அரியலூர் இரயில் பாலம் – மரு. உடலியங்கியல் பாலா
“முத்து நகர்” எக்ஸ்பிரஸ்… தூத்துக்குடி புறப்பட, எழும்பூர் ரயில் நிலையத்தில் 3வது நடைமேடையில் தயாராக நின்ற நிலையில்…. வழக்கமான, பேச்சு குரல்கள், போர்ட்டர்கள் பேரம், பிரியா விடை, கண்ணீர் வழியனுப்புதல்கள், என பரபரப்பு தொறறிக் கொண்டது.
அன்று,… நவம்பர் 23,1986 … வழக்கமான வடகிழக்கு பருவக்காற்றின் உபயத்தால், மப்பும் மந்தாரமுமாய் மழை தூரி கொண்டிருந்தது. டீட்டியை சுற்றி மொய்த்திருந்த கூட்டத்தின் பின்னால்… 50வயது மதிக்கதக்க, நம் கதாநாயகி, “நர்ஸ் ரோஸ்மேரி”, அடக்கமே உருவாய், அமைதியாய் நின்றிருந்தாள். ஏனோ, டீட்டியின் கருணை பார்வை? அவள் மீது படர,அவள் ‘லோயர் பெர்த்’ கன்பார்ம் ஆனது.
ரோஸ்மேரி, அவளுக்கு பிடித்த, வெளிர் நீல புடவையில்.. இன்றும், இந்த வயதிலும், தெய்வீக அழகுடன் வசீகரமாக காணப்பட்டாள். ஆனால் அவள் முகத்தில், ஏதோ ஒரு சோகமான அமைதி அப்பி கிடந்தது. ஒரு மருத்துவ சஞ்சிகையை படித்துக்கொண்டிருந்த அவளை, எதிர் சீட்டில் அமர்ந்து இருந்த சுட்டிகுழந்தை “ஆண்டி” என்று அழைக்க, அவள் சற்றே நிமிர்ந்து, “என்ன பாப்பா?” என்றாள் , அது சிரித்தபடி”இன்னிக்கு என்ன தேதி?..
என்னிக்கு தீபாவளி வரும்! “என ஆவலாய் கேட்க,.. அவள் சட்டென் யோசித்து “இன்னிக்கு தேதி 23… 30அன்று தீபாவளி வரும்” என்றாள். அதற்குள் பாப்பாவின் தாய், “ஆண்டிய சும்மா, தொந்தரவு செய்யாதே!” என கூறி அடக்க… அவளுக்கோ… நவம்பர் 23ன்.. பழைய கசப்பான நினைவுகள் நிழலாடி சோகம் தந்தது.
ஆம் நவம்பர் 23.. 1956ஆம் ஆண்டு இதெபோல், தூத்துக்குடி சென்ற, தன் ரயில் பயணத்தின் நினைவு அவளை திகில் அடைய செய்தது. அப்போது அவளுக்கு 18வயது, ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில், நர்ஸ் படிப்பு இறுதி ஆண்டு மாணவி.. “ராமு” பயிற்சி மருத்துவராய்… அவளுடன் ஒரே வார்டில் பணி செய்ய … இருவருக்கும், ஒரு நட்பை தாண்டிய ஈர்ப்பு உருவானது..
இருவரும் தூத்துக்குடிக்காரர்கள். அவன் சற்றே வசதி ஆனவன். இவளோ நடுத்தர வர்க்கம். ஆகவே, ரோஸ், அவனை தவிர்ப்பதில் குறியாக இருந்தாள். அவனும் ஜென்டில்மேன் போல் பழகினான். ஒருமுறை இவள் தாய்க்கு உடல்நலம் குன்றியபோது, அதே ஆஸ்பத்திரியில் அவளை சேர்த்தபோது, ராமு அவளுக்கு மிகவும் உதவி செய்து அவளைக் காப்பாற்ற … இருவர் நட்பும் மேலும் காதலாய் பரிமளிக்க தொடங்கியது…
அந்த தீபாவளிக்கு, அவளையும், தன்னுடன் தூத்துக்குடிக்கு அழைத்து சென்று, அவன் பெற்றோரிடம் அறிமுக படுத்தி, திருமண பேச்சை ஆரம்பிக்க நினைத்திருந்தான்.
