கல்வி சிந்தனையாளர்- 8 : ஆஸ்ட்ரிட் லின்ட்கிரன் – இரா. கோமதி
ஆஸ்ட்ரிட் லின்ட்கிரன்
கல்வியாளர்கள் வரிசையில் சிறார் எழுத்தாளரான ஆஸ்ட்ரிட் லின்ட்கிரன்
சேர்க்காமல் செல்ல முடியவில்லை. ஸ்காண்டிநேவிய நாடுகள் என்று அழைக்கப்படுகின்ற நாடுகளில் ஒன்றான ஸ்வீடன் நாட்டைச் சார்ந்த ஆஸ்ட்ரிட் லின்ட்கிரன் இருபதாம் நூற்றாண்டில் உலகம் முழுதும் இருந்த குழந்தைகளை தான் படைத்த கதாபாத்திரங்களால் கட்டிப் போட்டவர். மாற்றம் என்பதை கல்வியின் மூலமாக விதைக்க முடியும் என்பதை நம்பினர் பிற கல்வியாளர்கள். ஆனால் இவர் மாற்றம் என்பதை கதைகள் மூலமாக குழந்தைகளிடையே விதைக்க முடியும் என்பதை தான் படைத்த கதாபாத்திரங்கள் மூலமாக நிரூபித்துக் காட்டியுள்ளார்.
ஸ்வீடனில் ஒரு சிறு நகரமான விமெர்பில் உள்ள நாஸ் என்ற ஒரு அழகிய பண்ணையில் 1907ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சாமுவேல் அகஸ்ட் எரிக்சன், ஹனா நீ ஜோன்சன் ஆகியோருக்கு இரண்டாவது குழந்தையாக பிறந்தார்.
“ஒரு சிறு சிவப்பு நிற வீடு, ஆப்பிள் மரங்கள் சூழ்ந்து அழகிய பண்ணை; விவசாயத்தில் தொழில்நுட்பங்கள் புகுந்திடாத காலகட்டத்தில் குதிரைகளே விவசாயத்தின் தூண்களாக திகழ்ந்த சமயம் அது. பெற்றோர், குழந்தைகள், வேலையாட்கள் என அனைவரும் ஒன்றாக சேர்ந்து வேலை செய்வோம்; நானும் என் அண்ணன், இரு தங்கைகள், மேலும் சுற்றியுள்ள வீட்டுப் பிள்ளைகள் என நாங்கள் அனைவரும் எங்கள் பண்ணையை ஒட்டிய பகுதிகளில் சுற்றித் திரிவோம். சில சமயங்களில் எங்களது இந்த பயணம் ஆபத்தானதாக கூட இருந்திருக்கிறது. ஆனால் நாங்கள் அந்த ஆபத்துக்களை பொருட்படுத்தியது கிடையாது. பாதுகாப்பும், சுதந்திரமும் எங்கள் குழந்தை பருவத்தை மகிழ்வாக்கியது”, என்று தனது குழந்தை பருவத்தை விவரிக்கிறார்.
இந்த சுதந்திரமும் மகிழ்வு தான் இவரது ஒவ்வொரு படைப்பிலும் பிரதிபலிக்கின்றன. Noisy Village புத்தகத்தில் தான் வாழ்ந்த நாஸ் பண்ணை வாழ்வில் தன் உடன் பிறந்தோருடன், மற்ற குழந்தைகளோடு வாழ்ந்த சூழலை இவர் பிரதிபலிக்கிறார். மரங்களில் ஏறுதல், கிளைகளில் தாவுதல், கரடு முரடான பாதைகளில் ஓடுதல், நீரோடைகளில் ஆட்டம் போடுதல் என சாகசங்கள் நிறைந்ததாக இருந்தது இவரது குழந்தை பருவம். தொலைக்காட்சிகளும், ரேடியோக்கலும் இல்லாத அக்காலகட்டத்தில் வாய்மொழியாக கூறப்படும் கதைகளை இவர்கள் வாழ்வில் முக்கிய பொழுதுபோக்காக இருந்தன. குழந்தை பருவத்தில் தான் பெற்ற அனுபவங்களே தான் புனைவுகள் எழுத உந்துதலாக இருந்ததாக லின்ட்கிரன் கூறுகிறார்.
