Interview with Justice Chandru on the Chennai Book Fair - Asaithambi சென்னை புத்தகக் காட்சியின் எண்ண சிதறல்கள் | நீதிநாயகம் சந்துருவுடன் நேர்காணல் - ஆசை

சென்னை புத்தகக் காட்சியின் எண்ண சிதறல்கள் | நீதிநாயகம் சந்துருவுடன் நேர்காணல் – ஆசை

ஜெய்பீம் எதிர்ப்பாளர்கள் தேர்தலில் காணாமல் போனார்கள்
 – நீதிநாயகம் சந்திரு

இந்திய நீதித்துறையில் எளிய மக்களுக்கான நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராகக் கொண்டாடப்படுபவர் கே.சந்துரு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த காலத்தில் கிட்டத்தட்ட குறுகிய காலத்தில் ஒரு லட்சம் வழக்குகளுக்கு விரைந்து தீர்ப்பு கூறி நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தவர். அவருடைய வழக்கைக் கதையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘ஜெய்பீம்’ திரைப்படம் பெருவெற்றி பெற்றது. இப்போது அவருடைய சுயசரிதையான நானும் நீதிபதி ஆனேன்’ நூல் (அருஞ்சொல் வெளியீடு) வெளியாகி சென்னை புத்தகக்காட்சியில் அதிகம் பேசப்படும் நூல்களில் ஒன்றாகியிருக்கிறது.

பொதுவாக சுயசரிதை என்றால், தனிப்பட்ட வாழ்க்கையை உள்ளடக்கியதாகத்தான் இருக்கும். ஆனால், உங்கள் சுயசரிதையை உங்கள் பணிகள் வழியாகவே எழுதியிருக்கிறீர்கள். ஏன்?
ஏற்கெனவே சிறிய அளவில் சில பத்திரிகைகளில் என்னுடைய ஆரம்பட்ட வாழ்க்கை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இப்படித் தனிப்பட்ட சம்பவங்களின் வாத வாழ்க்கைக் கதையை எழுதுவதைவிடவும், ஒரு சட்ட மாணவனாக வழக்குரைஞராக, நீதிபதியாக என்னுடைய அனுபவங்களை எழுதுவது சமூகத்துக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றியது. குறிப்பாக, மனித உரிமைகள் சார்ந்த செயல்பாடுகளை ஆவணப்படுத்த வேண்டும் என்று எண்ணினேன். அதேபோல, நான் நீதிபதியாகச் செயல்பட்ட விதத்தைப் பலரும் பல விதமாகப் பரந்துகொண்டிருந்தார்கள். அதற்குப் பதில் அளிக்க வேண்டும் என்று தோன்றியது முக்கியமாக நீதிபதிகள் நியமனம் குறித்து நிறையப் பேசப்படவேண்டியிருக்கிறது. இவற்றையெல்லாம் மனதில் கொண்டுதான் இந்த நூல் படைக்கப்பட்டது.

பத்தகத்தை வாசிக்கும்போது, நீதித் துறையின் மீதான நம்பிக்கை மேலும் பிரகாசிக்கிறது. ஆனால், சமூகத்துக்கு இப்படி ஒரு நற்பிக்கையை உருவாக்கும் நீங்களே, பத்தகத்தில் வழக்கறிஞர் தொழில் கசந்து போனதாக எழுதியிருக்கிறீர்கள். இந்த முரண் ஏன்?
சாமானிய மக்களுக்குச் சட்ட அணுகுமுறையிலும், நீதித்துறை மீதும் நம்பிக்கைகள் அதிகமாகும் காலகட்டத்தில், வக்கீல்கள் தங்களுடைய தொழில் தர்மத்தைத் தவிர்த்துவிட்டு வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்ததுதான் அந்தத் தொழில் மீது கசப்பு ஏற்பட காரணம் ஆனது சக வழக்குரைஞர்கள் மீதான அக்கறையும் ஆதங்கமுமே அப்படி ஒரு கட்டுரையாக வெளிப்பட்டிருக்கிறது.

