அந்தப் புன்னகையில் ஆதிரா கவிதை – கயல்விழி
காலத்தின் நெடுஞ்சாலையில் எத்தனையோ
ஓட்டங்கள், எத்தனையோ பயணங்கள், முகம்
அறியாத பல முகங்கள், அனைத்தும் கடந்து
செல்கிறது கானல் நீராய்….. கடந்து செல்லும்
பாதையில் இவளும் பயணிக்கிறாள்.
அவள் தான் ஆதிரா. வயதான பெற்றோர், தான்
அடையாத உயரத்தை தம்பி, தங்கை அடைய
வேண்டும் என்ற எண்ணம், வலிகளோடு நிறைந்த
பாதச் சுவடுகள் அவள் செல்லும் வழி எல்லாம்
நிறைந்து கிடக்கின்றன.
கோலமிட்ட வாசல் முதல் கூட்டம் நிறைந்த
பேருந்து நிலையம் வரை ஓயாமல் நடை
போடுகின்றன பாதங்கள்.
அவள் கடக்கும் பாதையில் ஒரு ஒற்றை மாடி
கட்டடம். தன்னைத் தானே தாங்கி கொண்டு,
தனிமையில் நித்தம் ஏந்திக் கொண்டு,வேரூன்றி
நிற்கிறது, அந்த ஒற்றை மாடி கட்டடம். கூரை வீடு
எப்போது மாடி வீடாக மாறும் என்று தன் தம்பி,
தங்கையின் கேள்விக்கு தினமும் கடந்து போகும்
அந்த கட்டடம் ஆதிராவின் பார்வையில் நீந்திக்
கொண்டே செல்லும். கட்டடத்தை மட்டும்
கவனித்த உள்ளம் அங்கு உள்ள மயில் ஜன்னல்
கம்பிகளுக்குப் பின்னால் இருக்கும் அந்த வசீகர
தோற்றத்தையும் கவனித்தது.
40 வருடங்கள் என வரைந்துவிட்ட அவள் சித்திரம்.
காலத்தின் பாதையில் எப்போதும் ஓயாது
ஓடிய கால்களை காலம் பார்த்து, காலமே பொறாமை
கொண்டு, ஓடியது போதும் ஓய்வெடு என்று
சொல்லும் அளவிற்கு மாறியது அவள் கால்கள்.
இன்னல்களைக் கடந்து செல்லும் மனம்,
வாதத்தையும் கடந்து சென்றது.
சக்கர நாற்காலியில் வாழ்க்கை தொடங்கியது
இலட்சுமிக்கு. கணவனை இழந்த கண்ணீர்
மங்கை, குழந்தை இல்லா நங்கை. நான்கு
சுவற்றில் அடைபட்டுக் கிடக்கும் அவளுக்குத்
தனிமையில் இருந்து விடுபடக் கிடைத்தது
அவளுக்கு எழுத்துக்கள். பல பேரைக் கடந்து
செல்லும் மனம், ஆதிராவையும் கவனித்துச்
செல்கிறது.
வாடிய பூ போல அவள் முகம், இரத்தத்தை
வியர்வையாய் உறிஞ்சும் வேலை, ஓயாது ஓடி
வலுவிழந்த கால்கள்., இன்னும் ஓடியே ஆக
வேண்டும் என்ற எண்ணம். கடந்து செல்லும் ஒரே
சாலையில், இருவரும் பார்வையில் மிதந்து
செல்கின்றனர்.
ஒருநாள் பார்வை, மறுநாள் கவனிப்பு. இப்படியே
மாதங்கள் ஒட, சற்று புன்முறுவலும் வலம்
வருகிறது இருவர் பார்வையிலும். தனிமையில்
நித்தம் ஏங்கிய இலட்சுமிக்கு, ஆதிராவின் சிறு
புன்முறுவல் தாளாத இன்பம். நாளாக நாளாக
புன்முறுவல் நீண்டு கொண்டே செல்கிறது.
எழுத்துகளோடு உறவாடிய இலட்சுமிக்கு,
ஆதிராவின் புன்முறுவலும் சில கனம் உறவாடிச்
சென்றது.
கணப் பொழுது இன்பம் காலத்திற்குப்
பொறுக்கவில்லை போலும். தொலைந்தது
ஆதிராவின் புன்முறுவல். பிள்ளையை
தொலைத்த அன்னை உள்ளம் போல தேடியது
இலட்சுமியின் மனம். எவ்வளவு தேடியும்
காணவில்லை.வீட்டை மட்டும் வட்டமடித்த
நாற்காலி, காலை வேளையில் தன் தெருவையும்
வட்டமடிக்கும் போது, அவள் நடை போடும்
சாலையின் சுவற்றில் எதார்த்தமாய்த்
தென்பட்டது கண்ணீர் அஞ்சலிக் காகிதம்.
கடலென பொங்கியது கண்ணீர், இறுகியது
மனம். காலம் முழுவதும் துணையாய் இருப்பேன்
என சொல்லும் நம்பிக்கை விழிகள் இமை
மறித்தன.
“சாலைகள் நீண்டன…
அவள் பாதம் பட்ட இடங்கள் பலர் பாதம்
தொட்டது…
சன்னல் அவ்வப்போது திறந்தது…
இருந்தாலும் பதட்டம் மீளவில்லை…
கண்ணீர் குறையவில்லை…
இன்றும் புன்னகை சிந்திக் கொண்டே இருக்கிறாள்…
கால்நடைகள் உண்ணாத…
சுவற்றின் மேல் கிழிந்த காகிதமாய்…
அந்தப் புன்னகையில் ஆதிரா…”
கயல்விழி
நாகை
9626552403
[email protected]