கவிதைச் சந்நதம் தொடர் 29: நா.வே.அருள் கவிதை – ஐ.தர்மசிங்

கவிதைச் சந்நதம் தொடர் 29: நா.வே.அருள் கவிதை – ஐ.தர்மசிங்தீக்குச்சி மனிதர்கள்

எந்தவித சொல் ஜோடனையுமின்றி ஒரு கவிதை மனதில் தீக்குச்சி கிழித்துப் போடக் கூடுமா? படித்து முடித்ததும் மனம் பற்றிக் கொள்ளுமா? கடைசி வரியில் ஏற்பட்ட அதிர்ச்சி கவிதையை முடித்த பின்பு கவிதையின் அத்தனை வரிகளிலும் மெல்லப் பரவுமா?

கவிஞன் தனது கொரோனா காலத்து நினைவுகளை அசை போடுகிறான். தனது அன்றாட புழங்கு வெளியில் யார் யாரையெல்லாம் சந்தித்தானோ அவர்களையெல்லாம் நினைத்துப் பார்க்கிறான். கவிஞன் ஒரு மண்மணம் மாறாத கிராமத்துக் காரன். இன்னும் கிராமத்தில் ஆண்கள் ஒரு குழுவாய், பெண்கள் மற்றொரு குழுவாய்ச் சேர்ந்து கிணறுகளுக்குப் போய் குளிக்கிற வழக்கம் இருக்கிறது. நகரத்திலோ பக்கட் குளியல். அவசர அவசரமாகத் தண்ணீரைத் தலையில் கொட்டிக் கொள்ளும் காலை நேரக் காரியக் குளியல். நகரத்துக் குளியலைக் ‘கழுவல்’ என்று சொல்வார் பிரபஞ்சன்.
“காலை வேளையில்
இணைந்து நீராடும்
நண்பர்களோடும்”
ஒவ்வொரு கிராமத்துக்காரனுக்கும் தன்னுடன் கிணற்றுக் குளியலில் நீச்சலடித்த நண்பர்கள் ஞாபகத்திற்கு வருவார்கள்.

பணிக்குப் போவது இப்போதெல்லாம் போருக்குப் போவது போல. குறைந்தபட்சம் மூன்று ஆட்களின் வேலைகளை ஒரு ஆள் செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. மனிதர்கள் கார்ப்பரேட் உலகத்தின் கண்ணிகளில் சிக்கிய காக்கைகளாவிட்டனர். அதிகாலை சென்றால் பின்னிரவுக்குப் பின் வருவதுதான் ஒரு தொழிலாளியின் தொழில் தர்மம் ஆகிவிட்டது. எட்டு மணி நேரம் வேலை, எட்டு மணி நேரம் ஓய்வு, எட்டு மணிநேரம் உறக்கம் என்பதெல்லாம் வெறும் கம்யூனிசக் கனவாகிவிட்டது.

இத் துயரங்களுக்கு வலி நிவாரணியாக இருக்கின்றன ஊர்க்காரர்களின் ஓரிரு வார்த்தைகளின் குசலங்கள். ஒரு நாள் பணிக்குப் போகையில் வழியில் “என்ன மச்சான் வேலைக்கா?” என்பது மூன்று வார்த்தைகளாகத்தான் இருக்கும். ஆனால் அந்த வார்த்தைகள் பணியிலிருக்கிற சிரமங்களையெல்லாம் ஒரு முள்வாங்கியைப் போல மனதில் இறங்கிய துயர முட்களை லாவகமாக அப்புறப்படுத்தி விடுகிறது.
“பணிக்குத் திரும்புகையில்
புன்னகைக்கும்
உள்ளூர் உறவுகளோடும்

பேருந்து நிறுத்தத்தில்
பத்துநிமிட
தோழர்களோடும்

அருகாமை இருக்கைகளில்
பயணிக்கும்
நாற்பது நிமிட நேர
சக பயணிகளோடும்

பணியிடத்தில்
பத்துமணி நேர
உடன் ஊழியர்களோடும்”

இது நுகர்வோர்களின் காலம். கார்ப்பரேட்டுக் கம்பெனிகள் முழுவதும் நுகர்வோர்களுக்காக என்னென்ன சௌகரியங்களைத் தர வேண்டுமோ அத்தனைச் சௌகரியங்களையும் ஏற்படுத்தித் தருவார்கள். கார்ப்பரேட்டுகள் சௌகரியங்களை உற்பத்தி செய்கிற தாதாக்கள் அல்ல. ஆனால் சௌகரியங்களின் இடைத் தரகர்கள். தங்களின் பணியாட்களைப் பம்பரமாகச் சுழலவிடுவார்கள். கட்டளைகளின் கயிறுகளால் பம்பரங்களின் தலை கிறுகிறுத்து விடுகின்றன. பணியாட்கள் நுகர்வோர்களின் பட்டியலில் இடம்பெறுவதில்லை. அடிமைகளின் கழுத்துகள் நுகத்தடிக்குப் பழகிவிடுகின்றன.
“புதிது புதிதாய்
நிதமும் சந்திக்கும்
வாடிக்கையாளர்களோடும்

இரவு வீடு திரும்புகையில்
மாமூலாகப் பயணிக்கும்
பேருந்தின்
நெருக்கமான நடத்துனர்களோடும்”
நடத்துநர்கள் வீடு திரும்பும் நேரம் என்ன நேரம் என்று கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் வீடு திரும்பும் நேரம் பெரும்பாலும் பின்னிரவு நேரம். அதற்குப் பின் வீட்டில் எந்தக் கண்கள் விழித்திருக்கப் போகின்றன. யாரும் விழித்துக் கொண்டு தூக்கம் கெட்டுவிடக் கூடாதே என்று திருடனைப் போல உள்நுழையும் அனுபவத்தை எத்தனை பேரால் உணர்ந்து கொள்ள முடியும்?

தையல்காரர் வீடு திரும்ப பத்து அல்லது பதினோரு மணி ஆவது சகஜமான விஷயம். அவர் எல்லாத் துணிகளையும் தைத்து முடித்திருப்பார். அவர் மனம் மட்டும் தைக்க ஆளின்றிக் கிழிந்துகிடக்கும்.
இறங்குமிடத்தில்
“வீடுதிரும்ப
தயாராகிக் கொண்டிருக்கும்
தையல்கடை நண்பரோடும்”

பெரும்பாலும் நம் நாட்டில் புரட்சி பரவாமல் மக்கள் எல்லோரும் நமத்துப் போன தீக்குச்சிகளாகக் கிடப்பதற்கு என்ன காரணம் என்று அடிக்கடி யோசிப்பேன். வாழ்க்கையின் சிரமங்கள் தீக்குச்சிகளின் தலையில் நீர் தெளித்துவிடுகின்றன.
மனிதர்கள் கரும்புகளைப் போன்றவர்கள். பிழியப் பிழிய ருசியின் சாறுகள். ஆனால் பிழிந்த பின்பு? அன்றாடங்களைத் தள்ளுவதற்கே அல்லல் படுகிறார்கள். மூச்சு முட்டுகிறது. முழி பிதுங்குகிறது. சாறெடுக்கப்பட்ட கருப்பஞ்சக்கைகள் குப்பைக்குத்தானே ஆகும்?

