நூல் அறிமுகம்: ஈரோடு கதிரின் திரை எனும் திணை – விஜிரவி
ஈரோடு கதிர் அவர்கள் எழுத்தாளர், பேச்சாளர், மனிதவள மேம்பாட்டாளர், பயிற்சியாளர் என பன்முகம் கொண்ட ஒரு படைப்பாளர். இதுவரை மொத்தம் ஐந்து புத்தகங்கள் எழுதியுள்ளார். இவரது மூன்றாவது புத்தகமான ‘உறவெனும் திரைக்கதை’ பல்வேறு மொழித் திரைப்படங்களைப் பற்றி இருபத்தைந்து கட்டுரைகளில் பேசுகிறது.
‘திரை எனும் திணை’ நூல் அவரின் ஐந்தாவது புத்தகம். மொத்தம் 20 கட்டுரைகளை கொண்டது. தமிழ் தவிர்த்து மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் இந்தி போன்ற பல்வேறு மொழித் திரைப்படங்களை அலசி ஆராய்ந்து, உற்றுநோக்கி, ஆழ்ந்து ரசித்து, அழகிய நடையில் அதன் சாராம்சத்தை தந்திருக்கிறார். அதனோடு கூட பொருத்தமான வாழ்வியல் சம்பவங்களை இணைத்திருப்பது பெரும் சிறப்பு. இந்தப் புத்தகம் உளவியல் சிக்கல்களை பற்றி பேசுகிறது. பிரச்சனைகளை அலசுகிறது. தீர்வுகளையும் சேர்த்தே முன்வைக்கிறது
திரைப்படங்கள் பார்ப்பது கதிருக்கு மிகப் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு. தன் தேடலுக்கான புதையலாய், உடன் பயணிக்கும் ஜீவனாய், ஆசுவாசமாய் ஒதுங்கும் கதகதப்பான தாய்மடியாய் நினைப்பது திரைப்படங்களைத் தான். திரைச்சாளரத்தின் வழியே யார் ஒருவரும் உலகின் எந்த ஒரு மூலைக்கும் செல்லலாம் என்கிறார். பூவின் மடி, முள்ளின் நுனி, நம்பிக்கையின் வேர், அன்பின் ஈரம், துரோகத்தின் வலியை உணரலாம் என்கிறார். இந்தப் புத்தகத்தை வாசிக்கும் வாசகரும் இந்த அனுபவங்களை உணர வைப்பது இதன் சிறப்பு.
மனித மனங்களின் நுட்பமான உணர்வுகளை தெள்ளத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நூல். கோபம் என்ற உணர்ச்சி ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கிறது? அது தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் சேர்த்து எப்படி துன்பப்படுத்துகிறது என விளக்குகிறார் ஒரு கட்டுரையில்.
கோபத்தின் பிறப்பிடம் எங்கே…..?
‘‘காலம் காலமாய் சேகரம் ஆனது சிதறித் தெரிக்கிறதா…? இல்லை நொடிப்பொழுதில் முளைத்துக் கிளைத்து வெடித்துப் பிளந்து வந்து வீழ்த்தி மாய்க்கிறதா..?’’ என்று ஒரு கேள்வி எழுப்புகிறார் ஆசிரியர்.
கோபமான ஒரு சொல், உணர்வு, செயல், தொடுகை, பார்வை போதும் ஒரு மனிதனை மிருகமாக்க…. கோபம் என்ற உணர்ச்சி வடிந்த பின் எதை சேகரிக்கப் போகிறீர்கள் அந்த போர்க்களத்தில்…..? இறந்துபோய் கிடக்கின்ற உடல்களையா…? உறைந்து கிடக்கும் ரத்தக் குளத்தையா? இல்லை துடிக்கும் உயிர்களையா…?’ என்ற அவரின் கேள்வி அதிர்ச்சியளிக்கிறது.
கோபத்தை அவர் தீராப்பசி கொண்ட ஒரு மிருகமாக உருவகம் செய்கிறார். பசி கொண்ட ஒரு மிருகம் அதன் இரை கண்ணில் பட்டால், அடித்துத் தின்றுவிட்டு, பசி அடங்கிய பின் படுத்து ஓய்வெடுக்கும். ஆனால் கோபம் என்ற உணர்ச்சி கொண்ட மிருகத்தின் பசி என்றும் அடங்கப் போவதில்லை என்று சொல்கிறார்.
