தந்துரா: உண்மையயைப் பிரதிபலிக்கும் ஓர் ஆவணப்படமா? கட்டுரை – பேரா.அருண்கண்ணன்

தந்துரா: உண்மையயைப் பிரதிபலிக்கும் ஓர் ஆவணப்படமா? கட்டுரை – பேரா.அருண்கண்ணன்
மேற்குக் கரையைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள நிறவெறிச் சுவரின் சில இடங்களில் இஸ்ரேல் இராணுவத்தின் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு பாலஸ்தீனியர்கள் மற்ற பகுதிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அப்படியான ஒரு சோதனைச் சாவடியில் கடந்த ஜனவரி 08 ஆம் தேதி அன்று, நின்று கொண்டிருந்த கூட்டத்தில் ரியாத் அல்-மாலிகியும் இருந்தார். சாதராண பாலஸ்தீன மக்களுக்கு இது தினசரி நடைமுறைதான். இருப்பினும் ரியாத் அல்-மாலிகி தங்களுடன் நின்றதுதான் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த ரியாத் அல்-மாலிகி சாதாரண பாலஸ்தீன பிரஜை அல்ல என்பதும் அவர் பாலஸ்தீன அரசாங்கத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் என்பதும் தான் இந்த ஆச்சரியத்திற்கான காரணம்.

இஸ்ரேலில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தீவிர வலதுசாரி அரசு, பாலஸ்தீன மக்களின் மீது கடுமையான ஒடுக்குமுறைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரியாத் அல்-மாலிகின் சிறப்புச் சலுகைகள் ரத்து செய்ப்பட்டுள்ளன. பாலஸ்தீன அரசாங்கத்தின் உயர்ப் பதவியில் இருப்பவருக்கே இதுதான் நிலைமை என்றால்? சராசரி பாலஸ்தீன மக்களின் மீது இஸ்ரேல் அரசும், இராணுவமும் செலுத்தும் ஒடுக்குமுறையை நாம் எளிதாகப் புரிந்து கொள்ளமுடியும். கடந்த ஆண்டு மட்டும் இஸ்ரேல் இராணுவத்தால் 225 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் முதல் மாதத்தில் மட்டும் 35 பேர் கொல்லப்பட்டனர். இப்படி அப்பாவி பாலஸ்தீனர்களை இஸ்ரேல் இராணுவம் சுட்டுக் கொள்வது ஒன்றும் புதிய செய்தியல்ல கடந்த 75 ஆண்டுகளாகத் தொடரும் ஒரு சாதராண நிகழ்வுதான்.

இஸ்ரேல் என்கிற நாடு 1948 ஆம் ஆண்டு பல்லாயிரம் அப்பாவி பாலஸ்தீன மக்களைப் படுகொலைச் செய்து அதன் இரத்தத்தின் மீதுதான் உருவானது. அப்படியான படுகொலைகளைத் தாங்கள் செய்யவில்லை என்று இன்று வரை இஸ்ரேல் அரசு மறுத்துவருகிறது. மேலும் அந்தப் படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் பின்னாளில் அந்நாட்டின் பிரதமர் உள்பட பெறும் பொறுப்புகளை வகித்தனர் என்பதுதான் இஸ்ரேலின் வரலாறு.

இப்படியான சூழலில் கடந்த ஆண்டு வெளியான இஸ்ரேலைச் சேர்ந்த இயக்குனர் அலோன் ஸ்வாரஸ் இயக்கிய தந்தூரா (Tantura) மற்றும் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த டேரின் ஜே சல்லாம் இயக்கிய பர்ஹா போன்ற திரைப்படங்கள் 1948 ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்ரேலின் இன அழிப்பு நடவடிக்கை குறித்து ஒரு விவாதத்தை உருவாக்கியது.

தந்தூரா என்கிற ஆவணப்படம் 1948 ஆம் ஆண்டு மே மாதத்தில் தந்தூரா கிராமத்தில் இருந்த பாலஸ்தீன அப்பாவி மக்களை யூத அமைப்பின் இராணுவப் பிரிவு கொன்றதையும் மேலும் பலரை வலுக்கட்டாயமாக கிராமத்தை விட்டு அப்புறப்படுத்தியதையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்தவர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்ததுடன் கடுமையான விமர்சனங்களும் திரைப்படம் குறித்து எழுந்துள்ளது. எனவே தமிழ்ச் சூழலில் தந்தூரா திரைப்படம் மற்றும் 1948 ஆம் ஆண்டுகளில் பாலஸ்தீன மக்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை உரையாட முயற்சிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

பாலஸ்தீனம் அழிக்கப்பட்டு இஸ்ரேல் உருவானதன் சுருக்கமான வரலாறு

முதல் உலகப்போரின் இறுதிப்பகுதியில் ஒட்டமான் பேரரசு வீழ்ச்சி அடைந்ததை அடுத்து மத்திய கிழக்கு பல கூறுகளாகப் பிரிக்கப்பட்டு ஏகாதிபத்திய நாடுகள் பங்கு போட்டுக்கொண்டன. இந்த பங்கீட்டில் 1917 ஆம் ஆண்டு பாலஸ்தீனம் ஆங்கிலேயர்களின் வசம் செல்கிறது. அன்று தொடங்கி 1948 இல் நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டு இஸ்ரேல் உருவாக்கப்படும் வரை ஆங்கிலேயர்களின் வசம்தான் பாலஸ்தீனம் இருந்தது.

யூதர்களுக்கு என்று தனியாக ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்றும் அது தங்களுடைய புனிதத்தலமான ஜெருசெலம் அமைந்திருக்கும் பாலஸ்தீனத்தில் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் ஜியோனிச வாதிகளால் 19 ஆம் நுற்றாண்டின் இறுதிக் காலங்களிலேயே முன் மொழியப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் ஒரு பகுதியாக 1901 ஆம் ஆண்டு யூத நெட்வொர்க் நிதி உருவாக்கப்பட்டு அதன் மூலமாக பாலஸ்தீன பகுதிகளில் நிலம் விலைக்கு வாங்கப்பட்டு யூதர்கள் குடியமர்த்தபட்டனர். 1900க்கு முன்பு 3000த்திற்கும் குறைவாக இருந்த யூதர்களின் எண்ணிக்கை 1918 ஆம் ஆண்டு 50 ஆயிரமாக உயர்ந்தது. இந்த முயற்சிகள் ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பிறகு இன்னும் தீவிரப்படுத்தப்பட்டன. இதன் விளைவாக யூதர்களின் மக்கள் தொகை 1948ஆம் ஆண்டில் 5 லட்சத்தை எட்டியது. யூதர்களைப் பாதுகாக்க ஜியோனிசவாதிகள் ஹகன்னா என்கிற ராணுவ அமைப்பை 1920 இல் உருவாக்கினர். இந்த ராணுவ அமைப்புதான் பின்னாளில் மிகப்பெரிய அளவில் பாலஸ்தீனியர்களைப் படுகொலைச் செய்தது.

ஆங்கிலேயே ஆட்சியின் அதிருப்தி காரணமாக பாலஸ்தீன மக்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிரான எழுச்சிமிக்கப் போராட்டம் ஒன்றை 1936 இல் தொடங்கினர். இந்தப் போராட்டம் 3 ஆண்டுக் காலம் நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். இப்போரில் ஆங்கிலேய ராணுவத்துடன் ஹகன்னா இணைந்து சண்டையிட்டது. இந்த சண்டைக்களம் ஹகன்னாவிற்குப் பாலஸ்தீன கிராமப் பகுதிகளில் சண்டையிடுவதற்கான பயிற்சிக் களமாக அமைந்தது. மேலும் இந்த சண்டையில் பாலஸ்தீன மக்களுக்கான தலைமை முற்றிலுமாக அழிக்கப்பட்டதுடன் போராட்டமும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

சண்டை ஒரு புறம் நடந்து கொண்டிருந்த போதே, ஜியோனிச வாதிகளின் தலைவரும் இஸ்ரேலின் முதல் பிரதமராக இருந்தவருமான டேவிட் பென்-குரியன் ஆணைக்கிணங்க 1937 இல் எளிமேலேச் திட்டம் என்று சொல்லப்படும் பாலஸ்தீனத்தை ஆங்கிலேயர்கள் வெளியேறும் பட்சத்தில் ராணுவ நடவடிக்கையின் மூலம் எப்படி கைப்பற்ற வேண்டும் என்கிற திட்டத்தை உருவாக்கினர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததைப் போல் ஆங்கிலேயர்கள் உடனடியாக வெளியேறவில்லை. பத்தாண்டுகள் கழித்து 1947 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் ஆங்கிலேயர்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறும் முடிவை எடுத்தனர். மேலும் பாலஸ்தீன பிரச்சனையைப் புதிதாக உருவாக்கப்பட்ட ஐநா அவையிடம் ஒப்படைத்தனர்.

ஐநா சபையால் இதற்குத் தீர்வுகாண 11 பேர் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டது. பாலஸ்தீன மக்களின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் 6 மாத காலத்திற்குப் பிறகு இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நவம்பர் மாதத்தில் பாலஸ்தீனத்தைப் பிரித்து இஸ்ரேலை உருவாக்கும் தீர்மானம் ஐநா சபையில் முன்மொழியப்பட்டது. இந்த குழுவினருக்கு மத்தியக் கிழக்கு குறித்துப் போதுமான அறிவு இல்லை என்பது உட்பட பல விமர்சனங்கள் இக்குழு மீது வைக்கப்பட்டது. இருப்பினும் இந்தத் தீர்மானம் பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றபட்டது. இதில் எதிரெதிர் துருவங்களாக இருந்த ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒன்றாக இணைந்து இதை ஆதரித்தன. ஏற்கனவே யூதர்கள் மேற்குலகிலும், அமெரிக்காவிலும் தங்களுக்கு ஆதரவாக லாபி செய்திருந்தாலும் இரண்டாம் உலகப் போரில் இவர்கள் பாதிக்கப்பட்டதும் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டதும் பல நாடுகளின் ஆதரவை இவர்கள் பெறுவதற்கு உதவியாக இருந்தது. இருப்பினும் இத்தீர்மானத்தை எதிர்த்து 11 நாடுகள் வாக்களித்தன அதில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

1948 இல் நடந்த இன அழிப்பு நடவடிக்கை

ஐநா சபை தீர்மானம் நிறைவேற்றப் பட்டவுடன் பாலஸ்தீனத்தில் உள்நாட்டு கலவரம் நடக்கத் தொடங்கியது. இதைக் காரணமாக வைத்து ஹகன்னா அமைப்பினர் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கினர். மேலும் இதனுடன் ஆங்கிலேயர்களை அங்கிருந்து விரைவாக வெளியேற்றுவதற்கு ஆங்கிலேய ராணுவத்தின் மீதும் கடுமையான தாக்குதலை யூதர்களின் ராணுவம் நிகழ்த்தியது. ஏற்கெனவே நன்கு திட்டமிட்டிருந்த ராணுவ நடவடிக்கைகளைத் தாக்குப் பிடிக்க முடியமால் பாலஸ்தீன ராணுவம் பெரும் பின்னடைவைச் சந்திக்கிறது. பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக சிரியா, எகிப்து, ஜோர்டன் போன்ற நாடுகளைச் சேர்ந்த படைகள் துணைக்கு வந்தன. இது ஓர் அளவிற்கு சேதத்தைக் குறைக்க பயன்பட்டதே ஒழிய, யூத ராணுவத்தை முழுமையாக தடுத்து நிறுத்த முடியவில்லை.

1937 இல் எளிமேலேச் திட்டத்திற்குப் பிறகு வந்த காலங்களில் மேலும் இரண்டு திட்டங்கள் தீட்டப்பட்டன. இதையெல்லாம் மேன்மைப் படுத்தி 1948 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி டேவிட் பென் கொரியன் தலைமையில் பிளான் டலேட் (Plan Dalet) என்று பெயரிடப்பட்ட பாலஸ்தீன மக்களைத் தங்களுடைய சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றிவிட்டு யூதர்களுக்கான தனி நாடாக இஸ்ரேலை உருவாக்க வேண்டும் என்பதற்கானத் திட்டம் இறுதி செய்யப்படுகிறது. இந்த திட்டத்திற்காக உளவுப்பிரிவின் மூலம் பாலஸ்தீனத்தில் ஒவ்வொரு கிராமத்தைப் பற்றியும் பல நுட்பமான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அப்படி திரட்டப்பட்டத் தகவல்களின் அடிப்படையில் பாலஸ்தீன பகுதிகளை 12 அலகுகளாகப் பிரித்த ஹகன்னா அமைப்பினர் அதில் சண்டையிடுவதற்கு 12 படைப்பிரிவுகளை உருவாக்கி முழுமையான போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

அதேவேளையில் இவர்களின் தொடர்த் தாக்குதலின் காரணமாக ஆங்கிலேய ராணுவம் முழுமையாக மே மாதம் 14 ஆம் தேதி பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறியது. உடனடியாக டேவிட் பென் கொரியன் இஸ்ரேல் என்கிற நாடு உருவானதாக அறிவித்தார். அடுத்த நாளே அமெரிக்க அதிபர் ஹாரி ட்ருமன் அந்நாட்டை அங்கீகரித்தார். அதனை ஒட்டிவந்த நாட்களில் பல நாடுகளும் இஸ்ரேலை அங்கீகரித்தனர். அதற்கு அடுத்த சில நாட்களில் இஸ்ரேல் ஏற்கனவே நன்கு திட்டமிடப்பட்ட பிளான் டலேட்யின் அடிப்படையில் பாலஸ்தீனத்தையும் அதன் மக்களையும் அழிக்கும் வேலையைத் தொடங்கியது. இந்த இன அழிப்பு நடவடிக்கை ஜனவரி மாதம் 1949 வரை தொடர்ந்தது. இந்த நடவடிக்கையின் மூலம் 8 லட்சம் பாலஸ்தீனியர்கள் அகதிகளாக்கப்பட்டனர். 410 கிராமங்கள் முழுமையாக அழிக்கப்பட்டதுடன் 15,000 பேர் இதில் கொல்லப்பட்டனர். இப்படி அழிக்கப்பட்ட பல கிராமங்களில் ஒன்றுதான் தந்துரா.

தந்துரா ஒரு அழகிய கடற்கரைக் கிராமம்

ஹைபா நகரத்தின் தென்பகுதியில் 35 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அழகான கடற்கரைக் கிராமம்தான் தந்துரா. 1948 இல் 1500 பேர் மட்டுமே வாழ்ந்த ஒரு சின்ன கிராமம். இக்கிராமம் ஐநா சபையால் இஸ்ரேலுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்தது. மே 15ஆம் தேதி யூத புலனாய்வு அதிகாரியின் மூலம் கிராமத்தின் முக்கியமானவர்களுக்குச் சரணடையச் சொல்லி செய்தி அனுப்பப்படுகிறது. சரணடைந்தால் தாங்கள் இந்த கிராமத்திலிருந்து வெளியேற்றப் படுவோம் என்ற அச்சத்தின் காரணமாகச் சரணடைய மறுக்கின்றனர். எனவே மே 22 ஆம் தேதி இரவு தந்துரா கிராமம் ஹகன்னா அமைப்பினரின் அலெக்ஸ்ன்றோனி படைப்பிரிவினரால் சுற்றிவளைக்கப்படுகிறது.

அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்டவர்கள் படுகொலைச் செய்யப்பட்டனர். மேலும் இராணுவம் ஒரு பெண்ணை மானபங்கம் செய்தது. அதை தடுக்கச் சென்ற அவருடைய வயதான மாமாவும் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இறந்தவர்களின் பிணங்களைக் கடற்கரைக்கு அருகில் இராணுவம் புதைத்தது. அத்துடன் உயிர் பிழைத்தவர்களை அந்த கிராமத்தைவிட்டு வலுக் கட்டாயமாக இராணுவம் வெளியேற்றியது. அதற்குப்பிறகு அந்த கிராமம் வாகனங்களைக் கொண்டு முழுமையாக அழிக்கப்பட்டு ஐரோப்பாவில் இருந்து பாதிக்கப்பட்டு வந்த யூதர்களை அந்த கிராமத்தில் குடியமர்த்தியது இஸ்ரேல் நிர்வாகம். இது போன்றுதான் மே மாதம் தொடங்கி ஜனவரி மாதம் 1949 வரை 6 மாத காலம் பல பாலஸ்தீன கிராமங்கள் ஹகன்னா இராணுவப் பிரிவினரால் அழிக்கப்பட்டதுடன் பலர் படுகொலையும் செய்யப்பட்டனர்.

