ஜேன் ஹிர்ஸ்ஃபீல்ட் கவிதையிலிருந்து ஜென்னுக்கு – சா. தேவதாஸ்
பறவைகள் மறைந்து போயுள்ளன வானில்
இறுதி மேகம் கரைகின்றது இப்போது.
சேர்ந்து அமர்ந்திருக்கிறோம் மலையும் நானும்,
மலை மட்டும் தங்கியிருக்கும் மட்டும்
– லி போ, சீனா,
பட்டப்படிப்பு முடிந்ததும் சில கவிதைகள் எழுதிக் கொண்டிருந்த ஜேன் ஹிர்ஸ்ஃபீல்ட் (1953) ஓராண்டு காலம் ஒரு பண்ணையில் இருந்து வந்தார். அடுத்து ஜென் ஈடுபாடு வரவே, மூன்றாண்டு காலம், ஜென் மடாலயத்தில் சேர்ந்து துறவுக் கன்னியாகப் பயிற்சி பெற்றார். அய்ந்தாண்டு காலம் முழுமையான ஜென் ஈடுபாட்டிலேயே இருந்து வந்தார்.
20 வயதிலேயே ஒரு பெண்ணுக்கு இவ்வளவு தீவிர ஈடுபாடு என்ன கற்றுத் தந்தது – அதுவும் அமெரிக்கா போன்றதொரு நாட்டில்?
‘எட்டாண்டுகளுக்குப் பிறகு இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பவேண்டும் – ஒவ்வொருவருடைய வாழ்க்கை போலத் தோன்றும் ஒன்றிடம் திரும்ப வேண்டுமென்பதே நிதர்சனம். கவனக்குவிப்பு வாய்த்துவிடுவதால், எப்படிக் கவனம் செலுத்த வேண்டும் அனுபவங்களில் எப்படி நுழைய வேண்டும் என்பதைக் கற்றுள்ளோம். எஞ்சிய இருப்புடனான நமது உறவுநிலை குறித்து கூடுதலாக அறிந்துள்ளோம். நமது அகம் நாம் எண்ணியது போன்றில்லை, நாம் முழுமையாக அனைத்து வாழ்வுடனும் தொடர்புகொண்டிருக்கிறோம் என்பதை.’
அடிப்படையில் ஜென் என்பது மூன்றாம் அம்சங்களைக் குறிக்கும்; ஒவ்வொன்றும் மாறுதலடைகிறது, ஒவ்வொன்றும் தொடர்பு கொண்டுள்ளது என்பதில் கவனம் இருக்க வேண்டும். 2) வாழ்வில் முழுமையாக நுழைவதை நோக்கிய, நம் வாயில் நம் நாவின் ருசியை அறிந்து கொள்வதை நோக்கிய பாதை அது. 3) கவிதை மற்றும் வடிவமைக்கப் பெற்ற சொற்களின் பாதை அதே போன்றதுதான் என்றெண்ணுகிறேன். மானுட அனுபவம் சார்ந்து நம்மால் அறிய முடிவதை ஒவ்வொன்றும் அதிகரிக்கச் செய்கின்றது என ஹிர்ஸ்ஃபீல்ட் குறிப்பிடுவார்.