சமூக வலைதளங்களில் பொறுப்பில்லாமல் பகிரப்படும் காணொளிகளை கண்டிக்கிறார். அது சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய துன்பத்தை சேர்க்கும் என்ற அடிப்படை அறிவும், யோசனையும் இல்லாமல் பகிரும் நெட்டிசன்களுக்கு ஒரு குட்டு வைக்கிறார். அதிலும் எதிர்மறையான கருத்துக்களைப் பகிரும் காணொளிகள் ‘ ஏழு தலைமுறைக்கான எதிர்மறை’ என்கிறார் அழுத்தம் திருத்தமாக.
இந்தப் புத்தகத்தில் பெண்களின் நுண்ணிய மன உணர்வுகளை, வேதனைகளை, காலம் காலமாய் அவர்கள் அனுபவித்து வரும் அடக்குமுறையையும் மிக சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கிறார். பெண் எழுத்தாளர்கள் மட்டுமே எழுதத் துணிந்த மாதவிலக்கு பிரச்சனை பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். எத்தனை ஆண்கள் ஒரு பெண் உபயோகப்படுத்தும் நாப்கினை கையால் தொட்டுப் பார்த்திருக்கிறார்கள்? ஏன் எப்போதும் பெண்களின் மாதவிலக்கும், அது குறித்த விஷயங்களும் ஆண்களுக்கு அன்னியமாகவும் இரகசியமாகவும் வைக்கப்படுகிறது என்று கேட்கிறார். ஒரு பெண் தனக்கு இன்று மாதவிலக்கு. அதனால் இன்று லீவு தேவை என தன் ஆசிரியரிடமோ, மேல் அதிகாரியிடமோ சொல்லத் தயங்குவது ஏன்..?
பெண் குறித்த தவறான கோட்பாடுகளையும் கொள்கைகளையும் வைத்திருக்கும் சமூகத்தை சாடுகிறார் ஒரு பெண் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வரையறுக்கும் அதிகாரத்தை சமூகத்திற்கு யார் கொடுத்தது?
தன் துணையை இழந்த ஆணோ அல்லது பெண்ணோ தன் முதுமைக் காலத்தில் தன்னுடன் இருக்க துணை தேடும் போது அதனை இந்த சமூகமும், உறவுகளும், நட்புகளும் எதிர்ப்பது ஏன்…? பரஸ்பர புரிதலுடன் கூடிய துணை எவ்வளவு அவசியம் என்பதை அழகாகச் சுட்டிக் காட்டுகிறார்.
வாழ்க்கைப் பற்றிய இவரின் கண்ணோட்டம் மிக அழகானது. முழுக்க முழுக்க நேர்மறைகளையோ அல்லது முழுவதும் எதிர்மறைகளையோ கொண்டதல்ல வாழ்க்கை. ஒவ்வொருவருக்கும் வாழ்வு என்ன தருகிறதோ அதை அப்படியே எதிர்கொள்ளுவது தான் அழகு. வாழ்ந்து பார்த்து விடவேண்டும் இந்த வாழ்க்கையை என்ற சொற்கள் மிகப் பெரும் உத்வேகம் தருகிறது.
‘‘ வாழ்வை ரசிப்பவர்களை, கொண்டாடுபவர்களை அந்த வாழ்க்கைக்குள் அவர்கள் கண்டடையும் ஏதோவொன்று பிரயமுடன் ஒட்டியணைத்து, அவர்கள் விரும்பும் வண்ணம் இயக்கி நகர்த்துகிறது’’
‘வாழ்வு என்பது மரணத்திற்கு எதிரான நிலை’ என்ற கட்டுரையின் இறுதி வரிகளாக மேற்கண்ட வரிகள் அமைந்து பெறும் நம்பிக்கையை வழங்குகின்றன.
கட்டுரைத் தலைப்புகள் கவித்துவமாகவும் பொருத்தமாகவும் அமைந்திருப்பது சிறப்பு. சமூகத்திற்கு மிகவும் தேவையான கருத்துக்களை உள்ளடக்கிய இந்த புத்தகம் ஒரு கருத்து பெட்டகம் என்பதில் ஐயமே இல்லை. மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் அருமையான நூல் இது.
நூல் : திரை எனும் திணை
ஆசிரியர் : ஈரோடு கதிர்
பதிப்பகம் : வாசல் படைப்பகம்
விலை: 150
விஜி ரவி.