இந்தப் படுகொலைகளின் மேல்தான் தங்கள் நாடு உருவாக்கப்பட்டது என்பதைத் தொடர்ந்து மறுத்து வருவகிறது இஸ்ரேல். அதேபோல் பாலஸ்தீனர்கள் தாங்களாக அமைதியாக கிராமங்களை விட்டு வெளியேறினார்கள் என்றும் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறனர். அன்றே இதற்கு ஆதரவாக உலக அளவில் பிரபலமான பத்திரிகையாளர்கள் இஸ்ரேல் பகுதிக்கு அழைத்து வந்து ஊடகங்களில் அந்தப் பொய் பிராச்சாரத்திற்கு ஆதரவாகச் செய்திகளை வெளியிட வைத்தனர் இஸ்ரேலியர்கள். இவர்கள் செய்த மிகப்பெரிய இனப்படுகொலையை மறைப்பதற்கு இது பேருதவியாக அமைந்தது.

டெடி கேட்ஸின் ஆய்வு

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் டெடி கேட்ஸ் (Teedy ketz) என்கிற ஹைபா பல்கலைகழகத்தில் படித்த மாணவன் தன்னுடைய முதுகலைப் படிப்பிற்காக ஹைபா பகுதியைச் சேர்ந்த 5 கிராமங்களைத் தேர்வு செய்து அக்கிராமங்களில் 1948 ஆம் ஆண்டு என்ன நடந்தது என்பதை ஆய்வு செய்தார். அவர் அவ்வாறு தேர்வு செய்த கிராமங்களில் ஒன்று தந்துரா. இந்த ஆய்விற்காகப் பாதிக்கபட்ட பாலஸ்தீனர்கள், போரில் ஈடுபட்ட அலெக்ஸ்ன்றோனி படைப்பிரிவினர் என மொத்தம் 135 நபர்களிடம் நேர்காணல் செய்ததார் டெடி. அதேபோல் அந்த நேர்காணல்கள் அனைத்தையும் டேப்பிலும் பதிவு செய்து கொள்கிறார். இப்படி பதிவு செய்ப்பட்ட 140 மணி நேர ஆடியோ பதிவு டெடியிடம் இன்றைக்கும் உள்ளது.

இந்த ஆய்வின் முடிவில் இஸ்ரேல் இராணுவம் வலுக்கட்டயமாக பாலஸ்தீனர்களைக் கிராமங்களில் இருந்து வெளியேற்றியது என்றும் தந்துரா கிராமத்தில் மட்டும் 250க்கும் மேற்பட்டவர்கள் படுகொலைச் செய்யப்பட்டனர் (பெரும்பாலானவர் ஆண்கள்) என்றும் தான் எழுதிய ஆய்வை 1998 ஆம் ஆண்டு டெடி சமர்ப்பித்ததார். அந்த ஆய்வுக்காக அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சியும் பெற்றார்.

அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் இவர் ஆய்வை இஸ்ரேலில் யாரும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. 2000 ஆம் ஆண்டு பல்கலைகழக நூலகத்திற்குச் சென்ற பத்திரிகையாளர் ஒருவர் கண்ணில், டெடி கேட்ஸ்யின் ஆய்வு படுகிறது. அடுத்த சில நாட்களில் அந்த ஆய்வை மையமாக வைத்து மரிவ் என்கிற பத்திரிகையில் செய்தி ஒன்றை வெளியிடுகிறார் அந்த பத்திரிகையாளர். இது இஸ்ரேலில் பெரும் புயலைக் கிளப்புகிறது. அலெக்ஸ்ன்றோனி படைப்பிரிவின் முன்னாள் இராணுவ வீரர்கள் தாங்கள் அதுபோல் சொல்லவில்லை என்று மறுத்ததுடன் டெடி மீது அவதூறு பரப்பியதாக வழக்கும் போடப்பட்டது. நீதிமன்றங்களில் டெடிக்கு எதிரான போக்கு நிலவியதுடன் பல வகையிலும் டெடி மற்றும் அவரது குடும்பத்தினர் மிரட்டப்படுகின்றனர். இதன் அழுத்தம் காரணமாக டெடி அந்த ஆய்வு தவறு என்று கடிதம் கொடுத்ததுடன் அதை பின்வாங்குவதாகவும் அறிவித்தார். அவருக்கு மீண்டும் அந்த ஆய்வை சமர்ப்பிக்க பல்கலைகழகம் வாய்ப்பு வழங்கியது. முதலில் அழுத்தம் காரணமாகத் தன்னுடைய ஆய்வைத் தவறு என்று சொன்ன டெடி தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டு பழைய மாதிரியே ஆய்வைச் சமர்ப்பித்தார். இந்த முறை மிகவும் குறைவான மதிப்பெண் வழங்கப்பட்டதுடன் அவருடைய ஆய்வும் நூலகத்தில் இருந்து அப்புறப் படுத்தப்படுகிறது. அதற்கு அடுத்த இருபது ஆண்டுகள் இதை யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இயக்குனர் அலோன் ஸ்வாரஸ்க்கு இது தொடர்பானத் தகவல்கள் கிடைத்தவுடன் டெடியைச் சந்திக்கிறார். இந்த சந்திப்புதான் தந்துரா என்கிற ஆவணப்படம் உருவாகக் காரணமாக அமைந்தது.

தந்துரா ஆவணப்படம்

90 வயதைக் கடந்த தந்துராவில் வசிக்கும் யூதர் ஒருவரிடம் இருந்துதான் தந்துரா படம் தொடங்குகிறது. படத்தின் முதல் சில நிமிடங்களில் அந்த முதியவருடன் மூன்று 90 வயதைக் கடந்த பெண்களும் உட்கார வைக்கப்பட்டு, தந்துராவில் 1948 இல் என்ன நடந்தது என்று வினவுகிறார் இயக்குனர். இந்த நான்கு நபர்களும்தான் ஜூன் மாதம் 1948 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் இருந்து வந்து தந்துராவில் குடியேறியவர்களில் இன்றைக்கும் உயிருடன் இருப்பவர்கள். இவர்கள் தந்துராவில் படுகொலைகள் எதுவும் நடக்கவில்லை என்று மறுப்பதுடன் படத்திற்கான டைட்டில் போடப்படுகிறது.

இந்தப் படம் பெரும்பாலும் டெடியின் ஆய்வை மையமாக வைத்துத்தான் நகர்கிறது. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள டெடி சக்கர நாற்காலியில் பயணிக்கும்போதே பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகிறார். அவருடனான நேர்காணலைத் தொடங்கும் இயக்குனர், உங்களுக்கு எப்போது சிரமம் ஏற்பட்டாலும் சொல்லுங்கள் நிறுத்திக் கொள்ளலாம் அதபோல் உங்களுக்கு என்ன நினைவிருக்கிறதோ அதைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்வார். அதற்குப் பதிலளிக்கும் டெடி தன்னை மூன்று முறை பக்கவாதம் தாக்கியுள்ளது என்றும் அதில் முதல் பக்கவாதம் ஏற்பட்டது இந்த ஆய்வு தொடர்பான நெருக்கடியின் விளைவாக என்று சொல்லும் பொழுது பார்வையாளர்கள் டெடியின் நெருக்கடியை முழுமையாக உணரமுடிகிறது.

டெடியிடம் நடக்கும் மேற்கொண்ட உரையாடலில் அந்த 140 மணி நேர ஆடியோ டேப் தன்னிடம் இப்போதும் இருப்பதை இயக்குனரிடம் கூறுகிறார். உடனே அதைப் பார்க்கலாமா என்று வினவுகிறார் அந்த இயக்குனர் அதற்கு டெடி தன்னுடைய வீட்டில் ஒரு அறையைக் காண்பித்து இதில் தான் உள்ளது தாராளமாக அதை நீங்கள் எடுத்துச் செல்லலாம் என்கிறார். டெடியின் மனைவி குறுக்கிட்டு அந்த அறைக்குப் பெயர் தந்துரா அறை என்றும், அந்த அறைக்குள் அந்த டேப் உள்பட தந்துரா தொடர்பாகப் பல்வேறு ஆவணங்கள் உள்ளது என்றும் குறிப்பிடுகிறார். டெடிக்கு தந்துரா மீதுள்ள ஆய்வின் ஆர்வத்தையும் ஆழத்தையும் நமக்கு விளங்கப்படுத்தவே இந்த காட்சிகள் அமைக்கப்ப ட்டுள்ளதாகத் தோன்றுகிறது.

டெடி நேர்காணல் மேற்கொண்ட அலெக்ஸ்ன்றோனி படைப்பிரிவின் முன்னாள் வீரர்கள் சிலர் தற்போது உயிருடன் உள்ளனர். அவர்களில் சிலரைத் தேர்வு செய்து மீண்டும் நேர்காணல் செய்கிறார் இயக்குனர். இதில் சிலர் நாங்கள் படுகொலைகள் எதுவும் செய்யவில்லை என்று மறுக்கின்றனர். சிலர் ஆமாம் நாங்கள் பாலஸ்தீனியர்களைச் சுட்டுக்கொன்றோம் என்று ஒப்புக்கொள்கின்றனர். அதில் ஒருவரிடம் நீங்கள் எத்தனைப் பேரைச் சுட்டுக் கொன்றீர்கள் என்று வினவுகிறார் இயக்குனர். அதற்கு அந்த இராணுவ வீரர் எனக்கு கணக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் என்னுடைய துப்பாக்கியில் 250 குண்டுகள் இருந்தன அதைப் பயன்படுத்தி என்னால் எவ்வளவு பேரைச் சுட முடிந்ததோ அவ்வளவு பேரைச் சுட்டேன் என்பார். மேலும் இன்னும் ஒரு வீரர் இது யுத்தம் அதில் இது போன்ற கொலைகள் நடக்கத்தான் செய்யும் என்று கொலைகளை நியாயப்படுத்துவார். அவர்கள் கொலைகளைச் செய்ததை மறைக்கும் பொழுது ஒருவித பதட்டத்துடன் சிரிக்கின்றனர். அந்த உடல்மொழி அவர்கள் கொலை செய்திருக்கலாம் என்பதை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. மேலும் கொலைகள் நடைபெற்றதை உறுதி செய்ய அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மூன்று அரேபியர்களையும் நேர்காணல் செய்துள்ளார் இயக்குனர்.

டெடி ஆய்வைத் தாண்டி சில கல்வியாளர்களிடமும் நேர்காணல் செய்து தந்துராவில் என்ன நடந்துள்ளது என்பதை வெளிப்படுத்த முற்படுகிறார் இயக்குனர். டெடியின் ஆய்வைப் பற்றி பேசும் பேராசிரியர் ஒருவர் ஹிட்லர் எழுதிய மெயின் கேம்பே நம்முடைய நூலகத்தில் இருக்கும் பொழுது டெடியின் ஆய்வை நூலகத்தில் இருந்து நீக்கியது எவ்வளவு அபத்தமானது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். இயக்குனர் நேர்காணல் செய்த பேராசிரியர்கள் சிலர் டெடியின் ஆய்வை மறுப்பதுடன் தந்துராவில் படுகொலைகள் எதுவும் நடைபெறவில்லை என்று வாதிடுகின்றனர். மேலும் இந்நேர்காணலில் மிகவும் முக்கியமான வரலாற்று ஆய்வாளரான இலான் பாப்பேவின் நேர்காணலும் இடம் பெற்றுள்ளது. அவர் தந்துராவில் பெரிய அளவில் படுகொலைகள் நடந்தது என்றும் அதபோல் பாலஸ்தீன மக்களைப் படுகொலைச் செய்து அதன்மேல் தான் இஸ்ரேல் உருவானது என்பதையும் ஆணித்தரமாகக் கூறுகிறார்.

படத்தில் இரண்டு தரப்புகளையும் சம அளவில் பிரதிபலிக்க வேண்டும் என்கிற ரீதியில் நேர்காணல்கள் மேற்கொள்ளப்பட்டதைப் போன்ற தோற்றம் இருந்தாலும் ஒரு கட்டத்தில் படத்தில் தந்துராவில் படுகொலைகள் நடைபெற்றது என்பதைத் தெளிவாகப் புரியவைத்து விடுகிறார் இயக்குனர். மேலும் அந்தக் கிராமத்தில் கடற்கரைக்கு அருகாமையில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில்தான் படுகொலை செய்யப்பட்டவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் செயற்கைக்கோள் புகைப்படங்களைப் பயன்படுத்தி நமக்கு தெளிவுபடுத்துகிறார்.

பெரும்பாலும் பிரச்னையின்றி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் இறுதிப் பகுதயில் தீர்வு தொடர்பாக விவாதிக்கப்படும் விடயங்கள்தான் இந்த படத்தின் நோக்கத்தை சந்தேகிக்கும் படியாக அமைந்துவிடுகிறது. ஒரு பேராசிரியர் அமெரிக்கா ஆஸ்திரேலியாவில் எப்படி தாங்கள் பூர்வகுடிகளை கொன்றோம் என்பதை ஒத்துக் கொண்டார்களோ அதேபோல் நாமும் இந்தக் கொலைகளை ஒத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.

இறுதியாக இயக்குனர் ஐரோப்பாவில் இருந்து வந்து தந்துராவில் வசிக்கும் அந்த நான்கு முதியவர்களிடம் இங்கு இறந்தவர்களுக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்கலாமா என்பதைப் போன்ற உரையாடல் ஒன்றை நிகழ்த்துகிறார். முதலில் வலுவாக நால்வரும் அதை வேண்டாமென்று மறுக்கின்றனர் ஆனால் அடுத்த சில நொடிகளில் அதில் ஒருவர் நான் மாறுபடுகிறேன் நினைவுச் சின்னம் அமைக்கலாம் என்கிறார். அதற்கு அடுத்த சில காட்சிகளில் இறந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படுவதுடன் படம் முடிவடைகிறது.

படத்தினுடைய முதல் பிரேமிலேயே 1948 இல் நடைபெற்றதைப் பொறுத்தவரை இஸ்ரேலுக்கு சுதந்திரப்போர் என்றும் பாலஸ்தீனர்களுக்கு அது நக்பா (ஆங்கிலத்தில் catastrophe) என்கிற வாசகத்துடன்தான் தொடங்குகிறது. ஆனால் படத்தின் இறுதிக் காட்சியில் எழுப்பப்படும் நினைவுச் சின்னத்தில் சுதந்திரப் போரில் உயிர் நீத்தவர்களுக்கு என்கிற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும். கொலைகள் நடந்ததை அங்கீகரிக்க முனையும் இயக்குனர் இஸ்ரேலால் உருவாக்கப்பட்டுள்ள கதையாடலின் படி 1948 இல் நடைபெற்றதைச் சுதந்திரப் போர் தான் என்றும் அந்த போரில் தான் தந்துராவில் வாழ்ந்த பாலஸ்தீனர்கள் இறந்தார்கள் என்கிற கோணத்தில் படத்தை முடிக்கிறார். நினைவுச் சின்னமெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை திரும்பவும் தங்கள் இடங்களுக்கே திரும்பி செல்லத்தான் விரும்புகின்றனர் பாலஸ்தீனர்கள். இதைப் பேச மறுப்பதன் மூலம் இயக்குனரின் அரசியல் நமக்குத் தெளிவாகிறது.

ஏற்கனவே “ஏய்டாஸ் சீக்ரெட்” என்கிற இவருடைய முதல் ஆவணப்படம் யூதர்கள் இரண்டாம் உலகப் போரின் போது படுகொலைச் செய்யப்பட்டதை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதற்காக பரவலாகப் பாராட்டப்பட்டதுடன் பல விருதுகளையும் பெற்றார். மேலும் இவர் ஒரு இடதுசாரி முகாமைச் சேர்ந்தவர் என்றும் சொல்லப்படுகிறது. எனவே இவரிடம் இருந்து ஒரு நேர்மையான படைப்பு எதிர்ப் பார்க்கபட்டது. அந்த எதிர்ப்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்யும் விதத்தில் தந்துரா ஆவணப்படம் எடுக்கப்படவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.

பேரா. அருண்கண்ணன்
இயக்குநர்- தொழில் கல்விக்கான லயோலா கல்விக்கழகம்,
லயோலா கல்லூரி,
சென்னை

நன்றி: வளரி, ஜெம்சென் சென்னை இயேசு சபை ஊடக மையம்,
காட்சி தகவலியல் துறை, இலயோலா
கல்லூரி

அறியப்பட வேண்டிய ஆளுமை கட்டுரை – அ.பாக்கியம்

அறியப்பட வேண்டிய ஆளுமை கட்டுரை – அ.பாக்கியம்
சீன கம்யூனிஸ்ட் கட்சியினுடைய முன்னாள் பொதுச் செயலாளர் மற்றும் ஜனாதிபதியாக பணியாற்றிய ஜியாங் ஜெமின் அவர்கள், தனது 96 வது வயதில் 30ஆம் தேதி ஷாங்காய் நகரத்தில் மரணமடைந்தார். அவரைப் பற்றிய சிறு குறிப்பு நேற்றைய தினம் முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தேன்.

Jiang Zemin, former Chinese President who led Communist Party after 1989 crackdown, dies aged 96 | சீனாவின் முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமின் காலமானார்

சீனாவைப் பற்றி சீன பொருட்களை பற்றி அந்நாட்டின் பழைய தலைவர்களை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. நன்கு பிரபலமான புரட்சி நடத்திய தலைவர்களை பரவலாக அறிந்திருப்பார்கள்.

1978 ஆம் ஆண்டு டெங் சியோ பிங் தலைமையில் திறந்த வெளி கொள்கை அறிவிக்கப்பட்டு உலகம் தழுவிய முறையில் சீனாவின் முன்னேற்றம் மிகப்பெரும் மாற்றத்தை சீனத்திலும் உலக அளவிலும் ஏற்படுத்தியது.

இந்த மாற்றத்திற்கான அடித்தளத்தை அமைத்தவர் டெங்சியோ பிங்க் ஆவார். அவருக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற ஜியாங் ஜெமின் அந்தக் கொள்கையை மேலும் முன்னெடுத்துச் சென்றார்.

சீனா கம்யூனிஸ்ட் கட்சியினுடைய பங்கு முக்கியமானதாக இருந்தாலும் வரலாற்றில் தனிநபர் பாத்திரம் தவிர்க்க முடியாத பங்கினை செலுத்தி இருக்கிறது.

இந்த வகையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த பெரும் வளர்ச்சிக்கு, சீன நாட்டின் பெரு மாற்றத்திற்கும், அனுபவம் வாய்ந்த தலைவர்கள், கல்வி கற்றவர்கள், திறமையானவர்கள், களத்தில் நின்று போராட்டத்தின் மூலம் கற்றுக்கொண்டவர்களின் பங்களிப்பு முக்கியமானது.

தலைமை என்பது அறிவு ஜீவித்தனத்தால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. கள அனுபவம், மக்களுடன் இரண்டற கலந்து செயல்படுதல், அமைப்பின் அடிமட்டம் வரை தலைமையில் செயற்களம் அமைத்துக் கொள்ளுதல், இவையெல்லாம் சேர்ந்துதான் ஒரு கட்சியின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாகும்.

தோழர் ஜியாங் ஜெமின் வாழ்க்கை இந்த வகையிலே தான் அமைந்திருக்கிறது. அதனால் தான் சீனாவின் மாற்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய பங்கை அவரால் திறம்பட நடத்திச் செல்ல முடிந்தது.

சீனாவின் தலைமை அமைப்புகள் கீழ்கண்ட முறையில் சீன மக்களுக்கு அழைப்புகளை விடுத்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) மத்திய குழு, சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் (பிஆர்சி), பிஆர்சியின் மாநில கவுன்சில், சீன மக்களின் தேசியக் குழுவின் நிலைக்குழு அரசியல் ஆலோசனை மாநாடு(cppcc) இந்த அறிவிப்பை வெளியிட்டது.

எங்கள் அன்புக்குரிய தோழர் ஜியாங் ஜெமின் இரத்தப் புற்றுநோய் மற்றும் பல உறுப்புகள் செயலிழப்பால் அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் பலனளிக்காமல் இறந்தார் என்பதை முழுக் கட்சிக்கும், முழு இராணுவத்திற்கும் மற்றும் அனைத்து இன மக்களைச் சேர்ந்த சீன மக்களுக்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம் என்று அந்த அறிவிப்பு கூறுகிறது.

தோழர் ஜியாங் ஜெமின் ஒரு சிறந்த தலைவர், முழுக் கட்சி, முழு இராணுவம் மற்றும் அனைத்து இன மக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட உயர் மதிப்பை பெற்றவர்.

ஒரு சிறந்த மார்க்சிஸ்ட், சிறந்த பாட்டாளி வர்க்க புரட்சியாளர், அரசியல்வாதி, இராணுவ மூலோபாயவாதி மற்றும் இராஜதந்திரி, பண்படுத்தப்பட்ட கம்யூனிஸ்ட் போராளி, மற்றும் சீன குணாதிசயங்களைக் கொண்ட சோசலிசத்தை கட்டியமைத்த சிறந்த தலைவர். அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின மூன்றாம் தலைமுறை மத்திய கூட்டுத் தலைமையின் மையமாகவும், மூன்று பிரதிநிதித்துவக் கோட்பாட்டின் முதன்மை நிறுவனராகவும் இருந்தார்.

தமது இளமைப் பருவத்திலேயே ஜியாங் ஜெமின் தேச பக்தி மிக்கவராகவும், ஜனநாயக புரட்சியின் கருத்துக்களாலும் ஈர்க்கப்பட்டார். விடாமுயற்சியுடன் ஜனநாயக புரட்சி பற்றி தெரிந்து கொள்வதற்கான தேர்தலில் இறங்கினார்.

தனது கல்லூரி பருவத்தில் ஜப்பானிய எதிர்ப்பு போராட்டங்களில் பங்கு பெற்று தீவிர தேசபக்தியை வளர்த்துக் கொண்டதுடன் மார்க்சிய உலக கண்ணோட்டத்தையும் பெறுவதற்கான களமாகவும் அவருக்கு இந்த போராட்டம் அமைந்தது.

தனது வாழ்க்கையை தேசத்திற்காகவும் தேசிய விடுதலைக்காகவும் மக்கள் நலனுக்காகவும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று சபதம் எடுத்து செயலாற்று தொடங்கினார்.

1926-ல் ஆகஸ்ட் 17 அன்று யாங் ஷோவின் கிழக்கு நகரத்தில் பிறந்தார். அவரது மாமாவும் வளர்ப்பு தந்தையுமான ஜியாங் ஷாங்கிங் ஒரு புரட்சியாளர். 1939இல் நடைபெற்ற போரில் கொல்லப்பட்டார்.

1947 இல் ஷாங்காய் ஜியோ வா டோங் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு ஜியாங் ஜெமின் உள்ளூர் தொழிற்சாலைகளில் பணிபுரிந்தார். இளைஞர் அமைப்புகளில் இணைந்து இரவு பள்ளிகளில் நடத்தி தொழிலாளர்களை அணி திரட்டினார்.

இளம் தொழிலாளர்கள் தொழில் வல்லுனர்களிடையே புரட்சிகரமான பிரச்சாரங்களைச் செய்வதற்கான பொறுப்பு ஏற்றுக்கொண்டு செயல்பட்டார்.

1949-ல் விடுதலைப் போராட்டம் நடந்த பொழுது ஷாங்காய் பகுதி விடுதலை அடைவதற்கான போராட்டத்திற்கு தொழிலாளர்கள் அணி திரட்டியுடன் அங்கு இருக்கும் தொழிற்சாலைகளை பாதுகாக்கும் பணியிலும் தலைமை ஏற்று ஈடுபட்டார்.

சீனாவில் புரட்சி வெற்றி பெற்று சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சீன மக்கள் குடியரசு அமைக்கப்பட்ட காலத்தில் ஷாங்காய் மாநிலத்தில் உணவு தொழிற்சாலையின் துணை இயக்குனராகவும், ஷாங்காய் சோப்பு தொழிற்சாலையில் முதல் துணை இயக்குனராகவும் செயல்பட்டார்.

இயந்திரத்தின் தேவைகள் கருதி உருவாக்கப்பட்ட இயந்திர அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இயந்திர வடிவமைப்பு இயந்திரப் பிரிவின் தலைவராக பணியாற்றினார்.

1954 ஆம் ஆண்டு சீனாவிற்கு தொழில் நுட்ப வல்லுநர்களும், நிர்வாக திறமை வாய்ந்த ஊழியர்களும் ,கட்டுமான பணிகளுக்காகவும், இயந்திரத் தயாரிப்பு பணிகளுக்காகவும் தேவைப்பட்டனர். தோழர் ஜியாங் ஜெமின் அந்த பொறுப்பை ஏற்று செயல்படுத்த ஆரம்பித்தார்.

1955 ஆம் ஆண்டு மாஸ்கோவில் உள்ள ஸ்டாலின் ஆட்டோமொபைல் ஒர்க்ஸ் தொழிற்சாலையில் பயிற்சியாளராக ஓர் ஆண்டு பணி புரிந்தார்.

1956 ஆம் ஆண்டு சீனாவுக்கு திரும்பியவுடன் டைனமிக் மெக்கானிக் பிரிவின் துணைத் தலைவராகவும், டைனமிக் மெக்கானிக் பிரிவின் துணை தலைமை பொறியாளராகவும், முதன் முதலாக கட்டமைக்கப்பட்ட ஆட்டோமொட்டிவ் ஒர்க்ஸ் மின் தொழிற்சாலையில் இயக்குனராகவும் பொறுப்பேற்று சீனாவின் தொழிற்சாலை வளர்ச்சியில், தொழில் நுட்ப வளர்ச்சியின் அடித்தளமாக செயல்பட்டார்.

1962 ஆம் ஆண்டில் ஷாங்காய் எலக்ட்ரிக்கல் எப்பேர்ட்டஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ன் துணை இயக்குனராக பணியாற்றினார். இயந்திர கட்டுமான தொழில் துறையின் அமைச்சகத்தின் கீழ் இயந்திர கட்டுமான ஆராய்ச்சி பணிகளுக்கு பொறுப்பேற்று புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி காட்டினார்.

1966 ஆம் ஆண்டு அவர் வுவன் இட் பவர் மெஷினரி இன்ஸ்டியூட்டின் இயக்குனராகவும், அந்த பகுதி கட்சியின் செயலாளராகவும் பணி புரிந்தார். அணு மின் உற்பத்தி சாதனங்களை வடிவமைப்பதற்கான ஏற்பாடுகளை திறம்பட செய்து முடித்தார் ஜியாங் ஜெமின்.

1966 ஆம் ஆண்டு கலாச்சார புரட்சியை சீனாவின் துவக்கப்பட்ட பொழுது அவரும் பாதிப்புக்கு உள்ளானார். பல தொழில்நுட்ப அதிகாரிகளை போல் ஜியாங் ஜெமின் 1966 ஆம் ஆண்டு கிராமங்களுக்கு அனுப்பப்பட்டு விவசாய தொழிலாளியாக பல ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பிறகு அவரது வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டது

1970 ஆம் ஆண்டு இயந்திர கட்டுமான தொழில்துறையின் அமைச்சகத்தின் கீழ் பணியாற்றினார். 1971 இல் இந்த அமைச்சகத்தால் ருமானியாவுக்கு அனுப்பப்பட்ட நிபுணர் குழுவின் தலைவராக பொறுப்பேற்று பெரும் பங்கு வகித்தார்.
1973-ல் சீனாவுக்கு திரும்பிய பிறகு பல அமைப்புகளில் துணை இயக்குனராகவும், இயக்குனராகவும் இருந்து தொழில் முன்னேற்றத்தில் பெரும்பாக்காற்றினார்.

1980 ஆம் ஆண்டில் அவர் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விவகாரங்களுக்கான மாநில நிர்வாக ஆணையம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டுக்கான மாநில நிர்வாக ஆணையத்தின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று வணிக மேம்பாட்டில் முக்கிய பங்காற்றினார். சீனத் தலைமையின் வெளிநாட்டு முகமாக செயல்பட்டார்.

இதே காலங்களில் குவாங் டேங்க், புஜியன் மாகாணங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கி அவற்றை வெற்றிகரமாக இயக்கியதும், புதிய பல முன்னோடி திட்டங்களை பொறுப்பேற்று அமுலாக்குவதற்கு காரணமாக இருந்தார்.

1982 ஆம் ஆண்டில் மின்னணு தொழில்துறை அமைச்சகத்தின் துணை அமைச்சராகவும் 1983ல் அமைச்சராகவும் பணியாற்றினார். சீனாவின் மின் அணுவியல் துறையில் ஜியாங் ஜெமின் குறிப்பிடத்தக்க பங்காற்றினார் என்பதை அழுத்தமாக சொல்ல வேண்டும்.

1982ல் 12 வது சீன கட்சி காங்கிரஸில் மத்திய குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1985 இல் ஷாங்காய் மேயராகவும், நகராட்சி குழுவின் துணைச் செயலாளராகவும் பணியாற்றினார். 1987 ஆம் ஆண்டில் 13 வது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸில் மத்திய தலைமைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் ஷாங்காய் மாநிலத்தின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஷாங்காய் நகரின் மேயராக மற்றும் கட்சியில் செயலாளராக பணியாற்றிய போது பல நடவடிக்கை இறங்கி தொழிலாளர்களையும் பொது மக்களையும் வெகு ஜனங்களையும் அணி திரட்டி மன உறுதி ஏற்படுத்தி முன்னேற்றத்தை உருவாக்கினார். நகர்மயம் முறைகளை ஒழுங்குபடுத்தி நகரங்களை மேம்படுத்துவதற்கான பணிகளுக்கு சிறந்த பங்கினை ஜியாங் ஜெமின் செலுத்தினார்.

ஷாங்காய் பெருநகரத்தின் சீர்திருத்தம், திறந்தவெளி கொள்கை, சோசலிசத்தின் நவீனமய கட்டமைப்பு ஆகியவற்றை குறிப்பிடத்தக்க முறையில் நிறைவேற்றிகாட்டினார். கட்சியை கட்டமைப்பதிலும், கலாச்சார நெறிமுறைகளை முன்னேற்றம் ஏற்படுத்துவதிலும், சமூக மேம்பாடுகளை உருவாக்குவதிலும், முக்கியமான தீவிர பங்காற்றினார் தோழர் ஜியாங் ஜெமின் செய்து முடித்தார்.

1989 ஆம் ஆண்டு வசந்த காலத்தின் பிற்பகுதியிலும், கோடையின் தொடக்கத்திலும் சீனாவில் கடுமையான அரசியல் குழப்பம் ஏற்பட்டது. கொந்தளிப்புக்கு எதிரான தெளிவான அரசியல் நிலைப்பாட்டினை எடுத்து சீனாவின் சோசலிச அரசு அதிகாரத்தை பாதுகாப்பது என்ற நிலையை ஷாங்காயில் திறம்பட அமல்படுத்தினார். மக்களையும் பணியாளர்களையும் இணைத்து ஸ்ரத்தன்மையை நிலைநாட்டினார்.

1989 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இருக்கக்கூடிய மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

1990 ஆம் ஆண்டு மக்கள் சீன குடியரசின் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1980 களின் பிற்பகுதியிலும் 1990 இல் முற்பகுதிகளும் சர்வதேச அரங்கிலும் சீனாவிலும் அரசியல் குழப்பங்கள் பெருமளவில் வெடித்தது. உலக சோசலிசம் கடுமையான நெருக்கடிகளை மோசமான முறையில் சந்தித்தது. சீனாவின் சோசலிச நோக்கத்தின் வளர்ச்சி முன்னெப்பொழுதும் இல்லாத சிரமங்களையும், அழுத்தங்களையும் எதிர்கொண்டது. இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஜியாங் ஜெமின் அவர்களின் உறுதித் தன்மை பெரும் பங்காற்றியது.

ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி சீனாவை பொருளாதாரத்தில் அமெரிக்காவிற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் கொண்டு வரும் பணியை வெற்றிகரமாக முடித்தார்.

2008 ஆம் ஆண்டு சீனாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து அந்த போட்டி இதுவரை உலகில் நடைபெறாத அளவிற்கு பிரமாண்டமான முறையில் நடத்திக் காட்டுவதற்கான உந்து சக்தியாகவும் ஜியாங் ஜெமின் இருந்தார்.

கட்சியின் தலைவிதியையும் அரசின் எதிர்காலம் பற்றிய தலைவிதியையும் தீர்மானிக்கக்கூடிய இந்த முக்கியமான வரலாற்று தருணத்தில் ஜியாங் ஜெமின் கட்சியின் மத்திய கூட்டுதலைமைக்கு பொறுப்பேற்று திறம்பட செயல்பட்டு செயலாற்றி நெருக்கடிகளை எதிர் கொண்டார்.

அவர் கட்சி, ராணுவம் மற்றும் சீன மக்களை முழுமையாக நம்பி களத்தில் இறங்கினார். சீன குணாதிசயங்களுடன் சோசலிசத்தின் தன்மையை பாதுகாத்து, சீர்திருத்தம் மற்றும் திறந்தவெளி கொள்கை,சோசலிச நவீன மயமாக்கல் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்வதற்காக அடித்தளத்தை நெருக்கடியான நேரத்திலும் செயல்படுத்தி வெற்றிகண்டார்.

