ஆண் தாய் கவிதை – சரவிபி ரோசிசந்திரா

ஆண் தாய் கவிதை – சரவிபி ரோசிசந்திரா




ஆத்மார்த்த அன்புதனில்
உறவுக்கு உணர்வளித்தாய்
புதிய பார்வைதனில்
புதுவாழ்வு எனக்களித்தாய்

முகம் வாடிப்போனால்
உன் மூச்சுக்காற்று
கேள்விக் கேட்கும்
குரல் மாறிப்போனால்
நின்தீந்தமிழ்
மகிழ வைக்கும்

உடல் சோர்ந்து நடை தளர்ந்தால்
கைவிரலைப் பற்றிடுவாய்
மனம் மகிழ்ந்து உடை சிரித்தால்
உச்சிமுகந்து அணைத்திடுவாய்

சித்தம் தந்த பூவிதழோ!
மௌனித்தால் சிவக்கும்
முத்தம் கொடுத்தச் செவ்விதழோ
மௌனத்தால் இனிக்கும்.

தாமதமாய்ப் பதில் வந்தால்
உள்ளுணர்வோடு பேசிடுவாய்
தயங்கி நான் நின்றால்
தன்னம்பிக்கை தந்திடுவாய்
தொலைதூர பயணத்தில்
நிழலாய்த் துணை வருவாய்
அன்பான பிடிவாதத்தில்
முகிழ்நகை அள்ளித் தருவாய்

நீயின்றி நானில்லையென
சொல்லாமல் உணரவைத்தாய்
நானே! நீயென்று
எனக்குள் பேசவைத்தாய்

யாரென்று அறியாமல்
உளமாற உன்னைத்தந்தாய்
இன்னொரு தாயாய்
இதயத்தில் குடிப்புகுந்தாய்

தூயவனே! உன் நினைவின்றி
தூங்காது நெஞ்சம்
என் இதயம் என்றென்றும்
உன்னுள் தஞ்சம்…

– சரவிபி ரோசிசந்திரா