நூல் அறிமுகம்: எஸ். ராமகிருஷ்ணனின் “அவளது வீடு” – அன்புக்குமரன்
எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் புத்தகங்களில் இது நான் வாசிக்கும் மூன்றாவது புத்தகம். அவரின் சிறுகதை தொகுப்பில் “அவளது வீடு” நான் வாசிக்கும் முதல் புத்தகம்.
எனது இனிய டால்ஸ்டாய், பதேர் பாஞ்சாலி என்ற 2 கட்டுரைகள் கிட்டத்தட்ட ஒரு கதை கேட்பது போலத்தான் மிக சுவாரசியமாக இருக்கும். இப்படி பட்ட ஒரு படைப்பாளியின் புனைக்கதைகள் எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்த படைப்புதான் “அவளது வீடு” என்ற சிறு கதை தொகுப்பு.
நாவல் வாசிப்பு என்பது கிட்டத்தட்ட ஒரு தவம் போன்றது, அதை தொடர்ந்து வாசிக்காவிட்டால், அந்த கதையுலகில் நாம் சஞ்சரிப்பது கடினம் என்று நான் உணர்ந்ததாலோ என்னவோ, சிறு கதை புத்தகங்கள் என்னை ஈர்க்கின்றன.
எழுத்தாளர் கே.வி ஷைலஜா அவர்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆற்றிய உரையில் “அவளது வீடு” என்ற ஒரு கதையை அவையோருக்கு சொன்ன காணொளியை யூடூபில் நான் ஒரு முறை எனது மகிழுந்தை ஒட்டியப்படியே கேட்டிருக்கிறேன். பின்பு புத்தகங்களே துணை! என்ற தலைப்பில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களே இந்த கதையை விவரித்தார்.பெண்களின் அடிப்படைத் தேவைகள் இது தான், அவர்களுக்கு இது போதும் என்ற கருத்துப்படிவம் நிறைந்த நடுத்தர ஆண்வர்கத்தினரின் மூர்க்கத்தனமான உளவியல் வன்முறையைச் சொல்லாமல் சொல்லும் கதை இது.
இந்த கதையை கேட்டபோது ஒரு பேருந்து பயணத்தில் இரு தோழிகளின் உரையாடல் எனக்கு நினைவுக்கு வந்தது. அதில் ஒரு தோழி சொல்கிறாள் “நான் வெகுநாட்களாக ஒரு இருசக்கர வாகனம் வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன், ஆனால் வீட்டிலோ அந்த செலவுக்கு நகை வாங்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள் “. அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் மற்றோரு தோழி “ஆண்களுக்கு என்று வரும் பொழுது, அவர்களுக்கு வண்டி, வீடு என்று அவர்களுக்கென வாங்கிக்கொள்கிறார்கள், நமக்கு என்று வரும் பொழுது நகை, புடவை கல்யாணம் என்பதோடு முடிந்து விடுகிறது. ஒரு ஆண்மகனாக எனக்கு வாய்த்திருக்கும் சுதந்திரத்தை நினைத்து பெருமை கொள்வதா அல்லது அவர்களின் நிலையை நினைத்து அனுதாபப்படுவதா? தெரியவில்லை. இவை இரண்டுமே அந்த பேருந்து பயணம் முடிவடையும் வரைதான்.
அவளளது வீடு கதையை கேட்டவுடனேயே இந்த சிறுகதையை எழுத்து வடிவத்தில் வாசிக்க வேண்டும் என்ற உந்துதல் இருந்தது. இதற்கு ஏற்றாற்போல் டிசம்பர் 2020 தேசாந்திரி பதிப்பகத்தில் “அவளது வீடு” என்று தலைப்பிலேயே ஒரு சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டு அசத்திவிட்டார்கள். சென்னை புத்தக கணக்காட்சிற்கு முன்னதாக சிறிய அளவில் 40 பதிப்பகங்கள் கலந்து கொண்ட ஒரு புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தகம் என் கண்களில் பட்டதும் அளவில்லா மகிழ்ச்சியுடன் அதை என் வசப்படுத்திக்கொண்டேன்.
இந்த கதைகளை தேர்ந்தெடுத்தது வாசகர்கள்தான்.
