தொடர் 3: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
தும்பைச் செடிகளில் அமரும் வண்ணத்துப்பூச்சி எனும் பாப்பாத்தியை சட்டையைக் கழட்டி அமுக்கிப் பிடித்த அனுபவம் கடக்காத கிராமத்தார்கள் இருக்க முடியாது. ஒன்று இரண்டெல்லாம் கிடையாது இருபது முப்பது பாப்பாத்திகளைப் பிடித்து விளையாடுவது என் வழக்கமாக இருந்திருக்கிறது. கை இரண்டும் வண்ணங்களால் மினுங்கும். அப்போதெல்லாம் திரும்பும் திசையெல்லாம் தும்பைச் செடிகள். தும்பைச் செடிகள் நிறைய பாப்பாத்திகள். இப்போது எங்கள் வீட்டின் எதிரே உள்ள காக்காயன் சுந்தன் சியா காட்டுக்குள் தும்பையும் இல்லை பாப்பாத்தியும் இல்லை.
பொன் வண்டுகள் பிடித்து காலி தீப்பெட்டிகளிலும் சிகரெட் பெட்டிகளிலும் அடைத்து வைத்திருந்த காலம் மட்டும் தான் என் பொற்காலம். பொன்வண்டுக்கு இரை போட்டதையெல்லாம் நினைத்தால் நெஞ்சம் விம்புகிறது காரணம் இன்று நான் திங்கும் இரையைக் கூட எவனோ தீர்மானிக்கிறான். இவை மட்டுமா, ஐந்து பைசா பத்துப் பைசாவிற்கு கடைகளில் வாங்கியும் குண்டு விளையாட்டில் ஜெயித்துமாக நான் சேர்த்த பிலிம் துண்டுகளை நாழியில் போட்டு வைத்திருப்பேன். பள்ளிக்குச் செல்லும் முதலும் சென்று வந்த பிறகும் அதை கீழே கொட்டுவதும் எண்ணுவதுமே என் தலையாய கடமையாகச் செய்திருக்கிறேன். சும்மா எண்ணினால் கூட அந்த வேலை சுமூகமாக முடிந்துவிடும்.
என் காதல் எண்ணுவதில் மட்டுமா, அந்த பிலிம்களில் பார்த்த கமல் ரஜினி ஸ்ரீ தேவி அம்பிகா போன்ற நடிகர்களை பிற்காலத்தில் நான் நேரில் சந்தித்தபோதுகூட அப்படி ரசித்ததில்லை., அப்படி வெறி பிடித்த வேங்கையாய் ரசித்துக் கிடந்திருக்கிறேன். மலையேறி விளையாடுகையில் உள்ளங்காலில் உட முள் குத்தி பெயர் தெரிந்த கடவுளையெல்லாம் காப்பாற்ற அழைத்த காலம் என் வசந்த காலம்.
“அவள் பெயர் தமிழரசி” படத்தில் அப்படி ஒரு பாடல். திருநெல்வேலி மாவட்ட கிராமம் ஒன்றில் சிறுவர்களின் சிறகடிப்பு. இயக்குநர் சூழலைச் சொல்ல சொல்ல என் சின்னவயது ஏகாதசி தன் தோஸ்த்துகளோடு காட்டிற்குள் ஓட ஆரம்பித்தான்.
“குஜு குஜு குஜு குஜு கூட்ஸ் வண்டி
கழுகுமல வழியா…
குழு: கோயில்பட்டி வண்டி
குஜு குஜு குஜு குஜு ரயில்கார அண்ண
சீட்டுவெல என்ன…
குழு: என்ன
எந்த ஊரு போது
நானும் கொஞ்சம் வாரேன்
வண்டியக் கொஞ்சம் நிறுத்து
நிறுத்து”
இப்படித் தொடங்கும் பல்லவியைக் கண்டறிய நான் பட்டபாடு இருக்கே, ஒரு ஒட குத்திப் பிடுங்க வேண்டியதாயிற்று. இங்கே என்னைக் காப்பாற்ற நான் கடவுளை அழைக்கவில்லை மீண்டும் ஒரு மாமாவைத்தான் அழைத்தேன். அவர் பெயர் சிவமணி. க.பாறைப்பட்டிக்காரர். எல்லா நல்ல குணங்களும் ஒருசேர படைக்கப்பட்ட அதிசய மனிதர். அன்பர். டெப்டி பிடிஒவாக அரசுப் பணியில் இருக்கிறார். அவரது மனைவியாகிய என் தங்கை இளவரசியும் அவரது புதல்விகளான தூரிகா, கர்னிகா செல்லங்களும் என் பாடல்களுக்கு ரசிகர்கள். அவர் பாடிக்காட்டிய நாட்டுப்புற சிறுவர் பாடல்களில் ஒன்றைச் சுட்டுத்தான் இந்த பாடலின் மேலே சொல்லப்பட்ட பல்லவியை உருவாக்கினேன்.