இந்த விழிப்புணர்வு கிடைக்கப் பெற்ற அவரது பங்களிப்பு என்ன? கவிஞராக மொழிபெயர்ப்பாளராக தொகுப்பாளராக நிறையவே இயங்கியிருக்கிறார். சீனத்தின் ஜப்பானின் ஜென்/தாவோயிஸ கவிஞர்களை விரிவாக அறிமுகம் செய்துள்ளார். குறிப்பாக, 43 நாடுகளைச் சேர்ந்த பெண் கவிகளின் ஆன்மிக/ புனிதக் கவிதைகளை தொகுத்து ஒரு சொல்லாடலை முன்வைக்கின்றார். ஆண், தெய்விகக் காதலைப்பாடிட, பெண்ணாக மாற வேண்டும், பெண்ணாக உணர வேண்டும். பெண்ணுக்கு அந்தச் சிக்கல் இல்லை. இயல்பிலேயே பெண்ணாக இருந்து, பக்தியைக் காதலாகப் பாடிவிட முடியும். தனது உடல் சார்ந்த பீடிப்புகளிலிருந்து மட்டும் வெளியேற வேண்டும். சம்பிரதாயங்களை, மரபுகளை தூக்கி எறிய வேண்டும். இது சாத்தியமாகிவிட்டால், தெய்வத்திடம் தெய்வக் காதலனிடம் மன்றாடக்கூட வேண்டியதில்லை. ஒரு தோழனிடம் சக உயிரியிடம் பேசுவது போல உரையாடுவதுபோல இருக்க முடியும்.
தமிழின் ஆண்டாள், கன்னடத்தின் அக்கா மகாதேவி, மராத்தியின் ஜானா பாய், காஷ்மீரத்தின் லால் தெத் உட்பட பக்திமரபு, சூஃபி சம்பிரதாயம், தாவோயிஸம், ஜென், கிறித்தவ- யூத அனுபூதிவாதம் சார்ந்த 43 நாடுகளின் பல்வேறுபட்ட புனிதத் தளத்திலான கவிதைகளை இவ்வளவு துல்லியத்துடனும் தெளிவுடனும் தொகுத்திருப்பதே மிகப் பெரும் சவாலான செயல்பாடே. Women in praise of the sacred என்னும் தலைப்பிலான அந்நூல் இலக்கிய வாசகனுக்கும் சரி, பெண்ணியம் பேசும் தோழிக்கும் சரி பெரிய கொடையாகும்.
ஆணின் அதிகாரத்தை ஒதுக்கித் தள்ளி, குடும்ப நிறுவனத்திலிருந்து வெளியேறி, சமூக நியதிகளைப் பொருட்படுத்தாமல், ஒரு பெண் விடுதலையடைந்து, சுதந்திர உயிரியாக உணர்வதுதான் இப்புனித தளத்திலான பக்திக்காதலின் பாசுரங்கள். இதற்கான பின்புலத்தை வழங்குவதாக பக்திமரபு/சூஃபி மரபு/ஜென் வாழ்க்கை முறை உள்ளது. உலகியல் வாழ்வைத் துறந்து துறவறம் பூண்டுதான் இப்படி இயங்க முடியும் என்றில்லை. ஆண்டாள் வாழ்வும் கவிதையுமே இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அக்மதோவாவும் மரினா ஸ்வெட்லேயாவும் இத்தொகுப்பில் இடம் பெற்றிருப்பது இதற்காகத்தான் இருக்க வேண்டும். எழுத்துரிமை ஒடுக்கப்பட்டிருந்த அல்லது பெண்ணின் சுயேச்சையான இயக்கம் சகித்துக் கொள்ளப்படாத சமூக அரசியல் சூழலை எதிர்த்துதான் இவ்விருவரும் குரல் கொடுத்தனர்.
இன்னொன்று, ஆன்மிகம் என்பது மதம் சாராமல், சித்தாந்தம் பேசாமல், சாரமான வாழ்வில் தீவிர ஈடுபாடு கொள்வதுதான் என்று ஹிர்ஸ்ஃபீல்ட் ஒரு பாதையை வகுத்துக் கொண்டு இயங்கி வருவதால், படைப்பாக்கத்துடன் மிளிர்கிறது அவரது வாழ்வும் எழுத்தும்.
பொதுவாக பெளத்தம் என்றால் சூனியவாதம் என்று சொல்லப்பட்டுவர, சூனியவாதத்திற்கு நேர் எதிரானதாகக் காண்கிறார். ‘அது உலகில் இருத்தலுக்கான பயிற்சி, பிரிவற்று இருத்தலுக்கான பயிற்சி’ என்கிறார்.
