அருள்மொழி எழுதிய “கோழைத்தனம்” சிறுகதை – நூல் அறிமுகம்
அருள்மொழி எழுதிய “கோழைத்தனம்” சிறுகதை – நூல் அறிமுகம்
டைரி (Diary) – நூல் அறிமுகம்
மகளிர் தின சிறப்பிதழ்: குடும்ப இஸ்திரி – 2.0 கட்டுரை – அருள்மொழி
அருள்மொழி
குடும்ப இஸ்திரிகளின் கதை எல்லாமே ஒரு வகையில் குத்துவிளக்கு கதைகள்தான் என்றாலும், சில குத்துவிளக்குகள் குத்தவும் செய்கின்றன என்பதால் ஆண்களின் நலனை முன்னிட்டு எழுதப்படும் கட்டுரை ஆகும். புரிந்து பயன் பெறுக.
இது ஒரு ஒற்றை நோக்கம்: தன்னால் இயலாத இனப்பெருக்கத்தை தனதாக்கிக்கொள்வது. எல்லா உயிரினங்களிலும் பெண் தான் யாருக்கு இனப்பெருக்கம் செய்யணும்னு முடிவெடுக்குது. ஆனா நம்முடைய patriarchy ல பெண் நிலத்தை போல வாரிசை விளைவிக்கும் ஒரு பொருள். அதை சுதந்தரமாய் விட்டால் தகுதியானது தான் தப்பும். அதனால அவங்களுக்குள்ள ஒரு அண்டர்ஸ்டாங்டிங்.
இருக்குற நிலத்தை ஆளுக்கு கொஞ்சமா பங்குபோட்டுக்கலாம்ங்குறது முடிவு. ஆனா, நிலத்தை போல பெண் ஜடம் இல்லியே, புத்தி யோசிக்குமே, என்ன செய்யலாம்? அதை – அதாவது தன்னைத் தானே பங்கு வைப்பதை, அவங்களே போட்டி போட்டுக்கிட்டு செஞ்சா எவ்ளோ நல்லா இருக்கும்? அதுக்கு தான் சாதி – பைரவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது போல, மூளையை மழுங்கடிக்கும் பயிற்சி பிறந்ததில் இருந்தே கொடுக்கப்படுகிறது. அந்தப் பயிற்சிகளில் ஒன்று தான் நல்ல குடும்ப இஸ்திரியாய்த் திகழ்வது எப்படி என்கிற அறுநூத்தி இருபதாவது ஆய கலை.
நல்ல குடும்ப இஸ்திரியாய் இருப்பதே தன் தலையாய கடமை என்று முதலில் நாம் நம்ப வேண்டும். ஏன் நம்ப வேண்டும்? – அப்படியெல்லாம் கேள்வி கேட்டா வாயிலேயே போடு. குடும்பம் ஒரு புனிதமான நிறுவனம். அதுல இருக்கிற ஆண்கள் முதலாளிகள். பெரிய முதலாளி, நடு முதலாளி, சின்ன முதலாளி, குட்டி முதலாளி, ஆறு மாச கருவாக இருக்கும் உள்ளிருப்பு முதலாளி வரை டிசைன் டிசைனாக இருக்கும். தொழிலாளிகளும் டிசைனுக்கு தக்க பார்டர் வைத்து பளபளப்பாய் இருப்பார்கள். இந்த அமைப்புக்கு ஒரு தூணாகச் செயல்படும் பெரிய தொழிலாளி தான் நம்ம குடும்ப இஸ்திரி. அவளை சில நேரங்களில் பெரிய முதலாளி கூட கண்ட்ரோல் பண்ண முடியாது. அந்த நேரத்தில், அவளை இருக்குமிடத்தில் பெருமையுடன் இருக்க வைக்க சமூகம் தனது நூறு மூக்கணாங்கயிறுகளை கொண்டு இழுத்து நிறுத்தும்.
