கொஞ்ச நேரம் ஒதுக்கி புற உலகை உற்றுப் பாருங்கள்! – கு.செந்தமிழ் செல்வன்
காட்டுயிர் என்றால் இயற்கையாக உருவாகி தன்னிச்சையாக வாழும் உயிரினங்கள் என அர்த்தம். அவை, விலங்குகள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், தாவரங்கள், மரங்கள் என எதுவாகவும் இருக்கலாம். நாம் செய்ய வேண்டியதெல்லாம் சற்று உற்று நோக்குவதுதான்.
* வெண் மான்கள் வேகமாக ஓடும் என்று தெரியும். ஆனால், ஆபத்து என்றால் மூன்று மீட்டர் உயரத்துக்கு எம்பி 80 கி.மீ வேகத்திற்கு ஓடும் என்று அறிவோமா?
* பூனை எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அதற்கு பிடித்த உணவு குப்பைமேனி கீரை என்று அறிவோமா? சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கு தீர்வு காணும் மருத்துவ குணம் கொண்டது குப்பைமேனி கீரை என்பதை மனிதர்கள் தெரிந்து கொண்டதே பூனையின் மூலமாகத்தான்.
* “பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” என்பதை அறிந்த நாம் எறும்பிலிருந்து நாம் கற்றதை அறிவோமா? எறும்புகள் பயன்படுத்தும் வேதிப்பொருட்கள் அவற்றின் உணவுகளை பூஞ்சைத் தொற்று பாதிக்காமல் பாதுகாக்கின்றன. இந்த வேதிப் பொருளே தற்போது மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
இப்படி நாம் அறிந்தவற்றிலிருந்து அறியாதவற்றை நோக்கி சுவாரஸ்யமாக அழைத்துச் செல்கிறது ”நம்மைச் சுற்றி காட்டுயிர்” புத்தகம். புகழ்பெற்ற சூழலியல் எழுத்தாளர் சு. தியோடர் பாஸ்கரன் இந்நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இதனை தமிழில் தந்துள்ளவர் ஆதி வள்ளியப்பன். குக்கூ குழந்தைகள் அமைப்புடன் இணைந்து புக்ஸ் ஃபார் சில்ரன் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது. 2012 -ல் முதல் பதிப்பு கண்டது இப்போது நான்காவது பதிப்பாக வந்துள்ளது.
பறவைகளின் காதல் வாழ்க்கை
இந்நூல் பறவைகளை ரசிக்கவும் கற்றுத் தருகிறது. நமது தோட்டத்தை உற்று நோக்கினாலே நிறைய காட்டுயிர்களை காண முடியும். வீட்டுத் தோட்டம் இல்லாதவர்களும் சந்தோஷமாக வானத்தினைப் பாருங்கள். பறவைகளைப் பார்ப்பதுடன் அதனை என்ன பறவை என்று அடையாளம் காணவும் கற்றுக் கொள்ளுங்கள் என்கிற இந்நூல். மேலும் இப்புத்தகத்தில் தவறவிடக் கூடாது சில அம்சங்கள் இதோ:
* காட்டுயிர் இயக்குனர் தாமரைக் கோழிகள் குறித்து “மிதக்கும் வீடுகள் ” என படம் எடுத்திருந்தார். இந்தத் தாமரைக் கோழிகள் குளிர்காலத்தில் தனது இனப் பெருக்கக் கால உருமாற்றத்தைப் பெற்றிருக்குமாம். பெண் பறவை, பல ஆண்களுடன் இணை சேர்ந்து ஒரே நேரத்தில் பல முட்டைகளை வெவ்வேறு கூடுகளில் இடக் கூடியது. இதனால், அந்தந்த கூட்டுக்குரிய ஆண் பறவைகள் அடைகாத்து குஞ்சுகளை வளர்க்கின்றன.
* காயமடைந்த இரைக்கொல்லிப் பறவைகளுக்கு அமெரிக்காவில் உள்ள கரோலினா ராப்டர் சென்டர் புனர் வாழ்வு தருகிறது. இந்தியாவிலும் அத்தகைய மையங்கள் அடையாளம் காணப்பட வேண்டும்.
* பூவுலகைக் காக்க முயல்வோரை ஊக்குவிப்பதற்காக கோல்ட்மேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்படுகிறது. சுற்றுச்சூழல் நோபல் பரிசாக கருதப்படும் இதனை இந்தியாவில் நால்வர் பெற்றுள்ளனர் என்பது பெருமைக்குரியது.
நூலாசிரியர் விவரிக்கும் பல்வேறு விஷயங்களில் முக்கியமானது என்ன வென்றால், ஏற்கெனவே, மிக மோசமாக சீரழிக்கப்பட்டுவிட்ட இயற்கை வளத்தையும் முடக்கப்பட்டுவிட்ட சுற்றுச்சூழலையும் இனி மேல் எப்படி பாதுகாக்கப் போகிறோம் என்பதை நாம் அனைவரும் கரம் கோர்த்து முடிவு செய்தாக வேண்டும். இந்தப் புத்தகம் அந்த முடிவெடுக்க நிச்சயம் நம்மை உந்தித் தள்ளும்.