அவரைப் பொறுத்தவரை கவிதை ஜென்னிடம் உந்தித் தள்ளியது, ஜென், கவிதைக்குத் திரும்பிட வைத்தது.
‘ஜென் என்பது பைத்தியமாகாமல் இருக்கின்ற கலை’ என்பார் அனைஸ் கின்.
ஜென் மரபில் ஞானம், விழிப்புணர்வைத் தேடி 50 ஆண்டுகளாக பக்கிரியாக வனங்களில் மலைகளில் குளிரிலும் வெயிலிலும் திரிந்தவர் பாஷோ. அரண்மனை வாழ்விலிருந்து வெளியேறியவர். சீடர்கள் அவருக்கென்று குடில் கட்டித் தந்தும் அங்கு திரும்பாதவர். சதா பயணத்தில் கழித்தவர். சதா ஹைக்கு கவிதைகள் எழுதியவர். ஹைக்கு என்றால் அவருக்கு குழந்தையின் வியப்புணர்வில் பறப்பது, கள்ளங்கபடமற்ற உலகை படைப்பது. ஒரு கட்டத்தில் ஜென்னின் தேடலை விடவும் ஹைக்கு கவிதை முக்கியத்துவமாகி விடுகிறது. அது புத்தரின் போதனையை மீறுவதாகிறது. அது குற்றவுணர்வாக உறுத்திவந்தபோதும், கவிதையைக் கைவிடவில்லை அவர். அது பற்றி எழுதுகிறார்:
”சாவை நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நான் ஹைக்கு எழுதிக் கொண்டிருக்கக் கூடாது. நான் 50 ஆண்டுகளுக்கு மேலாக எண்ணி வந்திருப்பது ஹைக்குதான். தூங்கும்போதும் கனவுகாணும் போதும் காலை மேகங்களின்/ மாலை மூடு பனியின் கீழே சாலையில் விரையும்போதும் ஹைக்குதான். நான் விழித்தெழுகையில் நீரோடையின் சுவையான சப்தங்களால் அல்லது காட்டுப் பறவைகளின் அழைப்புகளால் ஈர்க்கப்படுகிறேன். இந்த நெருக்கம் தவறானது என்கிறார் புத்தர். ஆனால், என் வாழ்வை நிரப்பியுள்ளது ஹைக்குதான் என்பதை என்னால் மறக்க முடியாது.”
இப்படிப் பதிவு செய்யும் பாஷோவைக் கொண்டாடுகிறார் ஹிர்ஸ்ஃபீல்ட். ஆன்மிகத் தேடலை கைவிட்டும் கவிதையைக் கைவிடாது இருந்தவர் பாஷோ. என்பது அவரை அதிசயிக்கச் செய்கிறது. ஜென்னின் நேர்மறை அனுபவத்தில் திளைத்துள்ள ஹிர்ஸ்ஃபீல்டுக்கு அது முரணாகத் தெரியவில்லை. ஒன்றைக் கைவிடுவது இன்னொன்றின் செழுமைக்காக வளத்திற்காக எனும்போது அதில் பிரச்சனை இல்லையே. எழுத்தாளனின் இயல்பும் அது தான் எழுத்தின் பொருட்டு அவன் எதனையும் இழப்பதற்கு ஆயத்தமாகி விடுவான்…
ஹிர்ஸ்ஃபீல்ட் ‘assay’ என்றொரு வடிவத்தை அறிமுகப்படுத்துகிறார். assay என்பதிலிருந்து மாறுபட்டது. மூலக்கூற்று வேதியியலிருந்து வருகிறது. இச்சொல். ஒன்றினை நுணுகிப் பகுத்தாராய்ந்து விளக்குவது- கவிதையாயும் உரைநடையாயும் சூக்குமான பருண்மையான பல்வேறானவற்றை நுண்ணிய பகுப்பாய்வு செய்வது. சிறிது காலம் ஒரு அறிவியலாளருடன் வாழ்ந்தவர் ஹிர்ஸ்ஃபீல்ட் என்று சொல்லிவிட்டால் போதும், இனியும் இதனை விளக்க வேண்டியதில்லைா.