புனிதம் மட்டுமல்ல, தீட்டும் இஸ்திரிகளுடையது தான். அது கற்பும் விபச்சாரமும் போல. ஒன்னு இல்லன்னா இன்னொன்னு இல்லே. உனக்கு ரெஸ்டு கொடுக்குறோம் பேர்வழின்னு எல்லாம் யாரும் ஓரமா உக்கார வைக்கல. ஓரமா உக்காந்தாலும் வேல செஞ்சி தான் ஆவனும். இஸ்திரிகளே, நீங்க ஓரமா உக்காந்திருந்தப்போ சத்துள்ள சாமான சாப்டீங்களா, இல்ல மீந்து போனத கடைசியா தந்தாங்களா?
அப்புறம் ஏன் காட்ல இருந்தப்ப தனியா உக்கார வச்சாங்க? (இது ஒரு தியரி – உண்மையான்னு இன்னி வரைக்கும் தெரியல) மோப்பம் புடிச்சி வர விலங்கு அந்த ஒத்த பொம்பளைய தூக்கிட்டு போயிரும். குரூப்பு எஸ்கேப். அதை எப்படி ஏத்துக்கச் செய்யுறது? விழா வச்சா எல்லாரும் போணும்ல? அப்ப தீட்டாக்கிருவம். ஓவர். கற்பும் விபச்சாரமும் எப்படி ஒன்றில்லாமல் மற்றொன்று அமையாதோ, புனிதமும் தீட்டும் ஒன்றில்லாமல் மற்றொன்று அமையாது.
இந்த குடும்பத்துக்கு ஏன் ஒரு இஸ்திரி தேவைப்படுகிறது? இல்லன்னா குடும்பம் சுருங்கிப்போகும். ஒரு கட்டத்தில் இல்லாமல் போகும். கருப்பை தான் உற்பத்திக்கு தேவை. அதை தனியாய் கைக்கொள்ள முடிந்தால் எப்போதோ பெண் இனம் காணாமல் போயிருக்கும். அதை வைத்து மெயின்டெயின் பண்ண அந்த உடல் இருந்துதான் ஆக வேண்டும்.. அதை எப்படிப் பயன்படுத்தலாம்? வெட்டியா தானே இருக்கிறது? நிறுவனத்துக்கும் முதலாளிகளுக்கும் வேலை செய்யலாமே? உடல் இருக்கும்வரை செய்ய வேண்டும். தினமும் செய்ய வேண்டிய உணவை சமைக்கும் வேலை ஓசியில் வந்தமர்ந்து இப்படித்தான். இது ஒரு வெகுமதியுடன் கூடிய ஒரு அடிமை முறை.
வீட்டிலும் வெளியிலும் ஓசியில் செய்ய வேண்டிய வேலைகளை குடும்ப இஸ்திரிகள் ஒன்றுகூடி மகிழ்ச்சியாய் செய்வதை பார்த்திருப்போம். உதாரணத்துக்கு ஒரு சிறிய குடும்ப விழாவில் காய்கறி வெட்டுவது முதல் சமைப்பது வரை சொந்தக்கார குடும்பங்களின் இஸ்திரிகள் எல்லாரும் இழுத்து போட்டுக்கொண்டு செய்வார்கள். அங்கே ஒரு இஸ்திரி ஓரமாய் உக்காந்து புக்கு படிச்சிட்டு இருந்தாலும் அதை அடித்து இழுத்து வர ஒரு அல்லக்கை இஸ்திரி ரெடியாய் இருக்கும். அது ஒரு இன்பமான பொழுதுபோக்கு. நாங்கல்லாம் வெங்காயம் உரிக்கிறோம்.. உனக்கு என்ன படிப்பு இந்த நேரத்துல? இப்படியாக உள்ளேயே ஒரு தலைமை அடிமையும் அதுக்கு ஒரு சைடு அடிமையும் உருவாகிறார்கள். முதலாளிக்கு நல்லது இல்லையா? அதுக்கு அப்பப்போ சிறு பரிசு போன்ற பிஸ்கட்டுகளும் கிடைக்கும்.
