நூல் அறிமுகம்: அக்குஹீலர், அ. உமர் பாரூக்கின் மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன? – து.பா.பரமேஸ்வரி
பிரபஞ்சத்தின் உயிர்கள் தோன்றிய காலம் முதல் மருத்துவம் என்கிற ஒன்று உயிர்களுக்கு அவசியமற்றதாகவே இருந்தது காரணம் ஆரோக்கியமின்மை என்பதே உயிர்களின் தோன்றுதலில் இருந்திரவில்லை பூர்ண ஆரோக்கியத்தின் நிறைவைக் கொண்டே உயிர் யாவும் படைக்கப்பட்டது. அதன் பொருட்டு வாழ்வியலில் மருத்துவம் என்கிற ஒன்று தனித்து தேவைப்படவில்லை. இயற்கை சார் வாழ்வியல் முறையிலேயே தனக்கான ஆரோக்கியத்தை மேம்படுத்திய வண்ணம் அனைத்து உயிரினங்களும் பிறந்தும் வாழ்ந்தும் பரிபூரண வாழ்க்கைக்குப் பின்பான மரித்தல் என்கிற இறுதி நிலையை எட்டியும் தமக்கான பிரபஞ்ச வாழ்வை வாழ்ந்து முடித்தன. இது மனித குலத்திற்கும் பொருந்தும். இயற்கையின் பிரம்மாண்ட படைப்புகளில் மனித இனத்தைத் தனித்துப் பார்க்க தேவையில்லை. படைப்பாற்றலைப் பொறுத்த மட்டில் பிற உயிர்கள் போலவே மனித படைப்பிற்கும் வாழ்வதற்கான அனைத்து ஆதாரங்களையும் வழங்கியே ஆசிர்வதித்தது. ஆரோக்கிய நிலைப்பாட்டிலும் பிற உயிர்கள் போலவே மனிதனுக்கும் பரிபூர்ண ஆரோக்கியம் என்பது வழங்கப்பட்டுள்ளது. படைப்பின் ஓரிறிவு முதல் ஐந்தறிவு வரையிலான அனைத்து உயிரினங்களின் சிறப்புக்களையும் உணர்ந்திருந்தான் மனிதன். காலத்தின் பரிணாமம் சுயநலப் போக்கில் மனிதன் இயற்கை சார்ந்த வாழ்வியல் சிலவற்றிலிருந்து விலகி ஆரோக்கியத்தை இழக்கலானான். அதன் விளைவே சிலபல உடல் தொந்தரவுகளுக்கு ஆளாகினான். இயற்கை வாழ்வியலின் வழியே தமது தொந்தரவுகளுக்கான தீர்வைக் கண்டறிந்தும் கடைபிடித்தும் தொந்தரவுகளைச் சரி செய்து இழந்த ஆரோக்கியத்தை மீட்கலானான்.
காலப்போக்கில் விஞ்ஞானம் என்கிற மனித அறிவியலின் வளர்ச்சியில் உடல் சார்ந்த இயற்கையான மெய்ஞானத்தைச் சிறிது சிறிதாக இழக்கத் துவங்கினான் மனிதன். இயந்திரங்கள் கருவிகளைச் சார்ந்து வாழ பழகி உடலின் அதீத நிலையான உணர்தல் என்கிற நுட்பத் திறனை முற்றிலுமாக மறந்துப் போனான். பொருள் சார் வாழ்வியலுக்குள் புகத் தொடங்கினான். இயல்பாய் சரியாகும் உடல் தொந்தரவுகளை மருத்துவம் என்கிற பெயரில் வணிக மயமாக்கி பொருள் ஈட்டும் கீழ்மை நிலைக்கு ஆளானான். இயற்கை மருத்துவத்தை மறந்து செயற்கையான இரசாயன மருந்துகள் பல தயாரித்து மனித குலத்தின் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவித்தான். இதன் விளைவாக இத்தனை காலம் கொண்டாடிய கிருமிகளையும் பூச்சிகளையும் புழுக்களையும் நோய்க்கான காரணியாக நினைத்து இயற்கைக்கு எதிரான இரசாயனங்களைக் கொண்டு அவற்றைக் கொல்ல முற்பட்டான். கிருமிகளையும் புழுக்களையும் பிற உயிரினங்களையும் கொண்டாடிய அதே மனிதன் இவைகளுக்கு எதிரான போர் கொடியைப் பிடிக்கலானான். கிருமிகள் நமது நண்பர்கள் என்பதை மறந்து அவைகளைக் கண்டு அஞ்சி ஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டதே வருத்தத்திற்குரிய விஷயம்.
இயற்கையின் அறிவிப்பில் மருத்துவத்தைப் கண்டறிந்த நமது மூதாதையர் எந்தவித கருவிகளின் துணையின்றி தமது மெய்ஞானத்தால் உணர்தலின் அதீத நிலையில் உடலின் இயங்கியலை அறிந்திருந்தனர். இன்றும் அவர்களால் கண்டறியப்பட்ட அநேக மருத்துவ குறிப்புகள் காண கிடைக்கின்றன.
