நூல் அறிமுகம் : தமிழவனின் ’ஷம்பாலா ஓர் அரசியல் நாவல்’ – அன்புச்செல்வன்
நூல் : ஷம்பாலா ஓர் அரசியல் நாவல்
ஆசிரியர் : தமிழவன்
விலை : ரூ. 210/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு :044 – 24332424 /24330024/
விற்பனை : 24332934
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
தமிழவனின் 6வது நாவல் இது. தொடக்கம் முதலே நேரடி குரலில் அரசியல் பேசுகிற பிரதி, முழுக்கக் குறியீடாகவும் வாசிக்கும் வகையில் மற்றொரு பிரதியாகவும் உருமாற்றம் கொள்கிறது.
ஒற்றைத்துவத்தை முன்னிருத்தும் அரசு அதிகாரம் மேற்கொள்ளும் பன்மய சிந்தனா ஒழிப்பு நடவடிக்கைகள் பற்றிய தொகுப்பாக அமர்நாத் என்ற கருத்தியல் செயற்பாட்டாளர் வாழ்க்கை வழி விரிகிறது. அறிவுத்தளத்தில் மாற்றுக் கருத்து கொண்டுள்ளோர் – அத்தகைய கருத்தியல்களை பிரதிகளின்வழி – சமூக ஊடகங்களின்வழி உருவாக்குவோர் – ஆகியோரை தொடர்ந்து கண்காணிப்பதன் வழியாக அறிவார்ந்த தளத்தில் ஒரு பதட்ட நிலையை உருவாக்கி அறிவை அதன்பாற்பட்ட செயலை முடக்கும் சூழல் உருவாக்கப்படுகிறது. இது நெருக்கடி நிலை பிரகடனத்தின் இன்றைய வடிவமே என நிறுவுகிறது நாவல்.
ஏன் பெரும்பான்மைக்குள் இருப்பதை ஒரு பாதுகாப்பாக ஒடுக்கப்பட்டோர் உணருகின்றனர் – தலித் என்பதை விட இந்து என்பதில் தலித் தன்னிலையானது கொள்ளும் மன உணர்வுகள் – ‘மானம்’, மத உணர்வு, சாதி பெருமிதம் ஆகியவற்றின் மூலம் ஒடுக்கப்பட்டோரை மீள பெரும்பான்மை அரசியலுக்குள் எவ்வாறு “அரசியல் நீக்கம்” செய்யப்பட்டு இழுக்கப்படுகின்றனர் – ராமர் கோவில் உள்ளிட்ட கோவில் கட்டுதல், கோவில் நிர்வாகக் கையகப்படுத்துதல் போன்றவற்றை முன்னிருத்தி புதிதாகக் கட்டமைக்கப்பட்டு வரும் வலதுசாரி பொருளாதாரம் – படிக்காத/படிப்பு வராத வேலையற்றோர் x அறிவுசார் வர்க்கம் என்ற விசித்திர முரணை (படிக்காததற்குப் படிப்பு வராததற்குக் காரணங்களைப் பகுத்துச் சொல்லும் அறிவுசார் செயற்பாட்டாளர்களை எதிரானவர்களாக முன்னிலைப்படுத்தி) கட்டமைத்து அதன் மூலம் நவீன வலதுசாரித்துவத்தை அறுவடை செய்வது – இப்படியான பல முக்கிய விவாதப் புள்ளிகளையும், கேள்விகளையும் பிரதியின் “அமர்நாத்” பகுதி எழுப்பியபடியே செல்கிறது.
மற்றொரு தளத்தில் “ஹிட்லரின்” கதைப் பகுதியானது சுவாரசியமாகவும் பகடித்தன்மையுடனும், அடியோடிய எள்ளலோடும் முழுக்கக் குறியீட்டுத்தனதுடன் கூறப்படுகிறது. இறுதியில் இந்த “ஹிட்லர்” கதையானது, அரசு மற்றும் சிந்தனை தடுப்பு காவல்துறையினரின் கண்காணிப்பு மற்றும் அழுத்தத்தின் விளைவாக அமர்நாத்தின் மனதில் எழுந்த கலகக் கதை வடிவமாக்கியிருப்பது ஈர்ப்புடைய இணைப்பு.
நவீன மோஸ்தரில் உலா வரும் சமஸ்கிருத பண்டித சாமியார் முன்வைக்கும் உலக அதிகாரக் குவி மையமான ‘ஷம்பாலா’ நோக்கிய நகர்வே அமர்நாத்தை போன்ற “இடதுசாரி தாராளவாதி”யான அவர் தோழர் சுரேஷை சிந்தனா போலீசார் கைது செய்தது..!
நடப்பியல் வாழ்விலும் வரவரராவ், ஆனந் டெல்டும்டே, கவுதம் நவ்லக்கா, உமர் காலித், ஸ்டேன் சுவாமி, அருண் ஃபெரேரா, இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட பல சமூக ஆர்வலர்கள், அறிவுசார் செயற்பாட்டாளர்கள் கைதுகளும், கல்புர்கி, பன்சாரே, தபோல்கர், கவுரி லங்கேஷ் உள்ளிட்ட மாற்று அரசியல் கருத்தியல்வாதிகள்/செயற்பாட்டாளர்களின் படுகொலைகளும் நிகழும் வெறுப்புணர்வின் அரசியல் காலத்தில் வாழ்கிறோம். இந்தப் பிரதி இக்காலத்தின் வெட்டப்பட்ட ஒரு துண்டு.
இப்பிரதியை வாசித்து முடித்த நாளில், செயற்பாட்டாளர் தீஸ்தா செடல்வாட் கைது செய்யப்பட்டது ஒரு ‘துன்பியல்’ தற்செயலே..! அவ்வாறாக, “ஷம்பாலா”வுக்கான ‘விழைவு’ இந்திய அரசியல் களத்தில் உச்சத்தை நோக்கி சென்றபடி…
– அன்புச்செல்வன்