கட்டுமானம் சிறுகதை – லிங்கராசு

கட்டுமானம் சிறுகதை – லிங்கராசு




தூரத்தில் கார் வருவது தெரிந்ததும், கொத்தனார் தன் கீழ் வேலை செய்கின்ற தொழிலாளர்களை எச்சரிக்கை செய்யும் விதமாக,” ம் ம்….வேலை ஆவட்டும் ஐயா தூரத்திலே பாரு வந்துட்டு இருக்காரு” என்று குரல் கொடுத்தார்.

மம்பட்டி ஆள் சிமண்ட், மணல், தண்ணீரை கலந்து கலவையை உருவாக்குவதில் ஈடுபட, சித்தாள் சட்டியோடு ஓடி வந்தாள். சட்டியில் நிரப்பப் பட்ட கலவையை கரன்டியில் எடுத்த கொத்தனார் சீராக அடுக்கப் பட்டசெங்கல் மீது பூச ஆரம்பித்தார். ஏற்கனவே தண்ணீரில் ஊற வைக்கப் பட்ட செங்கல் கலைவையை தன்னோடு ஈர்த்துக்கொண்டது.

இப்படி ஒவ்வொரு செங்கலும் கட்டிடமாக உருவாகி கொண்டிருந்தது. மட்டப்பலகை வைத்து சீர் செய்வதும், ரச மட்டம் பார்ப்பதும் கொத்தனாரின் துல்லியமான பணிக்கு வலு சேர்த்து, கட்டிடத்தை மேலும் மெருகூட்டிக் கொண்டிருந்தது.

கார் கட்டிடத்தின் அருகில்வர, கொத்தனார் ஒரு வணக்கம் போட்டப்படி கருமமே கண்ணாயினார்.

“ஏனப்பா அங்கய்யா ரெண்டு வாரத்திலே வீட்டு வேலையே முடிச்சிப் போடுவியா? இல்லே இழுத்திட்டு இருப்பியா? சீக்கிரம் முடிக்கோணும்”

ஐயாவின் குரலில் அதட்டல் தெரியவில்லை. ஆனால் அதிகாரம் தெரிந்தது. இதை உணர்ந்தவராய், அங்கையா கொத்தனார்
“முடிச்சிப் போடலாங்க” என்று ஒரே வரியில் பவ்வியமாகப் பதில் சொன்னார்.

“இதையே எத்தனை வாட்டி சொல்லுவே …..போ” என்று எரிச்சலுடன் சொல்லியபடி மாரப்பன் கட்டிடத்தை சுற்றிப் பார்க்க முனைந்தார்.

அங்கையா மனதிற்குள் பொருமனார். ‘இன்னும் இரண்டு பேரை வைத்து வேலையை சீக்கிரம் முடிக்கலாம் என்றால் காசு செலவாகுமே என்று பதறும் இந்த மனிதர், வேலை முடியவில்லையே என்று அங்கலாய்ப்பது எந்த வகையில் நியாயம்?’

பொதுவாக புது பணக்காரர்களுக்கு வரவு மட்டுமே பிரமாதமாக இருக்க வேண்டும். செலவு என்றால் மூக்கால் அழத் தொடங்குவர். மாரப்பனுக்குத்தந்தை மூலம் கிடைத்த சொத்தை மேலும் பெருகச் செய்யும் சாமர்த்தியம் வாய்த்து இருந்தது. தென்னந்தோட்டத்தில் வந்த வருவாய் மூலம், சின்னதாய்த் தறிக் கூடம் அமைத்து ‘ காடா’ துணி உற்பத்தியை ஆரம்பித்தவர் மெதுவாக வளரத் தொடங்கினார்.

பணம் வளர குணம் தேய்வது இயற்கை தானே? ஆதிக்க சாதீய வன்மம் மரபணுவிலே இருக்கிறவர்களுக்கு, மாவட்டத்தில் தற்போது வேகமாய்ப் பரவி வரும் அபாயகர சிந்தனையும் சேர்ந்து விட்டால் எப்படி இருப்பார்கள்? மாரப்பன் இதிலும் வளர்ந்து கொண்டு வருகிறார். தன் தோப்பில் பணி செய்யும் தொழிலாளர்களிடம் அவர் காட்டும் சாதீய மனப்பான்மையே இதற்கு சான்று.

ஆனால் அவரின் மனைவி மயிலாத்தாள் சற்று நெகிழ்வுத் தன்மை கொண்டவர். அது தொழிலாளர்களைத் தக்க வைத்துக் கொண்டிருந்தது.

