தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 19 – டாக்டர் இடங்கர் பாவலன்
19. மனைவிக்கு கணவன் எழுதிய மன்னிப்புக் கடிதம்
-டாக்டர் இடங்கர் பாவலன்
கருத்தரித்துவிட்ட நாள் முதலாக, கருப்பையில் நீ பிள்ளையை அழகாய் வணைந்து நீ வார்த்தெடுத்தது, பெருவலியெடுத்துப் பிரசவித்து பிள்ளையை எங்களுக்கு நீ கையளித்தது, பாலூட்ட மார்பில் பிள்ளையை நித்தமும் கிடத்தியபடி துயருற்றது என இத்தனை நாளும் நீ அடைந்த வாதையின் துன்பத்தில் ஒரு துளியும் ஆற்றிடாத என்னை நீ ஒருபோதும் மன்னிக்க வேண்டாம், அன்பே! கருப்பையும் மார்பும் இருக்கிற காரணத்தினாலே, ஒரு பெண்ணாய் நீ ஆக்கப்பட்டிருக்கிறாய் என்கிற நிர்கதியினாலே எனக்கு எந்தச் சம்பந்தமுமில்லை என்பதாக விலகியே ஒரு பார்வையாளனாய் கடந்துவிடுகிற என்னை நீ ஏன் மன்னிக்க வேண்டும்?
பெருவயிறு தாங்கிய நாட்களில் புரண்டு படுக்கக்கூட திராணியற்று உன் கனத்த நெஞ்சில் பெருகி வருகிற மூச்சுத்திணறலோடு நீ கடத்திய பொழுதுகளில் எல்லாம் நான் தந்தையாகப் போகிற கனவுகளோடு நிம்மதியாகத் தூங்கி எழுந்த நாட்களை எண்ணி ஒருபோதும் வெட்கப்படாத என்னை நீ எப்போதும் மன்னிக்க வேண்டாம். பிரவச வலியெடுத்த அறையில் எலும்புகள் நொறுங்கப் பிள்ளையை வெளித்தள்ளிய கணத்தில் நம் பிள்ளையைப் பற்றி மட்டுமே தெரிந்து கொள்கிற ஆவலாதியில் அன்று உனை மறந்து போன நிகழ்விற்குப் பின்னால் எப்படி உன்னால் என்னை இயல்பாக மன்னிக்க முடியும்?
பிள்ளைக்குப் பாலூட்ட மார்பு வேண்டியிருக்கிற போதெல்லாம் அதுவொரு பெண்ணுக்குரிய, தாயிற்குரிய செயலென்று ஒதுங்கித் தானே நானும் தலைமறைவாகி இருக்கிறேன். அடிக்கடி பால் கேட்டு அழுகிற பிள்ளைக்குப் பாலூட்ட வேண்டி, பிரசவித்த அயர்ச்சியில் நீ எழுந்து கொள்ளக்கூட பலமின்றி படுத்திருக்கையில் ஒரு கணவனாக எதைத் தான் செய்துவிட்டேன் நான்? எப்போதும் வீட்டுப் பெரிய பெண்களே பார்த்துக் கொள்வார்கள் என்று பால் கொடுக்கையில் உன் கரம்தொட்டு எழுப்பி உட்கார வைக்கக்கூட எனக்கு அப்போது தோன்றியிருக்கவில்லை. எழுந்து நிமிர்ந்து உட்காரும் போதே முதுகில் குத்துவலி எடுக்கையில் அதற்குப் பாந்தமாக வெந்நீர் ஊற்றவோ, சுடுஎண்ணெய் விட்டு நீவிக் கொள்ளவோ ஒருபோதும் நான் உனக்கு உதவியாக இருந்ததேயில்லையே!
