அனல் தழுவிய காலம் கவிதை – சந்துரு.ஆர். சி
எங்கள் சிறகுகளின் மேல் வலுவேற்றுவதாய்ச் சொல்லி
நுகர்ந்தறியா
சில திரவியங்களை
வலிந்து பூசினார்கள்.
சந்தேகத்தின் கண்கொண்டு
நாங்களதை மறுதலித்தபோது
பசித்திருந்த எங்களின்
இரைப்பைகள்
அறுசுவை கனவுகளால் பூட்டபட்டன.
சொப்பனங்கள் மெல்ல இளைத்து
நாங்கள்
அலைகழிக்கப்பட்டபோது
வேர்கள் அழுகிய புற்களின் வனாந்திரத்தில்
எங்கள் நம்பிக்கைகள்
குடியேற்றப்பட்டன.
இருண்ட Cகளில்
கார்மேகச் சித்திரங்களை
எழுதி தினமும் ரசிக்கச்சொல்கிறார்கள்.
ஏமாற்றங்களால்
எங்கள் கனவின் நிறங்கள்
ஒவ்வொன்றாய் உதிர்வதை தினமும் காண்கிறோம்.
முந்தைய நாட்களில் நறுமணங்களுடன்
கை வீசிச்சென்ற இவ்வழியில்
தீய்ந்த வாசமொன்று
எங்களை விடாமல்
துரத்திக்கொண்டே வருகிறது.
திணறடிக்கும் அவ்வாடை
வருகின்ற திசையை
கண்ணுக்கெட்டியவரை
பார்வைகளால் அகழ்ந்து
யூகிக்க முடியாமல் திகைக்கிறோம்.
தீய்ந்த வாடை மேலும் எங்களை சமீபிக்கிறது.
அனல் காற்றின் பெருஞ்சூடு
அடி வயிற்றில்
சுள்ளென உரைக்கும் போதுதான்
அறிந்துகொண்டோம்
திரவியம் பூசப்பட்ட
எங்கள் சிறகுகள்
பொசுங்கும் வாடையை…