சித்ரா சிவன் (Chitra Shivan) எழுதி பிறகு பிரசுரம் வெளியிட்டுள்ள அத்தினி நாவல் (Athini Novel) புத்தகம் - நூல் அறிமுகம்

சித்ரா சிவன் எழுதிய அத்தினி (நாவல்) – நூல் அறிமுகம்

அத்தினி (நாவல்) பெண்களின் அக உலகத்தைப் பேசும் நாவல் இது. இதுபோல் பெண்களை மட்டுமே பிரதானப் பாத்திரங்களாக்கி, அவர்களின் அக உலகத்தை, உணர்வைப் பேசும் நாவலை இதற்கு முன் வந்திருக்கலாம் ஆனால் நான் வாசித்ததில்லை. எல்லா வகையிலும் மிகச் சிறப்பான நாவலாய்…
சித்ரா சிவன் (Chitra Sivan) எழுதிய அத்தினி (Athini) - நூல் அறிமுகம் - Zero Degree வெளியீடு - https://bookday.in/

அத்தினி (Athini)- நூல் அறிமுகம்

அத்தினி (Athini)- நூல் அறிமுகம் பெண்களின் உரையாடல்கள், கொண்டாட்டங்கள், ஏக்கங்கள், திமிர், அதிகாரம், கண்ணீர், வைராக்கியம் என அவர்களின் மொத்த மன உணர்வுகளையும் கொட்டித் தீர்க்கிறது 'அத்தினி'. பெண்கள் மட்டும் இருக்க விரும்பும் ஒரு குட்டி உலகத்தில் அடங்கிவிட நினைக்கும் ஒரு…
நூல் அறிமுகம்: ச.ச.சுபவர்ஷினியின் அத்தினிக் காடு (சிறுவர் கதைகள்) – வே.சங்கர்

நூல் அறிமுகம்: ச.ச.சுபவர்ஷினியின் அத்தினிக் காடு (சிறுவர் கதைகள்) – வே.சங்கர்




பெண் யானைக்கு ‘அத்தினி’ என்றொரு பெயர் இருப்பதே இந்த நூலின் தலைப்பை வாசித்த பிறகே தெரியவந்தது. தற்போது ஏராளமானோரின் கைகளில் தவழும் இந்த அத்தினிக்காடு என்ற நூல் பலரின் கூட்டுமுயற்சிக்குப் பிறகே சாத்தியமாகியிருக்கிறது.

தவிர்க்க முடியாத ஆளுமைகளின் அணிந்துரை, நேர்த்தியான புத்தக வடிவமைப்பு, பக்கத்திற்குப் பக்கம் அழகழகான ஓவியங்கள், மொபைல் ஃபோனில் ஸ்கேன் செய்து பார்க்கவும் கேட்கவும் க்யூ ஆர் கோடு, பின்புற அட்டையில் இளம் எழுத்தாளர் சுபவர்ஷினியின் அழகிய புகைப்படம் என அனைத்து அம்சங்களையும் ஒருங்கே கொண்டிருக்கிறது இந்த நூல். 

பதின் பருவத்தைத் தாண்டாத குழந்தைகளே ஒவ்வொரு கதைக்கும் தேவையான ஓவியங்களை வரைந்திருக்கிறார்கள். அவர்களின் புகைப்படங்களும் அவர்களைப் பற்றிய விவரங்களையும் புத்தகத்தின் கடைசிப் பக்கத்திற்கு முன்னதாக அச்சேற்றி அவர்களை அடையாளப்படுத்தியும் அங்கீகரித்தும் இருப்பது சிறப்பு.

நேர்மறை எண்ணம் கொண்ட பதினைந்து சிறுகதைகள் வாசிக்க வாசிக்க நமட்டுச் சிரிப்பை வரவழைக்கிறது.  இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டுக் குழந்தையான சுபவர்ஷினியின் கற்பனைக்கு எதுதான் எல்லை? என்ற எண்ணம் கடைசிவரை நீடித்துக் கொண்டே இருக்கிறது.

வளர்ப்பு விலங்கோ அல்லது காட்டு விலங்கோ எதுவாக இருப்பினும் சிறுவர் கதைகளில் பேசுவது என்பது இயல்பாகவே தவிர்க்கமுடியாதது ஆகிவிட்டது. 

அப்படித்தான் இந்த நூலிலும், சிங்கமும் புலியும் ஒரே காட்டில் இருக்கின்றன.  ஒரு சிறுமிக்கும் யானை  நண்பனாக இருக்கமுடியும் என்றால் புலியும் நண்பனாக இருக்க முடியும்தானே?

ஒரு வளர்ப்பு நாய்க்குட்டியால் தன்னை பாசமாக நேசிக்கும் சிறுவனுக்காக ஓடிப்போய் டாக்டரை அழைத்துவர முடிகிறது. ஒற்றைச் சிறுமியால் புலிகளிடம் பேசியே யானைக்குட்டியைக் காப்பாற்றிவிட முடிகிறது. வாத்துக் குஞ்சுகளுக்கு நீரின் அவசியத்தைப் புரியவைக்க முடிகிறது.