20 சிறு கதைகள் அடங்கிய தொகுப்பில் ஒரு கதை கூட எனக்கு சலிப்பு தரவில்லை. பரவலாக இந்த சமூகத்தில் இணக்கமான ஒரு வாழ்க்கையை வாழும் மனிதர்களின் நடுவில் சிலர் சில விசித்திர பழக்கவழக்கங்களுடன் வாழ்ந்து மறைக்கின்றனர். இந்த சிறுகதைத் தொகுப்பில் பெருவாரியான கதைகள் இவர்களின் வாழ்க்கையை சற்று எட்டி பார்த்து நமக்கு பரவலாக கிடைக்கும் பொது ஞானம் அல்லாது வழக்கத்திற்கு மாறான ஞானத்தை தருவதாக உணர்கிறேன்.
வாடகை வீட்டிற்கான விளம்பரங்களைப் பார்த்து அந்த வீடுகளை தேடி போகும் ஒரு பெண்மணி, பெய்யும் மழையின் அளவுகளை ஒரு குறிப்பேட்டில் குறிப்பெடுக்கும் ஒரு தந்தை, ஆண்கள் மட்டுமே பங்கேற்கின்ற இலக்கிய கூட்டத்தில் ஒற்றை பெண்மணியாய் போய் தன் மனம் கவர்ந்த எழுத்தாளரை தரிசிக்கும் ஒரு இல்லத்தரசி, சேவலுக்காக தன் குடும்பத்தைத் துச்சமாக மதிக்கும் ஒரு கிராமத்து கிழவர், ஒரு ஆயுதத்தை பரிசுப் பொருளாக தன்வசம் எப்போதும் வைத்திருக்கும் ஒரு மனைவி, டயரிகள் எழுதும் பழக்கமுடையவர் அதை கடைசியாகப் புரட்டிப்பார்க்கும் ஒரு முதியவர், செகாவை காணவரும் வினோதமான விருந்தாளி, பாம்பை தன் கட்டுப்பாட்டில் வைப்பதை ஒரு போதையாகக் கொண்ட ஒரு பாம்பாட்டி, பின்னோக்கி செல்லும் ஒரு மனிதர்,வீட்டில் எப்பொழுதும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ள ஒரு அப்பா என்று பட்டியல் சற்று நீளம் தான்.
20 கதைகளில் பெரும்பாலான கதைகள் என்னை கவர்ந்தன. வெறும் இருட்டு மற்றும் பனாரஸ் என்னை வெகுவாக கவரவில்லை. ஒரு வேளை இதற்கு சற்றும் ஒவ்வாத கருக்களைக் கொண்ட மற்ற கதைகளோடு சேர்த்து இதை வாசித்ததன் காரணமாக இருக்கலாம்.
இதில் என் மனதுக்கு நெருக்கமான கதைகள் “அவளது வீடு”, “ஆண் மழை”, “எம்பாவாய்”, “தனலக்ஷ்மியின் துப்பாக்கி” , “பதினாறு டயரிகள்”, “இன்னும் சில கிளிகள் “, “நீரிலும் நடக்கலாம்”, “அப்பா புகைக்கிறார்”, “சௌ ந்தரவள்ளியின் மீசை”.
மிகச் சிறிய கதையான வானோர் என்ற கதை , எஸ்.ராமகிருஷ்ணனின் பிரசுரிக்கப்படாத உப்பு என்ற சிறுகதையை நினைவுப் படுத்தியது.
சௌந்தரவள்ளியின் மீசை உளவியல் ரீதியாக ஒரு மாணவியின் பாதிப்பை சித்தரித்தாலும் அதற்கு மாறாக எனக்கு இரு இனிய தருணங்களை நினைவூட்டியது.