முதல் சரணம்:
பொட்டக்காட்டு மண்ணுல
கிட்டிப் புல்லு அடிப்போம்
சட்டத்துணி நனைச்சு
குட்டத் தண்ணி குடிப்போம்
சொரக்கட்ட ஊதிக்கிட்டு
பூமியத்தான் சுத்தினோம்
ஓடைக்குள்ள நடந்தத
ஊருக்குள்ள கூவினோம்
இண்டமுள்ளுக் காடுகதான்
எங்களோட ஊரு
இச்சிமரப் பழந்தான்
திங்கச் சோறு
பெயிலாக்கும் வாத்தியாரு
வில்லன் நம்பியாரு
பெல்லடிக்கும் வாட்ச்சிமேனு
எம். ஜி. யாரு”
இரண்டாவது சரணம்:
சோளத் தட்ட மைக்கில
சிட்டுக்குருவி பாடுது
ஊமத்தம் பூவக் கட்டிக்கிட்டு
ரேடியாதான் போடுது
விளையாடத் தான் ஆளில்லாம
தொங்குதுபாரு விழுது
வாத்தியாரின் சொட்டையில
வீட்டுப்பாடம் எழுது
வெயில் எங்க முதுகுல
எப்போதுமே நடக்கும்
மூத்திரத்தப் பேஞ்சபடி
பாயில் படுப்போம்
மத்தியானம் முழிப்போம்
மழபேஞ்சா குழிப்போம்
சத்துணவு முட்டைக்காக
ஸ்கூலுக்குப் போவோம்
இப்பாடலைப் பாட நான்சி சில்வியா எனும் சிறுமியை கிராமத்திலிருந்து இயக்குநர் அழைத்து வந்ததாக இருக்கட்டும் சிறுவர்களின் மன பரபரப்பில் நின்று மெட்டமைத்த இசையமைப்பாளராக இருக்கட்டும் மற்றும் இப்பாடலை படமாக்கியவிதமாக இருக்கட்டும் அத்தனை பேரின் உழைப்பும் அத்தனை அழகு. அத்தனையும் உன்னதம்.
இதே படத்திற்கு ஒரு தாலாட்டு பாடல் ஒன்று எழுதினேன். பெண் பிள்ளையின் தீராத சோகத்தை ஒரு பெரியவர் நடுக்காட்டுப் பரணில் நின்று பாடி இரவை உடைக்கிறார். அதற்கு மண் சுமந்து வந்த தஞ்சை வீரசங்கரின் குரல் உயிர் கொடுத்தது.
ஆராரோ.. ஆரிரரோ – எங்கண்ணே
ஆராரோ… ஆரகரரோ
நீ மல்லாந்து தூங்குமழக – கண்ணே
மரக்கா போட்டு அளக்கணுமே
குப்பறக்க தூங்குமழக – எங்கண்ணே
கூட போட்டு அளக்கணுமே
வெயிலடையும் பனங்காடு – கண்ணே
மழையடையும் குத்தாலம்
நாமடையும் கூட்டுக்குத்தான் – ஏங்கண்ணே
நல்லசேதி எக்காலம்…
இப்படியாக நீளும் அந்தப் பாடல் இன்றைக்கும் என்னைத் தாலாட்டுகிறது.
மழை நீர் ஒழுகுவதற்காகவே கட்டியது போலத்தான் இருக்கும் எங்கள் வீடு. நிலவொளி பாய்கிற வீட்டிற்குள் மழையை மட்டும் வரவேண்டாமென்றா சொல்ல முடியும். ஈசனையும் அழைத்து ஈர விறகை எரியவைத்திருப்பாள் அம்மா ஆனால் அடுப்புக்கு நேராக ஒழுகி அணைக்கும் போது எங்கள் வயிறு எரியாமல் என்ன செய்யும். வீட்டில் இருந்த அத்தனை பாத்திரங்களும் மழை ஒழுகிற இடங்கள் பார்த்து வைக்கப்பட்டிருக்கும். மழை விட்டவுடன் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நானும் என் அம்மாவும் தட்டிற்காக காத்திருந்திருக்கிறோம் பல மழை நாட்கள்.