வேலைவாய்ப்பு மறு கட்டமைப்பு செய்தது, வருமான பகுதி சீர்திருத்தங்களை ஏற்படுத்தியது, சோசலிசத்தின் முதற்கட்டத்திற்கான அடிப்படை பொருளாதார அமைப்பை நிறுவியது, பொது சொத்துக்களை அதிகப்படுத்த திட்டமிட்டது போன்ற பெரும் பணிகளுக்கு காரணமாக திகழ்ந்தார்.

சட்ட அடிப்படையிலான நிர்வாகத்தின் முறைகளை நடைமுறைப்படுத்தினார். டெங் சியோ பிங்க் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு நாடு இரண்டு அமைப்புகள் என்ற கொள்கையை
ஜியாங் ஜெமின் அமுல்படுத்தும் பணியை நடத்திக் காட்டினார். ஹாங்காங் , மக்காவு பகுதிகளை சுமூகமான முறையில் சீனாவுடன் இணைத்து மீள் வாழ்வை உருவாக்கினார். சுதந்திரமான அமைதி கொள்கையை உருவாக்கி சீனாவின் ராஜதந்திரத்தில் புதிய தளத்தை அமைத்தார்.

ராணுவத்தை நவீன மயமாக்குவதும், அமைதி காலத்திலும், போர்க்காலத்திலும் ராணுவ செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்று உத்திகளை வலியுறுத்தி செயல்பட்டார். ராணுவத்தை குடிமக்கள் ஆதரவுடன் தேசிய பாதுகாப்பில் அணி திரட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். அரசாங்கத்திற்கும் ராணுவத்திற்கு உறவு, ராணுவத்திற்கும் மக்களுக்கும் இடையிலான உயிரோட்டமான, மிகவும் ஆழமான முறையில் ஒத்துழைப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று முன்னிலைப்படுத்தி செயல்பட்டார்.

மார்க்சிய சிந்தனை கொள்கையை கடைசி வரை உறுதியாக பின்பற்றி வந்தார். கட்சியின் அடிப்படை கோட்பாடுகளை அவர் நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருந்தார். முழு கட்சியின் ஞானத்தையும் ஒருங்கிணைத்தார்.

16வது கட்சி காங்கிரஸில் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்த பொழுது கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மட்டும் விலகினார். சிக்கலான நிலையில் சர்வதேச நிலமை இருந்த பொழுது, தேசிய வளர்ச்சி மற்றும் ராணுவ வளர்ச்சியை எதிர்கொள்ளும் கடுமையான பணிகளை கணக்கெடுத்துக்கொண்டு அவரை மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராக நீடிக்க வேண்டும் என்று மாநாடு கேட்டுக் கொண்ட அடிப்படையில் நீடித்தார்.

2004 ஆம் ஆண்டு ராணுவ தலைமை ஆணையராக இருந்தும் விலகினார்.

பொறுப்பிலிருந்து விலகிய பிறகும் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவுகளை அமலாக்குவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். உடல்நிலை ஒத்துழைக்கிற வரை அவரது களப்பணிகள் நீடித்தது. கம்யூனிஸ்டுகளின் தலைமை பணி மேஸ்திரித்தனமான பணிகள் அல்ல கடும் எதிர்ப்புகளை களத்தில் எதிர்கொண்டு மக்களை அழைத்துச் செல்வதற்கான பணி என்பதற்கு தோழர். ஜியாங் ஜெமின் உலகின் சிறந்த உதாரணமாக நம்முன் காட்சியளிக்கிறார்.

– அ.பாக்கியம்.

நூல் அறிமுகம்: ஷோபா சக்தியின் ‘வேலைக்காரிகளின் புத்தகம்’ – பொன் விஜி

நூல் அறிமுகம்: ஷோபா சக்தியின் ‘வேலைக்காரிகளின் புத்தகம்’ – பொன் விஜி
நூல் : வேலைக்காரிகளின் புத்தகம்
ஆசிரியர் : ஷோபா சக்தி
விலை: ரூ. 65/-
பக்கம் : 145

வெளியீடு : கருப்புப் பிரதிகள்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

நண்பர்களே,
இப்படியாக எழுதுகிறார் ஆசிரியர் *ஷோபா சக்தி * அவர்கள்., *1978ல் தான் பேருந்து வந்தது. 1981ல் தான் மின்சாரம் வந்தது. வறுமையிலும் அறியாமையிலும் உழன்றுகொண்டிருந்த அந்த மக்களிடையே 1984ல் முதலாவது வெடி விழுந்தது. * ஆம் நண்பர்களே அது தான், இலங்கையின் வடபகுதியில் இருக்கும் ஒரு சிறிய தீவாகிய *அல்லைப்பிட்டி * என்னும் கிராமம்.

எட்டுத் தலைப்புகளில் கீழ் *கட்டுரையாகப்* பல சம்பவங்களை இங்கே நினைவு படுத்துகிறார் ஆசிரியர். குறிப்பாகத் தமிழ் மக்கள் நிட்சயம் வாசிக்க வேண்டிய கட்டுரைகள், குறிப்பாக இலங்கைத் தமிழர்கள். *அல்லைப்பிட்டிக் * கிராமத்தின் அனைத்து விபரங்களையும் மிகக் கூர்ந்து கவனித்து, அதனைத் தரவுகள் மூலம் பதிவு செய்வதால், அக்கிராமத்தில் நிலைப்பாட்டை முற்று முழுதாக அறியக்கூடிய உள்ளது. ஒரு பெயர் சொல்லக்கூடிய கல்வியாளரையோ, தொழில் முனைவரையோ தன்னும் தந்திராத *சபிக்கப்பட்ட கிராமமாக*எங்கள் முன் கொண்டுவருவது, அதன் நிலைப்பாட்டை சிந்திக்க வைக்கிறது என்றே சொல்லலாம்.

அப்போ நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தில், இலங்கை இராணுவம் எப்படி தங்களது கிராமத்தை முற்றுகையிட்டது, அதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள், இருதரப்பினரதும் கொடூர செயல்களினால் *மக்கள் * பட்ட துன்பங்கள், இதற்கு தூது போன குழுக்கள், அமைச்சர்கள் இன்னும் பல *தெரியப்பாடத * செய்திகளை ஆசிரியர் *ஷோபா சக்தி * அவர்கள் துனிவுடன், அப்போதைய காலகட்டங்களில் எழுத்தாக ஓங்கி எழுதியது மிகவும் பாராட்டத்தக்கது.

ஒடுக்கப்பட்ட மக்கள் படும் துன்பங்களையும், அவர்களைப் பார்த்து *உனது வாழ்க்கையில் நீ ஒருபோதும் உயர்ந்த தலைமைப் பீடத்திற்கு வரவே முடியாது * என்ற ஆதிக்க சாதியினரின் பலகால வழக்க முறைகளைக் கடுமையா எதிர்க்கும் வகையில், அதற்கு இன்றும் அது எப்படி *புலம்பெயர்ந்த ** நாடுகளிலும் தொடர்கிறது என்பதற்கு, மிகக் கூர்ந்து கவனித்த பார்வையை இக் கட்டுரைகள் மூலம் வெளிப்படுத்துகிறார். இதற்குப் பல முன் உதாரணங்களை ஆவணத்துடன் பதிவு செய்கிறார் *ஷோபா சக்தி *.

திருத்தியமைக்கப்பட்ட *யாழ் பொது நூலகம் * என்ன காரணத்தினால் குறிக்கப்பட்ட நாளில் திறக்கப்படாமல் பிற்போடப்பட்டது. இதன் சூத்திரதாரிகள் யார்? இங்கேயும் *சாதி * என்ற பாம்பு படமெடுத்து நின்றதன் பின்னணி. அதற்கு விடுதலைப் புலிகள் சொன்ன காரணம், இது போன்ற பல *திடுக்கிடும் * செய்திகளை விரிவாகத் தருகிறார் ஆசிரியர்.

சாதியும் சதியும் என்ற தலைப்பின் கீழ், ஒரு *தலித் * சமூகத்தைச் சேர்ந்தவர், ஒரு பிரபல்யமான பாடசாலை அதிபரானார். அதிலிருந்து அவருக்கு ஏற்பட் இடைஞ்சல்கள், பயமுறுத்தல்கள், மற்றும் அவரது சாதி, மத பேதமற்ற முன்னெடுப்புக்களை ஏற்கமுடியாத எதிர் மனிதர்கள் , இது போக இறுதியாக அவரது *உயிரைக்கூட * எடுத்துவிட்ட சமுதாயம், இவை அனைத்தையும் ஆதாரத்துடன் தருகிறார் ஆசிரியர். ஒதுக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கை, அவர்களது கல்வி, தொழில், வதிவிடம் இவற்றை வாசிக்கும் போது, இப்படியான கொடுமைகளைத் தாங்கி நின்ற, *பனைமரம்* போல் உறுதியான, தங்களது வாழ்க்கைப் பயணத்தை எப்படித்தான் முகம் கொடுத்தார்கள் என்று வேதனைப்பட வைக்கின்றது நண்பர்களே.

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து நிலைமைகளையும் விசாரிக்கச் சென்ற பிலிப் ஆல்ஸ்டன் * என்பவர் 2005 நவம்பர் 28 தொடங்கி டிசம்பர் 6 திகதி வரையிலான *கள ஆய்வு * இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பல வேறுபட்ட சிக்கல்கள் பற்றிய விரிவான கட்டுரையை ஆதாரத்துடன் பதிவு செய்துள்ளமை, முரன்பட்ட பல கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல் உள்ளது. ஐ. நா சபை யாருடைய கைப்பொம்மையாக ஆட்டப்படுகிறது என்பதற்கு சிறந்த உதாரணங்கள் மூலம் தெளிவுபடுத்துகிறார் *ஷோபா சக்தி *.

தமிழ் மக்களிடம் சொல்லப்பட்ட அடிப்படைக் கருத்துக்கள், கொள்கைகள், நாம் எதை நோக்கிப் பயணிக்கிறோம் என்ற கொள்கை காலப்போக்கில் ஏகாதிபத்தியத்துடன் கைகுலுக்குமளவுக்குச் சென்று விட்டதை பல கோணங்களில் தந்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்தியா உட்பட உலக நாடுகளின் பங்கு பற்றி பதிவு செய்கிறார் ஆசிரியர்.

குறிப்பாக *சி. புஷ்பராஜா * அவர்கள் எழுதிய *ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்* என்ற நூலின் பிரதியை முன்வைத்துப் பல கோணங்களில், அதுவும் இலங்கை சுதந்திரம் (1948)அடைந்த காலகட்டத்திலிருந்து (2007)இக் காலகட்டம் வரையிலான அரசியல் நகர்வுகளை வரிசைப்படுத்த அவர் தவறவில்லை.

இலங்கையில் நடைபெற்ற அரசியல் *கொலைகள் * மற்றும் இயக்கங்களிடையே ஏற்பட்ட மோதல்கள், ஆட்கடத்தல்கள், இலங்கை அரசால் திட்டமிடப்பட்ட தமிழின அழிப்பு, சிறைச்சாலைக் கொலைகள் இப்படியாகப் பலவற்றை வாசித்து உள்வாங்கிக் கூடிய ஒரு சிறந்த படைப்பு என்றே சொல்லலாம்.

1947ல் வெளிவந்த, *ஜோன் ஜெனே* என்ற ஆசிரியரால் எழுதப்பட்ட *Les Bones * (பணிப் பெண்கள்) நாடகத்தை பார்த்த எழுத்தாளர், தனது *Euro Disneyland* ல் வேலை செய்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். ஆரம்ப ஐரோப்பிய அகதி * வாழ்க்கையில் இப்படியான சந்தர்ப்பம் சிலருக்கு அமைவதுண்டு, ஆனால் யாருமே அதனை வெளிக் கொண்டு வருவதில்லை.

இரண்டு வேலைக்காரிகளுக்கும் எஜமானிக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் எனத் தோன்றுகின்றது. இருந்தும் இதனைப் படிக்கும் போது, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்பட்ட அடக்கு முறைகளைத் தட்டி எழுப்பியதற்குப் பல நூல்கள் ஆதாரமாக இருக்கின்றன. அதேபோல் இந்த நாடக நூலும் *வேலைக்காரி* களுக்கே மிகப் பொருத்தமாக இருப்பதை *ஷோபா சக்தி * இங்கே கோடிட்டுக் காட்டத் தவறவில்லை.

இறுதியாக, இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் நடைபெற்ற யுத்தத்தின் பல வகைப்பட்ட, அறிந்திராத, ஒளிக்கப்பட்ட, ஒருபக்க சார்பு வாதங்கள், இயக்கங்களின் கட்டமைப்புக்கள், எதிர் வினைகள், ஆதிக்க சாதியினரின் மேலாண்மை இது போன்ற சகல விதமான தகவல்களையும் அறிய அவசியம் வாசியுங்கள் நண்பர்களே…

– பொன் விஜி – சுவிஸ்

குறும்பட விமர்சனம்: மதி சுதாவின் வெடியன் மணியமும் இடியன் துவக்கும் – பாரதிசந்திரன்

குறும்பட விமர்சனம்: மதி சுதாவின் வெடியன் மணியமும் இடியன் துவக்கும் – பாரதிசந்திரன்

சோகங்கள் நிறைந்த சூழலுக்குள்ளும் பாசம் மூச்சை இழுத்துப் பிடித்து நிறுத்தி வைத்திருக்குமா என்றால், பாசம் எலும்பு மஞ்சை வரை ஊடுருவி உயிரைக் கையில் ஏந்தி நிற்கும். உலக உயிர்களின், மிக மிஞ்சிய வாழ்வின் எல்லையே பாசம் தான். பாசம் பல இடங்களில்…
அக்னிபாத் நாசகரமான நயவஞ்சகமான திட்டம் கட்டுரை – தமிழில் : ச.வீரமணி

அக்னிபாத் நாசகரமான நயவஞ்சகமான திட்டம் கட்டுரை – தமிழில் : ச.வீரமணி
ராணுவத்திற்கு வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையில் மிகவும் தீவிரமான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் அக்னிபத் திட்டம், இளைஞர்கள் மத்தியிலிருந்தும், முன்னாள் ராணுவத்தினரின் பல்வேறு வகையினரிடமிருந்தும் மிகவும் விரிவான அளவில் எதிர்ப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு கடும் எதிர்ப்புகள் இருந்தபோதிலும் ஒன்றிய அரசாங்கம் இந்தத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று ரணுவ அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டிருக்கிறது.

இந்தத் திட்டத்திற்கு ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிகள் மற்றும் ராணுவத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பலரும் கடும் ஆட்சேபணைகளைத் தெரிவித்திருக்கிறார்கள். இவற்றில் மிகவும் முக்கியமானது, ‘அக்னிவீரர்கள்’ (‘agniveers’) என்று பகட்டாரவாரமாகப் பெயரிட்டுள்ள இந்த நாசகர நயவஞ்சத் திட்டத்தை இளைஞர்கள் அதிலும் குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள் மிகச் சரியாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

குறைந்தகாலத்தில் ஒப்பந்த முறையில் ராணுவத்தினரைத் தெரிவு செய்வது அவர்களின் தரத்தையும், செயல் நோக்கத்தையும் பாதித்திடும் என்றும், இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களில் 25 விழுக்காட்டினர் மட்டுமே நீண்ட காலத்திற்கு நிரந்தரமான ராணுவ வீரர்களாக மாற்றப்படுவார்கள் என்பது இவர்களுக்கிடையே உள்ளார்ந்தரீதியாக பாகுபாட்டை ஏற்படுத்திவிடும் என்றும், நான்கு ஆண்டுகள் கழித்து எவ்விதமான பணிப்பாதுகாப்பும் ஓய்வூதியமும் இன்றி அவர்களை வீதிகளில் தூக்கி எறிவது அவர்களுக்கு நிச்சயமற்ற எதிர்காலத்தை ஏற்படுத்திடும் என்றும் மிகச்சரியாகவே வாதங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்தத் திட்டத்தை அரசுக்கும் சமூகத்திற்கும் மிகவும் ஆபத்தானதாக மாற்றக்கூடிய விதத்தில் ஆழமான பல அம்சங்கள் இதில் ஒளிந்திருக்கின்றன. அக்னிபாத் திட்டம் ஆட்சியாளர்களால் இந்திய அரசையும், அதன் நிறுவனங்களையும் இந்துத்துவா சித்திரத்துடன் பொருத்துவதற்கான, அவ்வாறு மாற்றியமைப்பதற்கான பெரிய திட்டம் ஒன்றின் பகுதியாகப் பார்க்கப்பட வேண்டும். இந்துத்துவா ஆட்சியாளர்கள், அரசின் மற்ற அங்கங்களைப்போலவே ராணுவத்தையும் தங்களின் சித்தாந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் மாற்றியமைப்பதற்காகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ராணுவப் பயிற்சி பெற்ற பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் ஒவ்வோராண்டும் ராணுவத்திலிருந்து கழட்டிவிடப்பட்டு சமூகத்துடன் இணைவது என்கிற உண்மை ஒருவிதத்தில் இந்து சமூகத்தை ராணுவமயப்படுத்தும் (militarizing Hindu society) சாவர்க்கரின் இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கான வழியாகும்.

