நூல் அறிமுகம்: குறிஞ்சிவேலனின் ஆறாவது பெண் – அன்புக்குமரன்

நூல் அறிமுகம்: குறிஞ்சிவேலனின் ஆறாவது பெண் – அன்புக்குமரன்




எழுத்தாளர் குருஞ்சிவேலன் ஐயா அவர்களின் படைப்புகளில் நான் வாசிக்கும் முதல் புத்தகம்.

பொதுவாகப் புதினங்கள் வாசிப்பதற்கு ஆர்வம் இருந்தாலும் பக்கங்களை கண்டு நான் வாசிப்பை தள்ளிப்போடுவதுண்டு. காரணம் தொடர்ச்சியாக வாசிக்காவிட்டால், கதை மாந்தர்களின் அந்த உலகத்தில் மீண்டும் சஞ்சரிப்பது கடினம்.

குறிஞ்சிவேலன் என்ற இலக்கிய ஆளுமையை எனக்கு அறிமுகம் செய்தது என் ஆசிரியர் Selvan Natesan எழுதிய அறியப்பட வேண்டிய ஆளுமைகள் என்ற புத்தகம்.

நான் வளர்ந்த நிலப்பரப்பில் இப்படிப்பட்ட ஆளுமை ஒருவர் இருப்பது தெரிந்து ஐயா குறிஞ்சிவேலன் அவர்களின் 2 புத்தகங்களை புத்தக கண்காட்சியில் வாங்கினேன்.

ஒரு இலக்கியத்தில் அரிய மெய்மை (Uncommon Wisdom) வெளிப்பட்டாக வேண்டும் என்று ஜெயமோகன் கூறி கேட்டிருக்கிறேன். ஆறாவது பெண் என்ற படைப்பில் இது பல இடங்களில் வெளிப்பட்டதாகவே உணர்கிறேன். மலையாள மூலத்தின் எழுத்தாளர் சேது நாம் அன்றாடம் சந்திக்கும் எளிய கதாபாத்திரங்களைக் கொண்டு இதை நிகழ்த்தியிருக்கிறார்.

ஒரு மொழிபெயர்க்கப்பட்ட படைப்பின் அடிப்படை வெற்றி தான் என்ன என்று ஒரு எளிய வாசகனை கேட்போமானால், அது மொழிபெயர்ப்பு என்ற தொனியைத் தராமல் அதே சமயம் மூலத்தின் சாரத்துடன் இசைந்து விருந்து படைக்குமேயானால் அதுதானே வெற்றி! இப்படைப்பும் அவ்விதமே.

பெண்ணுலகம்:
——————–
முதல் சில பக்கங்களில், இந்த கதை யாருடைய கதை என்பது நமக்கு புலப்பட்டாலும், மைய கதாபாத்திரமான காதம்பரி, அவளது தாயார், தந்தை, பாட்டி, தாத்தா, தோழிகள், ஐந்து சிறுமிகள் என்று ஏதோ பக்கங்களை மட்டும் நிரப்பாமல் நம் மனதையும் நிரப்பி கொஞ்சம் பெண்ணுலகத்திற்கு அழைத்து செல்கிறது என்று எனக்கு பட்டது. Character arc என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த அம்சம் இதர கதாபாத்திரங்களுக்கும் அமைத்திருப்பது தேர்ந்த கதாசிரியரின் கூறுகளை வெளிப்படுத்துகிறது.

முதலில் அலமேலு பாட்டியின் அந்த கரிசனம் மற்றும் முற்போக்கான அந்த சிந்தனையில் இருந்து வெளிப்படும் அந்த செயல்கள் , இவை எல்லாம் எனக்கு எழுத்தாளர் ஜெயகாந்தனின் யுக சந்தியில் வரும் கௌரி பாட்டியை நினைவூட்டியது. பேதங்கள் இருக்கும் இன்று இந்த சூழலில் பாட்டியின் செயல்களைக் கண்டால் என்னென்னவோ தோன்றுகிறது. parasite திரைப்படத்தில் ஒரு கதாப்பாத்திரம் ஒரு முரண் நிறைந்த சிக்கலான கேள்வி எழுப்பும். “அவர்கள் பணக்காரர்கள் என்பதால் கருணை நிறைந்தவர்களாக இருக்கிறார்களா? அல்லது கருணை நிறைந்த மனிதர்களாக உள்ளதால் பணக்காரர்களாக இருக்கிறார்களா?” என்பது தான். அலமேலு பாட்டி கரிசனமாக இருப்பதற்குக் காரணம் அவரின் சமூகப் பின்னணியா? இவரின் ஆசாரம் நிறைந்த பின்புலத்திற்குக் காரணம் இவரின் கருணையா? ஒரு வேலை கரிசனம் என்பதே இந்த காலத்தில் அபூர்வமாகக் காண கிடைப்பதாலோ என்னவோ இப்படி தோன்றியது.

