலும் அமெரிக்காவின் கொடும் கரங்கள் இருந்தன.
1946 – 1949 ஆண்டுகளில் கிரேக்க நாட்டில் பாசிஸ்டுகள் இடதுசாரிகளை ஒடுக்கினார்கள். இந்த அழித்தொழிப்பினை அமெரிக்கா தனது ஊடகங்களின் பலத்தைக் கொண்டு மறைத்தது. இந்தோனேசியாவில் இடதுசாரிகளும், இடதுசாரி ஆதரவாளர்களும் 1965 ஆம் ஆண்டில் தொடங்கி பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டார்கள். ஆம். இந்த இன அழிப்பில் 10 லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள். இந்த காலகட்டம் தொடர்பான ஆவணங்களை முழுமையாக வெளியிட அமெரிக்கா மறுப்பு தெரிவிக்கிறது. இருப்பினும், ஜகார்த்தாவில் இருந்த அமெரிக்க தூதரகத்திற்கு நடப்பவை தெரிந்தே இருந்தன என்பதை இந்த நூல் எடுத்துக்காட்டுகிறது.
குவாடேமலாவிலோ அல்லது இந்தோனேசியாவிலோ அல்லது தெற்கு வியட்நாமில் செயல்படுத்தப்பட்ட ஃபீனிக்ஸ் முன்னெடுப்புகளோ, இடதுசாரிகளை அழித்தொழிப்பதற்கு உள்ளூர் சுயநல சக்திகளையும், ராணுவ கூட்டாளிகளையும் அமெரிக்காவே தூண்டியது.
உலகம் தழுவிய வர்க்கப்போர்
ஆம்!. நடந்துகொண்டிருப்பது தெள்ளத் தெளிவாகவே ஒரு வர்க்கப் போர் தான். உலகம் முழுவதுமே அது உழைக்கும் மக்களுக்கு எதிராக தனது துப்பாக்கியை நீட்டிக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் நடக்கும் கனிம வளச் சுரண்டல்களை எதிர்த்து போரிடும் மக்களை போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய பெயர்களில் முத்திரையிடுவதன் மூலம் தங்கள் சுரண்டலுக்கு எவ்வித ஆபத்தும் இல்லாமல் தடுத்துக் கொள்கிறார்கள்.
மன்னர்கள், தங்கள் விருப்பப்படி எதையும் செய்துகொள்வதற்கான ‘புனித உரிமையை’ கடவுள் வழங்கியிருப்பதாக பழங்கால கோட்பாடு ஒன்று உண்டு. அப்படிப்பட்ட ‘புனித உரிமை’ கொண்டிருப்பவர்களாகவே ஏகாதிபத்தியம் தன்னை கருதிக் கொண்டு இயங்குகிறது என்பதை ‘வாசிங்டன் தோட்டாக்கள்’ விளக்குகிறது.அவர்களுடைய தாரக மந்திரம் இதுதான்,‘கம்யூனிசத்தைக் காட்டிலும் பிற்போக்குத்தனம் சிறந்தது.’
சில விமர்சனங்கள்
கடும் உழைப்பின் பலனாக வெளிவந்திருக்கும் இந்த நூல் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் அவசியத்தை விளக்குகிறது. அதே சமயத்தில், வீழ்த்தப்பட்ட புரட்சிகளின் கதையையே மையப்படுத்தி இருப்பது ஒரு குறையாகும். இந்தியா போன்ற நாடுகளிலும் ஏகாதிபத்திய திட்டங்கள் செயல்படுவதை இந்த நூலின் ஒரு பகுதியாக கொண்டுவந்திருக்க வேண்டும். அது இந்திய வாசகர்களுக்கு நூலை கூடுதலாக நெருக்கமாக்கியிருக்கும். சோசலிச சக்திகளின் தவிர்க்க முடியாத பாத்திரத்தை விளக்கும் இந்த நூலில் அதற்கென தனியாக ஒரு பகுதி இல்லாததும், கட்டுரையாளரின் பார்வையில் குறைகளாக படுகின்றன. இவ்வளவு சிறப்பான நூலை நமக்கு கொடுத்திருக்கும் விஜய் பிரசாத் பாராட்டுக்குரியவர். தமிழில் அதன் பொருள் குன்றாமல் நமக்கு அளித்துள்ள மொழிபெயர்ப்பாளர் பணியும், பாரதி புத்தகாலயத்தின் பணியும் பாராட்டுக்குரியது.
இரா. சிந்தன்