அப்பாவின் முகங்கள் கவிதை – கண்ணன்
வீட்டினுள் ஒன்று
வெளியே வேறொன்று
வெளியே சிரித்த முகம்
வீட்டினுள் கடுத்த முகம்
கையிலே பணமிருப்பின்
அவரைப் போல் யாருமில்லை
மாதக் கடைசியில்
காலடிச் சத்தத்திற்கே
வீடே மௌனமாகும்
திண்ணையில் பேசுகையில்
கேட்டே விட்டேன் அப்பாவிடம்
‘பாசமே இல்லையாப்பா?’
அப்பா சொன்னது
அப்போது புரியவில்லை
பணமில்லாப் பொழுதுகளில்
இணையர் என்னைக் கேட்கும் வரை
‘ஒங்கள விட்டுட்டா நான்
யாருக்கிட்டப்பா
கோவப்படமுடியும்?’
கார்கவியின் கவிதைகள்
கூடி விளையாடுவோம்
******************************
அழகிய கருவை மரம்
அதனடியில் நிழல் கைப்பிடித்து
கூட்டாஞ்சோறு படையல்
புது புது காய்கறி வாங்கி
புன்னகைகொண்டு
சமைக்க முனைந்து
தக்காளி சிறு துண்டு
வெங்காயம் பல உண்டு
வெண்சோறு வெந்தும் வேகாமல்
விருந்து ஒன்று தயாராகிறது
நிழல் விலகி தூரம் செல்ல
கையைப் பிடித்து நகரும் குழுந்தை
தூரத்தில் யாரும் இல்லை
உடன் விளையாட ஒருவருமில்லை
பரந்த கருவையிடம் பேச்சைக் கடந்து
சமையல் உணவைப் பந்தியிட்டு
சிறு சிறு கோபம் கொண்டு
வெந்தும் வேகாத சோறு
அகலமான பூவரச இலையொடு
சோறாக ஒரு மண்
மீனாக பல கற்கள்
கீரையாய் கருவையிலை
நீராக குளத்து நீர்.
யாருமில்லை என எண்ணாது
இருக்கும் இயற்கையை நட்பாய்ப் பாவித்து
நடக்கிறது விருந்து
ஒருபோதும் தனிமையை வேண்டாம்
இறுகப் பிடித்த கருவை நிழல் கதிரவன் சாய்ந்ததும்
கை நழுவிச் சென்றிட
விருந்தில் உப்பின்றி
கண்ணீரில் நிரப்புகிறது குழந்தை
இனியும் கூடி விளையாடுவோம்…
நகம் பட்டு கிழியுமா வானம்
**********************************
ஓய்ந்து அமர்ந்துவிட்டால்
ஓடும் நீரும் சிரித்து கொண்டே செல்லும்
பயம் என்று நீ எண்ணினால்
கரப்பான் பூச்சியின் கொம்புகள் கூட
காளையின் திமிலை கண்முன் நிறுத்தும்
கால்களின் வலி
கண்டிப்பாக உன்னை
வெற்றிக் கோட்டைத் தாண்டிப் பயணிக்க செய்யும்
எடைத்தாங்க மறுத்தால்
எத்தனைப் பேரை தள்ளிவிடும்
அந்த எடைதாங்கி
இயற்கையை வெறுத்தால்
இயலாத மனிதர்களையும்
எப்படித் தாங்கும் அந்த இடிதாங்கி
உறக்கம் கொடுத்த படுக்கைகள்
திசைகளைப் பார்த்து திரும்புவது இல்லை
மிதிபடும் என அறிந்த புற்கள்
முளையாமல் மண்ணுக்குள் புதைவதில்லை
வானை மீறிய மின்னல் ஒளி
வாசல் வர விரும்புவது இல்லை
இயற்கையில் விளைந்த இரும்பு கொண்டால்
உனை உரசிப்பார்க்கத் தயங்குவதில்லை
முயற்சியை முதிகெலும்பில் பொருத்தி
நம்பிக்கையைக் குருதியுடன் இணைத்து
வாழ்க்கையைப் பட்டியிலில் நிறுத்தி
வெற்றியை தராசில் உன்பக்கம் பொறுத்து..
தயக்கம் மறந்து பறந்திடு
வெற்றி உனக்கென சிறந்திடு
வாழ்க்கையை நினைத்துத் தயங்காதே
விரல் தாண்டிய நகங்களால்
வானம் ஒருபோதும் கிழிவதில்லை…
நான் ஆண்
**************
அம்மையின் கர்ப்பத்தில் அப்பனின் உயிர் நிரம்ப
அதிகளவு அப்பன் அன்பால் ஆணாக நான் பிறந்தேன்..
