சிறுகதைச் சுருக்கம் 84: ஆனந்த் ராகவின் சைக்கிள் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்
சரளமான விறுவிறுப்பான நடை, இயல்பான நகைச்சுவை ததும்பும் மொழி, சட்டென்று திசைமாறும் முடிவு என்று தனக்கென்று ஒரு பிரத்யேக நடையழகை உருவாக்கிக் கொண்டவர்.
சைக்கிள்
ஆனந்த் ராகவ்
வின்சென்ட் சாலை ஓரமாய் சைக்கிளை நிறுத்தினான். காரியரில் கட்டியிருந்த அலுமினியப் பெட்டியின் கட்டவிழ்த்து பூட்டை விடுவித்து திறந்து ஒன்றிரண்டு மிக்ஸர் பொட்டலங்களை கையில் எடுத்துக் கொண்டான். பெட்டியை மறுபடி பூட்டிவிட்டு பொட்டலங்களோடு பாய் கடையில் நுழைந்தான்.
தெரு மாடுகள், குறுக்கே ஓடும் சிறுவர்கள் என்று என்னவாவது இடறி சைக்கிள் விழுந்து பொட்டி வாயைத் திறந்து விட்டால் மிக்சர் பொட்டலங்கள் தெருவில் கொட்டிவிடும். திறக்கும் ஒவ்வொரு தடவையும் பூட்ட வேண்டும். அலுமினியப் பெட்டி நீளமாய் காரியரில் நீட்டிக் கொண்டிருப்பதால் பின்பக்கம் காலைத் தூக்கிப் போட்டு ஏறமுடியாது. முன்னால் காலைப் போட்டு ஏறும்போது தடுமாறும். இரண்டொரு தடவை கீழே விழுந்திருக்கிறான்.
வின்சென்ட், மற்ற இளைஞர்களெல்லாம் காலேஜ் படிப்புக்கும் கேளிக்கைகளுக்கும் விதவிதமான மோட்டார் சைக்கிளில் சுற்றிக் கொண்டிருக்க வீட்டின் தரித்திரச் சுமையில் கடை கடையாய் மிக்ஸர் காராபூந்தி விற்க மிதிவண்டி மிதித்துக் கொண்டிருந்தது அவனது இருபது வயது உல்லாச மனநிலைக்கு கடினமாகத்தான் இருந்தது.
தீயணைப்புப் படை விபத்தில் கால் இழந்த அப்பா, சர்க்கார் சலுகையில் ஆற்காடு ரோடில் தொலைபேசி பூத்தில் முடங்கி சொற்பமாய் சம்பாதிக்கிறார். அம்மா விருகம்பாக்கத்தில் வீட்டில் செய்யும் சமையல்வேலை தவிர வீட்டோடு வியாபாரமாய் பூந்தி மிக்ஸர் காரவகைகள் செய்ய, வின்சென்டும் அவன் தங்கைகளும் வீட்டு வியாபாரத்தில் உதவுகிறார்கள். ஆற்காடு ரோடிலிருந்து வெய்யிலில் மிதித்தபடி அண்ணாநகர் வரை வருவதன் சிரமம் அவனை விர்ரென்று முந்திச் செல்லும் மற்ற மோட்டார் சைக்கிள்களைப் பார்க்கும்போது இன்னும் அதிகரிக்கும். அவனின் சக்கர வாழ்க்கையில் அந்த மிதி வண்டியோடு இயங்கி இயங்கி சலிப்பு மேலோங்கி, அதை உணர்ச்சியில்லாமல் அணுகுவான். அந்த இரும்பு எலும்புக்கூடும் பதினைந்து வருஷமாய் இயங்கி அதன் ஆரம்ப கால ஆபரணங்களை இழந்து அதன் ஆதார இயக்கத்தை மட்டும் செய்து கொண்டிருந்தது.
அமிஞ்சிக்கரை, செனாய் நகர் கடைகள் முடித்து திரு.வி.க.பூங்கா கடந்து அண்ணா நகரை தொடும் திருப்பத்தில் வரும்போது வேகம் குறைத்து அந்த ஷோ ரூம் வாசலில் நின்றான். கீழே இறங்கி ஸ்டாண்ட் போட்டான். இரண்டு சக்கர வாகனங்கள் விற்கும் ஒரு நிறுவனத்தின் விற்பனை நிலையம் அது. அவன் சைக்கிள் பயணத்தில் சற்று இளைப்பாறும் இடம். கே.ஜி. ஆட்டோ என்ற பெயர் பலகை பெரிதாக அலங்கரிக்க, சாலைக்கு ஒட்டினார் போல இருந்த அந்த கட்டிடத்தின் வாயிலை ஒட்டிய வலது பக்க முகப்பில் சாலைவாசிகளைக் கவர ஒன்றிரண்டு மாடல்களில் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருக்கும். அணிவகுத்து நிற்கும் அந்த வாகனங்களை வேடிக்கை பார்ப்பது அவனுக்குப் பிடித்தது.
