தமிழ்நாட்டில் தோல்வி காணும் ஆர்எஸ்எஸ்சின் வகுப்புவாத திட்டங்கள் – சசிகாந்த் செந்தில்
மாவட்ட நீதிபதி என்ற முறையில் முதன்முதலாக மங்களூரு மாவட்டச் சிறைச்சாலையில் நான் மேற்கொண்ட ஆய்வு என்னுடைய கண்களைத் திறந்து விட்டது. அந்தச் சிறையிலிருந்த இரண்டு பகுதிகள் ஒன்றிலிருந்து மற்றொன்று முழுமையாகத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டிருந்தன. சிறைக்குள்ளிருந்த அனைத்து வகையான கைதிகளையும் முஸ்லீம்கள், ஹிந்துக்கள் என்று அந்த இரண்டு பகுதிகளும் தங்களுக்குள்ளாகப் பிரித்து வைத்துக் கொண்டிருந்தன. வகுப்புவாத வெறி மட்டுமே அந்த இரண்டு பகுதிகளுக்கிடையில் பொதுவானதாக அந்தச் சிறைக்குள்ளாக நிறைந்திருந்தது. அங்கிருந்த சில பகுதிகள் மிகவும் தீவிரமான களமாக சிறை அதிகாரிகளால்கூட அணுக முடியாதவையாக இருந்ததால் அந்த அதிகாரிகள் என்னை மிகவும் எச்சரித்தனர். ஆனாலும் விடாப்பிடியாக அங்கிருந்த மனிதர்களின் கதைகளையும், வகுப்புவாத திட்டங்கள் காஸ்மோபாலிட்டன் பன்மைக் கலாச்சாரத்தை சிதைத்து எவ்வாறு செழித்து வருகின்றன என்பதையும் அறிந்து கொள்வதில் நான் மிகுந்த ஆர்வம் கொண்டவனாகவே இருந்தேன்.
பல்வேறு நபர்களுடன் தொடர்புகளை உள்ளடக்கி அந்த மாவட்டத்தில் எனக்கு கிடைத்த அந்த இரண்டு ஆண்டு நீண்ட பதவிக்காலம் வகுப்புவாதப் பிரச்சனை குறித்த முறையான புரிதலை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வகுப்புவாதத் திட்டங்களின் தோற்றம், தக்க வைத்தல் என்று அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வடிவத்துடனே இருந்து வருகின்றன. அதிலிருந்து கிடைக்கின்ற படிப்பினைகள் இன்று தாக்குதலைச் சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்கவையாகவும் இருக்கின்றன.
அதை இங்கே நேரடியாகவே முன்வைக்கிறேன்: குறிப்பிட்ட இடத்தை வகுப்புவாதமயமாக்குகின்ற செயல்பாடுகள் மக்களைத் துருவமயப்படுத்துவது, தேர்தல் ஜனநாயகச் செயல்முறை மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்று ஒற்றை நோக்கத்துடனே மேற்கொள்ளப்படுகின்றன. அந்தச் செயல்பாடுகள் ஒருபோதும் பெரும்பான்மையினரைப் பாதுகாப்பது அல்லது சிறுபான்மையினரைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் நோக்கங்களுடன் மேற்கொள்ளப்படுவதில்லை. மூடிய அறைகளுக்குள்ளாக வலதுசாரி தீவிரவாதிகளுடன் பலமுறை நடைபெற்ற உரையாடல்கள் ஒரு விஷயத்தை எனக்குத் தெளிவுபடுத்திக் காட்டியிருந்தன. ‘தர்மம்’ பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர்களிடமிருந்த ஆர்வம் உண்மையில் கேலிக்கூத்தாகவே இருந்தது. மக்களை துருவமயப்படுத்துவதை தங்களுக்கான அதிகாரத்தைப் பெறுவதற்கான கருவி என்று அவர்கள் நன்கு கண்டறிந்து கொண்டுள்ளனர். அதைத் தவிர வேறு நோக்கம் எதுவும் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
ஹிந்து வலதுசாரி அமைப்புகள் மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளன. ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS) என்பது அறிவுசார்ந்து இயங்கக் கூடியவர்களை மற்றும் நேரடியாகக் களத்தில் வேலை செய்பவர்களைக் கொண்டது. பாரதிய ஜனதா கட்சி என்பது அதன் அரசியல் பிரிவு. மேலும் அதன் பல துணை அமைப்புகள் முன்னணியில் நின்று செயல்படுகின்ற அமைப்புகளாக இருக்கின்றன.