ஓரிடத்தில் நெரூடாவின் கவிதை ஒன்றும் பெளத்த வாசகம் ஒன்றும் ஒரு புள்ளியை நோக்கி நகர்வதைச் சுட்டிக் காட்டுகிறார்.
”கவிதை வந்து சேர்ந்தது
என்னைத் தேடி. எனக்குத் தெரியாது. எங்கேயென்று
குளிர்காலத்திலிருந்தா ஆற்றிலிருந்தா…
சட்டென்று மற்றவற்றிடமிருந்து
ஆவேச நெருப்பினிடையே
அல்லது தனித்துத் திரும்புகையில்,
அங்கிருந்தேன் முகமேதுமின்றி
அது என்னை நெகிழவைத்தது.”
கவிதை / நெரூடா
‘உன் பெற்றோர் பிறந்ததற்கு முன்னிருந்த உன் முகத்தைக் காட்டு’ என்னும் பெளத்தம் சார்ந்த வாசகம் அறியப்படாததை சுட்டிக் காட்ட முற்படுகிறது. நெரூடா பேசுவது கவிதையின் தோற்ற ஆதாரம் குறித்து இரண்டும் ஒரே அலை வரிசையில் உள்ளன என்கிறார் ஹிர்ஸ்ஃபீல்ட்.
”அஸ்தமனங்கள், மேகங்கள், கனிந்த பீச் பழங்கள் ஆகியவற்றால் அதிர்ந்துபோனவராக ஓர் ஆயுளை ஒருவர் கழிக்க முடியும். அது குறித்து நாம் எதுவும் செய்யத் தேவையில்லை. ஆனால், அந்நபர் எழுத்தாளராக இருக்கும் நேர்வில், ஒரு புள்ளியில் அவை பாருங்கள்! வாழ்க்கை நம்மிடம் கோருகின்ற ஒவ்வொன்றுக்கும் தகுதியுடையதாக இருக்கின்றதல்லவா?” என்று சொல்ல விரும்பும்.
நோபல் பரிசு பெற்ற போலந்துக் கவிஞர் செஸ்லாவ் மிலோஸ், தொடர்ந்து ஹில்ஸ்ஃபீல்டின் இயக்கத்தை அவதானித்துவிட்டு, ‘அனைத்து உயிரினங்களது துயரத்திற்கான ஆழ்ந்த பரிவுணர்வு’ என்று குறிப்பிட்டார். ஹிர்ஸ்பீல்டை பொறுத்தவரை கவிதை என்பது கருத்தினைப் பகிர்வதல்ல. உணர்வு நெகிழ்ச்சி மட்டுமானதில்லை. ”அது ஒரு விசாரணைக்கான சாதனம், ஒரு வித காட்சி முறை, அறிதல் பாதை மற்றும் அகம்- உலகம் சார்ந்த உணர்வு… எளிமை இன்றி தெளிவினைக் கண்டறியும் கவிதைகளில் ஆர்வம் மிகுந்துள்ளேன். சிக்கலை வரவழைக்காமல் இருண்மையும் இல்லாமல், சிந்திப்பதும் பேசுவதுமான முறையிலுள்ள கவிதைகளில், ஒரே சமயத்தில் இருதயம், மனம், குரல், உடல் எனப் பலவிதங்களில் உலகினை அறிகின்ற கவிதைகளில்.”
‘அவரது கவிதையிலுள்ள புலனுணர்வு, பெளத்தத்தின் மாபெரும் தற்கண உணர்வினை (mindfulness) துலக்கிக் காட்டும் என்னும்போது, கவிதை அவருக்கு ஆன்மிகமாகிவிடுவதைப் புரிந்து கொள்ளலாம். சூழல் இயல் அக்கறையுடன் அவர் உலகை அணுகுவதும், ஆன்மிகம் சார்ந்தது என்பதால் அது சரக்குமமான தத்துவ விசாரங்களில் ஈடுபடாமல், பரிவுணர்வு (empathy) மிக்க உயிரின் விகசிப்பாய் உருக் கொண்டு விடுகிறது.
