அமீபாவின் கவிதைகள்
போலச் செய்யாமை
****************************
எனது புத்தக அலமாரியில்
ஆய்வு நூலுக்கு அடியிலிருந்து
எட்டிப் பார்த்ததொரு கரப்பான் பூச்சி.
கரப்பான்
காகிதத்தை கடிக்குமாவென கண நேரம் யோசித்து
பின் பார்த்தபோது
அங்கே அது இல்லை.
எழுந்து போய்த்
தட்டிப் பார்த்திருக்கலாம்
புத்தகங்களைத் தூக்கி பார்த்திருக்கலாம்.
ஏதும் செய்யாமல்
எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன் ஒரு வேளை பிரமையாக இருக்கலாம்.
சாயலென்பது..
*******************
பருவ காலத்தில்
பார்க்கும் பட போஸ்டரில்
இருந்த நடிகைகள் எல்லாம்
நெருங்கிய தோழிகளின்
சாயலில் இருந்தனர்.
இப்பொழுது
கண்ணில் காணப்படும்
கண்ணீர் அஞ்சலி போஸ்டரில்
தெரியும் முகங்களில் எல்லாம்
நெருங்கிய நண்பர்களின் சாயல்.
அவரவர் பார்வை.
*********************
பிறக்கும்போதே எவரும்
இப்படி இருப்பதில்லை
பெயர் எடுப்பதெல்லாம்
பிறகுதான்
பெரிய படிப்பாளி என்றோ..
பின்மண்டை
சொட்டைத் தலையன் என்றோ..
– அமீபா