பிழைப்பு வாதம் ஒரு சீறும் சிங்கத்தையே தெருவில் அலையும் நாயாக்கிவிடுகிறது. இவ்வளவுக்குப் பிறகும் வருகிற வழியில் அண்டை நாட்டு நிகழ்வுகளையும் உள்நாட்டு அரசியலையும் பேசுகிற சில பிரகிருதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்! இப்படிப் பேசுவதை ஓர் அரசியல் செயல்பாடாகவும் மானுடக் கடமையாகவும் செய்கிறான் இந்தக் கவிஞன். கவலைகளைக் கலந்துரையாடல்களின் மூலம் களைய நினைக்கிறான் கவிஞன். ஆனால் கொரோனா காலம் ஒவ்வொருவனையும் வீட்டில் முடக்கிப் போட்டு உணர்வுகளை அடக்கிப் போட்டுவிட்டதே என்று அங்கலாய்க்கிறான்.
“அண்டை நாட்டு
நிகழ்வுகளையும்
உள்நாட்டு அரசியலையும்
குடும்ப வலிகளையும்
சின்னச்சின்ன
மகிழ்வுகளையும்

பரிமாறிக் கொள்ளும்
வாய்ப்பினை இழந்து

அலை பேசியோடும்
தொலைக் காட்சியோடும்
போராடுகிற நிலையில்
வீட்டுக்குள் முடக்கிய
இந்த;f கொரோனா கால
” லாக் டவுன் ”
மனநலத்தைச் சோதிக்க

உள்ளுணர்வில்
மனதை மௌனமாக
உறுத்திக் கொண்டேயிருக்கிறது”

அவனை ஒரு விஷயம் உறுத்திக் கொண்டேயிருக்கிறதாம். அது என்ன விஷயம்? அதுதான் கவிதையின் உயிர் முடிச்சு. தனக்குக் கொரோனா கொடுத்த தண்டனையைக் காலமெல்லாம் ஒருத்தி வீட்டுச் சுவர்களுக்குள்ளேயே அடைந்து கிடந்து அனுபவிக்கிறாளே என்று குற்றவுணர்ச்சியில் குறுகுறுக்கிறான் கவிஞன்.
“வீட்டுச் சுவர்களை
தனது எல்லைகளாக்கி
நாட்களை நகர்த்தும்
வாழ்க்கைத் துணையின்
வலி…’”

மண்தரையில் நீர் பரவுவதைப் போல வலி கவிதை முழுவதும் பின்னோக்கிப் பரவுகிறது. இப்படிப் பரவும் “மன உறுத்தல்” தான் இந்தக் கவிதையின் ஆகப் பெரும் வெற்றி.

” வலி ”
*********

காலை வேளையில்
இணைந்து நீராடும்
நண்பர்களோடும்

பணிக்குத் திரும்புகையில்
புன்னகைக்கும்
உள்ளூர் உறவுகளோடும்

பேருந்து நிறுத்தத்தில்
பத்துநிமிட
தோழர்களோடும்

அருகாமை இருக்கைகளில்
பயணிக்கும்
நாற்பது நிமிட நேர
சக பயணிகளோடும்

பணியிடத்தில்
பத்துமணி நேர
உடன் ஊழியர்களோடும்

புதிது புதிதாய்
நிதமும் சந்திக்கும்
வாடிக்கையாளர்களோடும்

இரவு வீடு திரும்புகையில்
மாமூலாகப் பயணிக்கும்
பேருந்தின்
நெருக்கமான நடத்துனர்களோடும்

இறங்குமிடத்தில்
வீடுதிரும்ப
தயாராகிக் கொண்டிருக்கும்
தையல்கடை நண்பரோடும்

அண்டை நாட்டு
நிகழ்வுகளையும்
உள்நாட்டு அரசியலையும்
குடும்ப வலிகளையும்
சின்னச்சின்ன
மகிழ்வுகளையும்

பரிமாறிக் கொள்ளும்
வாய்ப்பினை இழந்து

அலை பேசியோடும்
தொலைக் காட்சியோடும்
போராடுகிற நிலையில்
வீட்டுக்குள் முடக்கிய
இந்த கொரோனா கால
” லாக் டவுன் ”
மனநலத்தைச் சோதிக்க

உள்ளுணர்வில்
மனதை மௌனமாக
உறுத்திக் கொண்டேயிருக்கிறது

வீட்டுச் சுவர்களை
தனது எல்லைகளாக்கி
நாட்களை நகர்த்தும்
வாழ்க்கைத் துணையின்
வலி…

ஐ.தர்மசிங்
நாகர்கோவில்…

கவிதைச் சந்நதம் தொடர் 28 : கவிதை  ஜெயாபுதீன் – நா.வே. அருள்

கவிதைச் சந்நதம் தொடர் 28 : கவிதை ஜெயாபுதீன் – நா.வே. அருள்
நினைவுகளை எரித்தல்
*****************************
‘’ஒரு மனிதன் இறந்த பிறகு என்ன மிச்சமாகிறது?…” கவிஞன் கணக்கெழுதுகிறான். சுடுகாட்டில் சில எலும்புத் துண்டுகளும்… சில உதடுகளின் உச்சுக் கொட்டுதல்களும்! அவ்வளவுதான். கனவுகள் கடலைவிடப் பெரிதாக விரிந்து கிடந்தன…. கடைசியில் பரந்து விரிந்த கடலுக்குள் அடையாளமே இல்லாத அஸ்தியாகக் கரைந்துவிடுகின்றன.

வாழ்க்கை முழுவதும் பேசிய வக்கணையான பேச்சு கடைசியில் விக்குள் மேல்வந்து நாக்கு விழுந்துவிடுகிறபோது வெளியில் வர முடியாமல் பிணத்திற்குள்ளேயே புதைந்துவிடுகிறது. நினைத்தால் கூட தருமம் செய்ய முடியாத நேரம் அது. நினைத்ததைக் கூடச் சொல்ல முடியாத நெருக்கடியான நிலைமை அது. இதற்கு வள்ளுவத்தை விடச் சிறந்த வாக்குமூலம் ஏது?
“நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப்படும்.” (குறள் 335)

இறந்து போனவர் படுத்திருந்த இரும்புக் கட்டிலில் படுக்கக் கூட பயமாயிருக்கிறது. அவர் உபயோகித்த பொருள்களைக் கூட பழைய இரும்பு சாமான்காரரிடம் எடைக்குப் போட்டு மரண பயத்திலிருந்து தப்பிக்கப் பார்க்கிறது மனம். சுடுகாட்டில் கிடக்கும் மெத்தையும் தலையணையும் பிச்சைக்காரர்களுக்குக் கூடப் பிரயோசனப் படுவதில்லை. இறந்து போனவரின் உடைகள் இருப்பவர்களின் மனசுக்குப் பொருந்துவதில்லை.

