நூல் அறிமுகம்: மும்தாஸ் அலீ கானின் ’மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம்’ (ஒரு சமூகவியல் ஆய்வு) – சம்சுதீன் ஹீரா
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஆல் நேரடியாக (தன் துணை அமைப்புகளைப் பயன்படுத்தாமல்) நிகழ்த்தப்பட்ட மூன்று தாக்குதல்களாகச் சொல்லப்படுவது ஒன்று பழனிபாபா படுகொலை, இரண்டாவது அல் உம்மா பாஷா பாய் மீதான கொலை முயற்சி, மூன்றாவது கூரியூர் ஜின்னா படுகொலை.
பழனி பாபா, பாஷா பாய், மீதான தாக்குதலுக்குக்கூட அவர்களின் வீரியமான செயல்பாடுகளைக் காரணம் சொல்வதற்கு முகாந்திரம் உண்டு. ஆனால் கூரியூர் ஜின்னா விசயத்தில் ஆர்.எஸ்.எஸ் க்கு அப்படி என்ன சிறப்புக் கவனம்?
பார்ப்பனிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒரு விசயத்துக்கு அஞ்சி நடுங்கும் என்றால் அது மதமாற்றம் தான். தலித் சமூகத்திலிருந்து குடும்பத்தோடு இஸ்லாத்துக்கு மாறிய கூரியூர் ஜின்னா, தன்னைச் சார்ந்த நூற்றுக்கணக்கான மக்களின் பெருந்திரள் மதமாற்றத்தை முன்நின்று நடத்தினார். ஆர்.எஸ்.எஸ் பதறிக்கொண்டு ஓடிவந்தது காரியத்தை முடித்தது.
பொதுவாகவே மதம் மாறிய மக்களை காசுக்காக, ரொட்டிக்காக, மாறினார்கள் என்றெல்லாஉதவும். இழிவு செய்து குரூரமாய் வன்மத்தைப் பரப்பினாலும் அதன் உள் மனதில் பேரச்சம் கொள்ளச்செய்யும் நிகழ்வு மதமாற்றம். அது பார்ப்பனியத்தின் அஸ்திவாரத்தையே தகர்த்து விடக்கூடியது.
இப்போது மோடியரசு கொண்டுவரத் துடிக்கும் மதமாற்றத் தடைச் சட்டம், ஆயிரமாண்டுகளாய் அவர்களின் ஜீன்களில் உறைந்து போயுள்ள அடிப்படைத் திட்டம்.
விசயத்துக்கு வருகிறேன்.
சீர்மை பதிப்பகத்தின் ‘மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம் – ஒரு சமூகவியல் ஆய்வு’ என்ற நூலை வாசித்தேன்.
அரபுநாடுகளின் நிதியிலிருந்து பெரும் செலவு செய்து பணத்தாசை காட்டித்தான் பெருந்திரள் மதமாற்றம் செய்யப்பட்டது என்கிற ஆர்.எஸ்.எஸ் மற்றும் அப்போதைய அ.இ.அ.தி.மு.க அரசின் பொய்ப் பிரச்சாரங்கள் பெரிதாக எடுபடவில்லை என்றாலும், மதம் மாறிய, மாறாத அம்மக்களிடம் நேரடியாக எடுக்கப்பட்ட நேர்காணல்கள் ஆய்வுகள் அடிப்படையில் இதுகுறித்த முழுமையான சித்திரம் இந்நூலில் கிடைக்கிறது.
200 ஆண்டுகளுக்கு முன்பே பெருந்திரள் மதமாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாகச் சொல்லும் இவ்வாய்வு, இக்குறிப்பிட்ட மீனாட்சிபுரம் மதமாற்றம் ஏதோ சட்டென்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அந்த அம்மக்கள் எடுத்த முடிவு அல்ல. இரண்டு தலைமுறைகளாக ஒரு கிராமத்தின் 300 குடும்பங்கள் தங்களுக்குள் நடத்திக்கொண்ட விவாதங்கள் உரையாடல்களின் தொடர்ச்சியாகத்தான் இந்த முடிவுக்கு வந்து சேர்ந்தார்கள் என்பதையும் விளக்குகிறது.
அந்த 300 குடும்பங்களும் தங்களுக்குள் உறவுமுறை கொண்டிருந்ததும் இந்த கூட்டு மதமாற்றத்துக்கு முக்கிய காரணம் என்பதையும், ஏற்கனவே கிருத்துவத்துக்கு மாறியிருந்த மக்களில் பலரும் இந்நிகழ்வில் இஸ்லாத்துக்கு மாறியதையும், அதற்கான காரணிகளையும் விளக்குகிறது.
தீண்டாமைக்கெதிராக, சமூக இழிவுகளுக்கெதிராக இந்து மதத்திலிருந்து வெளியேறுவதென்று முடிவு செய்த மக்களுக்கு கிருத்துவம் இஸ்லாம் என்கிற இரண்டு வாய்ப்புகள் இருந்தன. பௌத்தம் பிரபலமாகியிருக்கவில்லை.
ஏற்கனவே இவ்விரண்டு மதங்களுக்கும் மாறிய மக்களின் வாழ்க்கைச் சூழல் சமூக அந்தஸ்து குறித்து நீண்ட ஆய்வைச் செய்கிறார்கள். உயர்ஜாதி இந்துவாக இருந்து கிருத்துவத்துக்கு மதம் மாறியவர்கள், அங்கும் தங்கள் ஜாதியைச் சுமந்து சென்றதால் சமூக இழிவுகள் அங்கும் நீடிப்பதால் ஒருமனதாக இஸ்லாத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
படிப்பறிவில்லாத பாமர மக்கள் எளிதாக மூளைச்சலவை செய்யப்பட்டு மதம் மாற்றப்பட்டனர், பொருளாதார நிலையில் கீழுள்ள மக்கள்தான் மாற்றப்பட்டனர் என்கிற வாதங்களையெல்லாம் இவ்வாய்வு புள்ளி விவரங்களோடு முறித்துப் போடுகிறது.
பெருந்திரள் மதமாற்றத்துக்குப் பிறகு இந்துத்துவா சக்திகள், ஊடகங்கள், மாநில அரசு, உள்ளூர் சாதிய சக்திகள், போலீஸ், அரசு அதிகாரிகள் போன்ற எல்லா அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு தாங்கி நின்ற ஒரு சமூகத்தின் உளவியலைப் புரிந்துகொள்ள இந்நூல் நிச்சயம் உதவும்.
– சம்சுதீன் ஹீரா
நூல் : மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம்: ஒரு சமூகவியல் ஆய்வு
ஆசிரியர் : மும்தாஸ் அலீ கான்
விலை : ரூ.₹300
வெளியீடு : சீர்மை பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]