நூல் அறிமுகம்: அசோகமித்திரனின் ‘ஆடிய ஆட்டமென்ன’ சுரேஷ் வெங்கடாத்ரி

நூல் அறிமுகம்: அசோகமித்திரனின் ‘ஆடிய ஆட்டமென்ன’ சுரேஷ் வெங்கடாத்ரி




‘ காப்ரியேல் கார்ஸியா மார்க்வஸ் பாரிஸ் நகரில் தெருவில் போகும் ஒருவரை அடையாளம் கண்டு கொண்டு தன்னையறியாமல் ‘மேஸ்ட்ரோ’ என்று கத்துகிறார். அவர் அப்படி கத்தியது, எர்னஸ்ட் ஹெமிங்வேயைப் பார்த்து. ஹெமிங்வே கையைத் தூக்கி அன்புடன் ஆனால் உறுதியுடன் ‘போய்வா நண்பனே ‘ என்கிறார்.’

‘ நான் ஜி.ஆர்.விஸ்வநாத்தைக் கண்டபோதும் அப்படித்தான் கத்தினேன்.நான் விஸ்வநாத்தை விட 15,20 ஆண்டுகளாவது மூத்தவன். ஆனால் அபிமானத்துக்கு வயது கிடையாதோ என்று நினைக்கிறேன்.”

மேலே இருக்கும் வரிகளை எழுதியிருப்பவர் அசோகமித்திரன். அவர் எழுதிய கிரிக்கெட் கட்டுரைகளைத் தொகுத்து வந்திருக்கும், ‘ஆடிய ஆட்டமென்ன’ என்ற ஒரு சிறு நூலில் ‘இந்த நகரத்தில் திருடர்கள் இல்லை’ என்ற கட்டுரையில் வருகிறது இது..

அசோகமித்திரனுக்கும் என்னைப் போலவே விஸ்வநாத்தைப் பிடிக்கும் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. அன்றெல்லாம் காவஸ்கரா விஸ்வநாத்தா என்ற கோஷ்டி சண்டையில் நாங்கள் எப்போதுமே விஸ்வநாத் அணிதான்.(அப்புறம் காவஸ்கருக்கும் விசிறியானேன் என்பது வேறு விஷயம்.)

உண்மையில் நான் வாசித்த அசோகமித்திரனின் முதல் கதையே கிரிக்கெட் பற்றியதுதான். ஜாலி ரோவர்ஸ் ஆடுவதை ஒரு முறையாவது பார்து விட வேண்டுமென்று ஏங்கும் ஒரு பதின்ம வயதுப் பையனைப் பற்றிய கதை அது. அவனுக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அதைப் பார்க்க முடியாமல், வேலைக்கு சென்று சேரும் நிர்ப்பந்தத்தில் இருப்பான் அவன் (நினைவிலிருந்து சொல்கிறேன்) ஆட்டத்தை பார்க்க முடியாது..அந்தக்கதையின் பெயர் நினைவில் இல்லை. எவ்வளவோ தேடிப் பார்த்தும் மீண்டும் ஒரு முறை அதைப் படிக்கவேயில்லை. இந்த நூலைப்பார்த்ததும் முதலில் அந்தக் கதை இருக்கிறதா என்றுதான் தேடினேன். அனால் இது அவர் எழுதிய கிரிக்கெட் கட்டுரைகளைக் கொண்டது என்று அப்புறம்தான் தெரிந்தது. அவரது 18 அட்சக் கோடு நாவலிலும் கிரிக்கெட்டுக்கு ஒரு முக்கிய இடமுண்டுதான்.

இந்த நூலில் இடம் பெற்றிருக்கும், 19 கட்டுரைகளும், 2006ம் ஆண்டு தினமணிக் கதிரில் அவர் தொடராக எழுதி வெளி வந்தவை. சிகந்திராபாத்தில் அவரது இள வயது கிரிக்கெட் ஆட்ட அனுபவங்களும், அவர் கேட்டு (ஆம் ரேடியோவில்) ரசித்த கிரிக்கெட் ஆட்டங்கள், ஆட்டக்காரர்கள் பற்றியக் கட்டுரைகளும் அடங்கிய தொகுப்பு. இரண்டுமே சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன.

ஜி.ஆர்.விஸ்வநாத்தைத் தவிர அசோகமித்திரனுக்கு பிடித்த மற்ற வீரர்கள் என்றால் பிராட்மன் விஜய் ஹசாரே குலாம் அஹ்மது, பூபதி எனும் ஹைதரபாத் ஆட்டக்காரர் என்று தெரிகிறது.மிகவும் நம்பிக்கையளிக்கும் துவக்கங்களைக் கொண்டிருந்த, ஆனால், பின்னாளில் பெரிதாகப் பிரகாசிக்க முடியாத சில ஆட்டக்காரர்களைப் பற்றிய சித்திரங்களும் இதில் உண்டு.

இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றியைப் பற்றி , எழுதியிருக்கிறார். 1960ல் ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான முதல் ‘டை’ டெஸ்டை நினைவு கூர்ந்திருக்கிறார். இடையிடையே சில கட்டுரைகளில் அவர் சந்தர்ப்பவசத்தால் தலைவனாக இருந்த தனது அணியின் சில மேட்சுகளைப் பற்றிய கட்டுரைகளும் உண்டு. அவற்றைப் படிக்கையில் ஸ்ரீரங்கத்து தேவதைகளில் சுஜாதாவின் கிரிக்கெட் கட்டுரைகள் நினைவுக்கு வருகின்றன.

எப்போதுமே போதிய பொருளாதார பலமில்லாமல்,உடைந்த பேட் பிய்ந்து போன, தைக்கப்பட்ட கிரிக்கெட் பந்து, அரை மேட் (Mat ), ஆகியவற்றை வைத்து சமாளிக்கும், கீழ் மத்தியத் தரத்து பையன்கள் நடத்தும் கிரிக்கெட் அணியின் அத்தனை சிரமங்களையும் அனாயாசமாக சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார். முழுக்க முழுக்கக் கிரிக்கெட் விளையாட்டின் மிக லேசான மனநிலையை கொண்டிருக்கும் ஒரு கட்டுரையின் ஒரு வரியில் சட்டென்று ஒரு ஆழத்தையும் கனத்தையும், கொண்டு வந்துவிடுவது அவருக்கே உரித்தான முத்திரை. அப்படிப்பட்ட தருணங்கள் பல இருக்கின்றன இந்தக் கட்டுரைகளில். குறிப்பாக இரண்டாம் உலகப் போர் இந்த ஆட்டத்தையும் வீரர்களையும் பாதித்த விதம்..

இந்தியா ஒரு முறை ஆஸ்திரேலியாவில் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தைப் பற்றி ஒருகட்டுரையில் வருத்தத்துடன் விவரிக்கிறார். நல்ல வேளையாக அதே ஆஸ்திரேலியாவில் 36 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்ததை பார்க்க அ .மி உயிருடன் இருக்கவில்லை. இங்கிலாந்தில் 42 ஆல் அவுட் ஆனது ஏனோ இதில் வரவில்லை. இன்று இந்தியக் கிரிக்கெட் அணிகள் வலுவானவையாக இருப்பதைப் பார்க்க அவரில்லையே என்றும் ஒரு ஏக்கம் படர்கிறது.