விளையாடுவது தவிர ஆஸ்ட்ரிட்க்கு வாசிக்கவும் எழுதவும் மிகவும் பிடிக்கும். நான்கு வயது இருக்கும்போது அவளது வீட்டின் மாடுகளை பராமரிக்கும் கிரிஸ்டின்- ஸ்வெனின் வீட்டில் விளையாடச் செல்வார். அப்போது அவர்களது குழந்தை எடிட் தான் வைத்திருந்த கதை புத்தகங்களில் இருந்து பெரிய ‘பாம்- பாம்’ கதையையும் ‘விரிபுந்தா’ என்ற கற்பனை கதைகளையும் வாசித்து காட்டினார். எடிட் அக்கதைகளை வாசிக்க, வாசிக்க எடிட்டின் வீட்டு சமையலறை ஆஸ்ட்ரிடின் கற்பனையில் ஒரு மாய உலகமாக மாறியது. ஆஸ்ட்ரிடின் எண்ணங்களுக்கு சிறகு முளைத்து கற்பனை உலகில் பயணிக்க துவங்கியது. அன்று துவங்கிய அவளது பயணம் என்றும் நிற்கவேயில்லை.
1914 ஆம் ஆண்டு முதல் உலகப்போர் துவங்கிய போது இவரது பள்ளிப் பருவம் துவங்கியது. தொடக்கக்கல்வி முடித்து மேல்நிலைப்பள்ளி பயிலும் போது ஆஸ்ட்ரிட் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். ‘எங்கள் பண்ணையில்’ என்று 13 வயதில் அவர் எழுதிய கட்டுரை விமெர்பி பத்திரிக்கையில் வெளிவந்தது. ஆனால் அதை வைத்து ஆசிரியர் எப்போதும் தன்னை ஓர் எழுத்தாளராக நினைத்துக் கொண்டது இல்லை.
1940 ஆம் ஆண்டு திருமணம் முடிந்து இரு குழந்தைகளுக்கு தாயாக இருந்தபோது அவரது மகள் கேரினுக்கு நிமோனியா காய்ச்சல் வந்தது. படுத்த படுக்கையாக இருந்த அவள், “அம்மா, எனக்கு பிப்பி லாங்ஸ்டாக்கிங் கதையை சொல்லுங்கள்” என்று கேட்டாள். அவ்வாறு தன் மகளுக்கு இவர் கூறிய கதைகளையே பிற்காலத்தில் பிப்பி லாங்ஸ்டாக்கிங் என்ற புத்தகமாக எழுதி பதிப்பித்தார்.
இப்புத்தகத்தை தயார் செய்து ஒரு பதிப்பகத்திற்கு அனுப்பி வைக்கிறார். தனது மகள் விரும்பி ரசித்து கொண்டாடிய பிப்பி கதைகளை வளர்ந்த பெரியவர்களின் உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை, நிராகரித்தது. ஆம் பதிப்பாளர்கள் ஆல்பர்ட் போனியர் கம்பெனியால் இவரது புத்தகம் திருப்பி அனுப்பப்பட்டது.
முதல் முயற்சி தோல்வியை தழுவியவுடன் துவண்டு போய் ஆஸ்ட்ரிட் வேறு வேலையை பார்க்க சென்றிருந்தால் என்னவாயிருக்கும் ? வெற்றி பெறுபவர்கள் எப்போதுமே முயற்சியை கைவிட மாட்டார்கள்; இதை இவ்வாறு மாற்றி சொல்லலாம்: தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவர்.
1945 ஆம் ஆண்டு இதன் முதல் பதிப்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. முதல் மூன்று பாகங்கள் 1945 முதல் 1948 வரை வெளிவந்தது. அடுத்த ஆறு தொடர்கள் 1969 முதல் 1975 வரை வெளிவந்துள்ளது. பிப்பி வரிசையில் இறுதி இரண்டு கதைகள் 1979 மற்றும் 2000 ஆண்டு வெளிவந்தனர். இப் புத்தகங்கள் 64 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பிப்பி என்ற இக்கதாபாத்திரம் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சாதாரண வாழ்வில் ஒரு குழந்தைக்கு கிடைக்காத அனைத்தும் பெற்ற ஒரு சிறுமி தான் பிப்பி.