இதுல முக்கியமான இடம் என்னன்னா, அந்த இஸ்திரி, தன் முதலாளியை தானே தேர்ந்தெடுக்க முடியாது. அந்த நிறுவனம் தன் எம்பிளாயியை ஒரு பதவி உயர்வுடன் இன்னொரு நிறுவனத்துக்கு டிரான்ஸ்பர் பண்ணும். பதவிக்கு அதிகாரங்களும் அதிகம், பொறுப்புகளும் அதிகம். அடுத்த முதலாளியை அல்லது தொழிலாளியை உருவாக்கும் மீடியேட்டர், மற்றும் தலைமை அடிமை. ஆனால், இந்த நிறுவனத்தைக் காக்கப் பாடுபட வேண்டும். முதலாளியை உருவாக்குதல் நல்ல காரியம், தொழிலாளியும் பாதகமில்லை. நிறுவனம் வளர தொழிலாளி வேண்டுமல்லவா?
நிறுவனம் செயல்பட சிறிய அமைப்பாய் இருத்தல் நலம். ஆனால் ஒரு தனித்த சுள்ளியை உடைப்பது எளிதல்லவா? மொத்தமாய் கட்டியது தான் நம்ம சமூகம். கட்டியது எது? மதம் என்னும் கண்ணுக்கு தெரியாத கயிறு. அதில் முதலாளி, தொழிலாளி, அல்லக்கை, அடிமை எல்லாம் அடக்கம். ஆனால் அங்கும் கண்ணுக்கு தெரியாத சிந்தனையை உணர்வால் பின்னி அழகாய் கட்டி வைப்பது இஸ்திரிகளின் வேலை தான். உதாரணத்துக்கு, சடங்குகள் எல்லாமே இஸ்திரிகளை மையமாக வைத்து கூட்டாய் சேர்ந்து கும்மி அடிப்பதாய் இருக்கும். அதிலும் அவள் வளமான குட்டி போட்ட பாலூட்டியாய் இருத்தல் நலம். ஆணை மையமாய் வைத்து செயல்படுவது கொள்ளி வைத்தல், கருமாதி தவிர வேறு இருப்பதாய் தெரியவில்லை. அது கூட இந்த உடலுக்கு நான் தான் ஓனர் என்பதைப் பறைசாற்றுவதாய் இருக்கிறது. இருந்தாலும் செத்தாலும் முதலாளிகள் மாறுவதில்லை. மதச் சடங்குகள், கட்டுப்பாடுகள் முக்காலே மூணுவீசம் பெண்ணின் இனப்பெருக்க உரிமையை மையப்படுத்தியே இருக்கின்றன. ஆணுக்கு கற்பு தேவை இல்லை. முதலாளிகள் விசுவாசத்துடன் இருக்க தேவை இல்லை. கடவுள் யாருக்கும் பக்தியாய் இருக்க தேவை இல்லை.
இஸ்திரிகள் மட்டுமே இனப்பெருக்கம் செய்ய முடியும். சாதா பெண் செஞ்சா அப்ரூவல் கிடைக்காது. அப்ரூவல் கிடைக்காது என்பது மட்டுமல்ல, அது ஒரு அவமானம். இனப்பெருக்கத்துக்கு அப்ரூவல் கிடைக்க ஒரே வழி இஸ்திரியாய் மாறுவதே.
சரி, இந்த அடி அடிக்கிறோமே, இஸ்திரிப்பெட்டி ரொம்ப சூடாகிட்டா என்ன செய்யுறது.? இணை, துணை, ஈகுவாலிட்டின்னு ஏதாவது ஒன்னு இருக்குற மாதிரியே நடிக்கணும். இஸ்திரியோட வோல்டேஜ் கண்ட்ரோல்ல தான் இருக்கு. அதனால ஏற்கனவே இருக்குற கில்ட்டி பீலிங்கை உசுப்பேத்தி, ’நீ சொன்ன ஒரு ஐட்டமுமே இல்லேயேடா’ அப்படின்னு கேக்குறத மைண்டோடவே நிறுத்திறனும்.. வெளிய வந்தா தான் பிரச்சினை. அவள் யோசிப்பதோ தனக்கு தானே பேசிக்கொள்வதோ அவுட் ஆப் சிலபஸ்.