கட்டுரையாளர், கு.செந்தமிழ் செல்வன்
தமிழ்நாடு அறிவியல் இயக்க உறுப்பினர், வேலூர்.
நன்றி: வெற்றி நூலகம்
நூல் : நம்மைச் சுற்றி காட்டுயிர்
ஆசிரியர் : சு. தியோடர் பாஸ்கரன்
தமிழில் : ஆதி வள்ளியப்பன்
விலை : ரூ.₹40/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
விலங்குகளின் பிராத்தனை கவிதை – சாந்தி சரவணன்
யானை மீது சவாரி சென்றாள்
சிறுமி
சவாரி முடித்து திரும்பி வந்தாள்
சிறுமியின் முகத்தில் புன்னகை!
குதிரை மீது சவாரி சென்றாள்
சிறுமி
சவாரி முடித்து திரும்பி வந்தாள்
சிறுமியின் முகத்தில் புன்னகை!
ஒட்டகத்தின் மீது சவாரி சென்றாள் சிறுமி
சவாரி முடித்து திரும்பி வந்தாள்
சிறுமியின் முகத்தில்
புன்னகை!
மனிதரோடு சவாரி சென்றாள் சிறுமி
சவாரி முடிந்தது
பக்கத்து தெருவின்
குப்பை தொட்டியில்
சவமாய்க் கிடந்தாள்
சிறுமி!
“மனித குணம் மாறாதா?”
பிராத்தனை செய்தன
வன விலங்குகள்.
திருமதி. சாந்தி சரவணன்
9884467730
நூல் அறிமுகம்: ச.ச.சுபவர்ஷினியின் அத்தினிக் காடு (சிறுவர் கதைகள்) – வே.சங்கர்
பெண் யானைக்கு ‘அத்தினி’ என்றொரு பெயர் இருப்பதே இந்த நூலின் தலைப்பை வாசித்த பிறகே தெரியவந்தது. தற்போது ஏராளமானோரின் கைகளில் தவழும் இந்த அத்தினிக்காடு என்ற நூல் பலரின் கூட்டுமுயற்சிக்குப் பிறகே சாத்தியமாகியிருக்கிறது.
தவிர்க்க முடியாத ஆளுமைகளின் அணிந்துரை, நேர்த்தியான புத்தக வடிவமைப்பு, பக்கத்திற்குப் பக்கம் அழகழகான ஓவியங்கள், மொபைல் ஃபோனில் ஸ்கேன் செய்து பார்க்கவும் கேட்கவும் க்யூ ஆர் கோடு, பின்புற அட்டையில் இளம் எழுத்தாளர் சுபவர்ஷினியின் அழகிய புகைப்படம் என அனைத்து அம்சங்களையும் ஒருங்கே கொண்டிருக்கிறது இந்த நூல்.
பதின் பருவத்தைத் தாண்டாத குழந்தைகளே ஒவ்வொரு கதைக்கும் தேவையான ஓவியங்களை வரைந்திருக்கிறார்கள். அவர்களின் புகைப்படங்களும் அவர்களைப் பற்றிய விவரங்களையும் புத்தகத்தின் கடைசிப் பக்கத்திற்கு முன்னதாக அச்சேற்றி அவர்களை அடையாளப்படுத்தியும் அங்கீகரித்தும் இருப்பது சிறப்பு.
நேர்மறை எண்ணம் கொண்ட பதினைந்து சிறுகதைகள் வாசிக்க வாசிக்க நமட்டுச் சிரிப்பை வரவழைக்கிறது. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டுக் குழந்தையான சுபவர்ஷினியின் கற்பனைக்கு எதுதான் எல்லை? என்ற எண்ணம் கடைசிவரை நீடித்துக் கொண்டே இருக்கிறது.
வளர்ப்பு விலங்கோ அல்லது காட்டு விலங்கோ எதுவாக இருப்பினும் சிறுவர் கதைகளில் பேசுவது என்பது இயல்பாகவே தவிர்க்கமுடியாதது ஆகிவிட்டது.
அப்படித்தான் இந்த நூலிலும், சிங்கமும் புலியும் ஒரே காட்டில் இருக்கின்றன. ஒரு சிறுமிக்கும் யானை நண்பனாக இருக்கமுடியும் என்றால் புலியும் நண்பனாக இருக்க முடியும்தானே?
ஒரு வளர்ப்பு நாய்க்குட்டியால் தன்னை பாசமாக நேசிக்கும் சிறுவனுக்காக ஓடிப்போய் டாக்டரை அழைத்துவர முடிகிறது. ஒற்றைச் சிறுமியால் புலிகளிடம் பேசியே யானைக்குட்டியைக் காப்பாற்றிவிட முடிகிறது. வாத்துக் குஞ்சுகளுக்கு நீரின் அவசியத்தைப் புரியவைக்க முடிகிறது.
