நூல் அறிமுகம் : அண்டனூர் சுராவின் ’அப்பல்லோ’ – புதுகை சிக்கந்தர்
நூல்: அப்பல்லோ
ஆசிரியர் : அண்டனூர் சுரா
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : 245
பக்கங்கள் ; 272
தொடர்பு எண் ; 044 24332924
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும் : thamizhbooks.com
இந்நாவல் ஆர்கோ தேசத்து மன்னன் மெனிலாஸ் போரில் வீழ்த்தப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்பல்லோ மருத்துவ குடிலுக்கு தூக்கி வருவதில் தொடங்குகிறது, இந்நாவலுக்குள் தொடக்கத்தில் போடப்படுகிற பல்வேறு முடிச்சுகள் ஒவ்வொன்றாய் அவிழும் இடங்களில் நம்மை ஒரு கணம் திகைக்க வைக்கிறது..
மைசின் தேசத்தில் இரட்டையர்களாய் பிறந்த மெனிலாஸ், அகமெம்னான் சுபார்டன் தேசத்து இரட்டை இளவரசிகளான மெனிஸ்ட்ரா, ஹெலனை மணந்து கொள்கிறார்கள். ஒரே நாளில் நடக்கும் திருமணம் அகமெம்னானுக்கு எளிமையாகவும், மெனிலாஸ்க்கு ஆடம்பரமாகவும் நடக்கிறது. தனக்கு சீதனமாக சுபார்டன் தேசத்தை அபகரித்துக்கொள்கிறார் மெனிலாஸ்..
மெனிலாஸ்க்கும், அகமெம்னானுக்குமான முரண்பாடு முற்றி மைசின் தேசம் பிளவுபடுகிறது மைசின் தேசத்து ஒரு பகுதியை அகமெம்னானும், மறு பகுதியை சுபார்டன் தேசத்தோடு இணைத்து ஆர்கோ தேசமென மெனிலாஸ் ஆட்சி செய்கின்றனர்..
வரதநாட்டு மன்னனுக்கு பல வருடங்களாக முதுகில் ஏற்ப்பட்டிருந்த அரிப்பு நோயை குணமாக்க சித்த மருத்துவர் மூலமாக மருத்துவக்குடிலுக்கு அழைக்கப்படுகிறார் அதை தடுக்கும் விதமாக நாடோடியாக திரிந்த பூபூம்பா எனும் மந்திரவாதி மந்திரத்தால் குணமாக்குகிறேன் என்று குழப்பம் விளைவித்து அந்நாட்டையே அபகரிக்க முயற்சிக்கிறான் ..
அடர்வனத்தில் இருக்கும் மருத்துவக்குடிலுக்கு வருகிற மன்னரின் நோயை முப்பது நாட்களில் குணமாக்குகிற சித்தமருத்துவர்களுக்கு பரிசாக எட்டு குன்றுகளை உள்ளடக்கிய ஆயிரம்வேலி வனத்தை பரிசாக அறிவித்து, முப்பது நாள் மருத்துவத்திற்கான கூலியாக தானியங்களை மந்திரவாதி பூபூம்பா மூலமாக அனுப்புகிறார்.
மருத்துவத்தை முன்னிறுத்தி மந்திரம் எனும் பெயரில் தன் தந்திரம் அனைத்தும் தோற்றுப்போனதை தாங்கிக்கொள்ள முடியாத பூபூம்பா
நூற்றுக்கு மேற்பட்ட மருத்துவ குடிகள் வாழ்ந்த அந்த குடிலை தன் சகாக்களுடன் அழித்தொழிக்கிறான் அங்கு வாழ்ந்த சிறுவர் உட்பட அனைவரையும் கொல்கிறான்.
அதில் தப்பி பிழைப்பது சிறுவனாயிருக்கும் மெனிலாஸின் தந்தை மட்டுமே…
மருத்துவக்குடிலை சேர்ந்த அச்சிறுவனுக்கும் பூபூம்பாவிற்குமான மந்திரமா?, மருத்துவமா? என்கிற பதைபதைப்புக்குள்ளாக்கும் அந்த உரையாடல்களில் அச்சிறுவன் உயிர் பிழைக்க வேண்டும் என்று நினைக்கும் நமக்கு உடலெங்கும் வியர்த்துவிடும்..
