நூல் அறிமுகம்: சி.சரவண கார்த்திகேயனின் “மியாவ்” சிறுகதைகள் – பா.அசோக்குமார்
நூலின் என்னுரையில் ‘மியாவ்’ தலைப்பிற்கான காரணமறிந்த கணமே இந்நூலின் கனம் புலப்படத் தொடங்கியது எனலாம்.
எழுத்தாளர் சரவண கார்த்திகேயன் அவர்களின் படைப்புகளில் முதலாவதாக அடியேன் வாசிக்கும் நூல் இதுவே.
கொரோனா காலகட்டத்தில் சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம் நடத்திய இணைய வழி இலக்கியச் சந்திப்பு வாயிலாகவே இவரது அறிமுகம் கிட்டியது.
இவரது சிறுகதை குறித்த நூல் விமர்சனக் கூட்டத்தில் இவரது இலக்கிய பங்களிப்பை சகோதரர் சங்கரேஸ்வரன் வாயிலாக அறிந்து முகநூலில் பின்தொடர்ந்து வருகிறேன்.
இரண்டாண்டுகளாக இவரது படைப்புகளை இணைய வழியாக படித்து ரசித்து வந்த நிலையில் நூல் வடிவில் வாசிக்கும் வாய்ப்பு தற்சமயமே கிட்டியது எனலாம். இதிலும் விதைகள் வாசகர் வட்டத்திற்கு பங்குண்டு.
சமீபத்தில் விதைகள் வாசகர் வட்டம் நடத்திய புத்தகத் திருவிழாவில் வாங்கிய புத்தகமே இது.
இந்நூலில் ஒன்பது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு சிறுகதை குறித்தும் அவை எழுத்தப்பட்ட சூழல், காலம் குறித்த அவரது என்னுரை மிக முக்கியமானதாக கருதுகிறேன்.
பொதுவாக என்னுரை, முன்னுரை, அணிந்துரை போன்றவற்றை முதலாவதாக படிக்கும் வழக்கமில்லை. ஆனால், இதுவரை நூலுக்கு அணிந்துரை யாரிடமும் வாங்கியதில்லை என்று எழுத்தாளர் முகநூல் பதிவில் பதிவிட்டதாக ஞாபகம் தோன்றவே என்னுரை படிக்க முனைந்தேன்.
ஒவ்வொரு சிறுகதையும் பெண்கள் சார்ந்த சிறுகதைகள் என்பது சிறப்பு. அனு ஸிதாரா, பிரியங்கா மோகனின் ரசிகர் வேறெப்படி இருப்பார் என்று நகைக்க வேண்டாம். பெண்ணியத்தின் வலியையும் உணர்வையும் நெத்திப் பொட்டில் அடிப்பது போல் வெளிபடுத்தியுள்ள பாங்கே இந்நூலின் தனிச்சிறப்பாக பாவிக்கிறேன்.
1. நியூட்டனின் மூன்றாம் விதி:
அடிப்படையில் பொறியியல் மாணவர் என்பதால் இயற்பியல் மோகத்துடன் படைக்கப்பட்ட வித்தியாசமான காதல் கதை. விண்வெளி பயணம், ரோபோ காதல் (காதல் சட்டப்படி குற்றம்) என வித்தியாசமான கதைகளத்தில் அமைந்த கதை. 2001 இல் எழுதப்பட்ட கதை என்பதையறிந்து பெருவியப்பு மேலிட்டதைத் தவிர்க்க இயலவில்லை. அறிவியலுக்கும் வாழ்வியலுக்குமான தொடர்பை பிணைத்த விதம் அருமை.
2. மியாவ்:
நூலின் தலைப்பிற்குரிய சிறுகதை. சகா என்ற நண்பனைப் பற்றி அவரது எழுத்தாள நண்பன் எழுதுவதாக அமைந்த கதை. பிரதாமப்படுத்திவிட்டார் என்றே கருதுகிறேன். இத்தொகுப்பிலுள்ள கதைகளில் சற்றே நீளக்கதை இதுவே ஆகும். என்ற போதிலும் துளியும் சோர்வூட்டாத துள்ளல் கதை. பெண் பித்தனாக சித்திரிக்கப்படும் கதை சலிப்பூட்டுவதாகவா இருக்கும்.
இச்சிறுகதையில் ஒரு ஆணின் வீர பிரதாபங்களை பகிர்வதன் வாயிலாக பெண்களின் மறுபக்கத்தை அம்பலப்படுத்திவிட்டார் என பெண்ணியவாதிகள் குதிக்கலாம். ஆனால், ஆணின் வக்கிர குணத்திற்கான மடைமாற்றமாகவே இதனை பாவிக்கலாம் என கருதுகிறேன்.