“மரணித்துப்போன மனிதனின்
இரும்புக் கட்டில்
முற்றத்து வேம்போரம் சாய்ந்து கிடக்கிறது
பழைய இரும்பு வியாபாரியின்
வருகைக்காக.

எரிக்கக் கொண்டுபோன மின்மயான
வாசல் குப்பைத் தொட்டியில்
மெத்தையும் தலையணையும்.

உபயோகித்த துணிகள் மூட்டையாக
வேட்டி சட்டைகள் சலவையாளுக்குக்
கொடுப்பதற்காக வேலியோரமாய்க்
கிடக்கிறது.”

எப்போதேனும் ஒரு முறை போல அவர் பயன்படுத்திய வெற்றிலைப் பெட்டியைப் பாடையிலேயே பத்திரமாக வைத்து அனுப்புகிறோம். எப்பொழுதும் விரலிலேயே போட்டிருந்த மோதிரத்தை மறக்காமல் கழற்றிக் கொள்கிறோம். அவரிருந்த வீட்டில் இப்போது படத்திற்கு மட்டும்தான் அனுமதி. அது கூட பூஜையறையில் அல்ல… கூடத்தில் ஆணி அறைந்து மாட்டிவைக்கப்படுகிறது அவரது நிழற்படச் சிலுவை!

அவர் தன் வாழ்நாள் முழுவதும் அலைந்து திரிந்து சேர்த்துவைத்த அத்தனை சொத்துகளையும் ஒரு தாளில் பொதிந்து காட்ரெஜ் பீரோவில் கவனமாகப் பூட்டி வைத்தபின்புதான் அவரை வழிகூட்டி அனுப்புகிறோம். அவர் போனவுடனே அவர் எண்ணி எண்ணிப் பார்த்த பணத்தாள்கள் செல்லாமல் போய்விடுவதில்லை.

“வெற்றிலைப் பெட்டியும்
கண் கண்ணாடியும்
அவருக்குப் பிரியமான மூக்குப்பொடி டப்பாவும் பாடையுடன் கொண்டு போக

இடதுகை மோதிரமும்
வெள்ளி அரைஞாணும் சாமி மாடத்தில்.

தனிச் சுடராய்க்
குத்துவிளக்கெரிய புகைப்படம்

தவிர சுவடற்றுப் போன மனிதரின் விலைமதிப்புள்ள சொத்துப் பத்திரங்களும் வங்கிப்புத்தகமும் பணத்தாள்களும்
உறங்குகிற அறை கவனமாகப்
பூட்டிக்கிடக்கிறது.”

தெருவில் இறைந்துகிடக்கும் ரோசாப் பூக்கள், சில சில்லறைக் காசுகளைப் போல அவரது நினைவுகள் சுழன்றாலும் கொஞ்ச நேரத்தில் தெருவாசிகள் பெருக்கி வாரிவிடுவதைப்போல மனசும் கொஞ்ச நாளில் அனைத்தையும் சுத்தம் செய்து கொள்கிறது. நகரங்களிலோ அப்படியான அவசியம் கூட இல்லாமல் அத்தனையும் காற்றில் அடித்துப் போய்விடுகின்றன.

இறந்து போனவர்களைப் புகழ்வது போல அவர்களின் தடங்களை அழித்துவிடுவதாகப் புகார் செய்கிறான் கவிஞன். புகழ்வது கூட இல்லையாம்… புகழ்வதான பாவனைகளாம்… தெருவைச் சுத்தம் செய்கிற தெருவாசிகளின் துடைப்பங்கள் அழிப்பான்கள் போலத் தோற்றம் தருகின்றன. பெருக்கித் தள்ளுவதைச் சுவடுகளை அழிப்பதற்கானக் குறியீடாகப் பயன்படுத்துகிறான் கவிஞன். இறந்து போனவர்கள் கொஞ்ச நாளில் மறந்து போனவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள்!

“பிணவூர்தி கடந்ததும்
பொரியும் சாமந்திப்பூக்களும்
சில்லறைக் காசுகளும்
இறைந்து கிடக்கிற தெருவைத் துடைப்பங்களால் துப்புரவு செய்து
நீர் தெளித்துக் கழுவிவிடுகிற
தெருவாசிகள்

நினைவுகூர்வதான, புகழ்வதான பாவனைகளுடனே
சகஉயிர் வாழ்ந்த தடயங்களை
சுவடின்றி அழிப்பதில்
குற்றவுணர்வேதும் கொள்வதேயில்லை
குரூர மனிதர்கள்.”

// கையொழித்தல் //

மரணித்துப்போன மனிதனின்
இரும்புக் கட்டில்
முற்றத்து வேம்போரம் சாய்ந்து கிடக்கிறது
பழைய இரும்பு வியாபாரியின்
வருகைக்காக.

எரிக்கக் கொண்டுபோன மின்மயான
வாசல் குப்பைத் தொட்டியில்
மெத்தையும் தலையணையும்.

உபயோகித்த துணிகள் மூட்டையாக
வேட்டி சட்டைகள் சலவையாளுக்குக்
கொடுப்பதற்காக வேலியோரமாய்க்
கிடக்கிறது.

வெற்றிலைப் பெட்டியும்
கண் கண்ணாடியும்
அவருக்குப் பிரியமான மூக்குப்பொடி டப்பாவும் பாடையுடன் கொண்டு போக

இடதுகை மோதிரமும்
வெள்ளி அரைஞாணும் சாமி மாடத்தில்.

தனிச் சுடராய்க்
குத்துவிளக்கெரிய புகைப்படம்

தவிர சுவடற்றுப் போன மனிதரின் விலைமதிப்புள்ள சொத்துப் பத்திரங்களும் வங்கிப்புத்தகமும் பணத்தாள்களும்
உறங்குகிற அறை கவனமாகப்
பூட்டிக்கிடக்கிறது.

பிணவூர்தி கடந்ததும்
பொரியும் சாமந்திப்பூக்களும்
சில்லறைக் காசுகளும்
இறைந்து கிடக்கிற தெருவைத் துடைப்பங்களால் துப்புரவு செய்து
நீர் தெளித்துக் கழுவிவிடுகிற
தெருவாசிகள்

நினைவுகூர்வதான, புகழ்வதான பாவனைகளுடனே
சகஉயிர் வாழ்ந்த தடயங்களை
சுவடின்றி அழிப்பதில்
குற்றவுணர்வேதும் கொள்வதேயில்லை
குரூர மனிதர்கள்.