சென்ற நூற்றாண்டின் 40களிலிருந்து 70கள் வரையிலான பல இந்திய, சர்வதேச கிரிக்கெட் ஆட்டக்காரர்களான, ரங்காச்சாரி, பங்கஜ் ராய், வினு மங்கட் உம்ரிகர், சந்து சர்வாட்டே, ஜெயசிம்ஹா, சோபர்ஸ், கீத் மில்லர், ரே லிண்ட்வால், ஃப்ரெட் ட்ரூமன் இன்னும் பலரையும், அறிந்து கொள்ளக் கூட இந்தக் கட்டுரைகளை படிக்கலாம்., அசோகமித்திரனின் விசேஷமான பார்வையில் அவர்கள் இங்கே இதிலே ஜொலிக்கிறார்கள். டிராவிட் தோனியைப் பற்றியெல்லாம் கூட ஓரிரு வரிகளில் சொல்லி விடுகிறார். முக்கியமாக டிராவிட் அடிக்கடி ரன் அவுட் ஆவதையும் தோனியின் நீள முடியை முஷாரஃப் பாராட்டியது குறித்தும்கூட எழுதியிருக்கிறார். (முஷாராஃபின் காலமும் முடிந்து விட்டது). இவர்களைப் புகழ்வதில் எந்த மிகையும் இல்லை. அந்த ஜி.ஆர்.விஸ்வனாத் பற்றிய கட்டுரையில் கூட அப்படித்தான். மார்க்வெஸே மேஸ்ட்ரோ என்றழைத்த ஹெமிங்வே, 15-20 ஆண்டுகள் மூத்தவரான அசோகமித்திரன்
வியந்து பார்த்து, மேஸ்ட்ரோ என்று கத்திய விஸ்வநாத்.. அவ்வளவுதான்.. அது போதுமில்லையா..

என்னைப் போன்ற அசோகமித்திரன், கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ரசித்துப் படிக்கத் தக்க, படிக்க வேண்டிய அருமையான நூல்.

சுரேஷ். வெங்கடாத்ரி

நூல் : ஆடிய ஆட்டமென்ன
ஆசிரியர் : அசோகமித்திரன்
விலை : ரூ.₹100/-
வெளியீடு : காலச் சுவடு

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

Ku. Alagirisami Childrens Short Story Based Literature Article by Writer Udhaya Sankar. Book Day is Branch of Bharathi Puthakalayam

களங்கமின்மையின் சுடர் – கு. அழகிரிசாமியின் குழந்தைகள் உலகம்



உதயசங்கர்

“உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்ளுவதும் அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும் ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போலப் பேசி, குழந்தையைப் போல் ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டுப்பொம்மையாகக் கருதி அதற்குத்தக்கவாறு நடந்து கொள்கிறார்கள். ஆனால் அந்தச் சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை. அவர்களுடைய ந்பில் விளையாட்டுணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள் “

குழந்தைகளின் உலகம் எளிமையானது. கபடோ, பாசாங்கோ, கள்ளத்தனங்களோ, அற்றது. அந்தந்தக்கணங்களில் வாழ்கிறவர்கள் குழந்தைகள். வாழும் அந்தத் தருணங்களில் முழு அர்ப்புணிப்புடன் தங்களை ஈடு கொடுப்பவர்கள். எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காதவர்கள். எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து குழப்பமடையாதவர்கள். இயல்பானவர்கள். எந்த உயிர்களிடத்தும் ஏற்ற தாழ்வுகளைப் பார்க்காதவர்கள். பெரியவர்களாகிய நாம் சொல்லிக்கொடுக்காதவரை உயர்வு தாழ்வு என்ற சிந்தனை இல்லாதவர்கள். அவர்களுடைய போட்டியும் பொறாமையும் குழந்தைமையின் ஒரு பண்பு. அந்தக் குணங்கள் அவர்களிடம் வெகுநேரம் நீடிப்பதில்லை. எந்தச் சண்டையையும் நீண்ட நேரத்துக்கு போடாதவர்கள். காயும் பழமுமாக அவர்களுடைய வாழ்க்கையை வண்ணமயமாக்குபவர்கள். அன்பு நிறைந்தவர்கள். அன்பால் நிறைந்தவர்கள். குழந்தைமை என்பதே வெகுளித்தனமும், களங்கமின்மையும், கபடின்மையும் தான். ஒரு காலத்தில் குழந்தைகளாக இருந்த பெரியவர்கள் வளரும்போது அந்தக் குழந்தைமையைத் தொலைத்து விடுகிறார்கள். தங்களுடைய பரிசுத்தமான உணர்ச்சிகளால் நிறைந்த அப்பாவித்தனமான இளகிய இதயத்தை வளர வளர இரும்பாக்கி விடுகிறார்கள். ஒருவகையில் இலக்கியம் அந்த மாசற்ற அன்பைப்பொழியும் களங்கமின்மையை மீட்டெடுக்கிற முயற்சி தான்.

குழந்தைகள் உலகை தமிழிலக்கியத்தில் புனைவுகளாக நிறையப்பேர் எழுதியிருக்கிறார்கள். புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், வண்ணதாசன், பிரபஞ்சன், தமிழ்ச்செல்வன், கோணங்கி, ஜெயமோகன், கி.ராஜநாரயணன், எஸ்.ராமகிருஷ்ணன், என்று குழந்தைகளை மையப்படுத்திய கதைகளை எழுதி சாதனை செய்திருக்கிறார்கள். குழந்தைகளின் உளவியல், இயல்புகளைப் பற்றிப் பெரியவர்கள் புரிந்து கொள்கிற கதைகளாக அவை வெளிப்பாடடைந்திருக்கின்றன. சிறார் இலக்கியத்தின் முக்கியமான மூன்று வகைமைகளாக குழந்தைகள் வாசிப்பதற்காக பெரியவர்கள் எழுதும் இலக்கியம், குழந்தைகளே எழுதுகிற இலக்கியம், குழந்தைகளைப் புரிந்து கொள்வதற்காகப் பெரியவர்கள் எழுதுகிற இலக்கியம் என்று சொல்கிறார்கள் சிறார் இலக்கிய ஆய்வாளர்கள். அதில் குழந்தைகளைப் பற்றி பெரியவர்கள் எழுதியுள்ள ஏராளமான கதைகளில் கு.அழகிரிசாமியின் கதைகளான ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு, தம்பி ராமையா, பேதமை, தெய்வம் பிறந்தது, போன்ற கதைகள் உச்சத்தைத் தொட்டிருக்கின்றன. கு.அழகிரிசாமியின் எளிமையான கலைவெளிப்பாடு குழந்தைகளின் எளிமையான உலகத்துடன் மிகச் சரியாகப் பொருந்தி அந்தக் கதைகளை கலையின் பூரணத்துவத்துக்கு அருகில் கொண்டு போய் விடுகிறது.