கொசு ஒன்று காட்டிற்குள் பட்டாம்பூச்சியுடன் சினேகம் கொண்டு சுற்றிப் பார்க்கிறது. கொரோனா என்ன செய்யும் மனிதர்களை அழித்துக் கொல்லும் ஆனால், ஒரு குழந்தையின் பார்வையில் தந்தையை வீட்டிலேயே இருக்க வைத்து தன்னோடு விளையாட வைக்கும் அப்படியானால் கொரோரானா என்ற பெருந்தொற்று நோய்க்கும் நன்றி சொல்லவேண்டும்தானே? அப்படித்தான் ’கொரோனா நிகழ்வு’ என்ற கதை கவனத்தை ஈர்க்கிறது.
நாய்க்கு நண்பர்களாக பூனைகள் ஒரு கதையில் கதாப்பாத்திரங்கள் என்றால் மற்றொரு கதையில் முயலும் ஆப்பிள்களும் மாறுவேடத்தில் ஊர்சுற்றக் கிளம்பிவிடும் கதாபாத்திரங்கள்.
அடிபட்ட புறாவுக்கு மருத்துவம் செய்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எல்லாக் குழந்தைகளுக்கும் இருப்பதுபோலவே பறவையைத் துன்புறுத்துபவர்களுக்கு அது தவறு என்று தன்மொழியில் குழந்தையாக சொல்ல முயன்றிருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
அடிபட்ட டால்பின் மீன் கரை ஒதுங்கிக் கிடப்பதும் அதைக் குணப்படுத்தி மீண்டும் கடலுக்குள்ளே கொண்டுவிடும் கற்பனையும் அபாரம்.
வனம் என்றால் பசுமையாகத்தான் இருக்கும். பசுமையாக இருந்தால் அங்கே விலங்குகள் இருக்கும். அவர்களும் பள்ளிக்கூடம் செல்வார்கள்.
அதுவும் பேருந்தில். மனிதர்களைப் போலவே பூச்சிகளும் களைத்து போய்விடலாம். களைத்துப் போய் வகுப்பறையில் தூங்கியும் விடலாம். ஆசிரியை எப்போதும் போல் தாமதமாக வந்த பூச்சிக்கு தண்டனையாக வெளியே நிற்க வைத்துவிடும் சாத்தியக்கூறுகளும் குழந்தைகளின் கதையில் தவிர்க்க முடிவதில்லை.
எல்லாம் கற்பனைதானே என்று கேட்டால், ஆம்! கற்பனைதான். குழந்தைகளுக்குள் எழும் கற்பனைகள் வளர்ந்த மனிதர்களுக்கு ஏன் தோன்றுவதில்லை? என்ற கேள்வி இந்நூலை வாசிப்போர்க்கு கடைசிவரை எழுந்துகொண்டேதான் இருக்கும். அதற்கு விடை தேடவேண்டுமானால் இதுபோன்ற குழந்தைகள் எழுதிய கதைகளை வாசிக்க வேண்டியது கட்டாயம்.
குழந்தைகள் கேட்டறிந்த பக்கத்து ஊருக்குக் கற்பனையில் பாண்டா கரடிகள் வர வாய்ப்பிருக்கிறது. புலியும் அதே இடத்திற்கு வந்து எனக்கு கோழியும் ஆடுகளும் வேண்டும் என்று கேட்கிறது, அங்கிருக்கும் மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை ’லாக்டவுன்’ என்ற சொன்னவுடன் அதே புலி ’அப்படியானால், இன்று வேண்டாம், நாளையிலிருந்து கொடுக்கவேண்டும்’ என்ற கட்டளையிடுவதெல்லாம் குழந்தைகளுக்கு மட்டுமே தோன்றும் அசாத்தியக் கற்பனைகள்.
குழந்தைகளின் கதைகளை வளர்ந்தவர்கள் எழுதவதற்கும் குழந்தைகளே எழுதுவதற்குமான உள்ள வேறுபாட்டைக் கூர்ந்து கவனித்தால் ஒன்று தெளிவாகத் தெரியும். அதன் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் அளவில் சிக்காத நீள அகலங்களைக் கொண்டவை சிறுவர்களுக்காக சிறுவர்களே எழுதும் கதை. குழந்தைகளுக்கான கதைகளை குழந்தை சொல்லும் போது தான் கேட்ட அல்லது பார்த்த அத்தனையும் கதைகளுக்குள் வலம்வருகின்றன.
அவ்வகையில் அத்தினிக்காடு விலங்குகளும், பறவைகளும், பூச்சிகளும் கூடவே மனிதர்களும் வாழும் இடம் இந்த பூமி என்று அழுத்தம் திருத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது.
லாஜிக்கைப் பற்றி எந்தவிதத்திலும் கவலைப்படுவதில்லை குழந்தைகள். அதற்கான சமரசத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. மனம்போன போக்கில் கதை நகர்த்தியும், அதைச் சொல்லியும் அவற்றைப் புத்தகவடிவில் பார்த்து மகிழும் பாக்கியம் ஒருசிலருக்கே அமையும் அவ்விதத்தில் அத்தினிக்காடு நூல் எழுதிய சுபவர்ஷினிக்கு வாய்த்திருக்கிறது. வாழ்த்துகள்.