அவர்களிடம் இருக்கின்ற வகுப்புவாத திட்டம் ஒன்றன் பின் ஒன்று என்று நான்கு தனித்தனி நிலைகளைக் கொண்டதாக இருக்கின்றது.
நிறுவன அமைப்புகளை உருவாக்குதல்
இந்த நிலை அனைத்து நிலைகளிலும் முதன்மையானதாக, தனக்கென்று தேவைப்படுகின்ற காலத்தை எடுத்துக் கொண்டு நிகழக்கூடியதாக உள்ளது. இதைத்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு 1925ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போது அடுத்த நூறு ஆண்டுகளில் அமைதியாகச் சாதித்துக் கொள்ள நினைத்தது. இளைஞர்கள் சிலர் உள்ளூர்ப் பள்ளி மைதானங்களில் பானை வயிற்றுடன் இருக்கின்ற சிலரைத் தவறாமல் சந்தித்து வருவதைக் கவனித்திருக்கலாம். இந்த அமைப்புதான் அதுபோன்ற இடங்களில் கட்டப்படுகிறது. சேவை, ஒழுக்கம், தேசியவாதம் என்ற பெயரில் வகுப்புவாத வெறியர்களை உருவாக்குவதற்கான களமாக ‘ஷாகாக்கள்’ (கிளைகள்) என்றழைக்கப்படுகின்ற அமைப்பு அவர்களிடம் இருக்கின்றது. ஷாகாவில் கலந்து கொண்ட எவருடனும் பேசிப் பார்த்தால் ‘அது வகுப்புவாத வெறுப்பு கொண்டதாக இருக்கவில்லை. சேவை, தேசபக்தி பற்றி மட்டுமே பேசுவதாக உள்ளது’ என்று உறுதியுடன் அவர்கள் கூறுவதைக் கேட்க நேரிடும். இது போன்ற விஷயங்களில் அறிவார்ந்த உரையாடலை உருவாக்குவது, சமூக-பொருளாதார ரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவர்களை தங்களுடைய வெளிப்படையான நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள துணை அமைப்புகளில் நியமித்துக் கொண்டு செயல்படுவது போன்றவையே ஷாகா என்ற அந்த அமைப்பின் செயல்பாடுகளாகும்.
இந்தக் கட்டமைப்பின் இரண்டாம் கட்டமாக ‘ஹனுமன் சேனா’, ‘ஹிந்து முன்னணி’, ‘ஹிந்து ஜாக்ரன் வேதிகே’ போன்ற துணை அமைப்புகளின் வளர்ச்சி அமைந்துள்ளது. இதுபோன்ற துணை அமைப்புகள் அனைத்தும் தங்களை நேரடியான நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்கின்ற முன்னணி அமைப்புகளாகும். அவை அரசு நிர்வாகத்தையும், மக்களையும் இலக்காகக் கொண்டு வகுப்புவாதச் சாயல் கொண்ட பிரச்சனைகளை உருவாக்குகின்றன. ‘உயர்தட்டில்’ இருப்பவர்களால் புதிய அடையாளம், ஏற்றுக்கொள்ளல் போன்றவை உறுதியளிக்கப்பட்டுள்ள மிகவும் தாழ்த்தப்பட்ட சாதி, வர்க்கத்தைச் சார்ந்தவர்களாலேயே இந்த துணை அமைப்புகள் அனைத்தும் நிரப்பப்பட்டுள்ளன. அவர்களால் நிகழ்த்தப்படுகின்ற வன்முறையின் பெரும்பகுதி இந்த துணை அமைப்புகளிடமே விடப்பட்டுள்ளதால் ஆர்எஸ்எஸ் எந்தவொரு வன்முறையையும் பரப்புவதில்லை என்ற கருத்து ஓரளவிற்கு உண்மை என்பதாகவே பலருக்கும் தோன்றும். அவர்களால் வழக்கமாக நடத்தப்படுகின்ற கூட்ட அமர்வுகளில் நேரடி நடவடிக்கைக்கான நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்படுகின்றன. தங்களுக்கான கணிசமான நிதியுதவி, ஆதரவை ஆர்எஸ்எஸ், பாஜகவிடம் இருந்தே இந்த துணை அமைப்புகள் பெற்றுக் கொள்கின்றன.