இதைவிட மற்றொரு பகடி என்னவென்றால் மனிதனின் தவறான வாழ்வியல் முறையால் உண்டாகும் கழிவுகளே நோய்க்கான காரணம் என்பதை அறியாது கிருமிகளால் தான் நோய்கள் உண்டாகின்றன என்கிற தவறான புரிதல் 1700 களில் நுண்ணறிவியலாளர் லூயிஸ் பாஸ்டியரின் கிருமிகளுக்கான ஆய்வில் கிருமிகளால் தான் நோய்கள் உண்டாகின்றன என்கிற கிருமி தத்துவத்தை மக்கள் மத்தியில் கிருமிகளுக்கு எதிராக அறிமுகப்படுத்தினார். இந்த ஆய்வறிக்கைத் தவறானது என்றறிந்திருந்த டாக்டர் ஆண்டனி பீச்சாம்ப் வியன்னா பல்கலைக்கழகத்தில் பல விஞ்ஞானிகள் பேராசிரியர்கள் முன்னிலையில் இறைச்சித் துண்டு ஒன்றைக் கொண்டு கிருமிகள் என்பவை கெட்டுப்போன கழிவிலிருந்து மட்டுமே உண்டாகும், நோய்களுக்குக் காரணம் கிருமிகள் அல்ல என்பதை நிரூபித்துக் காட்டினார். பிற்காலத்தில் அவருடைய இந்த ஆய்வின் அறிக்கையை மருத்துவ உலகம் இருட்டடைப்பு செய்தது. லூயிஸ் பாஸ்டியரின் கிருமிகளுக்கு எதிரான தத்துவமே இன்று வரை ஆங்கில மருத்துவம் முதற்கொண்டு பல மரபு வழி மருத்துவங்களும் பின்பற்றி வருகின்றன மக்கள் மத்தியில் பரப்பியும் வருகின்றன.இதற்கு பின்பாக மிகப் பெரிய மருத்துவ அரசியல் உள்ளதை மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இதன் தொடர்ச்சியாக நோய்களுக்கான காரணியாகக் கூறப்படும் கிருமிகளைக் கண்டறிய ஆங்கில மருத்துவத்தால் தோற்றுவிக்கப்பட்டதே கிருமிகளை ஆராயும் மருத்துவ ஆய்வுக் கூடங்கள். உடல் சார்ந்த இன்ன பிற அறிவியல் பூர்வமற்ற ஆய்வுகளையும் அங்கு தான் நடத்தின. இவை அமெரிக்கா போன்ற உயர் தொழில்நுட்ப கருவிகளை உலகிற்கு அறிமுகப்படுத்தும் நாடுகளில் வெகுவாகத் தோற்றுவிக்கப்பட்டன.
கிருமிகள் தான் நோய்க்குக் காரணம் என்கிற சர்ச்சை ஒரு புறம் இருக்கட்டும், இன்றைய ஆங்கில மருத்துவமும் வணிக நோக்கம் கொண்ட மருந்து கம்பெனிகளும் ஆய்வுக்கூடங்களை நோயாளிகளுக்கு உதவ பயன்படுத்தாமல் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலேயே பலவித பரிசோதனைகளைத் தேவையின்றி கட்டாயப் பரிந்துரைப்பு செய்து வருகின்றன.
மருத்துவம் என்பது புனிதத் தன்மையிலிருந்து விலகி சுயலாபத்திற்கான அரசியலாக இயற்கைக்கு எதிரான செயல்பாட்டாக மாறி வருகிறது என்பதே இன்றைய மருத்துவ நிலை.
இப்படியாக, ஆய்வுக்கூடங்களில் நிகழும் அக்கிரமங்களை மனித உடலிற்கு எதிரான செயல்களைப் பற்றிய உண்மை நிலையை ஆய்வுக்கூடங்களின் போலித்தனத்தை, மறைக்கப்பட்ட இரகசியங்களை, நோயாளிகளை ஏமாற்றி பணம் பறிக்கும் வன்மத்தைப் புடம் போட்டு சமூகத்தின் பார்வைக்கு விரியப்படுத்துகிறது அக்குஹீலர் எழுத்தாளர் அ உமர் பாரூக் அவர்கள் எழுதிய “மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன?” என்கிற இந்த மருத்துவ நூல்.
மக்கள் மறந்து போன மரபு வழி மருத்துவங்களின் நோயறிதல் முறைகளைப் பற்றியும், மனித உடலின் மொழியையும், அதன் அடிப்படை இயக்கத்தையும், மரபு வழி மருத்துவங்களில் ஒன்றான அக்குபங்சர் மருத்துவத்தைப் பற்றியும் 22 மருத்துவ நூல்கள் இதுவரை எழுதியுள்ளார். இன்றைய காலகட்டத்தில் மக்கள் வருமானத்தின் பெரும் பகுதி மருத்துவ செலவுகளாகவே வாய்த்துவிடுகிறது,அதிலும் ஆய்வுக்கூட பரிசோதனைகளுக்காவே அதிகமான பணம் விரயமாகிறது என்கிற இன்றைய மருத்துவ நிலையை கருத்தில் கொண்டே இந்நூலை ஆசிரியர் எழுதியுள்ளார்.
12 பகுதிகளைக் கொண்ட இத்தொகுப்பில் ‘இரத்தக் கறையோடு எழுதுகிறேன்’ என்கின்ற முன்னுரைப் பகுதியில் ஆய்வுக்கூட ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஆசிரியர் ஆய்வுக்கூடங்களில் தாம் கண்டு அதிர்ந்த பல உண்மைகளையும் ஆங்கில மருத்துவத்திலிருந்து மரபு வழி மருத்துவத்தின் பக்கம் திருப்பிய அந்தச் சம்பவத்தை இங்கு நூலின் வாயிலாக மக்கள் வெளியில் போட்டுடைக்கிறார். ஆங்கில மருத்துவத்தை நம்பி வரும் ஒவ்வொரு நோயாளியின் இரத்தக்கறைகள் பக்கம் ஒவ்வொன்றிலும் படிந்திருப்பதை இந்நூல் வாசிக்கும் போது உணர முடிந்தது.