ஜெயாபுதீன்

கவிதைச் சந்நதம் தொடர் 27 : கவிதை  சோலை.பழநி – நா.வே. அருள்

கவிதைச் சந்நதம் தொடர் 27 : கவிதை சோலை.பழநி – நா.வே. அருள்
கால மரம்
************
மனிதனை விட மரங்களுக்கு ஆயுள் அதிகம். பல நிகழ்வுகளைப் பார்த்த மரங்கள் மௌன சாட்சியாக நின்றிருக்கின்றன. சுந்தர ராமசாமியின் “ஒரு புளிய மரத்தின் கதை” ஒரு ஊருக்கே சாட்சியாக நின்றிருக்கிறது. உண்மையில் சு.ரா. தனது ஊரில் கண்டது வேப்ப மரம். நாவலுக்காக வேப்பமரம் புளிய மரமாகிவிட்டது என்று சு.ரா அவர்களே சொன்னதாக நினைவு.. இந்தக் கவிதையில் வருகிற ஆலமரம் உண்மையில் காலமரம்; பல காட்சிகளின் சாட்சியம். காலம் என்னும் சதுரங்கத்தில் மனிதன் நகர்த்தப்படும் காய்… அவ்வளவுதான். காலத்தின் வேர்களைக் கண்டுபிடிக்க அறிவியல் இன்னும் அகழ்வாராய்ச்சி நடத்திக் கொண்டேயிருக்கிறது.

கவிஞனிடம் காலம் வேறு வகையில் பயன்படுகிறது. கால மரம் தன் நினைவுகளைத் தானே அகழ்ந்தெடுக்கிறது. அகழ்ந்தெடுக்க அகழ்ந்தெடுக்க ஆழம் அதிகரித்துக் கொண்டே செல்வதுதான் காலத்தின் கதை. அறிவியலில் அகப்படாத காலத்தின் சூட்சுமத்தை வரலாற்றில் கண்டுபிடிக்கிறான் கவிஞன்.
“நான்
வயதான ஆலமரம்
நூறு கால் மண்டபமாய்.

என் வேர் எதுவென்று
நிறைய பேர்
ஆராய்ச்சி செய்தார்கள்
காணத்தான் முடியவில்லை.”

கால மரம் கவனித்துக் கொண்டேயிருக்கப் பல அரசியல் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இந்த மண்ணையும் மனிதர்களையும் புரட்டிப் போட்ட மகாத்மா முதல் பாட்டுக்களாலேயே வையத்தைப் பாலித்திட வந்த பாரதி வரை கால மரத்தின் நிழலில் நிற்காதவர்களே இல்லை.
“எங்களூருக்கு
மகாத்மா வந்தபோது
என்னடியில்தான் கூட்டம்.

மரக்கிளைகளில் எல்லாம்
மனிதர்கள்
காய்த்ததைப் பார்த்திருக்கிறேன்.

பாரதி ஒருமுறை
என் நிழலின் கீழிருந்துதான்
கனகலிங்கத்திற்கு
பூணூல் மாட்டி காயத்ரி மந்திரம்
ஜெபிக்கச் சொன்னதைக் கேட்டிருக்கிறேன்”.

காலம் தனது வரவு செலவு கணக்கை மனிதர்களை வைத்துத்தான் சரி பார்த்துக் கொள்கிறது. காலம் யாருக்கும் தயவு காட்டுவதில்லை. காலம் யாருக்கும் வஞ்சனை செய்வதுமில்லை. காலம் என்பது தயவு தாட்சண்யமோ, ஓர வஞ்சனையோ பார்க்காத இயற்கையின் அறம்.
காலமெல்லாம் ருசிக்க அமுதக் கனிகளாகக் காய்த்தவர்கள் பெரியார், ஜீவா, காமராஜர் என்கிறது கால மரம். வரலாறு வரிகளாக ஆகியிருக்கின்றன. மறந்து போகக் கூடிய மனிதர்களுக்கு மருந்தாகியிருக்கிறது கவிதை. சில நேரங்களில் கசப்பு மருந்தாக….
“பெரியார்
இளைஞர்களுக்கு
அறிவாயுதம் கொடுத்ததெல்லாம்
என் மடியில்தான்.

முள் குத்திக் கொள்ளாமல்
சுட்ட கருவாட்டை
பிய்ச்சி எடுத்து ஊட்டுவதுபோல்
கஞ்சிக்கிலாக் காரணம் கூறி
தீப்பொறியைப் பற்றவைத்த
தோழர் ஜீவா
இரவெல்லாம் படுத்துக் கிடந்ததும்
என் வேரில்தான்.

ஆல மரத்தடியை
ஆரம்பப் பள்ளியாக்கி
மாடு மேய்த்த பிள்ளைகளை
மாணவர்களாக்கி மகிழ்ந்த
காமராசருக்கு
நிழல் கொடுத்து நின்றதும் நான்.”

1967 இல் திராவிடத்தின் திருவிளையாடல் தொடங்குகிறது. அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று அடுத்தடுத்து நிகழ்ந்த ஆட்சி மாற்றங்களை நினைவுகூர்கிறது. சுவற்றில் ஒரு வெடிப்பு போல காட்சி தந்தது காலப் போக்கில் சுவரே இடிந்து விழுந்துவிடுகிறது. ஒரு சின்ன நிகழ்வு போலத் தோற்றம் தந்த ஒன்று பெரிய பிளவாக மாறியதைக் காலம் கூறாமல் கூறி குமைகிறது.

என் உச்சி முடியில் கொடிகட்டும்
தம்பிகளின்
மன சிம்மாசனத்தில் இருந்து
அழகு தமிழ்பேசி
அன்பால் அரசாண்ட
அண்ணாவின்
அடுக்கு மொழிக்கு மேடையும் நான்.

அரசு கட்டிலானாலும்
முரசு கட்டிலானாலும்
வார்த்தை ஜால வித்தைக்காரர்
கலைஞருக்கு
கோடையிலே இளைப்பாற
நிழல்கொடுத்த குளிர் தருவும் நான்.

பொன்மனச் செம்மல்
புரட்சித் தலைவியென
எத்தனையோ தலைவர்கள்
என்னடியில் கூட்டமிட்டு
எழுச்சியைக் காட்டுவார்கள்.

அப்போதெல்லாம்
நான்
அகம் மகிழ்ந்து
குளிர்ந்த காற்றெடுத்து
கூட்டத்தார் மேனியெலாம் பூசி
மகிழ்வித்திருக்கிறேன்.

குளிர்காலம், மழை காலம், இளவேனிற் காலம், முன்பனி காலம், பின்பனி காலம், வசந்த காலம் என்று பருவ காலங்களைப் பார்ப்பதுதான் ஆலமரம். பல அரசியல் காலங்களைப் பார்ப்பது கால மரம். எப்படி எப்படியான அரசியல் முழக்கங்கள், கொள்கைக் கூட்டங்கள், பிளவுகள், பிரிவினைகள்…. ஆனால் மனிதநேயமே அடிப்படையாய் இருந்தது. மனித நேய நூல்களாலான அரசியல் இழைகள். இழைகள் அத்தனையையும் இணைத்துச் சேலைகள் நெய்வதே ஆட்சியதிகாரம். இப்போதெல்லாம் மதம், சாதி, இனம் என்று பிரிவினை பேசும் பிற்போக்கு ஆணவங்கள். அம்மணமே ஆடையாகும் அவலநிலை. நினைவுகளைச் சுமந்த மரம் நிர்க்கதியாக நிற்கிறது. இலைகளை உதிர்த்து எதிர்ப்பைச் சொன்ன மரம் நிழலையும் உதிர்க்க நினைக்கிறதோ?
“மனிதர் நோக மனிதர் சாக
மகுடி ஊதும்
மதவெறிக் கூட்டமின்று
என் நிழலில்
கூடாரம் அடிப்பதைக் கண்டு
தடுக்க முடியாமல்
ஓர் இலைகூட இல்லாமல்
உதிர்த்துவிட்டேன்
இனி
சூரியன்தான் சுட வேண்டும்.”