மாணவர் உதகுமாரின் மரணம்தான் நிதித் துறையில் நீங்கள் நுழையக் காரணமாக இருந்தது. உதயகுமாருக்கு நீதி கிடைத்திருப்பதாக எண்ணுகிறீர்களா?
உதயகுமாருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகப் பெரிய அளவில் மாணவர்களைத் திரட்டிக் கொடிப் பிடித்தபோதும், அவரது தந்தையே அப்பிரச்சினையில் மறுதலித்து வாக்குமூலம் அளித்ததுதான் நீதி கிடைப்பதற்கான பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது. இருப்பினும், அந்த அநீதிக்கு எதிராகத் தமிழக மாணவர் சக்தி ஒன்றுதிரண்டது பெரிய வெற்றி.

நூலில் நெருக்கடி நிலை தொடர்பான அத்தியாயத்தில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அனுபவித்த சித்ரவதைகளைப் பற்றி விரிவாகப் பேசியுள்ளீர்கள். அது அந்தக் காலத்தை வாசகர்களின் கண்முன் அப்படியே கொண்டுவருகிறது. சட்டரீதியாக இந்தியா இன்னொரு நெருக்கடி நிலையைச் சந்திக்கும் அபாயத்திலிருந்து விடுபட்டுவிட்டது என்று நினைக்கிறீர்களா?
நெருக்கடி நிலைக்கு எதிராக ஜனநாயக நடைமுறையைக் கோரி அனைத்து சக்திகளும் அரசியல்ரீதியாகத் திரண்டதன் விளைவாக 1977-ல் ஜனதா கட்சி ஒன்றிய அரசில் ஆட்சியைப் பிடித்தது. அதன் விளைவாக அரசமைப்புச் சட்டத்தில் இரண்டு முக்கிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. அரசின் அத்துமீறலுக்கு எதிராக நீதிமன்றங்களை அணுகுவதை ஒன்றிய அரசால் தடுக்க முடியாது என்றும், அடிப்படை உரிமைகளைத் தள்ளி வைக்க முடியாது என்றும் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை ஒன்றிய அரசு கலைக்க முற்பட்டாலும், அதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவை என்ற மற்றொருதிருத்தமும் கொண்டுவரப்பட்டது. அதேபோல, ஏடிஎம். ஜபல்பூர் வழக்கு தீர்ப்பு தவறு என்று அறிவிக்கப்பட்டு, ‘நெருக்கடி நிலையானாலும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றங்களை அணுகி நிவாரணம் பெறுவதைத் தடுக்க முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்தக் காரணங்களால், மீண்டும் ஒருமுறை நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டாலும், அதன் விளைவுகள் பழைய பாணியில் இருக்க முடியாது.

அமைப்பின் கடுமையான விமர்சகர் நீங்கள். அப்படிப்பட்ட ஒருவரையும் உள்ளடக்கியது இந்திய நீதித் துறையின் நல்ல விஷயம். இதைப் பொதுவான போக்கு என்று சொல்ல முடியுமா அல்லது சந்துரு ஒரு விதிவிலக்கு என்று நினைக்கிறீர்களா?
அரசமைப்புச் சட்டம் ஏற்படுத்தப்பட்டு முதல் 20 வருடங்களில் நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொத்துரிமை வழக்குகளில் அளித்த தீர்ப்புகளானவை மக்களின் வளர்ச்சிப் பணிகளைத் தடுக்கின்றன என்ற விவாதம் பொதுவெளிகளில் எழுந்தபோது நீதித் துறை நியமனங்களைப் பற்றி முதல் தடவையாக கவனம் எழுப்பப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தின் மீது உண்மையிலேயே நம்பிக்கையுள்ளவர்களையும் சமூக நீதியில் நாட்டம் கொண்டவர்களையும் நியமிக்க அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. அதையொட்டி, பதவிக்கு வந்த நீதிபதிகள் விட ஆர் கிருஷ்ணய்யர், பி. என். பகவதி, ஒ. சின்னப்பரெட்டி, டி.ஏ.தேசாய் அக்கடமையை சரிவரச் செய்தனர். ஆனால், அதற்குப் பிறகு அப்படிப்பட்ட நியமனங்களில் மக்களின் கவனம் திசை திருப்பப்பட்டு நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக்கொள்ளும் கொலிஜிய நடைமுறை நிறைவேற்றப்பட்டது. இதனால் சிறப்பான நியமனங்கள் நடைபெறுவது தடைபட்டது. இந்நியமன முறையில் ஒரு விதிவிலக்குகள் இருந்திருக்கலாம். ஆனால், ‘நீதித் துறை சுதந்திரம்’ என்ற பெயரில் இப்படிப்பட்ட நடைமுறை கொண்டுவரப்பட்டாலும், அதில் எள்ளளவும் உண்மையில்லை என்பதே உண்மை. இதை விவரிக்கும் விதமாகவே இந்தப் பத்தகத்தில் என்னுடைய நியமனத்தில் நடைபெற்ற பல்வேறு அவலங்களையும் பட்டியலிட்டுள்ளேன். இதனால் இந்த நியமன நடைமுறையை மாற்றுவதற்கு இந்நூல் உதவி செய்யும் என்பது என்னுடைய நம்பிக்கை.

