திரை விமர்சனம்: பிஜூகுமார் தாமோதரனின் வெயில்மரங்கள் – இரா. இரமணன்
2020 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள மொழித் திரைப்படம். பிஜூகுமார் தாமோதரன் எழுதி இயக்கியுள்ளார். 112 நாடுகளிலிருந்து 3964 திரைப்படங்கள் பங்கு பெற்ற ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் முக்கிய போட்டிப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியத் திரைப்படம். இந்திரன், சரிடா குக்கு, கிருஷ்ணன் பாலகிருஷ்ணன், பிரகாஷ் பாரே, குழந்தை நட்சத்திரம் கோவர்த்தன், அசோக் குமார், நாரியாபுரம் வேணு ஆகியோர் நடித்துள்ளனர். எம்.ஜே.ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கேரளாவில் உப்பங்கழிகளுக்கிடையே உள்ள சிறிய திட்டுகளில் சில குடும்பங்கள் வசிக்கின்றன. சாலை போடுதல் போன்ற கடின உடலுழைப்பு தேவைப்படும் பணிகள் செய்து வாழ்க்கை நடத்துகின்றனர். அடுத்த நாள் வேலை கிடைக்குமா என்பதும் அவர்களுக்கு தெரியாது. அவர்கள் பிள்ளைகள் சாலையோரத்தில் தள்ளுவண்டியில் நிலக்கடலை விற்பதைக் கூட காவல்துறை அனுமதிப்பதில்லை. கஞ்சா வழக்கு போட்டுவிடுவோம் என்று மிரட்டுகிறார்கள். ஒரு பெருமழையில் அவர்களின் குடியிருப்புகள் அழிந்துவிடுகின்றன. முகாம்களில் தங்கவைக்கப்படும் அவர்களிடம் ஆதார் அட்டை இருந்தால் ஏதாவது உதவி கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதன் பிறகு ஓட்டல் ஒன்றில் சுத்தம் செய்யும் வேலை செய்யும் கதாநாயகனை சந்தேகத்தின் பேரில் காவல்துறை பிடித்து செல்கிறது. இந்த ஊரில் இனி இருக்க வேண்டாம் என்று முடிவெடுக்கும் அவன் தன் குடும்பத்துடன் இமாச்சல் பிரதேசத்திற்கு ஆப்பிள் தோட்டத்தில் வேலை செய்ய செல்கிறான். யாருமற்ற மலை உச்சியில் தனி வீட்டில் தங்கி வேலை செய்ய வேண்டும். அங்கு வேலையும் கடுமை.தட்பவெப்ப நிலையும் கடுமை. பனி பெய்யும் மூன்று மாதங்களுக்கு எதுவும் கிடைக்காது. கூலியும் சரியாகக் கிடைப்பதில்லை. இறுதியில் அவனுக்குக் கொடுக்கும் கூலியில் பாதி சம்பளத்திற்கு வேலை செய்ய வேறொரு குடும்பம் ஒத்துக்கொள்வதால் அவன் அங்கிருந்து விரட்டிவிடப்படுகிறான். தங்களுக்கென்று ஒரு வீடு இருந்தால் யாரும் தங்களை விரட்ட முடியாது என்று கூறும் மகனிடம், பறவைகள் போல் தாங்களும் அலைந்து திரிந்து கிடைக்கும் இடத்தில் வாழ வேண்டியதுதான் என்று கூறுகிறான்.
இந்தக் குடும்பமும் இதைப்போன்ற மற்ற குடும்பங்களும் படும் துயரங்கள் நுட்பமாக சொல்லப்படுகின்றன. இறுதிக் காட்சியில் தன் மகனையும் மனைவியையும் ஆப்பிள் தோட்டக்காரர் அடிப்பதை தடுப்பதற்காக துப்பாக்கியை தூக்குவதைத் தவிர வேறு எங்கும் ஆவேசமான வசனங்களோ செயல்களோ இல்லை. காவல்துறை மிரட்டும்போது காறி துப்புவது, வேட்டியை உருவி லாக் அப்பில் அடைக்கும்போது காட்டும் முக வேதனை, ஆப்பிள் மூட்டையை தூக்கி வந்து அடுக்கும்போது தோட்டக்காரர் ‘அதென்ன அவ்வளவு கனமா?’ என்று கேட்பது, ஆற்றங்கரையில் கல் அடுக்கும் தொழிலாளி கால் மீது கல் விழுந்து துடிப்பது என பல்வேறு காட்சிகள் அமைதியுடன் கூடிய கனத்துடன் விழுகின்றன.
சாலை போடும் இடத்திற்கு அருகில் ரயில்கள் வேகமாக செல்வது, பழைய காவல் நிலையக் கட்டிடத்திற்கு முன் புதிய இன்னோவா வாகனம் நிற்பது போன்ற பல குறியீடுகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன. மகன் அச்சு உப்பங்கழியில் படகில் செல்லும்போது மஞ்சள் நிற தடுப்பு ஒன்றைத் தாண்டுகிறான்.உடனே அது தீப்பற்றி எரிகிறது. இன்னொரு இடத்தில் அருவியில் பலர் களிப்புடன் குளித்துக் கொண்டிருக்கும்போதும் தாங்கள் இரண்டு வருடம் வசித்த வீட்டை விட்டு விரட்டப்படும்போதும் தனக்கு முன்பாக அதே மஞ்சள் தடுப்பை அச்சு காண்பதாகக் காட்டுகிறார். தாழ்த்தப்பட்டவர்கள் முன் வாயில் இருக்கிறது.ஆனால் அவர்களால் அதை தாண்ட முடிவதில்லை என்பதாகப் புரிந்துகொள்ளலாம்.
சிறுவர்கள் நாய், ஆட்டுக்குட்டி, கிளி போன்றவற்றின் மீது வைக்கும் பிரியம், பெற்றோர்கள் பிள்ளைகள் மீது வைக்கும் கண்டிப்பு கலந்த அன்பும் கவலையும் எளியவர்கள் ஒருவருக்கொருவர் செய்யும் உதவிகள் ஆகியவையும் ரசிக்கக்கூடியவை.
ஷாங்காய் விருது தவிர சிங்கப்பூர் திரைப்பட விழா,கேரளா சர்வதேச திரைப்பட விழா,பிரான்ஸ் நாட்டு விழா,சீன திரைப்பட விழா ஆகியவற்றிலும் பரிசுகள் பெற்ற திரைப்படம். ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது.இரண்டு ஆண்டுகள் கடினமாக உழைத்து செய்த படம் என்கிறார் அதன் இயக்குனர். உழைப்பையும் சமூகக் கட்டமைப்பையும் நுட்பமாக காட்டும் அருமையான திரைப்படம்.