மௌனம் பேசியதே குறுங்கதை – அன்பாதவன்
விடை பெறுகையில் தயக்கம் நிறைந்த விழிகள் சிந்தும் நீர்க்கோடுகளை எப்படி வகைப்படுத்துவேன்… செல்லமே! கடந்து போன கசப்பு தருணங்களை கழுவி அலசி வெளியேற்றுகிறேன் மனசின் நீர்த்தாரையிலிருந்து…
கனல் கக்கும் சிறுநகரத்தின் அனலறைக்குள் காமேஸ்வரி உன் மோக முத்திரைகள்… சக்தி சாந்த சொரூபி உன்னோடு உறவும் தருணங்களில் அறிந்து புரிகிறேன் அர்த்த நாரியை…. உச்சத்தின் உச்சியில் “ஊ” ங்கார மாதங்கி….. களைத்த பசிக்கு கையமுதுட்டும் அன்னபூரணி….
எப்போது தொடங்கியது… எப்போது முடியும்…? எவரறிவார்….? முதன் முதலில் நாம் சந்தித்த அந்த சந்தோஷ மனசோடு புதிய அர்த்தங்கள் மிளிரும் இவ்வோலையை உள்வாங்கி இந்நொடி முதலாய் தொடர யத்தனிக்கிறேன். நமக்கான… ம்ஹூம்… எனக்கானப் புதுவாழ்வை. அது மிகப் புதியதாய்… காதலும் கனிந்த அன்பும் வாத்சல்ய வார்த்தைகள் நிரம்பிய ஆறுதல் கூடையாய்.. நிரம்பி வழியும் ஈர இதயத்தோடு.
தேவதையொருத்தியால் வரமளிக்கப்பட்டாலும் சில குறுமுனிகள் சாபத்தால் கலைந்த தவம்… தொடருமா… என் அதீக வலி… தனிமையைச் சுமந்து செல்கிறது வாகனம் தடதடத்த படி… மவுனமாய் உடனோடி வருகிறது இருட்டு… சில இடங்களில் நிழலும் கடக்கத் துணையாய் தொலைவில் ஒளி சிந்தும் உன் ஒற்றைக்கல் மூக்குத்தி கடினமான உனது தருணங்களில் தள்ளியே இருந்திருக்கிறேன். ஊர்சுற்றியாய்… தூரங்கள் தூயர் சுமந்த அடையாளங்கள்… இன்னொடு முகம் பூண்டு கழிகின்ற காலங்களைப் பாடுகிறேன். செவி மடுப்பாயா… அஃதென் வயிற்றின் பாடல் மட்டுமல்ல மனசின் இசை! மந்திரச்சொல் மறந்து குகைக்குள் சிக்குண்டவனுக்கு கிடைக்குமோப் புன்னகைத் திறவுகோல்…மலருமோ புதிய விடியல்… கிழக்கு ஒளிர்கிறது. நம்பிக்கையின் கீற்றாய்… அர்த்தமும் சுவையும் நிரம்பிய அத்திசையை நோக்கி பயணிக்கிறேன். உடன் வருகின்றன… நிலவும் உடுக்களும்.. கூடவே சூரியனும்….உன் நினைவுகளோடு
– அன்பாதவன்
தூறல் நின்னு போச்சு! குறுங்கதை – அன்பாதவன்
அது 2014 பின்பனிக்காலப் பிப்ரவரி! வங்கியின் இன்ஸ்பெக்க்ஷன் பிரிவில் பணியென்பதால் கேரளம், தமிழகம் என நேஷனல் பெர்மிட் லாரிபோல சுற்றிக்கொண்டிருந்தேன் !
கேரளத்து காஞ்சிராப்பள்ளியில் புறப்பட்டு காஞ்சிபுரம் இறங்கினேன்! வங்கிப்பணியில் காலாட்டியெல்லாம் பிழைக்க ஏலாது அய்யாமாரே! ஆய்வுப்பணிகள் பின்னிப் பெடலெடுத்த பிற்பகல். குஜராத்திலிருந்து தமிழ்க்குரல் அழைத்தது….
“நண்பரே… அதிர்ஷ்டக்காரர்…. நீர்… அயலகப்பணிக்காக துபாய்க்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீகள்… நல்வாழ்த்துக்கள்….”
“அய்யா! மெய்யா பொய்யா!” என்ற குழப்பத்தில் தூக்கமின்றி மெய்யாலுமே காலாட்டிக்கொண்டிருந்தேன் தூக்கமின்றி!
மும்பை, சென்னை போலவே இப்போதும் ‘ஒண்டிக்கட்டை’ வாழ்க்கை தான். என் ’அடுப்பங்கரை அமைச்சரவை’ முடிவெடுத்து பழைய பாத்திரங்கள் சிலதை பரிசளித்த்து
பெருநகரத்தில் பணியாற்றிய மகனோ ‘சூட், கோட், டை, ,ஷூ’ என என்னை நவநாகரீகத்தின் பிரதிநிதியாக்கினான்.
“வாழ்வுதான் போ!” … என அவ்வை சண்முகி சிறுமிக்குரல் அசரிரீயாய் ஒலிக்க. கடனட்டை தேய்ந்து கட்டெறும்பாகியது.