கட்டிடத்தை பெருமிதத்தோடு சுற்றிப் பார்த்த மாரப்பன் வேறு வழியில் சென்று காரை கிளப்பினார். அது வரை அமைதி காத்து வேலையில் மும்முரம் காட்டிய அங்கப்பன், ” ஏன்டா ஆறுமுவம் இவரு சொல்ற மாதிரி எல்லாம் வெசையா வேலையே முடிக்க முடியுமாக்கும்? இன்னொரு கொத்தனாரு மம்பட்டி ஆளு, சித்தாளு எல்லாம்வேணாம்?” என்று அலுத்துக் கொண்டார்.

“ஆமாண்ணா காசயே கடவுளா நெனைக்கிறவங்களுக்கு இதல்லாம் எங்க புரியப் போவுது” என்று மம்பட்டி ஆள் ஆதங்கப்பட்டான். சித்தாள் பாக்கியமும் யோசிக்க ஆரம்பித்தாள்.

மூன்று மாதங்களுக்குப்பின்னர் கட்டிடம் பிரமாண்ட இல்லமாக ஜொலித்தது. புது மனை புகுவிழாவை நடத்தும் முயற்சியில் மாரப்பன் இறங்கினார். முக்கிய பிரமுகர்கள் மற்றும் நெருங்கி சொந்தங்களை மட்டுமே அழைக்க விரும்பினார். வசதி வாய்ப்பிருந்தும் விழாவைப் பெரிதாக நடத்தும் மனநிலையில் மாரப்பன் இல்லை.

வீட்டைக் கட்டி முடித்த கொத்தனார் அங்கப்பனை அழைத்து மரியாதை செய்யும் நோக்கமும் அவரிடத்தில்
கிஞ்சித்தும் இல்லை என்பதையும் சொல்ல வேண்டும். ஆனால் மயிலாத்தாளுக்கு அந்த எண்ணம் இருந்தது. கொத்தனார் அங்கப்பனையும் மற்ற இருவரையும் பார்த்து, ” ஏனுங் கொத்தனாரே ஊட்டு விஷேசத்துக்கு மூணு பேரும் வந்துரோணம் ” என்று அழைப்பு விடுத்தார். வீட்டு வேலை அனைத்தும் முடித்து பணத்தை வாங்கிய அங்கப்பனுக்கு இந்த அழைப்பு மன மகிழ்ச்சியை தந்தது.

எத்தனையோ வீடுகளை அமைத்து கொடுத்த அங்கப்பனை ஒரு சிலர்தான் மதித்து அழைப்பு விடுப்பார்கள். அதில் மயிலாத்தாவும் ஒருவராகிஇருந்தார்.” சரிங் அம்முணி வந்துரோமுங்க” அங்கப்பன் பவ்வியமாக பதில் சொன்னார்.

புது மனை புகு விழா களை கட்டிக் கொண்டிருந்தது. மாரப்பனும் மற்ற இருவரும் பந்தலுக்கு போடப்பட்ட சேர்களில் அமர்ந்துபேசிக் கொண்டிருந்தனர். விருந்தினர்களை வரவேற்றுக் கொண்டிருந்த மாரப்பன் தற்செயவாக இவர்களைப் பார்த்து அதிர்ந்து போனார்.

‘இவனுங்கள ஆரு கூப்பிட்டா? ஊட்டு வேலை முடிஞ்சாச்சி பெற கென்ன இங்க வேல?’

“ஏய் மயிலா இந்தாள வா இந்த கொத்தனாரை எல்லாம் யாரு வெத்தல பாக்கு வெச்சி அழைச்சாங்க… ஒறவுமொறை எல்லாம் வர்றநேரத்திலே…..”.என்று பக்கத்தில். வந்த மனைவி மயிலாத்தாளிடம் கோபமாய் கிசு கிசுத்தார்.

“ஏனுங்க நான்தானுங்க வரச்சொன்னேன். ஒரு வா(ய்) சாப்பிட்டு போகட்டுமேன்னு…….” அவர் முடிக்கவில்லை.

” உன் இஷ்டத்திற்கு செய்வியா? என்னையே ஒருவார்த்த கேக்க மாட்டே? கருமாந்திர புடிச்சவள” மாரப்பனின் கோபம் கீழ் ஸ்தாயில் ஒலித்தது. மயிலாத்தாள் கலங்கிப் போனார்.

“அவியள பொடக்காழி பக்கமா போகச் சொல்லு போ….” உறுமினார் மாரப்பன்.

மயிலாத்தாள் அவர்களை நெருங்கி, ” ஏனுங்க ஒறவுமொறை எல்லாம் இன்னம் வருவாங்க நீங்க பொடக்காழி பக்கமா போவிங்களாமா நான் இதோ வந்திர்றேன்” என்று ஆதங்கத்துடன் சொன்ன மயிலாத்தாள் அவர்களின் முகத்தைப் பார்க்க தைரியமில்லாது அந்த இடத்தை விட்டு உடனேசென்றுவிட்டார்.