– சோலை பழநி

நான்
வயதான ஆலமரம்
நூறு கால் மண்டபமாய்.

என் வேர் எதுவென்று
நிறைய பேர்
ஆராய்ச்சி செய்தார்கள்
காணத்தான் முடியவில்லை

எங்களூருக்கு
மகாத்மா வந்தபோது
என்னடியில்தான் கூட்டம்.

மரக்கிளைகளில் எல்லாம்
மனிதர்கள்
காய்த்ததைப் பார்த்திருக்கிறேன்.

பாரதி ஒருமுறை
என் நிழலின் கீழிருந்துதான்
கனகலிங்கத்திற்கு
பூணூல் மாட்டி காயத்ரி மந்திரம்
ஜெபிக்கச் சொன்னதைக் கேட்டிருக்கிறேன்.

பெரியார்
இளைஞர்களுக்கு
அறிவாயுதம் கொடுத்ததெல்லாம்
என் மடியில்தான்.

முள் குத்திக் கொள்ளாமல்
சுட்ட கருவாட்டை
பிய்ச்சி எடுத்து ஊட்டுவதுபோல்
கஞ்சிக்கிலாக் காரணம் கூறி
தீப்பொறியைப் பற்றவைத்த
தோழர் ஜீவா
இரவெல்லாம் படுத்துக் கிடந்ததும்
என் வேரில்தான்.

ஆல மரத்தடியை
ஆரம்பப் பள்ளியாக்கி
மாடு மேய்த்த பிள்ளைகளை
மாணவர்களாக்கி மகிழ்ந்த
காமராசருக்கு
நிழல் கொடுத்து நின்றதும் நான்.

என் உச்சி முடியில் கொடிகட்டும்
தம்பிகளின்
மன சிம்மாசனத்தில் ருந்து
அழக தமிழ்பேசி
அன்பால் அரசாண்ட
அண்ணாவின்
அடுக்கு மொழிக்கு மேடையும் நான்.

அரசு கட்டிலானாலும்
முரசு கட்டிலானாலும்
வார்த்தை ஜால வித்தைக்காரர்
கலைஞருக்கு
கோடையிலே இளைப்பாற
நிழல்கொடுத்த குளிர் தருவும் நான்.

பொன்மனச் செம்மல்
புரட்சித் தலைவியென
எத்தனையோ தலைவர்கள்
என்னடியில் கூட்டமிட்டு
எழுச்சியைக் காட்டுவார்கள்.

அப்போதெல்லாம்
நான்
அகம் மகிழ்ந்து
குளிர்ந்த காற்றெடுத்து
கூட்டத்தார் மேனியெலாம் பூசி
மகிழ்வித்திருக்கிறேன்.

மனிதர் நோக மனிதர் சாக
மகுடி ஊதும்
மதவெறிக் கூட்டமின்று
என் நிழலில்
கூடாரம் அடிப்பதைக் கண்டு
தடுக்க முடியாமல்
ஓர் இலைகூட இல்லாமல்
உதிர்த்துவிட்டேன்
இனி
சூரியன்தான் சுட வேண்டும்.

– சோலை பழநி

கவிதைச் சந்நதம் தொடர் 26 – நா.வே. அருள்

கவிதைச் சந்நதம் தொடர் 26 – நா.வே. அருள்
கவிதை – வில்லியம்ஸ்
காதல் ஒரு குப்பை வண்டி
******************************

காதலின் எதிரிடையே கவிதையாகியிருக்கிறது.  ஒரு வகையில் இது காதலின் எதிர் கவிதை. உருகி உருகி எழுதும் காதல் கவிதை நரம்பை முறுக்கி முறுக்கி மீட்டும் வீணை இசை போன்றதுதான். ஒரு கட்டத்தில் அதிக முறுக்கத்தில் வீணையின் நரம்பு அறுந்துவிடுவதுபோல அதீத உணர்ச்சியில் காதல் பகடியாகிவிடுகிறது. வயசையே பகடியாக்கிவிடுகிறது வாழ்க்கை. வயதானபின் காதல் நினைவுகளே சிரித்துக் கடந்துவிடுகிற சில்லறைத்தனமாகத் தெரிகின்றன. காதலன் சொல்லுகிறான்; காதலி எள்ளுகிறாள். மும்தாஜுக்காகக் கட்டிய காதல் தாஜ்மகால் முதுமையில் ஷாஜகானுக்கு மூட்டுவலியாகிறது.  காதல் நிறைவேறவில்லை. காதலிக்காகக் கட்டிய பழைய தாஜ்மகாலை கவிஞன் பகடியின் மூலம் காதலியிடம் காட்டுகிறான்.  வேறொரு ஷாஜகானுடன் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மும்தாஜுக்குத் தாஜ்மகால் ஒரு மேட்டரே இல்லை. பழைய காதலி காதலனையும் தாஜ்மகாலையும் தட்டி விடுகிறாள். பொல பொலவெனச் சரிந்து விழுகிறது பொற்கோட்டை.

இந்தக் கவிதை வில்லியம்ஸின் வித்தகம். பக்கம் பக்கமாய்க் கிழியும் காதல் புத்தகத்தின் ஒவ்வொரு தாளும் நம் கண்முன்னே பகடியின் காற்றில் படபடத்துப் பறக்கின்றது!

தண்ணீரைக் கொடுத்து அமுதம் என்று சொன்னது ஞாபகத்தில் தள்ளாடுகிறது. என்ன செய்வது?  இந்த வயதில் எச்சில் ஊற மறுக்கிறது.

காதலும் மழையைப் போலத்தான். மழைத் துளிகள் என்பதென்னவாம்? காற்றும் தண்ணீரும் ஆடும் கண்ணாமூச்சிதானே? கவிதை தன் கேமராவில் படப்பிடிப்பு நடத்திவிடுகிறது. ஆனால் இது பழைய படப்பிடிப்பு; பகடிப் படப்பிடிப்பு!

“வீட்டெதிரே
புதிய தேநீர் கடைக்கு உன் பெயர்
அப்படியா
கல்யாணம் ஆனதிலிருந்து
நான் காபி பிரியையாகி விட்டேன்”
காதலி நெற்றியடியைத் தொடங்கிவைக்கிறாள்.  திருமணம் நடக்கவில்லை. தேநீர் கடை தன் பெயரில் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?  “நான் காபி பிரியையாகி விட்டேன்” என்கிற ஒற்றை வரியில் வாழ்க்கையின் திசை மாற்றத்தை வரைபடமாய்த் தீட்டிவிடுகிறான் கவிஞன். வாழ்க்கை தடம் மாறிப் போனதை உணர்த்தும் சூசகச் சொற்கள் இவை. காபி பிரியையாகிவிட்டேன் என்பது ஒரு துயரம் எவ்வளவு இயல்பாகக் கடக்கப்படுகிறது என்பதை உணர்த்தும் காதல் வரி… காதலின் கானல் வரி.