மக்களிடையே ஆர்எஸ்எஸ்சின் இத்தகைய நிறுவனக் கட்டமைப்பு ஏற்படுத்தப்படுவதை தமிழ்நாடு போன்ற மாநிலங்களால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த, பக்தி நிறைந்த ஹிந்துவான ஜெயலலிதா அவர்களுடைய இந்தக் கட்டமைப்பை அனுமதிக்கக் கூடாததன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டவராகவே இருந்தார். தன்னுடைய பதவிக்காலத்தில் ஆர்எஸ்எஸ் வழக்கமாக நடத்துகின்ற அனைத்து ஊர்வலங்களுக்கும் தடை விதித்திருந்த அவர் 2014ஆம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் தினத்தைக் கொண்டாடுவதற்காகக் கூடியிருந்த ஆர்எஸ்எஸ் மாநாட்டை தடுத்தும் நிறுத்தினார். அவரது மறைவிற்குப் பிறகு ஆர்எஸ்எஸ் உடனடியாகச் செயல்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஆர்எஸ்எஸ் தனது ஷாகாக்களின் எண்ணிக்கையை 1,355ல் இருந்து 2,060 என்று அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் ஷாகாக்களில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்திலிருந்து இருபத்தைந்தாயிரமாக அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
அவர்களுடைய அமைப்பு ரீதியிலான கட்டமைப்பு தமிழ்நாட்டில் உச்சக்கட்டத்தை எட்டாமலிருப்பதே ‘வேல் யாத்திரை’ (ரத யாத்திரை போன்றது) போன்று மாநிலத்தில் துருவமுனைப்பை ஏற்படுத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறாததற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஆனாலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு உள்நாட்டில் கணிசமான வேலைகளைச் செய்து வருவதோடு தொடர்ந்து அதில் தீவிரமாக ஈடுபட்டும் வருகிறது. போதுமான நிறுவன பலத்தை அடைகின்ற போது அவர்களுடைய அமைப்பு ‘துருவமுனைப்பு நிலை’ என்ற இரண்டாவது நிலைக்கு நகர்கிறது.
துருவமுனைப்பை உருவாக்குதல்
தாங்கள் ‘பாதிக்கப்பட்டவர்கள்’ என்ற பொதுவான உணர்வை பெரும்பான்மை சமூகத்தினரிடையே உருவாக்குவதைச் சுற்றியே இந்த அடுத்த கட்டம் அமைகின்றது. நிர்வாகம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கும் வகையில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதன் மூலம் இந்தக் கட்டம் எட்டப்படுகிறது. ஹிந்து மத நூல் குறித்து தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ‘கறுப்பர்கூட்டம்’ என்ற யூடியூப் சேனலைச் சுற்றி தமிழ்நாட்டில் பாஜகவால் உருவாக்கப்பட்ட சர்ச்சை; மனுஸ்மிருதி குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் வெளியிட்ட கருத்துகளைச் சுற்றி உச்சஸ்தாயியில் எழுப்பப்பட்ட குரல்கள் இந்தக் கட்டத்தை எட்டுவதற்கான அவர்களுடைய முயற்சிகளுக்கான எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றன.