“ஏண்ணா நாம வந்திருக்க வேணாமோ?……” என்று முருகன் அங்கப்பன் காதில் கிசு கிசுத்தான்.

“அவசரப் படாதே அம்முணி கூப்பிட்டாங்க அந்த மரியாதயே நாம் காப்பத்தணும் இல்லே.. அதுவும் இல்லாம நாளைக்கே ஏதும் வேலை இருந்தா அம்முணிநம்மள தான் கூப்பிடுவாங்க அதையும்பார்க்கணும்.” அங்கப்பன் தொலை நோக்கு பார்வையோடு பேசினார்.

சற்று தளர்வான நடையோடும், இறுக்கமான மனதோடும் அங்கப்பன் ‘ பொடக்காழி’ என்று சொல்லப்பட்ட வீட்டின் பின் வாசலுக்கு மற்ற இருவரோடும் வந்தார். அங்கு எந்த ஆசனமும் இல்லை அமர்வதற்கு. மூன்று பேரும் நின்று கொண்டே இருந்தார்கள்.

நேரம் ஓடிக்கொண்டு இருந்தது. மாரப்பன் பின் வாசலையொட்டிய அறைக்கு வந்தவர், இவர்கள் நின்றதை கவனிக்காததை போல் பாவனை செய்து கொண்டு, சேர் மேல் ஏறி நின்றுபரண் மீது எதையோ துழாவினார். துழாவியவர் திடீரென்று சரியத் தொடங்கினார். சேரிலிருந்து சரிந்து விழுந்தால் என்னாவது?

உடனே பாய்ந்து வந்த அங்கப்பன் அவரைத் தாங்கிப் பிடித்தப்படி,” முருகா… ஓடிவா…ஐயா மயங்கிட்டாரு போல..பாக்கியம் நீ ஓடிப்போய் அம்முணிய கூட்டிவா” என்று கத்தினார்.

வெற்று வயிறு . அதோடு மாத்திரையும் போடவில்லை மாரப்பன் மயங்கி விட்டார்

சிறிது நேரத்தில் அந்த இடமே பரப்பரப்பானது. மயிலாத்தாள் அதிர்ச்சியுடன் ஓடி வந்தார். உடன் உறவினர்களும் குவிந்தனர். தரையில் மெதுவாகப் படுக்க வைத்த அங்கப்பன் அவர் முகத்தில் தண்ணீரை தெளித்தார்.

“ஏனுங்க…….ஏனுங்க…என்ன ஆச்சு….கண்ண தொறங்க” என்று புலம்பிய மயிலாத்தாள், கணவரை உலுக்கினாள். மெல்ல கண் விழித்தார் மாரப்பன். தலைமாட்டில் அனைவரும் சுற்றி நிற்க, அங்கப்பப்பன், முருகன், பாக்கியம் மூவரும் கால்மாட்டில் நின்று கொண்டிருந்தனர்.

“ஏன்டா ஒங்களை எல்லாம் யாருடா உள்ளார விட்டது? எல்லாம் போச்சு! ஏய் மயிலா வீட்ட தண்டி விட்டு அலம்புடி….”

“ஐயா மன்னிச்சிருங்க நீங்க கீழ விழப்போறிங்கனுதான நாங்க உள்ளார வந்து புடிக்கும் படி ஆயிடுச்சி……”

“நான் செத்தெ போனாலும் போறேன்….நீ என்னத்துக்குஉள்ளார வந்தே ? வெளியிலே போங்கடா…..” மாரப்பன் கத்தி கூப்பாடு போட்டார்.

தலை கவிழ்ந்தப்படி மூவரும் வெளியில் வந்தனர். அத்தனை பேர் மத்தியில் அவர்களுக்குக் கிடைத்த மரியாதையை அவர்கள் வாழ் நாளில் மறப்பார்களா?

அங்குல அங்குலமாகத் தன் பாதம் பட்டு உருவான வீட்டுக்குள் தம்மால் இனி போகவே முடியாத படி தடுத்தது எது? ஏன் எப்படி? ‘வேற ஆளா பொறந்திருந்தா, நமக்கும் வேட்டியெடுத்துக் கொடுத்து சபைல மரியாத செஞ்சிருப்பாரு.. ஹும் ,,, நாம செய்யற கட்டுமானத்த விட கெட்டிப்பட்டு நிக்குது சாதி’ என்று கசந்தபடி நடக்கலானார்.

– லிங்கராசு