– வே.சங்கர்
நூல்: அத்தினிக் காடு
ஆசிரியர்: ச.ச.சுபவர்ஷினி (வயது 8)
விலை: ₹99
பக்கங்கள்: 104
வெளியீடு: லாலிபாப் சிறுவர் உலகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com
திரை விமர்சனம் D BLOCK – சிரஞ்சீவி இராஜமோகன்
சமீபத்தில் அருள்நிதி நடித்து வெளிவந்திருக்கும் டி பிளாக் திரைப்படத்தைப் பற்றி தான் இந்த விமர்சனத்தில் பார்க்க போகிறோம். கதை ஆரம்பம் முதலே கல்லூரிகளில் எடுக்கப்பட்ட காட்சிகள் அதிகமாக இருப்பது சற்றே போர். பல திரைப்படங்களில் அலசிவிட்ட நண்பர்கள் கேலி கிண்டல் சீனியர்கள் ராகிங் போன்று சற்று சலுப்பாக முதல் அரை மணி நேரம் செல்லும். வெள்ளியங்கிரி மலை காட்டில் அமைந்திருக்கும் ஒரு பொறியியல் கல்லூரியில் நடந்த உண்மை சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரியின் பெயர் மாற்றப்பட்டு கதை உண்மையாக வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம். கல்லூரி வார்டன் மற்றும் முதல்வர் கல்லூரி
ஆரம்பித்த நாள் அன்றே ஆறு மணிக்கு மேல் யாரும் வெளியில் செல்லக்கூடாது நம் கல்லூரி அமைந்திருப்பது நடுக்காட்டில் விலங்குகள்
நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதை எச்சரிக்கின்றனர்.
பெண்கள் ஹாஸ்டல் அமைந்திருக்கும் டி பிளாக் எனும் இடத்தில் இரவு நேரங்களில் பெண்கள் திடீரென ஒரு மர்ம மனிதனின் உருவத்தை
பார்த்து பயந்து கொண்டிருக்கின்றனர். கதாநாயகியின் தோழியும் அதே உருவத்தை பார்த்து பயந்து அனைவரிடமும் சொல்கிறாள் உதவி
கேட்கிறாள் யாரும் நம்பவில்லை. திடீரென ஒரு நாள் அவள் ஹாஸ்டலின் பின்புறம் சிறுத்தை நகங்களால் கீறப்பட்டு இறந்திருப்பது போன்று
சடலமாய் கிடக்கிறாள். கதாநாயகி கதாநாயகனிடம் அவள் சிறுத்தை அடித்து இறக்கவில்லை ஏற்கனவே ஒரு உருவத்தை பார்த்து பயந்து
போய் என்னிடம் கூறினாள் நான்தான் சரியாக அதை காதில் வாங்கிக் கொள்ள வில்லை என்று கவலை கொள்கிறாள். கதாநாயகன் எதையும் போட்டு குழப்பிக் கொள்ளாதே எல்லாம் காலம் போன போக்கில் சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறி சினிமா அடுத்த காட்சிக்கு நகர்கிறது.
கல்லூரியின் சீனியர் ஒருவர் கதாநாயகனை பார்த்து இறந்து போன பெண் பார்த்து வரைந்த மர்ம மனிதன் ஓவியமும் இதற்கு முன்பு காலேஜில் படித்த காணாமல் போன ஒரு பெண் வரைந்த ஓவியமும் ஒன்றாக இருக்கிறது என்று கூறுகிறாள். ஆகவே அவள் இறப்பில் ஏதோ மர்மம் இருக்கிறது நாம் அதை கண்டுபிடித்தாக வேண்டும் என்று கதாநாயகனிடம் உதவி கேட்கிறாள் அந்த சீனியர் பெண். கதாநாயகனின் நண்பர்கள் நமக்கு இதெல்லாம் தேவையில்லாத வேலை வா சென்று விடலாம் என்று இழுத்து கொண்டு செல்கின்றனர். இப்படியிருக்க ஒரு நாள் கதாநாயகியின் பிறந்தநாள் அன்று சர்ப்ரைஸ் வாழ்த்தளிக்க பரிசினை எடுத்துக்கொண்டு இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் செல்லும் கதாநாயகனும் நண்பர்களும் மாடியில் அந்த மர்ம மனிதனை நேருக்கு நேர் சந்திக்கையில் கதை விறுவிறுப்பு அடைகிறது.
