நூல் அறிமுகம்: ஆசுவின் தோழமை என்றொரு பெயர் – அன்புமணிவேல்
நூல்: தோழமை என்றொரு பெயர்
ஆசிரியர்: ஆசு
வெளியீடு: வாசகசாலை
பக்கங்கள்: 115
விலை: 150
ஒரு கவிதை என்னவெல்லாம் செய்யக்கூடும்…
புன் முறுவல் சிந்த வைப்பதாக…
வெடிச் சிரிப்பைப் பற்ற வைப்பதாக…
மெல்லியதாயொரு அழுகையைக் கிள்ளிவிடுவதாக…
கொஞ்சம் பாரமேற்றி வேடிக்கை செய்வதாக…
முடிச்சொன்றை அவிழ்க்கவோ.. தொடுக்கவோ செய்வதாக… இப்படி எதையேனுமொரு அதிர்வைத் தந்து நம்மின் அந்த நேரத்து நொடியைக் கொஞ்சம் காவு கேட்கலாம்.
வாசிக்க முற்படுகையில் நாமாக நிற்பவர்களை வாசித்த பின்பு அதுவாகி நிற்க வைக்கும் ஒரு யுக்தியும் உண்டு. இந்தக் கடைசி வகையைச் சேர்ந்தது தான் .. இந்த ” தோழமை என்றொரு பெயர்’.
நடுரோட்டில் தூக்கியெறியப்பட்டு வாகனத்திற்குள் மிதிபட்டுக் கிடக்கும் ஒற்றைச் செருப்பை.. குப்பையில் சேர்த்திருந்தால் அதன் வாதை போக்குமொரு தோழமையை அதற்குத் தந்திருக்கலாமே என்று செருப்பின் வாதைக்குக் கவலையாற்றுகிறார். மண் புழுவின் வலி எழுதுகிறார்.
ஒரு நகரத்துச் சாலையைக் கடக்கக் கூட யாரோ ஒரு துணை நமக்குத் தேவையென்பதும்… ஒரு குருவியின் பறத்தலுக்குக் காற்றின் அவசியமும்.. ஒரு மீன் கொத்தியிடமிருந்து தப்பிப் பிழைக்கவென குட்டையின் பாசிக்குள் ஒடுங்குகிற அந்த மீனுக்கு.. தோழமையைத் தருகிற அந்தக் குட்டையின் அரவணைப்பும்…
ஒரு தோழமையென்பது எங்கிருந்தெல்லாம் நீள முடியுமென்று.. அவரின் அன்றாடங்களில் அவரைக் கடக்கின்ற எதுவொன்றையும் எடுத்துக் காட்டியிருக்கிறார்.
‘எழுதியவை கரை சேர்ந்தும் இந்த நதியை விட்டுப் போக மனமில்லை’ என்ற வரிகளில் எழுத்துக்கும் ஆசிரிருக்குமான தோழமையும்…
இந்த நூலின் மொத்தப் பக்கத்திலுமான வரிகளிலும் சக உயிர்கள் மீதான ஆசிரியரின் பார்வையுமாக.. தோழமை உணர்வுக்குள் வேரோடிக் கிளைத்திருக்கும் இவரின் மனப்பாங்கு பழுத்த பதமாகப் பளிச்சிடுகிறது.
அஃறிணை உயர்திணை தாண்டி நீயோ, நானோ, செருப்போ, எறும்போ, காக்கையோ, குருவியோ, மரமோ, இலையோ உயிர் பேதம் ஏதுமின்றி அத்தனைக்கும்.. ஒரு தோழமைக் கரத்துக்கான அவசியத்தையும் தேவையையும் சொல்லுவதோடு…
இப்படியான அச்சங்களுக்குள் சிக்கிக்கொண்டு மிரண்டு நிற்கும் வாழ்க்கையை.. தோழமை உணர்வோடு இப்படிப் பற்றிக்கொள்கையில் அதே வாழ்க்கை எத்தனை நம்பிக்கைக்குரியதாக மாறிவிடுகிறது என்பதையும்…
துவளும் மனங்கள் விழித்துக் கொள்ளும் விதமாக தன் கவிதைக் கரங்களில் நம்பிக்கை நீட்டியிருக்கிறார். தேவைப்படும் இடத்தில் தேவைப்படும் தோழமையைத் தருவதன்றி.. யாருக்குத் தேவையென்று ஆராய்ச்சி தேவையில்லை எனும் வாழ்தலை வாழ்தலாக நுகரும் கலையை தனக்குத் தெரிந்த மொழியின் வழியே பாடமாக்கியிருக்கிறார்.
தெருவே வைதாலும் தினமும் தெரு நாய்களுக்குப் படையலிடும் பாட்டியையும்… எதிர்ப்படும் நாய்களுக்குத் தர வேண்டி பேண்ட் பை நிறைய
டைகர் பிஸ்கட்டுகளோடு அலையும் “பிஸ்கட் தாத்தா” வையும்.. வெஞ்சனத்துக்கென இருக்கும் மிக்சரை வேடிக்கை செய்யும் காக்கைக்கும் பங்கு வைக்கும் சித்தாளையும்… நானறிவேன்.
காக்கைக் குருவி ஆடு மாடுகளுக்கு வீட்டு வாசலில் தண்ணீர்த் தொட்டி நிரப்புவதும்… எறும்பு தின்ன வேண்டி பச்சரிசிக் கோலமிடுவதுமாக.. நமது மூத்தோரையும் நாமறிவோம்.
இதுவெல்லாம் தானே தோழமை. இவர்களெல்லாம் தானே தோழமையின் ஊற்று. வாழ்க்கைப் பாதையின் நீண்ட நெடிய பயணத்தில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தோழமைச் சங்கிலியால் மட்டுமே பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்திய வகையில்..
இனி.. என்னைச் சுற்றிலுமான எந்தவொரு உயிரின் தவிப்பையும் கவனிக்கத் தவறக் கூடாது என்ற நினைப்பை வலுவாக்கியிருக்கிறது..
இந்த நூலின் வாசிப்பு. எனக்குப் பிடித்ததென்று எந்தவொரு கவிதையையும் நான் இங்கு எடுத்து நீட்டப்போவதில்லை.
தோழமை நீட்டுவதற்குப் பாகுபாடு தேவையில்லை என்றுரைக்கும் மொத்தக் கவிதைகளிலும் ஒன்றிரண்டை உறுவித் தந்து.. இந்தப் படைப்புக்குள் ஒரு பாகுபாட்டினைப் புகுத்தாது..
அத்தனை கவிதைகளோடும் தோழமையாகிறேன் நான்.