அது என்ன குழந்தைகள் பெற்று விடாதவை?
* பிப்பி விசித்திர தோற்றம் கொண்டவள். இரண்டு சிவப்பு நிற ஜடைகள் கொண்டிருப்பாள்.
* அவளிடம் எடுக்க எடுக்க குறையாத ஒரு தங்க காசு கொண்ட பெட்டி இருக்கும்.
* இவள் மிக பலசாலி .தனது ஒரு கைகளால் ஒரு குதிரையை தூக்கும் சக்தி கொண்டவள்.
* தன்னை அடக்க நினைக்கும் பெரியவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பவள்.
* சராசரி வாழ்வு குழந்தைகளுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகள் எதுவும் இவளை ஒன்றும் செய்ய முடியாது.
* ஒவ்வொரு குழந்தையும் வேண்டும் என்று ஏங்கும் சுதந்திரமும் பலமும் பெற்றவள் தான் இந்த பிப்பி.
சமுதாயத்தில் குழந்தைகள் மிகவும் பலவீனமானவர்களாகவும், பிறருக்கு கட்டுப்பட்டவர்களாகவும், சுதந்திரம் இல்லாமலும், குடும்பத்தில் பெரியவர்கள், பள்ளியில் ஆசிரியர்கள் என பல அடக்குமுறைகளுக்கு கீழ்ப்பட்டவர்களாகவும், பொருளாதார சுதந்திரம் அற்றவர்களாகவும் இருப்பது தான் இயல்பாக உள்ளது. இந்த அனைத்து இயல்புகளையும் உடைத்து நொறுக்கும் கதாபாத்திரமாகவே பிப்பி இருந்தாள். அதனால்தான் உலகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் பிப்பியை பெரும் மகிழ்வோடு ரசித்தனர். பிப்பியின் உருவத்தில் தங்கள் பிம்பத்தை பொருத்திப் பார்த்து அவளின் சுதந்திரத்தை ருசித்தனர்.
பிப்பி லாக் டாக்கிங் பெரும் வெற்றி பெற்ற பின் ஆசிரியர் தொடர்ந்து பல புத்தகங்களை எழுதினார். 1950-இல் இருந்து அறுபதுகள் வரை இவர் மிக பரபரப்பாக எழுதினார். ஆண்டிற்கு ஒன்று என்று தொடர்ந்து புத்தகங்களை பதிப்பித்து கொண்டே இருந்தார். உலகம் முழுக்க பயணித்தார் தனது புத்தகங்கள் குறித்த நிறைய நேர்கானல்கள் உரையாடல்களில் பங்கேற்றார். ஆயிரக்கணக்கான கடிதங்களை தன் வாசகர்களுக்கு எழுதினார்.
சிறார் எழுத்தாளர் என்பதை தாண்டி ஆஸ்ட்ரிட் லின்ட்கிரன் ஸ்வீடன் நாட்டில் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தார். குழந்தைகளின் நலனில் அக்கறையுள்ளவர். இவர் தனது ஒவ்வொரு புத்தகங்களின் வாயிலாகவும் குழந்தைகள் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சிறார் எழுத்தாளர் என்ற வட்டத்திற்குள்ளேயே தன்னை வைத்துக் கொள்ளாமல் நாட்டின் கருத்து உருவாக்குபவராகவும் (Opinion Maker) உருவெடுத்தார். தன் வாழ்நாள் முழுதும் அநீதிக்கும் அடக்குமுறைக்கும் எதிராக எதிர்ப்புக் குரல் எழுப்பினார். அரசியலில் 1930-களில் இருந்து தன்னை ஒரு சமூக ஜனநாயக கட்சியினராகவே வெளிப்படுத்திக் கொண்டார்.
1976 ஆம் ஆண்டு ‘மேர்டி டூ த ரெஸ்கியு’ (Mardie to the rescue) என்ற நூலை வெளியிட்டார். மேர்டி என்பவள் அச்சமுகத்தில் நல்ல வளமான செல்வாக்கோடு வாழும் ஒரு சிறுமி. அவளது பார்வையில் அச்சமூகம் எப்படி ஏற்றத்தாழ்வோடும், பாரபட்சங்கள் நிறைந்ததாகவும், சமத்துவமும் நீதியும் இல்லாமல் சமூகம் சீர்கெட்டு இருப்பதை பேசி இருப்பார்.