இந்த புதினத்தில் சுதந்திர ஆன்மாவாக வரும் பவிழத்தை வாசிப்பாளர்கள் அவ்வளவு எளிதாக மறக்க இயலாது. அவளின் பள்ளிகூட உலகமானது எல்லா பெண்களும் வாழ்ந்து பார்க்க நினைக்கும் வாழ்க்கை. ஆங்கில மொழியின் ஆளுமை, கற்பனை சக்தி, தொழில்நுட்ப வளர்ச்சிகளை அவதானிப்பது என்று துணிச்சலும் தைரியமும் ஒரு சேர சேர்ந்த நவீன பெண்ணாக வளம் வரும் பவிழம். இருப்பினும் என்னதான் முற்போக்கான எண்ணங்களும், உலக அறிவும் இருந்தாலும், அடிப்படை உணர்வில் அவள் பலவீனமாகவே இருக்கிறாள். இருப்பினும் மனதில் உள்ள உணர்ச்சிகளை கட்டுபடுத்த தெரிவதற்கு ஒரு ஆற்றல் வேண்டும் என்றால், எல்லா உணர்ச்சிகளை வெளிப்படையாகப் பொழிவதற்கும் ஒரு மனோதிடம் வேண்டும். ஒருவேளை பவிழமும் காதம்பரியும் மீண்டும் சந்தித்துக் கொண்டால் “தேசாடன கிளி கரையாறில்ல” திரைப்படத்தில் தோழிகளாய் வளம் வந்த சாலியும் நிர்மலாவும் போல ஒரு சேர ஒரு வாழ்க்கையைத் தேடிச் சென்று இருக்க வாய்ப்புள்ளது என்று. எண்ணுகிறேன்.

நான் எதிர்பார்க்காதது கோமதி அம்மாவின் அந்த மலரும் நினைவுகள் தான். இந்த நினைவுகளைக் கோமதி அம்மா காதம்பரிக்கு சொல்லும் காட்சிகளை ஏன் இந்த கதையில் சேர்க்க வேண்டும்? இதனால் கதையோட்டத்திற்கு அப்படி என்ன வலு இருக்கப் போகிறது என்று எண்ணியபோது தான் இந்த நாவலின் படிப்பினை முழுமை பெற கோமதியின் அந்த நினைவுகள் இன்றியமையாதது என்று புரிந்தது.

மொழி நடை:
—————–
பொட்டை என்ற சொல் தமிழில் பெண் பாலினத்தவரைக் குறிப்பது. ஆனால் மலையாளத்தில் கூறு கெட்ட அல்லது முட்டாள்தனமான என்று பொருள். உதாரணம்: ந்யான் ஒரு பொட்ட சோதியம் சோதிச்சு. இதன் அர்த்தம் “நான் ஒரு முட்டாள்தாமான கேள்வியை கேட்டேன்”. ஆனால் இந்த மலையாள வார்த்தையை அப்படியே பின் வரும் வரிகளில் லாவகமாக தமிழில் கையாண்டது புதுமையாகவும் சற்று வியப்பாகவும் இருந்தது.

“இந்த கையும் காலும் ஒடிஞ்ச பொட்டை ஆங்கிலத்தை மட்டும் என்னால தாங்க முடியில ”

இது போல் ஷையின் (shine) என்னும் ஆங்கில வார்த்தையை மலையாளிகள் பிரயோகிப்பது உண்டு. இந்த ஆங்கில வார்த்தையின் அர்த்தம் மின்னுதல். ஆனால் உள்ளர்த்தம் கூட்டத்தில் நாயகனாய்/நாயகியாய் ஒளிர்வது.

உதாரணம்: “அங்கன இவ்விட வந்நிட்டு ஆரும் ஷையின் செய்திட்டில்ல”. இதன் அர்த்தம் “no one has acted smart here”.

இந்த உள்ளர்த்தத்திற்கு ஈடான தமிழ் வார்த்தை இல்லாததால் மின்னு என்றே பின்வருமாறு மொழி பெயர்த்ததை வெகுவாக ரசித்தேன்.

“அதன் மூலம் சில நாட்களுக்குச் சிநேகிதிகளுக்கு இடையில் மின்னுவர்தற்கு புதியொரு விஷயமாகிவிட்டது பவிழத்திற்கு.”