1. போப்பின்ஸ் என்ற ஒரு மலையாள திரைப்படத்தில் கண்ணாடியை முதல்முதலாக பார்க்கும் ஒரு தம்பதியினரின் எதிர்வினை
2. என் கல்லூரி பருவத்தில் கேரளாவில் உள்ள தன் சொந்த ஊருக்கு சென்று திரும்பிய சக மாணவியின் கையை பார்த்து ஆர்வத்தினால் மலையாளத்தில் ஒரு கேள்வியை கேட்டு அவளை நாணச் செய்தது. அந்த கேள்வியின் தமிழாக்கம் “உன் கைகளில் உள்ள முடியை காணவில்லை”. அதற்கு அவள் வெட்கம் கலந்த சிரிப்புடன் அளித்த பதில் “பிரேமிடம் நல்ல கவனிக்கும் திறன் உள்ளது ”
இந்த சிறுகதை வாசிப்பில் மற்றொன்று புலன் படுகிறது. யாருக்கும் தீங்கில்லாமல் ஏதோ ஒரு விதத்தில் தங்கள் தோற்றத்தினாலோ, மனரீதியாகவோ, பழக்கத்தினாலோ மாறுமட்டு இருப்பவர்களை நாம் ஏற்று கொண்டதே இல்லை. மாறாக பரவலாக உலவும் இணக்கமானவர்களின் செயற்பாடுகளாக “புகைப்பிடித்தல், மனைவியை அடித்தல், பெண்களை பின் தொடர்தல், ஏதோ ஒரு மயக்கத்தில் தன்னை அடிமையாக்கி குடும்பத்தை கவனிக்காமல் இருத்தல்” என ஈரமில்லாமல் வாழ்கின்ற ஆண்வர்கத்தினரை பெரும்பாலான பெண்கள் சகித்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ஆக்க பூர்வமாக ஒரு இலக்கியத்தை ரசிப்பது, திருமணப் பரிசாக ஒரு பொருளை தன் வசம் பாதுகாத்து வைப்பது, வசிப்பதற்கு விசாலமான வீடு வேண்டி இருக்கும் பெண்மணி என நியாயமாக யாருக்கும் தீங்கில்லாத பழக்கங்களைக் கொண்டிருக்கும் பெண்மணிகளை எதிரியாக கருதும் சமூகம் வருத்தத்திற்குரியது.
கல்வி போராளிகளுக்கு நன்றிக்கடன் செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம் நாம். இல்லையேல் பண்பாட்டு தொடர்ச்சி என்ற பேரில் ஆண்களின் அட்டூழியங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
அன்புடன்,
அன்புக்குமரன் எத்தியரசன்
நூல் : அவளது வீடு
ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்
விலை : ரூ.₹270
வெளியீடு : தேசாந்திரி பதிப்பகம்.
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
நூல் அறிமுகம்: ந.செல்வனின் ஒளிப்படக்கலையும் கலைஞனும் – அன்புக்குமரன்
திருமணம் கழிந்து 10 ஆண்டுகள் நிறைவுபெற்றதை ஒட்டி அண்மையில் நானும் என் மனைவியும் உள்ள ஒரு ஒளிப்படத்தை டிஜிட்டல் ஓவியமாக்கி அதை ஒரு பெரிய போட்டோபிரேமில் வைத்து எனது மைத்துனர் எங்களுக்கு பரிசளித்தார். எனக்கும் என் மனைவிக்கும் இதில் மிக்க மகிழ்ச்சி. எனக்கோ 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வை நினைவுபடுத்தியது.
மறைந்த எங்கள் தாத்தாவின் வீடு பாகப்பிரிவினை செய்யப்பட்டு என் பெரியம்மாவின் குடும்பம் அதை விற்றதால் அந்த வீட்டில் உள்ள தேவையான பொருள்கள் ஏதேனும் இருக்கிறதா என்று பார்க்க சென்றோம் .காரணம் கூடிய சீக்கிரம் வீடு இடிக்கப்படும். முகப்பில் தாத்தாவின் பெற்றோரின் ஒளிப்படம் பெரிய அளவிலான போட்டோ பிரேமில் மாட்டப்பட்ட்டு இருந்ததைக் கண்டேன் .அதை எடுக்கலாம் என்று உள்மனது தோன்றியது, ஆனால் எனது பெற்றோர்கள் “எதுக்கு தேவை இல்லாமல் குப்பை சேர்க்கிறாய் ” என்றதும் எனது தாத்தா மற்றும் பாட்டியின் ஒரு கருப்பு வெள்ளை படத்தை எடுத்து கொண்டு வீடு திரும்பினேன்.
என் கொள்ளு தாத்தாவின் காலத்தில் ஒரு ஒளிப்படம் எடுப்பது என்பது எவ்வளவு அரிதாய் இருக்கக்கூடும். இனி கொள்ளு தாத்தா மற்றும் பாட்டியின் ஒளிப்படம் வேண்டும் என்றாலும் எனக்கு கிடைக்காதே என்ற வருத்தம் தோய்ந்து, எனக்கு பரிசளிக்க பட்டுள்ள போட்டோ பிரேமை பார்த்த வண்ணம் உள்ளேன். என் காலத்திற்கு பின் இது எந்த குப்பை மேட்டில் கிடக்கும் என்பதையும் நினைத்து பார்த்தேன்.
