சாதிஎதிர்ப்பு கவிதை – அழகிரி
அகிலத்தை நல்லாட்சி செய்யும்
ஆண்டவன் படைப்பில் என்றும்
இட்டார் பெரியோர் என்றார்
இடாதோர் இழிகுலம் என்றும்
சாதிகள் இரண்டே என்பதே
ஒளவையின் அறநெறி வாக்காம்
உழுதுண்டு வாழ்வோர் ஒரு சாதி
தொழுதுண்டு வாழ்வோர் மறு சாதி
என்பதே சத்தியமான வாக்காம்
பிறப்பினில் அனைவரும் ஒரு சாதி
செய்யும் வினையால் விளைந்து
விரிந்ததே சாதிக்கு ஒரு நீதியாம்
ஒற்றுமை யுடனேயே வாழ்ந்தால்
விடியுமே ஒரு கோடி நன்மை
வேற்றுமை கண்டால் களையென
வாழுமே, நலமாவென சிந்திப்பீர்
அண்டங் காக்கை முதலாக
ஐந்தறிவு உயிரினம் யாவுமே
உணர்த்தும் உண்மை உணர்வீர்
மக்களாய் பிறந்த மன்னவரே
மாக்கள் என்றநிலை மாறிடாது
மாமனிதர் என்றே நல் பெயரெடு
உயர்திணை வழியில் தேவரென
பூவுலகம் உள்ளவரை நின் புகழ்
பாடும் பாடுவதை கேட்பாய்,
நாய் நாயாக கவிதை – ஜெயஸ்ரீ
எப்போதுமே வாலாட்டிக்
கொண்டே இருக்கும் என்பதில்லை
சில சமயங்களில்
குரைக்கவும் கடிக்கவும்
செய்யும்.
காட்டில் வாழ்ந்த
வேட்டை நாய்கள்
வீட்டில் வாழ்வதால்
மனித குணம்
தொற்றிக் கொண்டது
பொமரேனியன்
டால்மேஷன்
தொடங்கி
தெருநாய் சொறிநாய்
வரையில்
தான் இன்ன சாதி
என தெரியாததால்
நாய் இன்னமும்
நாயாகவே உள்ளது
ஜெய்பீம் கவிதைகள் – நா.வே.அருள்
மன்னராட்சி முடிந்துவிட்டது என்பவன் அறிவாளி
தொடர்கிறது என்பவன் முட்டாள்
ஆனால் கவிஞன் எப்போதும்
முட்டாளாகவே இருக்கிறான்.
சாதிக்கு ஓர் அரசாங்கம் இருக்கிறது
அது அரூபமாய் இருக்கிறது.
சாதிக்கு ஓர் அரசர் இருக்கிறார்
அவர் மாறுவேடம் போட்டிருக்கிறார்.
சாதிக்கு ஒரு கோட்டை இருக்கிறது.
ஆனால் எலும்புக் கூடுகள் வெளியே தெரிவதில்லை.
சுற்றிலும்
அவ்வளவு ஆபத்தான அகழிகள் இருக்கின்றன
இருப்பினும் முதலைகளின் கருணை பற்றி
அறிவிப்புப் பலகை நடப்பட்டிருக்கிறது.
சாதிச் சிற்றரசர்
மதப் பேரரசருக்குக்
கலவரக் கப்பம் கட்டிவிடுகிறார்.
வரிகளாக
சடலங்கள் செலுத்தப்படுகின்றன.
மற்றபடி இங்கே
மனிதாபிமானம்தான்
சிம்மாசனத்தில் இருக்கிறது!
2
சம்புகன் தலைகளும்
ஏகலைவன் விரல்களும்
சேரிகளின் சேமிப்புக் கிடங்குகள்.
அவர்களின் முதுகெலும்புகள்
கிடைக் கோட்டில் இருந்தால்தான்
சமூக நல்லிணக்கத்திற்கு நல்லது.
அப்படியும் நிமிர்ந்துவிடக் கூடாது என்பதற்குத்தான்
முதுகில்
பாவத்தின் கரிமூடடைகள்.
3
பழைய சதுரங்கத்தில்
புதிய பகடைகள்
சொந்த உடலிலிருந்து
இதயத்தை அகற்றுதல்.
எதிரில் நிற்பவன் உடலில்
எலும்புக் கூடுகள் தேடுதல்.
சட்ட உடைகள் இல்லா நிர்வாணிகளின்
தோலுரித்தல்.
அக்கினிச் சட்டியில் பிறந்ததாகச் சொல்லி
தாயின் கருப்பை
உருவப் பொம்மை எரித்தல்.
கார்ப்பரேட் வாசலில்
காற்றடித்த பொம்மைகளின்
போலி கௌரவப் புடைத்தெழும் மார்புகளில்
புல்லரித்தல்!
முன்னேறும்
காலச் சக்கரங்களில்
சொந்த சகோதரர்களைத்
தலை வைத்துப் படுக்கச் சொல்லி
தர்மம் காத்தல்!
4
புராணங்களின் புவியியலில்
சுடுகாடுகளை நிர்மாணித்தல்
ஐதீகங்களால் சிதை வளர்த்தல்
வரலாறுகளை எரியூட்டுதல்.
5
ஜெய் பீம்
அளவற்ற அருளாளனும்
நிகரற்ற அன்புடையவனுமான
ஒருவனின்
மானுட குலத்திற்கான மந்திரச் சொற்கள்!
அவன் முகத்தில் சாணியடிக்க
யாரேனும்
அக்கினிச் சட்டியில் கைவிடுவார்களா?
ஏன்?