உடன் பிறப்புகள் வந்து பிறக்க
பிற்கால நிலை அறியாத
ஒண்ணுமண்ணுமாக காலம் கொண்டேன்..
படிப்பு நிறைந்தது,வேலை குறைந்தது
தங்கை பெரியவள் ஆனாள்..
அக்காள் அடுத்த வீட்டிற்கு தயாரானாள்
பணம் மட்டும் என் வீட்டையும்
பாக்கெட்டையும் சேர மறுத்தது
இருக்கும் வரை எல்லாம் செய்து
ஏதும் இருப்பு என இல்லாமல் சென்றனர்
என் தெய்வங்கள்..
பலர் முயற்சி செய் என்றனர்..
பலர் உன்னால் முடியாதது இல்லை என்றனர்..
எனைக் கண்டு மேல்நிலை வந்தவர் பலர்..
என் நிலை மட்டும்
தரையை மீறாத செருப்பாகத்
தேய்ந்தும் அறுந்தும் பயணிக்கிறது..
நிறைவாக வாழ்ந்தவர் இருந்தால்
கண்முன் வாருங்கள்.
கற்றுக்கொள்ளக் காத்திருக்கிறேன்..
கனமான மனதுடன்…
பாலைப் பறவையின் குரல் கவிதை
தப்பு நடக்குது தப்பு நடக்குது
பாதிக்கப்பட்டவர் புலம்புகிறார்
மற்றவர்கள்
போரடிக்கிறார் என்கிறார்கள்
படகின் இருமருங்கிலும்
அழியும் கோலங்களை
தூறல் போடுகிறது
கனிகள் கனிந்திருக்கின்றன
பசி தீர்ந்த பறவைகள்
விநோதங்களைப் பாடுகின்றன
வழிப்போக்கர்கள் செல்லும்
வழியில் அந்தமரம்
நட்டவர் யாரென்று தெரியவில்லை
பினாமிகள் சொகுசாய் வாழ்கிறார்கள்
எடுபிடிகள் சந்தோஷத்தில் திளைக்கிறார்கள்
அடுத்த வேளை உணவு உனக்கும் எனக்கும் உத்தரவாதம் இல்லை
உன் கோபம் எனக்கும் இருக்கிறது
உன் வன்மம்
என்னையும் ஆட்டிப்படைக்கிறது
வஞ்சகத்தை வேரறுக்க
காலம் கூராகிக் கொண்டிருக்கிறது
அன்பாயிருங்கள்
நதி தவழ்ந்து செல்லட்டும்
வனத்தில் சகல ஜீவராசிகளும் வாழ்ந்து பெருகட்டும்
வாலை ஆட்டியது மகிழ்ந்தேன்
காலை நக்கியது குளிர்ந்தேன்
கடிக்க விரட்டுகிறது
வைதபடி ஓடுகிறேன்
கனவை வரைய பணிக்கிறான் ராட்சசன்
பல் வண்ணங்கள்
குவிந்து கிடக்கின்றன
வெண் வண்ணத்தில் வரைய முனைகிறேன்
கனவுகளைப் பின்தொடர்கிறது பிரமிப்பு
அறியாத தேசத்தின்
கதவுகள் திறக்கின்றன
ஒளிர் துகில் அணிந்த
ஒருத்தி வரவேற்கிறாள்.
– வசந்ததீபன்
தொடர் 4: ஜானி ரொடாரியின் இத்தாலிய தொலைப்பேசிக் கதைகள் (கைத்தடி ரேஸ்) – தமிழில்: ஆயிஷா. இரா. நடராசன்
கைத்தடி ரேஸ்
அந்த சிறுவனின் பெயர் கிளாடியோ. அவனுக்கு உங்கள் வயதே இருக்கும். ஆனால் பெரும்பாலும் தனியாகத்தான் விளையாடுவான். கையில் கிடைக்கும் எல்லா பொருட்களும் அவனது நண்பர்கள் ஆகிவிடும். சில சமயம் வெறும் கைகளே அவனோடு விளையாடும்.
கொஞ்சம் சூரியஒளி…. அப்புறம் அவனது கை. அதுவே மான், நாய், பருந்து, வாத்து என நிழல் விளையாட்டு மிக அற்புதமாக இருக்கும்.
ஆனால் இப்போது அவனிடம் ஒரு விளையாட்டு பொருள் உண்டு. கைத்தடி அது மேலே வளைந்து கொக்கி வடிவில் இருந்த மூங்கில் தடி. அதை அவனும் ஆரம்பத்தில் சாதாரணமாகத்தான் நினைத்தான்.