ஐயா ந.செல்வன் அவர்களின் புத்தகம் வாசிக்கும் முன் நான் இந்த மனநிலையில் தான் இருந்தேன். ஐயா ந.செல்வன் அவர்களது இரண்டு புத்தகங்களில் இது நான் வாசிக்கும் இரண்டாவது புத்தகம்.
முதல் புத்தகம் அறியப்பட வேண்டிய ஆளுமைகள். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய “எனது அருமை டால்ஸ்டாய்”, பவா செல்லத்துரை எழுதிய “மேய்ப்பர்கள்” புத்தகங்களின் வரிசையில் கலை மற்றும் இலக்கிய உலகில் பயணிக்கும் படைப்பாளிகளை பற்றியது என்பதால் இதனை முதலில் வாசித்தேன்.
ஒளிப் படக் கலையும் கலைஞனும் என்ற புத்தகத்தை பிறகு வாசிக்கலாம் என்று இருந்தேன். காரணம் நாக்கு சுட்ட பூனை போல் சிக்மண்ட் பிராய்ட் அவர்களின் துறை சார்ந்த புத்தகம் ஒன்றை வாங்கி அதை ஒவ்வாமையால் வாசிக்க முடியாமல் இன்னும் கிடப்பிலேயே 11 ஆண்டுகளாக இருக்கிறது அலமாரியில்.
ஒரு வேளை இது அது போன்று துறை சார்ந்த புத்தகமாக இருக்குமோ என்ற ஒரு நெருடல். அது மட்டும் இல்லாமல் இந்த புத்தகத்தின் பக்கங்கள் 304 என்பதும் ஒரு காரணம் தான்.
28 கட்டுரைகள் அடங்கிய இந்த கட்டுரைத் தொகுப்பு ஒரு ரசனையான மனிதனின் முதல் வெளிப்பாடாக பிறர்கள் படைத்த ஒளிப் படங்களை ரசித்து, பின்பு அந்த கலையின் மீது ஆர்வமிகுதியால், அதில் லயித்து, அதை கற்று, தானும் ஓரு படைப்பாளியாக ஆன கதையை சொல்கிறது .
பின்பு தன் அனுபவங்களை எழுத்தின் மூலம் பிறருக்கு செலுத்துகிறான். இதோடு இருந்திருந்தால் இந்த புத்தகம் இலக்கியமாக மாறி இருக்காது.
மாறாக, இந்த படைப்பாளி பின்பு தன் அனுபவங்களால் இந்த படைப்பின் சாத்தியக்கூறுகளை உணர்ந்து, சக மனிதனை, வாழும் சூழலை, அரசியலை, பிரபஞ்சத்தை மெல்ல நின்று கவனித்து, உள்வாங்கி, கலையின் குறிக்கோள் என்பது மனித நேயத்தை தொடுவது என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார். இந்த கூறுகள் தான் இந்த புத்தகத்தை இலக்கியமாக்குகிறது என்று உணர்கிறேன்.
புகைப்படம் எடுக்கும் நேர்த்தி, அவை பதிவு செய்யும் போது தேவையான அளவுருகளை பட்டியலிடுலுதல், எந்த கேமரா நல்ல கேமரா என்ற குறிப்புகள் சார்ந்த எழுத்துகளில் இருந்து முற்றிலும் விலகி நம்மை சில பயணக் கட்டுரைகளின் மூலம் மெல்ல தனது நிலப்பிறப்பிற்கு கொண்டு செல்கிறார்.
கால இயந்திரம் சாத்தியமா என்று தெரிய வில்லை. ஆனால் கடந்த காலம் எப்போதும் நம்மோடு நிகழ் காலத்தில் எழுத்துக்களாக, ஓவியமாக, ஒலி நாடாவாக, ஒளிப் படமாக, திரைப்படமாக பேசிக் கொண்டே இருக்கின்றன.இது போல் வேறு வேறு கால வரிசையில் நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்து நம்மோடு எழுத்தாளர் உரையாடுகிறார்.