முதற் பகுதியான ‘அறிவியலின் எதிரி’ என்கிற அத்தியாயத்தில் ஆண்டனி பீச்சாம்பின் கிருமி பற்றிய ஆய்வின் உண்மைத்துவத்தை சரியான புரிதலை மக்களுக்குத் தெளியப்படுத்தாமல் அன்றே மழுங்கடிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டும் அத்யாயம் மருத்துவ ஆய்வு கூடங்கள் ஆங்கில மருத்துவத்தின் அடிப்படை அஸ்திவாரம் என்றும் நிரூபிக்கப்பட்ட அறிவியல் பூர்வமானவை என்றும் பிதற்றுவதும், மரபு வழி தொன்மையான மருத்துவங்களின் நாடி பரிசோதனை கலைகள் அழிக்கப்பட்டு வருவதற்கான அடிக்கோல் இந்த ஆய்வுக்கூடங்களே என்பதையும் குறிப்பிடுகிறார்.
ஆய்வுக்கூடங்களின் வியாபார யுத்தியின் அடிப்படையிலான யூக முடிவுகள், ஆய்வுக்கூடங்களின் உடற் பரிசோதனை சார்ந்த குழப்பங்கள் போன்ற முரண்பாடுகளைப் பேசும் “ஆரோக்கியம் எவ்வளவு ரூபாய்?” என்கிற அத்தியாயம் ஆய்வுக்கூடங்களில் மறைக்கப்பட்ட பல இரகசியங்களை வெளிக்கொணர்கிறது. அதாவது ஆய்வு கூட பரிசோதனைகளை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கும் மருத்துவர்கள் ஆய்வுக்கூடங்களிலிருந்து 40 முதல் 70 சதவீதம் நோயாளிகளின் பரிசோதனைகளுக்காக ஆய்வுக்கூடங்களுக்கு வழங்கும் கட்டணங்களிலிருந்து கமிஷனாகப் பெறுகின்றனர் என்கிற இன்றைய மருத்துவ நிலையை பேசுவதோடில்லாமல் ஆய்வுக்கூடங்களில் பரிசோதனை ரிப்போர்ட்டுகளில் காட்டப்படும் நார்மல் வேல்யூவின் கணக்கீடுகள் யாவும் கால்குலேட்டரின் கணிப்புகளால் வழங்கப்படும் யூக முடிவுகளே, அதற்கான சான்றாக ‘பேஷன் டெஸ்ட், சிங் டெஸ்ட்’ போன்ற ஆய்வுக்கூட இரத்தப் பரிசோதனை முறைகள் பற்றிய உண்மையை எடுத்துரைக்கிறது இரண்டாம் அத்தியாயம்.
மனித உடலின் ஒப்பற்ற ஆற்றல் உருவாக்கமான இரத்தத்தைத் துச்சமாக வீணாக்கும் இந்த ஆய்வுக்கூடங்களின் அலட்சியத்தை இந்த அத்தியாயத்தின் வாயிலாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டது பாராட்டிற்குரியது.
பரிந்துரைக்கப்பட்ட பரிசோதனைகள் தேவையற்றதாக இருந்தும் நோயாளிகள் அதற்காக வருத்தப்படாமல் பணம் போனா போச்சு நோய் இல்லை உடல் நலமாய் இருப்பதே போதும் என்கிற பொது புத்தியில் ஆறுதல் அடைய பழகி விட்டனர் என்கிற மக்களின் மனநிலையும்,
“மருத்துவ அறையை பொருள் ஈட்டும் அறையாக மாற்றாதே…”
மருத்துவமனைக்குள் நோயுடன் வருபவர்களைக் காசு காய்க்கும் மரமாக உலுக்காதே!”
என்கிற ஆங்கில மருத்துவத்தின் தந்தை டாக்டர் ஹிப்போகிரேட்டிஸின் வார்த்தைகள் உண்மையாகி வருவதுமே ஆசிரியரின் இந்நூல் படைத்ததற்கான உந்துதல் என்று கருதுகிறேன்.
ஆய்வுக்கூட பரிசோதனைகள் யாவும் வியாபார மயமானதாக மட்டுமே இருந்திராது சில அரசு பரிசோதனைக் கூடங்கள் உண்மையான பரிசோதனையைச் செய்து வந்தாலும் உடலில் செய்யப்படும் ஆய்வுக்கூட பரிசோதனைகளின் முடிவுகள் என்பவை எப்போதும் ஒரே தன்மையில் இருக்க வாய்ப்பில்லை ஏற்ற இறக்கத்திற்கும் மாறுதலுக்கும் உட்பட்டதே.
மனித உடலறிவியலை பல ஆய்வகத் தரவுகளின் வழியே விளக்கும் அத்தியாயமாக “மாற்றமும் ஏமாற்றமும்” பகுதி. இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், இரத்தத் தட்டுகள், ஹீமோகுளோபின் ஆகியவற்றின் எண்ணிக்கை மற்றும் சிறுநீரகத்தில் கிரியேட்டனின் அளவுகோல் மனித உடலின் இயங்கு தளத்தில் நொடிக்கொரு முறை மாறுதலுக்குரியவை. இந்த அளவுகோல்களைக் கொண்டு ஒரு நபரை நோயாளியாகக் கருதி விட முடியாது என்கிற அடிப்படை உடலியங்கியலை விளக்குகிறது அத்தியாயம். பல லேபுகளில் ஒரே நபருடைய சில மணிநேர வித்தியாசத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனை ரிப்போர்ட் முடிவுகளின் தரவுகள் புரிதலுக்காகப் பக்கங்களில் பதிவிடப்பட்டுள்ளது. மனித உடல் ஒவ்வொன்றும் தனித்துவமானது நொடியொன்றிலும் மாறுதலுக்குட்பட்டது என்கிற ஆழமான புரிதலை வழங்குகிறது அத்யாயம். இப்படியான ஆய்வக யூகக் கணிப்புகளை நம்பி நோயாளிகளுக்கு எங்ஙனம் சிகிச்சையளிப்பது என்பதே ஆசிரியரின் ஆதங்கம்.
