அன்பு மகன் சிறுகதை – சாந்தி சரவணன்
“அப்பா, டாக்டர் கொடுத்த மருந்து சீட்டு எங்கே?” என கேட்டுக் கொண்டே தசரதன் அறைக்குள் வந்தான் ராம்.
“இங்கு இருக்கு பா”, என்றார் தசரதன்.
தசரதன் தபால் துறையில் கணக்காளராக ஓய்வு பெற்று ஆறு மாதங்கள் ஆகின்றன. அவரின் மனைவி ரோஸி. தசரதன் இரண்டாம் ஆண்டு கல்லூரி படிக்கும் போது முதல் வருடம் ரெக்கிங்ல் அறிமுகமானாள் ரோஸி. முதல் சந்திப்பிலேயே அவரின் மனம் அவளிடம் பறி போனது.
ரோஸி எல்லா ஞாயிற்றுக்கிழமையும் தவறாமல் சர்ச்சுக்கு சென்று ஏசுவை தரிசனம் செய்வாள். தசரதன் எல்லா ஞாயிற்றுக்கிழமையும் ரோஸியின் தரிசனத்திற்காக சர்ச்சுக்கு செல்வார்.
மூன்றாம் வருடம் இறுதியில் தான் தசரதன் தன் காதலை ரோஸியிடம் சொல்ல தைரியம் வந்தது. ரோஸிக்கும் தசரதனை மிகவும் பிடிக்கும். தசரதன் தன் காதலை தெரிவிக்கும் போது அதை மனமார்ந்து அன்புடன் ஏற்றுக் கொண்டாள் ரோஸி. இதற்கிடையில் ரோஸி மூன்றாம் ஆண்டு படிக்கும் போது அவளின் வீட்டில் திருமணம் ஏற்பாடுகள் செய்ய முற்பட்டார்கள். ரோஸி தசரதனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என அடம் பிடித்தாள். அவர்களின் பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை. அவர்களின் மதத்தைச் சேர்ந்த ஒருவர் தான் தன் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என உறுதியாக இருந்தனர்.
இனி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடப்பது என்பது சாத்தியமில்லை என உணர்ந்த ரோஸி, “என்னங்க நாம் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்ளலாம்” என்றாள். திருமணம் எளிமையாக நண்பர்கள் சூழ நடந்தது.
தபால் துறையில் தற்காலிகப் பணி, நண்பரின் சிபாரிசு முலம் கிடைத்தது. பின் தேர்வுகள் எழுதி நிரந்தர பணியாளர் ஆனார். திருமணம் முடிந்து இரண்டு வருடம் கழித்து தான் மகன் ராம் பிறந்தான். அந்த இரண்டு வருட திருமண வாழ்க்கை தசரதன் ரோஸி அன்னியோன்யமாக வாழ்ந்தார்கள். மகன் பிறந்த ஓரே மாதத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மகனை வளர்க்கும் பொறுப்பை கணவனிடம் கொடுத்து விட்டுக் கண்ணை மூடி விட்டாள் ரோஸி. பிரிந்த சொந்தமெல்லாம் ஒன்று சேர்ந்தது . தசரதனை மறுமணம் செய்து கொள்ள சொல்லிப் பல தொந்தரவுகள் அவன் குடும்பத்தில். தசரதன் திடமாக மறுத்துவிட்டார்.
“வாரணம் ஆயிரம்” படத்தில் வரும் அப்பா, தசரதன். ராமைத் தவிர வேறு உலகம் இல்லை தசரதனுக்கு.
அப்பா, “டவல் எடுத்து வைச்சிக்கோங்க” என்ற ராமின் குரல் தசரதனை நினைவுகளில் இருந்து விடுவித்தது.
“சரிப்பா”.
“அப்பா, இது நான் ஸ்கூல் படிக்கும் போது உங்கள் பிறந்த நாளுக்கு வரைந்து கொடுத்த ஒவியம். நீங்கள் பத்திரமா எடுத்து வைச்சிருந்தீங்க. அதையும் எடுத்து வைச்சிக்கோங்க பா”
“சரி, பா.
“அப்பா அப்பா”
“என்னப்பா”
“இதுல உங்கள் கல்யாண ஆல்பம், நம்ம இரண்டு பேரும் எடுத்து கொண்ட புகைப்படம் எல்லாம் இருக்கு. உங்களுக்கு போர் அடிக்கும் போது எடுத்து பாருங்கள். இதை நானும் இன்னொரு பிரின்ட் போட்டு எனக்கு வைத்து இருக்கிறேன்” என்றான்.