கு.அழகிரிசாமியின் தனித்துவமான வெளிப்பாடு என்று எதைச் சொல்லலாமென்றால் அன்றாட வாழ்க்கையின் அன்றாடக்காட்சிகளிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்கிறார். அதில் தன் கருத்தைத் திணிக்காமல் அதே நேரம் அந்தக் காட்சியில் தன் கருத்துக்கு ஏற்ற இயல்பை, வண்ணத்தீற்றலை அல்லது கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து வளர்த்தெடுக்கிறார். குழந்தைகள் வரையும் ஓவியம் போல அவ்வளவு இயற்கையாக இருக்கிறது. முதலில் அதன் எளிமை நம்மை ஏமாற்றி விடுகிறது. ஆனால் உற்று நோக்க நோக்க அந்த ஓவியத்தின் அழகும், ஆழமும், கடலென விரிவு கொள்கிறது. அதை உணர்ந்து கொள்ளும் போது வாசகனுக்குத் திடீரென தான் ஒரு பெருங்கடலுக்கு நடுவே நிற்பதை உணர்வான். தன்னச்சுற்றி வண்ணவண்ண முத்துகள் கீழே கொட்டிக் கிடப்பதைப் பார்ப்பான். ஒரு ஒளி வாழ்க்கை மீது ஊடுருவி பேருணர்வின் தரிசனத்தைக் கொடுக்கும். அதுவரை கெட்டிதட்டிப்போயிருந்த மானுட உணர்வுகளின் ஊற்றுக்கண் உடைந்து உணர்ச்சிகள் பெருகும். விம்மலுடன் கூடிய பெருமூச்சு எழுந்து வரும். கண்களில் ஈரம் பொங்கும். தன்னையும் அந்தச் சித்திரத்துக்குள் ஒரு கதாபாத்திரமாக உணரவைக்கும்.

Ku. Alagirisami Childrens Short Story Based Literature Article by Writer Udhaya Sankar. Book Day is Branch of Bharathi Puthakalayam

அப்போது தான் கு.அழகிரிசாமியெனும் மகாகலைஞனின் மானுட அன்பை உணர்வான். அவருடைய கலைக்கோட்பாட்டை உணர்வான். அவருடைய கலை விதிகளைத் தெரிந்து கொள்வான். அவருடைய அரசியலை புரிந்து கொள்வான். அந்தச் சித்திரம் வாசகமனதில் அவர் ஏற்படுத்த நினைக்கும் தாக்கத்தைத் துல்லியமாக ஏற்படுத்தியதை உணர்ந்து கொள்வான். கு.அழகிரிசாமியின் கதைகளில் பெரிய தத்துவவிசாரமோ, ஆன்மீக விசாரமோ, செய்வதில்லை. ஆனால் அப்படியொரு வாய்ப்பு அந்தக் கதைகளுக்குள் வருமென்றால் அதை ஒதுக்கித் தள்ளுவதுமில்லை. பழந்தமிழ் இலக்கியத்தில் நல்ல வாசிப்பு இருந்தாலும், ஏராளமான கவிதைகளை எழுதியிருந்தாலும் கதைகளில் எளியமொழியையே கையாண்டார். இதழியல் துறையில் வேலை பார்த்ததாலோ என்னவோ யாருக்கு எழுதுகிறோம் என்ற போதம் இருந்தது. தமிழ்ச்சிறுகதைகளின் வரலாற்றில் பல உச்சங்களைத் தொட்டிருந்தார் கு.அழகிரிசாமி. குறிப்பாக குழந்தைகளை மையமாக வைத்து அவர் எழுதிய, ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு, தம்பி ராமையா, பேதமை, என்ற நான்கு கதைகளிலும் குழந்தைகளின் அப்பாவித்தனத்தை, ஏக்கத்தை, அறியாமையை, குழந்தைகளோடு குழந்தையாக இருந்து எழுதியிருப்பதை வாசிக்கும் போது உணரமுடியும்.

ஒருவகையில், ராஜா வந்திருக்கிறார் கதை கு.அழகிரிசாமியின் மையம் என்று கூடச் சொல்லலாம். அவர் இந்த வாழ்க்கையின் அவலத்தை, எத்தனை நெருக்கடிகள் வந்தாலும், துன்பதுயரங்கள் வந்தாலும் தாயம்மாளைப் போலத் தாங்கிக் கொள்ளவும் மங்கம்மாளைப் போல நம்பிக்கையுடன் கடந்து செல்லவும். தான் வாழும் வாழ்க்கையை வம்புக்கிழுக்கவும், அதில் வெற்றி பெறவும் முடியும் என்பதைச் சொல்கிற மிக முக்கியமான மானுட அரசியல் கதை. இந்த ஒரு கதைக்காகவே கு.அழகிரிசாமி உலகத்தரத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டிய எழுத்தாளராகிறார்.

1950 – ல் சக்தி இதழில் வெளியான ராஜா வந்திருக்கிறார் கதையின் தொடக்கமே மங்கம்மாளின் குழந்தைகளின் போட்டி விளையாட்டுடன் தான் தொடங்குகிறது. சிறுகுழந்தைகள் அணிந்திருக்கும் சட்டையில் தொடங்கும் போதே இரண்டு வர்க்கங்களை அறிமுகப்படுத்தி விடுகிறார் கு.அழகிரிசாமி. மங்கம்மாளும், அவளுடைய மூத்த சகோதரர்களான செல்லையாவும் தம்பையாவும் ஏழ்மையில் உழலும் குடும்பம் என்பதும் அந்த ஊரிலேயே பெரிய தனக்காரரின் மகனான ராமசாமி சில்க் சட்டை போடுகிற, ஆறு பசுக்களை வைத்திருக்கிற வசதியான குடும்பத்தினர் என்பதும் தெரிந்து விடுகிறது. புத்தகத்தில் பதிலுக்குப் பதில் படம் காண்பிக்கும் விளையாட்டிலிருந்து என் வீட்டில் ஆறு பசு இருக்கிறது உன்வீட்டில் இருக்கிறதா? என்று வளர்ந்து பதில் பேச முடியாத ராமசாமியை மங்கம்மாளும், செல்லையாவும், தம்பையாவும், சேர்ந்து தோத்தோ நாயே என்று கேலி செய்வதில் முடிகிறது. இரண்டு குடும்பத்தினரும் வெவ்வேறு சாதியினர் என்பதை கோழி அடித்துத் தின்பதைப் பற்றிக் கேலியாக ராமசாமி சொல்வதன் மூலம் காட்டி விடுகிறார். செல்லையாவையும் தம்பையாவையும் விட மங்கம்மாளே துடிப்பான குழந்தையாக அறிமுகமாகிறாள்.