மணிப்பால் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மற்றும் இதய நோய் சிறப்பு மருத்துவருமான பேராசிரியர் டாக்டர் ஹெக்டே அவர்கள்,
“நோயாளிகளின் படுக்கையருகே கற்பதே மருத்துவத்தின் அடித்தளம்…”
என்றும்..
“உடலின் சிறு சிறு மாற்றங்களைப் பெரிதுபடுத்தி பயமுறுத்துகின்றன உயர் தொழில் நுட்ப ஆய்வுக் கருவிகள் இதுவே, ஒரு மாபெரும் வணிகமாகச் செழிக்க வைக்கிறது.”
மேலும்
“நோயாளியுடன் மருத்துவருக்கு நேரடி பேச்சுப் பகிர்வு இல்லாமையால் அமெரிக்க மருத்துவம் செத்து வருகிறது.”
என்கிற டெக்ஸால் இதய மருத்துவமனை இதழின் தலையங்கத்தையும் சுட்டிக்காட்டுகிறது.
“சராசரி என்பதே கற்பனை” என்கிற நான்காவது அத்தியாயத்தின் பக்கங்கள்.
“சூழலுக்குத் தகவமைத்துக் கொள்ளும் தன்மை மனித உடலிற்கு உண்டு. வாழும் நாட்டின் தட்பவெப்பம் உடலின் அக இயக்கம் உண்ணும் உணவுகளின் தன்மை போன்ற புற அக காரணிகளால் இந்த சராசரி அளவுகள் மாறுபடலாம்.”என்கிற டார்வினின் பரிணாமக் கொள்கையையும் பதிவிட்டுள்ள ஆசிரியர் நோயாளிகளின் நோய்களுக்கான காரணம் பரிசோதனை கூடங்களில் வழங்கப்படும் முடிவுகளிலிருந்து தான். சராசரி என்ற மனித கணிப்பு என்பது மனித உடலில் ஒருபோதும் கிடையாது என்பதையும் இப்பகுதியில் தெளிவுப்படுத்துகிறார்.
ஆங்கில மருத்துவம் குறிப்பிடும் மனித உடலின் சராசரி என்பவை எவ்வாறு துல்லியமானதாகவும் ஏற்றுக்கொள்ளும் படியாகவும் இருக்கும் என்கிற கேள்வியையும் இந்த அத்யாயத்தின் இறுதியில் முன் வைக்கிறார்.
இந்த பரிணாமம் ஒவ்வோர் மனித உடல் உறுப்புகளில் வளர்ச்சி மற்றும் இரத்தத்தின் கொள்ளவுகளில் மட்டும் மாறுபடாமல் உடலின் வெளிப்புற உறுப்புகளான வலது இடது கைகள், கால்கள் மற்றும் கண்கள் என தனித்தனியே பரிசோதித்தால் இரத்த அழுத்தத்தின் மாறுபாட்டை உணர முடியும் என்கிற உடலின் இயக்க நெறியையும் கற்பிக்கிறது அத்தியாயம். அதுமட்டுமில்லாமல் ஆய்வுக்கூடங்களில் பரிசோதனைக்குப் பின்பு வழங்கப்படும் ரிப்போர்ட்டுகளின் கீழ்ப்பகுதியில் இது வெறும் கருத்து, இந்த முடிவுகளோடு உடல் அறிகுறிகள் ஒத்துப்போனால் பயன்படுத்துங்கள் என்கிற குறிப்பு அச்சிடப்பட்டிருக்கும் விவரத்தைச் சுட்டிக்காட்டும் ஆசிரியர் தற்போது பெரும்பாலான ஆய்வுக்கூடங்களில் இப்படி அச்சிடப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளதையும் அத்தியாயத்தின் இறுதியில் பதிவிட்டுள்ளது வாசகர்களுக்கு பரிசோதனை ரிப்போர்ட்டுகளைப் பற்றிய புரிதலை ஏற்படுத்துகிறது.
ஆய்வுக்கூடங்களில் சிரை என்கிற அசுத்த இரத்தம் கடத்திச் செல்லும் இரத்த நாளங்களிலிருந்து பரிசோதனைக்குட்படுத்தப்படும் இரத்தத்தைக் கொண்டு நோயின் தன்மையை துல்லியமாகக் கணித்திட இயலாது. காரணம் உடலின் இரத்த நாளங்கள் சிரை மற்றும் தமணி என இரண்டிலும் இரத்த சுழற்சி நடைபெறும். அதாவது நொடியொன்றிலும் கழிவுகள் உருவாவதும் அவை சுத்திகரிக்கப்படுவதுமான இரு வேறு சுழற்சிகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும் என்பதே உடலின் அடிப்படை இயங்கியல். இதில் பரிசோதனைக்காக உடலின் மேற்புரத்தில் பாயும் இரத்தத்தை மட்டுமே பரிசோதித்து நோயைக் கண்டறிவது சிகிச்சையளிக்க உகந்ததாக இருக்காது என்கிற ஆய்வுக் கூடங்களின் அறியாமையை ஆங்கிலமருத்துவத்தின் புரிதலின்மையைப் பேசுகிறது “பரிசோதனையை பரிசீலிப்போம்” அத்யாயம்.
உடலின் எதிர்ப்புசக்தியால் அடையாளங் காணப்பட்டு சிறுநீர் மற்றும் மலம் வழியாக வெளியேற்றப்படும் கழிவுகளைப் பரிசோதித்து ஆய்வுக்கூடங்களால் வழங்கப்படும் பரிசோதனை முடிவுகளை மட்டுமே கருத்தில் கொண்டு மக்களை நோயாளியாக்கும் ஆங்கில மருத்துவங்களின் உடலியல் பற்றிய தெளிவின்மையை விரியப்படுத்துகிறது “மலமும் நலமும்” என்கிற அத்தியாயம். மனிதக் கழிவுகளில் ‘மலத்தில் நலத்தைத் தேட முடியுமா?’ என்கிற ஆசிரியரின் நகைச்சுவையான ஆதங்கம், ஆய்வுக்கூடங்களின் மனித உடலின் மீதான அலட்சியத்தைப் பற்றி தெரிந்தும் மக்கள் வழக்குத் தொடர முன்வர தயங்குவதையும், விஞ்ஞானிகளின் பரிசோதனை எலிகளாக மக்கள் மாறி வருவதையும் கண்டிக்கிறார் ஆசிரியர்.