பயணக் கட்டுரையின் முன்னோடியான A.K.செட்டியார் அவர்களின் புத்தகங்களை ரசிப்பவர்கள் இந்த தொகுப்பில் இருக்கும் ஊர்த் திருவிழா, ஊருணி நீர் நிறைந்தற்றே மற்றும் உப்பள ஓவியங்கள் போன்ற கட்டுரைககளின் வாசிப்பு பரவசத்தின் உச்சத்துக்கு கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது. காரணம் எழுத்தாளர் அவர்கள் பார்த்த/கண்ட/உணர்ந்த/உள் வாங்கிய நிலப்பரப்பை நம்மை காலம் இயந்திரம் கொண்டு அவரோடு மறைவாக நாமும் பயணிக்கும் மாதிரியான உணர்வை தமது எழுத்துகளில் தெறித்தது மட்டுமல்லாமல் புகைப்படங்களாகவும் நமக்காக இந்த புத்தகங்களில் பதிக்கப் பட்டிருக்கிறது ஒரு தனிச் சிறப்பு. இந்த கலவையான நிபுணத்துவம் பெற்ற கலைஞர்களைப் பார்ப்பது அறிது.
(ஓவியம், ஒளிப்பட கலை, குறும்பட மற்றும் ஆவணப்பட இயக்கம், வாசிப்பு, பள்ளிக்கூட ஆசிரியர் என்று இந்த கலவை)
ஒரு படைப்பானது என்ன செய்ய கூடும் என்பது சில சமயம், அந்த படைப்பாளிக்கும் படைப்புக்கும் கூட எட்டமால் காலமும் கால த்தைக் கடந்த வாசிப்பும் அதன் மூலப் பொருட்களை மீட்டெடுத்த வண்ணம் இருக்கும். இந்த புத்தகமும் அப்படித்தான்.
இந்த புத்தகத்தை ஒரே மூச்சாக வாசிக்க முடியவில்லை. காரணம் நடுவே புத்தகத்தை வைத்து என் நினைவு அடுக்களில் இருந்து சில நினைவுகளை அசை போட வைத்தது.
அமரம் தெருக்கூத்து நிகழ்வை இவர் பகிர்ந்த தருணத்தில் என் நினைவுகள் வழக்கு எண் 18/9 திரைப்படத்தில் வரும் தெருக்கூத்து காட்சிகள் வரை சென்றது. அதுவும் தர்மபுரி மாவட்டத்தில் நடப்பது தான். என்ன ஒரு ஒற்றுமை?
பின்பு இவரது முதல் Post wedding shoot அனுபவம் கட்டுரையில் வரும் கருப்பு வெள்ளை புகைப்படங்கள் ஏற்கனவே இவரது முகப்புத்தகத்தில் பார்த்திருந்தாலும், கருப்பு வெள்ளையில் வண்ணமில்லாமல் கூட உயிர்ப்போடு உள்ளதை கண்டு பிரம்மிப்பாக இருந்தது. முகப்புத்தகத்தில் இவர் பகிர்ந்த வண்ணப் படங்கள் பாலுமகேந்திராவின் வண்ணப் படங்கள் போன்று அழகியல் தன்மையோடு இயற்கை ஒளியில் இருந்தது.
பக்கங்களில் உள்ள கருப்பு வெள்ளை படங்கள் வண்ணப் படங்களுக்கு நிகராக நின்று பேசுகிறது.
புகைப்படம் இவ்வளவு வசியமாக இருக்க , இந்த புகைப்படத்திற்கு பின் இருக்கும் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் வாசிப்பதற்கு அதனினும் இனிமை . இந்த ஒளிப்படம் தந்த நம்பிக்கை 30வருடமாக தொடர்ந்தது மனித உறவுகளுக்கான சான்றாக நம்மிடம் விரிகிறது.
இந்த புத்தகத்தை வாசிக்கும் போது நான் 20 வருடங்களுக்கு முன்பு film கேமராவில் எடுத்த ஒளிப்படங்களை மீட்டெடுத்து அதை நண்பர்களுக்கு அவ்வப்போது பகிர்ந்து அவர்களின் மகிழ்ச்சியில் நானும் மகிழச்சி அடைந்தேன்.
சினிமா முயற்சி என்ற கட்டுரையை மிக கவனமாக சினிமாத் துறையில் இருக்கும் யதார்த்தத்தை பதிவு செய்து அதே சமயம், இந்த துறையில் கால் பதிக்கவிருக்கும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லி முடித்திருப்பது உசிதம்.