கால்நடைகளைக் கொண்டு செல்வதற்குத் தடை, தார்மீகக் கண்காணிப்பு, கட்டாய மதமாற்றம் குறித்த புகார்கள், பொது இடங்களில் காவிக் கொடிக்கம்பங்களை நிறுவுவது என்று நிர்வாகத்தைத் தலையிடத் தூண்டுகின்ற பிரச்சனைகளை எழுப்புவதிலேயே அவர்களுடைய துணை அமைப்புகள் தங்களைத் தொடர்ந்து ஈடுபடுத்திக் கொள்கின்றன. அவர்கள் நிர்வாகம் எடுக்கின்ற நடவடிக்கைகளை – பெரும்பான்மைச் சமூகத்திற்கு எதிராக ஒருசார்புடையதாக நிர்வாகம் இருக்கிறது, அது தங்களுடைய வகுப்புவாத உணர்வுகளுக்கு ஆதரவாக இருக்கவில்லை என்று நிர்வாகத்திற்கு எதிரான உணர்வை பொதுமக்களிடையே உருவாக்குகின்ற வகையிலேயே பயன்படுத்திக் கொள்கின்றனர். நிர்வாகம் ‘சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்துகின்ற’ வகையில் தன்னை எவ்வாறு ஈடுபடுத்திக் கொள்கிறது என்பதைக் காட்டுகின்ற பிரச்சாரமும் அவர்களால் முன்னெடுக்கப்படுகிறது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சமீபத்தில் அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவி ரேஷ்மாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மரணம் கட்டாய மதமாற்றத்தின் காரணமாக நடந்தது என்று குற்றம் சாட்டினார். மக்களைத் துருவமயப்படுத்துவதற்கான அவர்களுடைய முயற்சிகளுக்கான எடுத்துக்காட்டாகவே அவரது அந்தச் செயல்பாடு அமைந்திருந்தது. அந்தச் சிறுமியின் வீடியோ மற்றும் பிற விவரங்களை வெளியிடுவது போக்சோ (POCSO) மற்றும் சிறார் நீதிச் சட்டங்களின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்ற உண்மையை முற்றிலுமாகப் புறக்கணித்தே முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை செயல்பட்டிருந்தார்.
‘இந்த வழக்குடன் தொடர்புடைய சிறுபான்மை கிறிஸ்தவ நிறுவனத்தை மூட வேண்டும், மாநிலத்தில் கட்டாய மதமாற்றங்களைத் தடுக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும்’ என்ற கோரிக்கைகளை முன்வைத்த அவர் முழுக்க முழுக்கப் பொய்களின் அடிப்படையில் அந்த மரணத்தைச் சுற்றி மாபெரும் பிரச்சாரத்தை உருவாக்கினார். அந்தக் கட்சி மதரீதியான சிந்தனைகள் குறித்து சமூகத்திற்குள் இருந்து வருகின்ற ‘அலட்சியத்தை’ சீர்குலைப்பது குறித்து மட்டுமே கவலைப்படுவதை இதுபோன்ற விவகாரங்கள் அவர்களால் பெரும்பாலும் தர்க்கரீதியான முடிவுக்கு எடுத்துச் செல்லப்படாமல் இருப்பதிலிருந்தே நம்மால் அறிந்து கொள்ள முடியும். சமூகத்தில் உள்ள அந்த அலட்சியம் நீங்கிய பிறகு அவர்களுடைய கட்சி அடுத்த பிரச்சனைக்குச் சென்று விடும். ஆயினும் அவர்களுடைய பிரச்சாரம் சமூகத்திற்குள் வகுப்புரீதியாக துருவமயப்படுத்தப்பட்ட கிருமிகளைச் செலுத்தி, தொடர்ந்து சமூகத்தில் அதற்கான பலனை அவர்களுக்கு ஏற்படுத்தித் தருவதாகி விடும்.