கல்லூரி முதல்வர் பெண்கள் ஹாஸ்டல் வார்டன் எல்லோரிடமும் அதைப்பற்றி கூறி யாரும் அதை நம்பவில்லை. முறையான அனுமதி
இல்லாமல் பெண்கள் விடுதிக்கு செல்ல முயன்றதற்கு தண்டனை மட்டுமே கிடைத்தது.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கரு பழனியப்பன் கல்லூரி ஓனர் ஆக ஒரே ஒரு காட்சியில் வந்து செல்கிறார் அவர் பிரின்ஸ்பல் இடம் பேசிக் கொண்டிருக்கும் போது , அதற்கு முன்னதாகவே அவருக்கு தெரியாமல் காலேஜ் லட்ச்சரை திருடச் சென்ற கதாநாயகன் அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை ஒட்டு கேட்கிறார் இதிலிருந்து ஏதோ ஒன்றை அவர்கள் மறைப்பதை உறுதி கொள்கிறார். பின்பு பல பெண்கள் அது போன்று மர்மமான முறையில் இறந்து போய் இருப்பதும் காணாமல் போய் இருப்பதும் அறிந்து கொண்டு அவற்றினை களைய முயற்சிக்கிறார் கதாநாயகர்.
இறந்து போன பெண்கள் எப்படி காணாமல் போனார்கள்? அவர்களுக்கு என்ன ஆயிற்று? இதற்கு பின் யார் இருக்கிறார்? அந்த மர்ம மனிதன் யார்? கதாநாயகன் அந்த மர்ம மனிதனை எப்படி வெற்றி கொள்கிறான்? என்பது படத்தின் மிச்ச பரிசு. ஓரளவு கதையை கணிக்க கூடிய திருப்புமுனைகள் இருந்தாலும் திரில்லர் திரைப்படங்களுக்கு உண்டான விறுவிறுப்பு சற்றும் குறையாது இருக்கிறது திரைக்கதையில். இதை ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் , சைக்கோ கில்லர் கதை என்றும் வரையறுக்கலாம்.
படத்தின் பலம்: நல்ல பின்னணி இசை நல்ல திரைக்கதை சில காமெடி காட்சிகள்
படத்தின் பலவீனம்: கதாநாயகி (அவரை நீக்கிவிட்டு படம் எடுத்திருக்கலாம்)
மேலும் இது போன்ற வித்தியாசமான திரைக்கதை உள்ள திரைப்படங்களை எனக்கு பகிரவும் இந்த திரைப்பட விமர்சனம் எவ்வாறு இருந்தது என்பதை விமர்சிக்க விரும்புகிறேன் என்னுடைய தொலைபேசி எண்களையும் பகிர்ந்து உள்ளேன் நன்றி.
நன்றி
சிரஞ்சீவி இராஜமோகன்
கும்பகோணம்
r.siranjeevi333@gmail.com
9789604577
7708002140
சக்தியின் கவிதைகள்
அணையாத சுடர் விளக்கு அம்பேத்கர்…!!!!
**************************************************
இருட்டு
அறைக்குள் கிடக்கிறோம்
மெல்ல மெல்ல
எறிய தொடங்குகிறது மெழுகுவர்த்தி( அம்பேத்கர்),
மெழுகுவர்த்தியை
ஏற்றி வைத்தவன்
கூண்டுக்குள் கிடக்கிறான்,
மெழுகின் வெளிச்சம்
பள்ளிக்கூடம் வரை
ஒளியை வீசுகிறது
இருட்டிலிருந்து
வெளிச்சத்தை நோக்கி நகர்கிறோம்,
தோட்டி மகனின்
தோளில்
புத்தகப்பை தொங்குகிறது,
தோட்டியின்
கைகளில்
மாட்டுத் தோல் பறை,
வண்ணான் மகளின்
கைகளில் வண்ண
வண்ண புத்தகங்கள்
மெழுகுவர்த்தியின் உருகும்
வெளிச்சத்தில்,
இரவும் பகலும்
பாராமல்
வெளிச்சத்தை வீசுகிறது
இருட்டு அறைக்குள் கிடக்கிற
மக்களை வெளியேற்ற,
விறகுகளை
சுமந்த மகனின்
கைகளில் விலங்கியல்
புத்தகங்கள்
மெழுகுவர்த்தி ஒளியால்,
கழனியிலும் காடுகளிலும்
அலைந்து திரிந்த கூட்டம்
கூண்டுகளை
உடைத்துக்கொண்டு
மெல்ல மெல்ல நகர்கிறது
பள்ளிக்கூட வாசலை நோக்கி……!!!!
வெளிச்சம்வீசுகிறது
பட்டுப்போன
மரங்கள் துளிர்விடுகிறது
பூக்கள் பூக்க தொடங்குகின்றன
காய்கள் காய்க்க தொடங்குகின்றன
கல்லூரியின் வாசல் வரை
நீண்டுக்கொண்டே போகிறது
நீல மெழுகு வெளிச்சம்,
சுடுகாட்டில்வெந்துப்போன
வெட்டியான் மகனும்
கல்லூரி செல்கிறான்
எறிகிற பிணத்தின்
வெளிச்சத்தில்
புத்தகங்களை படித்தவாறு …!!!!!
நாங்கள் சாக்கடை மனிதர்கள்….!!!!!