ராமசாமியின் வீட்டு வேலைக்கராரால் விரட்டப்பட்டு குடிசைக்கு வரும் குழந்தைகளில் மங்கம்மாள் அவளுடைய தாயாரான தாயம்மாளிடம் ஐயா வந்து விட்டாரா? என்று கேட்பதிலிருந்து வேறொரு உலகம் கண்முன்னே விரிகிறது. எங்கோ தொலைதூரத்தில் வேலை பார்த்து அரைவயிறும் கால்வயிறுமாகக் கஞ்சி குடித்து எப்படியோ மிச்சப்பட்ட காசில் தீபாவளிக்கு குழந்தைகளுக்கு மல் துணியில் இரண்டு பனியன்களும், இரண்டு டவுசர்களும், ஒரு பாவாடையும், பச்சைநிறச்சட்டையும், ஒரு ஈரிழைத் துண்டும் இருக்கின்றன. அம்மாவுக்குத் துணியில்லை. அப்பாவுக்கு அந்தத் துண்டை வைத்துக்கொள்ளலாம் என்று அம்மா சொல்கிறார். அம்மாவுக்கு இல்லாத துணி அப்பாவுக்கு எதுக்கு என்று மங்கம்மாள் கேட்கிறாள்.

இருட்டில் அவர்கள் குடிசைக்குப் பின்னாலிருந்த வாழைமரத்துக்குக் கீழே ஒரு சிறுவன் எச்சில் இலையை வழித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து அவனை அழைத்து விவரம் கேட்கிறார் தாயம்மாள். அப்பா, அம்மா, இல்லாத அநாதையான சிரங்கும் பொடுகும், நாற்றமும் எடுக்கும் தன் அரையில் கோவணம் மட்டுமே கட்டியிருந்த அந்தச் சிறுவனுக்குக் கூழு கொடுத்து தன் குழந்தைகளோடு படுக்க வைக்கிறாள். இரவில் பெய்யும் மழைக்கூதலுக்கு தான் மறுநாள் தீபாவளியன்று உடுத்தலாம் என்று எடுத்து வைத்திருந்த பீத்தல் புடவையை எல்லாருக்குமாகப் போர்த்தி விடுகிறார். மறுநாள் விடிகாலையிலேயே குழந்தைகளை எழுப்பி எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி விடுகிறார். ராஜா என்ற அந்தச் சிறுவனுக்கும் எண்ணெய் தேய்த்து சீயக்காய் பொடி போட்டு பக்குவமாகக் குளிப்பாட்டி விடுகிறார். குளிக்கும் போது சிரங்குப்புண்களால் ஏற்பட்ட வேதனையினால் ராஜா அழும்போது சரியாயிரும் சரியாயிரும்.. புண் ஆறிரும் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார். அந்தப் பகுதியை வாசிக்கும் போது மனம் இளகாமல் இருக்கமுடியாது. பரிவின் சிகரத்தில் தாயம்மாளை படைத்திருக்கிறார் கு.அழகிரிசாமி.

Ku. Alagirisami Childrens Short Story Based Literature Article by Writer Udhaya Sankar. Book Day is Branch of Bharathi Puthakalayam

மற்ற குழந்தைகள் புதுத்துணி உடுத்தும் போது ராஜாவுக்கு என்ன செய்ய என்று தாயம்மாள் குழம்பி நிற்கும் போது மங்கம்மாள் தான் அப்பாவுக்கென்று வைத்திருந்த அந்த ஈரிழைத்துண்டைக் கொடுக்க சொல்கிறாள். அவள் சொன்னதும் தயக்கமில்லாமல் அந்தத் துண்டை எடுத்து ராஜாவுக்குக் கட்டி விடுகிறாள். ஒரு வகையில் தாயம்மாளையும் மங்கம்மாளையும் ஒரே உருவின் இரண்டு பிறவிகளாகப் படைத்திருக்கிறார் கு.அழகிரிசாமி என்று சொல்லலாம். புதுத்துணி உடுத்திய குழந்தைகள் தெருவுக்கு வரும்போது பெரிய வீட்டு ராமசாமி வருகிறான். அவனுடைய அக்காவைத் திருமணம் முடித்த ஜமீன் ராஜா அவர்களுடைய வீட்டுக்கு வந்திருக்கிறார் என்பதை

“எங்க வீட்டுக்கு ராஜா வந்திருக்கிறார்..” என்று சொல்லும்போது, மங்கம்மாள் பழைய பள்ளிக்கூடப்போட்டியை நினைத்துக் கொண்டு,

“ஐயோ! உங்க வீட்டுக்குத்தானா ராஜா வந்திருக்கிறார்… எங்க வீட்டுக்கும் தான் ராஜா வந்திருக்கிறான்.. வேணும்னா வந்து பாரு..”

என்று சொல்வதோடு கதை முடிகிறது. இந்த வரிகளை வாசிக்கும் போது கண்ணில் நீர் துளிர்க்கிறது. இந்தக்கதையை வாசிக்க வாசிக்க வாசகமனதில் பேரன்பு ஒன்று சுரந்து பெருகி இந்த மனிதர்களை, உலகத்தை, பிரபஞ்சத்தை, அப்படியே சேர்த்தணைப்பதை உணரமுடியும்.
எளியவர்களின் மனவுலகை, அவர்கள் இந்த வாழ்க்கையை பார்க்கும் பார்வையை இதை விடச்சிறப்பாக யாரும் சொல்லவில்லை. எல்லாவிதமான இல்லாமைகளுக்கும் போதாமைகளுக்கும் நடுவில் தாயம்மாளிடம் அன்புக்குக் குறைவில்லை. தாய்மையுணர்வு குறையவில்லை. பொங்கித்ததும்பும் இந்த அன்பின் சாயலையே குமாரபுரம் ஸ்டேஷன் கதையிலும் வரைந்திருப்பார். முன்பின் தெரியாதவர்களிடம் ஏற்படும் உறவுகளின் தார்மீகநேசத்தைச் சொல்லியிருப்பார்.

Ku. Alagirisami Childrens Short Story Based Literature Article by Writer Udhaya Sankar. Book Day is Branch of Bharathi Puthakalayamகு.அழகிரிசாமி ராஜா வந்திருக்கிறார் கதையில் தன்னுடைய அம்மாவுக்கு கோயில் கட்டியிருப்பதாக கி.ரா. சொல்லியிருந்தார். உண்மையில் ஒரு இந்திய கிராமத்தின் ஆத்மாவினைத் தொட்டுக்காட்டுகிற கதையாக ராஜா வந்திருக்கிறார் கதையைச் சொல்லலாம். தமிழ்ச்சிறுகதைச் சிகரங்களில் ஒன்று ராஜா வந்திருக்கிறார்.

