ராம்தங்கம் எழுதிய "புலிக்குத்தி" சிறுகதைகள் புத்தகம் | Ram Thangam's Pulikuthi Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

ராம்தங்கம் எழுதிய “புலிக்குத்தி” சிறுகதைகள் – நூல் அறிமுகம்

"புலிக்குத்தி" சிறுகதைகள் - நூல் அறிமுகம் நம் சிறுவயதில், அக்கம்பக்க சிறுவர் சிறுமியர் எல்லோரும் சேர்ந்து விளையாடும் போது, கூடிப்பேசும்போது நமக்குச் சற்று மூத்த அக்கா, அண்ணன்கள் நம்மிடம் தமக்குத் தெரிந்த கதைகளை, சம்பவங்களை நமக்குக் கூறுவார்களே - அந்தத் தொனியில்…
சூரஜ் யங்டே (தமிழில்: அனிதா பொன்னீலன்) எழுதிய "சாதியைப் பேசத்தான் வேண்டும்" புத்தகம் | Suraj Yengde's Saathiyai Pesathan Vendum (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

சூரஜ் யங்டே (தமிழில்: அனிதா பொன்னீலன்) எழுதிய “சாதியைப் பேசத்தான் வேண்டும்” – நூல் அறிமுகம்

சாதியைப் பேசத்தான் வேண்டும். இப்பல்லாம் யாருங்க சாதி பாக்குறா என்ற கேள்வி பல்முனைகளில் இருந்து கேட்டபடியே இருக்கிறது. ஆனாலும் முன்னெப்போதும் விட தற்போதுதான் சாதி தொழில்நுட்பத்தின் துணையுடன் முன்னிலும் வீரியமாக புதிய தலைமுறை இளைஞி/இளைஞர்களிடமும் புலனக்குழுக்களாகவும், வலையொளிப் பரவலாகவும், எக்ஸ் தளப்…
நூல் அறிமுகம்: ஜெயராணியின் உங்கள் குழந்தை யாருடையது? – அன்புச்செல்வன்

நூல் அறிமுகம்: ஜெயராணியின் உங்கள் குழந்தை யாருடையது? – அன்புச்செல்வன்




மனிதகுலம் வேட்டை சமூக நிலையில் இருந்து விலகி ஆற்றங்கரை நாகரீகங்களாக நிலைபெற்று நிலவுடைமை சமுதாய உருவாக்க காலகட்டத்தில் தொடங்கி, குடும்பம் – தனிச்சொத்து தோற்றவாயில் உறுதிப்பட்டு, நாளது தேதி வரை ஒவ்வொரு மனிதனின் குழந்தையையும் தனது சொத்து – சேமிப்பு முதலியவற்றுக்கான உடைமை வாரிசாகவே கருதி வருகிறது. அதிலும் குடும்பம் என்ற நிறுவனமயப்பட்ட அமைப்பு இறுகி கெட்டி தட்டிப் போன இந்திய/தமிழக சூழலில் தங்களின் குழந்தைகளை ஒரு தனி உயிரியாகப் பார்க்கவோ/கருதவோ நாம் (எந்தப் பெற்றோரும்) முயல்வதில்லை. விரும்புவதில்லை.

நூலாசிரியர் தோழர் ஜெயராணி சொல்வது போல கலீல் ஜிப்ரானின் ‘உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்லர்” என்ற கவிதை ஏற்படுத்திய அதிர்ச்சியையும் அதில் உள்ள உண்மையையும் அதன் விரிவான தளத்தில் நடைமுறை செயலாக்க நிரல்களாகவும் உரையாடல் முகிழ்க்கும் களமாகவும் சிந்தனா வெளியாகவும் நம்முன் வைக்கிறது இந்நூல். 13 கட்டுரைகளும் குழந்தை வளர்ப்பென்ற பெயரில் நாம் தற்போது மேற்கொள்ளும் குழந்தைகள் மீதான அடக்குமுறையையும் குழந்தை வளர்ப்பில் உட்பொதிந்துள்ள ஆதிக்க மனோபாவத்தையும் நமக்கு உறைக்கும் வகையில் எடுத்துக் கூறி, அதில் பெற்றோராகிய நாம் தவறும், தடம் மாறும் கணங்களையும் இடங்களையும் சுட்டிக்காட்டி அதற்கான மாற்று நடைமுறைகளையும் முன்வைக்கிறது இந்நூல்.