என் அம்மாவின் முகத்தில் நூறு முத்தம் கொடுப்பேன். எண்ணிக்கை தவறிவிட்டால் நடிகர் சூரியின் பரோட்டா காமெடியில் போல் மீண்டும் ஒன்றிலிருந்து கொடுக்க ஆரம்பிப்பேன். என் அம்மாவின் முகம் கண்ணீர் மணத்துக் கிடக்கும். என் அம்மா சோற்றில் போட்ட உப்பு என் உடலின் உள்ளே ஓடுகிறது. அவர் கண்ணீரிலும் நான் நனைந்தால் உடலின் மேலேயும் படிந்திருக்கிறது உப்பு. ஒரு நாளும் அவர் அவருக்காக வாழ்ந்ததில்லை. வாழ்வின் எல்லா நாட்களையும் எனக்கே சமர்ப்பித்துக் கொண்டிருப்பவர்.
ஒளி ஓவியர் இயக்குநர் தங்கர்பச்சான் அவர்கள் “அம்மாவின் கைப்பேசி” படத்திற்காக அண்ணன் அறிவுமதி அவர்களிடம், “ஒரு அம்மா பாடல் வேண்டும் எழுதிக் கொடுங்கள்” என்று கேட்க, “அம்மா பாடலை எழுதும் வாய்ப்பை என் தம்பி ஏகாதசியிடம் கொடுங்கள் அவன் என்னை விட சிறப்பாக எழுதுவான்” என்று சொல்லிவிட, “இவரே சிபாரிசு பண்ற அளவுக்கு அவ்வளவு பெரிய அப்பா டக்கர் யார்றா” என்று நினைத்துக் கொண்டு இயக்குநர் என்னை அழைத்து மெட்டைக் கொடுத்தார். எழுதிக் கொண்டு மறுநாள் அவரை வீட்டில் சந்தித்தேன். வராண்டாவில் பத்திரக்கோட்டையில் காய்த்த மாங்காய்கள் உருண்டு கிடந்தன. பாடலை சில நிமிடங்களில் வாசித்துவிட்டு என்னைக் கட்டிப்பிடித்துப் பாராட்டினார். தாயன்பை அள்ளித் தரும் அண்ணன் அறிவுமதியின் நம்பிக்கையைக் காப்பாற்றிவிட்டதில் எனக்கு பெருமகிழ்ச்சி. இந்தப் பாடலுக்குப் பெற்ற சம்பளத்தில் தான் என் அம்மாவிற்கு ஒரு கைப்பேசி வாங்கித் தந்தேன். இந்த செய்தியை அன்றைக்கு சில இதழ்கள் கூட எழுதியிருந்தன.
அம்மா தானே நமக்கு அன்பு மழை – அவளை
ஆண்டவன் என்றால் என்ன பிழை
சிறு நாழிகை தூங்கவில்லை
உனைப் பார்க்கத்தானடா
பெருமூச்சிலே சோறாக்கினாள்
உனக்காகத்தானடா
கடல் வாங்கி அழுதாள் இவள்தான்…
சிறு குருவிக்கும் தாய் இன்றி கூடா
ஒரு தாய் இன்றி வாழ்வேது போடா
அட இவள் சோற்றிலே நீ பசியாறினாய்
இவள் தூக்கத்தை நீ தூங்கினாய்
பந்த பாசங்கள் எல்லாமே சும்மா
அட திண்ணைக்கு போனாளே அம்மா
இந்த தண்ணீரையும் பெற்ற தாயன்பையும்
நீ அறுத்திட்டு எங்கே செல்வாய்
கிளை ஊர் தாண்டட்டும் லட்சம் பூ பூக்கட்டும்
உன் வேர் இந்த தாயல்லவா
கடல் வாங்கி அழுதாள் இவள்தான்.
முந்தைய தொடர்களை வாசிக்க:
தொடர் 1: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி