நூல் அறிமுகம் : அண்டனூர் சுராவின் ’அப்பல்லோ’ – புதுகை சிக்கந்தர்

நூல் அறிமுகம் : அண்டனூர் சுராவின் ’அப்பல்லோ’ – புதுகை சிக்கந்தர்




நூல்: அப்பல்லோ
ஆசிரியர் : அண்டனூர் சுரா
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : 245
பக்கங்கள் ; 272
தொடர்பு எண் ; 044 24332924
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும் : thamizhbooks.com

இந்நாவல் ஆர்கோ தேசத்து மன்னன் மெனிலாஸ் போரில் வீழ்த்தப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்பல்லோ மருத்துவ குடிலுக்கு தூக்கி வருவதில் தொடங்குகிறது, இந்நாவலுக்குள் தொடக்கத்தில் போடப்படுகிற பல்வேறு முடிச்சுகள் ஒவ்வொன்றாய் அவிழும் இடங்களில் நம்மை ஒரு கணம் திகைக்க வைக்கிறது..

மைசின் தேசத்தில் இரட்டையர்களாய் பிறந்த மெனிலாஸ், அகமெம்னான் சுபார்டன் தேசத்து இரட்டை இளவரசிகளான மெனிஸ்ட்ரா, ஹெலனை மணந்து கொள்கிறார்கள். ஒரே நாளில் நடக்கும் திருமணம் அகமெம்னானுக்கு எளிமையாகவும், மெனிலாஸ்க்கு ஆடம்பரமாகவும் நடக்கிறது. தனக்கு சீதனமாக சுபார்டன் தேசத்தை அபகரித்துக்கொள்கிறார் மெனிலாஸ்..

மெனிலாஸ்க்கும், அகமெம்னானுக்குமான முரண்பாடு முற்றி மைசின் தேசம் பிளவுபடுகிறது மைசின் தேசத்து ஒரு பகுதியை அகமெம்னானும், மறு பகுதியை சுபார்டன் தேசத்தோடு இணைத்து ஆர்கோ தேசமென மெனிலாஸ் ஆட்சி செய்கின்றனர்..

வரதநாட்டு மன்னனுக்கு பல வருடங்களாக முதுகில் ஏற்ப்பட்டிருந்த அரிப்பு நோயை குணமாக்க சித்த மருத்துவர் மூலமாக மருத்துவக்குடிலுக்கு அழைக்கப்படுகிறார் அதை தடுக்கும் விதமாக நாடோடியாக திரிந்த பூபூம்பா எனும் மந்திரவாதி மந்திரத்தால் குணமாக்குகிறேன் என்று குழப்பம் விளைவித்து அந்நாட்டையே அபகரிக்க முயற்சிக்கிறான் ..

அடர்வனத்தில் இருக்கும் மருத்துவக்குடிலுக்கு வருகிற மன்னரின் நோயை முப்பது நாட்களில் குணமாக்குகிற சித்தமருத்துவர்களுக்கு பரிசாக எட்டு குன்றுகளை உள்ளடக்கிய ஆயிரம்வேலி வனத்தை பரிசாக அறிவித்து, முப்பது நாள் மருத்துவத்திற்கான கூலியாக தானியங்களை மந்திரவாதி பூபூம்பா மூலமாக அனுப்புகிறார்.
மருத்துவத்தை முன்னிறுத்தி மந்திரம் எனும் பெயரில் தன் தந்திரம் அனைத்தும் தோற்றுப்போனதை தாங்கிக்கொள்ள முடியாத பூபூம்பா
நூற்றுக்கு மேற்பட்ட மருத்துவ குடிகள் வாழ்ந்த அந்த குடிலை தன் சகாக்களுடன் அழித்தொழிக்கிறான் அங்கு வாழ்ந்த சிறுவர் உட்பட அனைவரையும் கொல்கிறான்.
அதில் தப்பி பிழைப்பது சிறுவனாயிருக்கும் மெனிலாஸின் தந்தை மட்டுமே…

மருத்துவக்குடிலை சேர்ந்த அச்சிறுவனுக்கும் பூபூம்பாவிற்குமான மந்திரமா?, மருத்துவமா? என்கிற பதைபதைப்புக்குள்ளாக்கும் அந்த உரையாடல்களில் அச்சிறுவன் உயிர் பிழைக்க வேண்டும் என்று நினைக்கும் நமக்கு உடலெங்கும் வியர்த்துவிடும்..

வருதநாட்டு மன்னரான மூன் மற்றும் அவரது குடும்பத்தை கொன்று தானே வரதநாட்டு மன்னனாக அறிவித்து. வரதநாட்டை டிரோஜன் என்றும் தனது பெயரை பாரிஸ் என்றும்
அறிவித்துக்கொள்கிறான்.
மைசின், ஆர்கோ தேசத்தை வென்று ஒரே நாடாக தனது கொடுங்கோலாட்சியை பரப்ப முயற்சித்து பதிணைந்து முறை மெனிலாஸிடம் தோற்றுப்போகிறான்..