வாழ்வின் எந்தக் கட்டத்திலாவது புறக்கணிப்பின் துயரை அனுபவிக்காதவர்கள் இருக்கமுடியாது. அந்தத் துயரே அவர்களை வாழ்க்கை முழுவதும் வேட்டையாடிக் கொன்று தீர்த்து விடும். நிராகரிப்பின் கொடுக்குகளால் கொட்டப்பட்ட ஒருவனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு துளியும் எவ்வளவு கசப்பானதாக இருக்குமென்பது அதை அனுபவித்தவர்கள் உனர்வார்கள். ஆனால் குழந்தைகள் தங்களுக்கு நேர்கிற புறக்கணிப்பை எப்படி அவர்கள் வழியிலேயே ஈடு கட்டி மகிழ்கிறார்கள் என்பதை நேர்த்தியாகச் சொல்கிற கதை அன்பளிப்பு. கதையின் ஒவ்வொரு கணமும் நம்முடைய வாழ்வில் நாம் அனுபவித்த, நாம் பங்கேற்ற கணமாகவே இருப்பதை வாசிக்கும்போது உணரலாம். கதையின் இறுதிக்காட்சியில் நம்மை அறியாமல் நாம் மூச்சு விடக்கூட மறந்து போவோம். அந்தக் கடைசி வரியில் புறக்கணிப்பின் துயர் மொத்தமாக நம்மீது மிகப்பெரிய பளுவாக இறங்கி நசுக்குவதை உணர்ந்து கொள்ளமுடியும். ஒரு புதிய பாதை, ஒரு புதிய வெளிச்சம் நம் கண்ணுக்கு முன்னால் தெரியும். நமக்கு அழுகை வரும். சிரிப்பும் வரும். நாம் அழுதுகொண்டே சிரிக்கவோ, சிரித்துக்கொண்டே அழவோ செய்வோம். இதுதான் கு. அழகிரிசாமி நம்மிடம் ஏற்படுத்துகிற மாயம்.

மிகச்சாதாரணமாகா ஆரம்பிக்கிற கதை எப்படி இப்படியொரு மனித அடிப்படை உணர்வுகளில் ஊடாடி நம்மை அசைக்கிறது. வாழ்க்கை குறித்த மகத்தான ஞானத்தை நம்மிடம் ஏற்படுத்துகிறது என்பது தான் கலை. மகத்தான கலை எளிமையாகவே இருக்கிறது. அந்தக் கலை ஏற்படுத்தும் உணர்வு மானுடம் முழுவதற்கும் பொதுமையானது. அன்பளிப்பு கதை அந்த உணர்வை அளிக்கும் அற்புதத்தைச் செய்கிறது.

பத்திரிகை அலுவலகத்தில் வேலை பார்க்கும் கதாநாயகன், பக்கத்து வீடுகளிலிருக்கும் குழந்தைகளோடு மிக அன்னியோன்யமான பாசத்தையும் நேசத்தையும் கொண்டிருக்கிறான். அந்தக் குழந்தைகளும் அவன் மீது அளவில்லாத பிரியம் கொண்டிருக்கின்றன. அவனை வயது மூத்தவனாகக் கருதாமல் தங்களுடைய சமவயது தோழனாகக் கருதுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாளென்று விடிந்து வெகுநேரமாகியும் தூங்கிக் கொண்டிருக்கிற அவனை முதுகில் அடித்து எழுப்புகின்றன குழந்தைகள். குழந்தைகள் வாசிப்பதற்காக அவன் வாங்கிக்கொண்டு வருவதாகச் சொன்ன புத்தகங்களுக்காக வீட்டை கந்தர்கோளமாக ஆக்கிவிடுகின்றனர். அவனும் அவர்களுக்கு சமமாக விளையாடி கொண்டு வந்த புத்தகங்களைக் கொடுக்கிறான்.

அவன் தாயாரோடு இந்த வீட்டுக்கு வந்த புதிதில் அவனுக்குப் பரிச்சயமான சித்ராவும் சுந்தர்ராஜனும் எப்போதும் முதல் உரிமையை எடுத்துக் கொள்கிறார்கள். அவனும் அதைச் சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறான். மற்ற குழந்தைகளும் அதை நியாயம் தான் என்று நினைக்கும் போது சாரங்கராஜன் மட்டும் ஏங்குகிறான். அதற்காக வால்ட்விட்மேனின் கவிதை நூலை வாசிக்கக் கேட்கிறான். அதை மறுக்கும்போது அழுகிறான். அடுத்து அவன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பிருந்தாவுக்குக் காய்ச்சல் கண்டு படுத்திருப்பதைக் கேள்வி கேட்டு அவர்கள் வீட்டுக்குப் போய்ப் பார்க்கிறான். பிருந்தா அவனைப் பார்த்ததும் மாமா மாமா என்று புலம்புகிறாள். கொஞ்சம் தெளிவடைகிறாள். அப்போது சாரங்கனும் தன்னுடைய வீட்டுக்கு வரச்சொல்லி வற்புறுத்துகிறான். அதன்பிறகு இரண்டு டைரிகளைக் கொண்டுவந்தவன் சித்ராவுக்கும் சுந்தர்ராஜனுக்கும் மட்டும் கொடுக்கிறான். அப்போதும் சாரங்கன் ஏமாந்து போகிறான்.

ஏற்கனவே சொன்னபடி ஞாயிற்றுக்கிழமையன்று சாரங்கனின் வீட்டுக்குப் போகும் கதாநாயகனுக்கு உப்புமா காப்பியெல்லாம் கொடுத்து உபசரிக்கிறான் சாரங்கன். பின்னர் மெல்ல அவனுடைய டவுசர் பையிலிருந்து ஒரு டைரியை எடுத்து அவனுக்கு முன்னால் வைத்து எழுதச் சொல்கிறான் சாரங்கன்.

என்ன எழுத? என்று கேட்கும் அவனிடம், சொல்கிறான் சாரங்கன்.

”என் பிரியமுள்ள சாரங்கனுக்கு அன்பளிப்பு“

குழந்தைகளின் களங்கமற்ற அன்பைச் சொல்கிற மிகச் சிறந்த கதை. குழந்தைகளிடம் பெரியவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற அரிச்சுவடியைக் கற்பிக்கும் கதை அன்பளிப்பு. இந்தக் கதைக்குள் ஓரிடத்தில் கதையின் கதாநாயகன் நினைப்பதாக கு.அழகிரிசாமி எழுதுகிறார்.

Ku. Alagirisami Childrens Short Story Based Literature Article by Writer Udhaya Sankar. Book Day is Branch of Bharathi Puthakalayam

“உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்ளுவதும் அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும் ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போலப் பேசி, குழந்தையைப் போல் ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டுப்பொம்மையாகக் கருதி அதற்குத்தக்கவாறு நடந்து கொள்கிறார்கள். ஆனால் அந்தச் சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை. அவர்களுடைய ந்பில் விளையாட்டுணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள் “

உண்மையிலேயே குழந்தைகளின் உலகத்தில் குழந்தைகளோடு குழந்தையாக வாழ்பவரால் மட்டுமே இப்படியான கவனிப்பைச் சொல்ல முடியும். இந்தக்கதை 1951-ல் சக்தி அக்டோபர், நவம்பர் இதழில் வெளியாகியிருக்கிறது.

ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு, இரண்டு கதைகளும் தமிழிலக்கியத்துக்கு கு.அழகிரிசாமி கொடுத்துள்ள கொடை என்று சொல்லலாம்.