”எறும்புகளின் விதியை விடவும் என்னுடையது மிக முக்கியமானது என்றெண்ணவில்லை, ஏனெனில் எனது விதி எறும்புகளின் விதியிலிருந்து தனித்திருக்கவில்லை என்று நான் புரிந்துள்ளேன்.”
நல்ல கவிதை எது? என்றால் அவர் தரும் விளக்கம், கவிஞருடைய பார்வையில் மட்டும் இல்லாது, ஜென்குருவின் விளக்கத்தையும் சேர்த்துக் கொள்ளும்.
”நல்ல கவிதை இவ்வுலகிலுள்ள ஒவ்வொன்றையும் உங்கள் வாழ்க்கைக்குள்ளே, உங்கள் சருமத்தினுள்ளே கொண்டுவந்து சேர்க்கும். அதனை அனுமதித்தால், பல விசயங்கள் அதனைத் தொடர்ந்து வரும். ஆக, ஒரு விதத்தில் கவிதைப் பயிற்சி, தவிர்க்க முடியாதபடி அநேகமாக ஆன்மிக விழிப்புணர்வுப் பயிற்சியாகும்.”
இப்போது ஆன்மிகம் என்பது எதிர்மறையானதாக சூக்கும சிந்தனையோட்டமாக மத வழிபாடாக இல்லாமல், படைப்புணர்வு மிக்கதும் பரிவுணர்வு நிறைந்ததும் நேர்மறையானதுமாகி ஊக்குவிக்கின்றது, உத்வேகமளிக்கிறது. அது கவிதையாக உருக்கொண்டு விட்டால் இன்னும் ஈர்ப்புடையதாகிவிடுகிறது.
இப்படி ஒரு ஆன்மிகவாதியால் ஒரு கவிஞரால் இயங்க முடிந்தால் ஒரு தலைமுறையே வளமானதாகிவிடும். எழுத்தும் செயல்பாடும் சூழலை ஆரோக்கியமானதாக்கிவிடும். சூழ்ந்திருக்கும் இழிவுகளையும் கசடுகளையும் ஒட்டுமொத்தமாக அகற்றிட முடியாது போயினும் ஓரளவேனும் குறைத்துவிடும். அதுவே ஆறுதலளிப்பதானது அல்லவா…
‘மழை விழுந்தது
கண்ணாடி நொறுங்கியதென
ஒரே வேளையில் எங்கணும் திடீரென ஒன்று’
அதிர்ந்தும் அதிசயமாகியும் மண்ணைக் குளிர்வித்து வாசம் வீசுவது, மழையாயிருப்பினும் கவிதையாயிருப்பினும் ஆன்மிகமாயிருப்பினும் தலைவணங்கி வரவேற்கத் தக்கதே, போற்றத் தக்கதே.
ஆதாரங்கள்
1. Women in Praise of the sacred / Ed by Jane Hirshfield / Harper Perennial, 1994.
2. The Heart of Haiku / Jane Hirshfield
3. Susan Moon/Inquiring Mind com – spring 2013
4. Interview with Jane Hirshfield/ Jai Hamid baskir/ Colombiajournal.org
5. On calligraphic perception/ A conversation with Jane Hirshfield / Chard deniord /WLT.org
6. Fooling with Words/Jane Hirshfield
7. ஜென்னும் கவிதைக் கலையும் அபிலாஷ் புதிய காற்று – செப்-2008.
8. Spiritual poetry: Nine Gates /Jane Hirshfield / poetry foundation. org
9. Rebal Angel / Hoshang Merchant / Ed by Ak-shayak. Rath / Dhauli Books, 2021.
¬¬¬