செரிமானம் என்கிற உடலின் முக்கியமான இயக்கத்தை ஆங்கில மருத்துவம் அனுமானித்திருப்பது போல் வாயிலிருந்து துவங்கி ஆசனவாயில் மலமாக மட்டுமே வெளியேறி விடும் என்பதல்ல. மனித எதிர்பார்ப்பிற்கும் பரிசோதனை கணிப்பிற்கும் அப்பாற்பட்டது உடலியங்கியல். இது முறையற்ற செரிமானத்தால் உண்டாகும் கழிவுகளை இரத்தத்திலிருந்து வெளியேற்ற உடலால் இயல்பாக நிகழ்த்தப்படும் கழிவுநீக்கத்தை சர்க்கரை நோயாகக் கருதி மக்களை அச்சுறுத்தி வரும் ஆங்கில மருத்துவத்திற்கும் பொருந்தும்.
செரிமானத்திற்குப் பிறகு சத்துக்கள் இரத்தத்தில் க்ளுகோஸ் என்கிற சர்க்கரையாக எவ்வாறு உருவாகிறது?
அது எவ்வாறு செல்களாலும் உறுப்புகளாலும் ஆற்றல் சக்தியான க்ளுகோஸாக கிரகிக்கப்படுகிறது?
செல்களால் உறிஞ்சப்படும் க்ளோஸ் உற்பத்தியில் கணையத்தால் சுரக்கப்படும் இன்சுலினின் பங்கு என்ன?
என்கிற சர்க்கரை நோய் பற்றிய நீண்ட கால கேள்விகளுக்கான புரிதலை மிக எளிமையாகப் பாமரரும் தெளிவுறும் வகையில் எடுத்துரைக்கிறது “மாற்றமே நிரந்தரம்” என்கிற ஏழாவது அத்தியாயம்.
இரத்தம் என்பது அடிப்படையில் ஒரு ஊடகம், மற்றும் அது ஒரு உயிர்ப்பான தொடர்பு சாதனம் என்கிற இரத்தத்தின் அடிப்படைத் தகவலையும் பதிவிட்டுள்ளார் ஆசிரியர். அதுமட்டுமின்றி நோயாளி சர்க்கரை நோய்க்கான இரத்த பரிசோதனை எடுக்கும் சில நாட்கள் முன்பு அனைத்து வித இரசாயன மருந்துகள் உட்கொள்வதைத் தவிர்த்திட வேண்டும் என்கிற ஆங்கில மருத்துவம் பரிந்துரைக்கும் அடிப்படை ஆய்வுக்கூட பரிசோதனை விதிமுறையையும் இந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ளது நோயாளிகள் மீதான ஆங்கிலமருத்துவத்தின் அலட்சியப் போக்கு நன்கு விளங்குகிறது. பரிசோதனைகள் என்று பரிந்துரைக்கப்படுவது வெறும் லாப நோக்கமே என்பதும் தெளிவாகிறது. மேலும் பரிசோதனைக்கு முன்பு இப்படியான இரசாயன மருந்துகள் எடுப்பதை நிறுத்துவது இரத்தத்தில் வினை மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிற ஆய்வக நடைமுறையைப் பின்பற்றாததே பரிசோதனை முடிவுகளின் குழப்பங்களுக்கான காரணங்களில் ஒன்று என்று ஆய்வுக்கூடங்களுக்குப் புரியவைக்கிறார் ஆசிரியர்.
முறையற்ற செரிமானத்தால் உண்டாகும் தேவையற்ற சர்க்கரையை இரத்தத்திலிருந்து பிரித்து எடுத்து சிறுநீரகத்தின் வழியாக வெளியேற்றப்படும் கழிவுகளை நீரழிவு நோய் என்று இன்று ஆங்கில மருத்துவத்தால் அழைக்கப்படுவதை எடுத்துரைக்கிறது “கற்பனைகளின் விற்பனை” அத்தியாயம். ஆங்கில மருத்துவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற்போல சர்க்கரை அளவை இரத்தத்தில் சிறுநீரின் அளவிற்கு இணையாகக் காட்ட ஆய்வுக்கூடங்கள் மேற்கொள்ளும் குளறுபடிகள் பற்றித் தெளிவாக எடுத்துரைக்கிறது அத்யாயம்.
இரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதனை முடிவின் அளவைக் கொண்டு சிவப்பணுக்கள் பரிசோதனை மற்றும் PVC(Packed cell volume) போன்ற பரிசோதனைகளின் முடிவுகள் காட்டப்படுவதும், இதய நோய்க்கு முக்கிய காரணியாக அலோபதி மருத்துவத்தால் பரிந்துரைக்கப்படும் கொலஸ்ட்ரால் பரிசோதனை முடிவுகளும் வெறும் கால்குலேட்டர் கணக்குகளை மையாக வைத்து யூக அடிப்படையில் துல்லியத்திற்காக எண்களில் சில மாற்றங்களைக் கூடுதலாகச் செய்து ரிப்போர்ட்டுகள் வழங்கி மக்களை நிரந்தர நோயாளிகளாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது ஆய்வுக்கூடங்களே என்பதை சில உதாரணங்கள் கொண்டுத் தெளிவுபடுத்துகிறார் ஆசிரியர். ஆய்வுக்கூட ரிப்போர்ட்டுகளின் முடிவுகள் யாவும் கால்குலேட்டரின் மாயாஜாலங்களே என்பதைத் திட்டவட்டமாகக் காண்பிக்கப்படுகிறது இந்தப்பகுதி.
