வீடுபேறு – கவிதை
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – நெருங்கி வரும் இடியோசை – அமீபா
அமீபாவின் கவிதைகள்
1
செய்த தவறுகளைக் கூட
நியாயமாக்க முடிகிறது
என்னால்
எனது நியாயங்களை எல்லாம்
தவறுகள் என தூக்கிப் போட முடிகிறது உங்களால்
கைவிடப்பட்ட மனநோயாளி போல நினைவெங்கும்
அலைந்து கொண்டிருக்கிறது
அச் செயல்கள்.
2
அந்தப் பூவை
அப்படியே வரைந்து விடுவது தான்
என் திட்டம்
அதே அழகாய்
அதே வடிவத்தில்
அதே நுட்பத்துடன்
அழித்து அழித்து
வரைந்து கொண்டு இருந்தேன்
திருப்தியடையாமல்
வாடத் துவங்கி இருந்தது
அந்தப் பூ.
3
எத்தனையோ முறை
எதிர்கொண்டு விட்டேன்
இக்கேள்வியை
“இப்போது என்ன செய்கிறீர்கள்.”
நான் செய்யும் செயல்களில்
சிலது
அவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது சிலது
அவர்களுக்குத் தேவையே இல்லாதது
சிலது
நான் சொல்ல விரும்பாதது
அவர்கள் விரும்பியதை
சொல்லி இளிக்க
நான் அவர்களின் அடிமை இல்லை
அவர்கள் வெறுப்பதை
சொல்லி எரிச்சலூட்ட
நான் அவர்களின் எதிரி இல்லை
செய்வதைச் சொன்னால்
என்ன செய்யப் போகிறார்கள்
செய்வதைச் சொல்வதால்
வேறென்ன செய்து விடப் போகிறேன்
இந்த மௌனத்தில்
இடம்பெயர்வார்கள்
“ஏதேனும் செய்யுங்கள்” எனச் சொல்லி.
– அமீபா.