கட்டுரைகள்வழி இந்நூல் பேசும் உண்மைகள் நம்மை முகத்தில் அறைகிறது. நம் குழந்தைகளை பாதுகாக்கிறோம் – நான் அனுபவித்த கஷ்டங்களை என் பிள்ளைகள் அனுபவிக்கக்கூடாது – போன்ற சால்ஜாப்புகளை சொல்லியபடி> குழந்தைகளை ‘சவலை”ப் பிள்ளைகளாக்கி – அதன் வழியே – எதிர்கால சமூகத்தையே ‘சவலை” சமூகமாக்கிவிடும் ‘சமூகவிரோத” நடவடிக்கையே நமது தற்போதைய குழந்தை வளர்ப்பு முறை என்று விரிவாக முன்வைப்பதோடு> நம் வளர்ப்பு முறை எதை நோக்கி – எவ்வழி இருக்கவேண்டும் என்ற வழிமுறையையும் காட்டிச் செல்கிறது பிரதி.

இப்பிரதியில் முக்கியமான புள்ளிகளாக நான் கருதுவது – ஒரு தேர்ந்த மருத்துவராக/சிறந்த மனநல உளவியல் ஆலோசகராக முக்கியமான மாற்று வளர்ப்பு முறைகளை அறிமுகப்படுத்தும் நூலாசிரியர் – பகுத்தறிவு, சமூகநீதி, பால், இனம், சாதி, மதம், மொழி முதலிய அனைத்துக் கூறுகளிலும் சமத்துவம் ஆகிய கருத்தியல்களையும் வாழ்வியல் நடைமுறைகளையும் எவ்வாறு குழந்தைகளிடையே விதைப்பது போன்ற செயல்முறைகளையும் நம்மை உலுக்கி எடுத்து உரைத்துச் செல்கிறது. இதுவே பிற குழந்தை வளர்ப்பு நூல்களுக்கும் இப்பிரதிக்குமான முதன்மையான வேறுபாடாக முன்னின்று இதனை அறம் சார்ந்த நூலாகவும் உருமாற்றுகிறது.

குழந்தைமையைத் தாண்டிய/பதின்பருவத்தை தாண்டிய குழந்தைகளைக் கொண்டிருக்கும் பெற்றோர்களும் கூட கண்டிப்பாக வாசித்துணர வேண்டிய நூலிது. வாசிப்பது மட்டுமின்றி குழந்தை வளர்ப்பில் செயல்படுத்தப்படவேண்டிய நடைமுறைகளை தன்னுள் கொண்டிருக்கும் தவிர்க்கவியலா வாழ்வியல் நூலாகும்.

– அன்புச்செல்வன்

நூல் : உங்கள் குழந்தை யாருடையது?
ஆசிரியர் : ஜெயராணி
விலை : ரூ. ₹180.00
வெளியீடு : தமிழ்வெளி
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

நூல் அறிமுகம் : பிரேமின் “நந்தன் நடந்த நான்காம் பாதை” – அன்புச்செல்வன்

நூல் அறிமுகம் : பிரேமின் “நந்தன் நடந்த நான்காம் பாதை” – அன்புச்செல்வன்




நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசித்த கலகப் பிரதி. வறண்ட சொல்லாடலில் இல்லாமலும், கோணங்கி போல் சுருள் மொழியின்றியும், அதே சமயம் கவித்துவம் குன்றா சொற்செட்டுடனும் பிரதி கதையாடுகிறது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு அனுபவம், வெவ்வேறு தளம். பொன்னியின் செல்வனை ஆகச் சிறந்த தமிழ் இலக்கியப் பிரதிகளில் ஒன்றாகக் குறிப்பிட்டுக் கொண்டாடும் தன்மை குறித்த எள்ளல் விரவிக் கிடக்கும் கதை ‘பொன்னியின் செல்வம்’. முகலாய செம்மலருக்கும் கூடல் நகர் கயல்விழிக்கும் (மீனாட்சி) நடக்கும் ஒருபால் முயக்கத்தை அவரவர் வளர்க்கும் கிளிகள் வழி சொல்லிச் செல்வது ‘இரட்டைக் கிளிகள் எழுதிய காவியம்’.