இதனுடன் சேர்த்து, ராணுவத்தின் உச்சபட்ச தலைமையான முப்படைத் தளபதி (Chief of Defence Staff-CDS) பதவி நியமனம் செய்யப்படும் விதமும் பெரிய அளவில் அரசியல்மயமாக்கும் விதத்திற்கு விரிவானவகையில் வழிதிறந்துவிட்டிருக்கிறது. ‘அக்னிபத்’ திட்டத்தின்கீழ் தேர்வுசெய்யப்படும் ‘அக்னிவீரர்கள்’ எப்படி பயிற்றுவிக்கப்படப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் டோவல், “இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் அக்னிவீரர்களிலிருச்து தேச உணர்வுகளைப் பெற்றிருக்கக்கூடிய, தேச நலன்களைப் பாதுகாக்கக்கூடிய சிறந்த பிரஜைகள் உருவாவதை நீங்கள் பார்ப்பீர்கள்,” என்று கூறியிருக்கிறார். அவர்கள் புகுத்தப்போகும் தேசியவாதம் “இந்துத்துவா தேசியவாதமா” என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ராணுவத்தில் சேரவேண்டும் என்று துடிப்புடன் இருந்த இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கோபாவேசத்தை எதிர்கொள்ளமுடியாது, அரசாங்கம் அவசரகதியில் சில அறிவிப்புகளை அறிவித்திருக்கிறது. தேர்வு செய்யப்படும் அக்னிவீரர்களில் 10 விழுக்காட்டினருக்கு ஒன்றிய ஆயுதப் படைப் பிரிவுகளிலும், ராணுவ உற்பத்திப் பிரிவுகளிலும், இதர நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு உத்தரவாதப்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது. அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சகங்களும் இதேபோன்று உறுதிமொழிகளை வாரி வழங்கியிருக்கின்றன. எனினும், இவை எதுவும் கோபாவேசத்துடன் கிளர்ந்தெழுந்துள்ள இளைஞர்களைக் குளிர்விக்கவில்லை. ஆட்சியாளர்களின் இத்தகைய உறுதிமொழிகளின் இலட்சணம் என்ன என்பது முன்னாள் வீரர்கள்களுக்கும், இவர்களுக்கும் நன்கு தெரியும்.

ஏற்கனவே ஒன்றிய அரசாங்கத்தின் ‘சி’ பிரிவு பணியிடங்களில் 10 விழுக்காடும், ‘டி’ பிரிவு பணியிடங்களில் 20 விழுக்காடும் முன்னாள் ராணுவத்தினருக்கு இட ஒதுக்கீடு உண்டு. ஆனாலும் ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்படும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறையின் கீழ் உள்ள மீள்குடியேற்ற பொது இயக்ககம் (Directorate General Resettlement) வெளியிட்டுள்ள தரவின்படி, இந்தப் பணியிடங்களுக்கான இட ஒதுக்கீடுகள் எப்போதுமே நிரப்பப்பட்டதில்லை.

தற்போது ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் உள்ள ‘சி’ பிரிவின்கீழ் உள்ள மொத்தப் பணியிடங்களில், முன்னாள் ராணுவத்தினர் வெறும் 1.29 விழுக்காடு அளவிலும், ‘டி’ பிரிவு பணியிடங்களில் நாடு முழுதும் உள்ள 77 துறைகளில் வெறும் 2.66 விழுக்காடு அளவிலும் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கின்றன.

இதேபோன்றேதான் பிறதுறைகளின் நிலையுமாகும். ஒன்றிய துணை ராணுவப் படையில் முன்னாள் ராணுவத்தினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். ஆனால் 2019 ஜூன் 19ஆம் தேதி வெளியாகியுள்ள கணக்கின்படி இவர்களில் ‘சி‘ பிரிவு பணியிடங்களில் வெறும் 0.47 விழுக்காட்டினரும், ‘பி’ பிரிவு பணியிடங்களில் 0.87 விழுக்காட்டினரும், ‘ஏ’ பிரிவு பணியிடங்களில் 2.20 விழுக்காட்டினரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசாங்கத்தின் துறைகளில் முன்னாள் ராணுவத்தினர் பணிபுரிவது இவ்வளவு பரிதாபகரமாக இருக்கும் இந்த நிலையில்தான், அக்னிவீரர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் வீதிகளில் தூக்கி எறியப்படும்போது அவர்களுக்கு தனியார் துறைகளில் பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என்று அரசாங்கம் உறுதியளித்துக் கொண்டிக்கிறது.

அரசாங்கம் நாட்டிலுள்ள 85 இந்தியக் கம்பெனிகளைக் கேட்டுக்கொண்டதற்கிணங்க நாட்டிலுள்ள பெரும் கார்ப்பரேட்டுகளும் அக்னிபத் திட்டத்தைப் பாராட்டியிருக்கிறார்கள். அக்னிபத் திட்டத்தை வரவேற்று டாட்டா குழுமத்தைச் சேர்ந்த என்.சந்திரசேகரன், மஹிந்த்ரா குழுமத்தைச் சேர்ந்த ஆனந்த் மஹிந்த்ரா, ஆர்பிஜி குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, ஜேஎஸ்டபிள்யு குழுமத்தைச் சேர்ந்த சஜ்ஜன் ஜிண்டால் முதலானவர்கள் அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனந்த் மஹிந்த்ரா தன்னுடைய அறிக்கையில், “அக்னிவீரர்கள் பெறும் ஒழுக்கமும் திறமைகளும் அவர்களைச் சிறந்த வேலையாட்களாக மாற்றிடும். இத்தகைய பயிற்சி பெற்றோரிலிருந்து, திறன்மிக்க இளைஞர்களைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது, வரவேற்கத்தக்கது,” என்று மேலும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்துத்துவா-கார்ப்பரேட் பேர்வழிகளின் கூட்டணி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். இந்தத் திட்டத்தை கார்ப்பரேட் துறை புகழ்ந்து துதிபாடியிருக்கும் விதத்திலிருந்தே, ராணுவம் இப்போது இவர்களின் பெரிய தொழிற்சாலைகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் பயிற்சிப் பள்ளிகளாக மாறியிருப்பதாகவே தோன்றுகிறது. எனினும், பல்லாயிரக்கணக்கான முன்னாள் ராணுவத்தினரும், ராணுவ அதிகாரிகளும் கூறுவதுபோல், எதார்த்த உண்மை என்னவென்றால், கார்ப்பரேட்டுகள் முன்னாள் ராணுவத்தினரை வேலைக்கு எடுத்துக்கொள்வது என்பது மிகவும் அற்பமாகும்.

அக்னிபத் திட்டத்திற்கு கார்ப்பரேட்டுகள் ஆதரவு அளிப்பதற்கான காரணம் வேறாகும். ராணுவத்திற்கான உற்பத்தித் தொழிற்சாலைகள் தனியார்துறைக்குத் தாரை வார்க்கப்பட்டிருப்பதால், டாட்டாக்கள், மஹிந்த்ராக்கள் போன்ற பெரிய அளவிலான தொழில் நிறுவனங்கள் ராணுவ உற்பத்தித் திட்டங்களை எளிதாகப் பெற்றுக்கொண்டுவிடும். அப்போது ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தினரைப் பணியில் அமர்த்துவதற்கு இவ்வாறு வீதியில் எறியப்படும் அக்னிவீரர்கள் அதிகமான அளவில் தேவைப்படுவார்கள். அவர்களைத் தங்களின் எதிர்கால நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு கார்ப்பரேட்டுகள் வெளிவரும் ராணுவத்தினரைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என யோசித்துக்கொண்டிருக்கக்கூடிய அதே சமயத்தில், இந்துத்துவா சக்திகளோ வேலையிலிருந்து தூக்கி எறியப்பட்டு விரக்தியுடன் வெளிவரும் ராணுவத்தினரைத் தங்களின் மதவெறி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனப் பார்க்கின்றன.

பாஜக தலைவர்களில் ஒருவரான கைலாஷ் விஜயவர்க்யா இவர்கள் குறித்துக் கூறியதைப் பார்க்க வேண்டும். பாஜக அலுவலகத்திற்குப் பாதுகாப்பிற்கு ஆட்களை வாடகைக்கு அமர்த்த வேண்டியிருந்தால், அவர் அக்னிவீரர்களுக்கு முன்னுரிமை கொடுப்பாராம். பஜ்ரங் தளத்திற்கும், இந்துத்துவா படைக்கும் ஆட்களைத் தேர்வு செய்யும்போதும் இதேபோன்று முன்னுரிமை விரிவாக்கப்படுமாம்.

அக்னிபத் திட்டமானது இந்திய அரசின் கேந்திரமான நிறுவனமான ராணுவத்தின் மீதான தாக்குதலாகும். இது எதிர்க்கப்பட வேண்டியதும், இதற்கெதிராகக் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியதும், இது திரும்பப்பெறப்பட வேண்டியதும் அவசியமாகும்.

(ஜூன் 22, 2022)
நன்றி : பீப்பிள்ஸ் டெமாக்ரசி

“அக்னிபாத்” திட்டம் கட்டுரை – கவிதா ராம்குமார்

“அக்னிபாத்” திட்டம் கட்டுரை – கவிதா ராம்குமார்
வருங்கால இந்தியாவின் பலமா? பலவீனமா?

வாங்க பேசலாம்….

ஒரு தலைமுறை உயர் பொறுப்புகளுக்கு செல்வது தடைபட்டு சமூக படிநிலை உடையும் அபாயமும். இந்திய ராணுவத்தில் தேசத்திற்காக தனது உயிரையும் பொருட்படுத்தாமல் நாட்டின் பாதுகாப்பிற்காக தன்னை அர்ப்பணிக்கும் இளைய தலைமுறைகளின் கனவு இத்திட்டத்தின் மூலம் சிதைந்துவிடும் என்ற அச்சமும் ஏற்படுகின்றது.

அக்னிபாத் குறித்து மத்திய அரசு சொல்வது என்ன ?

“அக்னிபாத்” திட்டம் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் இந்திய ராணுவத்தை உலகத்தரம் வாய்ந்த ராணுவம் ஆக மாற்றவும். “அக்னிபாத்” திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தை இந்திய மக்களைப் போலவே இளமையாக ஆக்கிடவும். சேவையின் போது பெற்ற திறன்கள் மற்றும் அனுபவங்கள் இளைய தலைமுறைகளுக்கு பல்வேறு துறைகளிலும் வேலைகளை வழங்கும் என்று கூறப்படுகிறது.

அக்னிபாத் திட்டத்தின் விவரங்கள்…..

அக்னிபாத் திட்டம் இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் 4 ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள், இளம்பெண்களை சேர்க்கும் திட்டம் ஆகும். பணியில் சேர்வதற்கு முன்பு 6 மாத காலத்திற்கு பயிற்சி வழங்கப்படும். 17.5 வயது முதல் 21 வயதிலான ஆண், பெண் இருபாலரும் இத்திட்டத்தில் இணையலாம். இந்த வருடத்தில் இணைபவர்களுக்கு மட்டும் வயது வரம்பு 23 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம் ஆகும். உடற்தகுதியை பொறுத்தவரை ராணுவத்தில் சேருவதற்கு இப்போது நிர்ணயிக்கப்பட்டிருக்கும் உடற்தகுதிகளே அக்னிபாத் திட்டத்தில் சேருபவர்களுக்கும் பொருந்தும். அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு முதலாம் ஆண்டில் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளமும், கடைசி, அதாவது 4-வது ஆண்டில் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளமும் வழங்கப்படும்.இந்த சம்பளத்தில் 30% பிடித்தம் செய்யப்பட்டு, சேவா நிதியாக மத்திய அரசின் பங்களிப்புடன் (அதே 30% அளவிலான தொகை) பணி நிறைவின் போது ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா ரூ. 11.7 லட்சம் வரிப்பிடித்தமின்றி வழங்கப்படும்.

இராணுவ ஆர்வலர்கள் ஏன் இந்த திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள்…..

பாதுகாப்புப் படையில் 4 ஆண்டுகள் பணியாற்றும் இளைஞர்களில் 25 சதவீதம் பேருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், பணி நீட்டிப்பு செய்யப்படாமல், 21 அல்லது 23 வயதில் ராணுவப் பணியிலிருந்து வெளியேறும் தங்களது எதிர்காலம் என்னவாகும் என்று கேட்டு இளைஞர்கள் கொதித்தெழுகிறார்கள்.17.5 வயதில் ராணுவத்தில் வேலை என்று மத்திய அரசு அறிவித்திருப்பதால், 10 அல்லது பனிரெண்டாம் வகுப்பு முடித்ததுமே, இந்தப் பணியில் சேரும் இளைஞர்களின் மேற்படிப்பு என்ற வாய்ப்பு / கனவு பறிக்கப்படும். ஏற்கெனவே, உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை நாட்டில் குறைவு. இந்த திட்டத்தால் உயர் கல்வி பயிலாத இளைஞர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாக கண்ணெதிரே அதிகரிப்பதைப் பார்க்க முடியும். காரணம் மத்திய அரசின் ‘அக்னிபத்’ திட்டமாக இருக்கும்.

மறுபக்கம், ராணுவ வேலை என்பதால், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலிருக்கும் பெற்றோர் உயர்கல்வி படிக்க வைக்காமல் பிள்ளைகளை அக்னிவீரர்களாக மாற்றும் அபாயமும் உருவாகலாம்.

ஒவ்வொரு ஆண்டும் 46 ஆயிரம் பேர் அக்னிவீரர்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களில் 25 சதவீதம் பேருக்கு மட்டுமே நிரந்தரப் பணி வழங்கப்படும். எஞ்சிய 75 சதவீதம் பேரும் கையில் சேவா நிதியுடன் மீண்டும் வேலையில்லா இளைஞர்களின் கூடாரத்துக்கே அனுப்பி வைக்கப்படுவார்கள். உயர் கல்வியும் கிடைக்காமல், நாட்டு நடப்புக்கு எந்த தொடர்பும் இல்லாத ராணுவப் பயிற்சி முடித்த இவர்கள் எந்த வேலைகளுக்கு அமர்த்தப்படுவார்கள்? இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் குறையுமா? கூடுமா? என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா பொறுத்திருந்து பார்க்கலாம்.

– கவிதா ராம்குமார்

நூல் பதிப்புரை : இ.பா. சிந்தனின் உக்ரைனில்  என்ன நடக்கிறது? – அ. பாக்கியம்

நூல் பதிப்புரை : இ.பா. சிந்தனின் உக்ரைனில் என்ன நடக்கிறது? – அ. பாக்கியம்
நூல் : உக்ரைனில் என்ன நடக்கிறது ?
ஆசிரியர் : இ.பா. சிந்தன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : 100.00
தொடர்பு எண் ; 044 24332924
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும் : thamizhbooks.com

உக்ரைன்-ரஷ்ய போர் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. ரஷ்யாவின் யுத்தம் நியாயமானதா? உக்ரைனில் நடக்கக்கூடிய குழப்பங்களுக்கு யார்காரணம்? இது உலக யுத்தமாக மாறுமா? இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு நாட்டின் மீது இப்படிப்பட்ட தாக்குதல் நடந்ததே இல்லை? என்பது உண்மையா? அமெரிக்காவும் ஐரோப்பாவும் நடத்தக்கூடிய ஊடக பிரச்சாரத்தில் எந்த அளவு உண்மை இருக்கிறது? போன்ற ஏராளமான கேள்விகளுக்கு இந்த புத்தகம் தெளிவாக பதில் அளிக்கிறது.