வெளித்தோற்றத்தில் தங்களை யாருக்கும் தீங்கு விளைவிக்காதவர்களாகக் காட்டிக் கொள்ளும் ஷாகா உறுப்பினர்கள் நேரடியாக வீடுகளுக்கே செல்வதன் மூலம் இதுபோன்ற நடவடிக்கைகளை அதிகரித்துக் கொள்கின்றனர். தாம்பூலம் (ஹிந்துக்கள் பின்பற்றுகின்ற மங்களகரமான வாழ்த்து) வழங்குவதன் மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்பு கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சேரிகளில் உள்ள பதினெட்டு லட்சம் வீடுகளில் மக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பது நன்கு அறிந்த ஒன்றாகவே உள்ளது. பிரச்சாரப் பொருட்களும் அதிக அளவிலே அச்சிடப்பட்டு அவர்களால் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஆர்எஸ்எஸ் பிரச்சார இதழான ‘ஹிந்து சங்க செய்தி’ நாற்பதாயிரம் பிரதிகளுக்கு மேல் விநியோகிக்கப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ்சின் அரசியல் பிரிவான பாஜக இதுபோன்ற நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடாமல், தேவைப்படுகின்ற பொருட்கள், நிதி உதவியை மட்டுமே வழங்கி வருகிறது. துணை அமைப்புகளில் உள்ளவர்கள் சட்டச் சிக்கல்களில் மாட்டிக் கொள்கின்ற போது அவர்களைப் பாதுகாப்பதில் பாஜகவின் தீவிரமான பங்கு இருப்பதைக் காண முடிகிறது. அனைத்து குற்றச் செயல்களிலிருந்தும் தன்னைத் தனியாக விடுவித்துக் கொள்கின்ற பாஜக இந்த மும்முனை அணுகுமுறையின் மூலமாக நடத்தப்படுகின்ற துருவமுனைப்புத் திட்டத்தின் பலனை அரசியல் ரீதியாக அறுவடை செய்து கொள்கின்ற நிலையில் தன்னை இருத்திக் கொள்கிறது.
துருவமுனைப்பிற்காக மிகச் சாதாரணமாக மேற்கொள்ளப்படுகின்ற எளிமையான முயற்சிகளாக இருக்கின்ற இதுபோன்ற செயல்கள் சிறுபான்மை சமூகத்திடம் பழிவாங்கும் செயல்களைச் தூண்டிவிடுவதன் மூலமாக தங்களை இயல்பானவையாக்கிக் கொள்ளும் வரையிலும் தொடர்கின்றன. சிறுபான்மை சமூகத்திடம் உருவாகின்ற பழிவாங்கும் செயல்கள் மூலமாக துருவமுனைப்பு இயல்பாக்கப்பட்ட பிறகு துருவமுனைப்பு சுழற்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையிலே கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் அவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். பின்னர் அது இரண்டு சமூகங்களுக்கிடையில் நேரடியாகத் தாக்கிக் கொள்வது, கொலைகளைச் செய்வது என்ற கட்டத்தை நோக்கித் தள்ளப்படுகிறது. நிகழ்கின்ற ஒவ்வொரு மரணமும் அடுத்த நகர்விற்கான ஆதாரப் புள்ளியாகப் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது. இறந்த உடல்களைக் கொண்டு நடத்தப்படும் ஊர்வலங்கள் பெரும்பான்மையினரிடம் உள்ள ‘தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள்’ என்ற உணர்வை அதிகரிக்கவும், நிர்வாகத்திற்குப் புதிய பிரச்சனைகளை ஏற்படுத்தவும் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. இதுபோன்ற திட்டங்களே 2002ஆம் ஆண்டு குஜராத்திலும், அதற்குப் பிறகு 2008 ஆகஸ்ட் மாதத்தில் கந்தமாலிலும் அவர்களுடைய கீழ்த்தரமான, கொலைகாரத் திட்டங்களுக்காக வேலை செய்தன. அவர்களுடைய பிரச்சாரத்தைப் பெருக்கிக் காட்டுவதில் ஒற்றைத்தன்மை கொண்ட சமூக ஊடகத்தின் பங்கு நன்கு அறியப்பட்டதாகவே இருக்கிறது. அது குறித்து ஏற்கனவே மிகவும் விரிவாக எழுதப்பட்டுள்ளது.