வாசகர்களுக்கு தோன்றும் சகா என்பது சரவண கார்த்திகேயன் தானோ என்ற ஐயத்தையும் கதையின் இடையில் சொருகி ஆச்சரியமூட்டிய விதம் ரசிக்கத்தக்கது. முகநூலில் பின்தொடர்பவர்கள் நம்பியே தீர்வர். ஒவ்வொரு ஆணின் கனவுலக சுய ரூபத்தை அறிந்து கொள்ளவும் சுய பச்சாதாபத்தை ஏற்படுத்தி கொள்ளவும் (!) இச்சிறுகதை வடிகாலாக அமையலாம்.
3. நீதிக்கதை:
மிகவும் மிரட்டிய கதையாக இதனையே கருதுகிறேன். சம காலத்தில் பேசுபொருளாக இருந்த சமூகத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட சிறுகதை.
இச்சிறுகதையின் பெயர்க்காரணத்தைப் பகிர்வது முறையாகாது என்றே கருதுகிறேன். விளையாட்டு மோகத்தில் திரியும் இளசுகளின் வாழ்வியலைப் படம்பிடித்து காட்டிய பாங்கு பாராட்டுதலுக்குரியது. தற்கொலைகளுக்கான காரண காரியங்களை நயம்பட விவரித்த பாங்கு சிலாகிக்கக் கூடியது. டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட்டாக அடுக்கிக் கொண்டே கதையை விறுவிறுப்பாக்கிய தருணங்கள் சிறப்பு.
தற்கொலைக்கும் கொலைக்குமான காரணங்களை எடுத்தியம்பிய நுட்பம் சவாலானதே. முடிச்சுகளை பிணைத்து சிறுகதையை முடித்தவிதம் போற்றுதலுக்குரியது. பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் சிறந்ததொரு பாடமாக இச்சிறுகதையை கருதலாம்.
4. நான்காம் தோட்டா:
காந்தியடிகளின் கொலை சார்ந்த சிறுகதை. பல்வேறு தேடல்களின் வாயிலாக விளைந்த சிறுகதை. யதார்த்த உலகின் நிகழ்வுகளுடன் கடந்த கால சம்பவங்களை இணைத்த விதம் சுவாரஸ்யமான அனுபவமே. காந்தியின் மரணத்தில் மர்ம முடிச்சு இருப்பதாகவே தோன்றுகிறது. எழுத்தாளரின் “ஆப்பிளுக்கு முன்” நாவலைப் படிக்கத் தூண்டிய சிறுகதையாகவே இதனைக் கருதுகிறேன். படிப்பது தானே சரியானதும்கூட.
5. பெட்டை:
பெண்களைப் போகப் பொருளாக மட்டுமே கருதும் ஆண்களுக்கான சம்மட்டி அடியே இச்சிறுகதை. தெரு நாய்கள் வாயிலாக பெண்களின் அவலத்தைப் பொருத்திக் காட்டிய நுட்பம் சிறப்பானது. நாய்களின் வாழ்விலும் பெண்களையே குறி வைப்பது மனித ஆண்களின் இயல்பென தோலுரித்துக் காட்டிய நுட்பம் மெய்யானதே. ஆண்கள் யாவரும் வெட்கித் தலை குனிய வைக்கும் சாத்தியங்களும் சம்பவங்களும் நிறைந்த சிறுகதையே இது.
6. மோகினியாட்டம்:
இணைய வழிக் காதல் தான் இச்சிறுகதையின் மையச்சரடாக தெரிந்தாலும் அதன் வழியே ஆண், பெண் குண இயல்புகளைச் சுட்டிக் காட்டிய விதம் கவனத்திற்குரியது.
போலி ஐடி (fake id) களின் விளைவுகள் இப்படித்தானே இருக்கும் என்று எளிதில் கடந்து செல்ல முடியாத வகையில் கதைக்கருவை மெருகூட்டிய நுட்பம் அழகானது.
கட்டிய வேஷத்திற்குத் தகுந்தாற்போல் ஆட்டம் ஆடித்தானே தீர வேண்டும். கஷ்டங்களும் பட்டுத்தானே தீர வேண்டும் என்று சுட்டிக் காட்டும் சிறுகதை. மோகினியாட்டம் நமது இணைய அந்தரங்கப் போலியை துகிலுரித்துக் காட்டும் சரவெடி ஆட்டமே ஆகும்.