இரண்டாம் உலகயுத்தத்தில் ஈடுபடாத அமெரிக்கா பாதிக்கப்பட்ட ஐரோப்பாவை பயன்படுத்தி எப்படி மேலாதிக்கம் பெற்றது. 90-ம் ஆண்டுகளுக்குப்பிறகு சோவியத் யூனியன் சிதைந்தவுடன் அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை உலகம் முழுவதும் நேட்டோ ராணுவ பலத்தால் எப்படி அதிகரித்துக் கொண்டது. சோவியத் யூனியனை சிதைத்தபிறகு ரஷ்யாவை அமெரிக்கா எப்படி தனது நாட்டு ராணுவ பலத்தால் சுற்றி வளைத்தது. இதற்கான அரசியல் பொருளாதார காரணிகளை புத்தகம் ஆய்வு செய்கிறது. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு யுத்தமற்ற உலகை உருவாக்க வேண்டுமென்று அமைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை அதில் எவ்வாறு தோல்வி கண்டது என்பதையும் இப்புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.

அமெரிக்கா உலகை கபளீகரம் செய்யக்கூடிய முயற்சியின் விளைவாக மத்திய கிழக்கு நாடுகளில் பலவற்றை அழித்து ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் சிக்கி கொண்டதையும், அதனால் உலகின் மேலாதிக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் புத்தகம் ரத்தினச் சுருக்கமாக அறிவிக்கிறது.

சிதைந்துபோன ரஷ்யா மீண்டும் அரசியல் பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் தன்னை பலப்படுத்திக் கொண்டது அமெரிக்காவிற்கு மிகப் பெரும் சவாலாக அமைந்தது. அதேநேரத்தில் சப்தமின்றி, அமைதியான முறையில் சீனாவின் முன்னேற்றம் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு மேலும் ஒரு அச்சுறுத்தலாக அமைந்தது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக நேட்டோ இராணுவத்தை பயன்படுத்தியது.
குறிப்பாக ஐரோப்பாவில் பலம்பொருந்திய ஜெர்மனியின் முன்னேற்றத்தை அமெரிக்கா திட்டமிட்டு தடுத்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு எடுத்த முயற்சிகளை ஜெர்மனி எதிர்கொண்டது. இந்த விஷயங்களை பொருளாதார ரீதியிலான ஒப்பந்தங்களுடன் இணைத்து இப்புத்தகம் அமெரிக்கா வின் சதி வேலைகளை அம்பலப்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவினால் அடிக்கடி விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகளும், பெட்ரோ டாலர் மூலமாக வணிகத்தின் மீது செலுத்தும் ஆதிக்கத்தையும் ரஷ்யா, சீனா, ஜெர்மனியும் பங்குபெற்று பின்னுக்குத் தள்ளியது என்பதையும் அன்னிய செலவாணி பரிமாற்றத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய மாற்றத்தையும் இப் புத்தகத்தின் மூலமாக அறிந்துகொள்ள முடிகிறது.

இந்தப் பின்னணியுடன் தான் உக்ரைன் ரஷ்ய போரை இந்தப் புத்தகம் விளக்குகிறது.யுத்தம் நேரடியாகவும், தகவல்தொழில்நுட்ப வழியாகவும், பொருளாதார அடிப்டையிலும் என மூன்று தளங்களில் நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவும் ஐரோப்பாவும் சேர்ந்து உலகம் முழுவதும் ஒரு தரப்பான செய்தியையே வெளியிடுவதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

ஐரோப்பா கண்டத்திலேயே ரஷ்யாவிற்கு அடுத்து அதிக நிலப்பரப்பைக் கொண்ட நாடுஉக்ரைன். இதன் பூகோள எல்லைகள் எப்படி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் யாரால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.

சோவியத் நாட்டின் சிதைவுக்கு பிறகு ரஷ்யாவிற்கு அருகாமையில் இருக்கக்கூடிய உக்ரைனை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக எடுத்த முயற்சிகளின் ஒரு விளைவுதான் அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அடிப்படையான காரணமாகும்.

உக்ரைனில் வாழக்கூடிய மக்களில் ரஷ்ய இனமக்கள் 30% பேர் வாழ்கிறார்கள். இந்த ஒற்றுமையில் கை வைப்பதற்கான வழக்கமான சதி வேலைகளை, ரஷ்ய ஆதரவு ஆட்சியாளர்களுக்கு எதிராக என்பதைவிட தன்னுடைய திட்டத்திற்கு அடிபணியாத ஆட்சியாளருக்கு எதிராக, ஜனநாயகம் இல்லை என்ற போர்வையில் பல கோடி டாலர்களை ஒதுக்கி கலவரத்தை தூண்டிவிட்டு குழப்பத்தை உருவாக்கினார்கள்.

தனக்குப் பிடிக்காத ஆட்சியை எதிர்ப்பதற்காக நவபாசிச சக்திகளை உருவாக்கி அவர்களுக்கு ஆயுதங்களையும், நிதி உதவிகளையும், அண்டை நாட்டில் புகழ் இடங்களையும், ஏற்படுத்திக் கொடுக்க கூடிய வேலைகளை அமெரிக்காவின் ஆட்சி கவிழ்ப்பு கும்பல் அற்புதமாக செயல்படுத்தி கொண்டிருந்தது இதனால் உக்ரைனில் பெரும் குழப்பமும் ரஷ்ய இன மக்களை அழித்தொழிக்கும் நிகழ்வுகளும் நடந்தது.

அமெரிக்க ஆதரவு ஆட்சியாளர் பதவிக்கு வந்தவுடன் நவ பாசிச பயங்கரவாத அமைப்புகளை துணை இராணுவமாக அங்கீகரித்து மக்களை அழித்து ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வுகளை இந்தியாவில் இந்துத்துவா அமைப்புகளின் செயல்பாடுளுடன் இணைத்து புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சி தடை, சுத்தியல் அரிவாள் சின்னம் பயன்படுத்தக்கூடாது, லெனின் சிறை தகர்ப்பு போன்ற நடவடிக்கைகள் ஒட்டுமொத்த ஜனநாயகத்தையும் குழி தோண்டி புதைப்பதாக அமெரிக்க ஆதரவு ஆட்சியாளர்களின் செயல்பாடு இருந்ததை புரிந்து கொள்ள முடிகிறது.

ஐரோப்பாவின் எரிவாயு தேவையை ரஷ்யாவின் மூலம் பூர்த்தி செய்யப்படுவதை தடுப்பதன் மூலம், அமெரிக்கா ஒரே நேரத்தில் ரஷ்யாவையும், ஐரோப்பாவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எடுத்த முயற்சிகள் என்ன விளைவை ஏற்படுத்தியுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

உக்ரைன் பிரச்சனைகளை துல்லியமாக விளக்குவதற்கு சிரியாவை சிதைத்த தன்மைகள், ஈராக் மற்றும் ஏமன் நாடுகளை எப்படி ஏகாதிபத்தியம் தனது மேலாதிக்கத்துக்காக பகடைக்காயாக பயன்படுத்தி, ஜனநாயகத்தையும் அழித்தொழித்து தனது கட்டுக்குள் கொண்டுவந்தது என்பதை ஒரு சர்வதேச அரசியல் நிகழ்ச்சி போக்குவதோடு விளக்கப்பட்டுள்ளது.

எனவே உக்ரைன் யுத்தம், உக்ரைன்-ரஷ்யாவிற்குமான யுத்தம் மட்டுமல்ல. அது பல வழிகளில் பல கோணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு யுத்தம் என்பதை இப்புத்தகம் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

புத்தகத்தின் இறுதிப் பகுதியில் யுத்தம் தொடர்பான பதிவுகள் உழைக்கும் மக்களை முன்னிறுத்தி அறைகூவல் விடப்பட்டுள்ளது.
இந்த புத்தகம் அவசியமாக படிக்கவேண்டியது மட்டுமல்ல நிலைமையை புரிந்து கொள்வதற்கு அவசரமாகவும் படிக்க வேண்டும்.

அ. பாக்கியம்

நூல் அறிமுகம் : விஜய் பிரசாத் (தமிழில்) பேரா.பொன்னுராஜின் ’வாஷிங்டன் தோட்டாக்கள்’ – இரா. சிந்தன்

நூல் அறிமுகம் : விஜய் பிரசாத் (தமிழில்) பேரா.பொன்னுராஜின் ’வாஷிங்டன் தோட்டாக்கள்’ – இரா. சிந்தன்
நூல்: வாஷிங்டன் தோட்டாக்கள்
ஆசிரியர் : விஜய் பிரசாத் (தமிழில்) பேரா.பொன்னுராஜ்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : 185
தொடர்பு எண் ; 044 24332924
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும் : thamizhbooks.com

முக்கண்ட சமூக ஆய்வுக் கழகத்தின் செயல் இயக்குனரும்,லெஃப்ட்வேர்ட் பதிப்பகத்தின் ஆசிரியருமான விஜய் பிரசாத் எழுதிய ‘வாஷிங்டன் தோட்டாக்கள்’ என்ற புத்தகம், அமெரிக்கா எப்படி ‘ஏகாதிபத்தியமாக’ தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்பதை விளக்குகிறது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த புத்தகத்தை பேராசிரியர் பொன்ராஜ் தமிழில் கொடுத்துள்ளார்.

‘புரட்சியை கட்டமைக்கிற இடதுசாரிகளின் சொற்களை கொண்டதாகவும், அதனை அடக்குகிற அரசு ஆவணங்களை அடிப்படையாக கொண்டும்’ எழுதப்பட்டிருக்கும் இந்த நூல், விஜய் பிரசாத் அவர்களுடைய பல ஆண்டு பணிகளின் விளைவாகும். இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கும் பல சதி வேலைகள், அந்த வேலைகளை கருவியாக இருந்து முன்னெடுத்த ‘உளவாளிகளுடனான’ நேர்காணல்களில் இருந்தும் பெறப்பட்டுள்ளன. ஏராளமான அரசு ஆவணங்களில் இருந்து விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இருப்பினும், ரத்தினச் சுருக்கமாகவும், புரிந்துகொள்ள எளிதான மொழியிலும் எழுதியிருக்கிறார்.

இந்த புத்தகம் 3 பகுதிகளைக் கொண்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு முன் நிலவிய காலனி ஆதிக்க சூழலும், பிறகு அமெரிக்கா உலகின் முதன்மை சக்தியாக ஆனதுடன், அமெரிக்காவை மையமாக கொண்டு, பழைய ஏகாதிபத்திய நாடுகளை தனது ஆரமாக மாற்றிக் கொண்டது எப்படி?. அந்த ஆபத்தான சக்கரங்கள், உலகம் முழுவதும் பறந்து, மக்களின் இயல்பான விடுதலை வேட்கையினை சிதைக்கும் வழிமுறைகள் என்னென்ன?. சோவியத் ஒன்றியம் சிதைந்ததற்கு பிறகு இந்த உத்திகள் ‘கலப்பு யுத்தம்’ என்ற வடிவத்தை கூடுதலாக மேற்கொண்டது எப்படி? என்பதையும் இந்த நூல் விளக்குகிறது.

2021 ஆம் ஆண்டின் மத்தியில் பெண்டகன் வெளியிட்ட விபரங்களின்படி, உலகின் 80 நாடுகளில், 750 ராணுவத் தளங்களை அமெரிக்கா வைத்துள்ளது.ஆனால் உண்மையில் சிறிதும், பெரிதுமாக ராணுவம் நிலை கொண்டிருக்கும் நாடுகளின் எண்ணிக்கை 183 ஆகும். கண்களுக்கு முன் எந்த எதிரியும் தென்படாத நிலையில், உலகம் முழுவதும் அவர்கள் யாரை எதிர்த்து போர் செய்கிறார்கள்?

அமெரிக்காவின் ராணுவ தளங்களை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்று, ஜப்பான். ஜப்பான் நாட்டின் ஒக்கினாவா தீவில் அமையப்பெற்ற ராணுவ தளங்கள், பெண்கள் மீதான வன்முறையின் மையமாக இருக்கின்றன. அந்த தளங்களுக்கு எதிராக மக்களின் கோபம் குவிந்தது. இப்பிரச்சனை பேசிய ஹடோயாமா புகியோகத், 2009ஆம் ஆண்டு தேர்தலில் பெரும் வெற்றி பெற்றார். பிறகு அவர் அமெரிக்காவின் ராணுவ தளங்களுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்தார்.

அதன் பின்னர், ஒபாமாவின் நிர்வாகம் ஜப்பானிடம் மிகக் கடுமையாக நடந்துகொண்டது. சில ஆண்டுகளில் ஹடோயாமா புகியோகத் தனது கட்சியாலேயே தனிமைப்படுத்தப்பட்டார்.

கேள்விகளுக்கு அப்பாற்பட்ட இந்த அதிகாரம் எப்படி நிறுவப்பட்டது? எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது? உலக மக்களின் மிக இயல்பான, ஜனநாயக விருப்பங்களை அது எப்படி நசுக்கி அழிக்கிறது என்பதைத்தான் இந்த நூல் ஏராளமான உதாரணங்களின் வழியாக விளக்குகிறது.

அமெரிக்காவின் பிறப்பு

அமெரிக்கா எப்படி உருவாக்கப்பட்டது என்பதில் இருந்துதான் அதன் அதிகாரம் தொடங்குகிறது. 1776 ஆம் ஆண்டில் நடந்த அமெரிக்க புரட்சியை, விஜய் பிரசாத் விளக்குகிறார். “முதலில் அது ஒரு புரட்சியா” என கேள்வி எழுப்பும் அவர். “அதில் வர்க்கப் போராட்டம் எதுவும் இல்லை. புரட்சிகர நடவடிக்கை என்ற வரையறைக்கு உட்பட்ட தொழிலாளர் இயக்கம் எதுவும் மக்களிடமிருந்து எழவில்லை. அந்த போராட்டத்தில் பல்வேறு தரப்பட்ட மக்களின் சமூக ஒற்றுமை வெளிப்படவில்லை. மாறாக பூர்வ குடி மக்களை இனப்படுகொலை செய்யும் உணர்வு இருந்தது. அடிமையாக்கப்பட்ட ஆப்பிரிக்கர்களின் கலகம் பற்றிய பெரும் அச்சம் இருந்தது.”

ஆம்!. அமெரிக்கா பிறந்த போதே அது தனது காலனி ஆதிக்கத்தை உறுதி செய்துகொள்ளும் பூர்வகுடி மக்கள் மீதான தாக்குதலையும், அண்டை நாடுகளின் மீதான ஆக்கிரமிப்பையும் நடத்தி முடித்திருந்தது.இரண்டாம் உலகப்போர் நடந்து முடிந்த பின்னர், உலகின் யதார்த்தங்கள் மாறியிருந்தன. அதனை ஏற்க மறுத்த இங்கிலாந்தும் ஃபிரான்சும் தங்களுடைய பிரதான இடத்தை மீண்டும் அடைந்துவிட முடியும் என்று நம்பினார்கள்.

அல்ஜீரியா முதல் மலாயா வரை, வியட்நாம் முதல் கயானாவரை அவர்கள் காலனி ஆதிக்க போர்களை முன்னெடுத்தார்கள். ஆனால் அவை தேசிய எழுச்சிகளை எதிர்கொள்ள முடியாமல் பலவீனமடைந்தன. 1956 ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாய் மீதான தங்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்த, இஸ்ரேலின் உதவியோடு பல தந்திரங்களை முன்னெடுத்தார்கள், ஆனால் அவை தோல்வியில் முடிந்தன.

சோசலிச முகாமாக அமைந்த சோவியத் ஒன்றியமும் தனது தொழில் தளங்களை இழந்திருந்தது. அந்த நாட்டில் 52 ஆயிரம் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி நின்று போயிருந்தது. மூலதன பங்கு 30% வீழ்ச்சியை சந்தித்தது. 2 கோடியே 70 லட்சம் பேர்களை போர்க்களத்தில் அது இழந்திருந்தது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் இரண்டாம் உலகப்போரின் காரணமாக சோவியத் ஒன்றியத்தின் குடிமக்கள் தங்கள் 25 வருட வருமானத்தை, போரின் விலையாக கொடுத்திருந்தார்கள்.

அதே சமயத்தில், அமெரிக்கா மிகவும் குறைவான சேதங்களை மட்டுமே எதிர்கொண்டிருந்தது. 4 லட்சத்திற்கும் சற்று அதிகமானவர்களை போரில் இழந்திருந்தாலும், அதன் உற்பத்தி திறனும், பண்பாட்டு வளர்ச்சியும் தடைபடவில்லை. இவை அமெரிக்காவிற்கு சாதகமாக அமைந்தது. இப்படித்தான் உலகத்தின் மைய இடத்திற்கு அமெரிக்கா வந்து சேர்ந்தது.