குரலற்றவனின் குரல்
முதல் முதலாய் ஒலிக்கிறபோது
காதைச் செவிடாக்கும்
காயத்ரி மந்திரங்கள்?….
விஷப் பாம்பைக்கூட
கைகளால் பிடித்துவிட்ட ராசாக்கண்ணுவை
விழுங்க
எத்தனை மலைப் பாம்புகள்?
5
சாதியற்ற சமூகம் காண
ஆகாய விமானத்திற்கு
ஆசைப்பட்டேன்.
சாதி நிழல் படியாத
மகோன்னத பூமி
மண்ணில் இருக்குமா?
தற்காலிகமாகவேனும்
தரிசிக்க முடியுமா?
இருட்டப்பனையும் மொசக்குட்டியையும்
கனடாவுக்கு அழைத்துவந்தேன்
செக்யூரிட்டி செக் – இல் மாட்டிக் கொண்டார்கள்.
இருவரின் கால்களிலும்
சங்கிலியால் பிணைத்த
ஜாதி உலோக இரும்புக் குண்டுகளாம்!
ஒருவனின் இரும்புக் குண்டுகளை
விதைகளாக்கினேன்.
மற்றவனுக்கு
கண்கள் பிடுங்கப்பட்டக்
குழிகளில் செருகினேன்.
இனி அவர்களின்
விடுதலை நோக்கிய வெளிநாட்டுப் பயணம்!
6
கனடாவில்
முதல் முதலாய்ச்
சுதந்திரக் காற்றைச் சுவாசித்தார்கள்.
சாமீ என்று
யாரையும் அழைக்கும் அவசியமில்லை.
இருளா என்று யாரும் அவர்களை
இம்சிக்கவில்லை
இருட்டப்பனும் மொசக் குட்டியும்
என்னைக் கேட்டார்கள்….
“லாக் அப்பில்
எங்கள் கண்களில் தூவிய மிளகாய்ப் பொடி
உலகத்தின் கண்களை உறுத்தவேயில்லையா?”
சேரியா? ஊரா? கவிதை – வ. காமராஜ்
இந்தியாவை
எப்படிப் பார்ப்பது;
அழைப்பது?
ஊர் என்று அழைப்பதா?
சேரி என்று சொல்வதா?
ஊரும் சேரியும்
கலந்து கிடக்கும் நாட்டை…
ஒன்று
ஊராக்கு!
இல்லையானால்
சேரியாக்கு!
இந்தியா
கிராமங்களில்தான் வாழ்கிறது!
கிராமங்கள் ;
ஊரென்றும் சேரியென்றும்
உறங்காமல் கிடக்கின்றன!
வெள்ளைக்காரன்
ஊர்த் தனம் செய்தானா?
சேரித்தனம் செய்தானா?
ஓட்டிவிட்டோம்!
ஊர் என்பது…
ஒரு கிராமத்தின் குறியீடா
சேரி மக்களை
தொடக்கூடாது என்போர் வாழும் குறியீடா?
சேரி என்பது
பிறருக்கு சேவை செய்வோர் வாழும் குறியீடா?
இந்திய மண்
எப்படி சேரி மக்களிடம் சேராமல் போனது?
மண் கூட
சேரி மக்களை சேர்க்காமல்
போனதோ?
சேரி வாழ்வோர்
தீட்டுடையவர் என்றால்;
அவர்
தீண்டும் உழைப்பில்
தீட்டுப் படுவதில்லையா?
ஊர் என்பதில்
உழைப்பவரும் வாழும் இடம்தானே?
ஏன்
சேரியின் ஒட்டுமொத்த
உழைப்பாளரும்,
ஊரின் ஒரு பகுதி உழைப்பாளரும்
ஒன்று சேராமல் போனார்கள்?
இந்திய
ஊர்… சேரி மக்கள்
உருவத்தில்…. நிறத்தில்
ஒன்றுடையவர் தானே?
ஒரு சிலர் தவிர!
உருவம்… நிறம்….
உணவுமுறை…. உடை…
எல்லாமும் ஒன்று;
ஊரும் சேரியும் தனி… தனி!
நாட்டின் வளர்ச்சிக்கு
நாளும் ஒரு திட்டம்;
ஊரும் சேரியும்
பிரிந்தே கிடப்பதற்கு
குள்ள நரிச் சட்டங்கள்!
கிராமங்கள்
ஊரென்றும் சேரியென்றும்
இருப்பதே இருக்கட்டுமெனில்….
எதற்காக
நடித்துக் கொண்டிருக்கிறோம்;
வேற்றுமையில் ஒற்றுமை?
இந்தியாவில் பிறந்த
அனைவரையும்
ஒன்று
ஊர் மக்களாக்கு….
இல்லையானால்
சேரி மக்களாக்கு!
முடியாது என்றால்
இந்தியாவை
சுதந்திர நாடு என்று
சொல்லாதே நிறுத்து!
வலி கவிதை – சு.சம்பத்
ஆசிரியராய் நான்
ஆனபின் இப்போது
‘ஆண்டை’ வீட்டுக்குப்
போனால் போதும்
அதிசயமாய் என்னை மட்டும்
‘அணைக்குடி சம்பத் வாங்க’
என்று
அன்பொழுக அழைத்துச் சென்று
நாற்காலியில் அமர வைத்துத்
தேநீர் கொடுக்கின்றார்கள்
ஆனால்
அப்பா தம்பியையெல்லாம்
இன்னமும்
அதே கொல்லைப் பக்கமாகத்தான்
அழைத்துச் சென்று
தேநீர் கொடுக்கின்றார்கள்