இன்று காலையில்தான் அது அவன் கைக்குக் கிடைத்தது. எப்படி தெரியுமா.
அவன் வீட்டு வாசலில் ஒரு புன்னை மரம் உண்டு அதனடியில் நிழலாக இருக்கும் அங்கே அணில்கள் உண்டு. அவன் அவற்றின் ஓட்டங்களை கண்டு அவற்றை விரட்டி விளையாடினான்.
அப்போது வீதிவழியே ஒரு தாத்தா நடந்து போனார். கிளாடியோ அவரைப் பார்த்ததே கிடையாது. அவர் உயரமாக இருந்தார். பனித்தொப்பி அணிந்து இருந்தார். தோல் ஷீ அணிந்திருந்தார். அவர் கையில் தான் அந்த கைத்தடி இருந்தது. சிவப்புநிற கைத்தடி.
அவரை பார்த்து அவன் வணக்கம் என்றான். அவனிடம் அந்த நல்லப் பழக்கம் இருந்தது. வயதானவர்களைப் பார்த்தால் வணக்கம் தெரிவிப்பது.
தாத்தா பதிலுக்கு ‘வணக்கம்… தம்பி இன்றையநாள் உனக்கு சிறப்பாக அமையட்டும்’ என்று கூறி அந்த கைத்தடியை அவனிடம் கொடுத்தார்.
‘இந்தா… விளையாடிக் கொண்டிரு… நான் திரும்பி வரும் வரை விளையாடு’ என்று கூறினார்.
பிறகு அவர் நடந்து சென்றுவிட்டார்.
கிளாடியோ தன் கையில் இருந்த கைத்தடியை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
முதலில் இப்படியும் அப்படியும் சுழற்றினான். வளைந்த மேல் முனையை கையில் பிடித்து அதை முழுவட்டமாக காற்றில் சுழல வைத்தபோது… பறக்கும் உணர்வு ஏற்பட்டது.. அந்தக் கைத்தடி ஒரு மாயக் கைத்தடியாக கிளாடியோவின் விளையாட்டு உலகில் மாற்றம் அடைந்தது இப்படித்தான்.
கைத்தடியை வளைந்த முனை முன்னே இருப்பது போல் பிடித்து அதன்மேல் உட்காருவது போல இருகால்களுக்கு நடுவே விட்டான்…என்ன அதிசயம் அது குதிரையாக மாறியது.
அவனை சுமந்து அது அந்தக்குதிரை கடக் கடக்…. கடக் கடக் என்று வட்டப்பாதையில் ஆரம்பத்தில் மித வேகத்திலும் பிறகு… அதிவேக குதிரையாகி மின்னல் வேகத்தையும் எட்டியது.. எத்தனையோ தொலைவு அவன் வந்துவிட்டிருந்தான்.
அவனது கால்கள் தரையை உணர்ந்தபோது ரொம்ப சாதுவாக பழையபடி கைத்தடியாகி இருந்தது.
இருமுறை காற்றில் முன்புபோல சுழற்றினான். பிறகு அதேபோல கால்களுக்கு நடுவே வைத்து பிடித்தான். என்ன அதிசயம். அது அவனது சைக்கிளாகி இருந்தது. கிளிங்… கிளிங்… அவன் மணி ஒலித்தபடியே அந்த சிவப்புநிற அழகு சைக்கிளில் ஒய்யாரமாக வலம் வந்தான் கடைவீதி வரை சென்றான். பிறகு பள்ளிகேட் வரை போனான். அப்புறம் ஊரின் எல்லைவரை சென்று தொட்டுத்திரும்பினான். கிளி…. கிளிங்.. கிளி..கிளிங் சத்தம் அடுத்த பலமணிநேரங்கள் ஒலித்துக்கொண்டே இருந்தது.
கால்கள் தரையை உணர்ந்தபோது அது பழையபடி கைத்தடியாக மாறியது. இப்போது மூன்று முறை அதை காற்றில் வட்டமிட சுழற்றினான்.
இந்தமுறை அவனது கால்களுக்கு நடுவே அவன்பிடித்து அமர்ந்தபோது அவனுக்கு ஒரு ரேஸ்கார் கிடைத்தது. நீள்வட்டப்பாதையில் மற்ற ரேஸ்கார்களை முந்தியபடியே விர்… ரூம்… என்று கிளாடியோவின் சிவப்புநிற ரேஸ்கார் சென்றது.