அமெரிக்கா மையமாக இருக்கிறது. ஃபிரான்சும், இங்கிலாந்தும் இன்ன பிற நாடுகளும் ஆரங்களாக உள்ளன. 1946, 49 மற்றும் 1952 காலகட்டத்தில் ஜப்பானில் நடந்த தேர்தல்களில் அமெரிக்கா தலையிட்டது. லிபரல் கட்சிக்கும், ஜனநாயக கட்சிக்கும் இடையில் கூட்டணி உருவாக்க, அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகள் அரும்பாடுபட்டன. இதன் மூலம் சோசலிஸ்ட் கட்சி பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஜப்பான் அமெரிக்காவின் ஆரமாக ஆனது. இத்தாலியின் பிரதமர் அல்சைட் டி காஸ்பரி, பிரான்சு பிரதமர் பால் ராமடியர் ஆகிய இருவருடைய அரசிலும் கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து இடம்பெற்றால் அந்த நாடுகளுக்கு நிதி எதுவும் வழங்கப்படாது என்று அமெரிக்கா மிரட்டியது. 1963 முதல் 1972 வரை இதனை சாதித்திட பெரும்பணம் செலவிடப்பட்டது. பின் அந்த நாடுகளும் அமெரிக்காவிற்கு ஆரமாகின.

ஒரு மோசமான ‘சக்கர வியூகம்’ செயல்படுகிறது. அது ஏராளமான படுகொலைகளையும், அதிகாரப் பறிப்பையும் செய்துள்ளது, செய்து வருகிறது.

புதிய ஒழுங்கு

உலகப்போர் முடிந்த பின், 1944 ஆம் ஆண்டில் பிரெட்டன்வுட்ஸ் நகரில் அமெரிக்கா கூட்டிய மாநாடு, உலக அரங்கில் அதன் முதன்மை விருப்பத்தை பறைசாற்றியது. 1948 ஆம் ஆண்டில் ஐரோப்பிய பொருளாதார கூட்டுறவு அமைப்பு பிறந்தது. இதற்காக அமெரிக்கா 12 பில்லியன் டாலர்கள் கடனாக கொடுத்தது. 1949ஆம் ஆண்டில் நேட்டோ பிறப்பெடுத்தது. நேட்டோவில் அதன் உறுப்பினர்களுக்கு பங்கு எதுவும் கிடையாது. அமெரிக்காதான் அதன் விதிகளை முடிவு செய்தது.அமெரிக்க கண்ட நாடுகளின் அமைப்பு 1948ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு லத்தீன் அமெரிக்காவில், அமெரிக்காவின் செல்வாக்கை உறுதி செய்யும் விதமாக ஏற்படுத்தப்பட்டதாகும்.

இந்த அமைப்பின் முதல் கூட்டம் கொலம்பியாவில் நடைபெற்ற அதே சமயத்தில், கொலம்பியா நாட்டில் ஏழை மக்களின் விருப்பத்திற்குரிய தலைவராக இருந்த ஜார்ஜ் கெய்டான் சுட்டுக்கொல்லப்பட்டார். அதனை ஒட்டி எழுந்த மக்கள் எழுச்சி ‘கம்யூனிசமாக’ அடையாளப்படுத்தப்பட்டு, வன்முறையில் வீழ்த்தப்பட்டது. பொகாட்டாவில் நடந்த மாநாட்டின் முடிவில், கம்யூனிஸ்டுகளை ‘அழித்து ஒழிப்பது’ ஒரு சட்டமாகவே ஆக்கப்பட்டது.1954ஆம் ஆண்டில் இதே போல தெற்காசிய ஒப்பந்த அமைப்பு, மணிலா ஒப்பந்தம், 1955ஆம் ஆண்டில் மத்திய ஒப்பந்த அமைப்பு – பாக்தாத் ஒப்பந்தம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டன.

ஐரோப்பிய பகுதிகளில் நேட்டோ விரிவாக்கம் செய்யப்பட்டதன் மூலம் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மீது நிர்ப்பந்தம் செலுத்தப்பட்டது. லத்தீன் அமெரிக்காவில் நடந்த எழுச்சிகள் வீழ்த்தப்பட்டன. இவ்வாறு மாற்று அதிகாரத் தளங்கள் உருவாவதற்கான எந்த சிறு முயற்சியையும் தடுக்க அமெரிக்கா தொடர்ந்து முயன்றது.

ராணுவ கூட்டு பயிற்சிகள் என்ற பெயரால், வலுக்குறைந்த நாடுகளின் படைகள் அமெரிக்க கட்டமைப்பாக மாற்றப்பட்டன. மேலும் இந்த ராணுவங்கள், நவீன தளவாடங்களை வாங்கிச் சேர்க்கவும் வற்புறுத்தப்பட்டன. இப்போதுள்ள அமைப்பின் வலிமையைக் கொண்டு, உலகத்தின் எந்தவொரு பகுதியிலும் அமெரிக்க தாக்குதலை முன்னெடுப்பதற்கு ஒரு மணி நேர அவகாசமே தேவைப்படும்.

ஐ.நாவும், காலனிய நீக்கமும்

இரண்டாம் உலகப் போருக்கு பிறகான ஆண்டுகளில் உலகின் முதன்மையான முரண்பாடாக அமைந்தது வடக்கு – தெற்கு முரண்பாடே. அதாவது காலனி நாடுகளின் மீதான ஆதிக்கத்தை கைவிட மறுத்த ஏகாதிபத்தியத்தின் போர்களே அந்த காலகட்டத்தின் முதன்மையான முரண்பாடாக அமைந்தது என்கிறார் விஜய் பிரசாத்.

1945ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை உருவானது. உலகளாவிய சட்ட வரையறைகளுக்கும், காலனி நாடுகளின் யதார்த்த நிலைமைகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை தீர்ப்பதில் ஐ.நா செய்ய முடிந்தது என்ன?அது மேலை நாடுகள் மேற்கொள்ளும் வரன்முறையற்ற தலையீடுகளை சட்டப்பூர்வமாக்கியது. ஆம். சுதந்திர நாடுகளுக்குள் தலையீடு செய்யும் அதிகாரத்தை பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுப்பினர்களான ஐந்து நாடுகள் மட்டும் பெற்றார்கள்.

இந்த ஏற்பாட்டினை சோவியத் ஒன்றியம் எதிர்த்தது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களை புறக்கணிப்பு செய்தது. இந்த புறக்கணிப்பை பயன்படுத்திக் கொண்டு, வட கொரியாவை நிலைகுலையச் செய்திடும் தலையீடுகளை வேகப்படுத்த முயன்றன ஏகாதிபத்திய நாடுகள். அதன் பின் சோவியத் ஒன்றியம் தனது புறக்கணிப்பு முடிவுகளை மாற்றிக் கொண்டது. ஐ.நா பாதுகாப்புக்குழுவில் பயன்படுத்தப்பட்ட முதல் 56 தடுப்பு அதிகாரங்கள் (வீட்டோ பவர்) சோவியத் ஒன்றியத்தினால், தேச விடுதலை இயக்கங்களை பாதுகாக்கும் நோக்கில் செய்யப்பட்டன.

ஐ.நாவின் செயல்பாடுகள் முதல் பார்வையிலேயே பாரபட்சமாக தோன்றுகின்றன. அதற்கு முன் நிலவிய ஏற்பாடுகளின் தொடர்ச்சியாகவே இதுவும் அமைந்திருப்பதை இந்த புத்தகம் விளக்குகிறது.

சுக்கா மிளகா சுதந்திரம்?

1864 ஆம் ஆண்டில் ‘ஜெனீவா மாநாடு’ நடந்தபோது, காலனி ஆதிக்க போர்களை பற்றி எதுவும் பேசப்படவில்லை. இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் அந்த மண்ணின் பூர்வ குடிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூர வன்முறைகளைப் பற்றி எதுவுமே பேசப்படவில்லை.1943 ஆம் ஆண்டில் ரூஸ்வெல்ட் மிக வெளிப்படையாகவே பேசினார். “காலனி ஆதிக்க அமைப்பு என்பதன் பொருள் போர்” என்ற அவர், “இந்தியா, பர்மா, ஜாவா ஆகிய நாடுகளின் வளங்களைச் சுரண்டி, அந்த நாடுகளின் வளங்களை அங்கிருந்து அகற்ற வேண்டும்” என்பதை தெளிவுபடுத்தினார் அதே சமயத்தில் “கல்வி, தரமான வாழ்நிலை மற்றும் குறைந்தபட்ச உடல்நலம் ஆகிய அடிப்படை தேவைகளை அவர்களுக்கு ஒருபோதும் கொடுத்துவிடக் கூடாது” என்று வெளிப்படையாக முன்வைத்தார்.

ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்ட பின்னரும் இனப்படுகொலைகளுக்கு முடிவு ஏற்படவில்லை. 1952 முதல் 1960 வரை கென்யாவில் இனப்படுகொலைகளை முன்னெடுத்தது இங்கிலாந்து. ‘விடுதலை விருட்சத்திற்கு என் குருதி நீராகப் பாயட்டும்’ என்று முழங்கிவிட்டு மரணித்தார் கென்ய புரட்சியாளர் கிமாதி.

1945ஆம் ஆண்டில் இந்தோ சீனாவின் விடுதலையை ஹோசிமின் அறிவித்த உடனே அப்பகுதியை கைப்பற்ற பிரெஞ்சுப் படைகள் மீண்டும் வந்தன. காலனிய நீக்கத்திற்கான உலக மக்களின் விருப்பங்கள் ஏராளமான உயிர்த் தியாகங்களைக் கொண்டே சாதிக்கப்பட்டன.

காலனி நீக்கம் ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வுப்போக்கு என்பதை அமெரிக்கா புரிந்து கொண்டது.மேற்கு நாடுகளில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பயன் கொடுக்கும் முதலாளித்துவ சமூக அமைப்பினை பாதுகாத்து நீடிக்கச் செய்யும் பணியை அமெரிக்கா முன்னெடுக்கும் என்பதை அவர் பிரகடனம் செய்தார். இதனை அவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடே மேற்கொண்டார்கள்.

“அமெரிக்கா மறைவாக, பின்னணியில் இயங்க வேண்டியது முக்கியம். அதே நேரத்தில் தேவைப்படும் இடங்களில் தளவாடங்களையும், ஆலோசனைகளையும், பயிற்சியையும் வழங்குவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். உள்ளூர் அரசில் தலையிடும் முயற்சிகள் மீது வெறுப்பு வராமல் தலையீடு செய்வதும், காலனி ஆதிக்கம் என்ற புகார்கள் தேவையின்றி எழாமல் பார்த்துக்கொள்வதும் அமெரிக்காவுக்கு முக்கியம்” என்று சி.ஐ.ஏ துணை இயக்குனர் பிஸ்ஸல் எழுதினார். அவர்கள் உருவாக்கிய உத்திகளில் ஒன்றுதான் ‘கலப்பு யுத்தம்’.

கலப்பு யுத்தங்கள்

சீரழிவு வேலைகள், பொருளாதாரத் தடைகள், திரிக்கப்பட்ட உண்மைகளைக் கொண்ட ஊடக பிரச்சாரம், பண்பாட்டுத் தலையீடுகள் ஆகியவை உள்ளடங்கியதே ‘கலப்பு யுத்தம்’ ஆகும். சமூக மற்றும் அரசியல் தளங்களில் செயல்படும் அரசுப் பணியாளர்களையும், அரசு சாரா பணியாளர்களையும் கொண்டு, மரபு வழிமுறைகளிலும், மரபு அல்லாத வழிகளிலும் இந்த போர் முன்னெடுக்கப்படுகிறது. கருத்தியல் மேலாதிக்கம் இந்த போரின் ஒரு பகுதியாக அமைகிறது.

அமெரிக்காவும், சுயநலம் மிக்க அதன் கூட்டாளிகளும் முதலில் ஒரு நாட்டின் மீது பொருளாதார தாக்குதலை முன்னெடுக்கிறார்கள். பிறகு அந்த நாட்டு மக்களிடையே கலகங்கள் தூண்டப்படுகின்றன. ஆட்சி மாற்றங்கள் இவ்வாறு திணிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு நாட்டிலும், பழைய மேட்டுக்குடிகளும், நிலம்படைத்த சுய நலமிகளும் அமெரிக்காவின் ஆரங்களை வலுப்படுத்த விரும்பினார்கள். சோசலிசமும், கம்யூனிசமும் தங்களை ஓரங்கட்டிவிடும் என்று அஞ்சி நடுங்கினார்கள். அவர்களுக்கு சி.ஐ.ஏ உதவி செய்கிறது. ஆலை முதலாளிகளும், மதகுருமார்களும் துணையாக நிற்கிறார்கள்.

இந்த கலப்பு யுத்தத்தில், வங்கிகளின் பங்கு மிக முக்கியமான ஒன்றாகும். ‘தற்காலத்தில்ஆட்சிக் கவிழ்ப்புகள் இராணுவ டாங்கிகளைக் கொண்டு ஏற்படுத்தப்படும் அவசியம் கிடையாது; பல சமயங்களில் அது வங்கிகளின் வழியாகவே நடக்கிறது’ என்று கிரேக்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்து கச்சிதமான எடுத்தாளப்பட்டுள்ளது.

காட் ஒப்பந்தம், உலக வர்த்தக அமைப்பு, சர்வதேச நாணய நிதியம் ஆகிய அமைப்புகளும் இந்த நோக்கத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அவை வெறுமனே வர்த்தக ஏற்பாடுகளாக இல்லை.

சில உதாரணங்களை பார்க்கலாம்!

பெரு என்ற நாட்டில் அலைன் கார்சியா என்ற சோசலிச தலைவர் இருந்தார். அவருக்கு மக்களிடையே செல்வாக்கு இருந்தது. அவர் நிகரகுவா, சோவியத் ஒன்றியம் மற்றும் கியூபாவிற்கு ஆதரவாக பேசிவந்தார். உடனே அந்த நாட்டின் மீது ஐ.எம்.எஃப் நடவடிக்கை ஏவியது. கடன் வாய்ப்புக்கள் அத்தனையும் அடைக்கப்பட்டன. இதனால் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் அந்த நாடு சிக்கியது. கார்சியாவின் அரசியல் செல்வாக்கு சரிந்தது. அவர் பதவியிலிருந்து விலக, ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் அதிகாரத்தை பிடித்தார்கள்.

அப்பர் வோல்ட்டா என்ற நாட்டின் தலைவராக தாமஸ் சங்கரா என்ற இளைஞர் பதவிக்கு வந்தார். தங்கள் நாட்டின் பெயரை ‘நேர்மையான மனிதர்களின் நாடு’ என்று (பர்கினோ பாசோ) மாற்றினார். அப்போது அந்த நாட்டின் மீது ஐ.எம்.எப் கடன் வலை மிக மோசமான நெருக்கடிகளை உருவாக்கியிருந்தது. இந்த கடன்களுக்கு எதிரான ஆப்ரிக்க நாடுகளின் ஒன்றுபட்ட அமைப்பை உருவாக்க முயன்றார். ஏகாதிபத்தியம் அவருக்கு எதிராக குண்டுகளை குறிபார்த்தது. சங்கரா கொல்லப்பட்டார்.

ஏழ்மைப்படுத்தப்பட்ட நாடான குவாதேமாலாவில், ஜனநாயக விருப்பங்களைக் கொண்ட, ஜாக்கப் அர்பென்ஸ் ஆட்சிக்கு வந்தார். அந்த நாட்டின் வளமான நிலங்கள் அமெரிக்காவின் யுனைடெட் ஃபுரூட்ஸ் என்ற நிறுவனத்தின் வசம் இருந்தன. அந்த நிலங்களில் ஒரு பகுதியை எடுத்து, மக்களுக்கு வழங்கும் உறுதியோடு அவர் இருந்தார். நிறுவனத்தின் வசம் இருந்த 2 லட்சம் ஏக்கர் நிலங்களை அவர் கையகப்படுத்தினார். உடனே அர்பென்ஸ் ஆட்சிக்கு எதிராக சி.ஐ.ஏ. களத்தில் குதித்தது.

1990, ஈராக் மீது ஐநா சபை விதித்த தடைகளினால் 5 லட்சத்து 67 ஆயிரம் குழந்தைகள் மரணமடைந்தார்கள். அணுகுண்டு வீச்சால் இறந்த குழந்தைகளை விடவும் அதிகமான எண்ணிக்கை இது. ஆனால் இந்த விலை அவசியமானது என்று அமெரிக்கா தயக்கமின்றி முன்வைத்தது.