1959 – ஆம் ஆண்டு எழுதப்பட்ட தம்பி ராமையா கதையில் அப்போதே கல்வியினால் தங்களுடைய குடும்பம் உய்த்து விடும் என்று நம்பி காடுகரைகளை விற்று மூத்தமகனான சுந்தரத்தை படிக்கவைக்கிறார் கிராமத்து விவசாயியான பூரணலிங்கம். ஆனால் மகன் படித்து முடித்து நான்கு வருடங்களாக வேலை கிடைக்காமல் வீட்டிலிருக்கும் அவலத்தைப் பார்த்து கல்வியின் மீதே வெறுப்பு வருகிறது. ஊரிலுள்ள மற்ற பேர்கள் தங்களுடைய குழந்தைகளைப் படிக்கவைப்பது குறித்து பேசும்போது பூரணலிங்கம் படிப்பினால் எந்தப் பிரயோசனமுமில்லை என்று வாதிடுகிறார். இந்த நிலைமையில் மதுரையில் நண்பன் ஒருவன் மூலம் சொற்ப சம்பளத்துக்கு வேலைக்குப் போன சுந்தரம் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி மாதாமாதம் ஐந்து ரூபாய் சேமித்து ஆண்டுக்கு ஒருமுறை ஊருக்கு வருகிறான். ஊருக்கு வரும்போது தம்பி தங்கைகளுக்குத் துணிமணிகள், பலகாரங்கள், வாங்கிக் கொண்டு வருகிறான். தந்தையின் கையில் முப்பதோ, நாற்பதோ பணமும் கொடுக்கிறான். அவன் ஊரில் இருக்கும் சில நாட்களுக்கு தினமும் விருந்துச்சாப்பாடு நடக்கிறது. இதைப்பார்த்த தம்பி ராமையா அண்ணனுடன் ஊருக்குப் போனால் தினம் பண்டம் பலகாரம் புதுத்துணி, பொம்மை என்று வசதியாக இருக்கலாம். ஆனால் அண்ணன் அவனைக் கூட்டிக் கொண்டுபோக மறுக்கிறான் என்று நினைத்து அண்ணன்மீது வெறுப்பு வளர்ந்து அவன் ஊருக்குப் போகும்போது அலட்சியப்படுத்துகிறான்.

அண்ணனால் தம்பியின் வெறுமையான பார்வையைத் தாங்க முடியவில்லை. ஆனால் வீட்டிலுள்ளோருக்குப் புரியாமல் தம்பி ராமையாவை அதட்டி உருட்டி அண்ணனை வழியனுப்ப ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துக் கொண்டு வருகிறார்கள். ராமையா அண்ணனுக்கு விடைகொடுக்க கையைக்கூட அசைக்கவில்லை.

அப்போது சுந்தரம் நினைக்கிறான்,

“ராமையா நான் உன்னை நடுக்காட்டில் தவிக்க விட்டுவிட்டு இன்பலோகத்துக்கு வந்து விடவில்லையடா. நான் வேறொரு நடுக்காட்டுக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறேன்.. நீயாவது என்னை வெறுப்பதன் மூலம் ஆறுதலைத் தேடிக்கொண்டாய்.. எனக்கோ எந்த ஆறுதலும் இல்லை….. தினம் தினமும் உன்னையும் உன் ஏக்கத்தையும் இப்போது உன் வெறுப்பையும் எண்ணி எண்ணித் துயரப்படுவதற்குத் தான் மதுரைக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.. நீ நினைப்பது போல் நான் ஈவு இரக்கமற்ற பாவியில்லை..”

தம்பிராமையா என்ற ஏழுவயது சிறுவனின் மனநிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிற கதை. அண்ணன் சுந்தரத்தின் வழியே கதையை நடத்தும் கு.அழகிரிசாமி அந்தக் காலத்தைப் பற்றிய சமூக விமரிசனத்தையும் கல்வி குறித்த விமரிசனத்தையும் முன்வைக்கிறார். இந்தக் கதை பல தளங்களில் வைத்துப் பேசப்படவேண்டிய கதை.

கு.அழகிரிசாமியின் வர்க்க அரசியலை வெளிப்படையாக உணர்த்துகிற கதை தெய்வம் பிறந்தது. ராமசாமிக்குத் திருமணமாகி நீண்ட பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு பிறக்கிறான் குழந்தை ஜகந்நாதன். அவர் அவனை இந்த உலகின் அனைத்து தர்மநியாயங்களும் அறிந்த உத்தமனாக வளர்க்க நினைக்கிறார். அதற்காக அவர் அவனுக்கு எல்லாவிதமான நீதிநெறிகளையும் நன்னெறிகளையும் சொல்லிக்கொடுக்கிறார். அவர் சொன்னபடியே கேட்டு நடக்கிறான் ஜகந்நாதன். அப்பாவுக்கு ஷவரம் செய்ய வரும் வேலாயுதத்தை வணங்கி மரியாதை செய்கிறான்.

Ku. Alagirisami Childrens Short Story Based Literature Article by Writer Udhaya Sankar. Book Day is Branch of Bharathi Puthakalayamவீட்டில் காந்தியின் படத்தை மாட்டும்போது அவர் சமூகத்துக்குச் செய்த சேவையைப் பற்றி ஜகந்நாதனிடம் சொல்கிறார். அப்போது அவன் அபப்டியென்றால் சாமிப்படங்களை ஏன் மாட்ட வேண்டும் என்று கேட்கிறான். இந்த உலகை, இயற்கையைப் படைத்துக் காப்பாற்றுகிற சாமிப்படங்களை மாட்டி வைக்கலாம் என்று சொன்னதும் கேட்டுக் கொள்கிறான். ராமசாமிக்கு ஒரு குடும்பப்படம் எடுத்து வீட்டில் மாட்டி வைக்க ஆசை. அதற்காகப் பிரயத்தனப்பட்டு போட்டோ ஸ்டுடியோவுக்குப் போய் போட்டோ எடுத்து கண்ணாடிச் சட்டமிட்டு சுவரில் மாட்டுகிறார். அப்போதும் குழந்தை ஜகந்நாதன் கேள்வி கேட்கிறான். நம்முடைய போட்டோவை எதுக்கு நம் வீட்டில் மாட்டவேண்டும் என்கிறான். தந்தையால் பதில் சொல்லமுடியவில்லை. காந்தி, சாமிப் படங்களை மாட்டியிருப்பதற்குச் சொன்ன பதிலையே அவன் திரும்பக் கேள்வியாகக் கேட்கிறான். நமக்கு நன்மை செய்கிறவர்களின் படங்களைத் தான் மாட்டவேண்டுமென்றால் நம்முடைய வீட்டுக்கு வருகிற துணி வெளுக்கிற கோமதி நாயகம், ஷவரம் செய்கிற ஐயாவு, வேலாயுதம், காய்கறிக்காரர், இவர்களுடைய படங்களை ஏன் மாட்டவில்லை? என்று கேட்கிறான் குழந்தை. அந்தக்கேள்வியைக் கேட்ட ராமசாமி சிலிர்த்து மகனைக் கட்டியணைத்து கண்ணீர் சிந்தி, என் வயிற்றிலும் தெய்வம் பிறக்குமா? பிறந்து விட்டதே! என்று ஆனந்தக்கூச்சலிட்டுக்கொண்டு மனைவியைத் தேடிப்போகிறார்.