இந்திய நீதியமைப்பில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்திருக்கிறீர்கள். இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து தற்போது வரை பார்க்கும்போது நீதித் துறையின் சுதந்திரம் பலப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறீர்களா, பலவீனப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
நீதித் துறையின் வீச்சும், செயல்பாடுகளின் தாக்கமும் பெருமளவில் கூடியிருந்தாலும் ஒட்டுமொத்தமாக அதிலுள்ள நீதிபதிகளின் தனிப்பட்ட அணுகுமுறைகள் மக்களை அயர்ச்சியடையவே வைக்கின்றன. மேலும், நீதித் துறைக்கு சமூகநீதியின்மீது ஒருமித்த கருத்து இல்லாததும், அரசின் அதிகார மீறலை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதில் சுணக்கம் இருப்பதும் மக்களின் நம்பிக்கையைக் குறைக்கிறது. ஆயினும் அங்கும் இங்குமாக ஒருசில ஒளிக்கற்றைகள் தெரிந்துகொண்டுதான் இருக்கின்றன. அவை நம்பிக்கை நட்சத்திரங்களா அல்லது நொறுங்கிவிழும் வால்நட்சத்திரங்களா என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும்.

உங்களுடைய வழக்கை முன்வைத்து எடுக்கப்பட்டஜெய்பீம்படத்துக்கு ஒரு பக்கம் பெரிய வரவேற்பு இருந்தாலும், இன்னொரு பக்கம் சர்ச்சையும் ஏற்பட்டது. காவலர் கதாபாத்திரம் மாற்றியமைக்கப்பட்டது போன்ற மாற்றங்கள் உங்களுக்குத் தெரிந்துதான் நடந்தனவா? இந்த சர்ச்சைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஜெய்பீம்’ படம் நாடு தழுவிய வரவேற்பைப் பெற்றது ஒருபுறம் என்றால் ஒருசிலர் எவ்வித ஆதாரமுமின்றி அதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்க முன்வந்தது துரதிர்ஷ்டமே எதிர்ப்பு தெரிவித்தவர்கள் காலச்சூழலில் அடித்துச் செல்லப்பட்டனர். எந்தத் திரைப்படம் வந்தாலும் அதற்கு ஆதாரமின்றி எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு கூட்டம் இரண்டாவது தணிக்கை முறையொன்றை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே படத்தின் ஆரம்பத்தில் கூறியது போல், இப்படம் ராஜாக்கண்ணுவின் காவல்நிலைய சித்ரவதையால் ஏற்பட்ட மரண வழக்கை தழுவிய கதையாக இருப்பினும் படத்திலுள்ள சித்தரிப்புகள் கற்பனைதான் என்று கூறப்பட்டிருக்கிறது. இருப்பினும் ஆதாரமில்லாமல் சர்ச்சை எழுப்பியவர்களுடைய உண்மையான நோக்கம் நிறைவேறாததோடு நகராட்சித் தேர்தல்களில் அவர்கள் காணாமல்போனார்கள். மேலும், இப்படம் தமிழ்நாடு எல்லையைத் தாண்டி இந்தியா முழுவதும் பெரிய அலையை உருவாக்கியுள்ளது. அங்கெல்லாம் இதுபோன்ற சர்ச்சைகளுக்கு இடமேதும் இன்றி ஜெய்பீம் என்ற முழக்கம் அனைவரது உதடுகளில் ஒலித்துவருவதே இப்படத்தின் வெற்றி.

ஆசை, தொடர்புக்கு: [email protected]
நன்றி: இந்துதமிழ் நாளிதழ்