*******************************************
கருப்பு நிற கயிற்றை
இடுப்பிலும் கழுத்திலும்
கட்டிக்கொண்டுகால் தவறி விழுகிறோம்
சாக்கடை குழியிலே,
பல நூற்றாண்டுகளாக
விழுகிறோம் விழுந்தவுடன்
விழுங்குகிறோம் மலக்குழியில்
மிதக்கும் மஞ்சள் நிற
படகுகளான கிழங்குகளை,
கழுத்தில் கட்டிய கருப்பு
கயிறு மெல்ல
மெல்ல
கழுத்தை இறுக்குகிறது
நீச்சல் தெரியாத
மீனை போல
கால்களை விசுறுகிறோம்,
நீர் இல்லாத
குளத்து மீனை
போல துடி துடித்து
இறந்து போகிறோம்,
மூத்திர
சாக்கடை நீருக்குள்ளே,
பத்து விரல்களிலும்
மஞ்சள் மோதிரங்களை
அணிந்து கொண்டு
சாலையை கடக்கிறோம் தெருவெங்கும்
வாசனை வீசுகிறது
மஞ்சள் நிற மோதிரங்களால் ,
அம்மனின்
மஞ்சள்தூள்
பொடிகளாக
நினைத்துக்கொண்டு
உடல் முழுவதும்
பூசிக்கொள்கிறோம்
பிறரால் எங்கள் உடல்
முழுவதும் பூசப்படுகிறது ,
அடைக்கப்பட்ட
சாக்கடைகுழிக்குள்
பிணங்களை
அடுக்கி வைக்கிறோம்
தீப்பிடித்து எறியாத
மஞ்சள் காகிதங்களை
படகுகளை
கையில் ஏந்தியவாறு,
சாக்கடை அடைப்பு
நீக்குகிறது
மூச்சடைப்பும்
நின்று விடுகிறது
சாலையோரம்
அனாதையான
சாக்கடை பிணங்களால்.
பிணம்
தின்னும் ஓநாய் கூட்டங்கள்
மஞ்சள் பூக்களை
முகர்ந்து
விட்டு ஓடுகின்றன
சாக்கடை விழுந்த மனித
பிணங்களின்
கழுத்தை குதறியவாறு
விவசாயிகளின் பிணங்கள்…!!!!
*************************************
தோளில் கிடந்த
பச்சை துண்டு
மரத்தில்
தொங்கிக் கொண்டிருந்தது
மீத்தேன் பறவையொன்று
தூக்கிக்கொண்டு போன
கோழிக்குஞ்சுகளான விவசாயிகள் ,
பயிரிடப்பட்ட நிலம்
முழுவதும் செழிப்பாக
வளர்ந்திருந்தது இறந்து போன
விவசாயிகளின் கல்லறைகள் ,
மண்வெட்டியும் கடப்பாறையும்
ஓய்வில்லாமல் குழிகளை
பறித்து கொண்டிருந்தது
ஆறடி விவசாய
மரமொன்றை புதைப்பதற்காக ,
நிலத்தில் தூவிய
உரத்தில் நஞ்சு
கலந்திருந்தது
தொண்டை அடைத்து விக்கி
செத்துக்கொண்டிருந்தார்
விவசாயியான அப்பா,
அமோக விளைச்சலை
ஏற்றுமதி செய்து
கொண்டிருந்தார் விவசாயி
கழுத்தளவு வளர்ந்திருந்தது
வட்டியும் கடனும் ,
விவசாய கிணறுகளில்
நீர் வழிந்து
வெளியேறி கொண்டிருந்தது
கார்ப்பரேட் காக்கைகள்
போட்டுக் கொண்டிருந்த
கற்களாக விவசாயிகள் பிணங்கள் ,
மாடுகள் உழுத
வயலில் கூட்டம் கூட்டமாக
கழுகுகளின் வருகை
விவசாயின் பிணங்களாக மண்புழுக்கள் ,
சுடுகாட்டு களத்தில்
அடுக்கி வைக்கப்பட்ட
நெல் மூட்டைகளாக
விவசாயிகளின்
பிணங்கள்
தூரத்தில் தெரிகிறது
வட்டியும் தகனமேடையும் ,
வற்றிப்போன மலட்டாற்றில்
திடிரென பெருக்கெடுத்து
பாய்கிறது வெள்ளம்
விவசாயிகளின் கண்ணீர்,
பூட்டிய மோட்டார்
அறையிலிருந்து வெளியேறும்
நாற்றம்
நாடாளுமன்ற வளாகம்
வரை வீசுகிறது
இறந்துபோன
விவசாயிகளின் மூச்சுக்காற்றாய் ,
நாங்கள் யார் மனிதர்களா…? விலங்குகளா…?