“என் பெயரைத் தானே
வைத்திருக்கிறாய் குழந்தைக்கு
யார் சொன்னது
பிறந்தது இரண்டும் பெண்ணாச்சே”

காதலி அடுத்துப் பிரயோகிக்கும் பிரம்படி.  இவ்வரிகள் நமக்கு உணர்த்துவது யதார்த்த வாழ்வுக்குள் பொதிந்திருக்கும் எதேச்சாதிகாரத்தை…. ஆனால் இயல்பாக…. வெகு இயல்பாக… இருவரையும் வாழ்க்கை இடம் மாற்றிப் போட்டுவிட்டது. காரணம் யாராகவும் இருக்கலாம். எதுவாகவும் இருக்கலாம். எதையுமே சுட்டவில்லை கவிஞன். கவிஞன் சுட்ட நினைத்தாலும் கவிதை இடங் கொடுக்கவில்லை. தன் காதலிக்கு இரண்டுமே பெண் பிள்ளைகள் என்பதைக் கூட அறிந்து வைத்தில்லாத வாழ்க்கையைத்தான் வாழ்கிறான் காதலனும்.  இந்த வாழ்க்கையின், காதலின் அபத்தத்தைத்தான் நினைத்துக் கொள்ள வைக்கிறது கவிதை.

“அடிக்கடி பாடச் சொல்லிக் கேட்பாயே
அந்தப் பாட்டை பாடட்டுமா
வேண்டாம்.. உனக்குக் குரல்
இன்னும் சரியாக வரவில்லை”

பொய் சொல்லித் திரிந்த காலமெல்லாம் போயே போய் விட்டது. நீயே போய் விட்டாய். காதல் செடியே கருகிவிட்டது. பஞ்சப் பாட்டுப் பாடும் காலத்தில் என்ன பருவப்பாட்டு  இது யதார்த்தத்தின் நெருப்பு…காதல் குளிர் காயவே முடியாது. வாழ்வின் சூட்டிலேயே வெப்பம் தகிக்கிறது. எங்கே குளிர் காய? இளஞ் சோலையாய்த் தெரிந்தது இன்று எரிமலையாய்க் கங்குகளைக் கக்குகிறது. வயதான பின் வாழ்க்கை என்பது வெறும் நினைவுச் சுரப்பிகளின் நீரோட்டம்தானே?

“மறதி அதிகமாகி விட்டது
பிறந்த நாள் பதினெட்டா பத்தொன்பதா
வாழ்த்தனுப்ப வேண்டுமே
அவசியமில்லை
ஐந்தாறு வருடங்களாக
கொண்டாடுவதில்லை”

கறை நல்லது என்பது போல, காலம் கடந்தபின்பு காதலுக்கு மறதி நல்லது. வயது கடந்தாலும் வாழ்த்தட்டை அனுப்ப உணர்ச்சி உந்துகிறது. மூளை முடங்கிவிட்டது.  முடியவில்லை. மறதியின் சகதியில் கால்கள் சிக்கிக் கொள்கின்றன. வாலிபத்தில் வசந்தங்களாக இருந்த பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வயதானபின்பு அர்த்தங்களை இழந்துவிடுகின்றன. மரத்தில் இருப்பதை விட இலைகள் கீழே கிடந்தால்தான் அழகு… இலையுதிர் காலமல்லவா?

“உன் உள்ளங்கையில் ஊர்ந்த
பட்டுப்புழு
மோட்சம் பெறும்
இன்னும் நீ திருந்தவேயில்லையா”

பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும் பழைய ரொமாண்டிக் வார்த்தைகள் காதலிக்குக் குமட்டுகின்றன.  எட்டிக்காயாய் வரும் எரிச்சல் வார்த்தைகள். இது வேறொரு வீடு; வேறொரு தாழ்வாரம!  பழைய தாவணி பஞ்சு பஞ்சாய் நைந்துவிட்டது. மோட்சம் பெறாததனால்தான் பட்டுப் புழு பட்டாம் பூச்சியான பிறகும் பழைய பூவின் நினைப்பில் பறக்க முடியாமல் பறந்து கொண்டிருக்கிறது. இப்போது பட்டாம் பூச்சிக்கு இருப்பவை சிறகுகள் அல்ல… மூப்பின் முறங்கள்.

“நினைத்தவுடன் வந்து நிற்பாய்
உனக்கு நூறு வயது என்பேன்
பழைய பென்ஷன் இல்லையே
சோறு யார் போடுவது”

ஒரு சிற்பி சிலையை எல்லாம் செதுக்கிவிட்டுக் கடைசியில்தான் கண் திறப்பான்.  அப்படியான ஒரு கண்திறப்புத்தான் “பழைய பென்ஷன் இல்லையே சோறு யார் போடுவது?” என்ற வரி. இங்குதான் வாழ்க்கை என்னும் சிற்பி வடித்தெடுத்த காதல் சிலை கண் சிமிட்டுகிறது.  சமையல் மட்டுமே நோக்கமாக இருக்கிற முதலாளிய சமூகத்தின் சமையலறையில் காதல் கூட கத்தரிக்காய்தான்.  கூட்டோ பொரியலோ… வயிற்றோடு சரி வாழ்க்கை!  இலக்கியத்தில் வேண்டுமானால் வாழ்ந்து கொண்டிருப்பதாய் கற்பிதம் செய்துகொள்ளலாம்.  ஆனால் யதார்த்தத்தில் செத்துப் போயாச்சு. தடம் இன்றி அழிந்தே போயாச்சு. வாலிபம் காதலை வாசனை திரவியங்களின் குவியல் என்று பேசலாம்… ஆனால் இந்தச் சமூகத்தைப் பொறுத்தவரை காதல் ஒரு குப்பை வண்டிதான்.  கவலைப்படுவதற்குக் கண்கள் இல்லை.  பொத்திக் கொண்டு போவதற்கு மூக்குகள்தான் இருக்கின்றன!

“சந்திக்காமலிருப்பதே நலம்
நேரில் பார்த்தால் அழுதுவிடுவேன்
அப்படியா
நான் சிரித்து விடுவேன்”

ஆண் சதா கற்பனையில் மிதக்கும் இம்சை அரசன் இருபத்து மூன்றாம் புலிகேசி. பெண் யதார்த்தம் புரிந்த பிரபஞ்சப் பிரத்தியட்ச வாசி.  அவள் காதலனைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்தபடியே கழிவிரக்கம் கொள்ளுகிறாள்.  நான் சிரித்துவிடுவேன் என்று வடிவேல் வசனம் பேசுகிறாள்.  கவிஞன் எதையுமே வெளிப்படையாக எழுதவில்லை. ஆனால் வாழ்க்கை எப்படி ஒரு காதலைக் குப்பைக் கூடையில் போட்டுவிட்டுத் தேமே என்று போய்விடுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த உணர்ச்சிகள் எதுவுமே தோன்றாத வண்ணம் பகடியின் மூலம் மூடி வைத்துவிடுகிறான் கவிஞன். கண்டுபிடிக்க வேண்டியது வாசகன்தானே?