உள்ளூர் காவல் நிலையத்தில் கல்லூரி நண்பர் தான் அதிகாரி..“ரொம்ப நல்லவர்” என என்னைப் பரிந்துரைக்க பாஸ்போர்ட் பணிகளில் பெயிலாகாமல் சின்ன கரும்பச்சை புத்தகம் மூலம் நானுமொரு இந்திய பிரஜை தானென முத்திரைக்குத்தப்படேன்
வடிவேலு அறிமுகப்படுத்திய துபாய்க் காட்சிகள் விரிய இன்ப அதிர்ச்சியொரு, புறமிருக்க,நிறமில்லாக் குழப்பங்கள் நிறைய… “நம்மூர் உணவுப் பொருட்கள் கிடைக்குமா… பொன்னியரசி.. புளி, பருப்பு…. எண்னெய் என… ஆங்கிலம் போதுமா… அரபி மலையாளமென பக்கவாத்தியம் வேண்டுமா…எவ்வளவு சந்தேகங்கள்!
அலுவலக முறைமைகள் என்ன… கடுமையான சட்டங்கள் என்று கேள்விப்பட்டிருந்த தால் பயப்பாம்பு பாதம் சுற்றியவனானேன்!
இதற்கிடையில் முதல் தாரத்தையே மறுதரம் கல்யாணம் செய்து பதிவு செய்தேன்….. மகனும் மகளும் காட்சி கையெழுத்திட!
அந்த நாளும் வந்தது! வழியனுப்ப வந்த துணைவியும் மகளும் விடைபெற்றுக்கிளம்ப … விமானநிலைய அதிகாரிகள் “இந்தி தெரியாதா உன்க்கு” எனக் கேட்காமல் நல்லவேலையாக கனிமொழி பேசி நிலையத்தினுள் அனுப்ப… போக வேண்டிய விமானம் தாமதமென்பதை புன்சிரிப்போடு சொன்னாள் வெள்ளைத்தேவதை.
அதற்குள் வழியனுப்ப வந்தவர் வீடு சேர்ந்த செய்தி!
ஒரு வழியாய் வந்ததென் விமானம்! நள்ளிரவில் ஏறி நள்ளிரவில் இறங்கினான் ஒளிமயமான துபாய்!
விடியலில் எழுந்து காலாற நடக்க…. வெள்ளிக்கிழமை விடுமுறையென்பதால் பக்கத்து சதுக்கத்தில் பெருங்கூட்டம். தேனாய்ப் பாய்ந்தது. “எலேய் நல்லாயிருக்கியா…”யாரோ யாரையோ கேட்டது. யப்பாடி… தப்பித்தேன்…. அங்குமிங்கும் உடைந்த தமிழ் உரையாடல்கள் துபாய் காற்றில் கலக்க…. கால் சென்ற பாதையில் வரவேற்ற சரவணபவன் காஃபி வாசம்…..பிரபஞ்சனை ஞாபகப்படுத்த. கொஞ்சம் நடந்தேன்… “நாடார் மளிகை” கடல் கடந்தாலும் சாதியும் மதமும் நம் பின்னாடியே வருதே…
’இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே’ பாடலைப் பாடியபடி அறைக்கு திரும்பினேன்.
சட சட வென இளந்தூறல்…சட்டென்று மாறுதோ வானிலை
– அன்பாதவன்
எம்பாவாய் குறுங்கதை – அன்பாதவன்
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளில் நீராடப் போகுமின் சிறுசொல் கேளாய் எம்பாவாய்…அழைத்தவள் வில்லிபுத்தூராள்.”கொட்டுங்குளிர்ப்பனியில் கூடியுள்ளார் எம்மக்கள்..குரலோங்கி கரமுயர்த்தி. அலைச் சீற்றமில்லாச் சமுத்திரம் ஆர்ப்பரிப்போடு கருமேகக் கூட்டம் துறையில் புயல் எச்சரிக்கை. நேற்று வரை சக உதிரன்.. இன்று அந்நியத் தேசத்திலிருந்து வந்தவன்.. ஏவல் நாய்களின் கேவல முத்திரை… இமயம் தொடங்கி குமரிவரை கிழிபடும் தேசத்தாயின் ஒற்றுமை சேலை. யாது கருதி வைத்தீர்.. யாரைப் பணயம் வைத்தீர்..நஸ்ரில் இஸ்லாமின் புல்புல் களும் பாரதியின் குயிலும் பாடியவை விடுதலைப் பாடல்கள் தானே!ஆழியாய் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து சார்ங்கமுதைத்த சரமழைப்போல் கூர்மைப்பார்வயுடன் கூட்டுக்குரல்கள்.. பால் பேதமின்றி.. உங்கள் துவக்குக்கெதிராக ரோஜாவைநீட்டும் சிங்கப் பெண்கள்! நாமின்று மக்களுடன் நிற்போம்.. வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் ஈந்த பாலில் செய்வோம்’ கரம் ச்சாய்..’.. தாயும் நாமாகித் தாங்குவோம் நம் செல்வங்களை.. எம்பாவாய்” ஆண்டாளின் அன்புக்குமுண்டோ அடைக்குந்தாழ்?
-அன்பாதவன்