முதலாளிகள் தரப்பில், இதுபற்றி விவாதங்கள் கிளம்பும்போது – அமைப்பு ஒரு காலத்தில் அப்படி இருந்தது, ஆனால் நானும் என்னுடைய நிறுவனமும் அப்படி இல்லை என்பதை நிறுவவே முயல்வார்கள். ஏனென்றால் அமைப்புரீதியிலான சலுகைகளை அவர்கள் இழக்கத் தயாராக இல்லை. பாலின, சாதி மற்றும் இன அடிப்படையிலான அமைப்புரீதியான சலுகைகள் பிறப்பிலேயே கிடைத்துவிடுவதால் ஒடுக்கப்பட்டவர்கள் சமமாய் அதை உரிமை கோரும்போது அதை கிடைக்காமல் தட்டிவிடச்செய்வதை லாவகமாய் செய்ய முடிகிறது. அதை நிரூபிக்குமளவு சாட்சியங்கள் இருப்பதும் இல்லை. இஸ்திரிகளாக்கப்பட்டவர்கள் தங்களை தாங்களே ஒடுக்கிக்கொள்வதை சுய விருப்பத்துடன் முடிவு செய்ய வைப்பதே இதன் நடைமுறையாய் இருக்கிறது.அங்கே தான் “வளர்ப்பு” வேலை செய்கிறது. இஸ்திரிகள் முதலாளியை முதலாளியாகவும் தொழிலாளியைத் தொழிலாளியாகவும் வளர்க்கக் கடமைப்பட்டவர்கள்.
கல்வி வாய்ப்பினால் இப்போது இஸ்திரிப்பெட்டிகளுக்கு கிடைக்கும் உள்ளீடு அதிகமாகிவிட்டது. பொருளாதார சார்புநிலை குறைவதால் சொந்த முடிவுகளுக்குள் செல்லவே விரும்புகிறார்கள். அதனால் இஸ்திரிகளின் சூடு தாங்காமல் தான் கூட்டுக்குடும்பம் என்னும் பெரிய நிறுவனம் தன்னைத் தானே தகவமைத்துக்கொண்டு தனிக்குடும்பம் சிறிய நிறுவனமாக செயல்படுகிறது. ஓவராய் சூட்டை குறைத்தால் இஸ்திரிப் பெட்டி நிறுவனத்துக்குப் பயன்படாது. தானே முடிவெடுக்கும் இஸ்திரிப்பெட்டி இருந்தென்ன லாபம்? இருக்கும் இஸ்திரிப்பெட்டியும் சூடு கூடிக்கொண்டே செல்வதைத் தான் காண முடிகிறது. தன்னுடைய மரபு தப்பிப்பிழைக்க திரும்பவும் இஸ்திரியை ஈர்த்து தான் ஆகவேண்டும் என்கிற நிலை திரும்பிக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது. அவர்கள் தருவதாய் நம்பவைத்துக்கொண்டிருந்ததை இருப்பதாய்க் கருதிக்கொண்டு இஸ்திரிப்பெட்டிகள் செயல்படத் தொடங்கிவிட்டன. இஸ்திரிகள் நிறுவனத்தில் நடத்தும் மாற்றங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நூல் அறிமுகம்: அருள்மொழியின் ’டைரி’ – சிறுகதைத் தொகுப்பு கருப்பு அன்பரசன்
நூல் : டைரி
ஆசிரியர் : அருள்மொழி
விலை : ரூ.₹200/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com
சென்னை ஸ்பென்சர் சிக்னல்,
அலுவலகம் முடித்து அண்ணா சாலை வழியாக நிதானமான வேகத்தோடு
வந்து கொண்டிருக்கிறேன்.