தான் படைத்த பெரும்பாலான மையக் கதாபாத்திரங்கள் சிறுமிகளாகவே இருந்தன. பிப்பி லாங்ஸ்டாக்கிங் குழந்தைகளின் சுதந்திரம், உரிமைகள் பற்றி பேசுபவளாக இருந்தாள். மேர்டி சமுதாயத்தில் காணப்படும் அநீதிகளை, ஏற்றத்தாழ்வுகளை கேள்வி கேட்கும் ஒரு சிறுமையாக இருந்தாள். இவ்வாறு தனது கதைகளின் வழியாக தான் கூற வரும் கருத்தினை வெற்றிகரமாக குழந்தைகள் மனதில் செலுத்துவதில் இவருக்கு நிகர் இவரே. அதற்கு ஆதாரம் இவரது புத்தகங்கள் ஒன்றல்ல இரண்டல்ல 65 நாடுகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பெருமளவில் விற்பனையாகியுள்ளதே. ஸ்வீடன் நாட்டில் இவர் பெயரில் ஆஸ்ட்ரிட் லின்ட்கிரன் பூங்கா அமைக்கப்பட்டு இவருடைய புத்தகத்தின் கதாபாத்திரங்கள், கதைகள் கண் முன்னே அங்கு நடமாடிக் கொண்டு இருக்கின்றன. ஸ்வீடனுக்கு போகும் வாய்ப்பிருப்பின் கண்டிப்பாக ஆஸ்ட்ரிட் லின்ட்கிரன் பூங்காவை பார்வையிட்டு வாருங்கள்.
தன் வாழ்நாள் முழுதும் குழந்தைகள் உரிமை போராளியாக திகழ்ந்த ஆஸ்ட்ரிட் ஒவ்வொரு முறையும் குழந்தைகள் அன்போடும், பாதுகாப்பாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதை முன்மொழிந்தார்.
1978 ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டின் புக்ஸ் செல்லர் அமைதிக்கான பரிசை (German Booksellers’ Peace Prize) பெற்றபோது தனது ஏற்புறையில் ‘வன்முறையை வேரறுப்போம்’ என்று முழங்கினார். அப்போதய காலகட்டத்திலும் குழந்தைகள் மீது வன்முறையை பிரயோகிப்பது, உடல் ரீதியான தண்டனைகளை மற்றும் அடக்குமுறைகள் தொடர்வதை சுட்டிக்காட்டினார். ஏன், பல நாடுகளில் இப்போதும் இவை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறன என்பது வேதனை அளிக்கிறது. இவரது இந்த பேச்சு ஜெர்மனியில் கடும் எதிர்வினையை உண்டாக்கியது. ஆனால் இதற்கு அடுத்த ஆண்டு ஸ்வீடனில் குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனைகள் (Corporal Punishment) கொடுப்பதை தடை செய்து சட்டம் இயற்றப்பட்டது. “வன்முறையில் இருந்து நாம் நம்மை தள்ளி வைத்துக் கொள்ள வேண்டும். அமைதியை நாடுவோம், இதை எங்கிருந்து தொடங்குவது என்பதில் குழப்பம் இருக்குமாயின் வன்முறை எதிர்ப்பை நாம் குழந்தைகளிடமிருந்து தொடங்குவோம்” என்றார்.
ஆஸ்ட்ரிட் லின்ட்கிரன் 1976 ஆம் ஆண்டு நேரடி அரசியல் விவாதங்களிலும் ஈடுபட்டார். அதுவரை தன்னை ஒரு ஸ்வீடன் சமூக ஜனநாயகவாதியாகவே அடையாளப்படுத்திக் கொண்ட இவர் அக்காலகட்டத்தில் அவ்வரசு விதித்திருந்த வரிகளின் காரணமாக அக்கட்சியை கடுமையாக விமர்சித்தார். அவ்வாட்சியின் சீர்கேட்டை தொடர்ந்து ஒரு கதையாக ‘பாம்பெறிபோசா மோனிஸ் மேனியா’ என்ற பெயரில் எக்ஸ்பிரஷன் நாளேட்டில் வெளியிட்டார். இவ்வாறு அரசின் மக்களுக்கு எதிரான அதிகாரப் போக்கை ஆசிரியர் கடுமையாக சாடியதைத் தொடர்ந்து அடுத்து வந்த தேர்தலில் ஸ்வீடனின் சமூக ஜனநாயக கட்சி கடும் தோல்வியை சந்தித்தது.