அறியப்பட வேண்டிய ஆளுமைகள் புத்தகத்தில் கலைஞர்களின் வாழ்க்கை, அவர்களின் பங்களிப்பு என்று எந்த கட்டுரையிலும் தன்னிலையை புகுத்தாமல் கவனமாக கையாண்ட எழுத்தாளர் இங்கு பல இடங்களில் தன் ரசனையின் வெளிப்பாட்டை லாவகமாய் அழகுறப் பதிவு செய்திருக்கிறார். பச்சை நிறம் கேள்விப்பட்டிருக்கிறேன், இளம்பச்சை, கரும்பச்சை, ஏன்? கிளிப்பச்சை கூட கேள்விப்பட்டுள்ளேன், ஒளியின் மாயாஜாலத்தில் மதி மயங்கி தென் படும் பச்சைக்கு இவர் சூட்டிய பெயர் “மாயாஜாலப் பச்சை”
Hyperlink போன்ற ஒரு வடிவத்தில் இவரின் 6ஆவது கட்டுரையில் பாலுமகேந்திராவிடம் இவர் ஒளிப்படங்களை காண்பிப்பது போன்று ஒரு ஒளிப்படம் இருக்கும். இதற்கான விவரங்கள் பின்பு 11ஆவது கட்டுரையில் காணக்கிடைக்கும். இதிலும் ரசனையின் வெளிப்பாடுகள் தெறிப்பதை பார்க்கலாம். பாலுமகேந்திராவின் மௌன மொட்டு பாராட்டுகளாக பூத்தது என்ற வார்த்தை சரங்கள் ஏதோ போகிற போக்கில் வந்ததாக தெரியவில்லை. அழகியலைத் தாண்டி உலக படைப்புகளின் உட்கூறுகளை உணர்ந்தால் மட்டுமே இந்த வெளிப்பாடு சாத்தியம்.
ஒரு பக்கக் கதையின் மறுபக்கம்:
———————————————
“அவன் ஓவிய கல்லுரிக்குச் செல்ல விரும்பினான். தடையேதும் சொல்லவில்லை” என்று மு.நடேசன் அவர்கள் தன் மகன் செல்வனின் கல்லூரியைப் பற்றி சுரங்க நகரம் புத்தகத்தில் பதிவு செய்திருப்பார். -> இது தந்தையின் பதிப்பு .
மன வெளிப் பயணங்கள் என்ற கட்டுரையில் “ஓவியங்கள் பயில வேண்டும் என்ற எண்ணம் ஆரம்பத்தில் இல்லை. ஒளிப்பதிவு பயில அனுமதிக்காத காரணத்தால், பாடப்புத்தகத்திலிருந்து தப்பிப்பதற்காக ஓவியம் பயில கும்பகோணம் கல்லூரிக்கு சென்றேன் ” -> மகனின் பதிப்பு.
தந்தையின் பதிப்பை வாசித்துவிட்டு இப்படி ஒரு தந்தையா! என்று சில்லறையை சிதறவிட்ட என்னை “தம்பி நில், இன்னொரு பக்கம் இருக்கின்றது. இதையும் கேளு” என்பது போல் இருந்தது.
தந்தையும் மகனும் ஒரே நிகழ்வின் சொல்லப்படாத பக்கங்களை தன் வரலாற்றில் பதிவு செய்து, அதை என்னை போன்று பித்து பிடித்த வாசகன் வாசித்தால் இதெல்லாம் இணைக்கத் தோன்றும்.
ஏதோ சுவாரஸ்யத்திற்கு ஒரு சோக நிகழ்ச்சியை பயன்படுத்தாமல், சக ஒளிப்பட கலைஞனின் வீழ்ச்சியை பதிவு செய்திருப்பது , ஒரு புகைப்பட கலைஞனுக்கு உடல் நலம் மற்றும் மனோதிடம் இவை இரண்டுமே இன்றியமையாதது என்பதை உணர்த்தும் விதமாக அமைந்ததுதான் , வாழ்கின்ற மற்றும் இனி வரும் கலைஞருக்கான செய்தி.
இதை வாசிக்கும் போது இசையமைப்பாளர் R.K.சேகர் (A.R.ரகுமானின் தந்தை) அவர்களின் கதையை 13 வருடத்திற்கு முன் காமினி மத்தாய் அவர்களின் புத்தகத்தில் வாசித்தது நினைவில் வந்தது.
இந்த பாதிப்பால் ரகுமானின் தாய் , தன் மகனுக்கு இந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக உடல்நலனில் அக்கறை செலுத்தியிருக்கிறார் என்பதையும் பதிவு செய்திருப்பார் எழுத்தாளர் காமினி.