மீனவ பெண்ணான தெட்டிஸ் அடர்வனத்திற்குள் வசிக்கும் மருத்துவக்குடியின் கடைசி வாரிசான அப்பல்லோவை சந்திக்க வைத்த காரணம் எது?
யாராலும் தோற்கடிக்க முடியாத மெனிலாஸ் யாரால் கொல்லப்படுகிறான்?
பாரிஸ் செய்த சூழ்ச்சியில் மெனிலாஸ் மனைவி ஹெலன் எவ்வாறு சிக்கினாள்? போன்ற கேள்விகளுக்கு நாவலுக்குள் விடையிருக்கிறது..

நாவலில் இருக்கும் சில வரிகள்;

மருத்துவ குடிலில் அனுமதிக்கப்பட்ட மெனிலாஸ் உடல்நிலை குறித்த கேள்வியை மக்கள் அமைச்சர் ஹெர்குலஸிடம் கேட்கும்போது அமைச்சரின் பதில்

மக்கள் ; ஏதேனும் நற்செய்தி உண்டா அமைச்சரே

ஹெர்குலஸ்; ஆம் இருக்கிறது

மக்கள் ; அச்செய்தி என்ன அமைச்சரே

ஹெர்குலஸ்; நான் மன்னரை பார்த்தேன்

மக்கள்; எப்படி இருக்கிறார்

ஹெர்குலஸ்; நல்ல ஆகிருதியுடன் இருக்கிறார். மக்களின் தேவை குறித்து விசாரித்தார். விரைவில் நாடு திரும்பி டிரோஜன் தேசத்து மன்னன் பாரிஸ் மீது போர் தொடுக்கப் போவதாக சொன்னார். அதற்காக அத்தனை பேரும் ஆயத்தமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

மக்கள்; ஆகாரம்

ஹெர்குலஸ் ; இரண்டு ரொட்டிகள் எடுத்துக்கொண்டார்..

மருத்துவக்குடிலை அழித்தொழித்த ஆணவத்தில் பூபூம்பா மந்திரவாதி மருத்துவக்குடி சிறுவனிடம் நடத்தும் உரையாடலில்
உன் கடைசி ஆசை என்ன?

அழித்தொழிக்கப்பட்ட மருத்துவக்குடிகள் உயிர்த்தெழ வேண்டும்..

உன் ஆசை என்ன, உயிர் வாழ்வதா,மருத்துவன் ஆவதா..?

உயிர் என்பது உடலில் அடைக்கப்படும் வெறும் காற்று மருத்துவனாவதே என் ஆசை..

மருத்துவத்தின் தத்துவம் எது?

இறக்கும் வரைக்கும் வாழ்ந்திடு,வாழும் வரை சாகாதே

பிணி என்பது?

உடல் சார்ந்தது

நோய் என்பது?

மனம் சார்ந்தது..

காயம், புண் இரண்டிற்குமான வித்தியாசம் என்ன..?

வெளியிலிருந்து ஏற்படும் புண் காயம்.
உள்ளிருந்து ஏற்படும் காயம் புண்..

மீசை குறித்து நிகழும் உரையாடலில் அகமெம்னான் தம்பி மெனிலாஸிடம் இவ்வாறு கூறுகிறார்,
மீசைதான் ஆணுக்குப் பெண் இளைப்பென்று சொல்கிறது.ஒரு ஆண்,மற்றொரு ஆணினை ஆடிமையாக்குவது மீசைதான். மீசை முளைக்காத ஆண், மீசை முளைத்த ஆணிற்கு அடிமை. அடர்த்தி மீசையின் பேச்சை அரும்பு மீசைகள் காது கொடுத்து கேட்க வேண்டும்.ஒரு ஆண் எத்தனை பெரிய மீசைகள் வைத்திருந்தாலும் அவன் வெண் தறித்த மீசைக்காரருக்கு கீழ் பணிந்தே செல்ல வேண்டும்..

அப்பல்லோ, தெட்டிஸ் இருவருக்குமான உரையாடல்களில் பேரன்புகளுக்கிடையில் நம்மை உருக வைக்கும் எழுத்தாளர்,பூபூம்பா மருத்துவக்குடிமக்களை அழித்தொழிக்கும் விவரிப்புகளில் வியர்க்க வைத்துவிடுகிறார்..பாசிச சிந்தனை உடையவன் என்பதால்
பூபூம்பாவிற்கு பாரிஸ் எனும் பெயர் பொருத்தமாயிருக்கிறது …
தன் குடிமக்களை ஒரு மன்னன் எவ்வாறு வழி நடத்தவேண்டுமென்பதை இந்நாவலில் பல இடங்களில் சுட்டிக்காட்டுகிற ஆசிரியர் அண்டனூர் சுரா அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்..

– புதுகை சிக்கந்தர்