வருதநாட்டு மன்னரான மூன் மற்றும் அவரது குடும்பத்தை கொன்று தானே வரதநாட்டு மன்னனாக அறிவித்து. வரதநாட்டை டிரோஜன் என்றும் தனது பெயரை பாரிஸ் என்றும்
அறிவித்துக்கொள்கிறான்.
மைசின், ஆர்கோ தேசத்தை வென்று ஒரே நாடாக தனது கொடுங்கோலாட்சியை பரப்ப முயற்சித்து பதிணைந்து முறை மெனிலாஸிடம் தோற்றுப்போகிறான்..
மீனவ பெண்ணான தெட்டிஸ் அடர்வனத்திற்குள் வசிக்கும் மருத்துவக்குடியின் கடைசி வாரிசான அப்பல்லோவை சந்திக்க வைத்த காரணம் எது?
யாராலும் தோற்கடிக்க முடியாத மெனிலாஸ் யாரால் கொல்லப்படுகிறான்?
பாரிஸ் செய்த சூழ்ச்சியில் மெனிலாஸ் மனைவி ஹெலன் எவ்வாறு சிக்கினாள்? போன்ற கேள்விகளுக்கு நாவலுக்குள் விடையிருக்கிறது..
நாவலில் இருக்கும் சில வரிகள்;
மருத்துவ குடிலில் அனுமதிக்கப்பட்ட மெனிலாஸ் உடல்நிலை குறித்த கேள்வியை மக்கள் அமைச்சர் ஹெர்குலஸிடம் கேட்கும்போது அமைச்சரின் பதில்
மக்கள் ; ஏதேனும் நற்செய்தி உண்டா அமைச்சரே
ஹெர்குலஸ்; ஆம் இருக்கிறது
மக்கள் ; அச்செய்தி என்ன அமைச்சரே
ஹெர்குலஸ்; நான் மன்னரை பார்த்தேன்
மக்கள்; எப்படி இருக்கிறார்
ஹெர்குலஸ்; நல்ல ஆகிருதியுடன் இருக்கிறார். மக்களின் தேவை குறித்து விசாரித்தார். விரைவில் நாடு திரும்பி டிரோஜன் தேசத்து மன்னன் பாரிஸ் மீது போர் தொடுக்கப் போவதாக சொன்னார். அதற்காக அத்தனை பேரும் ஆயத்தமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.
மக்கள்; ஆகாரம்
ஹெர்குலஸ் ; இரண்டு ரொட்டிகள் எடுத்துக்கொண்டார்..
மருத்துவக்குடிலை அழித்தொழித்த ஆணவத்தில் பூபூம்பா மந்திரவாதி மருத்துவக்குடி சிறுவனிடம் நடத்தும் உரையாடலில்
உன் கடைசி ஆசை என்ன?
அழித்தொழிக்கப்பட்ட மருத்துவக்குடிகள் உயிர்த்தெழ வேண்டும்..
உன் ஆசை என்ன, உயிர் வாழ்வதா,மருத்துவன் ஆவதா..?
உயிர் என்பது உடலில் அடைக்கப்படும் வெறும் காற்று மருத்துவனாவதே என் ஆசை..
மருத்துவத்தின் தத்துவம் எது?
இறக்கும் வரைக்கும் வாழ்ந்திடு,வாழும் வரை சாகாதே
பிணி என்பது?
உடல் சார்ந்தது
நோய் என்பது?
மனம் சார்ந்தது..
காயம், புண் இரண்டிற்குமான வித்தியாசம் என்ன..?
வெளியிலிருந்து ஏற்படும் புண் காயம்.
உள்ளிருந்து ஏற்படும் காயம் புண்..