“Everyone except Sekhar could see that the overtime was taking its toll on his health. He was getting thinner by the day tired, irritable and sickly. Working eighteen or twenty hours a day, he took to drinking as a way to coping with stress and lack of sleep.” – A.R.RAHMAN THE MUSICAL STORM by Kamini Mathai.
கலைஞனுள் கசியும் ஈரம் :
———————————-
வேல்ஸ் நாட்டில் உள்ள கோன்வி அருவியை கானச் சென்று அங்கு அந்த அருவியை ரசித்தபடி நின்ற பொழுது ஒரு ஒளிப்பட கலைஞர் அங்கே ஒரு சிறுவன் அருவியில் தவறி விழுந்து மரணித்ததையொட்டி அவன் நினைவாக ஒரு வாசகத்தை ஸ்தூபத்தில் செதுக்கி இருந்ததைக் கண்டு வருத்தப்பட்டு “sad isn’t it” என்று என் முகத்தைப் பார்த்து சொன்னார். நானும் பதிலுக்கு ஆம் என்று சொன்னேன். அந்த வாசகத்தை நானும் என் மனைவியும் அந்த ஒளிப்பட கலைஞர் வருவதற்கு முன்பே கண்டோம். எங்களுக்கு அது ஒரு கடந்த கால நிகழ்வாகத்தான் இருந்தது.ஒரு வேலை நாம் கல் நெஞ்சக்காரர்களோ? என்றெல்லாம் தோன்றியது.என்றோ மரணித்த சிறுவனுக்காக இன்று வருத்தப்படும் அவரை முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியவில்லை. இப்போது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
பின் வரும் வாசகங்கள் வெறும் எழுத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு கலை கலைஞனை என்ன செய்யும் என்பதை வெளிப்படுத்தியதுதான் இந்த புத்தகத்தின் உச்சம்.
“ஆரம்ப காலங்களில் எனது படங்கள் முதலில் அழகியல் சார்ந்து இருந்தது. பின்பு அவை சமூகத்தை தன்னுள் இழுத்துக் கொண்டது.”
“கலைகளின் மெய்யியல் வாழ்க்கையின் குறிக்கோளை காண்பிக்க முற்படுகின்றன ”
தோழர் பி.ஆர்.ராவின் அழைப்பின் பேரில் கவின் கலை கல்லூரிக்கு சென்று அங்கு கண்ட சிற்பத்தின் தாக்கம் மற்றும் ஒளிப்படக் கலைஞனும் மனசாட்சியும் என்ற கட்டுரையில் வசந்த் என்கிற ஒளிப்பட கலைஞரின் பங்களிப்பு பற்றிய குறிப்புகள் இந்த புத்தகத்தில் எழுத்தாளர் செல்வன் அவர்கள் தொட்டிருக்கும் இன்னொரு உச்சம்.
சீனு ராமசாமி அவர்கள் இயக்கிய நீர் பறவை திரைப்படத்தில் உப்பள தொழிலாளர்களின் வாழ்க்கையை ஓர் அளவுக்கு பதிவு செய்திருப்பார். எழுத்தாளர் செல்வன் இன்னும் சற்று அருகே சென்று அந்த நிலப்பரப்பையும் அதில் வாழும் தொழிலாளர்களையும் ரத்தமும் சதையுமாக நம் முன் நிறுத்திருக்கிறார்.
காலத்திற்கேற்ப நவீன உலகில் உலவும் ஒளிப்பட கலாச்சாரத்தை துரித உணவோடு ஒப்பிடும் எழுத்தாளர் செல்வன், இந்த கட்டுரை தொகுப்பிலும் அதையே கடைபிடித்திருப்பது போல் இருந்தது. தொடக்கத்தில் உள்ள கட்டுரைகளில் உள்ள அளவுக்கு பக்கங்கள் பின் வரும் கட்டுரைகளில் காண முடியவில்லை. கட்டுரைகளின் நீளம் சுருங்கி இருப்பதை உணர்ந்தேன்.ஆனால் அது வாசிப்பை எந்த விதத்தையும் பாதிக்கவில்லை. காரணம் நாம் அத்தியாயங்களை வேகமாக வாசித்து முடிக்கிறோம் என்ற மன நிறைவைத் தருகிறது. இது தேவையா இல்லையா என்பது விவாதத்திற்குரியது!