1980களில் இவரது இவர் அடுத்த பெரிய அரசியல் பிரச்சனையை பற்றி பேசினார். அணுசக்தி உற்பத்தி குறித்து வாக்கெடுப்பில் ‘இது அறவே கூடாது! யுரேனியம் தோண்டும் சுரங்கப் பணிகளை உடனடியாக நிறுத்து! அணு உற்பத்தி நிலையங்களை மூட உத்தரவிடு!’ என்பதை பிரச்சாரம் செய்தார்.
1981 ஆம் ஆண்டு தனது மிகப் பெரிய கடைசி நாவலான ‘ரோன்ஜா, த ராபர்ஸ் டாட்டர்’ (Ronja, the Robber’s Daughter) வெளியிட்டார். இப்புத்தகம் மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையேயான உறவை பற்றி பேசியது. இதுவே இவரது கடைசி போர்க்களம். ஸ்வீடன் நாட்டின் வளர்ப்பு பிராணிகளுக்காகவும், நாட்டின் பசுமையை பாதுகாக்கவும் இப்புத்தகம் மூலம் பேசினார். இவரது இந்த போர் 80-களில் இருந்து 90-கள் வரை நீடித்தது. 1985 இல் விலங்குகள் பாதுகாப்பு பற்றி நாளேடுகளில் விரிவாக எழுதினார். அக்கட்டுரைகள் ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டது.
ஆஸ்ட்ரிட் லின்ட்கிரன் அவர்களின் எண்பதாவது வயதில் ஸ்வீடனின் அப்போதைய பிரதமர் புதிய விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தார். அதை லின்ட்கிரன் பெயரிலேயே வெளியிட்டார். ஆனால் நடைமுறையில் அச்சட்டம் நீர்த்து போனதை குறிப்பிட்டு ஆஸ்ட்ரிட் வருத்தம் தெரிவித்திருந்தார்.
சிறார் எழுத்தாளரான ஆஸ்ட்ரிட் லின்ட்கிரன் நாட்டின் இயற்றப்பட வேண்டிய சட்டங்கள் வரை தீர்மானிக்கும் மக்கள் அதிகாரம் பெற்றவர் ஆனது எவ்வாறு என்று யோசிப்போம்.
இவ்வுலகில் மிக முக்கியமானவர்கள் குழந்தைகள் ஒரு சமூக மாற்றம் தொடங்க வேண்டுமானின் அதை குழந்தைகளிடம் இருந்து விதையுங்கள் என்பதே சூத்திரம். அவர்களே மாற்றத்திற்கான வழி. அக்குழந்தைகளை கட்டுண்டு போக செய்யும் ஒரு எளிய வழி ‘கதைகள்’. உலகம் முழுதும் இருக்கும் குழந்தைகளை ஆட்கொண்டவர் ஆஸ்ட்ரிட் லின்ட்கிரன்.
அழகிய பட்டாம்பூச்சி போல் சுதந்திரமாக சுற்றித் திரிபவர்கள் குழந்தைகள். அன்பும், பாதுகாப்பும், சுதந்திரமுமே அவர்களின் வாழ்க்கை முறை. அவர்களின் உரிமைகளை பேசும் பொறுப்பை சிறார் எழுத்தாளராக வகுப்பறையை தாண்டி, நாட்டின் எல்லைகளையும் தாண்டி, உலக குழந்தைகள் அனைவரையும் தன் கதைகளின் வழியாக நல்வழியில் வளர்த்தெடுத்த ஆஸ்ட்ரிட் லின்ட்கிரன் அவர்களை ஓர் எழுத்தாளர் என்று அடையாளத்தை தாண்டி கல்வியாளர் வரிசையில் வைக்கவே நான் விரும்புகிறேன்.
இரா. கோமதி