விர்…. ரூம்…. விர் ரூம்… அவ்வளவுதான் அது முடிவுக்கோட்டை தொட்டு முதலிடம் பிடித்தது….. அரங்கமே எழுந்து நின்று பலத்த கரவொலி மூலம் ஆரவாரமிட்டு வாழ்த்தியது…. கிளாடியோ முகம் சிவக்க தலைதாழ்த்தி கோப்பையை ஏற்றான்.
அடுத்தமுறை அதே கைத்தடி என்னவாக மாறியது தெரியுமா… விண்வெளி ராக்கெட்டாக மாறியது. விர் ரூட்…. அவன் நொடியில் விண்வெளியில் இருந்தான். சூரியக் குடும்பத்தின் எல்லா கோள்களின் வழியாகவும் அவனது விண்வெளி ஊர்தி பயணித்தது.
சிவப்புக்கோளான செவ்வாய் கிரஹம். பிரமாண்ட கோளான வியாழன் கிரஹம், பளபளத்து மின்னும் வெள்ளி கிரஹம் பிறகு அந்த விண்வெளி ஊர்தி சனிக்கோளின் வளையம் வழியே வழுக்கியபடி ஓடியது.
கிளாடியோ வகுப்பில் கற்றதை எல்லாம் நேரில் அனுபவித்துக் களித்தான்.
கால் தரையை உணர்ந்த போது. அவன் எதிரே அந்த தாத்தா நின்று கொண்டிருந்தார்.
கைத்தடியை திரும்பப் பெற்றுக் கொள்ள வந்து விட்டார் என்று நினைத்தான் கிளாடியோ.
அவனுக்கு எரிச்சலும் ஏமாற்றமும் ஏற்பட்டது.
கைத்தடியை இறுகப் பற்றிக்கொண்டான்.
‘தரமுடியாது…’ என்பதுபோல அதை மார்போடு அணைத்தான்.
‘உனக்கு அதை பிடித்திருக்கிறதா’ அவர் கேட்டார்.
‘ரொம்ப… பிடித்திருக்கிறது’ பதட்டத்தோடு சொன்னான் கிளாடியோ.
‘நீயே … அதை வைத்துக்கொள்ளலாம்… எனக்கு அது இனிதேவை இல்லை’ என்றார் அந்த பனித்தொப்பி தாத்தா..
அவன் ஆச்சரியத்தோடு பார்த்து நிற்க அவர் நடந்து போய்விட்டார். தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அவன் உணர்ந்தான்.
ஆனால் எவர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார் என்பதை அவன் உணரவில்லை.
உலகிலேயே சந்தோஷமான முதியவர்கள் யார் தெரியுமா.. குழந்தைகளுக்கு ஏதாவது ஒன்றை பரிசாக அளித்து அவர்களின் முக மலர்ச்சியை கண்டு ரசிப்பவர்கள்தான்.
தொடர் 3: ஜானி ரொடாரியின் இத்தாலிய தொலைப்பேசிக் கதைகள் (பிரீஃப், பிராஃப், புரூஃப்) – தமிழில்: ஆயிஷா. இரா. நடராசன்
பிரீஃப், பிராஃப், புரூஃப்
அவர்கள் விதவிதமாக விளையாடுவார்கள் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டு சிறார்கள் அவர்கள் அவன்பெயர் பெலூட்டி. ஆறு வயது 2 மாதம். அவள் பெயர் மெலன். எட்டுவயது 3 மாதம்.
ஒரு நாள் அவர்கள் புதிதாக ஒரு பொம்மையை செய்தார்கள். அதை பார்த்து அதுபோலவே இன்னொரு பொம்மையை செய்தார்கள்… அன்று முழுவதும் பொம்மை செய்யும் விளையாட்டு விளையாடினார்கள்.
பிறகு ஒரு நாள் கட்டம் வட்டம் என்று ஒரு புதிய விளையாட்டை கண்டுபிடித்தார்கள். குடியிருப்பு அடுக்குமாடிகள் படிக்கட்டுகள் பாதைகள் எங்கும் சாக்கு கட்டியால் கட்டம் – வட்டம் வரைந்து தள்ளினார்கள்.
பெலூட்டியிடம் ஒரு மூங்கில் கழி இருந்தது. மெலனிடம் நான்கு தேங்காய் மூடி சில்லுகள் இருந்தன… உருவானது கழிவண்டி.. இந்த வண்டி விளையாட்டு ஒருவாரம் ஓடியது.