ஸ்பென்சர் சிக்னலில் பச்சை விளக்கு
அணைந்து மஞ்சள் விளக்கு எறிய
வண்டியை மெதுவாக வந்து வெள்ளைக் கோட்டிற்கு அருகில் நிறுத்துகிறேன்..
என் பின்னால் வேகமாக வந்த இருசக்கர வாகனம்.. அதில் 40 வயதை கடந்த
இருவர்.. வாகனம் என்னுடைய
வலது கை புறத்தின் அருகிலேயே நிற்கிறது.
வாகனத்தை ஓட்டிய நபர் பேசுகிறார்
“த்தா… பொட்டச்சி எவ்ளோ வேகமா ஓட்டுற.. நம்மள ஓவர் டேக் செய்றா.. ம்ம்
விடுவோமா மாமா அவள.. சும்மா அவளுக்கு முன்னாடி வந்து நின்னோமில்ல… அவ எங்க வரா பாரு..” சொல்லி முடித்ததும் என்னுடைய இடது கை புறத்தின் அருகே ஏதோ ஒரு அலுவலகம் ஒன்றில் வேலை முடித்து விழிகளில் சக்தி இல்லாமல் ஒரு பெண் தன்னுடைய வாகனத்தில் வந்து நிற்கிறார். வந்து நின்றவருக்கும் எங்கள் மூவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டது கிடையாது.. பார்த்துக் கொண்டதும் கிடையாது. பெண் ஒருவர் அவருடைய வாகனத்தில் அவரின் வேலையின் பொருட்டு வேகமாக ஆண் ஒருவரை ஓவர்டேக் செய்து போவதையே பொறுத்துக் கொள்ள முடியாது ஆண்களின் திமிர் சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைத்தான் இந்தச் சம்பவம் எனக்குள் உணர்த்தியது. பெண்களுக்கு எதிரான அந்தத் திமிர் ஆதிக்க சாதிகள் தொடங்கி ஒடுக்கப்பட்ட சாதிகள் வரை இருக்கக்கூடிய எல்லா மயிர்களுக்குள்ளும் வேர்வரை ஊடுருவி விஷம் பாய்ச்சி வைத்திருக்கிறது என்பதை அந்த வாகனத்தில் ஒட்டி இருந்த ஸ்டிக்கரில் இருந்து பார்க்க முடிந்தது.
பெண் ஒருவர் தன் விருப்பத்திற்கு உடை அணிந்து சென்றால், பள்ளிக்கு கல்லூரிக்கு சென்றால், பிடித்த நண்பர்களோடு பேசினால், இணையாக நடந்து சென்றால்.. சிரித்தால்.. மனது விரும்பும் வேலைக்கு அல்லது ஏதேனும் வேலை செய்ய வேண்டிய அவசியம் ஒன்றினை குடும்பச் சூழல் கட்டாயப்படுத்தினால், அப் பெண் குறித்து ஆண்களால் வெளிப்படையாகவும் சத்தமாகவும் மௌனமாகவும் அவரின் உடல் சார்ந்து கட்டமைத்து சித்தரிக்கப்படுகிறார்கள் அவரவர் வக்கிர எண்ணங்களுக்கு ஏற்ற முறையில் இன்றும் கூட. ஆண்களுக்கு இணையாக பெண்களா..? உலகம் அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்று புழுங்கி புழுங்கி மூச்சிறைக்கிறார்கள் மத நிறுவனங்களின் சாமியார்கள் தொடங்கி சாலைகளிலும் அலுவலகங்களிலும் பள்ளிகளிலும் பேருந்துகளிலும் படிப்பறிவு உள்ளவர் இல்லாதவர் என்கிற வேறுபாடு எதுவும் இல்லாத ஆண்களால்.