குழப்பம் ஒன்றும் இல்லை என்ற மொழியாக்கம் செய்யப்பட்ட வாக்கியமும் இந்த வகையைச் சார்ந்தது.

நுண்ணுணர்வுகள்:
————————
மனிதனின் உணர்வுகளை கதை மாந்தர்களின் மூலமாகவும் நிகழ்வுகளின் மூலமாகவும் ஒரு கதாசிரியர் கடத்தி செல்லும் போது அவ்வப்போது அறிந்தோ அறியாமலோ நுண்ணுணர்வுகளும் வந்து சேர்வதுண்டு. இந்த படைப்பின் தனித்துவமே அந்த நுண்ணுணர்வுகள் தான் என்று திண்ணமாக கூறுவேன் . அப்படி என்ன நுண்ணுணர்வுகள்?

சங்கரராமனின் தூக்கம் போனதால் உள்ள வெறுப்பு,
இடமாற்றத்தின் வலியை கடத்தும் பின் வரிகள்

“ஒவ்வொரு ஊருக்குச் செல்லும் போதும் புதியதொரு போராட்டம் புதியதொரு பிறப்புதான் வேரூன்றாமல் பார்த்துக்கொள்ளலாம் என்றாலும் இருக்கும் காலம் வரைக்கும் உயிர் வாழ்வதற்கு நீரும் எருவுமெல்லாம் இடவேண்டும்தானே. ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதிப்பட்டு விட்டது. இனிமேல் யாருடனும் இப்படிப்பட்ட நெருக்கங்கள் முகாமிடல்களில் வேண்டாமென்று.”

வாழ்கை சக்கரங்களின் தொடர் தாக்குதலுக்கு ஆளான பவிழத்தின் அம்மாவை பற்றி பவிழம் சொல்லும்போது “அப்போது அவளின் மனதில் கருங்கல் சுவர்களால் கட்டப்பட்ட சில கோவில்கள் மட்டுமே இருந்தன “.

வீடு என்ற திரைப்படத்திற்கான கருவை பற்றி பாலுமகேந்திரா அவர்கள் “என் அம்மா வீடு கட்டும் பணியை தொடங்கிய போது சிரிப்பதையே விட்டுவிட்டாள்” என்ற வரிகள் நினைவுக்கு வந்தது.

“மதுரை கல்லூரியில் சேர்ந்ததற்குப் பின் முத்துலக்ஷ்மியும் கலகலப்பாக பேசத் தொடங்கி இருக்கிறாள்.” என்ற வரிகள் என்னால் தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது.
நான் இதை பல முறை உணர்ந்திருக்கிறேன். பள்ளிக்கூடங்களில் என்னோடு பேசாத மாணவர்கள் கூட பின்னொரு நாளில் கண்டு கலகலப்பாக பேசுவதைப் பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கிறேன். திறந்த வெளியின் அனுபவங்கள் மனதின் இருக்கங்களையும் அகலச் செய்கின்றன.

இதுபோல் பல இடங்களில் நுண்ணுணர்வுகளை வாசகர்களுக்கு கடத்தப்படுவதை இந்த படைப்பில் பார்க்கலாம்.

பெண்களின் புற உலகிற்கான தொடர்பு:
—————————————————
இந்த பகுதி மிக முக்கியமானதாக பார்க்கிறேன். இன்றைய நவீன யுகத்தில் பவிழம் இணையத்தின் மூலம் வேற்று நாடுகளில் உள்ள நபர்களிடம் தொடர்பு கொள்வது “காதலர் தினம்” படத்தில் நாம் கண்டது என்றாலும், இந்த புனைவுலகமானது புதிய தொழில்நுட்ப வரவுகள் வந்த காலமாகும் என்பதையும் உணர்த்துகிறது.

கோமதி வாழ்ந்த காலங்களில் பெண்களுக்கான புற உலகிற்கான ஒரே தொடர்பு வார இதழ்களும் திரைப்படங்களும் தான். படக்கதைகளில் வரும் கதாப்பாத்திரங்கள் மண்ணுக்கு இறங்கி வரும் போது வேர் ஊன்றாததின் குழப்பம்தான் இது என்று திடமாகச் சாடுவது காதம்பரிக்க்கு வாய்த்த சூழல்.கோமதியின் அந்த எதிர்பார்ப்புக்கள் நிறைந்த அந்த உலகம் கிட்டத்தட்ட அந்த பதிற்றாண்டின் பெண்களின் மனவோட்டங்களையே பிரதிபலிக்கிறது.