அப்புறம் காற்றில் எழுதும் விளையாட்டு இரண்டுவாரம் தொடர்ந்தது. மெலன் ஏதாவது ஒரு சொல்லை தனது குட்டி ஆள்காட்டி விரலால் காற்றில் எழுதுவாள்…. பெலூட்டி அதை கண்டறிந்து சத்தமாக அறிவிப்பான் முதலில் வெறும் எழுத்துக்களாக தொடங்கிய விளையாட்டு அது. பெலூட்டி வாக்கியமே எழுதுவான். அதை மெலன் வாசித்து கண்டுபிடித்து அறிவிப்பாள்.
மூன்று வாரம் ஓடிய விளையாட்டு அதைவிட வினோதமானது. அதற்குப்பெயர் ‘ நண்பர்கள்‘ விளையாட்டு நண்பர் விளையாட்டு பற்றி குடியிருப்பில் கூட பேசிக் கொண்டார்கள். விலங்குகளின் ஒலியை அவர்கள் பரிமாறிக்கொண்டார்கள். பெலூட்டி மாடுமாதிரி கத்துவான். மெலன் ஆடு போன்று கத்துவாள் . அவை ஒன்றை ஒன்று எதுவும் செய்யாது. மயில்…. குயில் …. காக்கை ….. குருவி. எலி , அணில் இப்படி ஒன்றை ஒன்று கொன்று சாப்பிடாதவைதான் ‘நண்பர்கள்‘ மான்போல ஒருத்தர் கத்திட நீங்கள் புலிபோல கத்திவிட்டால் அவுட்.! அணில் போல கீரிச்சிட்டு மற்றவர் காக்காபோல கத்தினாலும் அவுட். மூன்று வாரம்…. இருவரில் ஒருவரும் அவுட் ஆகாத நிலையில் ஆட்டம் சலித்தது.
அப்புறம் ஒருநாள், ஒரு மாதமும் கடந்து ஓடிய ஒரு விளையாட்டை அவர்கள் கண்டுபிடித்தார்கள். அந்த விளையாட்டு இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. அது ஒரு கற்பனை விளையாட்டு.
அந்த குடியிருப்பு கட்டிட வீடுகளில் மாடிகள் உண்டு எதிர்எதிர் மாடிகளில் வயதான இருவர் வசித்தனர். கே பிளாக் மாடியின் வெளி-மாடத்தில் ஒரு மூதாட்டி எப்போதும் உட்கார்ந்திருப்பார். அவர் குளிர்கால கோட்-ஸ்வெட்டர் பின்னியபடியே இருப்பார். ஆனால் அவர்கள் விளையாடுவதை நிறைந்த புன்னகையோடு வேடிக்கை கபார்த்ததபடியே இருப்பார்.
அதற்கு நேர் எதிரே எஸ் –பிளாக் – வெளிமாடத்தில் ஒரு தாத்தா எப்போதும் உட்கார்ந்திருப்பார். ஒரு தடி புத்தகத்தை படித்தப்படியே இருப்பார். அவரும் அவர்கள் விளையாடுவதை கவனித்த படி இருந்தார்.
அவர்களது புதுவிளையாட்டு இருவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அவர்கள் ஒரு புதிய மொழியை கண்டுபிடித்து இருந்தார்கள்.
‘பிரீஃப்… பிராஃப்’ என்றாள் மெலன்
‘புரூஃப்… புரூஃப்’ என்றான் பெலூட்டி
பிறகு இருவருமாக சேர்ந்து கலகலவென்று சிரித்தார்கள்.
தாத்தா எரிச்சல் அடைந்தார்.
பாட்டி .. புன்னகைத்தார்.
‘என்ன விளையாட்டோ… ஒரே கூச்சல்’ என்று முகம் சுழித்தார் தாத்தா.
‘இது…கூட புரியவில்லையா… என்ன அழகான விளையாட்டு’ என்றார் பாட்டி.
‘அவர்கள் உளறியது… ஏதாவது புரிந்ததா’ தாத்தா குரல் உயர்ந்தது… ‘ஹீம்…’
’ஏன் புரியாமல்?’ – இது பாட்டி
‘என்ன புரிந்தது’? – தாத்தா விடவில்லை.
‘மெலன் சொன்னது பிரீஃப் பிராஃப்… ஆகா என்ன அழகான நாள்…. என்று அர்த்தம்.. அதற்கு புரூஃப்.. புரூஃப் என்று பெலூட்டி பதில் அளித்தது… நாளையும் இனியைமான நாளாகவே இருக்கும் என்று அர்த்தம்’ என்றார் பாட்டி.
