Standing short story by shanthi saravanan சாந்தி சரவணனின் நிற்கிறார்கள் சிறுகதை

நிற்கிறார்கள் சிறுகதை – சாந்தி சரவணன்



அன்று மாதந்தோறும் வரும் இடுப்பு வலி. அடி வயிற்றில் ஏற்பட்ட அந்த “வலி”. “வலி” என்றால் தமிழ் அகராதியில் கூட அதற்கு ஒரு சரியான விளக்கமில்லை. அப்படி ஒரு வலி. தோழி சுதாவிடம் மெதுவாகக் காதைக் கடித்தாள், தேவி. “பீரியட்ஸ் ஆயிடுச்சு பா” என்றாள் கண்கள் கலங்க.

“அழாதே, தேவி, நமக்கு இது என்ன புதுசா. கொஞ்சம் சமாளிச்சுக்கோ. மணி 12 ஆயிடுச்சு. இன்னும் 8 மணி நேரம் தான்… சரியா,” என சமாதானம் செய்து கொண்டு இருந்தாள் சுதா

தோழிகள் இருவரும் சென்னை துணிக்கடையில் சேல்ஸ் வுமனாக வேலை செய்கிறார்கள். காலை 8 மணிக்கு கடை திறக்கும். அவசர அவசரமாக வந்து கார்டை பின் செய்து செக் இன் செய்வதற்குள் ஓரே பாடு தான் போங்கள். அப்படி உள்ளே நுழைந்த நொடியிலிருந்து இரவு 8 மணிக்கு வெளியே செல்லும் வரை “நின்றுகொண்டே” தான் இருக்க வேண்டும்.

இதில் கடைக்கு வரும் வாடிக்கையாளரை புன்முறுவலுடன் வரவேற்க வேண்டும். அவர்கள் கலைத்துப் போடும் துணிகளை அடுக்கி வைப்பதற்கு ஒரு படையே வேண்டும். அதிலும் சில மேனகைகள் வந்தால் ஒரு கூடையில் அவர்களுக்குப் பிடித்த 10 புடவைகளை அள்ளி போட்டு கொள்வார்கள். அதன்பின் அவர்களது கணவன் மகன் வருகை. ஒரு கலந்துரையாடல் நடைபெறும். ‘என்ன செலக்ட் செய்து இருக்க?’ என்பார் கணவர். மகன், ‘ஒன்று கூட நல்லா இல்லை மம்மி’ என்பான். மொத்த புடவைகளும் ஒரே இடத்தில் குப்பலாக போட்டுவிட்டு, ‘வா வேற செலக்ட் செய்யலாம்’ என குடும்பமாக மறுபடியும் முதலிருந்து துவங்கும்.

“சுதா, பேசமா நாம அந்த நகைக் கடைக்கே வேலைக்கு போய் இருக்கலாம் பா” என்றாள் தேவி.

“அய்யோடா! நம்ம பொழப்பே மேலு மா. தினமும் கூட்டமாவுது வருது. வேடிக்கையாவது பார்க்கலாம். அங்கு அதுக்கு கூட வாய்ப்பில்லை. சனி, ஞாயிறு, அட்சய திதி, பண்டிகைகள் இப்படிப் பட்ட நாட்களில் மட்டுமே கூட்டம் வரும். நமக்கு அப்படியா. தினமும் கூட்டம் அள்ளும்”.

ஆக மொத்தம் “நிற்பது” என்பது இரண்டு கடைக்கும் போது தான். “இக் கரைக்கு அக்கரை பச்சை”.

அந்தக் காலத்தில் செக்யூரிட்டி வேலை செய்பவர்களுக்கு கூட நாற்காலி கொடுத்து வேலை வாங்கிய மனிதநேயம் படைத்த மனிதர்கள் இருந்தார்கள். இப்போது அப்படியா! “மனிதம் என்பதே மறந்து போய்விட்டதே”. எல்லாம் பழகி போயிடும் என்றாள்.

சரி, “கொஞ்ச ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன், அந்தக் குரங்கு மூஞ்சி மேனேஜர் வந்தால் இப்ப தான் போனேன்னு சொல்லு. அந்த நாத்தத்திலயாவது கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு வருகிறேன்” என சென்றாள்.

சற்று நேரத்தில் ஒலிபெருக்கி அலறியது. இன்று அனைவரும் 10.00 மணி வரை கூடுதல் வேலை செய்ய வேண்டும் என்று..

கழிப்பறையில் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு, முகம் கழுவிக் கொண்டு உதட்டில் சிரிப்போடு வெளியே வந்தாள் தேவி. மனதில் இந்த மாதம் நூறு ரூபாய் அம்மாவிற்கு அதிகமாக அனுப்பலாம் என்று சிந்தித்தபடி….. துணிகளை எடுத்து போட்டு வாடிக்கையாளர்கள் தேவைகளை பூர்த்தி செய்ய துவங்கினாள், நடுங்கிய கால்களுடன் தேவி. “நிற்றலுக்கு முற்றுபுள்ளி கிடைக்குமா?”