7. காமத்தாழி:
பெருநகரங்களில் நடக்க சாத்தியமுள்ள கதைக்கருவே இந்த காமத்தாழி என கருதுகிறேன். அதற்கான காரண காரியங்களை அடுக்கிய விதம் ரசிக்கத்தக்கதே. சிறுகதையின் இடையிடையே வரும் சில்வியா ப்ளாத் கவிதை வரிகள் மதிநுட்பத்தின் வெளிப்பாடாக கருதுகிறேன். சிறுகதையின் இறுதியில் வரும் சம்பவத்துடன் கவிதை வரியை இணைத்து பெண்ணின் மனதைக் கீறிடச் செய்த தருணம் சிறப்பானதாக இருப்பின் ஆணின் தப்பைக் கண்டு கொள்ளாமல் விட்டதில் வருத்தமே…
8. அழியாக் கோலம்:
சமூக வலைத்தளங்களால் ஏற்படும் வாழ்வியல் சிக்கல்களை இடித்துரைக்கும் மற்றுமொரு சிறுகதையே இது. ‘புகழ்ச்சிக்கு மயங்காதவர் உண்டோ?’ அந்த மயக்கத்தில் தெளிவில்லாமல் செய்யும் செயல்களின் விளைவோ வருத்தம் ஏற்படுத்தக்கூடியதே என்று சுட்டிக் காட்டிய விதம் அருமை.
முடிவை எதிர்பாராத விதமாக முடித்த விதம் அருமை. இணைய கசிவால் நசிந்து போகாமல் மீண்டு வாழலாம் என்ற கோணத்தில் சிறுகதையை நிறைவு செய்த விதம் சிறப்பு.
9. அணங்கு:
இந்த சிறுகதைத் தொகுப்பில் அடியேனை மிகவும் கவர்ந்த சிறுகதை இதுவே ஆகும். நிகழ்கால வாழ்வில் நடைபெறும் மிகப் பெரிய ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டு சிறுகதை வடித்த எழுத்தாளருக்கு ஒரு சபாஷ்.
என்னுரையில் எழுத்தாளர் கூறியுள்ளது போலவே, இச்சிறுகதை நிச்சயமாக காலங்கடந்தும் நிற்குமென்ற யூகிக்கிறேன். சம கால அரசியலை அச்சமின்றி உக்கிரமாக பதிவு செய்ய விதம் வணக்கத்துக்குரியதாகும்.
மனத்தைக் கீறி ரணமாக்கிக் கொண்டே இருந்த சம்பவங்களைக் கோர்த்து எழுந்த சந்தேக வினாக்களுக்கெல்லாம் விடையைத் தேடிக் கண்டுபிடித்து அதற்குரிய லாவகத்துடன் கதையமைப்பை வடிவமைத்த விதம் ரசிக்கத்தக்கதே.
பிரச்சார தொனியில்லாமல் சொல்ல நினைத்த கருத்தை இடித்துரைத்த விதம் அருமை. கண்ணீர் மல்காமல் இச்சிறுகதையை நிறைவு செய்ய இயலாது. மாதவிடாய் குறித்த சம்பவங்களில் தந்தையின் கையாலாகத்தனத்தையும் கழிவிரக்கத்தையும் சுட்டிய விதம் சிறப்பானதே.
“நங்கேலி” என்ற தொன்மக்கதையை மீட்டுருவாக்கம் செய்த விதம் வணக்கத்திற்குரியது. “கண்ணகி” என்று அந்த மாணவிக்கு பெயரிட்டுவிட்டு மார்பை பற்றிய விவரணைகளே அதிகளவில் இடம்பெற்றுள்ளனவே என்றே ஆரம்பத்தில் சிந்திக்க நேர்ந்தது. சிறுகதையின் இறுதியில் அதற்கான நியாயத்தை நிறுவிய விதத்தில் எழுத்தாளர் மிளிர்கிறார் என்பதே கண்கூடு.
ஒவ்வொரு சிறுகதைக்குமான எழுத்தாளரின் மெனக்கெடல் அலாதியானது. ஆழ்ந்த தத்துவ சிந்தனைகளை போகிற போக்கில் எளிய நடையில் எடுத்தியம்பும் விதம் தன்னிகரற்றதாகவே கருதுகிறேன். எளிய எள்ளலுடன், துள்ளலுடன் கதைக்கருவை நகர்த்தும் நுட்பம் சவாலானதே. அதனாலேயே சிறுகதைகளை வாசிப்பதில் தொய்வு ஏற்படவில்லை என்றே கருதுகிறேன். எவ்வித சமரசமுமின்றி பாலியல் சங்கதிகளை ஆங்காங்கே விரவி வாசகர்களை பரவசப்படுத்தவும் எழுத்தாளர் தவறவில்லை. அவை இடைச்செருகலாக இல்லாமல் கச்சையாக இருப்பதே எழுத்தாளரின் வெற்றியாக கருதுகிறேன்.
ஆக மொத்தத்தில் இந்நூல் மிகச் சிறந்த ஒரு சிறுகதைத் தொகுப்பாகவே கருதுகிறேன்.
‘மியாவ்’ – கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டே நம்மை பிராண்டியும் வைக்கும்.
மனிதர்களுக்கான எச்சரிக்கை ஜமிக்கை ஒலியே இந்த “மியாவ்”.
வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள்.
நன்றி.