கூட்டுப் புணர்வு, பால்திரிபுறும் நிலை முதலிய ‘சமூக அதிர்ச்சி’ சொல்லாடலைத் தமிழ் தொன்ம கதையாடல் வழி அற்புதமாகப் பேசிச் செல்கிறது “யோகினி கோட்டம்”. பெண்ணாக உணரும் ஆணை, ஆண் தன்மையை உணரச் செய்வதோடு அவரது பெண்மையையும் அங்கீகரித்து கடைசியில் சமூகம் அவருக்கு அளித்த கொடுந் தண்டனையிலிருந்து தப்பிக்க அவரையே கொலை செய்து விடுதலை அளித்த பெண் எழுத்தாளர்/நாடக நடிகை பற்றிய விவரிப்பு கதை “அல்குல் அடவி என்கிற காதல் கானகம்”. நக்சல்கள்/மாவோயிஸ்டுகள் என்று அடையாளப்படுத்தப்படுகிற பகுதியிலிருந்து வந்த பழங்குடி ஆய்வு மாணவி தனது அரசியல் தேர்வு எதுவாக இருக்கவேண்டும் என்று உணரும்போது அதிகாரம் அவரை என்ன செய்கிறது என்று முகத்தில் அறைகிறது “தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை”. தீவிர இடதுசாரியம், மாற்று அரசியல் பேசிய எழுத்தாளர்களின் பிற்கால கருத்தியல் சீரழிவு பற்றி உள்ளார்ந்த நகைச்சுவையுடன் கதையாடுகிறது “விருப்பக் குறிகள்” (‘இளநி வேதிகா’ என்று கதையில் வரும் எழுத்தாளர் சாரு நிவேதிதா இல்லைதானே பிரேம்).

“நந்தன் நடந்த நான்காம் பாதை” கதை தொகுப்பின் சிறந்த வெளிப்பாடாக நான் கருதுகிறேன். தற்போதைய இந்தியாவின் ஆபத்தான இந்துத்துவம், வைதீகம், சனாதனம் போன்றவற்றை ரோகித் வெமூலா தற்கொலை, கல்புர்கி, தபோல்கர், பன்சாரே கொலைகள், முஸாபர்நகர் இசுலாமியர் மீதான படுகொலை தாக்குதல்கள், தலைநகர் பல்கலைக்கழகத்தில் எழுந்து வரும் மாற்று அரசியல் போக்கினை அழிக்க முற்படும் ஆதிக்க சக்திகள், தலித்தாக உணரும் தருணம், அடையாளச் சிக்கல் போன்ற பல விசயங்களைப் பேசி கபாலி, உபாலி, நந்தன் வழி செல்கிறது பிரதி. சங்கமித்ரையின் மகன் இளையராஜா வைதீகத்தால் எரிக்கப்பட்ட நந்தனின் மறைக்கப்பட்ட இசை வல்லமை குறித்துப் படமெடுக்க முனைவது குறியீட்டின் உச்சம். பிரேமுக்கு அன்பு முத்தங்கள். LGBT, தலித்தியம், மதச்சார்பின்மை, தீவிர இடதுசாரியம், தமிழ் தேசியம், அமைப்பு சாரா உதிரி தொழிலாளர் வர்க்கம் என அனைத்து கதைகளும் ஒடுக்கப்பட்ட/விளிம்பு நிலை/சமூகப் புறக்கணிப்புக்களானவர்களைப் பேசும் பிரதி. தற்போதைய இந்தியச் சூழலில் புதிய வேகத்துடன் அனைத்துத் துறைகளிலும் கட்டமைக்கப்பட்டு வரும் நவ_இந்துத்துவம், வைதீக மறு உருவாக்கம், சாதீய பெருமிதம், பன்மைத்துவத்தை அழிக்க முனையும் ஒற்றை அடையாளம் போன்றவற்றுக்கு எதிரான மாற்று அரசியல் கலக இலக்கியப் பிரதியாக வாசிக்கிறேன் இக்கதைகளை.

– அன்புச்செல்வன்

நூல் : 
ஆசிரியர் : 
பதிப்பகம் : எதிர் வெளியீடு
விலை : ₹160.00
96, நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி
642 002.
தொடர்பு எண் : 99425 11302