வின்சென்ட்டுக்கு அதில் உள்ள மாடல்களில் ஒன்றின் மீதுதான் கண். அந்த விலையை எட்டமுடியாது என்று தெரியும். விலை அவ்வளவு அதிகமில்லை. அது இருந்தால் போதும். இந்த பாரத்தைச் சுமக்க வேண்டாம். வங்கி தானமாய் கொடுத்த மூன்று சக்கர வாகனத்தில் சப்தம் செய்துகொண்டு போகிற அப்பாவிடம் கேட்க சங்கடமாய் இருந்தாலும், சைக்கிள் மிதிக்கும் வேதனை தாங்காமல் இரண்டொரு முறை கேட்டாயிற்று.
“நீயாவது சைக்கிள்ல போற.. துரை பீச்சு வரைக்கும் போறான். எலெக்ட்ரிக் டிரெய்ன்ல தூக்கிட்டு போறான் பாரு. மத்தவங்களைப் பாத்து நமக்கு அது மாதிரி இல்லையேன்னு பாக்காத வின்சென்டு. நம்ம அளவு கூட வசதி இல்லாதவங்க கஷ்டத்த பாரு” அப்பாவின் வேதாந்தம் அவனை சமாதானப்படுத்துவதில்லை.
வின்சென்டின் அகராதியில் சைக்கிள் வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களின் வாகனம். மோட்டார் சைக்கிள்காரர்கள் பாக்யசாலிகள். எந்தக் கவலையும் இல்லாமல் உற்சாகத்தின் உச்சியில் இருப்பவர்கள். அந்த அழகிய வேகப் பிசாசுகளின் மேல் உள்ள தீவிர ஆசையில் ஷோ ரூமில் பளபளவென்று சுழலும் வாகனங்களை எவ்வளவு பார்ததாலும் அலுப்பதில்லை.
பார்த்துக் கொண்டேயிருக்கும்போதுதான் அந்த மிடுக்கான கனவான் வந்தார். அந்தக் கடையின் மேலாளர். அடிக்கடி தென்படுவார். வெள்ளை சட்டையில், நீல நிற டை அணிந்து கறுப்பு கால் சராய் ஷூ என்ற சீருடைமிடுக்கில் இருந்தார். அவர் பொறுப்பில்தான் அத்தனை வாகனங்களும் இருக்கிறது என்பதும் அவன் பார்க்கும் ஒவ்வொரு நாளும் அந்த நிலையத்தில் இருக்கும் ஏதாவது ஒரு வண்டியை அவர் அலட்சியமாய் ஓட்டிப்பார்த்தபடி இருப்பதும் வின்சென்ட் பார்த்து வியக்கும் காட்சி. தனக்கென்று சொந்தமாய் ஒரு மோட்டார் சைக்கிள் வைத்திருந்தார். வின்சென்ட் விரும்பிய அதே மாடல் வண்டிதான்.
இன்னும் ப்ரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனம். வண்டியை நிறுத்திவிட்டு காலின் சின்ன உதைப்பில் அதன் ஸ்டாண்டை விடுவித்து சாய்த்துவிட்டு நடையில் ஒரு துள்ளலும் உதட்டில் சீட்டியுமாய் கடையினுள் சென்றார்.
வின்சென்ட் அதன் அருகில் சென்றான். கண்ணாடிக்கு வெளியே நின்று பார்ப்பதைவிட அருகில் இன்னும் கம்பீரமாக இருந்தது. ஹாண்டில்பார் தோள்கள் இன்னும் உயரமாய், நீண்டு குனியக்கூடத் தேவையில்லாத வனப்பு. பெட்ரோல் டாங்க் வயிறு வெள்ளை உலோகப் பளபளப்பிலும் விசேஷ வண்ணப்பூச்சுடன் பச்சை குத்தினார்ப்போல் உடம்பெல்லாம் ஸ்டிக்கர் ஒட்டிய எழில், அதன் இருக்கைக்கு மேல் கவிழ்ந்து கொண்டு ஓட்டுனர் பார்வையில் வியூகம் பார்த்தான். சாலை அதன் ஊடே அழகாய் தெரிந்தது. மிருதுவான மென்மையில் இருந்த இருக்கையைத் தொட்டு அழுத்தினான். வேகம் அதிகரிக்கும் திராட்டினை மெல்லத் திருப்பி மானசீகமாய் வ்ரோம் என்று பறந்தான்.