******************************************************
ஆடு மாடுகள் கூட நடந்து செல்லாத வழிகளில்
வழிகளை
ஏற்படுத்திக்கொண்டு நடக்கிறோம்
பல ஆண்டுகளாக,
பிணம் தின்னும் கழுகுகள்
எங்களின் தலையை
சுற்றியே வட்டமடிக்கின்றன
முட்புதர்களில்,
தலையை மறைத்து கொண்டே நடக்கிறோம்
ஆமைகளைப்போல,
எங்களின் கண்களை
கொத்தி தின்னுகின்றன
பல ஆண்டுகளாக
பயம் தெரியாத
அந்த கிழட்டு கழுகுகள்,
தலையில் ஏற்றிய
அரிசி,கோதுமை,
கம்பு,கேழ்வரகு,
தானியங்களை
கொத்தி தின்றவாறு
தரையில்
இறைக்கின்றன கழுகுகள்,
செருப்புகள்
இல்லாத எங்கள்
பாதங்களில்
சிவப்பு பொடிகளை
பதித்து செல்கின்றன
பாதைகள் இல்லாத சாலைகள்,
கைகள்
கட்டப்பட்ட பொம்மைகளாக தலைகள் தொங்கியபடி
தரைகளை
பார்த்தவாறே நடந்தே
செல்கிறோம்
மூட்டை முடிச்சுகளோடு,
தொண்டை தாகத்தின்
தண்ணீருக்காக
எங்களின்மூத்திரத்தையே
பிடித்துக் குடிக்கிறோம்,
சொட்டு
சொட்டாக விழுகின்றன
மூத்திரம்
பல ஆண்டுகளாக
தண்ணீரையே தேடி
அலைந்து நடந்து செல்வதால்,
பசியால் துடிக்கிறது
வயிறு ஆசான
வழியாக வெளியேறும்
மஞ்சள் பழங்களை
சாப்பிடுகிறோம்,
இரத்தமும்
கலந்தவாறு பழுத்திருக்கிறது மஞ்சள் பழம்,
மூன்று
வேளையும்
சாப்பிடாத
வயிற்று குடல்களால்,
நடக்கிறோம்
வீட்டுக்காக
நடக்கிறோம் நாட்டுக்காக
நடந்தே போகிறோம்
நாளை எங்களை
ஆளப்போகும்
மன்னர்களுக்காக ….!!!!
வேட்பாளர்
*************
எல்லா
கதாபாத்திரத்திலும்
நடித்து ஒத்திகை பார்த்து கொண்டிருந்த வேட்பாளர்
சாக்கடை அள்ளிக்கொண்டிருக்கும் துப்புரவு பணியாளர் கதாபாத்திரத்தில் மட்டும்
நடிக்க ஒத்திகை பார்க்காமல் ஒதுங்கியே நிற்கிறார்
மரணத்தோடு எப்படி
நடிக்க ஒத்திகை பார்க்க முடியுமென்று “………!!!!!!
மரணம்…..!!!!
*****************
“சிறிது தூரம்
நடந்து விட்டு
திரும்பி பார்க்கிறேன்
யாரோ
ஒருவரின் நிழல் மறைந்திருக்கிறது ”
அவளுடைய கவிதை
*************************
எனக்காக
கவிதை யொன்றை
எழுதுவாயா
என கேட்கிறேன்
எனது பெயரையே
எழுதிகொடுக்கிறாள்
ஆலமர நிழலில்,
பேனாவின்
மை தீருகிறது
உதட்டு சாயத்தினால்
எழுதுகிறாள்
ஏழு வரிகளை கொண்ட கவிதையொன்றை ,
எழுதிய
ஒவ்வொரு வரிகளை சுற்றி
வண்ணத்துப்பூச்சிகள்
வட்டமடிக்கிறது
கருப்பு பேனாவின்
மை அழகினில்,
ஆலமரத்தை
சுற்றி சுற்றியே வருகின்றன
மயில்களும் மான்குட்டிகளும்
அவளின் கையெழுத்தின்
அழகினை காண்பதற்கு,
அவளுடைய கவிதைகளை
படித்து விட்டு ஆலமர
கிளைகளை பிடித்து உலுக்குகின்றன
அனில்களும் ஆந்தைகளும்,
உதிரும் சருகுகள் அவளின்
தலையில் கொட்டுகிறது
தலைவன்
பூக்களை தெளிப்பது போல,
ஆலமரம் மெல்ல
காற்றை வெளியிடுகிறது
காற்றில் பறக்கிறது
கவிதை எழுதிய பேப்பரும் பேனாவும்
தலைவனின் காதல்
கோட்டையை நோக்கி,
மரக்கிளையில் அமர்ந்த
புறாக்கள் அவளுடைய
கவிதைகளை தூக்கி செல்கின்றன
பாதைகள் இல்லாத வானத்து
நிலவின்
அழகினில் ஒட்டிவைப்பதற்கு …….!!!
வசந்ததீபனின் கவிதைகள்
பித்தாய் பெருகுதடி உன் நினைவு
***************************************
நீ தான் என் கவிதையூற்று
நீ தான் என் கற்பனைகளின் பெருங்கடல்
நீ தான் என் கனவுகளின் அமுதசுரபி
காதலின் வலி
கசப்பாகவும் இருக்கும்
இனிப்பாகவும் மாறும்
என் இதயத்தை எடுத்துக் கொண்டாய்
என் உயிரைப் பறித்துக் கொண்டாய்
உன் முத்தத்தையாவது எனக்குக் கொடு
நெஞ்சுக்குள் நீ
நுழைந்ததை அறியேன்
நான் திக்கு முக்காடித் தவிக்கிறேன்.
