Vasanthadheepan's poems வசந்ததீபன் கவிதைகள்

வசந்ததீபனின் கவிதைகள்



(1) அனல் சங்கீதம்
காம சாத்தானே ஓடி விடு
நாடி நரம்புகளில் உனது எக்காளம்
புண்ணிய தீர்த்தங்கள் நீராடினாலும்
திரேகத்துள் உனது ஆரவாரக் கூச்சல்
அடங்காத பெரு வெள்ளமாய்
நுரை கக்கி உயிரை வதைக்கிறாய்
நுண்ணிய நோயே
கண்ணிகளை விரிக்காதே
குதிரையின் வலுவாய்ப் பெருக்கெடுக்கிறாய்
பற்றி எரியும் கனவுகளில்
சாம்பலாய் உருகுகிறேன்
இதயச் சாளரங்களின் மேல்
நிணம் ருசிக்கும் தாவரங்கள்
உடைந்து கதறும் அழுகையின் பின்னே
புலர் காலையின் ரத்தக் கலங்கல்
உறுத்தும் உணர்ச்சிகளின்
ஊசி நமைச்சல்கள்
தவிப்பின் பிழம்புகளில் கொதிக்கின்றன
உறைந்த நொடிகள்
அம்பு பட்டு பறவையின் புண்ணில்
ஆயிரம் புழுக்கள் கனவுகளில் மொய்க்கின்றன
படர்ந்து படர்ந்து கொடி வீசி
ராப்போதின் ஆக்ரோசம் மலரை
துகள் துகள்களாய் சிதைக்கிறது
உக்கிரமான அலைகளின் வீச்சால்
நிலைகுலைந்து
சாந்தம் கரைந்தழிகிறது
ரோடு ரோலர் மிஷினாய்
என்னுள்
எலும்புகளை நொறுக்கி நகர்கிறது
சதை உதிர்ந்து
பொடிப்பொடியாக…பொடியாக…
நான் புகையாய்….
சாத்தானே.. சாத்தானே… வெளியேறு
சடுதியாய்
காதல் ததும்பும்
ஆன்மா சற்று இளைப்பாறட்டும்.

(2) உடைந்து கிடக்கும் சக்கர நாற்காலி
சீந்துவாரற்று எப்படி ஆகிப்போனது?
திசைகளை துரத்தி துரத்தி
வேட்டையாடித் தின்றுவிட்டு..
பயணித்த பாதைகள் புலம்புகின்றன
ஸ்பரிசத்தின் சுவைகளைச்
சொல்லி சொல்லி..
பதிந்த தடங்களில் கண்ணீர் பீறிட்டடிக்கிறது
நோய்மையின் வாளால் வெட்டுண்டு
கால்கள் பறி கொடுத்தவனை
சுமந்து
உற்ற உயிரியாய் நேசித்து
புறக்கணிக்கப்பட்ட விலங்கைத் தழுவி சிநேகித்து
அதன்
தேவையின் அன்றாடங்களைக் கையளித்து
தேவதையாக பரிமளித்தது…
இன்றைய காலத்தில்
கேட்பாரற்று கிடப்பதின் சூட்சுமம்
சொல்வதற்கு சொற்களற்று
மவுனித்து….
சிதைந்த சடலமாகி.