சுதாவின் கவிதைகள்

சுதாவின் கவிதைகள்


இது போன்ற ஓர் இரவில் நானும் இப்படி
என் தோற்றத்தை இழந்தவளாய்
என் விருப்பு வெறுப்புகளை அற்றவளாய்
என் வாழ்வின்
இறுதியைத் தொட்டதாய் என்னக் கூடும்…

செயலிழந்து தோற்றம் நசிந்து
ஒரு புது ஆடையின் கிழிசலைப் போல்
வெட்டு விழுந்த மரத்தில்
கசியும் சிறு பிசின் போல்…
என் நினைவுகள் கொஞ்சம்
கொஞ்சமாய் கசியக்கூடும்…

அந்நாளில் கட்டாயம் நீ
வேலை நிமித்தமாய்
வெகு தூரம் சென்று இருக்கலாம்…
உன் வாழ்வின் ஆகச் சிறந்த
வெற்றிக்காய் நீ ஓடிக் கொண்டிருக்கலாம்…

முயற்சி ஏணும் செய்..
கொஞ்சம் என் சுருண்ட
உடல் அருகில் அமர்ந்து
என் விரல் பிடித்துக் கொள்…
மெலிதாய் ஒரு முத்தத்தை
என் நெற்றியில் இட்டுச் செல்…

இறப்பு ஒன்றும் அத்தனை
கொடூரம் இல்லை என்று எனக்குத் தெரியும்…
விடுதலை எப்படி கொடூரமாகும்…

ஒருமுறை மட்டும் முயற்சித்துப் பார்…

#சுதா