காதலும் ஓய்வதில்லை
*************************
(ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்)
வீட்டெதிரே
புதிய தேநீர் கடைக்கு உன் பெயர்
அப்படியா
கல்யாணம் ஆனதிலிருந்து
நான் காபி பிரியையாகி விட்டேன்

என் பெயரைத் தானே
வைத்திருக்கிறாய் குழந்தைக்கு
யார் சொன்னது
பிறந்தது இரண்டும் பெண்ணாச்சே

அடிக்கடி பாடச் சொல்லிக் கேட்பாயே
அந்தப் பாட்டை பாடட்டுமா
வேண்டாம்.. உனக்குக் குரல்
இன்னும் சரியாக வரவில்லை

மறதி அதிகமாகி விட்டது
பிறந்த நாள் பதினெட்டா பத்தொன்பதா
வாழ்த்தனுப்ப வேண்டுமே
அவசியமில்லை
ஐந்தாறு வருடங்களாக
கொண்டாடுவதில்லை

உன் உள்ளங்கையில் ஊர்ந்த
பட்டுப்புழு
மோட்சம் பெறும்
இன்னும் நீ திருந்தவேயில்லையா

நினைத்தவுடன் வந்து நிற்பாய்
உனக்கு நூறு வயது என்பேன்
பழைய பென்ஷன் இல்லையே
சோறு யார் போடுவது

சந்திக்காமலிருப்பதே நலம்
நேரில் பார்த்தால் அழுதுவிடுவேன்
அப்படியா
நான் சிரித்து விடுவேன்

வில்லியம்ஸ் 

Mauny's Literature Book By Jamalan Book Review By N.V. Arul நூல் அறிமுகம்: ஜமாலனின் “மௌனியின் இலக்கியாண்மை” - நா.வே.அருள்

நூல் அறிமுகம்: ஜமாலனின் “மௌனியின் இலக்கியாண்மை” – நா.வே.அருள்
பிம்பங்களின் கடை வீதியில்…
***********************************
பிம்பங்களின் அரசியல்தான் இலக்கியமாகிறது.  எழுத்து வாசகன் மீது பிரயோகிக்கப்படும் ஆயுதம். ஓர் இலக்கியப் பிரதி என்பது எண்ணற்ற கொடி வழிகளைக் கொண்டிருக்கும் அடர்ந்த காடு.  வாசகன் ஒரு தேர்ந்த வழிப்போக்கனாக மாறுவதே அவன் காட்டு வழிப் பாதையில் விலங்குகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள ஒரே வழி. நான் பொத்தாம் பொதுவாக கண்ணை மூடிக்கொண்டு ஒரு வழியில் போவேன் என்று அடம்பிடித்தால் அப்படியான வாசக வழிப்போக்கன் காட்டைக் கடக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

“மௌனி சிறுகதையின் திருமூலர்” என்கிற ஒற்றை வரி போதுமானதாக இருந்தது.  தில்லையை நோக்கி நந்தனைப் போல  மௌனியை நோக்கி ஓட ஆரம்பித்தேன்.  முதலில் அவரது மொழியின் திருகலே என்னைத் திணறடித்தது. அவர் முயலைக் கழுத்தைப் பிடித்துத் தூக்குவார்.  ஏன் இந்த மொழி பிடிபட மாட்டேன் என்கிறது என்று  கைகளையும் கால்களையும் உதைத்துக் கிடந்தேன்.  இலக்கணம் என்ற ஒன்று தமிழுக்கு உண்டுமா?  அது வேண்டுமா? என்கிற அளவிற்கான மனக்குழப்பத்தில் சிதைந்து போனேன். தான் நினைத்ததைப் பிறருக்குச் சிந்தாமல் சிதையாமல் கடத்த முடியுமா என்பது ஐயம்தான்.  என்றாலும் ஓரளவிற்கேனும் கருத்துக் கடத்தியாக இலக்கணம்தான் செயல்படுகிறது.  அப்படியான இலக்கணத்தைச் சிதைப்பதின் மூலம் தான் நினைப்பது ஒன்றாகவும் சென்று சேர்வது வேறொன்றாக மாறிவிடும் அபாயம் நிகழ்கிறது.   இது பற்றி ஆய்வாளர் ஜமாலன் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்… “மௌனியின் தமிழ் மேலோட்டமாக பார்க்கும்போது தமிழ் வாக்கிய அமைப்பிலிருந்து திமிறி, அதன் மரபுகளை மீறிய ஒன்றால், அதர்க்கத்தைக் கொண்டதாகத் தோன்றும், அவரது மொழி, உயர் கணிதத்தைப் போல அதீத தர்க்க ஒழுங்கைக் கொண்டது.

தரிசன வாசிப்புகள் அல்லது ரசனை வாசிப்புகள் நம்மை வழி நடத்துகிறபோது என்ன நிகழ்ந்தது?  ‘அதீத பிம்பமாக்கல்’ என்கிறார் ஆய்வாளர் எஸ்.சண்முகம்.  இப்படியான வாசிப்பு மௌனியை ஒரு எட்டாத உயரத்தில் இருத்தி வைக்கிற ஏற்பாட்டைச் செய்துவிடுகிறது. தரிசன வாசிப்பு உன்னதத்தின் வடிவமாக மௌனியின் எழுத்துகளை முன்மொழிந்திருக்கிறது.  கதையாடல்களின் கவித்துவத்தையும் வடிவ கச்சிதத்தையும் விதந்தோதி பல்லக்கு தூக்குவதற்கு நம்மையறியாமலேயே நாம் தோள் கொடுக்க ஆரம்பிக்கிறோம்.

மௌனியின் சிறுகதைகள் என்ன செய்கின்றன?  வாசித்து முடித்தபின் ஒரு வித பிரமையை ஏற்படுத்த வல்லவை.  கதை சொல்பவனே ‘நான் அவனில்லை’ என்பது மாதிரியான ஸ்டேட்மென்டைச் சொல்ல ஆரம்பித்துவிடுவான்.  சில இடங்களில் மொழி அமைப்புகள் நம்மை ‘முழி பிதுங்க’ வைக்கும்.  ஒரே கதாபாத்திரம்  வேறு வேறு உணர்வு நிலைகளை  வெவ்வேறு வார்த்தைகளில் பித்தேறிய நிலையில் குரல் காட்டும்.  நம் மனம் நிஜ யதார்த்தங்களை மீறி நிழலாட்டங்களில் நிலை கொள்ளும்.

வாசகன் பிம்பங்களால் ஆளப்படுகிறான்.  அவனது இயக்கம் பிம்பங்களால் கட்டுப்படுத்தப் படுகிறது.  பிம்பங்களின் அதிகாரங்களால் வாசகன் தன்னிலை பிறழும் சூழ்நிலை உருவாகிறது.