கோட்டாக் நிறுவனம் தனது பிலிம் கேமரா உற்பத்தியை நிறுத்துவத்தைக் கண்டு முதலில் வருத்தமடைந்தேன் என்று சொன்ன பாலுமகேந்திரா டிஜிட்டல் கேமராவில் உள்ள குறைப்பாடுகளை அறிவதற்கு எனக்கு கொஞ்சம் காலம் தேவைப்பட்டது. அவ்வளவுதான் மற்றபடி ஒளிப்பதிவின் கூறுகள் அப்படியேதான் உள்ளன என்று ஒரு நேர்காணலில் கூறுகிறார். “A Separation” என்ற இரானியன் திரைப்படத்தைக் கண்டு தான் எழுதும் தலைமுறைகள் என்ற திரைக்கதையை மெருகேற்ற உந்துதலாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
எழுத்தாளர் செல்வனும் காலத்திற்கேற்ப நம்மை புதுப்பித்தல் அவசியம் என்று சொல்வதோடு மட்டும் இல்லாமல் செயல் வீரராகவும் இருக்கிறார். கைப்பேசியிலேயே ஒளிப்படம் எடுக்கும் கருவி வரம் மற்றும் சாபம் இரண்டுமே என்கிறார். எங்கள் காலத்தில் எப்படி தெரியுமா?
என்று சொல்வதை விட்டுவிட்டு, காலத்தோடு இசைந்து செல்லும் மனப்பாண்மை இவரின் இளமையான மற்றும் முற்போக்கான கலைஞராக நம் முன் நிறுத்துகிறது.
பெருமிதம் கொள்ளாமல் இந்த செய்தியை நமக்கு அளித்துவிட்டு “போக வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. வயதும் கொரோனா தொற்று காலத்தையும் கருத்தில் கொண்டு கொஞ்சம் பொறுமையை கடைபிடிக்கலாம். ” என்ற எண்ணங்களோடு கடைசி பக்கத்தில் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இவரது புகைப்படம் அமைந்துள்ளதை ரசித்தேன்.
“ஒளியால் புது உலகைப் படைப்போம்!” – என்று இறுதியில் வரும் வாசகம் புதிய தொடக்குத்துக்கான உந்துதலை தருவது நிறைவு!
ஜோதிடம் மற்றும் ஓகம் பற்றிய புத்தகத்தை வாசித்து அந்த கலையில் சில காலம் பயணித்து கொண்டிருக்கிறேன் . இந்த புத்தகத்தை வாசித்து பழைய பிலிம் கேமரா வில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை மீட்டு அமைக்கும் பணியில் இருக்கிறேன். இப்படியே ஒவ்வொரு புத்தகமும் ஏதோ ஒரு செயல் பொருளை என்னுள் விதைத்தால் மீதம் இருக்கின்ற 50 புத்தகங்களை எப்போது வாசிப்பது என்பது தான் புலன் படாமல் உள்ளது.
புரட்சியாளர் சேகுவேரா ஒரு பயணத்தால் ஒரு புரட்சியாளன் ஆனான். அவனது வாழ்க்கை ஒரு நாயகனின் வாழ்க்கையாக முழுமை பெற்றது.
எழுத்தாளர் செல்வன் ஒரு மனிதனின் முழுமையை கலைஞனின் வடிவில் அடைந்திருக்கிறார் என்றே திண்ணமாக சொல்லுவேன்.
காலந்தாழ்ந்த வாசிப்புக்கு மன்னிக்கவும்.
ஒளிப்பட அனுபவங்களை எளிமையாக பகிர்ந்த ஆசிரியர் ந.செல்வன் அவர்களுக்கும் புத்தகத்தை சிறப்பாக பதிப்பித்த உயிர் பதிப்பகத்திற்கு என்னுடைய வாழ்த்துகள்.
நாம் இன்று ஆவணப்படுத்தும் ஒவ்வொரு ஆவணமும் எதிர்காலத்துடன் கதைக்கும் காலயந்திரமே. ஆவணப்படுத்துவோம்!
மனிதனின் முழுமையை எந்த மார்க்கத்திலாவது அடைந்துவிடலாம் என்று பகல் கனவு காணும்
-அன்புக்குமரன்
நூல் : ஒளிப்படக்கலையும் கலைஞனும்
ஆசிரியர் : ந.செல்வன்
விலை : ரூ: ₹300
வெளியீடு : உயிர் பதிப்பகம்