மீசை குறித்து நிகழும் உரையாடலில் அகமெம்னான் தம்பி மெனிலாஸிடம் இவ்வாறு கூறுகிறார்,
மீசைதான் ஆணுக்குப் பெண் இளைப்பென்று சொல்கிறது.ஒரு ஆண்,மற்றொரு ஆணினை ஆடிமையாக்குவது மீசைதான். மீசை முளைக்காத ஆண், மீசை முளைத்த ஆணிற்கு அடிமை. அடர்த்தி மீசையின் பேச்சை அரும்பு மீசைகள் காது கொடுத்து கேட்க வேண்டும்.ஒரு ஆண் எத்தனை பெரிய மீசைகள் வைத்திருந்தாலும் அவன் வெண் தறித்த மீசைக்காரருக்கு கீழ் பணிந்தே செல்ல வேண்டும்..
அப்பல்லோ, தெட்டிஸ் இருவருக்குமான உரையாடல்களில் பேரன்புகளுக்கிடையில் நம்மை உருக வைக்கும் எழுத்தாளர்,பூபூம்பா மருத்துவக்குடிமக்களை அழித்தொழிக்கும் விவரிப்புகளில் வியர்க்க வைத்துவிடுகிறார்..பாசிச சிந்தனை உடையவன் என்பதால்
பூபூம்பாவிற்கு பாரிஸ் எனும் பெயர் பொருத்தமாயிருக்கிறது …
தன் குடிமக்களை ஒரு மன்னன் எவ்வாறு வழி நடத்தவேண்டுமென்பதை இந்நாவலில் பல இடங்களில் சுட்டிக்காட்டுகிற ஆசிரியர் அண்டனூர் சுரா அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்..
– புதுகை சிக்கந்தர்
நூல் அறிமுகம்: அண்டனூர் சுராவின் முதல் வகுப்பு பொதுத்தேர்வு – முனைவர். இரா. சாவித்திரி
நூல்: முதல் வகுப்பு பொதுத்தேர்வு
ஆசிரியர்: அண்டனூர் சுரா
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 50/-
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com
தாஜ்மகாலைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜி என்று ஒரு தொடரை மாணவர் எழுதி இருந்தால் தவறாக எழுதி இருக்கிறார் என்று அதனைக்கடந்துவிடலாம் இதையே ஓர் ஆசிரியர் கரும்பலகையில் எழுதி மாணவர்களுக்குக் கற்பித்தால் மாணவர்கள் நிலை என்ன? என்ற வினாவின் அடிப்படையில் எழுந்த ஒரு கற்பனைக்கதை தான்” முதல் வகுப்பு பொதுத்தேர்வு கதையை எழுதியவர் அண்டனூர் சுரா.
ஆசிரியர் தவறாக வரலாற்றைக் கற்பித்த நிலையில் தவறு எனத் தெரிந்து கொண்ட மாணவன் எப்படி அதை சரி செய்ய முயற்சி செய்கிறான் என்பதும் அதில்அவனுடைய மனப் போராட்டமும் உள்ள உறுதியும் எப்படிக்கதை வடிவம் கொள்கிறதுஎன்பதும் முதல் வகுப்பு பொதுத்தேர்வு ஆகிறது.
ஐந்தாம் வகுப்பு மாணவன் வயது அனுபவம், மனநிலை அடிப்படையாக இதை எப்படி அணுகுகிறான் அதற்கு ஆசிரியரின் எதிர்வினை என்ன என்பதெல்லாம் சுவையாகச் சொல்லப்படுவது உண்மைதான். ஆனால் எடுத்த உடன் ஒருசரித்திர ஆசிரியர் இவ்வளவு பிழையான வரலாற்றை க்கற்பிக்க முயல்வதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஆசிரியர் சமூகத்திற்கு இழுக்கு அல்லவா .இப்படி ஒரு கதையை எழுதலாமா என்ற பொதுப்புத்தியோடு இருந்தால் இக் கதையைத்தொடர்ந்து படிக்க முடியாது .சிறார் நாவல் என்பது சிறுவர்கள் மனநிலையில் படிக்க வேண்டுமோ என்று சமாதானம் செய்து கொண்டு கதையைத் தொடர்ந்து படிக்கலாம்.