அதிகாரத்தைக் கைப்பற்றுதல்
துருவமுனைப்புக் கட்டம் சாதகமான நிலைமையைக் களத்தில் உருவாக்கித் தரும் போது, தேர்தல்கள் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற வகுப்புவாதப் பிரச்சனைகளை அவர்கள் முன்னிலைப்படுத்திப் பயன்படுத்திக் கொள்கின்றனர். சிறுபான்மை சமூகத்தினருடன் இணைந்து கொள்வது, ஊழல்களில் ஈடுபடுவது, பெரும்பான்மை சமூகத்தின் உணர்வுகளைப் பாதுகாக்க அரசாங்கமும், நிர்வாகமும் தவறியுள்ளது என்பது போன்ற பிரச்சாரங்களே அவர்களால் தேர்தல்களுக்காக மேற்கொள்ளப்படுகின்றன. இதுபோன்றதொரு மிகவும் ஆபத்தான கலவையான பிரச்சாரத்திற்கு பெரும்பான்மை சமூகத்தில் உள்ள தாராளவாதிகள்கூட இரையாகி விடும் போது அந்தப் பிரச்சாரம் அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் சென்று முடிவடைகிறது.
மனிதவளம் சார்ந்த ஆதரவை ஆர்எஸ்எஸ் அமைப்பு வழங்கிட, தேர்தல்கள் குறித்த நுண்ணிய மேலாண்மை, கருத்துகளை உருவாக்கும் கலையை பாஜக மிகவும் கச்சிதமாக உருவாக்கி வைத்திருக்கிறது. சங்பரிவாரத்தைக் கொண்டு வாக்குச்சாவடி நிர்வாகம் மிக விரைவிலேயே தொடங்கி விடுகிறது. ஒரு வாக்குச்சாவடிக்கான வாக்காளர் பட்டியலை அவர்கள் மூன்று வகைகளாகப் பிரித்துக் கொள்கின்றனர். ஏ-பட்டியலில் பொதுவாக வலதுசாரி சக்திகளுக்கு வாக்களிக்கும் வாக்காளர்களும், சி-பட்டியலில் எந்தவகையான பிரச்சாரத்தையும் பொருட்படுத்தாது வாக்கே அளிக்காதிருப்பவர்களும் இருக்கின்றனர். அந்தப் பட்டியலில் பெரும்பாலும் பிற சமூகங்கள், மதங்களைச் சேர்ந்தவர்களே இருப்பார்கள். பி-பட்டியலானது எந்த முடிவும் எடுக்காது இருப்பவர்களைக் கொண்ட பட்டியலாக இருக்கும். இந்த பி-பட்டியலில் இருக்கின்ற பலரையும் ஏ-பட்டியலில் இருப்பவர்களாக மாற்றும் பொறுப்பு ஆர்எஸ்எஸ்காரர்களிடம் அளிக்கப்படுகிறது.
வாக்குச்சாவடி நிர்வாகத்தை தேர்தல்களின் போது நடைபெறுகின்ற வாக்குப்பதிவு கண்ணோட்டத்தில் மட்டுமே பயன்படுத்துபவையாக மற்ற அரசியல் கட்சிகள் இருந்து வருகின்றன. ஆனால் அதேவேளையில் வலதுசாரிகள் வாக்குச்சாவடி நிர்வாகத்தை கருத்து திணிப்பு மற்றும் உருவாக்கத்திலிருந்து தொடங்கி பின்னர் வெளிப்படையான துருவமுனைப்பு என்பதாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதுவே இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள முக்கியமான வேறுபாடாக உள்ளது. வாக்குச் சாவடிகளில் எத்தனை பேர் ஏ-பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்ற கணிப்புகளைக் கணக்கிடுவதற்காக பாஜகவின் அனைத்து முகவர்களும் வாக்கு எண்ணிக்கையின் போது கடைசி வாக்கு எண்ணப்படும் வரை அங்கேயே தங்கியிருப்பதைக் காண முடியும்.