டைரி
ஒவ்வொரு தனி நபரின் அந்தரங்கம். மிகுந்த ரகசியமான எவர் ஒருவரோடும் பகிர்ந்து கொள்ள முடியாத செய்திகளை உள்ளடக்கியதாக எல்லோராலும் எழுதப்பட்டு வருவது.
ஆண்கள் எழுதக்கூடிய டைரியில்
பல விஷயங்கள் சங்கதிகள்
வெளிப்படை தன்மையோடும் அதீதமாகவும் இருக்கும்..
எல்லாவிதமான உறவுகள் குறித்தும்.
எழுதி வைத்துக் கொள்வதில் அவருக்கு சுதந்திரம் இருக்கிறது.. பொய் சொல்வதற்கும் சேர்த்தே.. மெய்யும் பொய்யும் சரி விகித கலவையாக கூட இருக்கலாம் அந்த டைரி.
இன்னொரு நபர் ஒருவரால் எழுதிய டைரி வாசிக்கப்படும் என்றால் அதில் எழுதி இருக்கும் அனைத்தும் வாசிக்கும் நபருக்கு பொழுதுபோக்காக இருக்கலாம், விளையாட்டாக இருக்கலாம் அதில் சில விஷயங்களில் இருக்கும் உண்மைகள் அவருக்கு வலியை கொடுக்கலாம்.. அதை வாசித்து விட்டு வாசித்தவர் எழுதியவருக்கு அறிவுரை சொல்லலாம் தைரியப்படுத்தலாம் முன் யோசனை சொல்லலாம்.. அந்த டைரி வாசிப்பவரை எந்த விதத்திலும் சங்கோஜப்படுத்தவோ சங்கடப்படுத்தவோ செய்து விடாத மன நிலைக்குள் பல நேரங்களில் வைத்துக் கொள்ளும்.
அதுதான் ஆண் எழுத்தில் இருக்கக்கூடிய புரிதல் நம் சமூகத்தில்
பெரும்பாலானோருக்கு.
டைரியை
பெண் எழுதும் பொழுது; எதிர்காலத்தை, குடும்பத்தை, பிள்ளைகளை, பெற்றோரை நினைத்து பல விஷயங்களை வெளிப்படையாக எழுதி வைப்பதில் அவரின் மனசுக்குள்ளும் எண்ணத்திற்குள்ளும் தடைகள் வந்து கொண்டே இருக்கும்..
தன் குறித்து தன் மனதில் ஓடும் நிஜங்கள் குறித்தும் அனுபவங்கள் குறித்தும் அவருடைய வாழ்நிலை குறித்தும் தினம் தினம் எதிர்கொள்ளும் சவால் நிறைந்த பிரச்சனைகள் குறித்தும் அவருடைய நண்பர்கள் குறித்தும் வெளிப்படையாக நேரிடையாக எழுத முடியாமல்
வார்த்தைகள் பல இடங்களில் புள்ளிகளாகவும்.. கண்களுக்குத் தெரியாத வார்த்தைகளைக்
காற்றில் எழுதி இருக்கலாம்.
பல நிஜங்கள் எவர் கண்ணுக்கும் தெரிந்து விடக்கூடாது என்கிற பயமும் அச்சமும் அவரின் எழுத்துக்களில் பாதரசத்தை ஊற்றி கருகச் செய்தது எவர்.. பெண் உணர்வுகளின் குரல்வளை அறுத்து உடலுக்குள் குடும்ப கவுரவத்தை, எழுத்துக்கள் மௌனத்தை பூட்டி வைத்து தன் உடமையாக்கி வைத்திருக்கும் ஆதிக்கத் திமிர்தானே.
ஆதிக்கத் திமிரோடு சாதி ஆணவமும் சேர்ந்து கொண்டால்.. அப்படி இணைந்து கைகோத்திருக்கும் சிறுவாணி தண்ணீர் குடித்து வளர்ந்த மண்ணின் பெண் சமூகம் நாகப்பாம்பு ஒன்று தன் உடல்மேல் போர்த்தியிருக்கும் தோலினை வலியோடு அதுவாகவே உரித்து வைத்து அமைதியாக ஊர்வதைப் போன்று எழுத்தாளர் அருள்மொழி அவர்கள் எழுதிய டைரி சிறுகதை தொகுப்பில் பெண்கள் மன ஓட்டத்தை அதிர்வை பதிவு செய்திருக்கிறார்.