சிவப்பிரகாசம் சரித்திர ஆசிரியர். தான் சொன்னதை மாணவர்கள் கேட்க வேண்டும் என்கிற ஆதிக்க ஆசிரியர் மனோபாவம் உடையவர். மற்றபடி கற்பித்தல் திறனில் அவரை யாரும் குறை சொல்ல முடியாது. அவருடைய எழுத்தாற்றல் வகுப்பின் கரும்பலகையில் எழுதி இருந்த தாஜ்மகாலை க்கட்டியவர் சத்ரபதி சிவாஜி என்ற வரிகளில் முழுவடிவம் கொண்டிருந்தது. சிவப்பு ,மஞ்சள் ,பச்சை வண்ண சுண்ணாம்புக்கட்டிகளால் அலங்காரமாக எழுதப்பட்டிருந்த அந்த தொடர் ஆசிரியரின் திறமையைப் பறைசாற்றியது மிகுந்த கவனத்தோடு அவர் வரைந்த தாஜ்மகால் ஓவியம் பக்கத்தில் பகீரத கவனத்துடன் வரையப்பட்ட சிவாஜியின் ஓவியம் பொறுப்புணர்ச்சியுடன் வரையப்பட்ட ஓவியங்களைப் பார்க்கும் போது இவ்வளவு திறமையுடன் கற்பிக்கப்படும் வரலாற்றுப் பாடம் தவறாக இருக்குமா என்ன என்று பொதுப்பார்வை நினைக்க வைக்கும் போது ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் எம்மாத்திரம் ?
சத்ரபதி சிவாஜியை முழுமையாக உருவாக்கிய திருப்தியில் வகுப்பின் கடைசி வரிசையில் சென்று கரும்பலகையைப் பார்த்தபடி தாஜ்மகாலைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜி என்றார். மாணவர்கள் பின்தொடர்ந்து சொன்னார்கள். அடுத்து நம் கதாநாயகன் சுரேந்திரன் எப்படி அறிமுகமாகிறான் பாருங்கள். பார்வைக்கு அவன் பாவமாகத் தெரிந்தான். தலைக்கு அவன் எண்ணை வைக்கவில்லை. மெலிந்த குச்சி போன்ற தட்டான் உடல்வாகு கொண்டவன். அவன் உடுத்தியிருந்த சீருடை அவனுக்குச் சற்றும் பொருந்தாமல் தொள தொள என இருந்தது சிவப்பிரகாசம் அவனது கண்களை கழுகுக் கண் கொண்டு பார்த்தார் அப் பார்வையில் அவன் முகம் ஒடுங்கி நடுங்கி இருந்தது.
வாசிக்கத் தெரியும் தானே! அவன் நடுங்கிக்கொண்டு “வாசிப்பேன சார் .” வாசிக்க வேண்டியது தானே ! தப்பாஎழுதி இருக்கீங்க சார். ஆசிரியர் மேல் முதல் அம்பு பாய்கிறது . 30 வருட பணி அனுபவத்தில் இதற்கு முன்பு யாரும் இப்படியாக குற்றம் கடிதல் புரிந்ததில்லை இவன் மட்டும் கேள்வி கேட்கிறான். சிவப்பிரகாசம் உடம்பை விறைப்பாக வைத்துக்கொண்டு அடேய் நான் எழுதி இருப்பதில் என்ன பிழை கண்டாய் ?எழுத்துப் பிழையா ?சொற்பிழையா? சுரேந்திரன் மார்போடு இறுக்கி கட்டி இருந்த கையை மெல்ல விலக்கி “சரித்திர ப்பிழை சார்” என்று இன்னும் ஓர் அம்பை எய்கிறான் .மற்ற மாணவர்கள் விதிர்விதிர்த்தார்கள் ஆக்ரா யமுனை ஆற்றங்கரையில் தாஜ்மகாலைக்கட்டியவர் சத்ரபதி சிவாஜி என்ன சொல்ல வருகிறேன் .