கூடுதல் முக்கிய தகவல்களாக மாரடைப்பை உருவாக்குவது இரத்தக் குழாயை அடைக்கும் சிறு உரை கட்டிகள் தான் இதற்கும் கொலஸ்ட்ராலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை உடலில் கொழுப்பு குறைவதற்காகக் கடைப்பிடிக்கப்படும் உணவு கட்டுப்பாடுகளும் உட்கொள்ளப்படும் இரசாயன மருந்துகளும் கூடுதலாகப் பலகீனத்தையே உண்டாக்கும். எதிர்காலத்தில் புற்றுநோய் வருவதற்கான ஆபத்திருக்க வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கிறார் ஆசிரியர்.
இதுவரை ஆய்வு கூட பரிசோதனைகளில் இரத்தத்தின் சிவப்பணுக்கள், இரத்தத் தட்டுகள், PVC, ஹீமோகுளோபின் மற்றும் கொலஸ்ட்ரால் போன்றவற்றின் ஆய்வுக்கூட அளவீடுகள் பற்றித் தெளிவு படுத்திய ஆசிரியர் அடுத்த அத்தியாயத்தில் இரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களின் யூக அடிப்படையிலான பரிசோதனை முடிவுகளை “ஒரு நிமிடத்தில் ஒரு கோடி” பகுதி சான்றுகளுடன் விளக்குகிறது. வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையைக் கணக்கிட மருத்துவ ஆய்வகங்களில் கவுண்டிங் சேம்பர் என்கிற கண்ணாடிக் கருவியைப் பயன்படுத்துவதாகவும் அதற்கு நோயாளியின் ஒரு துளி இரத்தமே போதுமானது என்பதையும் இங்கு பதிவிடுகிறார். மேலும் நூற்றுக் கணக்கில் மட்டுமே கணிக்கிடப்படும் கவுண்டிங் ஆயிரக்கணக்கில் ரிப்போர்ட்களில் எவ்வாறு காண்பிக்கப்படுகிறது என்கிற ஆய்வகக் குளறுபடிகளையும் விளக்கியுள்ளார். ஆய்வுக்கூடத்தில் நோயாளியிடமிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தில் ஒரு துளி பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட மீதம் விராயமாக்கப்படுவதை அறிய முடிகிறது.மனித உடலின் உணவு செரிமானத்தின் ஒப்பற்ற சத்தான ஆற்றல் உருவாக்கமான இரத்தம் வீணடிக்கப்படுவது தவறான செயல் என்பதையே ஆசிரியர் இந்த அத்யாயத்தின் வழியே நமக்கு புரிய வைக்க முற்படுகிறார்.
இனி, ஆய்வுக்கூடங்களில் செய்யப்படும் நாளமில்லா சுரப்பிகளான ஹார்மோன் பரிசோதனையைப் பற்றிப் பேசுகிறது அடுத்த அத்யாயமான “நாளமில்லா சுரப்பிகளும் நாற்பது பொய்களும்” அத்யாயம்.
உடலிலிருந்து ஹார்மோன் பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட இரத்தத்தின் தன்மை சில மணித்துளிகளுக்குள் புறச்சூழலின் பாதிப்பால் மாறுதலுக்குரியது. இப்படியிருக்க ஹார்மோன் பரிசோதனைகளுக்காக பல நாட்கள் கழித்து ஆய்வகங்கள் சென்றடையும் இரத்தமாதிரிகள் சரியான ஆய்வக முடிவுகளைத் தர வாய்ப்பில்லை என்கிற உடல் சார்ந்த அடிப்படை அறிவியலை மறந்து ஹார்மோன் பரிசோதனையை பரிந்துரைக்கிறது ஆங்கில மருத்துவம் என்கிற யதார்த்தத்தைப் பதிவிட்டுள்ளார் ஆசிரியர். இந்த மாதிரியான குழப்பங்கள் இந்தியாவில் மட்டுமல்ல மருத்துவத்தில் உயர் நிலை அடைந்த நாடு என்று மருத்துவ உலகத்தால் கொண்டாடப்படும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நிகழ்வதாகவும் இதனால் பல தவறான ஆய்வக முடிவுகளை நோயாளிகளுக்கு வழங்கியதால் பல வழக்குகளை அமெரிக்க ஆய்வுக்கூடங்கள் சந்தித்திருப்பதாகவும் அத்யாயத்தில் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர்.
போக, ஹார்மோன் பரிசோதனைகளுக்கு முன்பு இரசாயன மருந்துகள் உட்கொள்வதையும் பல உணவுகளைத் தவிர்ப்பதுமே ஹார்மோன் பரிசோதனைக்கு முன்பாக அலோபதி மருத்துவம் பரிந்துரைக்கும் விதிமுறைகள். இதை ஆங்கில மருத்துவர்கள் நோயாளிகளுக்குப் பரிசோதனை பரிந்திருப்பின் போது கவனத்தில் கொள்வதுமில்லை முறையாக எடுத்துரைப்பதுமில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர். உடலின் அடிப்படை புரிதலின்மை மட்டுமல்ல தமக்கு கற்பிக்கப்பட்ட பரிசோதனை விதிமுறைகளையும் கூட சரியாக மக்களுக்கு புரியவைக்கத் தவறியுள்ளனர் ஆங்கிலமருத்துவர்கள். இது மருத்துவ உலகின் நோயாளிகளின் உடல்நலன் மீதான அலட்சியம் என்பதே உண்மை. இதுதான் நிரூபிக்கப்பட்ட அறிவியலா என்கிற ஆசிரியரின் கேள்வி நமக்குள்ளும் எழுகிறது.