தொடர்ந்து தங்களின் உடலும் மனமும் ஆண்களாலும் சாதித் திமிராலும் வன்முறைக்கு இரையாக்கப்பட்டு வருகிறது என்பதை நன்றாக உணர்ந்து
அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கும் காரணங்களின் வேரினை அடையாளப்படுத்தி இருக்கிறார். அவைகளை தன்னுடைய கதைகளின் வழியாக பொதுவெளியில் போட்டுடைத்து “என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்ற கேள்வி எழுப்பாமல் சென்று இருக்கிறார். பச்சை இலையை தின்ன கொடுத்து பட்டு பூச்சியை வளர்ப்பது ஆண்களின் பட்டுக் கோவனத் துணிக்குத்தன் என்பதை ரௌத்திரம் மிகுந்த எழுத்துக்களில் பதிந்திருக்கிறார்.
பல பஞ்சாயத்துக்கள் தலைமை பொறுப்பை பெண்களுக்கு என்று ஒதுக்கியிருந்தாலும்..
அவர்கள் அனைவராலும் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்டு, பல கிராம பஞ்சாயத்துகளில் பொறுப்பில் இருந்தாலும் “பெண்” என்பவராகவே அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறார்கள் என்பதற்கு தமிழகத்திலும் இந்தியாவிலும் நிறைய உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். அவர்களை சுதந்திரமாக செயல்பட விடாமல் கூட்டம் கூட்டுவது முதல் கொண்டு நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கும் ஆண்களிடம் தான் அனுமதிக்காகப் போய் நிற்க வேண்டி இருக்கிறது. அப்படியே போய் நின்றாலும் ஆண்கள் எப்படி பெண்களை தந்திரமாக சமையல் கட்டுக்குள்ளேயே அனுப்பி வைக்கிறார் என்பதை #அதிகாரம் என்கிற கதையில் நையாண்டியோடு அதிகாரத்தின் அசிங்கத்தை சொல்லி இருக்கிறார் எழுத்தாளர் அருள்மொழி.
“காட்ட வித்து கள்ளு குடிச்சாலும்”
கதையில் சுயமரியாதையோடும் ஆண்களின் அதிகாரத்திற்கு எதிராகவும் வாழ முடிவெடுத்த மலர்கொடியின் கதை. பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரத்தை நினைவுபடுத்துகிறது.
கோழைத்தனம் சிறுகதை
மருத்துவத்துறையில் பட்டம் பெற்ற பெண் ஒருவரின் வாழ்வில் ஆண்களின் சுய சாதி பெருமையும் குடும்ப கௌரவமும் இணைந்து தற்கொலை என்கிற கொலையை நிகழ்த்திய கொடூரத்தை பதிவாகி இருக்கிறார் எழுத்தாளர் அருள்மொழி.
தியாகம் கதையில் வரக்கூடிய
நீலாமணியைப் போன்றவர்கள்தான்
எல்லாமும் தெரிந்தாலும் அறிந்திருந்தாலும் உணர்ந்திருந்தாலும் மனசுக்குள் குமைந்து கொண்டே ஒவ்வொரு வீட்டிற்கும் இருக்கிறார்கள் அம்மாக்களின் அடையாளமாக இங்கு என எழுத்தாளர் அருள்மொழி அவர்கள் நிறுத்தி இருக்கிறார்.
மெய்யான உண்மையும் கூட அது.
இன்று ஒவ்வொருவரின் வீடுகளிலும் பல நீலவேணிகள்.