மகனை நினைத்து சரியான புள்ளைடா …..என் புன்னகைத்துக் கொண்டார்.
“ஒகேவா பா”, என மகனின் கேள்விக்கு, ‘சரிப்பா’ என சொல்லிவிட்டு, பேக்கிங்கில் பிஸியாக இருந்தார்.
அப்பா, “அந்த ஸப்பாரி டிரஸ் நம்ப இரண்டு பேரும் ஒண்ணா ஓரே கலரில் எடுத்தோமே!”
“ஆமாம் பா!”
“அதையும் மறக்காம எடுத்து வைச்சிக்கோங்க. வெளியே போகும் போது போட்டுக்க நல்லா இருக்கும். மருந்து, மாத்திரை, பழைய ரிப்போர்ட் எல்லா பயிலையும் ஒண்ணா வையுங்கள்”.
“சரி டா.”
“முக்கியமா சுடுதண்ணீர் பை, கம்பிளி, ஷோட்டர் எல்லாம் ஒண்ணா வையுங்கள்”.
“டேய் நான் பார்த்துக்கிறேன். நீ முதல இங்கிருந்து கிளம்பு” என்றார் தசரதன்.
சிறிது நேரத்தில் இருவரும் ஒன்றாக வெளியே வந்தனர்.
காரில் ஏறியவுடன் மறுபடியும், ”அப்பா எல்லாவற்றையும் எடுத்துகிட்டீங்களா. அங்கு போனவுடன் எதாவது தேவை என்றால் உடனே எனக்கு போன் செய்யுங்க”.
“டேய் ராம் எனக்கு 60 வயசு ஆகுது. நான் பாத்துக்கிறேன் பா.. நீ கவலைப் படாமல் இரு”.
பதில் இல்லை ராமிடம்
இடையிடையே கைப்பேசி அடித்துக் கொண்டே இருந்தது. மனைவி மஞ்சு தான்.
ஏனோ அவன் கைப்பேசியை எடுக்கவேயில்லை…
இன்னும் 20 நிமிடத்தில் அந்த இடம் வந்து விடும். என் ஆருயிர் அப்பாவை இறக்கிவிட்டு நான் தனியே போக வேண்டும்.
இதுவரை நான் இந்த வெறுமையை உணர்ந்ததில்லை. ஆனால் இன்று என யோசித்தபடி கருப்பு கேட் வாசலில் கார் நின்றது. “அன்னை தெரேசா முதியோர் இல்லம்” என கரும் பலகை இவரிகளை வரவேற்றது.
அப்பாவை கண்கள் கலங்கப் பார்த்து “சாரி பா” என்றான்.
“டேய் முட்டாள், இது நான் எடுத்த முடிவு. மஞ்சுக்கு உன்னோட மகிழ்ச்சியா இருக்க ஆசை. நான் இங்கு மகிழ்ச்சியா இருப்பேன். அவ நான் பார்த்து உனக்கு கட்டி வச்சவ. நல்ல பொண்ணு தான்…போகும் போது அவளை அவுங்க அம்மா வீட்டிலிருந்து கூப்பிட்டு போய், சந்தோஷமாக வாழு. அது தான் எனக்கு வேண்டும்” என்றார்.
ராம் கண்ணீரோடு, “சரி பா” என சொல்லி பிரிய மணமில்லாமல் பிரிந்தான்.
மறுநாள் காலை முதியோர் இல்லத்திற்கு அலைபேசி வந்தது.
“தசரதன் சார் உங்களுக்கு போன்” என்றார் சுந்தர் விடுதி உதவியாளர்.
தசரதன், “இந்த பையன் இராத்திரி எப்போ விடியும் என காத்திருப்பான். அவன் தானே என்று சொல்லியவாறு,
“ஹலோ” என்றார்.
மருமகள் மஞ்சு இணைப்பில், “மாமா, மாமா” என அழுகையோடு.
படபடப்புடன் தசரதன் , “என்னம்மா என்னாச்சு….. ராம் எங்கே…”
மாமா, “அவர் நம்மை எல்லாம் விட்டுட்டுப் போய் விட்டார் மாமா…”
“என்னம்மா, என்ன சொல்ற?” நடுக்கத்துடன் தசரதன்.
“ ஹார்ட் அட்டாக் மாமா…. நான் தப்பு செய்துவிட்டேன் மாமா” என அவள் அந்த முனையில் அழுதபடி சொல்லிக்கொண்டிருக்க ….
கையில் இருந்து போன் நழுவ, அப்படியே மயங்கி விழுந்தார் தசரதன்.