கொசு ஒன்று காட்டிற்குள் பட்டாம்பூச்சியுடன் சினேகம் கொண்டு சுற்றிப் பார்க்கிறது. கொரோனா என்ன செய்யும் மனிதர்களை அழித்துக் கொல்லும் ஆனால், ஒரு குழந்தையின் பார்வையில் தந்தையை வீட்டிலேயே இருக்க வைத்து தன்னோடு விளையாட வைக்கும் அப்படியானால் கொரோரானா என்ற பெருந்தொற்று நோய்க்கும் நன்றி சொல்லவேண்டும்தானே? அப்படித்தான் ’கொரோனா நிகழ்வு’ என்ற கதை கவனத்தை ஈர்க்கிறது.

நாய்க்கு நண்பர்களாக பூனைகள் ஒரு கதையில் கதாப்பாத்திரங்கள் என்றால் மற்றொரு கதையில் முயலும் ஆப்பிள்களும் மாறுவேடத்தில் ஊர்சுற்றக் கிளம்பிவிடும் கதாபாத்திரங்கள். 

அடிபட்ட புறாவுக்கு மருத்துவம் செய்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எல்லாக் குழந்தைகளுக்கும் இருப்பதுபோலவே பறவையைத் துன்புறுத்துபவர்களுக்கு அது தவறு என்று தன்மொழியில் குழந்தையாக சொல்ல முயன்றிருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

அடிபட்ட டால்பின் மீன் கரை ஒதுங்கிக் கிடப்பதும் அதைக் குணப்படுத்தி மீண்டும் கடலுக்குள்ளே கொண்டுவிடும் கற்பனையும் அபாரம்.

வனம் என்றால் பசுமையாகத்தான் இருக்கும்.  பசுமையாக இருந்தால் அங்கே விலங்குகள் இருக்கும்.  அவர்களும் பள்ளிக்கூடம் செல்வார்கள்.

அதுவும் பேருந்தில்.  மனிதர்களைப் போலவே பூச்சிகளும் களைத்து போய்விடலாம். களைத்துப் போய் வகுப்பறையில் தூங்கியும் விடலாம்.  ஆசிரியை எப்போதும் போல் தாமதமாக வந்த பூச்சிக்கு தண்டனையாக வெளியே நிற்க வைத்துவிடும் சாத்தியக்கூறுகளும் குழந்தைகளின் கதையில் தவிர்க்க முடிவதில்லை.

எல்லாம் கற்பனைதானே என்று கேட்டால், ஆம்! கற்பனைதான்.  குழந்தைகளுக்குள் எழும் கற்பனைகள் வளர்ந்த மனிதர்களுக்கு ஏன் தோன்றுவதில்லை? என்ற கேள்வி இந்நூலை வாசிப்போர்க்கு கடைசிவரை எழுந்துகொண்டேதான் இருக்கும். அதற்கு விடை தேடவேண்டுமானால் இதுபோன்ற குழந்தைகள் எழுதிய கதைகளை வாசிக்க வேண்டியது கட்டாயம்.

குழந்தைகள் கேட்டறிந்த பக்கத்து ஊருக்குக் கற்பனையில் பாண்டா கரடிகள் வர வாய்ப்பிருக்கிறது.  புலியும் அதே இடத்திற்கு வந்து எனக்கு கோழியும் ஆடுகளும் வேண்டும் என்று கேட்கிறது, அங்கிருக்கும் மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை ’லாக்டவுன்’ என்ற சொன்னவுடன் அதே புலி ’அப்படியானால், இன்று வேண்டாம், நாளையிலிருந்து கொடுக்கவேண்டும்’ என்ற கட்டளையிடுவதெல்லாம் குழந்தைகளுக்கு மட்டுமே தோன்றும் அசாத்தியக் கற்பனைகள்.

குழந்தைகளின் கதைகளை வளர்ந்தவர்கள் எழுதவதற்கும் குழந்தைகளே எழுதுவதற்குமான உள்ள வேறுபாட்டைக் கூர்ந்து கவனித்தால் ஒன்று தெளிவாகத் தெரியும். அதன் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் அளவில் சிக்காத நீள அகலங்களைக் கொண்டவை சிறுவர்களுக்காக சிறுவர்களே எழுதும் கதை. குழந்தைகளுக்கான கதைகளை குழந்தை சொல்லும் போது தான் கேட்ட அல்லது பார்த்த அத்தனையும் கதைகளுக்குள் வலம்வருகின்றன.  

அவ்வகையில் அத்தினிக்காடு விலங்குகளும், பறவைகளும், பூச்சிகளும் கூடவே மனிதர்களும் வாழும் இடம் இந்த பூமி என்று அழுத்தம் திருத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது.

லாஜிக்கைப் பற்றி எந்தவிதத்திலும் கவலைப்படுவதில்லை குழந்தைகள். அதற்கான சமரசத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. மனம்போன போக்கில் கதை நகர்த்தியும், அதைச் சொல்லியும் அவற்றைப் புத்தகவடிவில் பார்த்து மகிழும் பாக்கியம் ஒருசிலருக்கே அமையும் அவ்விதத்தில் அத்தினிக்காடு நூல் எழுதிய சுபவர்ஷினிக்கு வாய்த்திருக்கிறது. வாழ்த்துகள்.

– வே.சங்கர்

நூல்: அத்தினிக் காடு
ஆசிரியர்: ச.ச.சுபவர்ஷினி (வயது 8)
விலை: ₹99
பக்கங்கள்: 104

வெளியீடு: லாலிபாப் சிறுவர் உலகம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com