Andha Aindhu Nimidam Short Story By Sudha அந்த ஐந்து நிமிடம் சிறுகதை - சுதா

அந்த ஐந்து நிமிடம் சிறுகதை – சுதா




வெறும் மணல் தரையில் மரத்துக்கு அடியில் நன்றாக தூங்கிவிட்டேன். கண் விழித்ததும் உடம்புக்கு ஏதோ செய்வது போல இருந்தது. பக்கத்தில் இருக்கும் சேரில் எழுந்து உட்காரலாம் என உட்கார்ந்தேன். ஏனோ என் உடல் என் கட்டுப்பாட்டை இழப்பதை உணர்ந்தேன். என்னை அறியாமல் என் உடல் கீழே சாய்ந்து கொண்டிருந்தது. நானும் முயற்சி செய்தேன் ஆனால் முடியவில்லை என்னுடன் தரையில் சாய்ந்து விட்டது.பக்கத்தில் இருந்த ஒரு பெண் வேகமாக ஓடி போலீசாரை அழைத்து வந்தார். ஆம் நாங்கள் ஒரு இடத்தில் கூடி இருக்கிறோம். அங்கு இருப்பவர்களின் குழந்தைகள் எல்லோரும் தேர்வு எழுதுகிறார்கள் நாங்கள் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம்.

போலீசார் நடந்து வருகிறார் இன்னும் கொஞ்சம் வேகமாக வாருங்கள் என நான் சொல்கிறேன் ஆனால் அவருக்கே கேட்கவில்லை. அதற்குள்ளாக இரண்டு இளைஞர்கள் காலில் எதையோ தடவி என் உள்ளங் கால்களை உரசி கொண்டு இருக்கிறார்கள்.. என் பெண் பிள்ளை போல் ஒரு பிள்ளை என் சட்டையை கழட்டி நெஞ்சில் தைத்துக் கொண்டிருக்கிறாள். காற்று வரட்டும் தள்ளுங்கள் என சத்தம் கேட்கிறது. சுற்றியிருந்த கூட்டம் கொஞ்சம் நகர்கிறது. இவர் யாருடைய பெற்றோர் என கண்டுபிடியுங்கள் என போலீஸ்காரர் சொல்கிறார். என் பையை துழாவி எதையோ எடுத்து என் மகளின் பெயரைச் சொல்லி அவளை அழைத்து வரச் சொல்கிறார்கள். ஐயோ அவள் பரிட்சை எழுதுகிறாளே என என் எண்ணத்தை அவர்களோடு பகிர முடியவில்லை.

அதற்குள்ளாக ஒரு பெண்மணி எனது இடது மணிக்கட்டை படித்துவிட்டு நான் இறந்து விட்டதாக சொல்கிறாள்.இதைக் கேட்ட பெண் போலீஸ் மனம் வருந்துகிறார் எப்படி இந்தம்மா இப்படி சொல்வாங்க என்று தலை ஆடுது அவருக்கு உயிர் இருக்கும் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்கிறார். ஆம்புலன்சுக்கு போன் பண்ணி வந்துகிட்டு இருக்கு என்று போலீஸ்காரர் சொல்கிறார். இப்போது என் மகள் வந்துவிட்டாள் அழுகிறாள் பக்கத்தில் நிற்கிறாள் என்னை தொட்டு அப்பா அப்பா என்கிறாள்.அழாதே எனக்கு ஒன்றும் இல்லை என அவள் கை பிடிக்க என் கையை நகர்த்தினேன் என்னால் நகர முடியவில்லை.

என் பெண் குழந்தையின் வயதை ஒத்த ஒரு பெண் குழந்தை என் முதுகை தட்டி குடுத்து எனக்கு சுவாசப் பயிற்சி கொடுக்கிறாள். ஆனால் என்னால் சுவாசத்தை உள்ளே இழுக்க முடியவில்லை. என் மகள் அழுது கொண்டிருக்கிறாள் ஆம்புலன்ஸ் வந்து விட்டது.அவர்களும் என்னை படுக்க வைத்து சுவாசப் பயிற்சி கொடுக்கிறார்கள் என்னால் மூச்சை உள்ளே இழுக்க முடியவில்லை. நான் இறந்து விட்டதாக அவர்கள் சொல்லி விட்டார்கள்.

நான் என் மகளோடு சில வார்த்தைகள் பேச நினைத்து பேசுகிறேன்.ஆண் இல்லாத வீட்டில் பெண் வெளியில் சென்று வந்தாலே வேறுமாதிரியாக பேசும் இந்த உலகம். இவ்வளவு நேரம் எங்கே சென்றாய் என பக்கத்து வீட்டில் கேட்பார்கள். உனக்கு எதற்கு இந்த துணி என்று உன் வீட்டாரே கேட்பார்கள்.சத்தமாக சிரித்தால் கூட சந்தேகத்தோடு பார்க்கும் இந்த உலகம். முயற்சித்து முன்னேறி விடு ஆனால் நீ முன்னேறுவதற்கும் உன் வாழ்வை புரட்டி போட்டு விடும் இந்த சமூகம்.நிறைய கேள்விகள் உன் முன்னே விரியும் சிலவற்றுக்கு பதிலும் சிலவற்றை கடந்தும் சென்றுவிடு.

நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன் நீ எங்கே பார்க்கிறாய் என்று அவள் தோள் தொட நினைத்தேன். பின்புதான் உணர்ந்தேன் நான் இறந்து விட்டேன் என. என் கோபங்களால் சிலரை இழந்தேன் என் அன்பிலும் கூட சிலரை இழந்தேன் காலதாமதத்தால் பலவற்றை இழந்தேன்…என் நினைவுகள் பின்னோக்கி செல்ல நான் இல்லாது போனேன்…என் மகள் மட்டும் என் உடலுக்கருகில் காத்திருக்கிறாள் அமரர் ஊர்திக்காக..