நேத்து வரைக்கும் தாஜ்மகாலைக் கட்டியவர் ஷாஜகான். இன்றைக்கு எப்படி சத்ரபதி சிவாஜி ஆனார்? அக்கேள்வியை அவன் குழந்தைத் தனத்துடன் கேட்டிருந்தாலும் கேட்டலில் ஒரு துடுக்குத்தனம் இருந்தது. கேள்வியில் தடுமாற்றமும் பதற்றமும் இருந்திருக்கவில்லை எனும்போது ஐந்தாம் வகுப்பு மாணவன் அரியணை ஏறிய அரசனாகக் காட்சியளிக்கிறான். சிவப்பிரகாச த்தின் தொடரும் தாக்குதல்கள் மிக பலவீனமானவை.
தஞ்சைப்பெரிய கோயில் பக்கத்தில் கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழன் சிலை இருப்பதுபோல் புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் கோட்டையை கட்டிய விஜயரகுநாத தொண்டைமான் சிலை இருப்பது போல ஒரு வாதம் செய்வதும் சுற்றுலா புகைப்படங்களைக்காட்டி தாஜ்மகால் பக்கத்தில் சத்ரபதி சிவாஜி சிலை இருப்பதால் தான் சொல்வதே சரி என்று தன் கட்சியை நிறுவ முயலும் பரிதாபம் தான் அது .விடுவானா சுரேந்திரன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அருகில் பெரியார் ஈவேரா சிலை இருப்பதால் கோயிலைக் கட்டியவர் அவரா?
எங்கள் ஊர் நீர் தேக்கத் தொட்டியில் பக்கத்தில் காந்திசிலை இருப்பதால் தொட்டியைக்கட்டியவர் காந்தியா என்று கேட்டவுடன் அவர் கட்டிய பொய்மைக்கோட்டைகள் சரிந்தாலும் அதிகாரம் பேசுகிறது. சுரேந்திரன் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட போதுபெற்றோர் வந்து மன்றாடியதால் திரும்பவும் சேர்க்கப்பட்டான் தாஜ்மகாலை க்கட்டியவர் சத்ரபதி சிவாஜி என்று 200 முறை எழுதிக்கொடுத்தபின்னரே அவன் தேர்வுக்கு அனுமதிக்கப் படுகிறான்.
பொதுத்தேர்வுஒரேவினா. 60 மதிப்பெண்கள். தாஜ்மகாலைக் கட்டியவர் யார்? நான்குமே தவறான பதில்கள். குழப்பத்தில் ஆழ்ந்த சுரேந்திரன் இறுதியில் ஒரு முடிவெடுத்து தேர்வு எழுதினான் . சரியான விடையை எழுதுக என்ற தொடர் அவனுக்குத் தெளிவைக் கொடுத்ததாக கதை நிறைவடைகிறது. திறமையாக க்கற்பித்தல் வேறு உண்மையாகக் கற்பித்தல் வேறு என்பது இக் கதையின் அடிநாதமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.
வரலாற்றுத் திரிபுகள் தொடர்ந்து நிகழலாம் அதை த்திருத்துவதற்கு யாரும் முன்வரவில்லை என்றால் வரலாறு மாறிவிடும். அதைத்தொடர்ந்து தவறுகள் மிகுதியாகும் அபாயம் வரலாம். தவறாகச்சொல்வதை சரி என்று சாதிக்கும் அதிகாரத்தின் குறியீடாக செருக்கு நிறைந்த சரித்திர ஆசிரியரும், உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை என்று உறுதியுடன் உண்மையை வெளிப்படுத்தும் ஒரு குரலாக சுரேந்திரனும் படைக்கப்பட்டுள்ளனர். அதிகாரத்துக்கும் தண்டனைக்கும் பயந்து மௌனம் சாதிக்கும் மாணவர்கள் எதற்கும் எதிர்ப்பு தெரிவிக்காமல் எல்லாவற்றுக்கும் ஒத்துப்போகும் சமூகத்திற்குக் குறியீடுகளாகப் படைக்கப்பட்டுள்ளனர் சிவப்பிரகாசம் என்னும் கதை மாந்தர் படைப்பு வெற்றிக்கு அவரைப் பற்றிய அறிமுகம், வர்ணனை, அவர் மனப்பான்மையை வெளிப்படுத்தும் தன்மை ஆகியவற்றைக் காரணிகளாகக்கூறலாம்.
