கவியோவியத் தொடர்: பீடங்கள் 24 – நா.வே.அருள்
பூமி
******
பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட
விசித்திரமான மூங்கில் கட்டில்களில்
நாற்புறமும் துப்பாக்கிகள் செருகப்பட்டிருந்தன.
அது ஒரு அதிகாரப் பல்லக்கு.
சிலாகிக்கப்பட்ட
துப்பாக்கிக் குழல்களின் வழியேதான்
நாட்டின் விடுதலைப் பகுதிக்குப்
பிரவேசிக்கமுடியுமெனும் அதிகார ஆணை.
கைவிடப்பட்ட பூமியில்
ஏர்க்கலப்பைகள்
சிலுவைகளாக நடப்பட்டிருந்தன
சிலுவையில் அறையப்படத் தயாராயிருக்கும் யேசுக்களுக்கு
மன்னிப்பு வழங்க அவகாசமிருப்பதாக
பிரான்ஹாஸ் மீன்களெனப் பீடிகைச் சிரிப்பு..
‘வெரகால்’ இல் கொப்பளிக்கும் விஷம்
நஞ்சூட்டப்பட்ட வயல்கள்
நெடுகிலும் நெகிழிப் பூக்கள்
கல்லறையின் வணிகப் பயிர்கள்
ஊர்வலத்தின் வரைபடம் இப்படியாகத்தான்
திட்டமிடப்பட்டிருந்தன.
தானிய சேமிப்புக் கிடங்குகளின் வதை முகாம்களில்
காவலிருக்கும்
வெளிநாட்டு சோளக்காட்டு பொம்மைகள்
எங்கெங்கும் தூவப்படும் விதைகளாய்
ஹிரோஷிமா நாகசாகியின்
இந்திய போன்சாய்கள்!
கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்