தாத்தா அதற்கும் முகம் சுழித்தார். அதற்குள் குழந்தைகள் ஆடுத்த பதத்திற்கு தாவின.
இம்முறை பெலூட்டி
‘பிராஸ்கி …. பிப்ரிமாஸ்கி’ என்றான் அதற்கு மெலன்
’புரூஃப்.. புராஃப்’ என்று பதில் அளித்தாள்.
இருவருமே மனம் விட்டு சிரித்தார்கள்.
தாத்தா …. கடுப்பானார்…. பாட்டியை பார்த்து ‘இதுவும் புரிந்தது என்று உளறப் போகிறாயா’ என்றார்.
‘ஏன் புரியாமல்’ என்றார் பாட்டி பிறகு தனக்கு புரிந்ததை சொல்லத்தொடங்கினார்.
‘பெலூட்டி சொன்னது பிராஸ்கி… பிப்ரிமாஸ்கி அப்படியென்றால்… இந்த உலகில் வாழ எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது என்று அர்த்தம்.
‘ஓ …. என்றார் தாத்தா கேலியாக
‘அதற்கு மெலன் ’புரூஃப்.. புராஃப்’ என்று பதில் சொன்னாள். அதற்கு இந்த உலகம் மிக அழகானது என்று அர்த்தம்..’
‘இந்த உலகம் அழகானதா…’ என்று அப்போதும் நம்பிக்கை அற்று கேட்டார் தாத்தா.
தன் குளிர்கோட்டு பின்னலை தொடர்ந்தபடி பாட்டி பதில் சொன்னாள் ’புரூஃப்.. புராஃப்’
உணர்வு கவிதை – சாந்தி சரவணன்
அன்பு
அகந்தை
அழுகை
அமைதி
கோபம்
காதல்
காமம்
சிரிப்பு
புன்னகை
மௌனம்
பசி
வலி
என உணர்வுகள் நம் உள்ளத்தில்
உலா வருகிறது!
உணர்வுகளை சொற்கள் பிரதிபலிக்குமா!
மொழியில்லா கற்காலத்தில் கூட உணர்வுகள் வெளிபட தானே செய்தது!
அப்படியிருக்க
சொல் அகராதியை கையாண்டு உணர்வை
முழுமையாக வெளி கொணர முடியுமா!
வார்த்தை முகமூடிகள் அணிந்து
உணர்வுகளை
முடக்குவது ஏன்?
உணர்வுகளை உணர்வால் தான் உணர முடியும்
என்பதை மறந்து மறுப்பது ஏன்?
இழை போன்ற
உணர்வை இதயத்தில் ஏந்தி உணர்ந்து மற்றவர்கள் இதயத்தில் வாழ்ந்து தான் பார்போமே!
மானம் என்பது கவிதை – பாங்கைத் தமிழன்
மனிதர்க்கு மானம் வேண்டும்
மதியாதோர் அறிதல் வேண்டும்;
மனதிலே நிறுத்தல் வேண்டும்
மதியாலே வெல்லல் வேண்டும்!
கோபங்கள் உள்ளோர் யாரும்
குறைக்காமல் வாழ்தல் வேண்டும்;
மண்ணுக்குள் செல்லும் போதும்
மறக்காமல் இருத்தல் வேண்டும்!
தொட்டாலே வாழ்க்கை யில்லை
பார்த்தாலே பாவம் தொல்லை
எட்டாத தூரம் நின்று
ஏவல்கள் இடுதல் நன்று!
வாழ்க்கைக்கு வழியே மூன்று
வழிவழியாய் இவையே சான்று!
உயிர்வாழ உணவே முன்னே
உடைதானே அடுத்தப் பின்னே!
இல்லந்தான் இயங்கு தற்கு
இருந்திடும் அடுத்தப் பின்னே!
உணவுண்டு உடை உடுத்தி
உறங்கிட இல்லம் கண்டாய்!
மனிதரை மனிதன் என்று
மதித்திடா மடையா கேளாய்;
உணவினை உன் கின்றாயே
உழைத்தவன் தீட்டுக் காரன்!
உடையது உடலைத் தொட்டால்
உறுத்துமே உழைத்தோன் தீட்டு;
இல்லத்தைக் கட்டித் தந்தோன்
இழிவான சாதி சாதி!
மானமும் மதியும் உந்தன்
மண்டைக்குள் இருக்கு மானால்
உன்னுடை உழைப்பால் மட்டும்
உணவுடை இல்லம் காண்பாய்!