படிப்பினை:
—————
வேறு வேறு சமூக, கல்வி மற்றும் பொருளாதார பின்புலத்தை கொண்ட, வேறு வேறு தலைமுறைகளில் வந்த, வேறு வேறு எதிர்பார்ப்புகளைக் கொண்ட பெண்கள் ஆண்களின் இறைகலாகவே இருக்கின்றனர் என்ற நிதர்சன உண்மைதான் இந்த படைப்பு முழுவதும் நிரம்பி இருக்கிறது. எதிர்பாளினத்தவர்களால் தொடர்ந்து பாலியல் பிரச்சனைகள் மற்றும் அடையாள வறட்சியை எதிர்கொள்ளும் காதம்பரி, கோமதியின் கனவுகளை உடைக்க பிறந்தது போல் வந்த சங்கரராமன் மற்றும் இறுதியில் சாஸ்திரிகள் சொல் பேச்சு கேட்டு அவர் எடுக்கும் நடவடிக்கைகள், அலுவலகத்தில் பவிழத்தின் அம்மா எதிர்கொள்ளும் ஒடுக்குமுறை, தன் அண்ணனின் மூலம் இந்த உலகத்தை அறிந்த பவிழம், அண்ணனின் அந்த பாசக்கயிறை கெட்டியாக பிடித்து மற்ற்றொரு பெண் பங்கு போடக் கூடாது என்ற அந்த எண்ணம், பெண்கள் பெண்களுக்கு எதிராகவே பேசும் மனோநிலை கொண்ட அந்த பெண் மருத்துவர்கள் என்று பெண்கள் எப்போதும் தாக்குதலுக்கு உட்பட்டு கொண்டே இருக்கும் ஒரு சமூகத்தில் தான் இருக்கிறோம் என்று நெற்றியில் ஆணி அதித்தாற்போல் இந்த நாவல் பிரதிபலிக்கிறது.

மலையாள இயக்குனர் கே.ஜி ஜோர்ஜ் அவர்களின் பெரும்பாலான திரைப்படங்களின் கருவும் இதுதான். மெத்த படித்திருந்தாலும், படிக்காவிட்டாலும், பண வசதி இருந்தாலும் இல்லாவிட்டாலும், வேலைக்கு செல்லும் பெண்மணியாக இருந்தாலும், இல்லத்தரசியாக இருந்தாலும் பெண் ஆணின் கட்டுப்பாட்டில் இயக்கப்படும் அவலத்தை “யவனிகா”, “மட்டோரால்”, “ஈ கன்னி கூடி” என்ற திரைப்படங்களில் காணலாம். நல்ல குணமும் பழக்க வழக்கங்களும் உடைய ஆண்களும் இதற்கு விதிவிலக்கு இல்லை.

தமிழில் சட்டென்று நினைவுக்கு வருவது எழுத்தாளர் சுஜாதா அவர்களின் “ஜன்னல் மலர் ” என்ற குறுநாவல்.

இந்த படிப்பினைதான் மனிதத்தை நோக்கி வழி நடத்தும். காரணம் தீர்வுக்கான முதல் படி, பிரச்சனையை அடையாளம் காண்பது.

ஒரு நல்ல படைப்பு இதர நல்ல படைப்புகளையும் நினைவு படுத்தும். இந்த படைப்பும் அவ்விதமே.

காதம்பரியின் அந்த முடிவுக்குக் காரணத்தை தேடுவதில் சராசரி வாசகர்கள் ஆர்வம் காட்டுவர். இதுவே இந்த படைப்பிற்கு ஜனரஞ்சக வெற்றி .

அதே சமயம் கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளைச் சார்ந்த பெண்களின் உலகம் மேலோட்டமாக மாறுவது போன்று தெரிந்தாலும், அடிப்படைகள் மாறவில்லை என்ற பிரக்ஞயை சில வாசகர்களுக்கு கிட்டும். இந்த வகையில் தரம் மிக்க ஒரு படைப்பாகவே காலத்தால் உயிர்த்தெழுந்து கொண்டே இருக்கும்.

“It is a man’s world” என்ற வரிகள் எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. இன்னும் பகிர்வதற்கு ஏராளம் உண்டு. ஒரு காணொளியில் பகிர்கிறேன்.

புத்தகம் சிறப்பாக வெளிவந்ததற்கு அகநி பதிப்பகம், சேது மற்றும் குறிஞ்சிவேலன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

இந்த புத்தகத்தை வாசித்த பொழுதுகள் இனிதே கழிந்ததில் மிக்க மகிழ்ச்சி!

நன்றி
அன்புக்குமரன்
புத்தகம்: ஆறாவது பெண்

நூல் : ஆறாவது பெண்
ஆசிரியர் : குறிஞ்சிவேலனின்
விலை : ரூ: ₹200
வெளியீடு : அகநி வெளியீடு