இமயமலையின் பல சிகரங்களை அடைவதற்கு வழிகாட்டிகள் இருக்கிறார்கள்.  அவர்கள் மலைப் பயணங்களின் பல இரகசியங்களை தங்கள் உள்ளே புதைத்து வைத்திருக்கிறார்கள்.  அவர்கள் துணையினால் பெரும் பனிப் புயல்களை மீறிப் பயணங்கள் சாத்தியமாகி இருக்கின்றன.  மலைப் பயண வழிகாட்டிகள் பயணங்களின் அகராதிகள்.  அவர்களைப் பயன்படுத்தி சாகசப் பயணங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.  அப்படியே பொருந்தாது எனினும் இலக்கியத் திறனாய்வாளர்கள் பல விதமான மொழித் திறப்புகளையும் பிரதிகளின் சாத்தியப் பாடுகளையும் அடையாளம் காட்ட வல்லவர்களாக இருக்கிறார்கள்.  அவர்களின் வரைபடம் நிச்சயமாக ஒரு புதிய பிரதேசத்தை அறிமுகப் படுத்தும்.  அந்த வரைபடமே முடிவானது என்று சொல்ல முடியாவிடினும், அது பல புதிய பிரதேசத்தை அடைவதற்கு வாசகர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.   பிரதியின் மூடுண்ட பிரதேசத்தை நோக்கி நம்மை நகர்த்தினாலும் கூட பரிமேலழகர் உரை வழியாக திருக்குறள் என்கிற பிரதியின் தெரியாத வாசற் கதவுகள் தெரிய ஆரம்பித்தன அல்லவா? அப்படித்தான்.

தமிழ் இலக்கிய உலகில் இந்திரன் முன்வைத்திருக்கும் வாசக மைய விமர்சனம் என்பது முக்கியமானது.  அது ஓர் விமர்சகன் அதிகார மையமாக மாறுவதிலிருந்து தனது விடுதலையை வாசகன் மூலம் அடைந்துவிடுகிற இலக்கிய விடுதலை எனலாம். படைப்பாளி தனது எழுத்தின் மீது வன்முறைச் செலுத்தி வாசகர்களைத் தன் அதிகாரத்திற்கு அடிபணிய வைக்கிற ஆபத்தை நிகழ்த்துகிறபோது ஆய்வு மைய விமர்சனம் படைப்பாளியின் அதிகாரத்தை அடையாளம் காட்டுகிறது.

தரிசன விமர்சன முறை அல்லது ரசனை விமர்சன முறை மூலம் படைப்பாளியின் அதிகாரத்தைக் கட்டமைக்கிற போது வாசகன் வாசக மைய விமர்சனத்தின் மூலம் எதிர்கொள்ள முடியாமல் திணறுகிற வாய்ப்புண்டு.  அப்போதுதான் ஆய்வு மைய விமர்சனத்தின் மூலம் ஒரு தேர்ந்த திறனாய்வாளன் வாசகனுக்கு ஆயுத உதவி செய்கிறான். பாசிக்கு அடியில் ஒளிந்திருக்கும் மீன்களைப் போல வெவ்வேறு அர்த்த அடுக்குகள் பிரதியின் அடியில் சஞ்சரிக்கின்றன.  பளிங்கு நீரோட்டமான மேல் மட்டத்திலிருந்து உள் பாய்ந்து பாசிகளுக்கு அடியிலிருக்கும் மீன்களை விரல்களின் மூலம் வெளிக் கொண்டு வருகிறான் ஆய்வு மையத் திறனாய்வாளன்.

ஆய்வு மைய விமர்சனத்தின் மூலம் ஒரு திறனாய்வாளன் மொழியின் ஒரு பண்பாக இயங்குகிற சொல்லாடல்களின் வலைப் பின்னலை அடையாளம் காண்கிறான்.  சிறுகதை என்பதே ஒரு இலக்கியப் பிம்பம்தான்.  அது மேற்புறத்தில் ஒரு தோற்றத்தையும் உள்புறம் வேறொரு தோற்றத்தையும் கொண்டிருக்கிறது.  வாசக மைய விமர்சனம் என்கிற வழக்கமான தரிசனக் கண்களால் இப்படியான விமர்சனச் சிலையைக் கண்ணுறுவது கடினம்.  அதே வாசகன் ஆய்வு மைய விமர்சன விழிகளின்  மூலம் சிலை வடிவமைந்த இடுபொருள்களைக் கண்டுபிடிக்க முடியும்.  இந்த நிழலாட்டத்தைக் கண்டுபிடிக்க வாசகன் ஆய்வு நதியில் முங்க வேண்டும்.  கரையில் நின்று கவிதை எழுதிவிடுவது ஒரு நிலை.  மூழ்கிக் கூழாங்கல்லைக் கொண்டு வருவது இன்னொரு நிலை.  வாசக மைய விமர்சனமும் ஆய்வு மைய விமர்சனமும் இலக்கியத்தின் இரண்டு கண்கள்.

ஜமாலனின் “மௌனியின் இலக்கியாண்மை” ஆய்வு மைய விமர்சனத்தை நிகழ்த்துகிறது.  மௌனியின் நிழலாட்டத்தின் பின் இருக்கும் நிஜ பிம்பங்களைத் தெரியப் படுத்துகிறார்.  கலையின் பின்னால் அவர் ஒளித்துவைத்த பிரச்சாரத்தைக் கட்டவிழ்க்கிறார்.

புற உலகு அறிவாலும் அக உலகு உணர்வாலும் கட்டப் பட்டிருப்பதாக அறிகிறோம்.  இதற்கு எதிரிடையாக அக உலகை அறிவால் கட்டுப்படுத்தலைச் செய்ய நடத்திய ஒரு திருவிளையாடல் திருவிழாவாகவே கொண்டாடப் பட்டிருக்கிறது.

“மௌனியின் இலக்கிய மேலாண்மை” என்கிற நூலின் மூலம் ஜமாலன் மௌனியின் நிழற்படத்தை நம் முன் காட்டுகிறார்.  அந்த வரைபடத்தின் அட்ச ரேகைகளும் தீர்க்க ரேகைகளும் எவற்றின் நடமாடும் நிழல்கள் என்கிற ஷேக்ஸ்பியரின் வாக்கியத்திற்கான பதில்களை வழங்கியிருக்கிறார் ஜமாலன். நூலுக்குச் சிறப்பான முன்னுரையை  எஸ்.சண்முகம் அளித்திருக்கிறார்.

அறிவால் கட்டப்பட்ட மௌனியின் அக உலகின் மூன்று பிரதேசங்களை அடையாளம் காட்டுகிறார்…

1 மௌனியின் ‘சித்தாந்த’ வடிவ கணிதம்.
2 மௌனி கதைகள் – ஒரு எதிர் வாசிப்பு
3 மௌனியின் இலக்கியாண்மை.

அந்தப் பிரச்சார நெருப்பின் வெம்மை எத்தகைய தகிப்பைக் கொண்டிருந்தது என்று அறிய இந்தப் புத்தகம் மிகச் சிறந்த கையேடு.

-நா.வே.அருள்

நூல் மௌனியின் இலக்கியாண்மை
ஆசிரியர் ஜமாலன்
வெளியீடு காலக்குறி
விலை ரூ.140./–