அறிவு வெளிச்சம் அண்ணல் அம்பேத்கர் – சக்தி
உலக
கலங்கரை விளக்கத்தை
சாக்குப் பையால்
மூடி மறைக்கிறது மூடர்க்கூட்டம்,
இந்தியாவின்
வெளிச்சத்தையே
இரும்பு வேலி போட்டு
மறைத்து வைக்கிறது
நன்றி மறந்த
சதிகாரக் கூட்டங்கள்,
இந்தியாவின்
அரசியலமைப்புச் சட்டத்தையே
கண்களைக் கட்டி வைக்கிறார்கள்
இருள் சூழ்கிறது இந்தியா முழுவதும் இருக்கிற சாதிய
மதவாதிகளின் கூட்டங்களால்,
சட்டங்களாலும் பல பட்டங்களாலும்
இந்தியாவின் மானத்தைக்
காத்தவனைக்
கோணி பைகளைக்கொண்டு
கட்டி வைக்கிறார்கள்.
சுப்பனும்
சுப்பிரமணியனும்
அன்வரும் வாக்களிக்க
உரிமையைப் பெற்றுக்
கொடுத்தவனை
கூண்டுக்குள்
அடைக்கிறார்கள் ,
உலகத்தையே படித்தவனை,
பாமர மக்களையும்
படிக்கச் சொன்னவனை,
பெண்கள் முன்னேற்றத்தை
நேசித்தவனை,
சாதி மதங்களைத் தீயிட்டுக்
கொளுத்தியவனை,
இந்தியாவின்
மானத்தை வட்டமேசை
மாநாட்டில் காத்தவனை,
கூண்டுக்குள் அடைத்து
கோணி பைகளால் மூடுகிறார்கள்.
அவனுடைய நீலக்கண்களின்
வெளிச்சத்தால்
எரிந்து சாம்பலாகி
போகட்டுமே சாதியும் மதமும்,
புத்தகங்களாலும்
பேனாக்களாலும்
பூசிக்க வேண்டியவனை
செருப்பு மாலைகளால்
பூசிக்கிறது சாதிய சமூகம்,
அறிவு
வெளிச்சத்தை
இரும்பு வேலிக்குள்
போட்டு அடைத்து விட்டு
இருட்டுக்குள்
ஒளிந்து கொண்டு
புத்தகத்தைத் தேடுவதால் என்ன பயன்?
சாதனை மனிதனை
சாக்கு பைகளால்
கண்களைக் கட்டுகிறார்கள்
ஆள் காட்டி
விரலில்
மை பூசும் நேரத்தில்…..!!!!!!