நூல் விமர்சனம்: அகரமுதல்வனின் முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு – மீ.யூசுப் ஜாகிர்
தோழர் சிவராமன் அவர்களின் இல்லத்தில் உள்ள நூலகத்திலிருந்து பகிர்ந்து கொண்ட நூல். நான் வாசிக்கும் முதல் ஈழத்தமிழ் எழுத்தாளரின் புத்தகம் இது. மொத்தம் பத்து சிறுகதைகள். கதைகளுக்கு உள்ளே செல்வதற்கு முன் நாஞ்சில் நாடன் அவர்கள் பார்வையில் கதைகளைப்பற்றிய சிறு சுடரை மனதில் ஏற்றி வைத்துவிடுகிறார். கதைகளை படிக்க, படிக்க மனதில் செந்தழல் பற்றி எரிகிறது. ஈழத்தமிழ் முள்ளிவாய்க்கால் பிரச்சனைகளை அனைவருமே அறிந்திருப்போம். ஆனால் அந்த போராட்டகளத்தில், போர் சூழ்ந்த இடத்தில், கூட்டம் கூட்டமாக அடைத்து வைக்கப்பட்டு இருந்த முகாம்களில் மரணத்தை எந்நேரமும் எதிர்பார்த்து இருக்கும் நபர்களின் அருகில் சென்று அதன் கொடூரமுகம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளவேண்டுமானால் நூலை கட்டாயம் வாசியுங்கள்.
கண்களை மூடியதும் உறக்கம் வரும் நமக்கும், கனவில் கூட மரணம் கண்டு அதிர்ந்து எழும் அவர்களுக்கும் இடையேயான வலிகளையும்,நம் சுதந்திரத்தையும் ஒப்பிட்டு பார்த்து கொள்ளலாம்.
முதல் கதை “மரணத்தின் சுற்றிவளைப்பு” காதல் மனைவி குழந்தை உண்டாகி இருக்க, அவளை பிரிந்து ஏதோ ஒரு முகாமில் ராணுவத்திடம் சிக்கி பல சித்திரவதைகளை அனுபவிக்கும் கணவனின் காதல், வலி, பிள்ளையின் பெயராவது விடுதலையாக காதில் விழாதா என்று ஏக்கத்துடனே மரணித்துக்கொண்டிருக்கும் சாபத்தை கதையாக எழுதி இருக்கிறார். கதையையே கவிதையாக்கி இருக்கிறார்.
ஒவ்வொரு கதையையும் படித்து முடித்தபின் மனதின் விசும்பலை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தான் அடுத்த கதைக்குள் பயணிக்க வேண்டும். இல்லையேல் கடல் கரை தாண்டுவதை போல, கண்ணீரும் கன்னம் தாண்டும்.
“திருவளர் ஞானசம்பந்தன்” சிறுகதையில் எங்கிருந்தோ வலுக்கட்டாயமாக இழுத்துவந்து முகாம்களில் ஒன்றாக வாழும் மக்களுக்கே இடையே இருக்கும் சண்டைகள், பாசங்கள் பற்றிய கதை. வாழ்வியலை இழந்து நிற்கும் ஒவ்வொருவருக்கும் ஆறுதலாக இன்னொரு உறவு, தொப்புள் கொடி சொந்தமில்லாமல் இருந்தாலும், உணர்வுகளால் நிரம்பத்தரும் அதிசயம் இயல்பாகவே வருகிறது என்பதை உணர்த்துகிறது.
அனைத்து கதைகளையும் பற்றி முழுவதுமாய் எழுதிவிட ஆசை தான். ஆனால் ஒரு படைப்பின் ருசியை நீங்களே வாசித்து பார்த்து, அது தரும் காதலையும், கண்ணீரையும், வலியையும் அனுபவித்து பாருங்கள். சில கதைகளுக்குள் நான் நுழைந்து விட, ஏதோவொரு முகாமில் நானும் சிக்கி தவிக்கும் வேதனையை உணரத்தொடங்கினேன். அடுத்த நொடி மரணம் சூழ்வதாக இருந்தால் நான் எதைப்பற்றி யோசிப்பேன்.
“கிழவி” சிறுகதையில் தாய்,தந்தை இழந்த தனது பேத்தியை முகாமின் கொடூரத்தில் இருந்து தப்பிக்க வைக்க திட்டமிட்டு இருவரும் தப்பி செல்ல ஆயத்தப்படும் நொடிகளில் நம்மையும் அறியாமல் பதற்றம் தொற்றிக்கொள்கிறது.
“முஸ்தபாவை சுட்டுக்கொன்ற ஓரிரவு” கதையில் இந்த அவலங்கள் மனிதர்களுக்கு மட்டும் நிகழவில்லை. மனிதர்களோடு இருந்த விலங்குகளுக்கும் நிகழ்ந்த அவலத்தை குருதிக்கறைகளின் தடத்தோடு சொல்லி இருக்கிறார்.
“பிரேதங்கள் களைத்து அழுகின்றன” சிறுகதையில் மரணத்தின் விளிம்பில் இருந்தாலும் ஒரு நிச்சயமில்லாத வாழ்க்கையை போரின் குண்டுகளில் இருந்து தப்பி வாழும் உறவுகள் வாழ்ந்தாலும், தன்னை பீடித்த நோயால் ஒன்றாய் தற்கொலை செய்து கொள்ளும் போது, மனதின் விசும்பல்களை ஆற்றுப்படுத்த முடியவில்லை.
“பிட்டுப்பூசை, பெய்துகொண்டிருக்கும் மழை”சிறுகதைகள் போர்க்களத்தில் கூட காதல் துளிர்க்கும் என்பதையும், மரணம் நிச்சயம் என்னும் போதும் ஒன்றாய் சாகவேண்டும் என்று விரும்பும் இதயங்கள், மரணம் எந்த நொடியில் ஸ்பரிசித்தாலும் காதலால் அதை ஏற்றுக்கொள்ளவும் தயார்ப்படுத்திக்கொள்ளும் போது, நம்முடைய மரணத்தை நினைத்துப்பார்க்காமல் இருக்கமுடியாது.
கதைகள் எல்லாமே மரணத்தின் ஓலங்களையும், குண்டு சத்தங்களையும், குருதி படிந்த நாட்டின் காற்றில் கூட குருதி வாசம் வீசும் என்பதாக மரணத்தையும், அதனை நேசிக்கும் மக்களின் துயரத்தையும் அனுபவித்து, கதையாக்கி இருக்கிறார் எழுத்தாளர் அகரமுதல்வன். கதைகளை படித்து முடித்தபின் நம் கைகளும், சிந்தனைகளும் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறது என்பதை உணரும் போது அவை கதையாகவே இருந்தாலும் அப்படி நிஜத்தில் இருப்பவர்களுக்காக இறைவனிடம் கையேந்தி பிரார்த்திக்க மனம் துடிக்கிறது.
நூல்: முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு
ஆசிரியர்: அகரமுதல்வன்
பக்கங்கள்: 111
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்.