சரித்திர வகுப்பு எடுக்கையில் பாடத்துடன் தொடர்புடைய மன்னன், மகுடம், மாளிகை, வாள்,உடை, உடைமைகளை வரையாமல் அவர் பாடத்துக்குள் நுழைபவர் அல்லர். அவர் நடத்துவது குறைவாக இருந்தாலும் அவரது மெனக்கெடல் நிறைவானதாக இருக்கும். அதற்கு உகந்ததாக தேர்ந்த கையெழுத்தும் எதையும் நுணுக்கமாக வரைந்து அசத்தி விடும் அசாத்தியமும் அவருக்குக்கை கூடி இருந்தது (பக்கம் 10)
பயந்த மாணவர்களின் செயல், வர்ணனைகள் எதற்கும் பயந்து பழக்கத்துக்கு அடிமையாகிப் போகிற சமுதாயத்தைச் சித்திரமாக்கும் வரிகளாகின்றன. . “மாணவர்கள் சாவி கொடுக்கப்பட்ட பொம்மையைப் போல் ஒவ்வொரு ஆசனமாகச்செய்து முடிப்பார்கள்.” (பக்கம் 21) விளைவுகள் பற்றி கவலைப்படாது மேலும் மேலும் தான் நினைத்ததைச்சாதிக்கும் ஆதிக்க மனப்பான்மையைப் பொருத்தமான சொற்களில் வெளிப்படுத்தும் ஆசிரியரின் எழுத்துத்திறம் பாராட்டுக்குரியது.
சிவப்பிரகாசரின் பண்பினை வெளிப்படுத்தும் தொடர்கள் இவை. அப்பள்ளிக்கு வரும் எத்தகைய பிரச்சினையையும் தீர்க்கவேண்டிய. பிரச்சினையைத் தீர்த்தும் ,பெரிதாக்க வேண்டிய பிரச்சனையைப் பெரிதாக்கியும் தன் இருப்பைப் பள்ளி சரித்திரத்தில் தக்க வைக்க முடிந்திருக்கிறது. (பக்கம் 30)
தான் நினைப்பதைத் தன் மாணவன் கூற வேண்டும் என்ற மமதையால் அவர் செய்யும் செயல்களை மன உறுதியுடன் எதிர்கொள்கிறான் சுரேந்திரன். ஒவ்வொருமுறையும் அவன் மன உறுதி வெளிப்படுகிறது. தன் தோற்றத்துக்கு யோகா போன்ற கவசங்களை அணிந்து தன்னை பெரிய சக்தியாக காட்டிக்கொள்ளும் நிலை இச்சமூகத்தில் பொய்யும் மெய்யும் இரண்டறக் கலந்து நிற்கின்ற நிலையினைக் காட்டுகிறது.
ஒரு வினை அதன் எதிர்வினை இணைந்து ஒரே ஒரு நிகழ்வாக அமைந்த இச்சிறார் நாவல் 55 பக்கங்களைக் கொண்டுள்ளது. குறியீட்டு இயல் வகையில் அமைந்த இந்த நாவலை சிறார் எந்த அளவில், எந்தவகையில் எதிர்கொள்வார்கள் என்பது கேள்விக்குறி .மாணவர்களின் உணர்வுகள் பற்றிக் கவலைப்படாமல் திறம்படக் கற்பித்தல் தொழிலைச் செய்யும் ஆசிரியராக ஒரு ரோபோவையும் உணர்வற்ற ஜடப் பொருளாக மாணவர்களை நினைத்துப் பாடம் நடத்துவதாக வெற்று இருக்கைகளையும் காட்டி இருக்கும் அட்டைப்படம் சிந்தனைக்கு உரியது.
மாணவன் தொடங்கி சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருடைய சமூகப் பொறுப்புணர்வை யும் உணர்த்துதல் என்ற அடிப்படையில் இந்த நாவல் வெற்றிபெற்றாலும் குறியீட்டியல் வகை நாவலுக்கு ஏற்ற இன்னும் பொருத்தமான கற்பனையை இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.