பெற்றோர்கள் எல்லோருமே தங்களுடைய குழந்தைகள் நீதிமான்களாக நியாயவான்களாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள் தான். அந்த நியாயமும், நேர்மையும் அவர்களைத் தர்மசங்கடப்படுத்தாதவரையில் குழந்தைகளுக்கு நன்னெறி, நீதிநெறி, ஆகியவற்றைச் சொல்லிக் கொடுப்பார்கள். தெய்வம் பிறந்தது கதையில் வருகிற ராமசாமி குழந்தையின் கேள்வியில் புளகாங்கிதமடைகிறார். அந்தக் கேள்வியின் தாத்பரியத்தைக் கண்டு அகமகிழ்கிறார். கு.அழகிரிசாமி தன்னுடைய அரசியல் சார்பு நிலையை ஜகந்நாதன் மூலம் வெளிப்படுத்துகிறார் என்று சொல்லலாம். இயல்பு மாறாமல் குழந்தையின் கேள்விகளை திறம்பட புனைவாக்கித் தந்து கதை முடிவில் ஒரு புதிய வெளிச்சத்தைக் காட்டுகிறார் கு.அழகிரிசாமி.

1960 – ஆம் ஆண்டு தாமரை பொங்கல் மலரில் வெளியான கதை தெய்வம் பிறந்தது.
மேலே சொன்ன கதைகளுக்கு மாறாக குழந்தைகளின் பேதமையைப் பற்றி எழுதிய் கதை பேதமை. 1960- ஆம் ஆண்டு மார்ச் மாதம் கலைக்கதிர் பத்திரிகையில் வெளியான கதை. வாசகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் கதை.

தெருவில் கடைக்காரரால் மிருகத்தனமாக அடிக்கப்பட்டு கதறிக் கொண்டிருக்கும் இரண்டு கந்தலுடையில் அழுக்காக இருந்த ஏழைச்சிறுவர்களை அந்த அடியிலிருந்துக் காப்பாற்றுகிற கதாநாயகன் சற்று நேரத்துக்கு முன்னால் அவனே அடிக்க வேண்டும் என்று நினைத்தவன் தான். வீடு வீடாகச் சென்று பிச்சைச்சோறு வாங்கி வந்து கொண்டிருந்த வயதான குருட்டுப்பிச்சைக்காரரின் தகரக்குவளையில் அந்த இரண்டு சிறுவர்களும் மண்ணையள்ளிப் போட்டு விட்டுச் சிரிக்கிறார்கள். அதைப்பார்த்த எல்லோருக்குமே ஆத்திரம் வந்தது. ஆனால் கடைக்காரர் அந்த ஆத்திரத்தை கண்மண் தெரியாமல் காட்டி விட்டார். குழந்தைகளின் அவலக்குரலைத் தாங்க முடியாமல் அவரிடமிருந்து அவர்களை மீட்டு அவர்களுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.

ஊருக்கு வெளியே இருந்த குடிசையில் அவனுடைய அம்மா மட்டுமல்ல அக்கம்பக்கத்திலிருந்த குடிசைகளிலிருந்தவர்களும் கூட அந்தக் குழந்தைகளை அடிக்க வேண்டும் என்கிறார்கள். அப்ப்போது கூட குழந்தைகளின் பேதமையை நினைத்து, இப்படியொரு கொடூரமான வாழ்க்கையிலிருந்து தப்பிக்கத் தானே எண்ணம் வரும் என்றெல்லாம் யோசிக்கிறார் கதாநாயகன். ஆனால் அந்த இடத்தை விட்டுப் புறப்படும்போது அந்தக் குடிசைக்குத் தட்டுத்தடுமாறி இன்னொரு குருட்டுப்பிச்சைக்காரன் ஒரு கையில் குவளையும். ஒரு கையில் தடியுடன் வந்து சேர்கிறான். அவன் தான் அந்தக் குழந்தைகளின் தந்தை. அதைப் பார்த்ததும் கதாநாயகனுக்கு நெஞ்சே வெடித்து விடும் போலிருக்கிறது. குருடன் பெற்ற பிள்ளைகள் தான் குருடன் சோற்றில் மண்ணள்ளிப் போட்டுச் சிரித்தவர்கள்.

துயரம் தாங்க முடியாமல் கடைசி வரியில் குழந்தைகளே! என்று விளிக்கிறார் கதாநாயகன்.
புறவயமான சமூகச்சூழலின் விளைவாக இருந்தாலும் இந்தக் கதையில் வரும் குழந்தைகளின் பேதமையை யாராலும் பொறுத்துக் கொள்ளமுடிவதில்லை.

குழந்தைகளைப் பற்றிய இன்னுமொரு கதை இருவர் கண்ட ஒரே கனவு.

கு.அழகிரிசாமியின் கலை உன்னதங்களை மட்டுமல்ல, கீழ்மைகளையும் நமக்குக் காட்டுகிறது. அவரளவுக்கு நுட்பமாக குழந்தைகளின் உலகை வெளிப்படுத்தியவர்கள் தமிழில் மிகவும் குறைவு.

Ku. Alagirisami Childrens Short Story Based Literature Article by Writer Udhaya Sankar. Book Day is Branch of Bharathi Puthakalayamஇருவர் கண்ட ஒரே கனவு கதையில் ஏழைத்தாய் காய்ச்சலினால் இறந்து போய் விடுகிறாள். அவளுடைய இரண்டு பையன்களும் இரண்டு மூன்று நாட்களாகச் சாப்பிடாமல் கிடக்கிறார்கள். அவர்களைப் பார்த்து இரக்கப்பட்டு கஞ்சி கொடுக்கிறார் விவசாயத்தொழிலாளியான வேலப்பன். அடுத்தவர்கள் கொடுக்கும் எதையும் வாங்கிச் சாப்பிடக்கூடாதென்ற அம்மாவின் கண்டிப்பினால் ஆசைப்பட்டு கஞ்சியை வாங்கிவந்த சின்னவனிடம் பெரியவன் சண்டைபோட்டு கஞ்சியைக் கீழே கொட்டி விடுகிறார்கள். அம்மாவிடம் புகார் சொல்வதற்காக ஓடிவந்தால் அம்மா இறந்து கிடக்கிறாள். எப்போதும் அவள் விளையாடும் விளையாட்டென்று நினைத்து அவளை அடித்துக் கிள்ளி எழுப்புகிறார்கள். அம்மாவின் இழப்பைக் கூட உணரமுடியாத பிஞ்சுக்குழந்தைகள். முன்னர் கஞ்சி கொடுத்த வேலப்பன் தன் வீட்டில் அவர்களைத் தங்கவைக்கிறான். இரவில் இரண்டு குழந்தைகளும் ஏக காலத்தில் அம்மா என்றலறி எழுந்திரிக்கிறார்கள். கேட்டால் இருவருக்கும் ஒரே கனவு. அவர்களுடைய அம்மா வந்து தான் உடுத்தியிருந்த சேலையை அவர்கள் மீது போர்த்திவிட்டு நான் சாகவில்லை.. என்று சொல்லிவிட்டுப் போவதாக கனவு வந்து அம்மாவை தேடுவதாகக் கதை முடிகிறது.