முள்ளாய் பார்க்காதே
பூவான என் மனம் காயமாகும்
ஒட்டடைகளை நீக்கி விடு
வர்ணம் தீட்டி அழகுபடுத்து
உன் உள்ளத்துள் வசிக்க
நான் வருகிறேன்
என் இதயத்தைக் கொண்டு வா
உன் இதயத்தை தருகிறேன்
திருடியவைகளை
திரும்பப் பெற்றுக் கொள்வோம்
கண்ணீர் மழையில் நனைகிறேன்
காதல் தெருவில் அலைகிறேன்
காலமெல்லாம் தடுமாறி
கசந்த வேதனையில் விழுகிறேன்
தனித்த ஊஞ்சல் நான்
ஆட்டும் உள்ளத்திற்காக ஏங்குகிறேன்
ஆட்டுவித்தால் ஆடாதோ கண்ணே
வாடைக்காற்றிற்கு சற்று விடைகொடுப்பாயா ?
நெடுநல்வாடை கவிதை – வசந்ததீபன்
எலிகள் திரியும்
இடத்தில்
பூனைகளின்
வருகை அவசியம்
வயலைத் தின்று
செரிக்க முயலும்
கொக்குகளின் நிறம்
வெண்மையாக
எளிதில் கடந்து
போகிறது
எறும்பு
நீரற்ற ஆற்றை…
வீடுகளிலும் இருள்
கண்களிலும் கண்ணீர்
யாருக்கு வளம்?
யாருக்குச் சந்தோஷம் ?
சோப்பு நுரையாய்
நகரும்
காலத்தின் மேல்
கனவுகள் பயணிக்க
விழுந்த மழை
ஓடியது தப்பிக்க…
சூரியனை நீட்டி மீண்டும்
வாரியடித்தது வானம்
கனவுகள் தருகிறாய்
கவிதைகள் தருகிறாய்
மனக் கதவுகளைத்
திறக்க மாட்டேன் என்கிறாய்
செடிகளோடு பேசினேன்
குழந்தைகளாய்க் குதூகலித்தது
நெஞ்சுக்குள் ஈரம் ஊறத் தொடங்கியது
மனசோ நடுக் காட்டில்
சிக்கிக் கொண்டது
மானோ கண்ணுக்குள் வந்து
மாட்டிக் கொண்டது
உயிரோ மீன்முள் தைத்தது போல் திக்கித் திணறுது
கனவுகள் இல்லாத இதயம்
கல்லில் செதுக்கிய சிற்பம்
கனிகள் விளையாத மரம்
கிளிமொழி கேட்டால் பரவசமடைகிறீர்கள்
குயில் பாட்டில் குதூகலமடைகிறீர்கள்
குரலின் தன்மையை அறிய அக்கறையில்லை
ஆறை விட ஐந்தே பெரிது! கவிதை – செ.கார்த்திகைசெல்வன்
ஆம், நான் அரும்பாத
மலரே…
பால்மணங்கூட இன்னும்
என்னிலிருந்து
மறையவில்லையே
அதற்குள்
பாலியல் வண்புணர்வா?
தவழும் நிலையிலிருந்து
தற்பொழுதுதானே
தத்தித் தத்தி நடக்கும்
பரிணாமம் பெற்றேன்
அதற்குள் என்னைத்
தழுவ நினைத்தது
எவ்விதத்தில் நியாயம்?
எங்களின் புன்னகையில்
இறைவனல்லவா
தெரிந்திருக்க வேண்டும்
எப்படித் தெரிந்தோம்
உங்களின் பாலியல்
பசிக்கு இரையாக?
நல்லவர் தீயவர்
அறியாது யாவரிடமும்
அன்பைத்தானே
செலுத்துகின்றோம்
அதற்கு நன்றிக்கடனாய்
கொடுமையின் உச்சமா?
உங்களுக்கு மதத்தில்
மதமென்றால்
மழலை நாங்களென்ன
செய்தோம்?
மலரவிடாமல் இப்படி
நசுக்கி நாளும்
வதம் செய்கிறீர்களே!
ஐந்தறிவு
ஜீவிகளிடத்தில்கூட
இவ்வளவு வன்மம்
இல்லையே
ஆறறிவர் மனிதயினம்
என இனி எதைக்கொண்டு
நிரூபணம் செய்வீர்?
பத்துமாதம் சுமந்தவள்
பதறி அழுகிறாள்
கொஞ்சி விளையாடி
தோளில் சுமந்தவன்
மார்பிலடித்துக் கதறுகிறான்
இதற்கான ஆறுதல்
இங்கென்ன உண்டு?
மதா பிதா குரு தெய்வம்
என்றறிந்த உங்கள்
மனிதமனம் – மதா பிதா
குழந்தை குரு தெய்வம்
என்பதை மட்டும்
உணராதது ஏன்?