அடுத்ததாக “இலவச நோய்கள்” என்கிற பகுதி மருத்துவர்களால் ஆய்வுக்கூட பரிசோதனைக்குப் பரிந்துரைக்கப்படவில்லையானாலும் சில நேரங்களில் நாமாகவே கட்டாயத்தின் பேரில் பரிசோதனைகள் செய்துக் கொள்ள முனைகிறோம்.
ஒன்று இலவசமாக மருத்துவ கேம்ப் என்கிற பெயரில் செய்யப்படும் பரிசோதனை மற்றொன்று பிள்ளைகளை முதன்முதலாக பள்ளியில் சேர்க்கும் போது பள்ளிகளின் நிர்பந்தத்தால் பிள்ளைகளின் இரத்தவகையை அறிய முற்படுகிறோம்.பிள்ளைகளுக்கு விபத்து என்கிற எமர்ஜென்சியின் போது இரத்தத்தின் தேவை ஏற்படும். அப்போது இரத்தவகை அறிந்து வைத்திருப்பது அவசியம் என்கிறது பள்ளிகள். இது எத்தனை அபத்தம். கல்விக்காக பள்ளியா? அல்லது பள்ளியின் முதல்நாளிலேயே எமர்ஜென்சி பற்றி யோசிக்க வைப்பது தான் கல்வியா? என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது அத்யாயம்.
மேலும் விபத்து நேரத்தில் இரத்தத்தின் சேதாரம் ஏற்படும் போது ஆங்கில மருத்துவர்களால் இரத்தம் ஏற்றப்படுவதைப் பற்றி விளக்கும் ஆசிரியர் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஏற்றப்படும் இரத்தத்தின் அதே அளவு அவருக்கு இரத்த தானம் செய்தவரின் உடலில் குறைந்து தானே இருக்கும்.அவருக்கு இரத்தத் தேவை இருக்காதா என்றெல்லாம் கேள்வியெழுப்பினால் தானம் செய்தவரது உடலில் இரத்தம் மீண்டும் சுரந்துவிடும் என்று மழுப்புகின்றனர் ஆங்கில மருத்துவர்கள். உடலியல்பை அறிந்திருந்தும் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ஏன் இரத்தம் ஏற்றுகிறது ஆங்கில மருத்துவம்? இந்த எளிமையான விஷயம் கூட நாம் யோசிக்கத் தவறியதே ஆங்கில மருத்துவத்தைக் கண்மூடித்தனமாக நம்பி இருகாறும் உடல் ஆரோக்கியத்தைத் தொலைத்து நிற்பதற்கான காரணம்.
மேலும் இரத்தப்பிரிவில் பாஸிடிவ் – நெகடிவ் என்று பகுக்கப்படுவது ஆ.எச் என்ற ரீஸஸ் குரங்கின் இனத்தைக் குறிக்கும். இரத்தத்தை வைத்து பாஸிடிவ் என்றால் ரீஸஸ் குரங்கின் இரத்தத்துடன் பொருந்தும் நெகடிவ் என்றால் பொருந்தாது என்பதே ஆங்கில மருத்துவம் மனித இரத்த வகைகளைக் வேறுபடுத்திப் பார்க்கும் முறை.
ஒரே பிரிவைச் சேர்ந்த இரத்தம் கிடைக்கப் பெற்றால் உடன் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்றாமல் ஆய்வுக் கூடங்களில் ‘கிராஸ் மேட்சிங்’ என்கிற ஆய்வை நிகழ்த்துவதற்கான காரணம் என விபத்து நேரங்களில் ஏற்படும் இரத்த சேதாரத்தில் ஏற்றப்படும் இரத்தத்தில் உள்ள பல ஆய்வகக் கேள்விகளுக்கான விடையை வழங்குகிறது அத்யாயம்.
சாதாரண மனிதர்களிடம் நோய் பற்றிய பயத்தை ஏற்படுத்தினால் மருந்து விற்பனையை அதிகரிக்க முடியும் என்ற தந்திரமே இலவச பரிசோதனை முகாம்களின் அடிப்படை என்றும் உலகளாவிய மருத்துவ மோசடிகளைப் பற்றிய அறிஞர்களின் பதிவுகளையும், மருத்துவ பத்திரிக்கைகள் மற்றும் இதழ்களின் மருத்துவ ஆய்வறிக்கைகளையும் அத்தியாயத்தில் பதிவிட்டுள்ளார் ஆசிரியர்.
எல்லா நோய்களையும் தீர்மானிக்கிற சர்வ ரோக பரிசோதனை கூடமாக ஆய்வுக்கூடங்களை நம்ப வைக்கும் உயர் தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்களைக் கொண்ட அமெரிக்கா உலக அளவில் ஆரோக்கிய வரிசையில் பதினான்கில் பதிமூன்றாம் இடத்தில் பின் தங்கி உள்ளது என்றும் அதிக அளவில் நோய்களால் மரணங்கள் அங்கு தான் நிகழ்கின்றன என்கிற மருத்துவப் புள்ளி விவரத்தை மக்கள் வெளியில் இறுதி அத்தியாயமான “வாங்க… நாங்க இருக்கோம்….” என்கிற இறுதி அத்யாயத்தில் வலியுறுத்துகிறார் ஆசிரியர்.
“நோயுறியும் தொழிலே மக்களை கொல்லும் பெரும் காரணியாகி வருகிறது.”
என்கிற பிரிட்டிஷ் மெடிக்கல் ஜெர்னலில் பதிவிட்ட டாக்டர் ரிச்சர்ட் ஸ்மித்தின் கூற்றை அத்தியாயத்தில் சுட்டிக்காட்டும் ஆசிரியர் அறிவியலின் பெயரால் உலக மக்களின் மீது தொடுக்கப்படும் வணிகத் தாக்குதல்களை முறியடிக்க ஒவ்வொருவருக்கும் அறிவு அவசியம். அது சொந்த மண்ணிலிருந்து முளைத்துப் பன்முகப் பார்வைக் கொண்ட அறிவாக இருந்தால் தான் மனித இனத்தின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்கிற நிலைப்பாடு மாற்றத்திற்கான ஆரோக்கிய தீர்வு.