கிராமப்புற ஏழைகளின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை மட்டுமல்ல அநாதரவான குழந்தைகள், ஏழைச்சிறுவர்கள், திரும்பத்திரும்ப கு.அழகிரிசாமியின் கதைகளில் வருகிறார்கள். அவர்களுடைய மனநிலையை அவ்வளவு யதார்த்தமாகச் சித்தரிக்கிறார். கு.அழகிரிசாமியின் கதைகளில் குழந்தைகள் அழியாத சித்திரங்களாக அமைந்து விடுகிறார்கள். கதையின் முக்கியக்கதாபாத்திரங்களாக இல்லாவிட்டாலும் கூட அவர்களுடைய இருப்பை கு.அழகிரிசாமி அபூர்வமான வண்ணத்தில் தீட்டி விடுகிறார். குழந்தைகளின் மீது அவர் கொண்ட பேரன்பும் பெருநேசமும் அவரை அப்படி எழுத வைத்திருக்கிறது.

தரிசனம் என்ற கதையிலும் முத்து என்ற ஒரு ஆதரவற்ற கிழவரும், ஆண்டியப்பன் என்ற அநாதையான சிறுவனும் வருகிறார்கள். முதியவருக்கு உணர்வுகள் மரத்துப் போய் விடுகிறது. எதுவும் நினைவிலில்லை. சித்தசுவாதீனமில்லாதவர் என்று ஊரார் சொல்கிறார்கள். ஆனால் அவர் அன்றாடம் கூலிவேலைக்குப் போய் கிடைக்கும் கூலியைத் தூரத்து உறவினரான ஆறுமுகத்திடம் கொடுத்து அவனிடமும் அவன் மனைவியிடமும் ஏச்சும் பேச்சும் வாங்கிக் கொண்டு திண்ணையில் முடங்கிக் காலத்தைக் கழிக்கிறார். ஆண்டியப்பனுக்கோ தாயும் தந்தையும் இறந்து ஆதரவின்றி அந்த ஊர் பெரிய தனக்காரரிடம் வேலை பார்த்துக் கொண்டு தொழுவத்தில் படுத்துக் கிடக்கிறான். பத்து நாட்களாக விடாமல் பெய்யும் மழை சிறுவனையும் திண்ணைக்குத் தள்ளுகிறது. இருவரும் திண்ணையில் இரவுப்பொழுதைக் கழிக்கிறார்கள். அப்போதுதான் திண்ணையின் மூலையில் ஒரு குருவிக்கூடிருப்பதைப் பார்க்கிறார் கிழவர் முத்து. அது தன் குஞ்சுகளுக்கு இரை கிடைக்காமல் தட்டழிவதைப் பார்க்கிறார். வெளியே மழை பெய்து கொண்டேயிருக்கிறது.

மழையினால் கூலி வேலையில்லையென்பதால் ஆறுமுகத்தின் மனைவி வைது கொண்டே சோறு போடுகிறாள். அவள் போடும் சோற்றில் பாதியை ஒரு காகிதத்தில் எடுத்து வந்து தாய்க்குருவி கண்ணில் படும் இடத்தில் வைத்து விடுகிறார். தாய்க்குருவி சோற்றை எடுத்துக்கொண்டு போய் குஞ்சுகளுக்கு ஊட்டுகிற காட்சியைப் பார்த்து கிழவர் தெய்வ தரிசனத்தைக் கண்டமாதிரி கண்களில் கண்ணீர் வழிய கும்பிடுகிறார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் ஆண்டியப்பன் தொழவேண்டியது அவரையல்லவா என்று அவரைக் கும்பிடுகிறான்.

இந்தக்கதை முழுவதும் கிழவர் முத்துவைச் சுற்றியே வந்தாலும் ஆண்டியப்பன் என்ற கதாபாத்திரமும் தரிசிக்கிறது. இரண்டுபேரும் இரண்டு தரிசனங்களைப் பார்க்கிறார்கள். இரண்டு தரிசனங்களின் வழியாக வாசகர்களுக்கு வேறொரு தரிசனத்தைத் தருகிறார் கு.அழகிரிசாமி.

எளியவர்களின் வழியாகவே வாழ்க்கையின் உன்னதங்களை உணர்த்துகிறார் கு.அழகிரிசாமி. குழந்தைகளின் இயல்புணர்வை அவரளவுக்கு பதிவு செய்தவர்களும் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்குக் கதைகளில் குழந்தைகள் வந்து செல்வதையும் பார்க்கும்போது, எந்தளவுக்கு கு.அழகிரிசாமியின் மனதில் குழந்தைகளின் மீதான பிரியமும் பேரன்பும் இருக்கிறது என்பது புரியும்.

எங்கள் அன்புக்குரிய கலைஞன் கு.அழகிரிசாமியின் கதைகளில் குழந்தைகள் சுதந்திரமாக இருக்கிறார்கள். தங்களுக்கு நேர்ந்த புறக்கணிப்பைத் தாங்களே சரி செய்து கொள்கிறார்கள். வாழ்க்கையின் சிடுக்குகளை எளிதாக அவிழ்த்து விடுகிறார்கள். தங்களுடைய நேசத்தினாலும் பரிவினாலும் இந்தப் பிரபஞ்சத்தையே பற்றியணைக்கும் வல்லமை கொண்டவர்களாகிறார்கள்.

அவர்கள் யாவரும் கு.அழகிரிசாமியே! எங்கள் மூதாயே!

உதயசங்கர்

வாசிப்பனுவம்: நேசிப்பவர்களாலும் தீங்கு வரும் (அசோகமித்திரனின் “புண் உமிழ் குருதி“- சிறுகதை) – உஷாதீபன்

வாசிப்பனுவம்: நேசிப்பவர்களாலும் தீங்கு வரும் (அசோகமித்திரனின் “புண் உமிழ் குருதி“- சிறுகதை) – உஷாதீபன்

வாழ்க்கையில் உறவுகளால் நமக்குச் சங்கடங்கள் ஏற்படுவதுண்டு. கெடுதல்கள் நிகழ்வதுண்டு. அவுங்க நமக்குத் தீங்கு செய்வாங்களா? அப்புறம் உறவுங்கிறதுக்கு என்னதான் அர்த்தம்? என்று நம்பிக்கையோடு இருக்கும் நிலையில் எதிர்பாராவிதமாகச் சில நஷ்டங்கள் ஏற்பட்டு விடுவதுண்டு. போகட்டும்…என்று விடுபவர் சிலர். அதையே மனதில் பகையாய்க்…
தொடர் 3: எலி – அசோகமித்திரன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

தொடர் 3: எலி – அசோகமித்திரன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

ஜ.தியாகராஜன் எனும் அசோகமித்திரன் தமிழின் முக்கிய சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவராவார். அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளக்கூடியவற்றின் நுட்பமான அம்சங்களை தம் படைப்புகளில் எள்ளலுடன்  வெளிப்படுத்தியவர். வாழ்வின் மீதான அழுத்தமான நம்பிக்கைகளை இவரது கதைகள் வெளிப்படுத்துகிறது. திரைப்படத் துறையில் பயணித்தன் அடிப்படையில் தமிழில்…