தண்ணி_பைப் என்கிற கதையை வாசிக்கும் பொழுது வேங்கைவயல் கிராமமும் பஞ்சாயத்தும் நினைவிற்கு வந்து நம்மை குற்ற உணர்ச்சிக்கு தள்ளிவிடும்.. இன்னும் எத்தனை காலத்திற்கு தான் இந்த குற்ற உணர்ச்சியோடவே நாம் பயணப்பட போகிறோம். இருக்கக்கூடிய அதிகாரம் முழுவதிலும் ஆதிக்க சாதி வெறி வெவ்வேறு வடிவங்களில் எல்லோர் மனதிலும் ஆழப் பதிந்து கிடக்கிறது.
ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நேரம் பார்த்து எட்டிப் பார்க்கிறது. நாமும் சாதாரணமாக கடந்து போய்விட நம்முடைய மனதை பக்குவப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறோம். எதிர் கருத்து பேசாமலும் எதிர் செயல்களில் இறங்காமலும் கள்ள மவுனம் காப்பது
ஆதிக்க சாதித்திமிருக்கு வசதியாய் போய் விடுகிறது.
டைரியில் 14 கதைகள் இருக்கிறது. அனைத்து கதைகளும் சுயசாதிப் பெருமையும், குடும்ப கௌரவமும் பெண்களின் வாழ்நிலையை வாழ்வியலை அவர்களின் வலி மிகுந்த சம்மதத்தோடு சீரழித்து வைத்திருக்கிறது என்கிற நிஜங்களை பதிவுகளாக தன்னுடைய கொங்கு மண் சார்ந்த எழுத்துக்களோடு.. சொல்லாடல்களோடு கொடுத்திருக்கிறார்.
எழுத்தாளர் அருள்மொழி அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பு இது.
முதல் தொகுப்பிலேயே
மலர்கொடியின் வழியாக கலகத்தை துவக்கி இருக்கிறார் ஆதிக்க சாதி வெறியும் ஆணாதிக்கவும் மிகுந்த இம் மண்ணில்.
இயற்கையின் படைப்புகள் அத்தனையும் எல்லோருக்கும் பொதுவானது..
உன்னைப் போலவேதான்
நானும் உயிர் திசுக்களின் விடாத போராட்டத்தாலும் கலவையாலும்
உயிர்க்கொண்டு உயிர் வளர்க்கிறேன்..
மனித மேம்பாட்டின் வளர்ச்சிகள் அனைத்திலும் உன்னைப் போலவே நானும் சரி பாதியாகவே நிற்கிறேன்..
ஆனாலும் உன்னிலிருந்து கீழாகத்தான் இது நாள் வரையிலும்.. வலியை மட்டும் நான் சுமப்பது இனியும் நடக்காது.
மகிழ்வையும் துன்பத்தையும் இனி ஒரு சேரத் துய்ப்போம்.. காலத்தை தீர்மானிப்பது இருவரும் இணைந்தே இனி.. வா இணைந்திருப்போம்.!
மீறி நீ ஏறிதான் மிதிப்பாய் என்றால் உனது குதிக்கால் நரம்புகளை அறுத்தெறியவும் தயங்க மாட்டோம் என
உடல், அறிவு தளத்திலும் இணைந்து
மலர்க்கொடியாய் மாறும் பொழுதே எதிர் சமூகம் தன்னை மாற்றிக்கொள்ள யோசிக்கும். அதுவரையிலும் நிறைய நீலவேணிகளை உருவாக்கிக் கொண்டே தான் இருப்பார்கள் ஆண்கள்.
நல்லதொரு அட்டை வடிவமப்பை கருத்துச்செறிவோடு அளித்து பெண்களின் மனசாட்சியினை வாழும் தமிழ்ச் சமூகத்திற்கு அளித்திருக்கிறார்கள் எப்பொழுதும் போல் சிறப்பாகவே பாரதி புத்தகாலயம்..
எழுத்தாளர் அருள்மொழி மற்றும் பாரதி புத்தகாலயம் இருவருக்கும்
அன்பும் வாழ்த்துக்களும்.
கருப்பு அன்பரசன்.