இதே நாள், இதே மாதம்,1956ம் ஆண்டு அன்று… ரயிலில் அவர்கள் இருவரும் ஒன்றாக பயணித்தனர்.. அவள் கண்களில் சந்தோஷம் பொங்க, வெளிர்நீல சீலையுடன் .. அவன் அன்புக்கரம் பற்றி…ஆனந்தம் கொண்டாள்! “தீபாவளி சீசன்” என்பதால் பெருங்கூட்டம் !
எப்படியோ கெஞ்சி கூத்தாடி, இரண்டு பெர்த்துகளை ராமு வாங்கினான். ஆனால், இருவருக்கும் ஒரே கம்பார்ட்மெண்டில் இடம் கிடைக்கவில்லை.. இவனுக்கு 3ஆம் பெட்டியும், அவளுக்கு, 11ஆம்பெட்டியும் கிடைக்க, அவர்கள் ஏமாற்றதுடன் பயணித்தனர். சமயம் கிடைத்த போதெல்லாம், அவளுக்கு தின்பண்டம் வாங்கி கொடுத்து, அவளுடன் சிரித்து சிரித்து, பேசி மகிழ்ந்தான். ..
வண்டி விழுப்புரம் தாண்டியவுடன், பெருமழை கொட்டி தீர்க்க,… பின்னிரவு ஆகிவிட்டதால், இருவரும் பிரிந்து.. அவரவர் பெட்டியில், உறங்கி போனார்கள்.
ரோஸ் அவன் நினைவாகவே, கனவில் அவனுடன்”மாசிலா உண்மைக் காதலே”என்று.. எம் ஜி ஆர் – பானுமதி ஜோடிபோல் … டூயட் பாடியபடி ஆழ்ந்து உறங்கிப் போக,… திடீரென்று, பேரிடி போல் பெரும்சத்தம் கேட்டு விழித்த ரோஸ், பயணிகளின் மரண ஓலம் கேட்டு நடுநடுங்கிபோனாள். அதிர்ஷ்டவசமாக ,அவளுக்கு ஒன்றும் ஆகவில்லை, என்ஜினும், முதல் சிலபல பெட்டிகளும், பேய்மழையால் … அரியலூர் பாலம் உடைந்து, மருதைஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவதை…
அந்த அதிகாலை நான்கு மணி கும்மிருட்டிலும், கண்டு பதைபதைத்தாள். சோகத்தின் உச்சியில் “ராமு ராமு” என்று, கூக்குரலிட்டு துன்பித்து துவண்டு அழுதாள். அடுத்த நாள்.. தினத்தந்தியில்,..
அரியலூர் ரயில் விபத்து ! 140 பேர் பலி!! பலர் கவலைக்கிடம்.! ரயில் மந்திரி ராஜினாமா! ரயில் பயணமா? பரலோக பயணமா? என்று… கருப்புக்கொட்டை எழுத்தில்… “தலைப்பு செய்தியாய்” தமிழகத்தையே உலுக்கியது.!!.
அதன் பிறகு.. அவன்மேல் கொண்ட அதீத காதலால்! அவன் நினைவால், ! அவள் திருமணம் தவிர்த்து, “மருத்துவ சேவையே! மகேசன் சேவை!..”. என்று கருதி, எவர்சொல்லியும் கேட்காமல் ,தன்னையே அர்ப்பணித்து, சோகமே சுகமாய், தியாக வாழ்க்கை வாழ்ந்து வந்தாள்.
மீண்டும் அந்த பாப்பா “ஆண்டி ஏன் அழுகிரீங்க ? “என அவளை உசுப்ப, சுயநினைவு பெற்று “இல்லம்மா ரயில்கரி தூசு கண்ல பட்டுடுச்சி! அதான்” என மழுப்ப, “இல்ல! நீங்க பொய் சொல்றீங்க” என குழந்தை கூற…அதன் தாய், அவளை இம்முறை ஆறுதலுடன் நோக்கினாள்.