உலகமயத்தை ஒழுங்காற்றும் விதிகள் அனைத்தையுமே அமெரிக்கா உருவாக்கியது, அமெரிக்க டாலர் அதன் மைய செலாவணியாக இருந்தது. அமெரிக்க மேலாதிக்கம் கொண்ட ‘சர்வதேச நாணய நிதியம்’ (ஐஎம்எஃப்) மற்றும் அமெரிக்க தரவரிசை முகமைகள் உலக நாடுகளின் பொருளாதார வலிமையை மதிப்பீடு செய்யும் நிறுவனங்களாக ஆகின. நாடுகளுக்கிடையில் பண வர்த்தகத்தை மேற்கொள்ளும் சேவை நிறுவனமான ‘ஸ்விஃப்ட்’ என்ற ஐரோப்பிய நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த அனைத்து ஏற்பாடுகளும், அமெரிக்காவின் விதிகளுக்கு இணங்காத நாடுகளின் மீது தாக்குதல் தொடுப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன.

அரசு சாரா அமைப்புகள்

சர்வதேச நாணய நிதியம் செய்கிற வற்புறுத்தல்களுக்கு கட்டுப்பட்டு பல நாடுகளும் தங்கள் மக்கள் நலத்திட்டங்களை சுருக்கிக் கொள்கிறார்கள். அப்போது உருவாகும் சூழலை பயன்படுத்தி என்.ஜி.ஓ (அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகள் தொடங்குகின்றன. இந்த அமைப்புகளும் ஏகாதிபத்திய திட்டத்தின் ஒரு பகுதியாக அமைகின்றன. அவர்கள் அரசுகளை சாராதவர்கள். ஆனால் தங்களுக்கு நிதி கொடுக்கும் ஏற்பாடுகளைச் சார்ந்தவர்கள். என்.ஜி.ஓ அமைப்புகளுக்கான நிதி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்தே வருகின்றன.

என்.ஜி.ஓ அமைப்புகளின் ஏகாதிபத்திய ஆதரவு செயல்பாடுகளின் உதாரணத்தை உணர்த்த, ஹெய்ட்டி என்ற நாட்டின் 200 ஆண்டுகால வரலாறு இந்த நூலில் சுருக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பொருளாதார தடைகள் ஏற்படுத்தும் கொடூரமான விளைவுகளையும், உயிர் காக்கும் சிகிச்சைகளைக் கூட பெற முடியாத ஆபத்தான நிலைமையையும் புரிந்துகொள்ள ஈரான் பற்றிய விவரிப்புகள் உதவுகின்றன.

பிரேசில் நாட்டில் ‘பசிஅழிப்புத்திட்டம்’ கொண்டுவந்த உலகப் புகழ்பெற்ற தலைவரான லூலாவிற்கு 86% மக்கள் ஆதரவு இருந்தது. ஆனால், அந்த நாட்டிலும் அமெரிக்க வல்லூறு நுழைந்தது. லூலாவிற்கு எதிராகஅந்த நாட்டின் ‘சட்டமே’ ஒரு கருவியாகப் பயன்படுத்தப் பட்டது.

அதே சமயத்தில், இந்தக் கலப்பு யுத்தங்கள் மக்கள் சக்தியினால் முறியடிக்கப்பட்ட உதாரணங்களையும் பார்க்கிறோம். வெனிசுவேலா என்ற நாட்டில் மதுரோவின் அரசுக்கு எதிராக அமெரிக்க ஆதரவுடன் ஒரு முற்றுகை முன்னெடுக்கப்பட்டது. இந்த முற்றுகையை மக்கள் ஆதரவே முறியடித்தது.

பொலீவியா நாட்டில், ஈவோ மொரேல்ஸ் ஆய்மா ஆட்சிக்கு வந்தார். பொலிவிய குடியரசின் வரலாற்றில், உள்ளூர் இனக்குழுவைச் சேர்ந்த முதல் ஆட்சியாளர் ஈவோதான். அவருடைய இயக்கத்தின் பெயர் ‘சோசலிசத்திற்கானஇயக்கம்’. இயற்கை வளங்களை வரன்முறையற்று சுரண்டும் சக்திகளுக்கு எதிராக அவர் உறுதி காட்டினார். அவருடைய முன்னெடுப்புகள் மக்களிடையே ஆதரவினை விரிவாக்கின. அவருக்கு எதிரான சதிகள் மக்கள் சக்தியின் மூலம் முறியடிக்கப்பட்டன.

ஆதிக்கத்தின் செயல் திட்டம்

‘கிரெனெடா’ ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நாடு.அந்த நாட்டின் மக்கள் ‘புதியஅணிகலன்இயக்கத்தின்’ மூலமாக, தங்கள் நாட்டுக்கு ஏற்ற சோசலிச அமைப்பை உருவாக்க முயன்றது. 1983ஆம் ஆண்டில் அமெரிக்க படையெடுப்பினால் நசுக்கப்பட்டது.

இப்படி எந்தவொரு நாட்டிலும், உழைப்பாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் அதிகாரம் கிடைக்கும் சூழல் ஏற்படுமானால் ஏகாதிபத்தியம் அதற்கு எதிராக களத்தில் இறங்குகிறது. ஏகாதிபத்தியத்தின் ஆணைகளை மறுப்பதற்கு ஏதாவதொரு நாடு முயற்சி செய்யும் என்றால், அங்கே தலையீடுகள் செய்யப்படுகின்றன. தேர்தல்களில் தலையீடு அல்லது ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்படுகிறது.

அந்த நடைமுறைகளை விஜய் பிரசாத் விரிவாக விளக்கியுள்ளார். செயல் திட்டம் இதுதான்.

பொதுக் கருத்தை உருவாக்குதல் – உண்மைக்கு மாறான, அச்சமூட்டும் கதைகளை செய்திகளாக திரித்து பரப்புதல்.
ஆட்சிக் கவிழ்ப்பின் திறமை வாய்ந்த உளவாளியை களத்தில் இறக்குதல்.
கூலிப்படை, ராணுவத்தை தயார் செய்தல்
பொருளாதார வாய்ப்புகளை முடக்கி முற்றுகையிடுவது
பிற நாடுகளிடம் இருந்து துண்டித்தல்
பெருந்திரள் போராட்டங்களை ‘உருவாக்குதல்’
அமெரிக்காவின் பங்கை மறுத்தல் (அச்சத்தை பரவவிடல்)
மறக்கச் செய்தல்
முற்போக்கான குருமார்களை கொலை செய்தல்
பல நாடுகளிலும் பரிசோதிக்கப்பட்ட மேலே குறிப்பிட்ட வழிமுறைகளை படிக்கும்போது, இந்தியாவில் நடக்கும் பல்வேறு மாற்றங்களையும் கூட நம்மால் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. உண்மையில், பாசிச – நாஜி சக்திகளோடு கைகோர்ப்பதில் அமெரிக்காவிற்கு எந்த வெட்கமும் இருக்கவில்லை என்பதை இந்த புத்தகம் ஆதாரத்துடன் விளக்குகிறது.

மேலும், இஸ்லாமை மையப்படுத்தி, கம்யூனிச வெறுப்பினை கட்டமைப்பதற்காக ‘ஹாஜி யூசுப் சங்’முன்வைத்த திட்டம் இந்த நூலில் உள்ளது.

இஸ்லாமிய பண்பாட்டு சங்கம் ஒன்றை தொடங்கி, சீனா மற்றும் மத்திய கிழக்கு இஸ்லாமியத்தோடும், உலகம் முழுவதும் தொடர்புகளை அதிகமாக்க வேண்டும்.
அமெரிக்கர்களையும், இஸ்லாமியர்களையும் கம்யூனிசத்திற்கு எதிராக திரட்டும் விதமான பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும்.
அந்த அமைப்புகளுக்கு சீனா அல்லது பிற இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களே தலைவர்களாக இருக்க வேண்டும். அமெரிக்காவின் பின்புலம் மறைவாகவே இருக்க வேண்டும்.
இதுதான் அவர் அனுப்பிய ஆவணத்தின் சாரமாக அமைந்த கருத்துக்கள்.

இந்த திட்டம் அரேபிய மன்னர்களாலும், சி.ஐ.ஏ.வினாலும் 1951ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முன்னெடுக்கப்பட்டதை புத்தகத்தின் மூலம் விரிவாக அறிந்துகொள்கிறோம்.

கியூபாவில் எழுந்த நம்பிக்கை

எத்தனை அதிகாரம் மிக்கதாக இருந்தாலும், மக்கள் சக்தியின் துணையைக் கொண்டு ஏகாதிபத்தியத்தை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கையை வழங்கும் ஊற்றாக இருப்பது கியூபாவே ஆகும். கியூப நாடு தனது நாட்டு மக்களின் விடுதலையை சாதித்ததுடன் போராட்டத்தை முடித்துக்கொள்ளவில்லை. எப்போதும் அது உலக மக்களுடன் தனது பிணைப்பை வலுப்படுத்திக் கொண்டுள்ளது.

1966 ஆம் ஆண்டில், தேச விடுதலை இயக்கங்களை, ஃபிடல் காஸ்ட்ரோ ஹவானாவிற்கு அழைத்தார். முக்கண்ட மாநாட்டில், “காலனி உலகெங்கிலும் புரட்சிகர விடுதலைப் போர்களுக்கான ஆதரவையும் ஒத்துழைப்பையும் இந்த அமைப்பு வழங்கிடும். விடுதலை இயக்கங்கள் எங்கே நடைபெற்றாலும் அவை அனைத்திற்கும் கியூப அரசும், மக்களும் தங்கள் சக்திக்கு உட்பட்டு பொருள் உதவியையும், அனைத்து உதவிகளையும் வழங்கிடும்’ என காஸ்ட்ரோ அறிவித்தார்.

இந்த மாநாட்டுக்கான அவசியம், அதற்கு முந்தைய ஆண்டுகளில் தொடங்கிய வன்முறை தாக்குதல்களில் இருந்து எழுந்தது.

1960 களிலும், 1970 களிலும் நடந்த விடுதலை போராட்டங்களுக்கு எதிராக கொடூர வன்முறையை ஏகாதிபத்தியம் முன்னெடுத்தது. மலாய அவசர நிலை (1948-1960), கென்ய அவசர நிலை (1952), அல்ஜீரியா மீது ஃபிரெஞ்சு போர் (1954-1962), வியட்நாம் மீதான ஃபிரெஞ்சு போர் (1946-1954), அமெரிக்கா – வியட்நாம் போர் (1954-1975), கியூபா மீதான அமெரிக்க படையெடுப்பு (1961), காங்கோவில் பேட்ரிஸ் லுமூம்பாவின் படுகொலை (1961), குவட்டமாலா மீது படையெடுப்பு (1954), டொமினியன் குடியரசு மீது அமெரிக்க படையெடுப்பு (1965), இந்தோனேசியாவில் கம்யூனிஸ்டுகள் மீதான இனப்படுகொலை (1965) என அடுத்தடுத்து முன்னெடுக்கப்பட்ட ஆதிக்க வன்முறைகளும், கொத்துக்கொத்தான மரணங்களுமே திரிகண்ட மாநாட்டில் கூடிய விடுதலைப் படைகளின் உத்திகளை வடிவமைத்தன. வன்முறை அவர்கள் மீது திணிக்கப்பட்டது.

1979 டிசம்பர் 31 ஆம் தேதி என்ற மலைமுகட்டின் மேல் நின்று அதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் உலகில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களை நமக்கு எடுத்துக் காட்டுகிறார் விஜய் பிரசாத். காலனி ஆதிக்கங்களில் இருந்து அங்கோபா, கேபோ வெர்டே, கினியா பிசாவ் மற்றும் மொசாம்பி ஆகிய நாடுகள் போர்த்துகீசியர்களுக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றன. ரொடீசியாவில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்தன. 1980ஆம் ஆண்டில் ஜிம்பாவே விடுதலை பெற்றது. வியட்நாம் போர் 1975ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. ஆனால் அந்த நாட்டின் நிலம் வேதியல் குண்டு வீச்சுகளினால் நச்சுத் தன்மை அடைந்திருந்தது. ஆப்கானிஸ்தான், நிகரகுவா மற்றும் கிரனடா ஆகிய மூன்று ஏழை நாடுகளில் புரட்சிகள் நடந்தன. ஆனால் அவை நிலைப்பெற்றிடும் முன்பாக முறியடிக்கப்பட்டன. வங்க தேசத்திலும், சாட், பாகிஸ்தான், ஈராக், தென் கொரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் ஆட்சிகள் கவிழ்க்கப்பட்டன. இந்த எல்லா இடங்களிலும் அமெரிக்காவின் கொடும் கரங்கள் இருந்தன.

1946 – 1949 ஆண்டுகளில் கிரேக்க நாட்டில் பாசிஸ்டுகள் இடதுசாரிகளை ஒடுக்கினார்கள். இந்த அழித்தொழிப்பினை அமெரிக்கா தனது ஊடகங்களின் பலத்தைக் கொண்டு மறைத்தது. இந்தோனேசியாவில் இடதுசாரிகளும், இடதுசாரி ஆதரவாளர்களும் 1965 ஆம் ஆண்டில் தொடங்கி பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டார்கள். ஆம். இந்த இன அழிப்பில் 10 லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள். இந்த காலகட்டம் தொடர்பான ஆவணங்களை முழுமையாக வெளியிட அமெரிக்கா மறுப்பு தெரிவிக்கிறது. இருப்பினும், ஜகார்த்தாவில் இருந்த அமெரிக்க தூதரகத்திற்கு நடப்பவை தெரிந்தே இருந்தன என்பதை இந்த நூல் எடுத்துக்காட்டுகிறது.

குவாடேமலாவிலோ அல்லது இந்தோனேசியாவிலோ அல்லது தெற்கு வியட்நாமில் செயல்படுத்தப்பட்ட ஃபீனிக்ஸ் முன்னெடுப்புகளோ, இடதுசாரிகளை அழித்தொழிப்பதற்கு உள்ளூர் சுயநல சக்திகளையும், ராணுவ கூட்டாளிகளையும் அமெரிக்காவே தூண்டியது.

உலகம் தழுவிய வர்க்கப்போர்

ஆம்!. நடந்துகொண்டிருப்பது தெள்ளத் தெளிவாகவே ஒரு வர்க்கப் போர் தான். உலகம் முழுவதுமே அது உழைக்கும் மக்களுக்கு எதிராக தனது துப்பாக்கியை நீட்டிக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் நடக்கும் கனிம வளச் சுரண்டல்களை எதிர்த்து போரிடும் மக்களை போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய பெயர்களில் முத்திரையிடுவதன் மூலம் தங்கள் சுரண்டலுக்கு எவ்வித ஆபத்தும் இல்லாமல் தடுத்துக் கொள்கிறார்கள்.

மன்னர்கள், தங்கள் விருப்பப்படி எதையும் செய்துகொள்வதற்கான ‘புனித உரிமையை’ கடவுள் வழங்கியிருப்பதாக பழங்கால கோட்பாடு ஒன்று உண்டு. அப்படிப்பட்ட ‘புனித உரிமை’ கொண்டிருப்பவர்களாகவே ஏகாதிபத்தியம் தன்னை கருதிக் கொண்டு இயங்குகிறது என்பதை ‘வாசிங்டன் தோட்டாக்கள்’ விளக்குகிறது.அவர்களுடைய தாரக மந்திரம் இதுதான்,‘கம்யூனிசத்தைக் காட்டிலும் பிற்போக்குத்தனம் சிறந்தது.’

சில விமர்சனங்கள்

கடும் உழைப்பின் பலனாக வெளிவந்திருக்கும் இந்த நூல் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் அவசியத்தை விளக்குகிறது. அதே சமயத்தில், வீழ்த்தப்பட்ட புரட்சிகளின் கதையையே மையப்படுத்தி இருப்பது ஒரு குறையாகும். இந்தியா போன்ற நாடுகளிலும் ஏகாதிபத்திய திட்டங்கள் செயல்படுவதை இந்த நூலின் ஒரு பகுதியாக கொண்டுவந்திருக்க வேண்டும். அது இந்திய வாசகர்களுக்கு நூலை கூடுதலாக நெருக்கமாக்கியிருக்கும். சோசலிச சக்திகளின் தவிர்க்க முடியாத பாத்திரத்தை விளக்கும் இந்த நூலில் அதற்கென தனியாக ஒரு பகுதி இல்லாததும், கட்டுரையாளரின் பார்வையில் குறைகளாக படுகின்றன. இவ்வளவு சிறப்பான நூலை நமக்கு கொடுத்திருக்கும் விஜய் பிரசாத் பாராட்டுக்குரியவர். தமிழில் அதன் பொருள் குன்றாமல் நமக்கு அளித்துள்ள மொழிபெயர்ப்பாளர் பணியும், பாரதி புத்தகாலயத்தின் பணியும் பாராட்டுக்குரியது.

இரா. சிந்தன்