நிறுவனங்களின் மீதான தாக்குதல்
ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியதும், பெரும்பான்மை சமூகத்தின் மீதான தங்களுடைய வெளிப்படையான சார்புநிலையை வெளிப்படுத்துவதற்காக ஜனநாயக நிறுவனங்களை முற்றிலுமாகக் கைப்பற்றிக் கொள்ளும் வகையில் அவர்களால் அரசு இயந்திரம் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. சிறுபான்மையினரை அச்சுறுத்துவதற்கும், சிறுபான்மை மதத்தவரில் தீவிரமாக இயங்குபவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வைக்கும் வகையிலும் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த இடத்தில்தான் அதிகாரத்துவ அமைப்பு ஒருபக்கச்சார்பற்ற நிர்வாகத்தை வழங்குவது, அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பது போன்ற செயல்களைச் செய்யத் தவறுகின்ற அமைப்பாக மாறுகின்றது.
வெளிப்படையான ஆதரவை வழங்குவதற்காக எதிர்மறையான, நேர்மறையான ஊக்கங்களை அளிப்பதன் மூலம் ஊடகங்கள் போன்ற பிற நிறுவனங்களும் கைப்பற்றப்படுகின்றன. ‘சிறுபான்மையினர் குற்றவாளிகள்’ என்ற கோட்பாட்டைப் பிரச்சாரம் செய்ய கூடுதல் முயற்சிகளை எடுத்துக் கொள்வதன் மூலம் ஆளும் கட்சியிடம் தனக்குள்ள விசுவாசத்தை நிரூபித்துக் கொள்ள அதிகாரத்துவ அமைப்பு முயல்கிறது. இவ்வாறு நிறுவனங்கள் கைப்பற்றப்பட்ட பிறகு அமைப்பின் மீது தங்களுக்குள்ள நம்பிக்கையை இழந்து போகின்ற சிறுபான்மைச் சமூகம் சுயமாகச் செயல்பட முயல்கின்றது. அதன் விளைவாக அதுபோன்ற நிலைமைகள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகி விடுகின்றன.
இந்த நான்கு நிலைகளையும் கடந்த பிறகு, சிறுபான்மையினரைக் கட்டுக்குள் வைத்திருக்கும் வகையிலே பல்வேறு சம்பவங்களைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் அந்தச் சுழற்சி நீட்டித்து வைத்துக் கொள்ளப்படுகிறது. இரு குழுக்களிடமும் பாரபட்சமற்ற முறையில் செயல்பட்டு அதிகாரத்துவ அமைப்பு நிலைமையை மீட்டெடுக்கும் வரை இந்த சுழற்சி ஒரு வகையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. ஆயினும் அது சமூக கட்டமைப்பிற்கு, குறிப்பாக இளைஞர்களிடம் சேதத்தை ஏற்படுத்தி விடுகிறது. வகுப்புவாதமானது தனிப்பட்ட குடும்பங்களை, மாவட்டம் அல்லது மாநிலத்தின் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றது என்பதை நினைவில் கொள்வது மிகவும் அவசியம். தார்மீக எதேச்சாதிகாரத்தை நோக்கிய ஆபத்தான இந்தச் சுழல் மிக விரைவில் பரவி பெரும்பான்மை சமூகத்தின் மீதும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இதன் விளைவாக எந்தவிதமான மனச்சஞ்சலமும் இல்லாமல் அப்பட்டமான ஆணாதிக்க கருத்துகளை வெளிப்படுத்துகின்ற புதிய தார்மீகக் காவலர்கள் உருவாக்கப்படுவார்கள். சந்தேகம் மற்றும் அவநம்பிக்கை நிறைந்த சூழ்நிலையால் ஏற்படுத்தப்படும் அதிகபட்ச சுமையை பெண்களும், பொருளாதாரமுமே தாங்கும் நிலை ஏற்படும்.
தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் மிக வேகமாக முன்னேறி வருகிறது. தற்போது சமூக-பொருளாதார அடிப்படையில் மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருந்து வருகிறது. வகுப்புவாதத் திட்டம் மிகவும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கும் பிற இடங்களிலிருந்து இந்த மாநிலம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளமாக உள்ளன. தங்களுடைய துருவமுனைப்பு முயற்சிகளுக்கு அதிக ஆதரவை தமிழ்நாட்டில் இதுவரையிலும் பெற முடியாத வலதுசாரிகள் தமிழ் மொழி, தமிழ்க் கடவுளர்கள் தொடர்பாக புதிய கதைகளுடன் தங்களுடைய முயற்சிகளை மீண்டும் ஆரம்பித்துள்ளனர். அவை அம்பேத்கரிய-பெரியாரிய திராவிட சிந்தனை கொண்ட தலைவர்களுக்கு எதிராக அறிவுஜீவித்தனமற்ற தோரணைக்கான எடுத்துக்காட்டாகவே இருக்கின்றன.
முடிவெடுக்காது இருப்பவர்களை ஹிந்துத்துவா எல்லைக்குள் கொண்டு வருவதே அவர்களுடைய நோக்கமாக இருக்கிறது. தமிழ்நாடு இதுபோன்ற சமிக்ஞைகளை முன்கூட்டியே எதிர்பார்த்து இந்த பிற்போக்குச் சக்திகளை அண்ட விடாமல் தொலைவிலேயே வைத்திருக்க வேண்டும். தேர்தல்களில் வலதுசாரி சக்திகளுக்கு ஏற்படுகின்ற அரசியல் தோல்வியைக் கொண்டு தமிழ்நாடு தன்னுடைய விழிப்புணர்வை முடிவுக்குக் கொண்டு வந்து விடக்கூடாது. மாநிலத்திற்குள் ஆர்எஸ்எஸ், அதன் துணை அமைப்புகளின் வளர்ச்சி தொடர்ந்து கண்காணித்து வரப்பட வேண்டும். ஒவ்வொரு தனிநபரும் ஆர்எஸ்எஸ்சின் துருவமுனைப்படுத்தும் திட்டம் தங்கள் குழந்தைகள், குடும்பங்கள் மீது ஏற்படுத்தப் போகின்ற நீண்டகால விளைவுகளைப் பற்றி அவசியம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
முதன்முதலாக மங்களூர் சிறையில் நான் பார்த்த அங்கே அடைக்கப்பட்டிருந்த இரு சமூகத்தினர்களில் எழுபது சதவிகிதம் பேர் நமது குடும்பங்களில் உள்ள வாலிபர்களைப் போல வயதில் மிகவும் சிறியவர்களகவே இருந்தனர். கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் மட்டுமே துருவமுனைப்பை ஏற்படுத்துவது அந்தக் கட்சிக்கு மிகவும் சிரமமான காரியமாக உள்ளது.
எனவே அந்தக் கட்சி தன்னுடைய வியூகத்தை மறுசீரமைத்துக் கொண்டுள்ளது. கடலோர கர்நாடகாவில் இந்த அரசியலைப் பார்த்திருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை (உடுப்பியில் ஒரு முறை காவல்துறைக் கண்காணிப்பாளராகப் பதவி வகித்தவர்) தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது. கர்நாடகாவில் இருந்து அவர்களுடைய பாணி, முறையை இறக்குமதி செய்து கொள்வதற்கான வாய்ப்பை இழந்து விடாமல் மாநிலத்தை வகுப்புவாதமயமாக்குவதில் இரவு பகலாக அவரும் உழைத்துக் கொண்டிருக்கிறார்.
இதுவரையிலும் சங்பரிவாரம் மேற்கொண்டிருக்கும் வகுப்புவாத முயற்சிகள் அனைத்தையும் தமிழ்நாடு முறியடித்துக் காட்டியுள்ளது. தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களுக்கான சமூக இயக்கத்தால் சித்தாந்த ரீதியாக உந்தப்பட்டு இயங்கி வருகின்ற இந்த மாநில அரசு பாஜகவை கட்டுப்படுத்துகின்ற வீரனாக இருக்கும் என்றே நம்புகிறோம்.
நன்றி: நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு
தமிழில்: தா.சந்திரகுரு