குணமடைதல் என்கிற அற்புதமான தமிழ்ச் சொல்லை நோயிலிருந்து விடுபடுதலைக் குறிக்கத் தமிழில் பயன்படுத்தப்படுத்தலாம் என்று வலியுறுத்தும் ஆசிரியர், ‘குணம்’என்பது மனித இயல்பு என்றும் மனித ஒழுக்கம் என்றும் போற்றுகிறார்.இந்தப் படைப்பின் வழியான விழிப்புணர்வால் மருத்துவ உலகம் குணமடையட்டும்.
ஆய்வுக்கூட பரிசோதனைகளையேஇன்றைய முழுமையான நோயறிதல் முறையாக ஆயுஷ் எனப்படும் அனைத்து மருத்துவங்களும் பரிந்துரைக்கின்றன. மரபு வழி மருத்துவர்களின் தொன்மையான நோயறிதல் முறையான நாடி பரிசோதனை, பார்த்தறிதல், கேட்டறிதல், தொட்டறிதல், உணர்ந்தறிதல் மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்களின் அறிகுறிகளைக் கொண்டு நோயின் தன்மையை அறியும் நுண்ணறிவு இன்று வேரோடு அழிந்து வருகிறது. அனைத்து பாரம்பரிய மரபு வழி மருத்துவங்களும் இன்று அரசாங்கத்தின் கைக்குள் ஒடுங்கி உள்ளதே மரபுவழி மருத்துவங்களின் பாரம்பரிய நோயறிதல் முறையான நாடி பரிசோதனை மெல்ல மெல்ல மறைந்து வருவதற்கான காரணம். இன்றைய அனைத்து மருத்துவக் கல்வி முறைகளும்(ஆயுஷ்) ஆய்வுக்கூடங்களின் அடிப்படையிலேயே நோயறிதல் முறைகள் கற்பிக்கப்படுகின்றன. கல்வி பாடத்திட்டங்களும் இப்படியான நோயறிதல் முறையிலேயே சிகிச்சையளிக்க பரிந்துரைக்கின்றன. இந்நிலை மாற வேண்டுமானால் மீண்டும் நம் பாரம்பரிய மரபு வழி மருத்துவங்களின் ஒப்பற்ற நாடி பரிசோதனை முறையை அனைத்து மரபு வழி மருத்துவப் பாடத் திட்டத்திலும் அறிமுகம் செய்ய வேண்டும். குறைந்த பட்சம் தொன்மையான நம் பாரம்பரிய மருத்துவங்களிலாவது ஆய்வுக்கூட பரிசோதனைகளை நோயாளிகளுக்குப் பரிந்துரைப்பதைத் தவிர்க்குமாறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் வலியுறுத்த வேண்டும். அப்போதே அழிந்து வரும் நம் மண்ணின் மருத்துவங்களின் நாடி பார்க்கும் மருத்துவ முறை காக்கப்படும்.
தொகுப்பின் ஒவ்வொர் அத்தியாயமும் ஆய்வுக்கூடங்களில் மேற்கொள்ளப்படும் வெவ்வேறு உடல் சார்ந்த பரிசோதனைகளைப் பற்றிய ஆழமான தெளிவான விளக்கங்களையும் பரிசோதனைகளின் யூக முடிவுகளின் பிண்ணனியையும் மக்களிடம் மறைக்கப்பட்ட பல இரகசியங்களையும் எந்தவித தயக்கமின்றி போட்டுடைக்கிறார் ஆசிரியர்.
இந்நூலின் சாரம் அலோபதி மருத்துவத்திற்கு எதிராக போர் கொடி பிடித்துப் போராட எழுதப்பட்டவை அல்ல அவசியமற்ற பரிசோதனைகளால் நோயாளிகளின் உடலின் ஒப்பற்ற ஆற்றல் சத்துக்கள் வீணடிக்கப்படுவதையும் தேவையற்ற பண விரயத்தையும் தவிர்ப்பதற்கான மக்களுக்கு வழங்கப்படும் விழிப்புணர்வே ஆசிரியரின் இந்நூல் படைத்ததற்கான முக்கிய நோக்கம். மேலும் ஆங்கில மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட பரிசோதனைகளுக்காக ஆய்வுக் கூடங்களுக்கு செல்லும் நோயாளிகள் செலுத்தும் கட்டணங்களின் பெரும் பகுதி மீண்டும் பரிந்துரைத்த அதே மருத்துவருக்கே கமிஷனாகப் போய் சேரும் உண்மை நிலையை மக்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். இனியும் கண்மூடித்தனமாக ஆங்கில மருத்துவத்தை நம்பி ஏமாறாமல் தொந்தரவுகள் ஏற்படும் போது மட்டும் மருத்துவமனையையும் மருத்துவரையும் நாடவும் தேவையின்றி ஆய்வுக் கூடங்களில் பரிசோதனைகள் செய்யாமல் இருப்பதுமே உடல்நலனை காக்கும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறார். இனியேனும் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். நோயிலிருந்து மக்களை மட்டுமல்ல மருத்துவ உலகையே குணமடையச் செய்ய வேண்டும் என்கிற ஆசிரியரின் நோக்கம் நிறைவேற என் வாழ்த்துகள்.
– து.பா.பரமேஸ்வரி
நூல் : மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன?
ஆசிரியர் : அக்குஹீலர், அ. உமர் பாரூக்
விலை : ரூ.₹ 60/-
வெளியீடு : எதிர் வெளியீடு
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com