சம்மணமிட்டு அமருகையில் புண்ணாகிப் போன பிறப்புறுப்பில் ஏற்படுகிற வலியின் வேதனையும் தாண்டி நீ பிள்ளையை மடியில் கிடத்த வேண்டியிருக்கும். அச்சமயத்தில் அருகே துயில் கொண்டிருக்கிற பிள்ளையைக்கூட உடலைத் தாழ்த்தி நீ கைதூக்க முடியாமல் மூச்சுமுட்டுதலுடன் திணறிக் கொண்டிருப்பாய். அப்போதெல்லாம் அருகாமையில் நான் இல்லாமல் போன துயரத்தை நீ ஏன் அன்பே பொறுத்துக் கொள்ள வேண்டும்? அவ்வாறே மடியில் கிடத்தப்பட்ட போதும்கூட பிள்ளையின் பாதங்களில் உதைபடுகிற தையலிட்ட அடிவயிற்றின் வலியைத் தாங்கியபடி பாலூட்டி நீ அவர்களைத் தூங்க வைக்கிற போது அதற்கெல்லாம் நான் எவ்வகையிலும் பயனுள்ளவனாய் இல்லையே? இதையெல்லாம் நீ ஏன் தான் சகித்துக் கொள்ள வேண்டும்?
அறுவை சிகிச்சை செய்து கொண்ட அன்றைய நாளில் பிள்ளையைத் தாங்கிக் கொள்ளவே வலுவற்றிருந்தாய். அப்போது உனது அம்மா வந்து மார்பருகே பிள்ளையைக் காட்டி பாலருந்த வைத்துக் கொண்டிருந்தார்கள். இதற்கெல்லாம் நான் எவ்வகையில் உபயோகமாய் இருந்துவிட முடியுமென்று என்னை நானே தவிர்த்துக் கொண்டதையெல்லாம் நீ நல்லவிதமாய் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமுமில்லை. பிள்ளைக்குப் பாலூட்டுவதை அருகிலிருந்து கணவன் பார்க்கக் கூடாது, அதனால் மார்பில் பால் வற்றிப் போகும் என்றெல்லாம் முதிய பெண்கள் பேசியபடி என்னைத் துரத்துகிற போதெல்லாம் உனக்கும் பிள்ளைக்கும் எத்தகையத் தீங்கும் வந்துவிடக்கூடாது என்று விலகிப் போகிற காரணத்தை துயரத்தில் இருக்கிற நீ ஏன் ஒப்புக் கொள்ள வேண்டும் அன்பே!
மார்பிலிட்டு பாலருந்திய பின்பாக தோளில் சாய்த்து அவர்கள் ஏப்பம் விடுகிற வரையிலும் முதுகில் தட்டிக் கொடுக்கிற அழகிய தருணங்களில்கூட ஒரு தந்தையாக நான் செயலாற்றியதில்லையே! இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை இரவும் பகலுமாக அடிக்கடி தாய்ப்பாலூட்டியே தளர்ந்து போய் நீ துயில் கொள்கிற பொழுதில், பிள்ளை அழுதால் உனை தட்டியெழுப்பியே பிள்ளையைக் கவனித்துக் கொள்ளச் செய்கிற இடத்தில் நான் தந்தையாக இருந்து என்ன தான் செய்துவிட்டேன்? தோளிட்டு தூங்க வைக்கவோ, தொட்டில் சேலையிலிட்டு அவர்களுக்குத் தாலூட்டுப் பாடவோகூட ஒரு ஆணாக எனக்கான சலுகையைப் பாரபட்சமின்றி நான் எடுத்துக் கொண்டு ஒதுங்கிக் கொள்வதை யாராலுமே மன்னிக்க முடியாது தானே!
நான்கு மாதங்கள் வரையிலும் கழுத்து நிற்காத பிள்ளையை, உச்சிக்குழி இன்னும்கூட மூடிடாத குழந்தையை பக்குவத்தோடு என் கைத்தாங்களாக தூக்கிக் கொஞ்சுவதற்குப் பயந்து கொண்டு, அவர்களை அள்ளி அரவணைக்கவே அச்சப்படுகிற என்னுடைய பயத்தைக்கூட நான் காரணமாக்கிக் கொள்வது நிச்சயமாகத் தவறு தான்!