வண்டி வேகமெடுக்க, மழையும் நின்றபாடாய் இல்லை. அனைவரும், இரவு உணவை முடித்துகொண்டு, உறங்க ஆயத்தம் ஆயினர். ரோஸ் “லோயர் பெர்த்தை” அந்த “தாய்-குழந்தைக்கு” விட்டு கொடுத்து, மேல் பெர்த்தில் படுத்து உறங்கி போனாள்.
பின்னிரவில்…. யாரோ தன்னை தட்டி எழுப்பிவது போல் உணர்ந்து, சட்டென விழிப்பு வந்து எழுந்தாள் ரோஸி… காலியாக இருந்த எதிர் பெர்த்தில் இப்போது ராமு ஒருக்களித்தவாரு.. அதேஅழகுடன், அதேஇளமையுடன் ..இவளை பார்த்து புன்னகைப்பதை கண்டு… அதிர்ச்சிகலந்த ஆனந்தம் அடைகிறாள்!
“ராமு “என்று கூவியபடி, அவள் கரம் நீட்ட, அவன் அவள் கைத்தலம் பற்ற… “எப்படி ராமு இங்க வந்த??” என கேட்க அவனோ சிரித்தபடி” நான் வெள்ளத்தில் தத்தளித்த போது, ஒரு இளைஞன் எனை காப்பாற்றி, ஏதோ ஒரு கண்காணாத , அதிசய ஊருக்கு அழைத்து சென்றான்.. அங்கு எனக்கு சுகபோக வாழ்வு கிடைத்தும், உன் நினைவால் தவித்து துவண்டு துன்புற்றேன்..
பிறகு… ஏதேதோ.. எப்படி எப்படியோ! பிரம்ம பிரயத்தனம் செய்து, உனை காணும் பேராவலில் தப்பித்து வந்து, சற்றுமுன் இந்த ரயிலில் ஏறினேன்… உனை இங்கு கண்டு, வியந்தேன்! மகிழ்ந்தேன்! அன்பே!!.. இனி நம்மை யாராலும் பிரிக்கவே முடியாது “என கூறி அவள் உள்ளங்கையில் முத்தமிட…
ரோஸ் ஓரு விசித்திர உணர்வால் உந்தப்பட்டு, அவனை காதலும் காமமும் கலந்து அழைக்க.. அவன் தாவி சென்று அவளுடன் சங்கமிக்கிரான். அவள் பெண்மை முழுமையாகி …. எல்லையில்லா இன்பம் அடைகிறாள்!
பேய் மழையோ தொடர்ந்து… நிற்காமல் கொட்டி தீர்க்க , வெள்ளப்பெருக்கால் அரியலூர் , மருதைஆற்று பாலம் மூழ்க.. ரயில் பெட்டிகள் அசுர வேகத்துடன் தடக் தடக் என்று அதை கடக்க முற்பட… சட்டென்று பெரும் சத்தத்துடன், இரயில் கிரீச்சிட்டு நிற்கிறது…
ராமு இவள் கரத்தை கெட்டியாக அழுந்த பற்றி..” வா வா சீக்கிரம் வா! ரயில் இன்னும் சற்று நேரத்தில் கவிழ போகிறது… நாம் குதித்து தப்பித்து கொள்ளலாம்!” என்று அவளை அணைத்துபடி அன்பாய் இழுத்து செல்ல,…
சட்டென கண்விழித்த அந்த குழந்தை “எங்கே ஆண்டி போறீங்க..?.. ஐயய்யோ! அந்த அன்க்கிள் கூட போகாதீங்க!போகாதீங்க !பிளீஸ்!”என கத்த முயல்கிறது… ஆனால் ஒலி எழவில்லை…!
அடுத்தநாள்… காலை செய்தி தாள்களில்… “அரியலூர் பாலத்தில் சென்ற ‘முத்துநகர்’ எக்ஸ்பிரசில் இருந்து, 50வயது பெண் … மருதை ஆற்றில் குதித்து தற்கொலை..” ஓடும் ரயிலில் பரிதாபம்..!! என செய்தி கண்டு அரியலூர் மக்கள் பதட்டம் அடைந்தனர்.!