மேலாளர் திரும்பி வந்தார். “என்ன தம்பி பைக்கை ஓடடி முடிச்சாச்சா?” என்றார் புன்சிரிப்புடன்.
வின்சென்ட் அசட்டுச் சிரிப்புடன் பின் வாங்கினான். “சும்மா பாத்தேங்க, இது விலை எவ்வளவுங்க?”
சொன்னார் “வாங்கிக்கிறியா?”
“ஐய்ய இல்லைங்க, இப்ப இல்லை..”
“பின்ன எப்ப அந்த சைக்கிளை நல்லா ஓட்டி பழகினப்பறமா?” என்று லேசாய் சிரித்தார்.
அடிபட்டாலும் வின்சென்ட் அவரோடு சேர்ந்து கொஞ்சமாய் சிரித்தான்.
அவர் வாகனத்தைச் செல்லமாய் உதைக்க நொடியில் ரெடி ரெடி என்று துடித்தது. அவனைப் பார்த்து புன்னகைத்தவாறே விருட்டென்று விரைந்தார். வின்சென்ட் அதன் எக்ஸாஸ்ட் கோபம் முகத்தில் அறைய அவரைப் பார்த்தபடி நின்றான். அவன் நளினமாய் உடம்பை வளைத்து ஒரு சின்ன வட்டம் போட்டு விரைந்தார். கண்ணிலிருந்து மறைந்த பிறகும் அதன் பிம்பம் மனதில் இன்னம் ஒட்டிக் கொண்டு நின்றது.
தன் சைக்கிள் நோக்கி திரும்பினான். கடித்துப் போட்ட எலும்பு போல் பரிதாபமாய் நின்று கொண்டிருந்த அந்த இரும்புக் குப்பையை பார்க்க வின்சென்ட்க்கு சிரிப்பும் கொஞ்சம் அழுகையும் வந்தது. அலுமினிய டப்பாவின் சுமையை ஈடுகொடுக்க முடியாத ஸ்டாண்ட் கொஞ்சம் வளைந்து சோகையாய் நின்றிருந்தது. அரை பெடல் அழுத்தி சைக்கிளில் உட்கார்ந்து மிதிக்கும்போது கழிவிரக்கம் கவ்விய மனசு சைக்கிள் மிதிக்க சிரமப்பட்டது.
சிந்தாமணி தாண்டி ரவுண்டானா வந்து கோகுல்தாஸ் சாட் கார்னர் என்ற கடையின் முன் நின்றான். கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் ஒன்றிரண்டு கடைகள்தான். திரும்பி மேத்தா நகர் வழியாய் திரும்பிப் போகவேண்டியதுதான். கோகுல்தாஸில் பொட்டலங்களைச் சேர்ப்பித்துவிட்டு வந்து சாலையோரம் நடந்தான்.
சாலை ஓரமாய் ஷோ ரூம் மேலாளரின் சிவப்பு மோட்டார் சைக்கிள் நின்றிருந்தது. பேல் பூரி பானி பூரிக்காக வந்தவர்களின் ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிள்களின் நடுவே இருந்தாலும், வின்சென்ட் கண்ணில் அது பளிச்சென்று தெரிந்தது. கண்கள் அவனின் கதாநாயகனைத் தேடின.
பத்து அடி தள்ளி மரத்தடியில் அவர் தெரிந்தார். பேல் பூரி சாப்பிட்டு விட்டு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு எதையோ வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தார். அவர் தனித்தன்மை விலகி, குழுமியிருந்த அந்த ஜனங்களில் ஒருவராகத் தெரிந்தார்.
அவர் பார்த்த திசையில் சாலை ஓரமாய் நிறுத்தி வைத்திருந்த அந்த படோபமான படகுக் கார் இருந்தது. அவர் கண் விலக்காமல் காரை பார்த்துக் கொண்டு சிகரெட்டு புகை ஊதியபடி நின்றிருந்தார்.
வின்சென்ட் திரும்பி தன் சைக்கிளை நோக்கி நடந்தான்.
கல்கி அக்டோபர் 2003
பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது, அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு ஒரு நுழைவாயிலாக அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.