அடிக்கடி அழுகிற, அழுத வயிற்றுக்கு பசியாறப் பால் புகட்டுகிற போதெல்லாம் சிறுநீர் மலம் கழித்துவிடுகிற பிள்ளைக்கு நான் ஒருபோதும் அவர்களது துணியை மாற்றியதும் இல்லை. அவற்றை கூச்சமற்று நீக்கிவிட்டு, சுத்தப்படுத்தி, அவர்களுக்குப் புதியதோர் துணியை அணிவிப்பதில் முகச்சுளிப்பின்றி ஒருபோதும் பிரயத்தனப்பட்டதில்லை. அவர்கள் மலம் கழித்த துணியை ஒரு தந்தையாக நான் ஒருபோதும் துவைத்துக் காயப் போட்டதுமில்லை. துவக்க காலத்தில் எனது உள்ளாடைகளைக்கூட துவைத்த உன் கரங்களுக்குப் பரிகாரமாக, பிரசவத்திற்குப் பின்பான நாட்களில் குறைந்தபட்சம் அதிகமாக இரத்தம் கசிந்து கவிச்சை வாசமடிக்கிற உனது ஆடைகளைக்கூட நான் துவைத்துப் போட வேண்டும் என்று எண்ணிப் பார்க்கவில்லையே!
கைகால் தலையென்று எதுவுமே நில்லாமல் ஒரு பொம்மலாட்ட பொம்மையைப் போல அசைந்தாடிக் கொண்டிருக்கும் பிள்ளையை எனது குச்சி போன்ற கால்களில் கிடத்திக் குளிப்பாட்டி, எண்ணெய் தேய்த்து, கண்ணேறுபட்டுவிடும் என்று திருஷ்டியெல்லாம் கழிப்பதற்கென்று ஒருபோதும் உடனிருந்துப் பார்த்திராத என்னை யாருமே மன்னிக்க வேண்டாம். சரியாக பிள்ளை மார்பில் பாலருந்திக் குடிக்காமல், மார்பில் பால் கட்டிக் கொண்டு துன்பப்படுகிற போதெல்லாம், அதனது வலியையும் பொருட்படுத்தாமல் உனக்குப் பால் சரியாக சுரக்காத, சுரக்கின்ற பாலினை சரியாக பிள்ளைக்குப் புகட்டாத, அப்படிப் பால் நன்றாகக் கிடைக்காததால் கொழுகொழுவென தேறிடாத பிள்ளையை மட்டுமே எண்ணி வசைபாடுகிற ஆண்களையெல்லாம் யாருமே மன்னிக்க மாட்டார்கள் தானே!
இதுவெல்லாம் பெண்கள் சமாச்சாரம், இதற்குத் தானே உடனிருந்து பார்த்துக் கொள்ள தாயாகிய பெண்ணை பிரசவிக்கும் போதிருந்தே வரவழைத்து பார்த்துக் கொள்ள வைத்திருக்கிறோம், பிள்ளை பெற்ற அனுபவமான பெண்களால் தானே உதவியாக இருக்க முடியும், ஒரு ஆணாக உன்னால் என்ன செய்துவிட முடியும், இதற்கெல்லாம் தீர்வாகத் தானே தாய்வீட்டிற்கு அனுப்பி பிள்ளையை வளர்த்தெடுத்த பின்பாக வரச் செய்கிறோம் போன்ற வழக்க நெறிமுறைகளையெல்லாம் பேசிப்பேசி காலம் சென்ற காரணங்களை இனியும் நம்பி பிள்ளையை வளர்த்தெடுப்பதில் வெறும் தந்தையென்ற பெயரை மட்டும் போட்டுக் கொண்டு இருந்துவிடுகிற என்னை நீயே மன்னித்தாலும்கூட ஒருபோதும் என்னையே நான் மன்னிக்கப் போவதில்லை அன்பே!
