Eppothum Ezhuthuven Translated Poem By Era. Ramanan எப்போதும் எழுவேன் மொழிபெயர்ப்பு கவிதை - இரா. இரமணன்

எப்போதும் எழுவேன் மொழிபெயர்ப்பு கவிதை – இரா. இரமணன்

உங்களின்
கசப்பு நிறை திருகல் பொய்களால்
சரித்திரத்தின் பக்கங்களில்
என்னை
அழுத்தி வைத்திருக்கலாம்.
குப்பை கூளங்களுக்குள் பரப்பி வைக்கலாம்.
ஆனால் அப்போதும்
அந்த தூசுபோல் நான் மேலெழுவேன்.

என் துணிச்சல்
உங்களை
நிலைகுலைய வைக்கிறதா?
உங்கள் முகத்தில்
சோகம் ஏன் அப்புகிறது?
என்னுடைய வீட்டில்
எண்ணெய் கிணறுகள்
பீச்சி அடிப்பது போல்
நான் நடப்பதாலா?

சூரியனிலும் சந்திரனிலும்
ஏற்றங்கள் நிச்சயமாக நடப்பது போல
நம்பிக்கை உயர உயரமாய்
துள்ளி எழுவது போல
இனியும் நான் எழுவேன்.

ஆத்மாவின் அழுகுரலால்
பலவீனப்பட்டு
கண்ணீர் துளிகள் வீழ்வது போல்
என் தோள்கள் துவள்வதையும்
குனிந்த தலை கவிழ்ந்த கண்களுடன்
நான் உடைந்து போய் நிற்பதையும்
காண விரும்பினீர்களா ?
என் ஆணவம்
உங்களைக் காயப்படுத்துகிறதா?
என் புழக்கடையில்
தங்கச் சுரங்கம் இருப்பது போல்
நான் சிரிப்பது
உங்களுக்கு
அவ்வளவு சங்கடமாக
இருக்கிறதல்லவா?
வார்த்தைகளால் நீங்கள்
என்னை துளைக்கலாம்.
பார்வையால் துண்டாக்கலாம்.
நிரம்பி வழியும் வெறுப்பினால்
நீங்கள் என்னைக் கொல்லலாம்.
ஆனால் அப்போதும்
காற்றைப் போல
நான் எழுவேன்.
என் கவர்ச்சி
உங்களை வருத்துகிறதா?
என் தொடைகளில்
ரத்தினங்கள் இருப்பதுபோல்
நான் நடனமாடுவது
உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா?

சரித்திரத்தின் அவமானக் குச்சுகளிலிருந்து
நான் எழுகிறேன்.
வேரோடிப்போன வேதனையின்
கடந்த காலத்திலிருந்து
நான் எழுகிறேன்.
நான் ஒரு கருப்பு சமுத்திரம்.
துள்ளிக் குதிக்கிறேன்.
பரந்து கிடக்கிறேன்.
விம்மியும் பொங்கியும்
ஏற்றங்களில் மிதக்கிறேன்.

பயங்கரமும் பயமும் விரவிய
இரவுகளை உதறி
மேலெழுகிறேன்.
அற்புதமாய் ஒளி வீசும்
விடியற்காலையில் எழுகிறேன்.
என் மூதாதையரின் புதையல்கள் கொண்டு வரும்
நான்
அடிமைகளின் கனவாகவும் நம்பிக்கையாகவும்
விளங்குகிறேன்.
நான் எழுகிறேன்.
நான் எழுகிறேன்.
நான் எழுகிறேன்.

மாயா ஏஞ்செலோ அமெரிக்கக் கவிஞர். (1928-2014). சரிதையாளர்;குடியுரிமை செயற்பாட்டாளர். ஏழு சுய சரிதைகள்,மூன்று கட்டுரைத் தொகுதிகள், பல கவிதை நூல்கள், நாடகம், திரைப்படம்,தொலைக்காட்சி படைப்பாளர். பல விருதுகளும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கவுர முனைவர் பட்டங்களும் பெற்றவர்.